Sunday 21 April 2019

ULLAM RENDUM ONDRU - 8


அப்போசரி நீ சொல்லீட்ட இல்ல, மேற்கொண்டு பேசி தீர்மானம் பண்ணீட்டு சொல்றேன் வேளையோட வந்து சேருடா என்று வைத்தார்.
அப்பறம் என்ன அவரே தான் இந்த மனுஷன்..... பிறகு யோசிக்க என்ன இருக்கு.... அதான் வேலு வேற சொல்லீட்டானே.... மேற்கொண்டு வந்து பேசச்சொல்லு வெற்றி..... பாக்குவெத்தல மாத்தீடுவோம்..... ஒரு நல்ல நாளா பாரு விசாலி என்றார். வெற்றிக்கு ஒரே சந்தோஷம்.
ரொம்ப நல்லதுங்கப்பா என்றுவிட்டு நான்கு நான்கு படிகளாகத் தாவி மேலே சென்றான்.

அவர்கள் கல்யாண விஷயம் பேச ஆரம்பிக்கும்போதே மறைவாக மாடிப்படி வளைவில் வந்து நின்று கேட்டிருந்தாள் கௌரி. அப்பாவின் சம்மதம் கிடைத்ததும் சிவந்து போனாள். ‘இப்போது முறையாக கனவு காணலாம் என்றது மனது குதூகலித்து. தனக்குள்ளே சிரித்துக்கொண்டாள். அதற்குள் வெற்றி மேலே வருவதைக்கண்டு அவள் மேலே ஏறப்போக எட்டி அவளை பிடித்தான்.
விடு அண்ணா என்று நாணி ஓடினாள்.

அவளை துரத்தி பிடித்து நிறுத்தினான். “சந்தோஷமா! எல்லாம் கேட்டாச்சு அப்படிதானே.... நான் ஒண்ணும் சொல்ல வேண்டாம்தானே?” என்றான் ஆசையாக அவள் முகத்தை பார்த்தபடி.
போண்ணாஎன்றாள் வெட்கத்துடன்.
அம்மாடி, ரொம்ப சந்தோஷம்டா..... உனக்கானும் மனசுப்படி கல்யாணம் அமைந்ததே எனக்கு திருப்திடா கண்ணு என்றான் அவள் தலையில் கைவைத்து.

அவன் சொல் அவளுக்கு சங்கடம ஏற்படுத்தியது. ‘எப்பாடுபட்டாலும் சரி நான் என் அண்ணனின் வாழ்வை மேம்படுத்துவேன் என்று உறுதி பூண்டாள்.
போ போய் ஆசைதீர கனவுகாணு என்று கிண்டல் செய்தான்.
ஹே வாலு வரியா, உங்க அவருகிட்ட போன்ல சொல்லலாம்..... ஒரே டென்ஷனா இருப்பாரு இல்ல, பாவம் என்றான் கேலியாக.
ஐயோ நான் மாட்டேன்.... நீ வேணா பேசு என்றாள் சிவந்துபோய்.
அட வெட்கமாக்கும், நாளைக்கு நேர்ல போய் சொல்லிக்க தைர்யம் இருக்கு.... இப்போ இல்லியா.... சரி சரிபோ... நானே பேசறேன் என்று தன் அறைக்குச் சென்றான்.

அங்கிருந்து குமரனை அழைத்தான்.
ஹெலோ யாருங்க சொல்லுங்க என்றான் குமரன்.
குமரா நாந்தாம்பா வெற்றி என்றான்.
குமரனுக்கு நெஞ்சு வாய்க்கு வந்துவிட்டது.
சொல்லுங்க வெற்றி என்றான் பயந்து.
வெற்றி தான் என்றான் இரு பொருளாக.
அப்படீன்னா?” என்றான் குமரன் ஓரளவு புரிந்து.
அப்பா அம்மா ஒத்துகிட்டாங்க..... ஒரு விஷயம் தெரியுமா, எங்க சித்தப்பா வேலுச்சாமி உங்கப்பாவின் நெருங்கிய நண்பராமே என்றான்.
ஆமா தெரியும் வேலுமாமான்னு கூப்பிடுவேன்.... அவர் உங்க சித்தப்பாவா!! அதிசயமா இருக்கு.... ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் வெற்றி என்றான் ஆத்மார்த்தமாக.
சரி மேற்கொண்டு வந்து பேசச் சொல்றாரு அப்பா..... நீங்க உங்கம்மாகிட்ட பேசீட்டு சொல்லுங்க என்று வைத்தான்.

குமரனுக்கு கால் பூமியில் தரிக்கவில்லை.... ‘வெற்றி பேசினானே கௌரியும் பேசி இருக்க்க கூடாதா..... இனி நாளைக் காலை அவள் வேலைக்கு வந்து பேசும் வரை காத்திருக்கணும்..... ஐயோ கல்யாணப்பேச்சு ஆரம்பித்துவிட்டதே.... அவள் வேலைக்கு வருவாளா என்று புதியதாக ஒரு கலக்கம் மூண்டது. ‘சரி பார்க்கலாம் என்று கனவுகளோடு தூங்கிப்போனான்.
அங்கே கௌரியும் கனவு கண்டபடி சிவந்து கொண்டிருந்தாள்.
அதைவிடவும் முக்கியமாக அண்ணனும் கல்யாணியுமான வாழ்வை எப்படி கனிய வைப்பது... குமரனின் உதவியுடன் எப்படியும் இதை சாதிக்க வேண்டும் என்று திட்டமிட்டாள்.

அடுத்த நாள் வேலைக்குக் கிளம்ப இதப்பாரு கண்ணு, டாக்டர்கிட்ட சொல்லீட்டு செய்யற வேலைய முடிச்சு வெச்சுட்டு இன்னியோட நின்னுக்கம்மா. அவங்க வீட்டுலதானே சம்பந்தம் பேச வராங்க தெரியுமில்ல.... உங்க அண்ணன் சொல்லி இருப்பானே..... இதுக்குமேல அங்கே வேலைக்கு போய் வந்தா நல்லா இருக்காது கண்ணு..... கல்யாணம் முடிஞ்சு அது உங்க இஷ்டம்..... இப்போதைக்கு வரலை னு சொல்லீட்டு வந்துடு என்ன என்றார் விசாலம்.

தலை குனிந்து சரி என்றபடி வெளியே வந்தாள்
. ‘தினமும் குமரனை காண முடியாது என்ற தவிப்பு இருந்தாலும் சீக்கிரமே கல்யாணம் நடந்துவிடுமே அப்பறம் என்ன என்று சகஜமானாள்.
கிளினிக் அருகே செல்லச் செல்ல கால் தடுமாறியது.... இதுநாள் வரை இருந்த துணிவு இப்போது வெட்க மேலீட்டால் ஓடி மறைந்தது.... முகம் குனிந்து மெல்ல உள்ளே அடி எடுத்து வைத்தாள்.... குமரனை கீழ் பார்வையால் தேடினாள்.... எங்கும் காணவில்லை..... ‘ஒருவேளை இன்னும்  வரவில்லையோ என்று எண்ணி எல்லா அறைகளையும் பார்த்தபடி செல்ல, உள்ளே மருந்துக் கிடங்கில் அவன் நின்று ஏதோ மருந்து தேடிக்கொண்டிருந்தான்.

அங்கே சென்று அவனைக்கண்டு மெல்ல செருமினாள். ஒன்றும் அறியாதவன்போல அவனும் அவளைக்கண்டு சிரித்தபடி விஷ் செய்தான். அவள் திரும்பிச் செல்லமுயல அவள் கைப்பற்றி சறேலென்று அவளை உள்ளே இழுத்துக்கொண்டான் குமரன்.

ஐயோ என்ன இது விடுங்க.... யாராச்சும் பார்த்தா...” என்று பயந்து வியர்த்தாள்.
அதெல்லாம் யாரும் வர மாட்டாங்க.... இருடீ போலாம்..... எவ்வளோ நல்ல ந்யூஸ் வந்திருக்கு.... இவ ஓடறதிலேயே இருக்கா.... ஏண்டீ என் ஏக்கம் கொஞ்சமாச்சும் புரியுதா உனக்கு?” என்றான் முகத்தோடு முகம் வைத்து இழைந்தபடி. “புரியாமத்தான் அவளோ சீக்கிரம் அண்ணன்கிட்ட சொல்லி எல்லா ஏற்பாடுகளும் செஞ்சோமாக்கும் என்று முணுமுணுத்தாள்.
ம்ம்ம் என்றான் அவள் வாசம் பிடித்து. அவன் கைகள் அவள் இடுப்பை அணைத்து பிடித்திருக்க அவளால் நழுவ முடியவில்லை.
என் செல்லமில்ல விடுங்க குமரு என்றாள்.
அதைக்கேட்டு அவன் கண்கள் மின்னின.
ஹேய் இன்னொருதரம் சொல்லுடீ என்றான் கிரங்கிப்போய்.
குமரு என்றாள் ஆசையாக.
அவளை மேலும் இறுக்கி அணைத்து கொண்டான்.
அவள் சிவந்து போய் திணறினாள்.... கிராமத்து பைங்கிளி.... சூதுவாது அறியா சிறுபெண்.... முதன் முதலாக ஆண் ஸ்பரிசம் அவளை திக்குமுக்காட வைத்தது. அவள் தடுமாற்றம் கண்டு அவளை மனமில்லாமல் விடுவித்தான். அவள் ஓடியேவிட்டாள். அவன் சிரித்துக்கொண்டான்.

அவன் தனது அறைக்கு வந்தபின் நாலடி எட்ட நின்று இன்னையோட வேலையிலேர்ந்து நின்னுக்கச் சொல்றாங்க அம்மா.... கல்யாணம் ஆனபிறகு என்னவேணா செய்துக்கோங்க என்கிறாங்க என்றாள் மெல்ல.
அடிப்போடி நீ இங்க இல்லாம எனக்கு வேலையே ஓடாது.... அது எல்லாம் பாத்துக்கலாம்..... யாரு தப்பா எடுத்துக்குவாங்க,  எங்கம்மா கிட்ட நான் சொல்லிக்கிறேன் என்றான் சின்னக் குழந்தை பிடிவாதம் பிடிப்பதுபோல. “இல்லைங்க எங்க வீட்டுல ஒத்துக்க மாட்டாங்க..... இன்னும் கொஞ்ச நாள்தானே..... சீக்கிரமே முகூர்த்தம் வெச்சுடுவங்கபோல தோணுது.... ப்ளீஸ் அதுவரை பொறுத்துதான் ஆகணும் என்றாள் குழைவாக.
அவன் முகம் வாட்டம் கண்டது.

நாம கோவில்ல அங்கே இங்கே சந்திக்கலாம் சில நிமிடங்கள் என்றாள்.
ஆமா பொது இடம்னு இதோ இதுபோல நாலடி தள்ளி நின்னுகிட்டு பேசுவ போடி என்றான்.
அவளுக்கு சிரிப்பு வந்தது.
சிரிக்கிரியா, இருக்கு உனக்கு என்றான்.
அப்போ பாத்துக்கலாம் என்று அவள் தன் வேலையை கவனிக்கச் சென்றாள்.

வெற்றியிடமிருந்து தகவல் வந்ததுமே குமரன் தன் தாயிடம் விஷயத்தைக் கூறினான்.
சரிப்பா குமரா, இந்த ஞாயிறு நாள் நல்லா இருக்கு.... அன்னிக்கே போய் பேசீட்டு வந்துடலாம்.... ஊர்லேர்ந்து உங்க மாமாவையும் அத்தையையும் வரச்சொல்றேன். அவங்க வந்து செய்யவேண்டியத முறையா செய்வாங்க என்றாள்.

சரி என்று அப்படியே அவர்களுக்குத் தகவல் போனது.
ஞாயிறு பெண் பார்க்கும் படலம் போல செய்து பின்னோடு தட்டு மாற்றிக்கொள்வது என்று தீர்மானம் செய்திருந்தனர். வீட்டோடு போதும் என்று.
கௌரி ஒரு வேலை செய்தாள். தன் அத்தை கற்பகத்திற்கு போன் செய்தாள்.
அத்தை என்றாள் ஆசையாக.
என்னடி கல்யாணப் பெண்ணே அதிசயமா இருக்குது.... எப்படி இருக்கே?” என்று குசலம் விசாரித்துக்கொண்டனர்.
அத்தே... வந்து.... எனக்கு நிச்சியம் வெச்சிருக்காங்க என்றாள்.
தெரியுமேடீ அதான் அண்ணன் கூப்பிட்டு உங்க மாமா கிட்டையும் என்கிட்டையும் சொன்னாரே என்றாள்.
அதான் அத்தே, எனக்கு ஒரே படபடப்பா பயமா இருக்குது.... நீங்க கொஞ்சம் மாமாகிட்ட சொல்லி கல்யாணிய கூட்டி வாங்களேன் என்றாள்.
நாங்களே வர்றது சந்தேகமா இருக்குது மா என்றார்.
ஏன் அத்தே, நீங்க யாரும் இல்லாம என்ன வேண்டிகிடக்குது நிச்சயம் என்றாள்.

போதும், அப்படி எல்லாம் சொல்லக்கூடாது.... நான் ஒண்ணு பண்ணறேன்.... நாங்க வரமுடியாட்டியும் கல்யாணிய அனுப்பி வைக்கிறேன்.... சரியா.... சமத்தா இருடீ கண்ணு.... மாப்பிள்ளையத்தான் உனக்கு தெரியுமே அப்பறம் என்ன பயம்.... நல்லபடி நடக்கட்டும்.... கல்யாணத்துக்கு ஓடி வந்துடமாட்டேனா இந்த அத்தை... சரியா கண்ணு என்றார்.
சரிங்கத்தே என்றாள்.
எப்படியும் கல்யாணி வருவாள்.... ஏதேனும் செய்து அண்ணாவின் திருமணத்திற்கு வித்திட வேண்டும் என்று திட்டமிட்டாள்.
அடுத்து குமரனை கோவிலில் கண்டு பேசும்போது கொஞ்சம் ஒதுக்கமாக அமர இடம் கிடைத்தது.

அரை இருளில் அவள் கைபிடித்து அவன் மயங்கி பேசிக்கொண்டிருந்தான்.... அவளும் தயங்கி மயங்கி பேசிக்கொண்டிருந்தாள்.
ஒரு முக்கியமான விஷயம் உங்ககிட்டே பேசி உங்க உதவிய கேக்கப்போறேன் குமரு என்றாள் ஆசையாக
என்னடி.... நீ என்ன கேட்டு நான் செய்யாம இருப்பேன்... சொல்லு என்றான்.
அண்ணாவைப் பற்றியும் கல்யாணியைப் பற்றியும் எடுத்துக் கூறினாள். அமைதியாக கேட்டான்.
பின் ம்ம் சரி, எப்படியும் எப்பாடுபட்டாவது அவங்க வாழ்க்கையை நாம மலர வைக்கறோம்.... இது நமக்கு ஒரு வாய்ப்பு அவங்களுக்கு நன்றி தெரிவிக்க.... நீ சொல்றதப் பார்த்தா அவங்க ரெண்டு பேராலதானே நாம ஒண்ணு சேர முடிஞ்சிருக்குது. நான் யோசிக்கறேண்டா நீ கலங்காதே..... அதெப்பிடி, விட்டுடுவோமா.... என் மச்சான்... என் தங்கை இல்ல.... நீ கவலைய விடுடா கௌரி என்றான் ஆதுரமாக.

அவளுக்கு ஹப்பா என்றிருந்தது. மனமகிழ்ந்து சிரித்தாள். அவன் கைப்பற்றி சுற்றும் பார்த்துவிட்டு இதழ் பதித்தாள். அவன் அதிசயித்து கிறங்கி போனான். அவள் கைப்பிடித்து அவனும் முத்தமிட்டான்.
வரட்டுமா என்று ஒரு சிறு தலை அசைப்புடன் விடை பெற்றாள்.
ஹ்ம்ம் என்று பெருமூச்சுவிட்டான்.

அங்கே கற்பகம் தன் கணவரிடம் பேசி கல்யாணியை இங்கே அனுப்ப வேண்டினாள்.
இப்போதானே அங்கேர்ந்து வந்தா, சும்மா அங்க என்ன வேலை?” என்றார்.
என்னங்க இப்படிச் சொல்றீங்க, நாமளுமே போக வேண்டியது... கௌரிக்கு நிச்சயம் வெச்சிருக்காங்க.... நமக்கு முக்கிய ஜோலி போக முடியாது.... பொண்ணு ஆசையா போன் பண்ணி கூப்புடுது... கல்யாணியும் தான் முகமே தெளியாம என்னமோ போல இருக்கா.... ஒரு மாற்றமா இருக்கும் கொண்டுவிட்டுவிட்டு வாங்களேன் என்றாள்.
சரி என்று அரை மனதாக ஒப்புக்கொண்டார்.

என்னமா கல்யாணி அங்க போக இஷ்டம்தானே?” என்று கேட்டார் அவளிடம்.
அவளுக்கு கசக்குமா? சரி என்று தலை அசைத்தாள்.
அங்கிருந்து வந்ததுமுதல் தனக்குள் ஒடுங்கி விட்டாள் கல்யாணி. கல்லூரி விட்டால் வீடு இல்லாவிடில் கோவில்.... யாரோடும் பேசுவதே இல்லை.... ‘இவளுக்கு என்னதான் ஆச்சு ஒன்றும் சொல்லவும் மாட்டேங்கறாளே என்று வருந்தினார் கற்பகம்.

அங்கே ஏதானும் நடந்திருக்குமோ?’ என்று பயந்தாள். ஆனால் அதை அவளிடம் கேட்டபோது கல்யாணி அவசரமாக மறுத்துவிட்டாள் ஒரு தலை அசைப்பில்.
சரி இப்போது அங்கே சென்றால் ஒரு வேளை பெண்ணின் மனம் சரியாகுமோ என்ற நப்பாசையில் தான் அனுப்பி வைத்தாள். வந்த கேடே அங்கிருந்துதான் என்று அவள் அறிந்திருக்கவில்லை பாவம்.
மகளை பார்க்க கற்பகத்திற்கு உள்ளே கலங்கியது. சரியாக சாப்பிடுவதில்லை தூங்குவதில்லை.... ஏதோ போல வெறித்தபடி அமர்ந்திருப்பாள். கண்ணின் கீழ் கரு வளயங்கள்.... முகம் சோர்ந்து இருந்தது... எந்த விதமான அலங்காரங்களும் செய்து கொள்வதில்லை.... ரொம்பவே உறுத்தியது.... மிரட்டி கொஞ்சி திட்டி கேட்டுப் பார்த்துவிட்டாள் ஒன்றுமே தெரியவில்லை.

உள்ளே ஒரே ஒரு சிறுதுளி போல சந்தேகம் இருந்தது. ‘ஒரு வேளை வெற்றியை இவள் விரும்புகிறாளா? அவன் விரும்பவில்லையா அதனால்தான் இப்படி இருக்கிறாளோ என்று. ஆனால் அதை கல்யாணியிடம் கேட்க கற்பகத்திற்கு தைர்யம் இருக்கவில்லை. ஒருவேளை அப்படி எதுவும் இல்லாவிடில் அசிங்கமாகுமே என்று வாளாவிருந்துவிட்டாள்.
சரி அங்கே போயிட்டு வரட்டும் தானே தெரிஞ்சுடப் போகுது. அப்படி ஏதானும் இருந்தா முதல்ல சந்தோஷப்படறது நான்தானே என்று எண்ணினார் கற்பகம்.
அவளை அந்தப்புரம் அனுப்பிவிட்டு பின்னோடு விசாலத்தை கூப்பிட்டு எல்லா பயத்தையும் கொட்டிவிட்டாள்.

அண்ணீ எனக்கு எம் பொண்ண நினைச்சா பயமா இருக்குது அண்ணீ.... உங்கள நம்பி அங்கே அனுப்பி இருக்கேன்.... என்னன்னு சொல்ல மாட்டேங்குது.... ஆனா சரியா சாப்பிடறது இல்லை, தூங்கறது இல்லை. ஏதோ யோசனை, கவலை..... நீங்கதான் அண்ணீ அவகிட்ட பேசி சரி பண்ணணும் என்று அழுதாள்.
என்ன கற்பகம் நான் நினைக்கறதை எல்லாம் நீ சொல்லறே?” என்றார் விசாலம்.
என்ன அண்ணீ?” என்றாள்

இல்லை கற்பகம், இங்கே வெற்றியும் அப்படித்தான் இருக்கான்.... ஒண்ணுமே சொல்லவும் மாட்டேங்கறான் கற்பகம் என்றார்.
அப்போ இதுக ரெண்டுத்துக்கும் மத்தியில ஏதானும் நடந்திருக்குமா அண்ணீ?” என்று கேட்டாள்.
தெரியலையே மா.... சரி நீ கவலைப் படாதே நான் பாத்துக்கறேன் என்றார்.
இதோ மகேசன் கல்யாணியை கூட்டிவந்து விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்.
மன்னிப்பாக மன்னிச்சுக்குங்க மச்சான் ஒரு அவசர ஜோலி.... இல்லைனா நம்ம கௌரி நிச்சயத்துக்கு நிக்காம போக மாட்டேன் உங்களுக்கும் தெரியும்..... கல்யாணத்த முன்ன நின்னு நடத்தீடுவோம் என்ன சரிதானே என்று கூறி கிளம்பிவிட்டார்.
கல்யாணியும் கௌரியுமாக அவர்களது அறையில் ஒரே அரட்டை கச்சேரி நடத்தினர்.
என்னடி சொல்றாரு உன் அவரு?” என்று சீண்டினாள்.
போடி என்று நாணிகோணினாள் கௌரி.
அட இதப்பாருடா என்று மேலும் கேலி செய்தாள்.
அவளையும் குமாரனையும் பற்றி எல்லாம் கேட்டு கிண்டல் கேலி செய்தபின் மெல்ல

ஏன் கௌரி உங்க அண்ணன் கிட்ட ஏதானும் மாற்றம் இருக்கா?” என்றாள்.
இல்லை கல்யாணி.... நானும் நீ போன பிறகு கூட என்னால ஆன வரையிலும் முயற்சி செய்துகிட்டுதான் இருக்கேன்.... அந்த பேச்சை எடுத்தாலே மௌனமா ஆயிடறாரு.... நான் அவர்கிட்ட சொல்லி இருக்கேன் பார்க்கலாம் என்றாள். “யார்கிட்ட?” என்றாள்
அதான் டீ உங்க அண்ணன்கிட்ட என்றாள்.
குமரன்கிட்டயா?.... ஏண்டீ இந்த வெனை?” என்று பதறினாள்.
பேசாம இரு..... அவர் பார்த்துப்பாரு என்று அடக்கினாள்.
தோ பாரேன் அவராமில்ல அவுரு என்று கிண்டலடித்தாள்.


No comments:

Post a Comment