Tuesday 7 August 2018

NESAMULLA VAANSUDARE - 1

நேசமுள்ள வான்சுடரே...

சென்னையின் ஒரு பிரபலமான திருமண மண்டபம். பல உள்நாட்டு வெளிநாட்டு கார்கள் வந்தவண்ணம் விருந்தினரை இறக்கி விட்டு நகர்ந்த வண்ணம் இருந்தன. பட்டுப்புடவைகளும் வைரங்களும் கெம்புமாக மகளிர்  ஜொலித்தனர். அவற்றுக்கு ஈடாக மண்டபத்தின் வாசலில் அமைக்கப்பட்டிருந்த வண்ண ஒளி விளக்குகளும் தோரணங்களும் கண் சிமிட்டின. நடுத்தர வயது மாதர்கள் காஞ்சீவரம் மற்றும் உப்படாவில் ஜொலிக்க  இளவயது மங்கைகள் பரம்பரா மற்றும் வஸ்த்ரகலா பட்டில் மிளிர்ந்தனர்.

அது ஒரு பெரிய இடத்து திருமணம். மாப்பிள்ளை வீட்டினர் சென்னையில் ஒரு முக்கிய புள்ளியாக விளங்கும் குடும்பம். பெண் வீட்டினர் அவ்வளவு பணக்கார இடம் என்று சொல்லி விட முடியாது என்றாலும் அவர்கள் வரையில் வசதியான இடமே. மதியமே அங்கு கல்யாண களை கட்டத் துவங்கி இருந்தது. அவரவர் வீட்டிலிருந்து கிளம்பி மாலை நான்கு மணிக்கெல்லாம் மண்டபத்தை அடைந்து முதலில் நிச்சய தட்டு மாற்றிக் கொண்டனர். அதன் பிறகு இப்போதைய வழக்கம் போல இதோ வரவேற்பு நடந்து கொண்டிருக்கிறது. நாளை காலை எட்டரை-பத்து முகூர்த்தம்.

மணமகன் சித்தார்த் ஆறடி ஒரு அங்குல உயரம். அவனது உயரத்திற்கு ஏற்ற உடலமைப்பு, பல வருடங்களாக உடல் பயிற்சி செய்து தன்னை திடமாக வைத்திருப்பவன். வசீகரமான கண்கள் யாரையும் சொக்க வைக்கும்.... அளவான மீசை... கோதுமை நிறம்.... சுருட்டை கிராப்... அடர்ந்த நீல வண்ண மூன்று பீஸ் சூட்டில் அமைதியாக நின்றிருந்தான். வந்தவர்களை புன்னகையுடன் வரவேற்று வணக்கம் செய்தான்.

மணமகள் சங்கீதா அழகோவியமாக அவன் அருகில் புன்சிரிப்புடன் நின்றிருந்தாள். வந்தவருக்கு கை கூப்பி வணக்கம் செய்தாள். தேவையின்போது கை கொடுத்தும் விஷ் செய்தாள். சித்தார்த்திற்கு சிறிதும் குறைவில்லாமல் அவளும் ஐந்து எட்டு என்று உயரமாக ஒயிலாக இருந்தாள். அளவான உடற்கட்டு... பளிங்கு போன்ற முகம்.... அதில் இன்னமும் கொஞ்சம் குழந்தைத்தனம் மிச்சம் இருந்ததோ என்று தோன்ற வைக்கும் கண்கள்.... அவனது உடைக்கு மாட்சாக வாங்கப்பட்ட கருநீல வஸ்த்ரகலா பட்டில் பார்லர் பெண்களின் கைவண்ணத்தில் மிளிர்ந்தாள்.
விருத்தினர் வந்தவண்ணம் வாழ்த்தி உண்டுவிட்டு சென்ற வண்ணம் இருந்தனர். கூட்டம் ஓய்வேனா என்றிருந்தது.

“என்ன ஜானகி, கவனிச்சியோ, நல்ல பொறுத்தமான ஜோடிதான் பொண்ணும் மாப்பிள்ளையும், ஆனா அது என்ன, காதும் காதும் வெச்சா மாதிரி பேசி முடிச்சுட்டாங்களே, உள் விஷயம் என்னமோ இருக்குன்னு தோணுது..... உன் காதுல ஏதானும் விழுந்துதா?” என்று வம்பு வளர்த்தாள், வனஜா.
“இல்லை வனஜா, நானும் மரகதம் வாயப் பிடுங்கி பார்த்தேன்..... ஆனாலும் அவ அழுத்தக்காரின்னு நமக்கு தான் தெரியுமே, அவ லேடீஸ் க்ளப்லியே அப்படிதான் இருப்போ, இங்கேயா வாயத் திறக்கப் போறா...” என்று அங்கலாய்த்துக்
கொண்டாள் ஜானகி.

சங்கீதாவின் உதவிக்கென கவிதா லலிதா இருவரும் அருகே நிற்க, சித்தார்த்தின் நண்பர்கள் சற்று தூரத்தில் அமர்ந்து அரட்டையில் ஈடு பட்டிருந்தனர். இருவரின் பின்புறத்து மேஜையில் மலை என பரிசு பொருட்கள் குவிந்திருந்தது.

மணமக்களை ஊன்றி கவனிப்போமா!!! சித்து முகம் புன்னகையுடன் விளங்கினாலும் கண்களில் ஏதோ ஒரு கலக்கம் வருத்தம் சோகம். வெளிவந்த புன்னகை நான் உண்மையானது அல்ல என்று பறை சாற்றிக் கொண்டிருந்தது. சங்கீதாவின் அருகில் கடனே என்று நின்றிருந்தான் என நன்றாகவே விளங்கியது…. யாருக்கோ வந்த விருந்து என்ற முக பாவம்…. அவனது பெற்றோர் ராமலிங்கம் மரகதம் தம்பதியினர், வந்தவரை வரவேற்றபடி இருந்தாலும் அவர்களோடு பேசிக்கொண்டே அடிக்கொருதரம் சித்துவின் முகத்தையே கண்டபடி ஒரு கலக்கத்துடனேயே இருந்தனர்.

மணமகள் சங்கீதாவோ இயல்பாக புன்னகைத்தபடி அவ்வப்போது சித்துவை ஒரு ஓரப்பார்வை நோக்கியபடி நின்றாள். ‘இவன் ஏன் இப்படி உம்முன்னு இருக்கான்.... கொஞ்சம் சிரிச்சா என்ன கொள்ளை போகுது.... ஒருவேளை சிரிக்கவே தெரியாதோ..... என்னை திரும்பியும் பார்க்கலியே..... ஒரு வேளை நாளை தான் திருமணம் என்ற ஒதுக்கமோ..... அன்றே நான் சொன்னேன் அம்மாவிடம், திருமணத்திற்கு முன் இப்படி அசிங்கமாக வரவேற்பு வேண்டாம் என்று, கேட்டார்களா என் பேச்சை..... இதுதான் இப்போ ட்ரெண்ட் என்று என் வாயை அடைத்துவிட்டார்களே’ என்று உள்ளுக்குள் பொருமினாள். ‘சரி ஆகட்டும், நாளை பார்க்கலாம்’ என்று பேசாமலிருந்தாள்.

“என்னடி சைட் அடிச்சு முடிச்சாச்சா.... அதான் காலம் முழுசும் சைட் அடிக்கப் போறியே, இங்கேயே இப்போவே ஆரம்பிக்கணுமா?” என்று கிண்டல் செய்தாள் கவிதா.
“சி சும்மா இரு கவி, என்ன இது இப்படி பேசிகிட்டு, யார் காதுலயானும் விழுந்தா என்னாகும், சும்மா இருப்பா” என்றாள் சங்கீதா.
“என்னமோ டவுட்டா பார்க்கிறா மாதிரி எனக்கு தோணிச்சு, ஏன் என்னாச்சுனு அப்படி பார்த்தே?” என்று கேட்டாள் லலிதா.
“பின்ன என்னடி, நானும் வந்ததுலேர்ந்து பார்க்கறேன், என் பக்கம் திரும்பல, சிரிக்கல.... ஒரு சின்ன புன்முறுவல் கூட இல்லை.... மாப்ளனா இப்படியா மூஞ்சிய வெச்சுகிட்டு இருப்பாங்க..... அதான், ஒருவேளை என்னை மணக்க பிடிக்கலையோன்னு கொஞ்சம் உறுத்தலா இருந்துதுபா” என்றாள் சங்கீதா கலக்கமாக.
“சீ, அசடு மாதிரி பேசாதே..... அவளை அடக்கினியே, இப்போ நீ பேசினத யாராச்சும் கேட்டா என்னாகும்..... அதெல்லாம் இல்லை, அவர் நாளைக்குதானே கல்யாணமுன்னு ஒதுக்கமா இருக்காரோ என்னமோ.... தாலி கட்டும் முன்பே மேலே விழுந்து ஈஷும் கும்பலுக்கு நடுவுல உன் அவர் ரொம்ப வித்யாசமானவரா இருக்காருடீ கீதா” என்றாள் லல்லி. சங்கீதா புன்னகைத்துக்கொண்டாள்.

அவள் ஒரப்பார்வையை சித்துவும் அறிந்தாந்தான். அவனுக்கு தர்மசங்கடமாக இருந்தது. அவள் மிகவும் அழகாக பாங்காக இருந்தாள்... கருத்தை கவர்ந்தாள், ஆனால் அவன் மனது அதில் ஒட்டவில்லை.... அவளை அப்படி ஒரு கண்ணோட்டத்தில் பார்க்க அவன் மனம் துணியவில்லை, விருப்பமில்லை.
இதோ கும்பல் ஓய்ந்தது. மணி பத்தை நெருங்கிக் கொண்டிருக்க சித்துவின் நண்பர்கள் அவனிடம் வந்தனர்.

“இனி யாரும் வர மாட்டாங்க சித்து, நாம போலாம், ஒண்ணா கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்.... நாளைலேர்ந்து நீ எங்க கையில அம்புட மாட்டியே மச்சான்” என்று இழுத்தனர். “சிஸ்டர், வித் யுவர் பர்மிஷன், நாங்க சித்துவை அழைச்சுகிட்டு போறோம்... நாளைக்கு உங்ககிட்ட ஒப்புகுடுத்துடுவோம்” என்றான் நெருங்கிய நண்பனான ஷ்யாம். அவள் ஏறிட்டு பார்த்து மெல்ல சிரித்தாள். பின் தலை அசைத்தாள்.
“நான் இவங்களோட போறேன், நீயும் உன் தோழிகளோட சாப்பிட்டுவிடு.... எனக்காக காத்திருக்கணும்னு அவசியம் இல்லை” என்றான் எங்கோ பார்த்தபடி. அவனை ஏறிட்டவள் தயக்கமாக சரி என்று தலை அசைத்தாள்.

அவள் கவி லல்லியுடன் சாப்பிடச் சென்றாள். சித்துவும் நண்பர்களோடு சென்றான், ஆனால் அவர்கள் சென்றது சாப்பிட அல்ல அதற்கும் முன், பெரிய பணக்கார இடத்து வரவேற்பு என்பதால் சாப்பாட்டின் ஒரு பாகமாக அமைக்கப்பட்ட பார் கவுண்டருக்கு.
“டேய், நான் மாப்பிள்ளைடா, இதெல்லாம் கூடாது.... அப்பாமாக்கு தெரிஞ்சா கொன்ருவாங்க” என்று தயங்கினான். அவன் மனம் உலைகளமாக இருந்தது. ஒரு ட்ரிங்க் எடுக்க வேண்டும் என்று மனம் அலைபாய்ந்தது. நண்பர்களின் வற்புறுத்தல் அவனை வென்றது. ஒன்று என்று ஆரம்பித்தது மற்றவருடன் பேசியபடி ஏறிக்கொண்டே போய் ஐந்தில் நின்றது. அதுவும் அதற்குள் அவன் அன்னை அங்கே வந்து சத்தம் போட்டதால்.

“என்னப்பா சித்து இது, நீ மாப்பிள்ளை, இப்போ போய் இப்படி.... என்னப்பா ஷ்யாம், உனக்கானும் தெரிய வேண்டாமா, அவன் குடிக்க ஆரம்பித்தால் நிறுத்த மாட்டான்னு..... ச்சே என்ன பிள்ளைங்க.... சம்பந்தி வீட்டுல யாராச்சும் பார்த்தா எவ்வளோ மானக்கேடு யோசிச்சீங்களா” என்று கடிந்து கொண்டு அவனை “வா வந்து கொஞ்சம் சாப்பிட்டு தூங்கு” என்று இழுத்துச் சென்றாள். நண்பர்க்ளும் கூடவே செல்ல ஏதோ உண்டேன் என்று கொரித்தான். முட்ட குடித்திருந்ததால் எதுவுமே இறங்கவில்லை.

தள்ளாடியபடி மெல்ல மற்றவரை விட்டு விலகி நடந்தான். அங்கே சாப்பிட்டபின் சங்கீதா தோழிகளுடன் சென்று கொண்டிருப்பதைக் கண்டான். அவள் பின்னே சென்றான். மேலே உள்ள மணமக்களுக்குண்டான அறைகள் இருந்த தளத்துக்கு சென்றாள் அவனும் சென்றான். “சங்கீதா” என்று மெல்ல அழைத்தான். அவள் நின்று அவனைக் கண்டவள் அவனிடம் மெல்ல நடந்து வந்தாள்.
“நான் உன்னிடம் கொஞ்சம் தனிமையில் பேச வேண்டும்” என்றான் நாக்கு குழறியது.
‘ஐயோ! இவன் குடிப்பானா, கஷ்டகாலமே’ என்று பயம் வயிற்றில் பந்தாக சுருண்டது.
“நான் தோ வரேன், நீங்க போய்கிட்டே இருங்கடீ” என்று கூறிவிட்டு அவனருகே நின்றாள். தோழிகள் இவர்கள் காதல் செய்வதாக நினைத்து சிரித்து கிண்டல் செய்தபடி முன்னே சென்றனர். “நீங்க குடிப்பீங்களா?” என்றாள் பயந்தபடி.
“எப்போவானும்” என்றான்.
“வா” என்று தனது அறையின் பக்கம் சென்றான். ‘அவன் அறைக்கா, அவனுடன் இந்த நிலைமையிலா?’ என்று பயந்தாள்.
“வா, நான் ஒண்ணும் உன்னை கடிச்சு தின்னுட மாட்டேன்” என்று உள்ளே அழைத்தான். தயக்கத்துடன் நடந்தாள்.
“உக்காரு” என்று சோபாவை காட்டினான். ஓட்டில் அமர்ந்தாள்.
“தோ பாரு சங்கீதா, உன் மேல எனக்கு ஒண்ணுமே வருத்தம் இல்லை. நீ ரொம்ப அழகான பண்பானா நல்ல பொண்ணு, நான் பார்தவரையில் எனக்கு தெரியுது. ஆனா எனக்கு இந்த திருமணத்தில் இஷ்டமில்லை” என்றான் நிறுத்தி நிதானமாக. “இவன் குடிச்சுட்டு உளறரான்னு நினைக்காதே.... உண்மைய உன்கிட்ட சொல்லணும்னு நானும் நம்ம திருமணம் நிச்சயம் ஆனது முதல் முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தேன்.... அதற்கு சந்தர்ப்பமும் வரலை, எனக்கு தைர்யமும் வரலை....”
“இன்னிக்கி இப்போ வரவேற்பு கூட முடிஞ்ச பிறகு சொல்றானேன்னு உனக்கு ஆத்திரம் வரும், அது நியாயமும் கூட..... ஆனா இனிமேலும் சொல்லாமல் உன் கழுத்தில் தாலி கட்டி என்னையும் ஏமாற்றி உன் வாழ்க்கையையும் பாழாக்க எனக்கு விருப்பம் இல்லை..... துணிஞ்சு உன்கிட்ட எல்லாத்தையும் கொட்டிடணும்னுதான் குடிச்சேன்....” என்று நிறுத்தினான்

“இப்போ வந்து சொன்னா....” என்று சங்கீதா வாய் திறக்க,
“ப்ளீஸ் நான் பேசீடுறேன், உன்னை பிடிக்கலைன்னு இல்லை..... ஆனா என் மனசில் நீ இல்லை..... நீ வர முடியாது..... அங்கே ஏதுக்கே என் ஆருயிர் காதலி ஷாலினி, என் ஷாலு இருக்கா..... நிரந்தரமா குடி இருக்கா” என்று வலது கையால் இடது நெஞ்சை நீவிக்கொண்டான். சங்கீதா கண்கள் மல்க அவனை பார்த்திருந்தாள்.

“நானும் ஷாலுவும் உயிருக்கு உயிராய் காதலித்தோம்.... பழகினோம் பேசினோம்.... திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தோம்..... அவளுக்கு திருமணத்திற்கென சில நகைகளை பட்டுப்புடவைகள் கூட நான் வாங்கி குடுத்துட்டேன்..... நிச்சயம் செய்து திருமணத்த முடிச்சுக்கலாம்னு நான் ஆசைப்பட்ட போது அவள் திடீரென்று காணாமல் போய்டா..... என்னாச்சு எங்கே போனா ஒன்றும் தெரியலை..... நான் விசாரிக்காத இடம் இல்லை.... கேட்காத ஆளில்லை.... ஒரு தகவலும் இல்லை.... இதோ அவள் போய் ஆறு மாதங்கள் ஆகிடுத்து..... என் பெற்றோர் அவளை மணக்க முழு மனதாக ஒப்பவில்லை ஆயினும் எனக்காக அவளை ஏற்க தயாராகத்தான் இருந்தார்கள்.... அவள் என்னைவிட்டு போனபின் நான் பித்து பிடித்தவன் போல அலைந்தேன்..... அப்போதான் குடிக்க ஆரம்பிச்சேன்..... ஆனால் அதிலும் எனக்கொண்ணும் பெரிய சுகம் ஏற்படவில்லை.... என்னை மறந்த நிலையில் அவளையும் மறந்து தூங்க, மயங்கி கிடக்க குடி எனக்கு உதவியாகியது.... என் பெற்றோருக்கு உண்மை தெரிஞ்சுது. ‘இன்னும் எத்தனை காலம் போனவளுகாக காத்திருப்பது, நீ வேறு ஒரு பெண்ணை மணமுடிக்க தான் வேணும்னு’ உன்னை எனக்கு பண்ணி வைக்க ஏற்பாடுகள் செஞ்சுட்டாங்க.”

“நான் எவ்வளவோ தடுத்தேன் ஆனால் பயனில்லை.... அம்மாவுக்கு பிரஷர் உண்டு, அது அதிகமாகி அவங்கள படுக்கையில் தள்ளீடுச்சு.... அதனால் மட்டுமே நான் சம்மதிச்சேன்.... ஆனா என் மனது என்னை குடைஞ்சுகிட்டே இருக்கு சங்கீதா.... என்னால் அவளுக்கும் உனக்கும் கூட துரோகம் பண்ண முடியாது..... ப்ளீஸ் என்னை மன்னிச்சுடு.... இந்த கல்யாணத்த இத்தோட நிறுத்தீடுவோம்.... இன்னமும் ஒண்ணும் கெட்டு போகலை.... ரத்து பண்ணீடலாம்” என்றான் சாதாரணமாக.

“என்ன சொல்றீங்க, வரவேற்பு நிச்சயம் எல்லாம் முடிஞ்சுடுச்சு..... நிறைய பேரோட பல பல போட்டோக்கள் ஜோடியாக எடுத்தாச்சு..... இனி நிறுத்தினா என்னாகும்.... எங்கப்பாம்மா எப்படி தாங்குவாங்கன்னு எனக்கு பயமா இருக்கு.. நீங்க என்னடானா லேசா சொல்லீட்டீங்க” என்று ஆத்திரத்துடன் கலங்கினாள்.
“ஆனா வேற வழி இல்லைமா..... நீயா ஏதானும் முடிவு செய்தாதான் நல்லது.... அப்படி முடியாது, கல்யாணம் நடந்தே தீரணமுன்னு நீ அடம் பிடிச்சா, நான் உன் கழுத்தில் தாலி கட்டுவேன்.... ஆனா நான் உன்னை நெருங்க மாட்டேன்..... நீயும் நெருங்க முடியாது..... ஒரே வீட்டில் ஒரே அறையில் இரு வெவ்வேறு மனிதர்களாக நாம் காலம் முழுசும் வாழ வேண்டி இருக்கும்...... அதில் எனக்கு சம்மதமில்லை. உனக்கு அது பரவாயில்லைனா சொல்லு..... யோசிச்சு முடிவெடு..... நான் உன்னை அவசரப்படுத்தலை” என்று இன்னொரு சோபாவில் சாய்ந்தான்.

அவள் எழுந்து கலங்கியபடி மெல்ல வெளியேறி தன் அறையை அடைந்தாள். அவளது முகத்தைக் கண்டு தோழிகள் பயந்தனர். “என்னடி?” என்று குடைந்தனர். “அவர் எதுவும் தப்பா?” என்றாள் லலிதா. ‘இல்லை’ என்று தலை அசைத்தாள்.
“பின்ன ஏண்டீ இப்படி இருக்கே?” என்றாள். மடங்கி அமர்ந்து ஒரு பாட்டம் அழுது தீர்த்தாள். அவள் அழுது ஓயும் வரை ஒன்றும் செய்ய முடியாமல் தேற்றவும் முடியாமல் கைகளை பிசைந்தபடி நின்றனர் மற்ற இருவரும்.

“என்னம்மா
கீதா வந்துட்டாளா, சீக்கிரம் தூங்குங்க... காலையிலயே முகூர்த்தம் வெச்சிருக்கு” என்றபடி சங்கீதாவின் தாய் சரோஜா வந்தார். “வந்துட்டா ஆண்ட்டி, அதான் வந்து...” என்று மென்று முழுங்கினாள் கவிதா. “என்னடி மென்னு முழுங்கறே?” என்றபடி சங்கீதாவின் அருகில் வந்தவர் அவளின் கலங்கிய முகத்தைக் கண்டு அரண்டார். “என்னடி இப்படி ஒரு அழுகை, முகமெல்லாம் சிவந்து..... என்னடி நடந்துச்சு?” என்று பதறினார். “ஒண்ணுமில்லைமா, நீ பதறாதே... ப்ளீஸ் உக்காரு” என்று அவளை அருகே அமர்த்தி சமாதானப்படுத்தினாள் சங்கீதா.

“என்னன்னு சொல்லேன், எனக்கு வயித்தை கலக்குதுடீ” என்றாள் அவள். “அப்பாவக் கூப்பிடு கவி” என்றாள். கவி விரைந்து சென்று அழைத்து வந்தாள். “என்னாச்சு மா?” என்றபடி வந்து அவள் முகம் கண்டு அவரும் கலங்கினார். “என்னடா?” என்றார் ஆதரவாக தலை தடவி. மீண்டும் குமறிக்கொண்டு வந்த அழுகையை அடக்கமாட்டாமல் அவர் வயிற்றில் முகம் புதைத்து அழுதாள். என்னமோ என்று அனைவரும் கலங்கினர்.

“என்னாச்சுமா?” என்று அவர் தோழியரை கேட்க, “தெரியல அங்கிள், மாப்ள கூப்பிட்டுகிட்டு போனாரு தனியா பேசணும்னு..... வந்த பின்னாடி இப்படிதான் அழுகிறா.....”
“அங்கே அவர் ஏதானும் அவசரப்பட்டு தப்பா...” என்று அவர் தயங்க. “அப்படி ஒண்ணுமில்லைன்னு சொல்லீட்டா அங்கிள்” என்றாள் லலிதா அவசரமாக.
“ஓ அப்போ வேற என்ன?” என்று அவர் சங்கீதாவின் முகம் பார்க்க. அழுது ஓய்ந்து தன்னை சீர்படுத்திக்கொண்டு தண்ணீர் குடித்து மெல்ல பேச ஆரம்பித்தாள்.


9 comments: