Friday 19 April 2019

ULLAM RENDUM ONDRU -6


அன்று இரவு அதிசயமாக வீட்டிற்கு வந்த அவன் உண்ட பின் அவனை பின்தொடர்ந்து மேலே சென்றாள்.
என்னிடம் கோபிக்காம ஒரு அஞ்சு நிமிடம் மொட்டைமாடிக்கு வாங்க.... முன்னதாகவே சொல்லீடுறேன், இது நம்ம விஷயம் பத்தி பேச இல்லை என்றாள் மெதுவாக.
அவன் அவளை விசித்திரமாகக் கண்டபடி அப்படியே வளைந்து மொட்டைமாடி படிகளில் ஏறினான். அவன் பின்னே அவளும் ஏறினாள்.
அத்தான் நான் அன்னிக்கி சொன்னேனே டாக்டர் பத்தி....” என்று ஆரம்பித்து அவன் இன்று மறுபடி வந்ததையும் கௌரியை உதவிக்கு கேட்டு தந்தை ஒப்புதல் கொடுத்ததுவரை சொல்லி முடித்தாள்.
அயர்ந்து உட்கார்ந்தான் வெற்றி.

இப்போவும் கௌரி உன்கிட்ட ஒண்ணும் சொல்லலையா?” என்றான் மெதுவாக.
இல்லை அத்தான், அவ எப்போதும் போல இயல்பா தான் இருந்தா.... அவர்தான்...” என்று நிறுத்தினாள்.
சரி ஒருவாரம் இவ வேலைக்கு போகட்டும்.... நான் டாக்டரப் பார்த்து பேசறேன்.... கண்டிச்சு வைக்கறேன் என்றான்.
கிழிஞ்சுது இவரும் காதலிக்க மாட்டாரு காதலிக்கிறவங்களையும் கண்டிச்சு வைப்பாராம் கஷ்டம் என்று மனதில் நினைத்தாள்.
பின் மெல்ல அதில்லை அத்தான்.....வந்து...  நாமளும்தான் கௌரிக்கு நல்லா எடமா பார்த்துகிட்டிருக்கோம்....” என்றாள் நாம என்று அவள் கூறும்போது அவளை ஒரு மார்கமாக பார்த்தான் வெற்றி.
சரி சரி நீங்க தான் தேடறீங்க...” என்றாள் திருத்திக்கொண்டு.
அவன் அதைக்கேட்டு சிரித்துக்கொண்டான். “மேல சொல்லு என்றான்.
இவரும் நல்லவராத்தானே தெரியுது.... அவ மேல நிஜமான அன்பு வெச்சிருந்தா பேசாம அவரையே...” என்று அவன் கோப முகம் கண்டு பயந்து நிறுத்தினாள்.
ஏன், விட்டா நீயே ரெண்டு பேருக்கும் எல்லாம் சொல்லி குடுத்து கல்யாணமே பண்ணி வெச்சுடுவே போல இருக்கு.... உன்ன மாதிரியே எல்லாரையும் காதலிச்சு குட்டிச் சுவராகச் சொல்றியா...” என்று வாய் விட்டுவிட்டான். பின் நாக்கை கடித்துக்கொண்டான்.

நான் காதலிச்சு குடிச்சுவரானேனா, அது யாரால.... உன்னாலதானே பாவி மனுஷா.... மனசெல்லாம் நீதானே நிறைஞ்சிருக்கே.... உனக்கு மனசுல உரமில்ல.... என்ன சொல்ல வந்திட்டியா?” என்பதுபோல ஒரு பார்வை பார்த்துவிட்டு தலை குனிந்துகொண்டு கலங்கிய கண்களுடன் அந்தப் பக்கமாக போய் தனியே அமர்ந்துகொண்டாள்.

அவளிடம் போய் சாரி நித்யா.... ஏதோ தெரியாம...” என்றான்.
பரவாயில்லை அத்தான், போலாம் என்று கீழே இறங்கிவிட்டாள். மனது வெந்துபோனது.
அவளை அழைத்துச்செல்ல மகேசன் வரப்போவதாக செய்தி வந்தது.
போச்சு, அப்பா வந்து கூட்டி போய்டுவாரு.... இங்க இருந்தாலாவது அத்தானை அப்பப்போ பார்த்து பேசி பழகி ஏதானும் மாற்றம் கொண்டுவர முயற்சி செய்யலாம்.... இனிமே அதுவும் முடியாது என்று அழுதாள்.

கௌரி அவளுடனே தூங்கி எழுந்து பேசி வேலை செய்து என இருந்ததால் அவளுக்கு இவளின் எண்ண ஓட்டங்களும்
, அவள் புழுவாய் துடிப்பதும் கண்டு சந்தேகம் வந்தது. இந்த சில நாட்களாக அவளை கண்காணித்ததில் ஓரளவு விஷயம் புரிந்தது.
கல்யாணியை முன்தினம் அமர்த்தி என்ன சொல்லு என்று பலவந்தப்படுத்தி கேட்க, கல்யாணி தோள் கிடைத்ததே போதும் என்று அந்த ஒற்ற வயது சொந்தத்திடம் குமுறி கொட்டிவிட்டாள்.
அனைத்தையும் கேட்டு அதிர்ச்சியாகி உறைந்துபோனாள் கௌரி.
சரி அழாதே பார்க்கலாம், நான் அண்ணனிடம் பேசி பார்க்கறேன்என்று தேற்றினாள்.
இந்நிலையில் அவள் எதுவும் செய்ய முடியுமா.... தான் யாருக்காக பேசுவது... முதலில் அண்ணனிடம் பேசுவோம் என்னதான் பிரச்சனை என்று அறிவோம் என்று முடிவு செய்தாள்.

முன்னிரவில் மொட்டைமாடிக்கு போலாம் என்று வெற்றியை அழைத்துக்கொண்டு மேலே சென்றாள் கௌரி.
சரி நானும்தானே அவளோடு டாக்டரைப் பற்றி பேச வேண்டும் பார்ப்போம் என்ன சொல்கிறாள் என்று என எண்ணி அவனும் கூடச் சென்றான்.
அங்கே சென்று அமர்ந்ததும்
அண்ணா நான் பேசீடறேன்..... கோபப்படாம முழுசும் கேட்டுட்டு அப்பறம் உண்மையான பதிலச் சொல்லு என்றாள் பீடிகையுடன்.
என்ன அண்ணா நடக்குது உனக்கும் கல்யாணிக்கும் நடுவில?” என்றாள் நேராக.
என்ன நடக்குது ஒன்றுமே இல்லையே என்றான்.

அதான் கேட்கிறேன், ஏன் நிஜமாவா ஒண்ணுமே இல்லையா.... அப்போ அவ ஏன் குமுறி  குமுறி அழுகிறா, நீ ஏன் இந்த கொஞ்ச நாளா எதையோ பறிகொடுத்தா மாதிரி இருக்கே..... திடீர்னு உனக்கு ஏன் களத்துமேட்டில படுக்கை அண்ணா.... நான் அவகிட்ட பேசி எல்லாமே தெரிஞ்சுகிட்டேன்..... பிரச்சினை உன்கிட்டதான் இருக்குனு தான் நானும் நினைக்கிறேன்.... ஏண்ணா  இந்த தயக்கம்..... அவளே சொல்றாப்போல எனக்கும்கூட உன்னைப் பார்த்தாலே தெரியுது கல்யாணிய உனக்கு ரொம்ப பிடிச்சிருக்குனு..... அப்படி இருக்கும்போது நீயும் கஷ்டப்பட்டு அவளையும் ஏண்ணா கஷ்டப்படுத்தற... மாமாகிட்ட பேசிப் பார்ப்போமே.... அப்பறம் ஆண்டவன் விட்ட வழி அண்ணா என்றாள் ஆதுரமாக.

தங்கை சிறியவளாகினும் தன்னை அறிந்து வைத்துள்ளாள் என அறிந்த வெற்றி அந்நிலையில் அவளில் தன் தாயைக் கண்டான்.
இல்ல கௌரிமா வேண்டாம்..... இரு குடும்பத்துக்கும் இது நல்லதில்லை என்றான்.
யார்கிட்டேயும் ஒண்ணுமே பேசாம கேட்காமே இது நடக்காதுன்னு முடிவு செய்தா எப்படீண்ணா?” என்றாள்.
அது அப்படித்தான்மா..... முதல்ல இப்போ உன் கல்யாணத்த நல்லபடியா முடிக்கணும்.... என் மனசுல அதத் தவிர வேற ஆலோசனை இல்லை என்றான் எங்கோ பார்த்தபடி.

உனக்கொண்ணு தெரியுமா, நாளைக்கு மாமா வந்து கல்யாணிய அழச்சுகிட்டு போய்டுவார் என்றாள் அவன் முகத்தை உன்னிப்பாக பார்த்தபடி.
அப்படியா! ஏதேனும் தகவல் வந்துதா கூட்டிட்டு போகப் போறாரா?” என்றான் பரபரப்பாக.
ஐயோ அண்ணா, அவள இவ்வளோ இஷ்டப்படறியே பின்ன ஏன்?” என்று கலங்கியது கௌரி உள்ளம்.
சரி விட்டு பிடிப்போம் என்று சரி நீ நல்லா யோசி அதமட்டும்தான் சின்னவளா உன் மேல அக்கறை உள்ளவளா என்னால சொல்லமுடியும் என்றாள்.

ஹ்ம்ம் என்று ஒரு பெருமூச்சு மட்டுமே வந்தது வெற்றியிடமிருந்து.
உன்கிட்ட நானும் ஒண்ணு கேட்கணும். நீ யாரையானும் விரும்பறியா கௌரி?” என்றான் முகம் பார்த்து.
என்னது நானா யார விரும்பறேன்.... இது என்ன புது கதை?” என்றாள் அதிர்ச்சியாகி.

இல்லைமா உனக்கும் வரன் பார்க்கறோம் இல்லையா..... உன் மனசுல யாரானும் இருந்தா அத தெரிஞ்சுகிட்டு செய்யலாமேன்னுதான்...” என்றான்.
இப்போதைக்கு அவள் மனதில் யாரும் இல்லை என்று தெரிந்தது.
டாக்டர்கிட்ட வேலைக்குப் போகப் போறியாமே.... என்கிட்டே சொல்லவேயில்லை என்றான்.

ஆமா அண்ணா அவர்தான் அப்பாகிட்ட பேசி வரச்சொல்லி சொன்னார்.... கொஞ்ச நாள் போகலாம், எனக்கும் ஒரு மாறுதல் இருக்கும்னு தோணி சரின்னு சொன்னேன்..... ஏதோ ரிபோர்ட்ஸ் மாதிரி எழுதி கொடுக்கணுமாம்.... அவர் ஏதோ ஆராய்ச்சி பண்றாருபோல என்றாள்.
சரிமா, அவர் நல்லவர்தான் ஆனாலும் பார்த்து நடந்துக்க என்றான். “சரி அண்ணா என்றாள்.

அடுத்த நாள் காலை மகேசன் வந்து கல்யாணியை கூட்டிச் சென்றுவிட்டார். அவரிடம் அவள் தன்னையும் அந்த வீட்டையும் எவ்வளவு அன்பாக கவனித்துக் கொண்டாள் என்று பெருமையாகப் பேசினார் விசாலம். அதைக்கேட்டு அவருக்குமே மகிழ்ச்சி தான். மனமில்லாமல் அவள் கிளம்பிச் செல்ல வீடு வெறிச்சென்று இருந்ததுபோல தோன்றியது அனைவருக்கும்.
கௌரி அதன்பின் குளித்து தன் தாய்க்கு வேண்டிய உதவிகளை செய்துவிட்டு பத்து மணியோடு மிதமாக உடுத்தி தயாரானாள் கௌரி. கிளினிக் செல்ல அங்கே குமரன் ஏதுக்கே வந்து நோயாளிகளை பார்த்துக்கொண்டிருந்தான்.

வா... வாங்க கௌரி என்றான் மகிழ்ந்து போய். அவளும் புன்னகையுடன் உள்ளே சென்றாள்.
குட் மார்னிங் டாக்டர் என்றாள்.
நீ... நீங்க என்னை குமரன்னே கூப்பிடலாம் என்றான்.
அது கொஞ்சம் கஷ்டம் பார்க்கறேன் என்றாள்.
நான் என்ன வேலை செய்யணும்னு சொல்றீங்களா?” என்று கேட்டாள்.
அவன் கொஞ்சம் இருங்க கௌரி.. இந்த நோயாளியப் பார்த்து முடிச்சதும் வந்துர்றேன் என்றான்.

அவசரம் இல்லை மெதுவா வாங்க என்று காத்திருந்தாள்.
ஒரு மாதிரி அவசர கேஸ்களை பார்த்துவிட்டு அவளை அழைத்துக்கொண்டு உள்ளே ஆபீஸ் ரூமிற்கு சென்றான். அங்கே சில பைல்களில் நிறைய காகிதங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. எல்லாமே கையால் எழுதப்பட்ட குறிப்புக்கள். அதை எடுத்து அவளிடம் கொடுத்தான்.
இதெல்லாம் என் ஆராய்ச்சிக்கு நான் எடுக்கும் நோட்ஸ் கௌரி.... இதை தேதி வாரியா இப்படி கோழி கிருக்கலா இல்லாம நல்லா அழகா ஒரு பைல் மாதிரி தயார் செய்துட்டே வரணும்.... ஆங்காங்கே மேலும் குறிப்புகளும் மொழி மாற்றமும் தேவைப் படலாம்..... அந்த விவரம் எல்லாம் இதோ இங்கே இருக்கிற புத்தகங்கள்ள இருக்கும்..... எதுக்கு எந்த புத்தகம் தகவல் தருமுன்னும் அங்கேயே குறிப்பிட்டு வெச்சிருக்கேன் என்றான்.

இது ஒண்ணும் உங்களுக்கு சிரமம் இல்லையே?” என்றான்.
அப்படி எல்லாம் இல்லை.... நான் செய்துடறேன் என்றாள் புன்சிரிப்புடன்.
அவள் உடனடியாக தன் வேலையில் மூழ்கிப்போக அவனது கிளினிக் அறையிலிருந்து அவளையே அவ்வப்போது பார்த்திருந்தான். அதுவே இப்போதைக்கு போதுமானதாக இருந்தது.

இப்படி சில நாட்கள் வேலை நடக்க ஒரு நாள் மாலை அவளை எதேர்ச்சையாக கோவலில் சந்தித்தான் குமரன்.
என்ன கௌரி தரிசனம் ஆச்சா?” என்றான்.
ம்ம் ஆச்சு குமரன்.... நீங்க?” என்றாள்.
இல்லை இன்னும் தேவி தரிசனமும் வரமும் கிடைக்கலை என்றான் பூடகமாக.
அவன் குரலில் இருந்த எதுவோ அவளுக்கு எதையோ உணர்த்தியும் உணர்த்தாமலும் தோன்றியது.
சரி நான் வரேன் என்றாள்.
கொஞ்சம் உட்காரேன் கௌரி பேசலாம் என்றான்.
நீங்க இன்னும் சாமி கும்பிடலையே?” என்றாள்.
அதுக்கென்ன நான் போய் கும்பிட்டு வரவரைக்கும் நீ எனக்காக காத்திருக்க மாட்டியா?” என்றான்.

அவள் என்ன சொல்வதென்று தெரியாமல் சரி போயிட்டு வாங்க, ஆனா சீக்கிரமா, நான் போகணும். இருட்டினா அம்மா கவலப்படுவாங்க என்றாள்.
இதோ வந்துடறேன் என்று உள்ளே ஓடினான். “அம்மா நான் கௌரிகிட்ட பேசப்போறது பலிக்கணும்.... உன் ஆசீர்வாதம் வேணும் மா என்று வேண்டிக்கொண்டு வந்தான்.
தரிசனம் முடித்து வந்து அவளோடு குளக்கரையில் சிறிது தள்ளி அமர்ந்தான்.
கௌரி நீ எனக்கு செய்துகொண்டிருக்கும் உதவிக்கு ரொம்ப தாங்க்ஸ் என்றான்.
ஓ அது ஒண்ணும் பெரிய உதவியே இல்லை.... படிக்கப் படிக்க நீங்க எவ்வளவு உயர்ந்த பணியில ஈடுபட்டிருக்கீங்கன்னு தெரிஞ்சுது..... அதுக்கு சிறு துரும்பா நானும் உதவி செய்யறேன்னு நினைக்கும்போது எனக்கும் சந்தோஷம்தான் என்றாள்.

என்னைப் பத்தி என்ன நினைகிறே கௌரி? என்று கேட்டான். அவள் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தாள்.
பின் மெல்ல நல்லவரு இளகிய மனம் கொண்டவரு.... ரொம்பவே உயர்ந்த உள்ளம் உங்களுக்கு.... அதவிட மிக நல்ல டாக்டர்...” என்று நிறுத்தினாள்.
என்னைப்பத்தி சொல்லணும்னா, எனக்குன்னு இருப்பது என் அம்மா மட்டும்தான்.... அப்பா சில வருடங்களுக்கு முன்னாடி இறந்துட்டாங்க.... அப்பா போனதுக்கு அப்பறமா அம்மா ரொம்பவே மனத்தளவில ஒடுங்கீட்டாங்க... எனக்குன்னு ஒரு குடும்பம் வாழ்க்கைனு இல்லாம சூனியமா இருந்தது இதுவரை..... இப்போ உன்கூட பழக ஆரம்பிச்சதும் அந்த சூன்னியத்தன்மை கொஞ்ச கொஞ்சமா மறையத் தொடங்கி இருக்கு...” என்றான் அவள் முகம் பார்த்து.

ஓ அப்படியா!” என்பதுபோல பார்த்தாள்.
சில நாட்கள்ள உன்னை யாராச்சும் கல்யாணம் செய்துகிட்டு போய்டா நான் திரும்ப தனியனாகிடுவேன் என்றான்.
அந்த முகத்தில் தெரிந்த உண்மையான வருத்தம் அவளின் உள்ளே சென்று ஏதோ செய்தது.
நீங்களும் சீக்கிரமா யாரையானும் கல்யாணம் செய்துகிட்டா நல்லது இல்லையா.... இப்படி அவஸ்தைப் படவேண்டாமே என்றாள்.
உண்மைதான்..... மனசுக்கு பிடிக்கணும் இல்ல என்றான்.
ஆமாமா என்று தலை அசைத்தாள்.
வரப்போகும் உறவு மனதுக்கு ரொம்ப பிடிச்ச உறவா இருந்துட்டா வாழ்க்கை சொர்கம் இல்லியா?” என்று கேட்டான்.
உண்மைதான் என்றாள்.
அதனால்தான் கேட்கறேன் கௌரி என்றான்
என்ன என்பதுபோல அவனை சந்தேகமாக பார்க்க,
என்னை நீ திருமணம் செய்துப்பியா கௌரி.... நான் உன்னை ஆழமா உண்மையா காதலிக்கிறேன் கௌரி.... உன்னை நித்தமும் அருகே வெச்சு பார்க்கணும்னுதான் வேலைக்கு வரச்சொல்லி கேட்டேன்.... எனக்கு வேலையும் முக்கியம்.... அது இத்தனை நாள்ள உனக்கே புரிஞ்சுதான் இருக்கும்.... ஆனாலும் அதையும் மீறி உன்பால் நான் கொண்ட அன்பு என்னை அப்படிச் செய்ய வைத்தது..... அதுக்காக நீ என்னை மன்னிக்கணும்.....
இந்நிகில்ல நேத்தில்ல, போன வருடம் உனக்கு உடம்பு முடியலைன்னு நான் உன்னை குணப்படுத்த வந்தேனே, அப்போலேர்ந்தே எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு....

நீயோ இயல்பா பேசிகிட்டிருக்கே... எப்படி சொல்றது, ஏதானும் தப்பா பேசிடுவோமோ.... இருந்த நல்லுறவும் கெட்டுடுமோன்னு பயம்....
போதும் போதாததற்கு நான் புனிதமான தொழில் செய்யும் ஒரு மருத்துவன்.... என்னடா இவன்போய் இப்படீன்னு யாரும் நினைச்சுடுவாங்களோன்னு தயக்கம் வேற.... அதான்....
இத்தனை நாளா என்னோட தினமும் வேலை பார்க்கறியே கௌரி..... நான் என்னிக்கானும் உன்னை ஒரு தப்பான கண்ணோட்டத்தோட பார்த்திருக்கேனா, வரம்பு மீறி பேசி இருக்கேனா.....

நீ என்ன நினைக்கறே கௌரி..... ஏதானும் சொல்லேன்..... நான் பேசியது உனக்கு அதிர்ச்சியா இருக்கலாம்..... நீ டைம் எடுத்துகிட்டு யோசிச்சு சொல்லலாம்..... உங்க வீட்டுல ஒத்துப்பாங்களா கௌரி..... நீ சரின்னு சொன்னா நான் வந்து பேசறேன்என்றான் ஒரே மூச்சில்
கௌரி வாய் அடைத்துபோய் பேசாதிருந்துவிட்டாள்.

அண்ணா அன்னிக்கி நான் இவரிடம் வேலைக்கு வரும்போது நான் யாரையானும் காதலிக்கிறேனா என்று கேட்டானே, ஒரு வேளை அவனுக்கு இந்த விஷயம் தெரிஞ்சிருக்குமோ என்று குழம்பினாள்.
தான் அறிந்தவரை இவன் நல்லவந்தான்..... ஒழுக்கமானவனும் கூட..... அனாவசியமாக ஒரு பார்வையோ பேச்சோ கிடையாது.... எல்லாவற்றையும்விட இவன் ஒரு மிகச்சிறந்த மருத்துவன்..... ஊருக்கு அயராது உழைப்பவன் என்று அவனை பற்றி நினைத்துப்பார்த்தாள். ‘கல்யாணி இருந்திருந்தால் பேசிப் பார்க்கலாம்... அவள்தான் சென்றுவிட்டாளே என்று எண்ணினாள்.

எனக்கு.... நான்..... என்ன சொல்றதுன்னு ஒண்ணும் புரியலை..... திடீர்னு சொல்லீட்டீங்க..... நான் யோசிக்கணும் நிறைய யோசிக்கணும்..... யோசிச்சுட்டு சொல்றேன் என்று எழுந்துவிட்டாள்.
சரி கௌரி.... யோசிக்கறேன்னு சொன்னியே, அதுக்கே தாங்க்ஸ்..... நான் காத்திருப்பேன்.... ஆனா ஒண்ணு கௌரி.... இது வேற வேலை வேற, அதனால் அங்க வராம மட்டும் இருக்காதே என்றான் கெஞ்சும் குரலில்.
கண்டிப்பா வருவேன்.... அது புனிதமான தொண்டு.... அதை விடமாட்டேன் என்றாள் அவன் முகம் பார்த்து.
அவன் புன்னகைத்து விடை பெற்றான். அவளும் வீடு வந்து சேர்ந்தாள். உண்டுவிட்டு கிடந்து ஆலோசிக்க ஆரம்பித்தாள்.


No comments:

Post a Comment