Thursday 18 April 2019

ULLAM RENDUM ONDRU - 5


ஹப்பா அந்தவரையிலும் பெரிதாக அடிபடாமல் தப்பினாரே என்று நிம்மதி எல்லோருக்கும்.
கந்தசாமி கலங்கி போயிருந்தார் என்னடி விசாலி, எப்படி இருக்கு என்று அவர் கையை பிடித்தபடி அங்கேயே சுற்றி வந்தார்.
வெற்றி டாக்டரை அனுப்பப் போயிருந்தான்.
ஒண்ணுமில்லைங்க.... நீங்க கவலைப் படாதீங்க..... இந்த வீடு எப்படின்னு நினைச்சாத்தான் எனக்கு கவலையா இருக்கு என்றார் அவர்.
இதெல்லாம் ஒரு கவலையா.... முடிஞ்சா நாங்களே சமைச்சுக்குவோம்.... இல்லையா வேலைக்கார அம்மா என்னா செய்யுதோ அதை சாப்பிடுவோம் விடு..... முதல்ல நீ சரியாகி எழுந்து நடம்மா என்றார் ஆதுரமாக.

அதுவரை அவர்களை தனியே விட்டு ஒதுங்கி இருந்தாள் கல்யாணி
. அவர்களின் அன்பும் காதலும் கண்டு பிரமித்து போயிருந்தாள்.
அத்தைக்காக என்னமாக உருகுகிறார் மாமா என்று மெச்சிக்கொண்டாள்.
பின்னோடு உள்ளே வந்து அத்தை இப்போ எப்பிடி இருக்கு? ஒண்ணும் கவலை வேண்டாம் எல்லாம் நான் பாத்துக்கறேன். நீங்க பேசாம படுத்திருங்க என்றாள்.
“அதுசரிமா கௌரியும்தான் இன்னிக்குன்னு வீட்டு விலக்கா இருக்காளே. இன்னும் இரண்டு நாள் நீ தனியா என்ன பண்ணுவே..... சாமான் என்ன எங்க இருக்குன்னு கூட தெரியாதேடா கண்ணு என்றார்.
அதேல்லாம் என்னங்கத்தே பிரமாதம்.... நான் செய்துக்குவேன் பேசாம இருங்க என்று தைர்யம் கூறினாள்.

மதியம் சாப்பாட்டிற்கு அத்தை எல்லாமே செய்திருக்க மாமாவிற்கு பரிமாறி சாப்பிட வைத்தாள்
. விசாலம் ஒன்றும் வேண்டாம் என்று முனக,
அதெல்லாம் முடியாது..... சாப்பிட்டுவிட்டு மாத்திரை வேற போடணும் என்று அவரைச் சின்னக் குழந்தையாக மிரட்டி கெஞ்சி சாப்பிட வைத்தாள்.
வலி தாளாது அவரால் உட்காரவே முடியவில்லை. அதனால் சாய்வாக தலையணை வைத்து அதன் மீது சாய்த்து கரைத்தாற்போல் அவளே ஊட்டிவிட்டாள். பின்னோடு கௌரிக்கும் சாப்பாடு போட்டாள்.
கௌரி என்னடி இந்த நேரத்துல நான் இப்படி..” என்று அழுதாள்.
ஒண்ணுமில்லை பேசாம இரு..... நான் இருக்கேனில்ல அப்பறம் என்ன?” என்று அதட்டி உண்ண வைத்தாள்.

அம்மாவிடம் கொஞ்ச நேரம் அமர்ந்து பேசினாள் கௌரி
. அவர் மெல்ல மருந்தின் உதவியுடன் உறங்கத் தானும் உண்டாள் கல்யாணி.
மணி இரண்டை நெருங்கும்போது வெற்றி வந்தான்.
என்ன, இப்போ எப்பிடி இருக்கு வலி அம்மாவுக்கு?” என்று.
பரவாயில்லை அத்தான்..... தூங்கறாங்க. நீங்க வாங்க சாப்பிடலாம் என்று அழைத்துச் சென்று சாப்பிட வைத்தாள். கூடவே அமர்ந்து விசிறிவிட்டு பரிமாறி அவன் சாப்பிடும்வரை கூடவே இருந்தாள். அவன் மனமும் முகமும் தெளியவில்லை. இருக்கும்தானே... தாய் ஆயிற்றே. அவன் உண்டுவிட்டு வேலைமேல் சென்றான். “பாத்துக்க என்றுவிட்டு சென்றான்.

மாலை முகம் கழுவி விளக்கேற்றி வணங்கி பின் இரவு சாப்பாட்டிற்கென ஏற்பாடுகளை கவனித்தாள் கல்யாணி
. தோசைக்கு மாவு இருந்தது. கூட கொஞ்சம் பொங்கலும் செய்துவிடலாம் என்று எண்ணி அப்படியே செய்தாள். அதற்கேற்ப கெட்டி தேங்காய் சட்டினியும், வேர்கடலை வர மிளகாய் இரு பல் பூண்டு வைத்து காரமாக இன்னோரூ சட்டினியும் அரைத்துவைத்தாள்.
இரவு மாமாவை சாப்பிட அழைக்க விசாலம் பக்கத்திலேயே எனக்கும் குடுத்துடுரியா மா கல்யாணி?” என்றார். கூடவே உணவருந்தி பழக்கம் அதுதான் மாமா அப்படி கூறினார் என்று எண்ணி அவருக்கு தட்டிலிட்டு கொடுத்துவிட்டு விசாலத்திற்கும் ஒரு கிண்ணத்தில் பொங்கலைப் போட்டு ஒரு ஸ்பூனுடன் சென்று அவர் சாப்பிடும்போதே அத்தைக்கும் இவளே ஊட்டிவிட்டுவிட்டாள். மருந்து தேய்த்து மாத்திரை கொடுத்து தூங்க வைத்தாள். அவர் உறங்கும்வரை மாமா அங்கேயே அமர்ந்து அவருடன் சன்னக்குரலில் ஏதோ பேசுவதைக் கண்டு ஆச்சர்யமானாள். இந்த இருவரின் தாம்பத்யம்தான் எத்தனை அருமையானது என்று எண்ணி வியந்தாள்.

கௌரிக்கும் சூடாக தோசை ஊற்றி கொடுத்து சாப்பிட வைத்துவிட்டு தானும் உண்டாள்
.
வெற்றி வர நேரமாகும் கல்யாணி, நீ தூங்கும்மா..... அவன் வந்தா தானே எடுத்துபோட்டு சாப்பிடுவான்.... அவனுக்கு பழக்கம்தான் என்று கூறிவிட்டு உறங்கச் சென்றார் மாமா.
சரி என்றாள் ஆனாலும் உறக்கம் பிடிக்கவில்லை. மாடியில் அவளும் கௌரியும் தூங்கும் அறைக்குச் செல்ல கௌரி நிலத்தில் பாய் விரித்து படுத்து உறங்கிக்கொண்டிருந்தாள். அந்த அறையின் ஜன்னல் திண்ணையில் அமர்ந்தால் வாசல் தெரியும். அங்கேயே அமர்ந்தாள் கல்யாணி. தூரத்தில் ஒரு பொட்டாக விளக்கு தெரிந்தது. கூடவே அவன் பைக்கின் படபட சத்தமும் கேட்டது. கீழே இறங்கி வந்து மெல்ல சத்தம் இல்லாமல் கதவை திறந்து வைத்தாள். அங்கே அந்த வேளையில் அவளைக்கண்டவன் அதிசயித்தான்.

இப்போ அம்மாக்கு எப்படி இருக்கு?” என்றான் கவலையாக.
நல்லா இருக்காங்க பாதி வலியும் குறைஞ்சிருக்குனு சொன்னாங்க.... சாப்பிட்டு தூங்கீட்டாங்க என்றாள் .
ஹப்பா நல்லகாலம் என்றபடி உள்ளே வந்து கைகால் கழுவி முகம் துடைத்து செம பசி என்றபடி வந்து அமர்ந்தான். ‘பாவம் என்று அவசரமாக பொங்கலை வைத்து சாம்பார் சட்டினியுடன் பரிமாறினாள். அவன் அதை உண்பதற்குள்ளாகவே சூடாக தோசை ஊற்றி எடுத்துவந்தாள்.
இதுவே போதும் நீ ஒக்காரு.... சாப்பிட்டியா?” என்றான்
ம்ம் நான் சாப்பிட்டேன்... நீங்க நிதானமா சாப்பிடுங்க என்றாள்.
அவனுக்கு பரிமாறிக்கொண்டே மெல்ல அத்தான்....”  என்றாள் மெதுவாக ம்ம்என்றான்.
அந்த டாக்டர் வந்தாரே, இதுக்கு முன்னால நம்ம வீட்டுக்கு வந்திருக்காரா?” என்று கேட்டாள்.
ஏன் கேட்கிறே?” என்றான்
சொல்லுங்களேன், காரணத்தோடதான் கேக்குறேன்என்றாள் மீண்டும்.
மனதில்லாமல் ஆமா டாக்டர் குமரன் வந்தார்.... முத முறை நம்ம கௌரிக்கு ரொம்ப காய்ச்சலா இருந்துதுன்னு வீட்டுக்கு நாந்தான் கூட்டி வந்தேன்..... வாரம் போல படுத்துட்டா.... நாங்க எல்லாம் பயந்துட்டோம்.... அப்போ ரெண்டு மூணு வாட்டி வந்து ஊசி போட்டு அவள செக் பண்ணி எல்லாம் செஞ்சாரு..... எதுக்கு?” என்றான் கேள்வியாக.

இல்லை அத்தான், அவர் இன்னிக்கி வந்தாரில்ல, அத்தைய கவனிச்ச பிறகு உங்களோட கிளம்பும் முன்னால அவர் கண்ணு ரொம்பவே யாரையோ தேடுச்சு..... அலைப்பாயஞ்சாரு அத்தான்”
அது எப்பிடி உனக்கு தெரியும்?”
ஐயோ கேளுங்க அத்தான்..... எனக்கு உங்கள பார்க்கணும்னு தோணிச்சுன்னா நான் அப்படிதான் மனம் அலைபாய்ஞ்சுடுவேன்.... பரபரக்கும்.... அதேபோல அவரும் யாரையோ தேடினார்.... ஒரு வேளை.... ஒரு வேளை...” என்று கூறவும் பயந்து நிறுத்தினாள்.

என்ன சொல்லவரே?” என்றான்.
இல்லை இது சும்மா எனக்கு வந்த யோசனைதான்..... நீங்க கோபிப்பீங்களோன்னு பயமா இருக்குஎன்றாள்.
கோபிக்கல சொல்லுஎன்றான்.
இல்லை அவரு ஒருவேள நம்ம கௌரியா...” 
கௌரிய?” என்றான் காட்டமாக.
இல்லைங்க ஒரு சந்தேகம்தான்..... விரும்பறாரோன்னு
என்ன நீ குண்டத் தூக்கிப் போடுறே?” என்றான். “கௌரி எதுவும் சொன்னாளா?” என்று கேட்டான்.
ஐயோ இல்லைங்க.... அதெல்லாம் அவ ஒண்ணுமே சொல்லலை.... இன்னிக்கி இவர பார்த்ததும் ஒரு சந்தேகம்என்றாள்.

அடுத்த நாள் சீக்கிரமே எழுந்து குளித்து சாமி அறை சுத்தம் செய்து பூசைக்கென பூ பறித்து வந்து வைத்து விளக்கேற்றி மனதார வேண்டினாள் கல்யாணி.
அம்மா தாயே, இன்னிக்கி நான் இந்த வீட்டு உறவுக்கார பெண்ணா இந்த குடும்பத்துக்கு சமைச்சு பரிமாறி எல்லாமும் செய்யறேன்..... நாளைக்கு இதே வீடு என் புகுந்த வீடா மாறி இவங்களுக்கு நான் இந்த வீட்டு மருமகளா பணிவிடை செய்யணும்..... அதை நீதான் பெரியவங்க மனம் கோணாம நடத்தி வைக்கணும் என்று தொழுதாள்.

பின்னோடு போய் விருவிருவென காரியங்களை பார்த்தாள். ஆப்பத்திற்கு மாவு அரைத்து வைத்திருந்தது. அதற்கேற்ப குருமா செய்யலாம் என்று உருளை, பட்டாணி, காரட் பீன்ஸ் என்று காய்களை எடுத்து நறுக்கிக் கொண்டு, குருமாவிற்கு அரைத்து எடுத்து சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினாள். அவரவர வர வர ஆப்பம் ஊற்றிக்கொள்ளலாம் என்று ரெடி செய்து வைத்தாள்.
காபி போட்டு எல்லோருக்கும் கொடுத்து தானும் குடித்துவிட்டு அத்தைக்கு கன்னியம்மாவின் உதவியோடு உடம்பு துடைத்து புடவை மாற்றி பொட்டிட்டாள்.

அன்று வலி மேலும் குறைந்து அத்தையின் முகத்தில் கொஞ்சம் சிரிப்பு கண்டது
. அடிக்கொருதரம் உனக்குதான் கஷ்டம் ஆயிடுச்சு கண்ணு என்று வருத்தப்பட்டார்.
அதேல்லாம் ஒண்ணுமில்லைங்கத்தே என்றாள் இவள்.
அவளது சமையலை ரசித்து ருசித்தனர்.
அதேல்லாம் ஒண்ணுமில்லை மாமா..... அத்தையப்போல எல்லாம் எனக்கு சமைக்க வராது.... ஏதோ புதுசா ருசி.... அதுனால உங்களுக்கு பிடிச்சிருக்குது என்றாள் அடக்கமாக.
தனிமையில் பாவம்..... உனக்கு தான் கஷ்டம் இல்லியா?” என்றான் உணவு உண்ணும் போது வெற்றி.
இல்லை அத்தான் இன்னம் கேட்டா சந்தோஷமா திருப்தியா இருக்கு என்றாள்.
அவன் ஏன் எப்படி?” என்றான்.
ஆமா, இல்லைனா அத்தை என்னை சமைக்கத்தான் விட்டிருப்பாங்களா, நான் ஆசை ஆசையா என் அத்தானுக்கு இப்படி பார்த்து பார்த்து சமைத்து என் கையால பரிமாறி சாப்பிட வைக்கத்தான் முடிஞ்சிருக்குமா?” என்றாள் சிவந்து போய்.
அதை கேட்டு அதிர்ந்து போய் அவளைப் பார்த்தான்.
தான் அவ்வளவு சொல்லியும் மனதில் இத்தனை காதலுடனும் அன்பு அக்கறையுடனும் இவள் இப்படி பேசி வைத்தால் என்ன செய்வது... இவள்தான் எப்பேற்பட்டவள்.... எனக்கு ஆசையாக சமைத்து பரிமாறி சாப்பிட வைத்து பணிவிடை செய்வதில் இவளுக்கு இவ்வளவு மகிழ்ச்சியா? இவளை என் மனைவியாக அடைய நான் கொடுத்துவைக்கவில்லையே என்று வெதும்பினான்.

அதுமட்டுமில்லைங்க அத்தைக்கும் மாமாவிற்கும் தொண்டு செய்ய முடியுதே, அது பெரிய வரம் இல்லையா..... பாவம் அத்தைக்கு அடிபட்டதும் மாமா எப்படி கலங்கிப்போயிட்டாங்க.... அந்தண்ட அசையவே இல்லைங்க என்றாள் ஆச்சர்யத்துடன்.
ஆமா நித்யா அவங்களோடது ஆதர்ஷ தாம்பத்யம் என்றான்.
சரி நான் வரேன்என்று கிளம்பினான்
ம்ம் சரி என்று கை ஆட்டி அனுப்பிவைத்தாள்.
என்னமோ தொங்கத் தொங்க தாலி கட்டிக்கொண்ட மனைவிபோல கை அசைத்து விடை கொடுக்கிறேனே என்று தோன்றியது. ‘இது நிலைக்குமா நடக்குமா?’ என்று உள்ளம் அஞ்சியது.

அத்தான் விலக விலக அவளுக்கு அவன் மேல் மேலும் மேலும் காதலும் அன்பும் பெருகியது. அவனும் உள்ளுக்குள்ளே தன்னை பெரிதும் விரும்புகிறான் என்று தெரிந்திருந்ததால் அவனை எப்படியும் ஒத்துக்கொள்ள வைத்துவிடவேண்டும் என்று முயன்றாள் கல்யாணி.

இது நல்லதா நடக்குமா என்ற ஐயங்கள் அவள் மனதில் எழாமலில்லை
. ஆயினும் அத்தான் பெரியவங்கள நினைத்து பயப்படறார்.... அவங்களுக்கும் எடுத்துச் சொல்லி புரிய வெச்சு பார்த்தா தானே தெரியும்... அதச் செய்யாம இவரே பயந்து ஒதுங்கினா, அதைக் கண்டு நானும் தான் பேசாம அழுது புலம்பி துவண்டா ஆயிடுச்சா என்று துணிந்துவிட்டாள் அந்தப் பைங்கிளி.
அதன்படி எப்போதும்போலவே அவனோடு இழைந்து பேசி பணிவிடைகள் செய்து கொண்டிருந்தாள். அதைக்கண்டு இவளை என்ன செய்வது என்று புரியாமல் திணறினான் வெற்றி.

அவள் அளவுகடந்த காதலுடன் அவனுக்கு பார்த்துப் பார்த்து செய்துகொடுத்து கவனித்துக்கொள்ளும்போது ஒவ்வொரு கணமும் தன்னைத்தானே அடக்கிக்கொள்ள மாட்டாமல் அவன் திண்டாடினான்
. எங்கே தன்னையே தன்னால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் பிரச்சினை ஆகிவிடுமோ என்று அவன் மெல்ல ஒதுங்க ஆரம்பித்தான்.

இந்த சில நாட்கள் அம்மாவின் உடம்பு சரியாகும்வரை அவருக்காக வீட்டிற்கு வந்தான். அவரிடம் கொஞ்ச நேரம் சிலவழித்துவிட்டு களத்து மேட்டிற்கே சென்றுவிடுகிறான். பண்ணை ஆளை அனுப்பி அங்கேயே சாப்பாடு எடுத்துவரச்செய்தான். இரவிலும் காவல் வேலை இருப்பதாக காட்டிக்கொண்டு அங்கேயே உறங்க ஆரம்பித்தான். தனியே சென்று வயக்காட்டிலேயே தங்கினாலும் வானம் பார்த்து மல்லாந்து  படுத்து கிடந்தான். உறக்கமும் வரவில்லை கண்களும் மூடவில்லை. மூடிய கண்ணிலும் கூட அவள் முகமே கண்டு படக்கென கண்களை திறந்துகொண்டான். ‘ஐயோ ஏண்டி என்னை கொல்றே என்று அவளை மனதில் கடிந்துகொண்டான்.
இங்கே இவன் துடிக்க அங்கே அவள் துடிக்க என்று சில நாள் ஓட, கல்யாணிக்கு புரிந்தது, ‘தன்னை காணமாட்டாமல் தன்னைத் தானே அடக்கமாட்டாமல் அத்தான் களத்து மேட்டில் தங்குகிறான் என்று. அவள் அடுத்து என்ன செய்வது என்று தடுமாறினாள்.

இப்போது விசாலம் நலமாக நடக்கத்துவங்கி இருந்தார்.
பூரணமா குணமாகீட்டீங்க அம்மா என்றான் டாக்டர் குமரன். கொஞ்ச நாளுக்கு குனிந்து நிமிரும்போது மெல்லமா செய்யுங்க. ரொம்ப பளுவு தூக்க வேண்டாம் என்றான்.
அன்றும் அவனது பார்வை வீட்டைச் சுற்றி ஓடியதை கவனித்தாள் கல்யாணி. அப்போது கௌரி தாயின் அருகே வர குமரனின் முகத்தில் குப்பென ஒரு மலர்ச்சி.
எப்படி இருக்கீங்க?” என்று அவளைப் பார்த்து கேட்டான்.
ம்ம் நான் நல்லா இருக்கேன் டாக்டர் என்றாள் அவள் இயல்பாக.
ஆனாலும் இந்த டாக்டர் எதுக்கு இப்படி பார்த்து வைக்கிறான் என்னை?’ என்று தோன்றியது.
அவள் எப்போதும்போல சிரித்த முகமாக பதில் சொல்ல குமரனோ அகமகிழ்ந்து போனான்.
படித்து முடிச்சிட்டீங்களா?” என்றான்.
ஆமாம், டிகிரி முடிச்சுட்டேன் என்றாள்.
ஓ வெரி குட் என்றான் அகமும் முகமும் மலர. “நான் இங்கே கிளினிக் நடத்தி வரேனே, அங்கே எனக்கு கொஞ்சம் படிச்சவங்களா ஒரு ஹெல்ப் தேவைபடுது..... அதான் நீங்க ஏதானும் ஹெல்ப் பண்ண முடியுமோன்னு....” என்று நிறுத்தினான்.
அதெல்லாம் அப்பாவைத்தான் கேட்கணும் என்றாள் கௌரி.
உங்களுக்கு விருப்பம்தானே?” என்றான் ஆவலாக.
இவன் என்ன என்னமோ இவனையே பிடிச்சிருக்குனு நான் சொல்லப்போறா மாதிரி முகத்தவெச்சுகிட்டு கேட்கிறானே?’ என்று எண்ணி, “அப்பா ஒத்துகிட்டா எனக்கு ஆட்சேபனை இல்லை என்றாள்.

குமரன் சிலிர்த்துவிட்டான்
.
நான் பேசறேன் என்று கந்தசாமியிடம் கேட்டான்.
அவரோ முதலில் தயங்கினார். “அதில்லைங்க டாக்டர் தம்பி, அவளுக்கு வரன் பார்த்துகிட்டிருக்கோம். எப்போ வேணும்னாலும் பெண் பார்க்க யாரானும் வருவாங்க. அந்த நேரத்துல அப்படி வெளியில வேலைக்குன்னு எல்லாம் அனுப்ப முடியாதுங்களே. அது சரியா இருக்குமா நீங்களே சொல்லுங்க என்றார்.
அவன் முகம் விழுந்துவிட்டது. ‘வரன் பார்க்கறாங்களா?’ என்று.

சார் நீங்க சொல்றது சரிதான்.... யாரானும் தகுந்த வரனா வந்தா முடிச்சுடணும்தான்.... ஆனாலும் பாருங்க, இது புனிதமான மருத்துவ தொழில்.... இதுல எனக்கு கொஞ்ச நேரம் உதவி செய்யதான் கேக்குறேன்..... அதுவும் காலையில மட்டும் வந்தா போதும்.... மாலைல இருட்டின வேளையில தேவை இல்லை.... அப்படி யாராச்சும் பெண் பார்க்க வரதா இருந்தா முன்கூட்டியே தெரிஞ்சுடுமே..... அன்னிக்கி வரவேணாம் என்றான் விடாப்பிடியாக.
என்னம்மா?” என்று மகளை கேட்டார் கந்தசாமி.
உங்க இஷ்டம் பா....” என்றாள் அவள்.
அவர் விசாலத்தை பார்க்க அவள் அவர் இஷ்டம் என்பதுபோல  இருந்தாள்.
சரி தம்பி, முதல்ல ஒரு மாதம் வரட்டும்.... நீங்களே சொல்றாப்போல இது மருத்துவ தொழில்.... ரொம்ப புண்ணியம்.... அவளால் ஆன  உதவிய செய்யட்டும்.... அவளுக்கும் வெளி உலகம் தெரியும்.... நாலுபேர பார்த்து பேசி பழகி உலகம் தெரியும்.... அதுக்குள்ள வரன் முடிவாகீட்டா நிறுத்தீடுவேன்... சரிதானே?” என்றார்.

உடனே மலர்ந்து போய் மிகுந்த மகிழ்ச்சியுடன் நன்றி கூறினான்
.
அப்போ நாளைலேர்ந்து வரீங்களா மிஸ் கௌரி?” என்றான். அவள் சரி என்று தலை அசைத்தாள்.
இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த கல்யாணிக்கு எதுவோ புரிவதுபோல இருந்தது. சந்தேகமாக தோன்ற ஆரம்பித்தது இப்போது ஊர்ஜிதமானதுபோல எண்ணினாள். ‘அத்தானின் காதில் போட்டு வைக்கவேண்டும்..... இந்த நேரம் பார்த்து அவன் இன்று வீட்டில் இல்லையே என்று எண்ணிக்கொண்டாள்.


No comments:

Post a Comment