Thursday 25 April 2019

ULLAM RENDUM ONDRU - 12


குமரன் தந்தை குமாரசாமியின் பெயரில் ஒரு ட்ரஸ்ட் ஏற்பாடு செய்யப்பட்டு, யார் மூலம் நன்கொடை வந்தாலும் அது அதனில் சேர்க்கப்பட்டது. அதினின்று ஏழைகளுக்கு இலவசமாக மருந்து, ஊசி என்று ஏற்பாடு செய்யப்பட்டது.
கௌரியும் ஒரு நாளின் பெரும்பகுதி அங்கேயே உதவுவதில் செலவிட்டாள்.
ஆனால் வீட்டு வேலைகளை முடித்து தன் மாமியாருக்கு செய்ய வேண்டியதை செய்துவிட்டு மற்ற நேரங்களில்தான் வந்தால். அதில் பங்கஜத்திற்கு பெருமிதம். “என் மருமக போல உண்டா என்று எப்போதும் மெச்சிக்கொள்வார்.

நாட்கள் வாரங்களாக வாரங்கள் மாதங்களாக மாதங்கள் வருடங்களாக ஓடி மறைய இப்போது வெற்றி கல்யாணி தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் பிறந்திருந்தது.
கௌரி குமரன் தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது.
வெற்றியும் குமரனும் தங்கள் பெண்டாட்டிகளை தரையில் விடாமல் தாங்கி பார்த்துக்கொண்டனர். குமரன் தன் மருத்துவமனையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் காப்புக்கென ஒரு பெண் மருத்துவரை அமர்த்தி இருந்தான். ஒரு கண் டாக்டரும் பல் டாக்டரும் வாரம் இருமுறை வந்து பார்த்துச் சென்றனர். குமரன் பொது மருத்துவமும் ஆர்தோபெடிக்ஸ் எனப்படும் கை கால் உடம்பு மூட்டுகள் எலும்பு சதை நோய்களையும் கண்டு வந்தான்.
அந்த மருத்துவமனை பெரும் பேரும் புகழும் அடைந்து நிமிர்ந்து நின்றது.

மூன்று குழந்தைகளும் சகோதர பாசத்துடன் நல்லபடி படித்து ஒற்றுமையாக வளர்ந்து வந்தனர்.
வெற்றியின் மகன் ஆனந்த பேருக்கு தகுந்தபடி எல்லோருக்குமே ஆனந்தத்தையே கொடுத்தான். பெரிய அளவில் வளர்ந்து கொண்டிருந்த கம்ப்யுடர் படிப்பில் பெரும் தேர்ச்சிகள் பெற்று ஒரு பெரிய பல்நாட்டு கம்பனியில் வேலையில் அமர்ந்திருந்தான்.
மகள் சுமனா தன் மாமாவைப் போல மருத்துவம் படிக்க ஆசைபட்டாள். அதில் பெண்கள், அவர்களின் பேறுகால நோய்கள் என்று முக்கியபாடமாக எடுத்து அதில் நல்ல மார்க்குடன் தேர்ச்சியுற்றாள்.

அவளுக்கேற்றவனாக ஒரு நல்ல குடும்பத்து மருத்துவம் படித்த வரனையே நிச்சயம் செய்து மணமுடித்தனர். இருவரும் ஒன்றாக தங்களுக்கென்று திருச்சியில் ஒரு சின்ன அளவிலான மருத்துவமனை அமைத்து பணி செய்து வந்தனர்.

ஆனந்த தன் ஆபிசில் பணிபுரியும் சாந்தியை காதலித்தான். அவள் பெரும் பணக்கார குடும்பத்தின் வாரிசு. படித்துவிட்டு சும்மா இருக்க விரும்பாமல் பொழுது போக்கிற்காக வேலைக்கு வந்தவள். அவளின் அழகும் பேசும் திறனும் கண்டு மயங்கிவிட்டான் ஆனந்த. அவளைப் பற்றி தன் அன்னையிடம்தான் முதலில் கூறினான்.

நீங்கதான்மா அப்பாகிட்ட சொல்லி எங்களுக்கு மணமுடிக்கணும் என்று வேண்டிக்கொண்டான்.
காதலிப்பது தப்பு இல்லை ஆனந்த கண்ணா..... அவ பெரிய இடமாச்சே, அதான் யோசனைஎன்றாள் கல்யாணி.
 ஆனா அம்மா அவளுக்கு அதை பத்தின கர்வம் கொஞ்சமும் கிடையாது... நான் வீட்டிற்கு கூட்டிட்டு வரேன்... நீங்களே பேசி பார்த்துட்டு சொல்லுங்க என்றான்.

அடுத்த நாள் அதேபோல அழைத்தும் வந்தான்
. அழகாக இருந்தாள் சாந்தி. பேச்சிலும் நடை உடை பாவனையிலும் பெரும் நேர்த்தி இருந்தது. ஒயிலாக இருந்தாள். உயர்ந்த ஆங்கிலம் பேசினாள். கொஞ்சிக் கொஞ்சி தமிழ் பேசினாள். பெற்றோருக்கு அவ்வளவாக திருப்தி இல்லை எனினும் ஆனந்தின் ஆனந்தத்திற்கென மணமுடித்தனர்.

உழைத்தவரை போதும் நிலத்தை குத்தகைக்கு விடுங்கள் என்னோடு வந்து இருங்கள்என்று அடம் செய்து பெற்றோரையும் தன்னோடு தன் திருச்சி பங்களாவில் கூட்டிவைத்துக்கொண்டான் அந்த சீமந்த புத்திரன்.
அதில் பெற்றோருக்கு மகிழ்ச்சியே.
நல்லபடி மணம் முடிந்தது. சாந்தியின் பெற்றோர் திருமணத்தின் போதே இவர்களை துச்சமென பட்டிக்காடு என பார்த்தனர்.... பேசி சிரித்தனர்.... ஒளிவு மறைவாக இளப்பமாக நடத்தினர்.... அதைக் கண்டும் காணாது விட்டனர் வெற்றி கல்யாணி.

புது குடித்தனம் செய்ய வந்தாள் சாந்தி
.... பெரியோரிடம் ஒருவித மரியாதை மட்டுமே இருந்தது.... அவனோடவே எழுந்து குளித்து கிளம்பி வேளைக்குச் சென்று வந்தாள். சமையல் வேலை எப்போதும் போல கல்யாணி தலையிலேயே விழுந்தது. உதவிக்கு ஆள் இருந்தபோதும் தானே மல்லுகட்ட வேண்டி வந்தது.
மருமகள் வந்த பின்னும் தன் மனைவி இப்படி ஓய்வின்றி உழைத்து தொய்ந்து போனது வெற்றிக்கு மனத்தாங்கல். அவள் அவனை சமாதானம் செய்வாள். “சின்னஞ்சிருசுங்க போகட்டும் விடுங்க.... ஒரு புள்ள பிறந்தா தானே தெரிஞ்சுக்குவா என்பாள்.

அப்பிடி இப்படி என்று ஆறு மாதம் ஓடியது. காலை காபி முதல் இரவு படுக்கும்போது பால் வரை தன் அன்னையே செய்வதில் ஆனந்திற்கு மனவருத்தம். கூடவே தன் மனைவியின் கையால் சமைத்து பரிமாறும் உணவை உண்ண ஆசைகொண்டான். அவளிடம் பேசிப் பார்த்தான்.
எனக்கு அவ்வளவா சமைக்க எல்லாம் தெரியாது... ஏதோ செய்வேன் அவ்ளோதான் ஆனந்த.... அதான் உங்கம்மா செய்யறாங்களே, ஏன் நான் வேற. எல்லாம் அவங்க பாத்துப்பாங்க என்று திரும்பிப் படுத்து உறங்கிப் போனாள்.

வெற்றியும் கல்யாணியும் எப்போதும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காது ஒன்றாகவே சாப்பிட்டு பேசி உறங்கி என்று இன்னமும் ஆதர்ஷ தாம்பத்யமாக வாழ்ந்து வந்தனர். அவர்களின் அந்த இயல்பான பழக்கங்களை பெரிதும் வெறுத்தாள் சாந்தி.
அதென்ன எப்போ பாரு வயசு கூட பார்க்காம கொஞ்சலு?” என்பாள் இலைமறைவு காய்மறைவாக.

கல்யாணி கண்டுகொள்ளாமல் விட்டு விடுவாள்
.
எப்போதும்போல ஒரு நாள் வெற்றிக்கு வெற்றிலை மடித்து வாயில் கொடுத்துக்கொண்டிருந்தபோது அதைக் கண்ட சாந்தி இவர்களிடம் கூறுவது போல ஆனந்திடம் சற்று சத்தமாக
என்னங்க இது அசிங்கமா இல்லை.... எப்போதும் கொஞ்சிகிட்டு உரசிக்கிட்டு வயசுக்கு தகுந்த விவேகம் வேண்டாம்.... எனக்கே வெட்கம் நாக்கை பிடுங்குது என்றாள் காட்டமாக.

தூக்கிவாரிப்போட சமைந்தனர் வெற்றியும் கல்யாணியும்
.
கல்யாணி ஊமையாக தங்கள் அறைக்குச் சென்றுவிட வெற்றிக்கு கோபம் தலைக்கு ஏறியது.
கண்டிச்சு வை... அனாவசியமா பேசறா உம் பொஞ்சாதி என்று ஆனந்திடம் கூறிவிட்டு அவரும் உள்ளே சென்றுவிட்டார்.
சாந்தியின் நடவடிக்கை எதுவும் பிடிக்காமல் பொறுத்துப்போனவன் ஆனந்த. ஆனால் இன்று அவளின் பேச்சு அவனை கோபத்தின் எல்லைக்கே கொண்டுவிட்டது.

என்ன சொன்னே, அசிங்கமா, எதுடீ அசிங்கம், நாகரீகம்ங்கற பேர்ல நீ நடத்தறியே குடித்தனம் அதவிட இது ஒண்ணும் குறைஞ்சுபோகலை..... அவங்களப் பத்தி பேச உனக்கென்ன யோக்யதை இருக்கு சொல்லு பார்க்கலாம்.... அப்படிதான் அவங்க என்ன நடு வீட்டில முத்தம் குடுத்துகிட்டாங்களா... செக்ஸ் வெச்சுகிட்டாங்களா....

அவங்க அந்நியோன்னியமா இருந்தா அது உனக்கு அசிங்கமா
.... அதப்பத்தி உனக்கென்னடீ தெரியும்..... அவங்களுதும் இன்னும் எங்க தாத்தா பாட்டிதும் கூட ஆதர்ஷ தாம்பத்யம்.
உங்க வீட்டுல அம்மா ஒரு ரூமில அப்பா இன்னொரு ரூமில வெவ்வேற பார்ட்டிக்கு போயிட்டு குடிச்சுட்டு வந்து மயங்கி கிடக்கறாங்களே அது அசிங்கமா இது அசிங்கமா. பெரிசா பேச வந்துட்டா என்று கத்தினான்.

ஒரு நாளானும் எனக்குன்னு நீ ஆசையா சமைச்சு போட்டிருப்பியாடீ..... சரி அம்மா கஷ்டப்பட்டு சமைச்சு வைக்கிறாங்களே, அதை பக்கத்தில் நின்னு எனக்கு அன்பா பரிமாறி இருக்கியா.... அவங்களுக்கு நேரத்துக்கு வயத்துக்கு பாத்து போட்டிருக்கியா..... நீ எல்லாம் காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டவோன்னு சொல்லிக்காதே என்று இரைந்தான்.

தங்களால் மகன் மருமகள் வாழ்வில் சண்டையும் பூசலும் ஆகியதே என்று வெதும்பினாள் கல்யாணி
.
அப்போ நான் உங்களை காதலிக்கவே இல்லைன்னு சொல்றீங்களா?” என்று கத்தினாள் சாந்தி.
காதல் னா என்னன்னு தெரியுமா.... நாம் செய்தது காதலா... இல்லவே இல்லை.... நான் உன் அழகில் அறிவில் மயங்கினேன்..... நீ என் வேலை வசதி பணம் னு ஆசை வெச்சே.... அவ்ளோதான்.... இதில் காதலும் உண்மையான அன்பும் எங்கிருந்து வந்தது..... உங்க அப்பாம்மா தான் ஆகட்டும் கல்யாணத்தின்போது எப்படி எல்லாம் இகழ்ச்சியா பேசினாங்க பழகினாங்க சிரிச்சாங்க எங்கம்மாப்பாவ பார்த்து.... அத  பாத்துகிட்டும் சும்மா இருந்தேன் பாரு, அன்னைக்கே ரெண்டு வார்த்த நறுக்குன்னு கேட்டிருக்கணும்என்றான்
அப்போ அது காதல் இல்லைனா ஏன் என்னை கட்டிகிட்டீங்க?” என்று அவள் கத்த
ஆமா கட்டிகிட்டேன், இப்போ அவஸ்தை படறேன். போதும் டீ உன்னோட மாரடிச்சதுஎன்று இவன் கத்த இரவென்றும் பாராமல் தன் வீட்டிலிருந்து கார் வரச்சொல்லி தன் தாயின் வீட்டிருக்குச் சென்றுவிட்டாள் சாந்தி.

ஐயோ எல்லாம் நம்மாலதானே என்று புலம்பினாள் கல்யாணி.
தே சும்மா இருடீ, இவ ஒருத்தி.... அதுக என்ன சின்னப் பிள்ளைங்களா  நித்து?” என்றான் சமாதானமாக வெற்றி.
எல்லாம் உங்களால, கொஞ்சம் ஒதுங்கி இருங்கன்னா கேக்கறீங்களா?” என்றாள் அவள் அவனை முறைத்தபடி.
ஓத விழும்டீ.... என் வீடு என் பெண்டாட்டி என் இஷ்டம் போல இருப்பேன் பேசுவேன் கொஞ்சுவேன் ஒரு பய கேக்கக் கூடாது ஆமா, போடி சரிதான் என்றான்.

அடுத்த நாள் ஆனந்த் ஆபீஸ் கிளம்பும்போது மெதுவாக கல்யாணி அவனிடம் கெஞ்சினாள்.
இது நல்லது இல்லை கண்ணா.... போய் மருமகள நல்லபடியா பேசி சமாதானப்படுத்தி கூட்டிட்டு வந்துடுப்பா என்று.
அவளேதானே போனா, அதேபோல வரட்டும்.... நான் ஒண்ணும் அவங்க வாசலில் போய் நின்னு கெஞ்சமாட்டேன் என்றான் வீறாப்பில் கொஞ்சமும் தந்தைக்குக் குறையாமல்.
இல்லை எனக்காகவானும் நீ போய் தான் ஆகணும் என்றாள்
என்னம்மா நீ இப்படி எல்லாம் ரூல் போடாதே.... அவ உங்கள பேசின பேச்சுக்கு இன்னொருத்தனா இருந்தா அடிச்சு வாய கிழிச்சு அனுப்பி இருப்பான்.... நான் பேசி திட்டி மட்டும்தான் செய்தேன் என்று அங்கலாய்த்தான்.
இருக்கட்டுமே எங்களைத்தானே ஐயா பேசினா..... போகுது சின்னப் பிள்ளைய்யா.... போ போய் நல்லவிதமா பேசி கூட்டிகிட்டு வா என்று கெஞ்சினார்.
சரி சாயங்காலம் போக முயற்சிக்கறேன் என்றுவிட்டு சென்றான் மனமில்லாமல்.
இந்த அம்மா தான் எப்படி இப்படி இருக்கிறாள்.... அவர்களை தானே இந்த சாந்தி அவ்வளவு கேவலமாக பேசினாள் ஆனால் அம்மாவோ அவளை சமாதானப்படுத்தி கூட்டிகிட்டு வரச்சொல்றாங்க என்று நினைத்தான்.

மாலை வேலை முடிந்ததும் அவள் வேலை செய்யும் பிரிவுக்கு போய் காத்திருந்தான். அவள் வெளியே வந்து இவனை பார்த்து ஒரு நிமிடம் நின்றாள் பின் முகத்தைத் திருப்பிக்கொண்டு செல்ல முற்பட,
சாந்தி, நான் உன்னோட பேசணும் கார்ல ஏறு.... இது ஆபீஸ், இங்க எந்த பேச்சும் வேண்டாம், ப்ளிஸ் என்றான் மெதுவான குரலில்.
என் வீட்டிற்கு போகணும் என்றாள் முனகலாக.
சரி நான் அங்கியே கொண்டுவிடறேன் ஏறுஎன்றான்.
பேசாமல் ஏறினாள். நெரிசலான போக்குவரத்தைத் தாண்டி ஒதுக்கமான இடத்திற்கு வந்து வண்டியை நிறுத்தினான். அவனை ஏறிட்டாள்.

சாந்தி என்னை மன்னிச்சுக்கோ..... நான் பேசினது அதிகம்தான்..... அதிலேயும் உங்க அப்பா அம்மாவைப் பத்தி நான் பேசி இருக்கக் கூடாது.... ஏதோ வாய் தவறிவிட்டது என்றான்.
அவள் அதிசயமாக பார்த்தாள். பின் தலை குனிந்தபடி அப்படி பார்த்தா நானும்தான் உங்க அம்மா அப்பாவ அப்படி பேசினேன்.... மன்னிச்சுடுங்க என்றாள்.

அவங்களப் பேசற அளவில நாம இல்லைமா சாந்தி.... அவங்க மட்டுமே இல்லை, நீ இன்னும் எங்க தாத்தா பாட்டியோட நெருங்கி பழகலை..... அந்த குடுப்பினை இப்போ நமக்கு இல்லை.... அவங்க போய் சேர்ந்துட்டாங்க. இவங்கள விடவும் அவங்க இன்னும் அந்நியோன்னியமா இருந்தவங்க.... எங்களுக்கெல்லாம் வாழ்க்கைப் பாடம் சொல்லி தந்தவங்க.... இதெல்லாம் அசிங்கம் இல்லை சாந்தி டியர்..... இது அன்பின் காதலின் வெளிப்பாடு.... அதை நான் வார்த்தைகளால உனக்கு புரிய வைக்க முடியாது

அன்ப விலை பேச முடியாது.... பலவந்தப்படுத்தி வரவழைக்க முடியாதுடா... அது தானா வளரணும்.... பொங்கி பிரவாகமா வழியணும்..... உனக்கு நான் ஆதியோடந்தமா சொன்னாத்தான் புரியும்...” என்று அவனது தந்தையும் தாயும் எப்படி பிறந்து வளர்ந்து காதலாக கசிந்துருகி அவ்வளவு துன்பத்திற்கு பின் ஒன்று சேர்ந்தனர்.... அவர்கள் அதன் மத்தியில் சந்தித்த இன்னல்கள்.... அதை அவர்கள் தாண்டி வந்தவிதம் என்று எல்லாமும் எடுத்துச் சொன்னான்.

அதை கண்கொட்டாமல் கேட்டு அதிசயித்து போனாள் சாந்தி.... அவள் என்ன செய்வாள்.... அவளது வீட்டில் ஆனந்தே சொல்லி காண்பித்ததுபோல அம்மாவும் அப்பாவும் இணக்கமாக இருந்து அவள் கண்டதே இல்லை.... அவர்களின் வெற்றிகரமான வாழ்க்கையின் அர்த்தம் நிறைய பணம் புகழ் சொசைடியில் பேர் மட்டுமே.... அவளை ஒரு நாளும் அவள் தந்தையோ தாயோ அரவணைத்து கொஞ்சி பேசி எதுவுமே நடந்ததில்லை.... உடம்புக்கு முடியாமல் கிடந்தாலும் டாக்டர் வந்து பார்த்து மருந்து கொடுத்துவிட்டுச் செல்வார்.... தாய் ஒரு ரசம் சாதம் செய்து பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டது இல்லை.

அவள் அழகிய கண்கள் ஆச்சர்யத்தில் விரிய
, தன்னை அடக்கமாட்டாமல் யோசிக்காமல் அவளை இழுத்து அணைத்து அந்த கண்களின் மேல் முத்தமிட்டான் ஆனந்த். பின் பயந்தான் ஐயோ அசலே கோபமா இருக்காளே என்ன கத்துவாளோஎன்று.

ஆனால் அவளோ முகம் சிலிர்த்து சிவந்திருந்தாள்
. கார் மேல் கண்ணாடியில் எதேர்ச்சையாக தன் முகத்தைப் பார்க்க அது சிவந்து கிடந்தது.... ‘அட இது என்ன முகம் இப்படி சிவந்து போச்சே என்று அதுவுமே அவளுக்கு ஆச்சர்யம்தான். தானே வெட்கி தலை குனிந்தாள். இந்த அனுபவம் அவளுக்கு புதிது.

ஆனந்த சொல்வது பெரும்பாலும் உண்மைதானே
.... அவர்கள் காதலித்தனர் ஆனால் அதில் அன்பு இல்லை.... அது ஒரு ஆளுமை.... நான் இவனை காதலித்து கல்யாணமும் செய்துகொண்டுவிட்டேன், ஜெயித்துவிட்டேன் என்ற இருமாப்புதான் இருந்தது.
அவனை முதன் முதலில் தான் வேலை செய்யும் ஆபிசில் கண்டபோது தன்னோடு வேலை செய்யும் சில பெண்களும் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்து அவன் புகழ் பாட அவளுக்கு ஏறியது....

என்ன பெரிய...” என்று பேச
இல்லைடி இவரு பெரிய படிப்பு படிச்சு மெரிட்ல இங்க வேலை கிடைச்சு வந்திருக்கார்.... அனாவசியமா ஒரு பெண்ணோடும் பேசக்கூட மாட்டாராம்..... நல்ல அழகு, அறிவு, வேலை, வசதி..... ஒரு பெண்ணுக்கு வேற என்ன வேணும்..... யாருக்கு குடுத்து வெச்சிருக்கோஎன்று பொருமினர்.
அப்படி என்ன அதிசயமான ஆண்பிள்ளை.... நான் காதலிச்சு அவனையே கட்டறேன்.... என் கால்லா விழுந்து கிடக்க வைக்கிறேன் என்ற எண்ணமே மேலோங்கியது.

ஆனால் காதலின் அர்த்தமும் அன்பின் வெளிப்பாடும் என்ன எப்படி என்று ஆனந்த் அவளுக்கு பாலபாடம் கற்றுத்தர அவளுக்குள் அவள் புதியதாய் பிறந்தாற்போல தோன்றியது
.
போலாமா?” என்றான் மெல்ல.
ம்ம் வீட்டுக்கு என்றாள்.
சரி சரி உன் வீட்டிலேயே கொண்டுவிடறேன் என்றான் வேண்டா வெறுப்பாக.
இல்ல இல்ல நம்ம வீட்டுக்கு என்றாள் குனிந்தபடி.
அவளை அதிசயமாக பார்த்துவிட்டு உற்சாகமாக ஓட்டினான். அவனது உற்சாகமும் சந்தோஷமும் கண்டு அவளுக்கும் சந்தோஷம் பொங்கியது.
இது என்ன நான் அவ்வளவு முறைப்பாக இருந்தேன் இப்போ என்னவாயிற்று இப்படி மாறி போனேனே என்று சிரித்துக்கொண்டாள்.



No comments:

Post a Comment