Friday 17 August 2018

NESAMULLA VAANSUDARE - 11

அவன் உள்ளே சென்று “அக்கா அவர் வந்திருக்காரு” என்றான்.
“யாருடா?” என்றாள். “அத்தான்” என்று ஆரம்பித்து சுனில் உடனே அதான்கா உன் பாஸ்” என்று முடித்தான்.
“ஒ சரி, வரச் சொல்லு” என்று தன்னை சரி செய்துகொண்டு அமர்ந்தாள். வாசலில் நிழலாட, “வாங்க, என்ன இவளோ தூரம்?” என்றாள்.
“ஏன் நான் உன்னை பார்க்க வரக்கூடாதா?” என்றான் சிணுங்கலாக.
“அப்படி இல்லை, இதுக்குன்னு வரணுமா அதான்”
“எனக்கு இதுல ஒண்ணும் சிரமம் இல்லை” என்றான். “எப்படி இருக்கே?” என்றான்.
“நல்லா இருக்கேன்.... காயம் எல்லாம் நல்லா ஆறிடுச்சு” என்றாள்.
“குட் நல்லகாலம்” என்றான். அவள் புன்னகைத்தாள்.
“சரி கிளம்பட்டுமா?” என்றான். அவன் வந்தது பிடிக்காததுபோல பேசினாலும் அவன் அவளை தேடி, பார்க்க வந்தது அவளுக்கு பிடித்து தான் இருந்தது. இப்போது உடனே கிளம்புகிறேன் என்றதும் ஐயோ இவளோ சீக்கிரம் போறேன் என்கிறானே என்று தோன்றியது. இந்த பாழும் மனது என்று திட்டிக்கொண்டாள்.

“அம்மா எப்படி இருக்காங்க?” என்று கேட்டாள். அவளை ஆச்சர்யமாக பார்த்துவிட்டு, “நல்லா இருக்காங்க” என்றான். “நான் வரேன்” என்று தலை அசைப்பில் விடைபெற்று வெளியே வர, அங்கே சதீஷ் வந்திருப்பதைக் கண்டான்.
“நீங்க எங்க இங்க?” என்றான் காட்டமாக.
“மேடமுக்கு அடிபட்டுச்சே, எப்படி இருக்காங்கனு பார்க்கலாம்னு வந்தேன்” என்றான் இளித்தபடி.
“நல்லா இருக்காங்க ரெஸ்ட் எடுக்கறாங்க” என்றான் தடை படுத்துபவனை போல.
“ஒ அப்படியா குட், நானும் ரெண்டு நிமிடம் பார்த்துட்டு வந்துடறேன்” என்று தாண்டி உள்ளே சென்றான். அவன் அப்படி சென்றது சித்துவுக்கு கொஞ்சமும் பிடிக்காமல் போனது. ‘இவன் என்ன ரொம்பவே ஈஷறான். சொன்னாலும் புரிய மாட்டேங்குது, இவனை என்ன செய்யதால் தகும்’ என்று யோசித்தான்.

“நான் வரேன் அங்கிள்” என்று கூறிவிட்டு விருட்டென்று கிளம்பி சென்றுவிட்டான். அங்கே உள்ளே, சதீஷை தன் அறை வாயிலில் கண்ட சங்கீதா துணுக்குற்றாள். ‘என்ன இவன், இங்க வரை வந்துட்டானே’ என்று களைப்பாக கண்மூடி கிடப்பது போல கிடந்தாள். “சங்கீதா” என்றான் மெல்ல. கஷ்டப்பட்டு கண் திறந்து “ஒ நீங்களா” என்று திரும்ப கண்ணை மூடிக்கொண்டாள்.
“சாரி நான் டிஸ்டர்ப் பண்ணீட்டேன், நீங்க ரெஸ்ட் எடுங்க நான் அப்பறமா வரேன்” என்று கிளம்பிவிட்டான். நல்லகாலம் என்று எண்ணிக்கொண்டாள் சங்கீதா.
ஆமா, அது எப்படி, சித்து வந்தா சந்தோஷமா பேசறே, இவன்கிட்ட இப்படி நடிக்கிறே என்று இடித்தது மனது. அவளுக்கு முகம்தான் சிவந்தது பதில் தெரியவில்லை.

இதோ இப்போது சதீஷிடம் தோன்றிய கசப்பை திறந்து பேசிவிட்டாள். அதனால் கொஞ்சம் மனது தெளிந்தது.

மாலை சில நோடிஸ்களில் கை ஒப்பம் வாங்கவென சித்துவிடம் சென்றாள். கையொப்பம் இட்டபடி அவளை ஓரகண்ணால் பார்த்தான். இன்னமும் அவன் முகத்தில் கடினமும் கோவமும் இருந்தது.
“என்ன சொல்றான் அவன், நேத்து வேற வீடு வரை வந்துட்டான்..... யாரை எங்க வைக்கறதுன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா” என்றான். அவளுக்கு திகைப்பானது.
“சதீஷை சொல்றீங்களா, அவர் நேத்து வீடு வரை வந்தா அதுக்கு நான் என்ன பண்ணட்டும்...... பேச பிடிக்காம தான் சோர்வா இருக்குனு அனுப்பீட்டேன்.... ஏன் நீங்க கூட தானே நேத்து என் வீடு வரை வந்தீங்க?” என்றாள் கண்களில் குறும்பு மின்ன.

“நானும் அவனும் ஓண்ணா?” என்றான்.
“இல்லையா?” என்றாள் மீண்டும் குறும்பாக. அவனிடம் அப்படி விளையாடுவதில் அவளுக்கு பேரின்பம் கொண்டது.
“ஒ அப்போ அவன் மேல உனக்கு ஏதானும்..?” என்று நிறுத்தினான்.
“ஆம்” என்றாள்.
“என்ன?” என்று அதிர்ந்தான்.
“ஆமாம், அவன் மேல எனக்கு சொல்லொணா...என்று ஒரு பாஸ் குடுத்தாள். சித்துவுக்கு இதயம் வாயில் வந்துவிட்டது. அவளையே அதிர்ச்சியாக பார்த்திருந்தான்.
“அவன் மீது சொல்லொணா கசப்பு வெறுப்பு.... அதை அவன்கிட்ட இன்று காலை வெளிப்படையா சொல்லியும் ஆச்சு” என்றாள் நமுட்டு சிரிப்புடன். அதற்குள் அவனுக்கு வியர்த்து வழிந்தது. கசப்பு என்றதும் முகம் தெளிந்தது. “என்ன அவ்ளோ வியர்த்து போச்சு, ஏதனும் டென்ஷனா?” என்றாள் வேண்டும் என்றே.
“நீ இருக்கியே” என்று சிரிக்க முயன்றான். “ஆனாலும் ரெட்ட வாலு” என்று முனகினான். அவள் சிரித்தாள்.
“அவனை அவ்ளோ பேச விடணுமா?” என்றான் இன்னமும் ஆதங்கத்துடன். “அவனா மேல விழுந்து ஈஷிகிட்டு பேசினா நான் என்ன செய்ய முடியும். அதான் நான் கண்டிச்சுட்டேனே..... அப்பறம் என்ன..... ஆமா இதெல்லாம் நீங்க ஏன் இவளோ சீரியஸா எடுத்துகிட்டு கோவப்படறீங்க..... உங்களுக்கு என்ன அதுல லாபம், நஷ்டம்?” என்றாள் மீண்டும் குறும்பு தலை தூக்க.

அவன் தடுமாறி போனான். ‘இவள் நிஜமாக கேட்கிறாளா அல்லது தன்னுடன் விளையாடி பார்க்கிறாளா?’ என்று தடுமாற்றம்.
“இல்ல ஆபிஸ்ல அப்படி ஒருத்தன் லேடி ஸ்டாப் கிட்ட நடந்துகிட்டா சும்மாவா இருக்க முடியும்” என்றான்.
“ஒ அப்போ, அவன் அப்படி தொந்தரவு பண்றது தப்புன்னா, நீங்க அதே போலத்தானே பண்றீங்க, அதுவும் தப்பா என்ன?” என்றாள் அப்பாவியாக முகம் வைத்துக்கொண்டு ஆனால் அவள் கண்களில் குறும்பு கூத்தாடியது. “உன்னை” என்று அவளை கை நீட்டி அடிக்க முயற்சிப்பதுபோல ஓங்கினான். பின் தலையை உலுக்கி சிரித்தான்.

“நாலுபேர் பார்த்தா உனக்குதான் கேட்ட பேர், அதுக்கு சொல்ல வந்தா..” என்று இழுத்தான்.
“நீங்க என்னோடு உங்க அறையில இப்படி தனியா அமர்ந்து பேசி சிரிப்பது கூடத்தான், அப்படிபார்த்தா தப்பு.... நாலு பேர் நாலு விதமாத்தான் பேசுவாங்க” என்றாள்.
“மீண்டும் கேட்கிறேன் சகி நானும் அவனும் ஒன்றா உனக்கு?” என்றான் ஆழமாக அவளை பார்த்தபடி.
“அதுக்குண்டான பதில் நான் அவனிடம் ஏதுக்கே சொல்லீட்டேன், அதை நீங்களும் அறிவீர்களே” என்றாள் தலை கவிழ்ந்தபடி. அவன் முகம் மலர்ந்தான்.
“அப்போ நான் உனக்கு ஸ்பெஷலா?” என்றான். அவள் மெளனமாக இருந்தாள். “இது ஆபிஸ், நான் கிளம்பணும்... மழை வரா மாதிரி இருக்கு..... நான் வீட்டுக்குக் போகணும்” என்றபடி எழுந்தாள்.
“என்னோடு வருவாயா, நான் மேலும் உன்னோடு இதைப்பற்றி பேசி ஒரு முடிவுக்கு வர ஆசைப் படறேன்” என்றான்.
“இல்லை இன்னிக்கி தான் உடம்பு சரியாகி வேலைக்கு சேர்ந்திருக்கேன். இன்னிக்கே தாமதம் ஆனா வீட்டுல கவலப்படுவாங்க” என்றாள்.
“தாமதம் ஆகாம நான் சீக்கிரமா கொண்டு விட்டுடறேன். ஸ்கூட்டில வரலதானே” என்றான்.
“அப்பா கொண்டு விட்டாரு.... ஆட்டோவில போகத்தான் ப்ளான்” என்றாள்.
“அந்த ஆட்டோக்கு பதிலா நான் கொண்டு விடறேன் ப்ளீஸ்” என்றான்.
“இப்படி அவ்வப்போது நாம ஒண்ணா உங்க கார்ல போறத பார்த்தா மட்டும் ஆபிஸ்ல நாலுபேர் பேச மாட்டாங்களா சித்து?” என்றாள்.
“ஆனா பேசின வாய்கள் கூடிய சீக்கிரம் மூடும்படி நாம சில முடிவுகள எடுப்போமே சகி” என்றான் சளைக்காமல். மேலே பேச முடியாமல் இதயம் தடதடத்தது.
பின்னோடு அன்றைய வேலைகளை இருவரும் முடித்துக்கொள்ள, “வா போலாம்” என்று அழைத்துக்கொண்டு கிளம்பினான். வழியில் ஓரிடத்தில் நிறுத்தினான். திரும்பி அமர்ந்து அவளையே பார்த்தான். தன் மொபைலில் இருந்து கணேசனை அழைத்தான்.

“அங்கிள் தவறா எண்ண வேண்டாம். வேலை முடிஞ்சு சங்கீதா அட்டோவில கிளம்ப இருந்தா, நான்தான் உடம்பு அலண்டு போயிடும்னு அவள டிராப் பண்றதா கூட்டிகிட்டு வரேன்..... கொஞ்ச நேரத்துல அவள டிராப் பண்ணீடுவேன் மன்னிக்கணும்” என்றான். “சரி தம்பி” என்று மட்டும் கூறினார் அவர்.
“இப்போ ஒகேதானே, சோ சொல்லு” என்றான். என்ன சொல்லணும் என்பது போல பார்த்தாள்.

“அவன வேணாம்னு சொல்லீட்டே, ஆனா என்னை ஏத்துப்பியா?” என்றான் நிதானமாக அழ்ந்த குரலில். அவள் அவன் முகத்தையே திகைத்து பார்த்தாள்.
“இனி எனக்குள்ளேயே என்னால போராட முடியாது சகி..... நான் உன்னை ரொம்ப நாளா நேசிக்கிறேன்.... உயிராக காதலிக்கிறேன்.... நீ இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால ஊகிக்கவே முடியலை..... ஆனா சொல்ல பயம்... நான் உனக்கு செய்த துரோகத்துக்கு பின், ஷாலுவின் புரக்கணிப்பால மனம் உணர்ந்தேன்... நான் எந்த முகத்தோட உன்கிட்ட காதல் சொல்லுவேன், என்னை ஏற்கும்படி எப்படி வேண்டுவேன், அதுக்கு எனக்கு என்ன அருகதை இருக்கு..... நீதான் எப்படி ஏற்பேன்னு என் மனசுல நிறைய பயம்.... என் அம்மாகிட்ட கூட சொல்லி அழுதேன்..... விடைதான் தெரியல.... எப்படி அணுகிறது னு யோசிச்சு நானே காலம் கடத்தீட்டேன்.... ஆனா இனி அப்படி முடியாது.... இனி பொறுக்க முடியாது.... “

“ஒரு பக்கம், எவன் எவனோ உன்னை பெண் பார்க்கறேன்னு வரான்..... மறுபக்கம் எவன் எவனோ வந்து மேல விழுந்து ஆசை வைக்கறான்..... ஏதும் விபரீதம் நடக்கும் முன் நான் என் மனதை பேசீடணும்னு இன்னிக்கி துணிஞ்சுட்டேன் சகி..... நீ என்ன பதில் சொன்னாலும் சரி, மறுத்தாலும் கூட, அட்லீஸ்ட் என் காதலை உன்னிடம் சொல்லிவிட்டேன்னு ஒரு நிம்மதியாவது இருக்குமே சகி, எனக்கு அதுவே போதும்” என்றான்.
அவன் பேச பேச அவள் மனதில் போராட்டங்கள். அவளும் தான் இப்போது மனம் கனிந்து தான் இருந்தாள். அவனை மன்னித்துவிட்டாள்தான்..... தன்னை அவன் இத்தனை நாளாக உயிராக காதலிக்கிறானா நிஜமாகவா என்று நெகிழ்ந்து அவனை ஏற்க முடியுமா, அவனை மணந்தால் நிம்மதியாக வாழ முடியுமா’ என்று கலங்கினாள்.

“என்ன சகி ஏதானும் பேசேன்.... ஐ லவ் யு சோ மச் டா..... டூ யு லவ் மீ டூ?” என்றான். அவள் மெளனமாக தலை கவிழ்ந்தபடி அமர்ந்திருந்தாள்.
“ஒ ஓகே புரியுது.. நான் செய்த கொடுமைக்கு பின்னால உன்னால என்னை ஏற்க முடியாதுதான்..... நான் ஓரளவு எதிர்பார்த்தேன்..... ஆனா இந்த பாழும் மனசு கேட்க மாட்டேன்னு அடம் பிடிச்சுது, அதான் இன்னிக்கி தைர்யமா பேசிட்டேன்..... இட்ஸ் ஆல்ரைட்” என்றான் வேதனை முகத்தில் அப்பட்டமாக தெரிய கண்கள் பனிக்க அமைதியாக அமர்ந்திருந்தான். அவன் முகத்தை கண்டவளுக்கு அதை தாங்க முடியவில்லை.

“அப்படி இல்லை” என்றாள் மெல்ல.
“பின்னே?” என்றான் ஆவலாக.
“திடீர்னு வந்து கேட்டா நான் என்ன சொல்ல.... எனக்கு உங்க மேல எந்த வெறுப்பும் இல்லை..... நான் நடந்தத எப்பவோ மறந்துட்டேன் கூட..... ஆனா உங்களை காதலிக்கிறேனான்னு எனக்கு தெரியலையே” என்றாள் பாவமாக. “ம்ம்ம்” என்றான் சுவாரஸ்யமாக. “சோ நான் இன்னும் என் விக்கெட்டை இழக்கலை..... அது சரி இதுக்கு பதில் சொல்லு.... நான் அன்னிக்கி வீட்டுக்கு வந்தேனே அது பிடிச்சுதா கோவம் வந்துதா?” என்றான்.
“பிடிச்சுது” என்றாள் சிவந்தபடி.
“குட், நான் சீக்கிரமே கிளம்பினேனே அப்போ என்ன தோணிச்சு... உண்மைய சொல்லணும்” என்றான்.
“இவளோ சீக்கிரமா போகணுமான்னு தோணிச்சு” என்றாள்.
“வெரி குட், இன்னிக்கி சதீஷ நீ கண்டிச்சபோது நான் கோவப்பட்டேனே அப்போ என்ன தோணிச்சு..... அவனும் நானும் ஒண்ணில்லைன்னு ஏன் சொன்னே?” என்றான்.
“அது அது வந்து...” என்றாள்.
“என்னோட இப்போ வெளியே வந்தியே இது பிடிச்சுதா?” என்றான் ஆவலாக.
“ம்ம்ம்” என்றாள்.
“இன்னுமா உன் மனசு உனக்கு புரியலை சகி?” என்றான் கரகரப்பான ஆழ்ந்த குரலில். அவள் மேலும் சிவந்து போனாள்.

“சரி நீ இப்போதே சொல்லணும்னு இல்லை..... நல்லா யோசிச்சே சொல்லு.... போலாமா” என்றான். அவன் முகம் கண்டாள். அதில் கொஞ்சம் தெளிவு கண்டாள். பாவமாக இருந்தது.

“நீங்களும் அவனும் எனக்கு ஒண்ணில்லை..... நீங்க எனக்கு ஒசத்திதான், நீங்க எனக்கு முக்கியம் தான்... நான் உங்கள நேசிக்கிறேனா மே பி, ஆனா உங்கள வெறுக்கல..... அண்ட் ஆல்சோ ஐ லைக் யு ஆஸ் அ பர்சன்” என்றாள்.
“தேங்க்ஸ் சகி” என்றான். வண்டியை கிளப்பிக் கொண்டு அவளை வீட்டில் சேர்த்தான். ஒரு தலை அசைப்பில் விடை பெற்றான். அவள்தான் கலக்கமாக இருந்தாள்.
‘அவன் அவ்வளவு ஆசையுடன் கேட்டானே, நான் அவனை நேசிப்பது நிஜம்தானே, நான் ஏன் அதை அவன் முன் ஒத்துக்கொள்ளவில்லை..... எனக்கு அந்த தைர்யம் ஏன் வரவில்லை.... இன்னும் அவன் மேல் கோபமா என்றால் இல்லை.... வெறுப்பும் இல்லை.... பார்த்து பார்த்து தனக்காக ஒவ்வொன்றும் செய்யும் அவனின் அன்பும் அக்கறையும் பிடித்துதானே இருக்கிறது.... பிறகு என்ன’ என்று குமைந்தாள்.

சாப்பிட்டுவிட்டு உறங்கினாள்..... கனவிலும் இந்தக் கேள்விகள் வந்து குழப்பின.... காலையில் எழுந்து வாசப்பக்கம் கார்டனில் உலாவினாள்.... மனம் அந்த மழைக்கால காலை பொழுதின் ரம்மியத்தில் நெகிழ்ந்தது.... தெளிந்தது.... அவன் மேல் உள்ள காதல் புரிந்தது... மனம் கனிந்தது குழைந்தது...
‘இன்று சொல்லிவிட வேண்டும், அவனிடம் நான் கொண்ட காதலை சொல்லிவிட வேண்டும்’ என்று முடிவு செய்தாள். ஆசையாக அவளுக்கு பிடித்த நிறமான மரூனில் சேலை அணிந்து கிளம்பினாள். இன்றும் அவள் தந்தையே கொண்டுவிட்டார்.

ஆனால் அன்று முழுவதும் கூட பிசியாக வேலை இழுத்தது. அவனை ஒரு நிமிடம் காணவும் வாய்ப்பும் ஏற்படவில்லை, நேரமும் இல்லை. சோர்ந்து போனாள். அவன் கடந்துபோகும்போது அவளைக் கண்டான். அவள் அந்த புடவையில் மிக அழகாக இருப்பதைக் கண்டான். கண்களில் ஆர்வத்தோடு பார்த்துச் சென்றான்.

மாலை மயங்கி கிளம்பும் நேரமும் வந்தது, ஐயோ அவனிடம் பேசவே முடியலையே என்று துவண்டாள். கட்டி வந்த சேலையைக் கண்டு வெறுப்பு வந்தது.

“கிளம்பும் முன் என்னை கண்டுவிட்டு செல்” என்று அவனிடமிருந்து மெசேஜ் வந்தது. மலர்ந்தாள். ரெடியாகி அவன் அறைக்குச் சென்றாள். வேலை பற்றியவை பேசி முடித்தபின், “இந்தச் சேலையில மிக அழகாக இருக்கே, என்ன ஸ்பெஷல் இன்னிக்கி?” என்றான்.

“ஒண்ணுமில்லையே” என்றாள் தவிப்புடன்.
“இல்லையே, நீ இன்று சாதாரணமாக இல்லையே... ஏதோ ஒரு தவிப்பு தெரியுதே உன் கண்கள்ல, செயல்கள்ள” என்றான். ‘ஹப்பா இவன்தான் எப்படி படிக்கிறான் என் எண்ணங்களை’ என்று எண்ணினாள்.
“இல்ல வந்து....” என்று மென்று முழுங்கினாள்.
“சரி, நீ ரெடியா, இன்னிக்கும் நானே கொண்டு விட்டுடவா?” என்றான். அவள் மெல்ல தலை அசைத்தாள்.
“வா” என்று கூட்டிச் சென்றான். பின்னே சிலர் பார்ப்பதும் ஏதோ கமென்ட் அடிப்பதும் கேட்டது.
“டோன்ட் மைன்ட் தெம்” என்றபடி முன்னே நடந்தான். அவளுக்குத்தான் தான் செய்வது சரியா, இது முறையா, தன் முடிவு சரியானதா என்று மனம் படபடத்தது. ஆனால் துணிவுடன் போய் அமர்ந்தாள். வண்டி கிளம்பி ஓடத் துவங்க, “ம்ம் இப்போ சொல்லு, என்ன சொல்ல வந்தே?” என்றான். அவள் தன் சேலை மடிப்புகளை நீவியபடி இருந்தாள்.


No comments:

Post a Comment