Friday 10 August 2018

NESAMULLA VAANSUDARE - 4

“சர் நான் சங்கீதா, குட் மார்னிங்”  என்றாள்
“மார்னிங் சங்கீதா, என்ன விஷயம்?” என்றான் மிக மெல்லிய குரலில்.
“இல்ல, வந்து.... இங்க இப்போ பதினோரு மணிக்கு யூனியன் மீட்டிங் இருக்கு, எல்லாம் ரெடியா இருக்கோம், நீங்க இன்னும் வரலை.... எந்த தகவலும் இல்லை.... அவங்களுக்கு பதில் சொல்ல முடியாதேன்னு நடராஜன் சர் பயப்படறாரு, அதான் கூப்பிட்டேன்” என்றாள் பலத்த தயக்கத்துடன்.

“ஒ அந்த மீட்டிங் இந்நிக்கிதானா, ஆமா
, அதைத் தள்ளி போட முடியாதுதான். சரி நான் இன்னும் அரை மணியில அங்க இருப்பேன்..... கொஞ்சம் முன்ன பின்ன லேட் ஆனா நடராஜன் சார மேனேஜ் பண்ண சொல்லு சங்கீதா” என்று வைத்துவிட்டான். சரி என்றது காற்றில் போனது. நடராஜனிடம் விவரம் கூறினாள்.

“ஒ அப்படியா வந்துருவாரா, அப்போ சரி... நான் சமாளிச்சுக்கறேன்..... நீ வாம்மா எல்லா பாயின்ட்சும் ரெடியா இருக்குது இல்ல, பைல்ஸ் எல்லாம் ரெடியா?” என்று கேட்டுக்கொண்டார். கான்பரன்ஸ் ஹாலில் இவர்கள் செல்ல, அனைத்து முக்கிய யூனியன் ஆட்களும் அங்கே குழுமி இருந்தனர்.
“சாரி ஜென்டில்மென், சாருக்கு கொஞ்சம் உடம்பு முடியலை..... அதான் சில நிமிடங்கள் தாமதம் ஆகுது, பொறுத்துக்கொள்ளணும்..... இப்போ வந்துருவாரு” என்றாள் பணிவாக.
“ஒ அப்படியா சரி சரி வரட்டும்” என்று அமர்ந்தனர். ‘பரவாயில்லையே இந்தப் பொண்ணு’ என்று எண்ணிக்கொண்டார் நடராஜன்.

காத்திருந்தனர். சொன்னபடி அரைமணியில் வந்தான். இரண்டு நாள் தாடி, கண்கள் உள்ளே சென்று சிவந்து, கலைந்த தலையை அவசரமாக வாரினான் போலும்..... ஏனோதானோ என்று உடை அணிந்து பார்க்க சகிக்காமல் உள்ளே வந்தவனைக் கண்டு திடுக்கிட்டாள் சங்கீதா. ‘ஒரே நாளில் என்னவாயிற்று அன்று அவ்வளவு உற்சாகத்துடன் சென்றானே.... இன்று ஏன் இப்படி.... நிஜமாகவே உடம்பு சரியில்லையா, குரல் ஒரு மாதிரி இருந்ததே’ என்று தவித்தாள்.

‘நீ ஏண்டீ கிடந்து தவிக்கிறவோ’ என்று திட்டியது மனம். அதானே அவன் எப்படி போனா எனக்கென்ன என்று தன்னையே அடக்கினாள். அவன் இடப்பக்கம் அமர்ந்து அவனுக்கு ஏதுவாக பைல்ஸ் மற்றும் குறிப்புகளை நேரம் பார்த்து குடுத்து உதவினாள். அவனும் தன் உடல் மன உளைச்சல் மறைத்து எப்போதும் போல திறம்பட மீட்டிங்கை நடத்தி வேண்டியவற்றை செய்வதாக வாக்களித்தான். அனைவருக்கும் மகிழ்ச்சி. நன்றி கூறி கலைந்தனர்.
“தேங்க்ஸ் சங்கீதா, நல்ல நேரத்துல கரெக்டா என்னை கூப்பிட்டுட்டே கூடவே இருந்து பைல்ஸ் பாயின்ட்ஸ்னு குடுத்து உதவினே, இல்லேனா இந்த மீட்டிங் சொதப்பி இருப்பேன்.... வெரி கைண்ட் ஆப் யு” என்றான்.

“மை ட்யூட்டி சர்” என்றாள் அடக்கமாக. “கொஞ்ச நேரத்துல என் அறைக்கு வா” என்றான். உணவு முடித்த பின் சென்றாள். உட்காரும்படி கூறினான். மெல்ல, “உடம்புக்கு முடியலையா சர்?” என்றாள். அவளை ஏறிட்டு பார்த்தவன் கண்கள் கலங்கவா என்று நிறைந்தது. உடனே மறைத்து சுழன்று பின் பக்கம் திரும்பி கண்ணை துடைத்தான். பின் இவள் பக்கம் திரும்பி “அதெல்லாம் ஒன்றுமில்லையே, கொஞ்சம் மனசுதான்...” என்றான் எங்கோ வெறித்தபடி. “சரி, இன்னிக்கி பேசின இந்த பாயிண்ட்ஸ் வெச்சு ரிபோர்ட் தயார் செஞ்சுடு..... நாளைக்கு அவங்களுக்கு காபி போய் சேர்ந்துடணும்..... வேற ஒண்ணும் இல்லைனா நான் கிளம்பவா?” என்றான்.
“ஒகே நான் பார்த்துக்கறேன்” என்றாள். பின் மிகுந்த தயக்கத்துடன், “அவங்க, ஷாலினி..?” என்று இழுத்தாள். அவளை பார்த்த அந்த பார்வையின் அளவிலா வேதனையை கண்டு அவள் திகைத்தாள். அதற்குமேல் எதுவுமே கேட்காதே என்பது போல இறைஞ்சியது அவன் கண்கள். “சாரி சர்” என்று எழுந்து வெளியே வந்துவிட்டாள்.
‘என்னாதான் ஆயிற்று, ஏன் இவ்வளவு சோகம்...... அவன் கண்கள் கலங்கினவே’ என்று உள்ளே நூறு கேள்விகள். ‘அடங்குடி’ என்று அடக்கி தன் வேலைகளை கவனித்தாள்.

அந்த வாரம் முழுவதுமாக சித்து அப்படியேதான் இருந்தான். கண்களில் அளவிலா சோகம், முகத்தில் மழிக்காத தாடி, கலக்கமான முகம், ஏனோதானோ என்று உடை. தினமும் ஆபிஸ் வர லேட் ஆகியது. முக்கியமானது என இருக்கும்போது அவளோ நடராஜனோ நினவு படுத்தி வரவழைத்தனர். “என்னவாச்சு சாருக்கு, திரும்ப இப்படி ஆயிட்டாரே” என்றார் நடராஜன் கூட. அவளையும் அதே கேள்வி அரித்து எடுத்தது.

பத்து நாள் போனபின் ஒரு மழை நாளில் அவள் ஸ்கூட்டி புறப்பட மறுத்தது.. ஆட்டோவில்தான் செல்ல வேண்டும் என்று வண்டியை ஆபிஸின் உள்ளே வைத்து பூட்டிவிட்டு செக்யுரிடியிடம் கூறி ஒரு ஆட்டோ பிடிக்கச் சொன்னாள். அவன் கிளம்பும் நேரம் சித்து அவன் வேலை முடிந்து வெளியே வந்து வண்டியில் ஏறினான். மழை கண் மண் தெரியாமல் கொட்டிக்கொண்டிருந்தது. அவள் ஒதுங்கி மழை சாரல் படாமல் நின்றபடி ஆட்டோவிற்காக காத்திருந்தாள். அவளை அந்நிலையில் அங்கு கண்டு காருடன் அவளருகில் வந்து நிறுத்தினான்.

“என்ன சங்கீதா?” என்றான். “வண்டி மக்கர் சர்” என்றாள்.
“ஒ, வா நான் டிராப் பண்றேன்” என்றான்.
“ஐயோ வேண்டாம், ஆட்டோ கொண்டு வருவாரு” என்றாள்.
“இந்த மழையில் ஆட்டோ கிடைக்காது, கிடைத்தாலும் அநியாயமாக கேட்பாங்க ஏறு” என்றான். அதற்குமேல் அனைவரின் கவனத்தையும் ஈற்காமல் வண்டியில் ஏறி முன்னே அவனருகில் அமர்ந்தாள். மனம் படக்படக் என்று அடித்துக்கொண்டது. பேசாமலே வண்டி ஓட்டினான். அவளும் மழையை வேடிக்கை பார்த்தபடி வந்தாள்.

“சங்கீதா” என்றான், “ம்ம்” என்று திரும்பினாள்.
“நான் ஒரு மாதிரியா இருக்கேன்னு, ஆபிஸ சரியா கவனிக்கறதில்லைன்னு பேச்சு ஏதானும் அடிபடுதா?” என்றான். அவள் என்ன சொல்லுவாள். உண்மைதான் அப்படி பேச்சு நடக்கிறதுதான்.

ஆம் என்று தலை அசைத்தாள். “ஹ்ம்ம் எதிர்பார்த்தேன்..... உடையவன் இருந்து பார்க்கலைனா இப்படிதான் ஆகும்னு நினைச்சேன்... ஆனா நான் என்ன செய்ய...” என்று மேலும் பெருமூச்செரிந்தான். அவள் ஏதேனும் கேட்கலாமா என்று வாயெடுத்து பின் மூடிக்கொண்டாள். அவன் எப்படி போனால் எனக்கென்ன என்று தோன்றியது. அவனின் வேதனை அதிகரிக்க தான் ஒரு காரணம் ஆகிவிடக் கூடாது என்பது மறுபக்கம் தோன்றி மறைந்தது.
“என்னால சமாளிக்க முடியலை.... யார்கிட்டயனும் சொல்லி ஓ னு அழணும் போல இருக்கு சங்கீதா” என்றான். அதிர்ச்சியாகி அவனை பார்த்தாள். கண்கள் கலங்கி முகம் கசங்கி துயரத்தில் துவண்டிருந்தான்.
“என்னாச்சு?” என்று அவள் ஒரு சொல் கேட்டதுதான் தாமதம் போலும் கொட்டி தீர்த்தான்.

“அன்னிக்கி ஷாலு கூப்பிட்டான்னு உன்கிட்ட சொல்லீட்டு ஆசையா அவசரமா போனேன் இல்ல...” என்றான் “ஆமா” என்றாள்.
“அங்கே ஹோட்டல்ல போய் அவளை பார்த்தேன்.... ஜம்முனு ரூம்ல உக்கார்ந்திருந்தா, இன்னும் நல்லா வெளுத்து சிவந்து களையா நல்ல சாப்பாடு வாழ்க்கை போல னு தோணும்படி இருந்தா.... என்னை பார்த்து ஹை சொன்னதிலேயே எனக்கு வித்யாசம் தெரிஞ்சுது... நான் உள்ள போய் அமர்ந்தேன். யாரோ போல உபசரிச்சா....”

“அப்பறம், எப்படி இருக்கீங்க, உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா.... நடக்கப் போறதா கேள்வி பட்டேனே, இன்னமும் கூட என்னென்னமோ கேள்வி படறேனே?” என்றாளே பார்க்கணும்..... எனக்கு தூக்கி வாரி போட்டுச்சு....
“நீ என்ன பேசறே, நீ இல்லாம என் கல்யாணம் எப்படி நடக்கும், நீ எங்க போனே இத்தன நாளா, நான் தேடாத இடம் இல்லை.... ஏதானும் எனக்கு தகவல் கொடுக்கணும்னு கூட உனக்கு தோணலையா, அப்படி என்னதான் ஆச்சு... என்ன அவசரம்னு சொல்லாம கூட போனே னு” கோவமா கேட்டேன்.

“ஹே இரு இரு, என்ன.. என்னமோ, விட்டா கட்டின புருஷன் மாதிரி கேள்வி அடுக்கிகிட்டே போறே... நான் எங்கேயும் போவேன்.... எப்போவேணா போவேன்.... அதை நீ எப்படி கேட்கலாம்னா....” எனக்கு அதிர்ச்சி மேல அதிர்ச்சி. அப்போதே எனக்கு சீ ன்னு போயிடுச்சு. ஆனாலும் அவள் மேல் வெச்ச காதல் என்னை மௌனமா இருக்க வெச்சுது.

“சரி சொல்லலாம்னா சொல்லு” என்றேன்.
“நாம கல்யாணம் பண்ணிக்கப்போறதா தானே பேச்சு, நகை புடவைன்னு கூட வாங்கினோமே, என் பெற்றோர்கிட்ட கூட கூட்டி போனேனே” என்றேன் தன்மையாக.
“ஒ ஆமாம் பேசினோம்தான்.... அப்போ எனக்கும் அப்படி ஒரு எண்ணம் இருந்துச்சு.... உன்னை பண்ணிகிட்டா நல்லா வசதியா வாழலாம்னு.... நீயும் என்னோட ரொம்பவே இழைஞ்சே, ஆசையா இருந்தே... கேட்டேதெல்லாம் வாங்கி குடுத்தே, நல்ல வசதியானவன்னு கட்டிக்க நினைச்சேன் தான்.... ஆனா பாரு, அப்போதான் என் கூட காலேஜ்ல படிச்ச வினோத் என்னை சந்திச்சான்.... அவன் அமெரிக்காவில் கிரீன் கார்ட் வெச்சிருக்கானாம்..... நல்ல பளபளன்னு கார்ல ஜம்முனு என்னை பார்க்க வந்தான்.... பேச்சு வாக்கில என்னைப் பத்தி கேட்டான்”

“கல்யாணம் ஆயிடுச்சான்னான்....?” “நான் இன்னும் இல்லைன்னேன்...” “ஒ அப்படியா, எனக்கு அப்போவும் இப்போவும் உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு..... உன்னை நல்லா வெச்சுக்குவேன், நான் அங்கே பங்களா கார்னு வசதியா வாழறேன்..... கூடிய சீக்கிரம் அங்கே சிடிசன் ஆயிடுவேன்.... என்னை திருமணம் செஞ்சுப்பியானு கேட்டான்..... நான் இரவெல்லாம் யோசிச்சேன்.... உன்கிட்ட இருக்கிற பணத்தையும் வசதியையும் பார்க்கும்போது அவனுது இன்னும் பெட்டர்னு தோணிச்சு.... சோ அவனை பண்ணிக்க முடிவு செய்தேன்..... சில நாள் விசா டிக்கெட்டுனு அலைஞ்சோம்.... அவன் உடனே கிளம்பணும்னான்.... அதனால இங்க கோவில்ல வெச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டு உடனே கிளம்பீட்டோம்.... யாருக்கும் சொல்ல முடியல...”

“உன்கிட்ட சொன்னா, நீ ஒப்பாரி வைப்பே..... உன்னை உன் பணத்தை எனக்கு எவ்வளவுக்கு எவ்வளவு பிடிக்குமோ, உன் இந்திய மனப்பான்மை, கலாசாரம் க்ரகசாரம்னு நீ பேசுவியே நூத்து கிழவி மாதிரி, அந்தப் பேச்சு அதை எல்லாம் நான் ரொம்பவே வெறுத்தேன்.... எனக்கு மாடர்ன் வாழ்க்கைதான் பிடிக்கும்..... அதான் உன்கிட்ட சொல்லிக்காமையே போய்டேன்”
“நீ என்னடானா நான் எங்கியோ போய்ட்டேன்னு எனக்காக காத்திருந்தியாம்..... கல்யாணத்த நிறுத்தீட்டியாம்..... எல்லாம் கேள்விபட்டேன்.... நீ ஒரு ஜோக்கர்பா சித்து..... இப்படி கூட செய்வாங்களா..... நான் போய்ட்டேன்னா என்ன, விட்டுது னு பேசாம அந்தப் பெண்ணை பண்ணிக்க வேண்டியதுதானே, இதெல்லாம் என்ன பைத்தியக்கார செண்டிமெண்ட்ஸ்?” என்று எள்ளிநகையாடினாள்.

“எனக்கு ஒரு பக்கம் கோவம் ஆத்திரம், மறுபக்கம் இவளை போய் அவ்வளவு காதலித்தேனான்னு என் மேலே எனக்கே அசிங்கம் அருவருப்பு, அவளை பளார்னு ஒரு அரை விட்டேன்.
“சீ, நீ எல்லாம் ஒரு பெண்ணா.... ஒரு மனுஷியா னு கத்தினேன்...”
“ஹே என்னை நீ அடிச்சியா, என்ன திமிரு னு” என்னை பார்த்து கை ஓங்கினா. “போதும் உன் சகவாசம்..... போனா போகுதேன்னு நீ இன்னும் என்னை நினைச்சு வேதனை படறியேன்னு பார்த்து பேசலாம்னு வந்தேன், அதுக்கு என்னை கை நீட்டி அடிச்சுட்டே..... என்ன கொழுப்பு உனக்கு” என்றாள்.

“அவளிடம் மேற்கொண்டு பேச பார்க்க கூட பிடிக்காம கிளம்பி வந்துட்டேன். முட்ட குடிச்சேன் என் ஆத்திரம் தீரலை..... கையில கிடைச்சதெல்லாம் போட்டு உடைச்சேன்.... அவளை கொல்லணும் போன்ற ஆத்திரம் ஏற்பட்டது.... அடக்கிக்க முடியல..... அன்னிக்கி நீ மட்டும் அழைக்காம இருந்திருந்தா இந்நேரம் நான் போய் சேர்ந்திருப்பேன்..... தற்கொலை முயற்சிதான் செஞ்சுகிட்டு இருந்தேன்.... அவளுக்காக இல்லை, என்னை எனக்கு பிடிக்காம போனதால..... அவளுக்கு அதுக்கு அருகதை இல்லைன்னு எனக்கு புரிஞ்சுபோச்சு.... ஆனா அவளால எத்தனை எத்தனை பேர் வாழ்க்கை பாழாகீடுச்சு, உனக்கு நான் எவ்வளோ பெரிய துரோகத்த செஞ்சுட்டேன்....”

“என்னைப் பார்த்தா எனக்கே அசிங்கமா இருந்துது, அதான் தூக்க மாத்திரை விழுங்கப் போனேன்..... கையில எடுத்ததும் உன் போன் வந்துச்சு..... கடைசீயா உன் குரலை கேட்க ஆவல் வந்து போன் ஐ எடுத்தேன்.... நீ மீட்டிங் பத்தி பேசினே, ஆதரவான அமெரிக்கையான உன் குரல் என்னை சுதாரிக்க வெச்சுது.... உடனே கலைஞ்சேன், கிளம்பி வந்தேன்” என்றான். அவன் தற்கொலை முயற்சி என்றதும் “ஐயோ” என்று துடித்து போனாள் சங்கீதா.

“ஆனாலும் என்னால அவ செஞ்ச துரோகத்த மறக்க முடியல சங்கீதா.... அவளை மன்னிக்கவே முடியல முடியாது... டாம் இட்” என்று ஸ்டியரிங்கில் குத்தினான். அவளுக்கு அவன் வேதனை புரிந்தது.
“போகட்டும், இத்தோட போச்சேன்னு விட்டுடுங்க சர்” என்றாள்.
“இப்போவும் சர் தானா, நாம நடுத்தெருவில் காரில் இருக்கோம்.... நான் என் நண்பர்களுக்கு சித்து” என்றான்.
“முயற்சி பண்ணறேன்.... எனக்கு கோட்டின் இந்த பக்கம் நிற்க தான் விருப்பம்” என்றாள்.

“நீ என்னை மன்னிச்சுட்டியா சங்கீதா?” என்றான்.
“உங்களை மன்னிக்க நான் யாரு?” என்றாள் குனிந்தபடி.
“புறக்கணிக்கப்பட்ட வேதனை என்னனு இப்போ எனக்கு புரிஞ்சுடுச்சு சங்கீதா.... நீ அன்னிக்கி என்ன வேதனை பட்டிருப்பே இல்லையா...”
“அதப்பத்தி என்ன இப்போ, விடுங்க..... நாம கிளம்பலாமா, மழை வேற இருட்டு வேற.... அம்மா கவலைப்படுவாங்க” என்றாள்.
“ஒ ஐ ஆம் சாரி” என்று வண்டியை கிளப்பினான். அவள் வீட்டருகே கொண்டு சேர்த்தான்.
“நாளைக்கு ஆபிசில சந்திப்போம்” என்றான். இறங்கும் முன், “ஒரு வார்த்தை” என்றாள்.
என்ன என்பதுபோல ஆவலாய் அவள் முகம் பார்த்தான்.
“எல்லா பிரச்சினைகளுக்கும் சாவு முடிவு இல்லை.... இனி ஒரு முறை அந்த மாதிரி முயற்சியில் ஈடுபட மாட்டீங்கன்னு நினைக்கிறன்.... அப்பறம் உங்க இஷ்டம்” என்று இறங்கப் போனாள்.

“நிச்சயமா மாட்டேன்.... உனக்கு ஒண்ணு தெரியுமா, ஒரு முறை தற்கொலை வரை போனவன் மறுபடி அந்த வழிக்கு போக மாட்டான்.... அதிலும் என் கடமை, என்னை நம்பி இருக்கும் கம்பனி, அதன் தொழிலாளர்கள் எல்லோரையும் நீ எனக்கு தகுந்த நேரத்தில் நினைவுபடுத்திவிட்டாய் சங்கீதா..... அவங்களுக்காகவானும் என் பெற்றோருக்காகவானும் நான் உயிர் வாழ தீர்மானிச்சுட்டேன்” என்றான்.

“குட், தாங்க்ஸ் குட் நைட்” என்று இறங்கி சென்று விட்டாள்.
“யாருமா அது?” என்றாள் சரோஜா.
“எங்க பாஸ் மா.... மழையில வண்டி ரிபேர், ஆட்டோவும் கிடைக்கலை அதான், கொண்டுவிட்டார்” என்றாள். யார் என்று மழை இருளில் காணவில்லை ஆதலால் பிழைத்தாள்.

அடுத்த நாள் முதல் ஆபிசில் வேலை நன்றாகவே நடந்தது ஆனால் சித்துவிடம் பெரிய மாறுதல்கள் ஏதும் இருக்கவில்லை. சங்கீதாவும் அவனிடம் அதுபற்றி மேற்கொண்டு பேச முயலவில்லை. அசலே தான் அவனை எப்படி மன்னித்தோம், அவன் எப்படி போனால் நமக்கென்ன என்ற எண்ணம் அவ்வப்போது அவளை பந்தாடியது. அவனை மன்னிக்கவும் முடியாமல் பாவம் என்ற எண்ணத்தையும் தவிர்க்க முடியாமல் இருதலை கொள்ளி ஏறும்பானாள் சங்கீதா.


இதனிடையில் அவள் ஒரு வெள்ளி அன்று வேலை முடிந்து திரும்பியதும் சரோஜா அவளை கோவிலுக்குச் சென்று வரும்படி கூறி அனுப்பி வைத்தாள். சரி கொஞ்சம் மனம் அமைதி பெரும் என்று அவளும் சென்றாள். உள்ளே சென்று அம்மனை தரிசனம் செய்தபின் வெளியே வந்து பிரகாரத்தை சுற்ற, அங்கே ஒரு வயதான மாது பிரகாரத்தை சுற்ற முயன்று அவர் தலை சுற்றியது போல, விழப் பார்த்தார்..... பக்கத்தில் நடந்துகொண்டிருந்த சங்கீதா அவரை சட்டென்று தாங்கி பிடித்தாள். மெல்ல திண்ணையில் அமர வைத்தாள்.

3 comments: