Monday 15 April 2019

ULLAM RENDUM ONDRU -2


படபடவென ஓசையுடன் மண் ரோட்டில் வந்து கொண்டிருந்தது அந்த மோட்டார் பைக். அதில் கம்பீரமாக வீற்றிருந்தபடி அந்த கிராமத்தக் காலை பொழுதின் அழகை ரசித்தான் வெற்றிவேலன். தினமும் ஓட்டிப் போய் வந்த பாதையில் பழகிய குதிரையாக வண்டி ஓடிக்கொண்டிருக்க, வெற்றி சுற்றும் இருந்த சூழலை தன்னை மறந்து ரசித்தான். ஒற்றைக் கையால் தன் சிகையை கோதி விட்டுக்கொண்டான். விடிந்து மணி ஒன்பதை நெருங்க வெய்யில் மெல்ல மேலேறிக் கொண்டிருந்தபோதும் சில்லென்ற காற்று சாமரம் வீசியது. கோடை காலம் தான், ஆயினும் கிராமத்தின் நாலாபுறமும் அணைத்துக் கொண்டிருந்த சோலைகளும் தோட்டங்களும் தோப்புகளும் கோடையின் வெட்பத்தை தணித்தபடி பாதுகாத்தது.

வெற்றி எனப் பலராலும் அழைக்கப்படும் வெற்றிவேலன், அழகிய ஆண்மகன். சுருள் முடியும் முறுக்கு மீசையும் உடற்பயிற்சியால் உரமேறிய உடலும் காந்தக் கண்களும் என்று வர்ணித்துக்கொண்டே போகலாம். இருபத்தி எட்டு வயதில் இன்னமும் மணம் முடிக்காமல் இருக்கிறான். தங்கையின் மணம் முடிந்தபின் செய்துகொள்வேன் என்று கூறிவிட்டான்.

அவனைக்கண்டு ஏக்கப் பெருமூச்சு விடாத குமுறிகளே அந்த வட்டாரத்தில் இல்லை. ‘யாருக்கு கொடுத்து வெச்சிருக்கோஎன்று பொருமினர்.

விவசாயம் முக்கிய பாடமாக எடுத்து இளங்கலை பட்டம் பெற்றிருந்தான். தந்தை செய்து வந்த விவசாயத்தை தொடர்ந்து ஊரே மெச்சும்படி செய்தான். அதில் பல புதுமைகளை புகுத்தினான். உரம் இடாத பயிர்வளர்ப்பு வேறு ஒரு பக்கம். ஐம்பதுக்கும் மேல் பசுமாடுகளும் கூடவே எருமைகளுமாக பால் பண்ணை வைத்து நடத்தி வந்தான். கைபடாது சுகாதாரமான வகையில் பால் கறந்து சொசைடிக்கென பால் விநியோகம் செய்து வந்தான்
சென்ற வருடமும் எப்போதும் போல சிறந்த பண்ணை என்றும் சிறந்த விவசாயி என்றும் பட்டங்களும் கப்புகளும் வென்றான்.


வீடு இன்னும் சிறிது தூரம் தான் என்ற நிலையில் தனக்கு முன்னே ஆடி அசைந்து போய்க்கொண்டிருக்கும் பெண்களைக் கண்டான்
ஒன்று அவன் அருமைத தங்கை கெளரி, மற்றொன்று யார்! இங்கே இந்த கிராமத்தில் பார்த்ததாக ஞாபகம் இல்லையே, ஒருவேளை வெளி ஊரோ என்று நினைத்தபடியே வண்டியை வேகமாக விட்டான். அவர்களை சமீபிக்க அந்த பெண்ணின் கூந்தலினால் பெரிதும் கவரப்பட்டான். நீண்டு அடர்ந்து விரிந்து முதுகு மொத்தமும் படர்ந்திருந்தது. குளித்து கீழே ஒரு முடிச்சிட்டு விட்டிருந்தாள். அதே நேரம் அந்தப் பெண் கௌரியின் பக்கம் குனிந்து 

யாருடி அது, நம்பள பின் தொடர்ந்து வராப்போல இருக்கு?” என்றாள் மெல்ல ஓரக்கண்ணால் திரும்பிப் பார்த்து
கௌரி திரும்பாமலே எல்லாம் நமக்கு வேண்டப்பட்டவங்கதான், பேசாம வா என்றாள் சிரித்தபடி
என்னடி நீ சிரிக்கறே?” என்பதற்குள் வெற்றி அவர்களைத் தாண்டி வண்டியின் வேகத்தை குறைத்து காலை கீழே ஊன்றி நிறுத்தினான்
என்ன கௌரி, எங்க போயிட்டு வரே? ஆமா இது யாரு?” என்றான் அந்தப் பெண்ணை லேசாக பார்த்தவண்ணம். கிராமம் ஆயிற்றே. முகத்தோடு முகம் நேராகப் பார்க்க முடியாதே... ஆயினும் அவன் பார்வையினை எதிர்கொள்ள முடியாமல் அந்தப் பெண் தலை குனிந்து நின்றிருந்தாள்
இவன்.... இவன் வெற்றி அத்தான் அல்லவா! மறக்கவும் முடியுமா இந்த முகத்தை!!’ என்று நெஞ்சு படபடத்தது.
அவன் பார்த்த அந்த வட்ட முகம் அதில் கருவண்டு போன்ற கண்கள் அலைபாய்ந்தன.... அதனை குடைபோல விரிந்து  அடை காப்பதுபோல மூடியது அவளது நீண்டு வளைந்த கண் இமைகள்.... ‘இந்த நீண்ட இமைகள் இந்தக் கண்கள் எனக்கு எங்கேயோ பரிச்சயம் போல....’ என்று தோன்றியது வெற்றிக்கு


அண்ணா, நீ எங்க இங்க.... காலையில போனியே உரம் வாங்க, இப்போத்தான் வரியா அண்ணா.... இது யாருன்னா கேக்கறே.... இன்னுமா தெரியல?” என்று சிரித்தாள்
இல்லை எங்கியோ பார்த்த மாதிரி இருக்கு...” என்றான் தயங்கி அவள் முகத்தைக் கண்டும் காணாமல்
இதுதாண்ணா....” என்று கௌரி கூறும் முன்னே அவன் இதழ்கள் முணுமுணுத்தன, “நித்யகல்யாணிஎன்று
அட கண்டுபிடிச்சுட்டியே!” என்றாள் கலகலவென சிரித்தபடி.


ஓ சிறு பெண்ணாக பத்து வயதில் பாவாடை சட்டை அணிந்து பார்த்தது... இவ்வளவு வளர்ந்து விட்டாளா!’ என்று ஒரு பிரமிப்பு
எப்போ வந்தாங்க?” என்று கேட்டான்
சித்திரை திருவிழா வருதே அண்ணா, அதான் வரச்சொல்லி அப்பா எழுதி இருந்தாரு..... இன்னிக்கிக் காலையில தான் வந்து இறங்கினாங்க என்றாள்
சரி வீட்டுக்குத்தானே, வெய்யில் ஏறுது, வண்டியில ஏறுங்க போய்டலாம் என்றான்
அந்தப் பெண் தயங்கி வேண்டாம் கௌரி, வீடு பக்கம்தானே... நாம நடந்தே போய்டலாம் என்று கௌரியின் காதை கடித்தாள்
அண்ணா தோ வந்துட்டோமே.... நீ முன்னே போ.... நாங்க பின்னாடியே வந்துடுவோம் என்றாள்

சரி என்று அவன் வேகம் கூட்டிச் சென்றுவிட்டான்
அவன் போனபின் இந்த வெற்றி அத்தான் என்ன அழகு ... என் மாமான் மகன்தான் என்ன ஒரு கம்பீரம்அவனது களையான முகமும் கருத்த அழகிய விழிகளும் முறுக்கிய மீசையும் அவள் கண்முன்னே வந்து போயின. அவன் பைக்கில் ஆகிருதியாக அமர்ந்திருந்தது யாரோ ராஜகுமாரன் தன் புரவியின் மீது அமர்ந்திருந்ததைப் போலத் தோன்றியது அவளுக்கு.

மெல்ல நடைபோட்டு வீட்டை அடையும் முன் அவன் என்ன செய்கிறான் என்ன படித்தான் என்றெல்லாம் தெரிந்துகொண்டாள் நித்யகல்யாணி எனப்படும் கல்யாணி. எல்லோரும் அவளை அப்படியே அழைத்தனர்
நேராகக் கேட்க, வெட்கமும் கூச்சமும் தடுத்தது. ஆனால் சாமர்த்தியமாகத் தனக்கு வேண்டும் அளவு விஷயங்களை கௌரியிடமிருந்து கறந்து விட்டாள்.

வெற்றி வீட்டை அடைந்து கைகால் கழுவி காலை உணவிற்கென பின்கட்டிற்குச் செல்ல அதற்குள்ளாக பின்பக்கம் வழியாக பெண்கள் இருவரும் வந்து சேர்ந்திருந்தனர்

என்னடி, ஆத்தங்கரைக்குப் போனா சட்டுனு வர்றது இல்லையா?” என்று சத்தம் போட்டாள் கௌரியின் தாய்
இல்லேமா, கல்யாணி குளிச்சுட்டு அப்படியே கோவிலுக்கும் போயிட்டு வரலாம்னு சொன்னா, அதான் அழைச்சுட்டு போயிட்டு வரேன் என்றாள்
சரி சரி அண்ணன் வந்துட்டான் பாரு.... தட்டப் போடு.... நான் பலகாரத்த எடுத்துட்டு வரேன்.... போம்மா கல்யாணி உங்கப்பாவையும் உங்க மாமாவையும் கூட பலகாரம் சாப்பிட கூப்பிட்டேன்னு சொல்லி கூட்டிக்கிட்டு வாஎன்றாள்

சரிங்கத்தே என்று அவள் மேலே ஓடினாள். ஏறும்போது ஓரக்கண்ணால் வெற்றியை கண்டபடி மேலேறினாள். அங்கே மாடிப்படியின் திருப்பத்தில் ஏறி அங்கிருந்து அவனை கண்ணாரக் கண்டாள். அங்கிருந்த தன்னை அவனால் காணமுடியாது என்ற தைர்யம் அவளுக்கு. அவள் மேலேறி திரும்புவதைக் கண்ட வெற்றி திருப்பத்தில் ஏறி நின்று தன்னைக் காண்பதை வேறே பக்கத்திலிருந்து பார்த்து கொண்டுதான் இருந்தான். புன்னகைத்துக் கொண்டான்.

ஆண்கள் காலை உணவை சாப்பிட்டு முடித்தனர். பின், கௌரி அவளின் தாய் விசாலம், கல்யாணி  மற்றும் அவளின் தாய் கற்பகம் என்று பெண்கள் சாப்பிட உட்கார்ந்தனர்
என்ன அண்ணி வெற்றி தம்பி நல்லா வளர்ந்திருச்சே.... இருபத்தி எட்டு இருக்கும் இல்ல.... இன்னும் திருமணத்தப் பத்தி யோசிக்கலையா தம்பிக்கு?” என்றாள் கற்பகம்
ஆமா கற்பகம் பார்க்கணும்..... தம்பிதான் கௌரிக்கு முதல்ல செய்துட்டு தான் செய்துக்கறதா சொல்லி காக்க வெச்சிருக்குது என்று புலம்பினாள்
வெற்றியின் திருமணம் பற்றி பேச்சு வந்ததுமே காதை தீட்டிக்கொண்டு கேட்டாள் கல்யாணி. ‘அத்தானுக்கு கல்யாணத்துக்கு பார்க்கறாங்களா!’ என்று மனம் படபடத்தது.


அப்போ கௌரிக்குத் தேட ஆரம்பிச்சுட்டீங்களா அண்ணி?” என்றாள் கற்பகம்
ஆமா கற்பகம் ரெண்டு மூணு இடம் வந்திருக்கு.... ஜாதகம் வாங்கி பொருத்தம் பாத்திருக்கு.... இனிமேதான் பெண்பார்க்க வரச்சொல்லணும்.... இவளும் கல்யாணிக்கு ஒரு வயது சின்னவதானே.... இப்போதான் காலேஜ் முடிச்சா.... அத முடிச்ச பிறகுதான் கல்யாணம் பண்ணணும்னு தம்பி ஒரே அடம் பண்ணி படிக்கச் வெச்சுது.... இப்போ தானே சித்திரை பிறந்திருக்கு.... அதான் ஒண்ணொண்ணா நல்லது நடக்கணும்..... என்னமோ இத ஒருத்தன் கையில பிடிச்சு குடுத்துட்டா கவலை இல்லை என்றாள் விசாலம்
அதெல்லாம் உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லபடி நடக்கும் அண்ணி என்றாள் கற்பகம் நிறைந்த மனசுடன்

என்னடி கல்யாணமாமே?” என்று கௌரியை சீண்டினாள் கல்யாணி
போடி என்றாள் அவள் வெட்கத்துடன்
ஏன் கல்யாணி உனக்கும் பார்க்கறாங்களா?” என்றாள் கௌரி
இன்னும் இல்லைடி.... எங்கப்பாவும் நான் காலேஜ் முடிக்கணும்னு தான் காத்திருக்கார் என்று கூறும்போதே அவள் கண்கள் வெற்றி தென்படுகிறானா என்று தேடின.
என்ன கண்ணு யாரையோ தேடுதே.... ‘உன்னைக் கண் தேடுதேன்னு என்று கிண்டல் செய்தாள் கௌரி
இல்லையே என்று அவசரமாக பார்வையைத் தழைத்தாள் கல்யாணி.

அவள் என்ன செய்வாள். விவரம் அறியாத சின்னஞ்சிறு வயது முதலே அவள் வெற்றியைக் கண்டு வருகிறாள். அவள் பிறந்ததும் இதே கிராமத்தில் தான்.

திருச்சிக்கும் மதுரைக்கும் நடுவில் அமைந்திருந்தது அவர்களது கிராமம். கௌரியின் தந்தை கந்தசாமி அங்கே மிராசுதாராய் இருந்தார். அந்த காலத்தில் அவரது பெரியப்பாவும் அப்பாவும் மிக ஒற்றுமையாக அங்கே வாழ்ந்து வந்தனர். கந்தசாமிக்கும் கூட பிறந்த பிறப்பு ஒரு தம்பி வேலுச்சாமி மட்டுமே. அவனும் ராமனுக்கு ஏற்ற லக்ஷமணன் தான். சகோதரிகள் இல்லை. பெரியப்பாவிற்கோ ஒரு மகள் கற்பகம். அவளை அடுத்து ஒரு மகன் வேல்முருகன். கந்தசாமிக்கு கற்பகத்தின் மீது பெரும் பாசம். அவளுக்கும் தன் தம்பியை விடவும் அண்ணா அண்ணா என்று கந்தசாமி மீதுதான் பாசம். எப்போதும் இங்கேதான் வந்து ஒட்டிக்கொள்வாள்

அவளின் தாய் அவளின் வேல்முருகனை பிரசவித்து இரண்டு ஆண்டுகளிலேயே இவளது பத்தாவது வயதில் இறந்து போயிருக்க தாயில்லாக் குழந்தைகள் என கந்தசாமியின் தாய் தன் கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொண்டாள். தம்பி வேல்முருகன் சிறுவயது முதலே சேர்வார் சேர்க்கை சரி இல்லாமல் கெட்டழிந்தான். அதனால் கற்பகத்துக்கு அவனைக் கண்டாலே பிடிக்காது பயமும் கூட. பருவ வயதிற்குள்ளாகவே குடி புகை என்று திரிந்தான்.

கற்பகத்துக்கு பருவ வயது வந்து மகேசனுக்கு மண முடிக்க ஏற்பாடுகள் நடந்தன. கந்தசாமிதான் முன்னிருந்து எல்லா ஏற்பாடுகளும் செய்தார். அவள் திருமணத்தை கோலாகலமாக நடத்தினார். அவள் விடைப்பெற்றுச் செல்ல பிழிய பிழிய அழுதவரும் அவரே.

எல்லா வருடமும் பண்டிகை திருவிழா எனும்போது குடும்பத்தோடு வந்துபோவாள் கற்பகம். கந்தசாமிக்குப் பிறந்தது ஆணொன்று வெற்றி, ஒன்பது வருடங்கள் கழித்து பிறந்த பெண் ஒன்று கௌரி. கௌரியை அடுத்து பின்னோடு ஒரு வருடத்தில் கற்பகம் கருவுற்று கல்யாணியை பெற்றேடுத்தாள். தாய் வீடு என்று இருந்தாலும் அங்கு தாய் இல்லை என்பதால் கந்தசாமியின் தாயும் விசாலமுமே அவளைக் கூட்டி வந்து வைத்து அன்பாகப் சீராட்டி பிரசவம் பார்த்தனர்

சிறுகுழந்தையாக அவளை வெற்றி தூக்கிக் கொஞ்சும்போது எல்லா பெரியோர்களையும் போல அவனையும் கிண்டல் செய்தனர்
என்னடா இப்பொவே பெண்டாட்டிய தூக்கி வெச்சிருக்கே..... விட்டா இப்போவே கட்டிக்குவே போலிருக்கே என்று. அப்போதெல்லாம் கற்பகத்தின் கணவன் மகேசன் கோபம் கொள்ளுவான்
அதென்ன ரெண்டு பேருக்கும் பத்து வயது வித்தியாசம் இருக்குது, அவன என் பொண்ணோட சேர்த்துப் பேசறீங்க? இப்படி இப்போலேர்ந்தே உறவு வெச்சு பேசாதீங்க... எனக்கு இதெல்லாம் கட்டோடு பிடிக்காது, ஆமா சொல்லிபுட்டேன் என்பார். சரி என்று அந்தப் பேச்சை மீண்டும் எடுக்காமல் விட்டுவிட்டனர். அந்தப் பேச்சு வெற்றியின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. ஒதுங்கியே இருந்தான்


ஆனால் கற்பகத்திற்கும் மனதிற்குள் ஆசை இருந்தது. அதை மகேசனுக்கு பயந்து வெளிகாட்டமாட்டாள். கல்யாணியும் சிறு வயது முதலே கௌரியோடும் வெற்றியோடும் பழகி விளையாடி வந்ததால் அவன் மீது ஒரு அன்பு ஒரு பிடிப்பு இருந்து வந்தது. அவளுக்கு பத்து வயதிருக்கும்போது அவளது தந்தை தஞ்சை பக்கம் குடிமாறினார். அங்கே அவரது உரத்தொழிலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் அல்லவா. அங்கே போனபின் இவர்களால் அடிக்கடி இங்கே வர முடியவில்லை. அதனால் கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் ஒருவரை ஒருவர் கண்டிருக்கவில்லை. கண்ணால் காணவில்லையே தவிர மனதில் வெற்றியே கொலுவிருந்தான். விளையாட்டுப் பிள்ளைகளாகப் பழகியது, பருவ வயது வந்ததும் மனதில் அவனே தனக்கு மனதுக்கினியவன் என்று நினைப்பு கெட்டியாக ஏறி உட்கார்ந்துவிட்டது கல்யாணிக்கு.

இத்தனை வருடங்களுக்குப் பிறகு ஊருக்கு வருகிறோம் என்றதும் அவள் மனம் துள்ளியது
அங்கே அத்தான் இருப்பானே, பார்க்கலாமே.... எப்படி இருப்பான்.... என்னை நினவு வைத்திருப்பானா இல்லை மறந்திருப்பானா என்று நூறு கேள்விகள் மனதை குடைந்தன. அவளின் ஆவல் இரவும் பகலும் அவளை வாட்டியது
இங்கே வந்து நுழைந்த உடனே கண்கள் அவனைத்தான் தேடின... யாரிடம் கேட்பது.... வெட்கம் வேறு.... பேசாமல் காத்திருந்தாள்

பின்னோடு கௌரியுடன் குளிக்கச் சென்றாள். குளித்து வரும்போது கடவுளே வரம் தந்ததுபோல வெற்றியைக் கண்டாள். அதுவும் அவ்வளவு அழகாக கம்பீரமாக ஆண்மை தன்மையுடன்.... மனசு தவித்து கிளர்ந்தது.... அவளது நினைவோட்டத்திற்கு இப்போது ஒரு உருவம் கிடைத்திருந்தது. இதுவரை அவனை கடைசிமுறை பார்த்த இளவயது முகமே அவளுக்கு கவனத்தில் இருந்தது. அப்போதும் அவன் ஜம்மென்றுதான் இருப்பான்

அவனைப்பற்றி நினைக்கும்போதே அவளுக்கு முகம் சிவப்பேறியது.... இது நடக்குமா.... நான் அவனையே தான் நினைத்திருக்கிறேன்.... அவனும் என்னை நினைத்திருக்கிறானா என்று எப்படி தெரிந்துகொள்வது என்று துடித்தாள்
அடி அசடே அவன் உன் பெயரை உடனே கண்டுகொண்டு உச்சரித்தானே என்றது மனம்
ஆமாம் கண்டுபிடிச்சாருதான்னாலும், நான் அவர் மனதில் இருக்கேன்னு அர்த்தம் இல்லியே என்று குமைந்தாள்

சரி வந்து ஒரு நாள் கூட ஆகவில்லையே பாப்போம் என்று அடங்கினாள்.

பின்னோடு வெற்றி கிளம்பி தன் வேலைமேல் போக அவளுக்கு மாமா  வீடு கசந்தது. கௌரியுடன் பேசி அரட்டை அடித்து சாப்பிட்டு கொஞ்சம் தூங்கி எழுந்து முகம் கழுவி கோவிலுக்குக் கிளம்பினர் இருவரும். அங்கே போய் அம்மனை மனதார வேண்டினாள்.... 

அம்மா தாயே நீ உலகத்துக்கே தாய்.... என் மனக்குமுறல் உனக்கு புரியாதாம்மா..... நான் மனதில் அத்தானைத்தான் நினைச்சிருக்கேன்.... நான் அவரையே என் கணவரா அடையணும்.... நீதான் நடத்தி வைக்கணும்மா என்று உருகி வேண்டினாள்.


அங்கிருந்து பின்பக்கம் கோவில் குளத்தருகே வந்து அமர்ந்து மீண்டும் கொஞ்ச நேரம் அரட்டை அடித்தனர். அப்போது அவளின் மனம் குளிரும் வண்ணம் வந்து நின்றான் வெற்றி. ஜரிகைகரை வேட்டி அதன் மீது வெள்ளை முழுக்கை சட்டை மடித்துவிடப்பட்டு இருந்தது. இடது கையில் வாட்ச் அணிந்திருந்தான். அவனை ஓரக்கண்ணால் பார்த்து முகம் தழைத்தாள். ‘என்ன இவள் வந்ததுலேர்ந்து இப்படியே பார்க்கிறாளே என்னை?’ என்று தோன்றியது வெற்றிக்கு



No comments:

Post a Comment