Thursday 16 August 2018

NESAMULLA VAANSUDARE - 10

“கொஞ்சம் அங்க இங்கன்னு வலி இருக்கு” என்றாள் முக சுணக்கத்துடன்.
“ம்ம் அதுக்கு மருந்து குடுத்திருக்காங்க.... கொஞ்சம் பொறுத்துக்கம்மா” என்றான் ஆதரவாக.
“நீங்க அங்க எப்படி அந்த நேரத்துக்கு வந்தீங்க சர்” என்றாள். அவன் அவளை முறைத்தான்.
“சாரி சித்து” என்றாள்.
“இல்லை, எவனோ நம்ம தொழிலாளின்னு அறிமுகப்படுத்திகிட்டு முருகேசன் இப்படி உன்னை அட்டாக் செய்ய திட்டமிட்டிருக்கான்னு எனக்கு தகவல் சொன்னான்.... அதான் பரந்தடிச்சுகிட்டு ஓட்டி வந்தேன்..... நான் வந்த நேரம் நான் பார்த்த காட்சி.... பொருக்கி ராஸ்கல், துவைச்சுட்டேன் துணி மாதிரி கிடக்கான்..... அவன கொன்னாத்தான் என் ஆத்திரம் தீரும்.... உனக்கு ஏதானும் ஆகி இருந்தா, நான் என்ன பண்ணுவேன்” என்று கலங்கினான். அவனின் இந்த பரிதவிப்பும் வேதனையும் அவளை அசைத்து பார்த்தது.

“ஏன் சித்து, ரொம்ப கலங்கிட்டீங்க?” என்றாள்.
“ஆமாம் சகி, ரொம்ப” என்றவன் உணர்ச்சி வேகத்தில் “ஒ சகி, தாங்க் காட்” என்று தன்னையும் அறியாமல் அவளை அப்படியே அணைத்துக் கொண்டுவிட்டான். அந்த சடன் அணைப்பை அவள் எதிர்பார்க்கவில்லை.... கூசியது, வெட்கமானாள். நாணி சிவந்தாள். அந்த முதல் ஆடவன் ஸ்பரிசம் அவளை என்னமோ செய்தது.

“சித்து, என்ன இது?” என்றாள் மெல்ல. அவன் தன் நிலை உணர்ந்தான். “மன்னிச்சுக்கோ. சாரி ரொம்ப சாரி” என்றான் அவனுக்கும் முகம் சிவந்து போனது.
“எந்தா சாரே, என்னதான் உங்க மனைவின்னாலும் இது ஹாஸ்பிடல்.... இங்க வெச்சு இப்படி எல்லாம் செய்யக் கூடாது” என்றாள் உள்ளே வந்த நர்ஸ் சிரித்தபடி.
“மனைவியா, அப்படீன்னா சொல்லி வெச்சிருக்கான்.... என்ன தைரியம்” என்று கோவம் கொண்டாள்.
“இல்லை, சாரி சிஸ்டர்” என்றான்.
“நீங்க வெளியே போங்க, அவங்களுக்கு டிரஸ் மாத்தணும்” என்றாள். அவன் வெளியே வந்து நின்றான். அங்கே உள்ளே அந்த நர்ஸ் சங்கீதாவிடம் கூறிக்கொண்டு இருந்தாள்.

“பாவம் உங்க ஹஸ்பெண்ட் ரொம்ப பயந்து போச்சு.... உங்களுக்கு ட்ரெஸ் கொண்டுவர சொன்னேன், இது கண்டோ, புதுசாவே வாங்கி வந்துடுச்சு” என்று காண்பித்தாள். அப்போதுதான் சங்கீதாவும் அந்த நைட்டிகளை கண்டாள். ‘ஐயோ கஷ்டம், இவனே போய் வாங்கினானா எனக்கு நைட்டி எல்லாம்..... சீ எனக்குதான் வெக்கமா இருக்கு..... இந்த சித்துவ என்ன பண்ணினா தேவலை.... எல்லார்கிட்டேயும் என் மனைவின்னு வேற சொல்லி வெச்சிருக்கான் ராஸ்கல்” என்று எண்ணிக்கொண்டாள்.

அந்த ரோஜாபூக்கள் இரைந்த நைட்டியை பக்குவமாக அவளுக்கு அணிவித்தாள் நர்ஸ்.
“உங்க ஹஸ்பெண்ட் எல்லாத்திலேயும் ரொம்ப வேகம், பாவம் நீங்க, எப்போவும் எங்கேயும் இப்படிதானா?” என்றாள் நர்ஸ் கண் அடித்தபடி. ‘அடிப்பாவி, இவ பேச்சை பாரேன் வெட்கம் கேட்டவள்’ என்று தோன்றியது. சிவந்து போனாள்.
“சிஸ்டர், அது வந்து.... நான்.. அவர்...” என்றாள் திக்கி திணறி.
“சரி சரி ஓகே நோ ப்ராப்ளம்” என்றபடி கதவை திறந்தாள். அதற்குள் அவள் தந்தை வந்திருந்தார்.
“சங்கீதா கண்ணு” என்று உள்ளே ஓடி வந்தார்.
“அப்பா பதறாதீங்க, எனக்கு ஒண்ணும் இல்லை..... கொஞ்சம் அங்கங்க ஸ்ராய்பு, கொஞ்சம் வலி இருக்கு.... வேற ஒண்ணுமில்லை” என்று தேற்றினாள். சித்துவோ அவளை அந்த நைட்டியில் கண் கொட்டாமல் பார்த்திருந்தான்.
“நான் டாக்டர ஒரு முறை பார்த்து பேசிட்டு வரேன்மா, அப்போதான் எனக்கு நிம்மதியாகும்” என்று போனார். அவன் தனியாக மாட்டியதே போதும் என்று பிலுபிலுவென பிடித்துக்கொண்டாள்.

“என்ன தைர்யத்துல நான் உங்க மனைவின்னு சொன்னீங்க, நீங்க எப்படி அப்படி சொல்லலாம்..... எனக்கு நீங்க ஏன் போய் இதெல்லாம் வாங்கினீங்க, எனக்கு ஒரே கூச்சமா இருக்கு.... எல்லாத்திலேயும் உங்க ஹஸ்பெண்ட் இப்படிதான் வேகமா இருப்பாரான்னு கேட்டு அந்த நர்ஸ் சிரிக்கறாங்க... எனக்கு மானமே போச்சு” என்று கத்தினாள்.

“உஷ் மெல்ல பேசு, இது ஹாஸ்பிடல்.... மனைவின்னு நான் சொல்லலை.... இங்க உன்னை பார்த்தவர் எங்கப்பாவுக்கு தெரிஞ்ச டாக்டர்.... அவர் நம்மளோட வரவேற்புக்கு வந்திருந்தாராம்.... அதனால அவரே முடிவு கட்டீட்டாரு..... அதுக்கு நான் என்ன செய்யறது..... இப்போ மாத்தி சொன்னா எல்லா கதையும் சொல்ல வேண்டி வருமே, அது இன்னும் மோசமாச்சேன்னு சும்மா இருந்தேன்.... அது மட்டும்தான் என் தப்பு..... உனக்கு மாத்து துணி வேணும் அப்போதான் வீட்டுக்கு கூட்டி போகும்போது மாற்ற முடியும்னாங்க.... பக்கத்துல போய் தெரிஞ்ச வரை வாங்கினேன்.... இங்க வேற யாரை போய் நான் ஹெல்ப் கேட்க முடியும்” என்றான் நிதானமாக. அவள் கொஞ்சம் அடங்கினாள்.

அவள் தந்தை வர, “வீட்டுக்கு கூட்டி போகலாம் என்று சொல்றாங்கம்மா. போலாமா?” என்றார்.
“போலாம்பா” என்றாள். “தாங்க்  யு வெரி மச்” என்றாள் அவனை காணாமல். “நான் கூட்டிட்டு போய் விடறேன் அங்கிள், அவளால உங்க பைக்ல வர முடியாது” என்றான்.
“இல்ல, நான் கால் டாக்சி பிடிக்கலாம்னு...” என்று இழுத்தார்.
“எதுக்கு அங்கிள், ப்ளீஸ் நான் கொண்டு விடறேன்.... நீங்க உங்க வண்டியில பின்னாடியே வாங்க” என்றான். அதற்குமேல் மறுக்க முடியவில்லை அவரால். “உங்களுக்கு சிரமம்” என்றார்.

“ஒரு சிரமமும் இல்லை” என்றபடி அவளை தானே கைதாங்கலாக அழைத்து வந்து முன் சீட்டில் ஏற்றினான். பக்குவமாக அமர வைத்தான். பின் சீட்டில் எப்போதும் இருக்கும் குஷினை அவள் கழுத்துக்கு வைத்தான். “சாஞ்சுக்கோ சகி” என்றான். சீட்டை நன்கு பின்னே சாய்த்து வசதியாக அவளை சாய வைத்து மெல்ல வண்டி ஒட்டிச் சென்றான்.
“ஏதானும் அசௌகரியமா இருக்கா, எங்கயானும் வலிக்குதா?” என்று அவ்வப்போது கேட்டுக்கொண்டான். இல்லை என்று தலை அசைத்தாள்.

“நான் கொஞ்சம் கவலையா இருப்பேன், நைட் எப்படி இருக்குன்னு எனக்கு ஒரு மெசேஜ் குடுப்பியா சகி ப்ளீஸ்?” என்றான். சரி என்றாள். வீட்டை அடைந்து அவளை உள்ளே அழைத்துச் சென்று படுக்க வைத்துவிட்டு மன்னிப்பு வேண்டிவிட்டு கிளம்பினான்.

“இது இது மாப்ளதானே?” என்றாள் ரகசியமாய் தன் கணவனிடம் சரோஜா. “ஆமாம்” என்றார் கணேசன். “அவர் எப்படி இங்க?” என்றாள்.
“எல்லாம் அப்பறம் சொல்றேன், முதல்ல குழந்தைய கவனி... சூடா ஏதானும் குடிக்க கொண்டுவா” என்று அனுப்பினார்.
“என்னக்கா ஆச்சு?” என்று ஓடி வந்தான் அவள் தம்பி.
“ஒண்ணும் இல்லை பயப்படாதேடா” என்று தேற்றினாள். அவளுக்கு கைக்கும் காலுக்கும் என்று தலையணைகள் கொண்டு வந்து வசதியாக படுக்க வைத்தான். அதைக் கண்டு தனக்கு குஷன் வைத்து சாய வைத்த சித்துவின் செயல் அவளுக்கு ஞாபகம் வந்தது. புன்னகைத்துக்கொண்டாள்.
‘ஹப்பா அவன்தான் என்னமாய் தவித்து போயிருக்கிறான்.... பாவம்’ என்று எண்ணினாள். ‘தகவல் வந்ததும் எப்படி புயலாக கிளப்பிக்கொண்டு ஓடி வந்துள்ளான்...’ என்று மீண்டும் மீண்டும் அவனைப்பற்றியே எண்ணம் தோன்றியது. இதனிடையில் ‘ஐயோ அப்பாம்மாக்கு அவனை பார்த்துவிட்டார்களே... நான் அவனிடத்தில் வேலை செய்வது தெரிந்துவிட்டதே... என்ன சொல்வார்களோ, வேலையை விடும்படி சொல்வார்களோ’ என்ற பயம் வந்தது.

அவளுக்கு கொஞ்சம் சூடாக பானம் கொண்டுவந்து குடுத்துவிட்டு,
“இப்போ சொல்லுங்க, அவன் ஏன் இங்க வந்தான்?” என்றாள் சரோஜா.
“ஏன் வந்தான்னா என்ன கேள்வி, அவன் ஆபிஸ்ல தான் சங்கீதா வேலை பண்றா.... இந்த விபத்து அவன் தொழிற்சாலையில வெச்சுதான் நடந்தது.... அவன்தான் கொண்டுபோய் மருத்துவமனையில சேர்த்து வைத்தியம் பார்த்தான்..... இப்போ வீடு வரை கொண்டுவிட்டுட்டு போறான்..... போதுமா” என்றார்.

“என்னது அவன் ஆபிஸ்ல இவ வேலை செய்யறாளா, இது என்ன கூத்து, இத்தன நாளா இவ நம்மகிட்ட சொல்லவே இல்லையே, உங்களுக்கு எப்போலேர்ந்து தெரியும்?” என்று அடுக்கினாள்.
“கொஞ்ச நாளா தெரியும். சித்துவே வந்து என்னை பார்த்து பேசினான். மீண்டும் மன்னிப்பு கேட்டுகிட்டான்..... நம்ம பெண்ணாலதான் தான் மனுஷனா உயிரோட நடமாடறதா சொன்னான்..... அதான் நானும் ஒண்ணும் சொல்லலை... விடு” என்றார் அத்தோடு முடித்து.
“அப்போ இவங்க ரெண்டு பேரும்...?” என்று அவர் ஏதோ சொல்ல, “அது தெய்வ சித்தம்படி.... நீ இப்போ கொஞ்சம் தொணதொண்க்காம இரு” என்று அடக்கினார்.

“ஒ அப்போ அப்பாவுக்கு தெரியுமா, தெரிஞ்சும் என்னை வேலை பார்க்க அனுப்பிச்சாரா, அவன் அவரை பார்த்து பேசினானா... மன்னிப்பு கேட்டானா....” என்று சித்து அவள் மனதில் மேலும் மேலும் இடம் பிடித்தான்.

அங்கே வீட்டுக்கு சென்ற சித்து தன் அன்னையிடம் அனைத்தும் கூறினான். அவளின் மொபைல் நம்பர் வாங்கி அழைத்தார் மரகதம்.
“எப்படிம்மா இருக்கே, வலி இருக்கா, நல்லகாலம் சின்ன அடிதான். இல்லேனா, ஏதுக்கே என் பிள்ளை முன்ன நடந்ததுக்கே தன்னையே இன்னும் மன்னிச்சுகலை..... இதுக்கும் சேர்த்து துவண்டு போயிருப்பான்..... இன்னமும் அவன் முகத்தில் பீதி தணியலைமா.... நீ உடம்ப பார்த்துக்க சங்கீதாமா” என்றார் அன்பாக.

“நான் நல்லா இருக்கேன் ஆண்ட்டி.... நீங்க எப்படி இருக்கீங்க?” என்று விசாரித்துக்கொண்டாள்.
“அதிக நேரம் பேச வேண்டாம். ஸ்ட்ரெயின் பண்ணிக்காதே.... படுத்துக்கோ.... நல்லா ரெஸ்ட் எடு” என்றார் “சரி ஆண்ட்டி” என்றாள்.

இரவு கொஞ்சமாக உண்டுவிட்டு டாக்டர் சொன்ன மாத்திரைகளை முழுங்கிவிட்டு படுத்தாள். அவன் கேட்டுக்கொண்டபடி சித்துவுக்கு ஒரு மெசேஜ் குடுத்தாள்.
“நான் நல்லா இருக்கேன்.... தூங்கப் போறேன்.... கவலைப்பட வேண்டாம்.... நிம்மதியா சாப்பிட்டுவிட்டு தூங்கவும்” என்று. அதை படித்தவனுக்கு நிம்மதியாயிற்று.
“டேக் கேர்.... நல்லா தூங்கு.... உடம்ப பாத்துக்கோ.... குட் நைட்” என்று அவனும் பதில் அனுப்பினான். அந்த அக்கறையான மெசேஜை கண்டு மனதில் கொஞ்சமாக பூக்கள் பூத்தன. சில காலமாக அவனின் ஒவ்வொரு செயலையும் மனம் ஆசையாக அசைபோட்டது. நினைக்க நினைக்க இனித்தது. ‘இது என்ன நான் அவனை பூரணமாக மன்னித்துவிட்டேனா, நான் அவனை விரும்புகிறேனா....?’ என்று நினைத்தாள். தூக்கம் கண்ணை சுழட்ட உறங்கிப்போனாள்.

அடுத்த நாள் “குட் மார்னிங் எப்படி இருக்கே?” என்று மெசேஜ் வந்தது. தூங்கி விழித்ததுமே அதைத்தான் முதலில் கண்டாள். ‘அப்பப்பா என்ன கரிசனம்’ என்று சிரித்துக்கொண்டாள். “நல்லா தூங்கினேன் நல்லா இருக்கேன்” என்று பதில் அனுப்பினாள்.
“நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ ப்ளீஸ், இன்னும் நாலு நாள் வேலைக்கு வர வேண்டாம்” என்று வேண்டி மெசேஜ் விட்டான். “சரி அப்படியே” என்றாள்.

தாயின் உதவியோடு எழுந்து முகம் கழுவி அமர்ந்தாள். அன்று முழுவதும் கூட படுக்கையிலேயே கழித்தாள். உடல் நன்கு தேறியது. காயங்கள் ஆற இன்னமும் இரு நாட்கள் பிடித்தது. இன்னொருமுறை அவர்கள் குடும்ப டாக்டரிடம் சென்று காண்பிக்க, அவர் கட்டுகள் பிரித்து பாண்ட் ஏயிட் போட்டு அனுப்பி வைத்தார். சனி ஞாயிறு அப்படி செல்ல திங்கள் வேலைக்குச் சென்றாள். அவளை அங்கு கண்டு முகம் விரிய புன்னகைத்தான் சித்து.
“ஏன் அதுக்குள்ள வேலைக்கு வந்தே சகி, இன்னமும் ரெஸ்ட் எடுத்திருக்கலாமே?” என்றான். அவனிடம் பேசிவிட்டு தன் சீட்டுக்கு போனாள். தன் வேலைகளில் ஈடுபட்டாள். அப்போது அங்கு தொழிற்சாலையிலிருந்து சதீஷ் வந்திருந்தான்.

“அட சங்கீதா, வேலைக்கு வந்துட்டீங்களா, இப்போ உடம்பு எப்படி இருக்கு. இவளோ சீக்கிரம் நீங்க வேலைக்கு வந்துடுவீங்கன்னு நான் நினைக்கலை. நேத்து பார்த்த போது கொஞ்சம் சோர்வா இருந்தீங்களே, காயங்கள் எல்லாம் ஆறிப்போச்சா?” என்றான் எப்போதும் போல ஈஷிக்கொண்டு.
“ம்ம் நல்லா இருக்கேன் சதீஷ். தாங்க்ஸ்... நேத்து நீங்க வந்தபோது நான் களைப்பா இருந்தேன், அதான் சரியா பேச முடியலை.... அன்னிக்கி நீங்க ரொம்பவே ட்ரை பண்ணீங்க என்னை காப்பாத்த..... அதனால உங்களுக்கு வேற நல்ல அடி போல..... உங்க உடம்பு இப்போ தேவலையா?” என்று மரியாதை நிமித்தம் கேட்டாள்.
அவன் புல்லரித்து போனான். “ஒ நான் நல்லா இருக்கேன்..... கொஞ்சம் உள் காயம் அவ்ளோதான்.... சரியாய் போச்சு.... உங்க தோள்பட்டையிலதான் ரொம்ப ரத்தம் வந்தது, இப்போ நல்லாயிடுச்சா?” என்று எட்டி பார்த்தான். துப்பட்டாவை இழுத்து மூடிக்கொண்டாள்.

“சரியாயிடுச்சு, நான் வேலையப் பார்க்கிறேன், நீங்க கிளம்பறதுன்னா கிளம்புங்க” என்றாள் நாசூக்காக.
“நான் உங்கள அப்பறமா வந்து மறுபடி பார்க்கறேன், ஒண்ணா லஞ்ச சாப்பிடுவோம்” என்றான். அவள் முகம் கடினமானது.

“இல்லை மிஸ்டர் சதீஷ், நான் சொல்றதை தயவு செய்து நல்லபடி புரிஞ்சுக்குங்க..... நீங்க அன்னிக்கி என்னை காப்பாற்ற முயற்சி எடுத்தீங்க, உங்களுக்கு அதுனால அடிபட்டுது..... அதுக்கு நான் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கேன்.... அதை தெரிவிச்சிட்டேன்.... இத்தோட முடிஞ்சுது..... நேத்து வீடு வரை வந்துட்டீங்க, அதையும் பொறுத்துகிட்டேன்.... ஆனா எங்கப்பாம்மாக்கு இதெல்லாம் பிடிக்காது..... நீங்க இப்படி அடிக்கடி என்கிட்டே வலிய பேசறது சாப்பிடலாம் பேசலாம்னு தொந்தரவு பண்ணறது எனக்கு பிடிக்கலை..... எனக்கு இதை மீறி உங்க மேல ஒரு அபிப்ராயமும் இல்லை னு தெளிவு பண்ண விரும்பறேன்..... சோ இனி நாம அனாவசியமா சந்திக்காம இருக்கறது நல்லது..... இது ஆபிஸ் நாலு பேர் நாலு விதமா பேசீடுவங்க..... ஐ ஹோப் யு அண்டர்ஸ்டாண்ட்” என்றாள். சதீஷின் முகம் சுருங்கி விழுந்து போனது.

“ஒ அப்படி சொல்றீங்களா.... ஆனா நான்..” என ஏதோ சொல்ல, “இருக்கலாம். நீங்க எப்படி வேணா எண்ணி இருக்கலாம், ஆனா அது இப்போ தேவையில்லை” என்றுவிட்டு தன் வேலைகளில் முனைந்தாள். அப்போது தன் ரூமை விட்டு வெளியே வந்த சித்து இதை எல்லாம் கண்டபடி நின்றிருந்தான். சதீஷின் மேல் அளவிட முடியாத கோவம் வந்தது. அவனை வேலையை விட்டு தூக்கி விடலாமா என்று கொதித்தான். ஆனால் சங்கீதா அவனை திறம்பட சமாளித்துவிட்டாள். கண்டித்து அனுப்பி விட்டாள் என்பதால் அவன் கோபம் கொஞ்சம் தணிந்தது. பேசாமல் நகர்ந்து விட்டான்.

அந்தக் கோபம் முந்தைய தின மிச்சம். அன்று ஞாயிறு, சங்கீதாவை போய் காணலாம் என்று மனம் விழைந்தது. என்னால்தான் அவளுக்கு அடிபட்டது என்று இன்னமும் எண்ணி மாய்ந்தான் சித்து.

அங்கே செல்ல அவள் உள்ளே ஓய்வாக படுத்திருந்தாள். அவனை அங்கே கண்ட கணேசன் “வாங்க தம்பி” என்றார்.
“சங்கீதா எப்படி இருக்கா, ஒரு முறை பார்க்கலாமா?” என்றான்.
“ஒ, போங்க, உள்ளதான் படுத்திருக்கா, காயம் நல்லாதான் ஆறிகிட்டு வருது” என்று அனுப்பினார். “டேய் சுனில், அக்கா கிட்ட போய் சொல்லு” என்று அனுப்பினார்.


3 comments:

  1. Sakkath mam. The love in between Siddhu and Sangeeta you have narrated very well. Nice. Good going mam.

    ReplyDelete