Sunday 12 August 2018

NESAMULLA VAANSUDARE - 6

“சும்மா இரு ப்ரீத்தி, யார் காதுலயானும் விழுந்துடப் போகுது” என்று அவளை அடக்கினாள் சங்கீதா. உள்ளுக்குள்ளே அவளுக்கும் சந்தோஷமே, அவன் மாறினான் குடியை நிறுத்திவிட்டான், நல்லபடி நடந்து கொள்கிறான் என்று அவளும் கவனித்தாள்தான். ஏதோ சொல்லொணா ஆனந்தம் அவளுள். ‘எனக்காக நான் சொன்ன ஒரு வார்தைக்காக அவன் மாறியுள்ளான், என் வார்த்தைக்கு அத்தனை மதிப்பா?’ என்று எண்ணி மகிழ்ந்தாள்.

வேலை விஷயமாக ஒரு நாளில் ஒரு முறையேனும் அவனது அறைக்கு அவள் வரும்படி பார்த்துக்கொண்டான் சித்து. அவளை எதிரே அமர்த்தி வேலை விஷயமோ அல்லாத விஷயமோ ஏதேனும் ஒன்று பேசியபடி அவளையே பார்த்திருப்பது இப்போதைக்கு போதுமானதாக இருந்தது அவனுக்கு. அவன் மன ஏக்கத்தை அது போக்கியதோ என்று தோன்றியது. அப்படி அவளை காண மிகுந்த ஏக்கம் தோன்றும்போது, அனாவசியமாக அவளை அழைக்க முடியாத நேரங்களில் லாப்டாப்பில் மறைத்து வைத்திருந்த அவளது புகைப்படங்களை பார்வையிட்டு கொண்டு அமர்ந்தான்.

ப்ரீத்தியின் திருமணம் சமீபித்தது. ப்ரீத்தியின் வீட்டுக்கு அவ்வப்போது போய் வந்துள்ளாள் சங்கீதா என்பதால் இப்போதும் முந்தைய தினமே அங்கே சென்று அவளுக்கு கூட இருந்து உதவினாள். கிஷோரையும் அவளுக்கு ப்ரீத்தி முன்னரே அறிமுகப் படுத்தி இருந்தாள். வாரத்தில் இரு நாட்களானும் அவளை கூட்டிச் செல்ல கிஷோர் வருவான். அப்போது ஹை பை சொல்லிக்கொள்வார்கள். இரு நிமிடங்கள் அன்பாக பேசுவான் கிஷோர்.

“நாளன்னிக்கி ப்ரீத்தி கல்யாணம்னு கூப்பிட்டிருக்காங்களே?” என்றான் சித்து அவளிடம் அன்று. “ஆம்” என்றாள்.
“என் கூட வரியா ஒண்ணாவே போலாம்?” என்றான் கொஞ்சம் தயக்கமாக கொஞ்சம் ஆவலாக.
“சாரி, நான் நாளைக்கே அவ கூட அங்க போய், இருந்து உதவ வேண்டி இருக்கு..... நானே உங்க கிட்ட லீவுக்கு கேட்டு மெயில் போட்டிருக்கேன்.... நாளைக்கும் அடுத்த நாளும் நான் லீவு.... அவங்க வீட்டோடுதான் இருப்பேன்” என்றாள்.
“ஒ அப்படியா” என்றான் கொஞ்சம் ஏமாற்றத்துடன்.
“சரி அவளுக்கு உதவ போறியா, செய் நல்லதுதானே” என்றான் தேற்றிக்கொண்டு.

அடுத்த நாள் அதிகாலையில் ப்ரீத்தியின் வீட்டிற்கு செல்ல அங்கே விரதம் செய்ய ஏற்பாடுகள் நடை பெற்றன. ப்ரீத்தியின் அலங்காரத்தில் உதவினாள். விரதம் முடிந்து சாப்பாடும் ஆனது.

“என்னம்மா பம்பரமா சுழன்று வேலை பார்க்கறியே, உனக்கு எப்போ கல்யாணம்?” என்று கேட்டாள் ப்ரீத்தியின் அத்தை. அவள் வெறுமனே புன்னகைத்தாள். மனம் சஞ்சலப்பட்டது. இது போல இன்னமும் நிறைய கேள்விகள் வரும், சமாளிக்கத்தான் வேண்டும் என்று மனதை தேற்றிக்கொண்டாள்.
நிச்சயம், மண்டபத்தில் வைத்திருந்தனர். எல்லோருமாக மண்டபத்தை அடைந்தனர்.

அங்கே மாப்பிள்ளை வீட்டோர் வர நிச்சயம் நல்லபடி நடந்தது. ப்ரீத்தி சங்கீதா கூடவே நிற்க வேண்டும் என்று அடம் பிடித்தாள். சொல்லி வைத்தாற்போல அவளது கல்லூரி தோழிகள் யாரும் அதுவரையிலும் கூட கண்ணில் படவில்லை. அவளது உறவில் அவள் வயதொத்த பெண்களும் இல்லாதிருக்க அவளது சித்தியும் சங்கீதாவுமே ப்ரீதிக்கு அனைத்துக்கும் துணையாகிப் போயினர்.

அடுத்த நாள் காலை முகூர்த்தம். சில உயர்மட்ட ஆபிஸ் ஆட்கள் வந்திருந்தனர். அவர்களை கவனிக்கும் பொறுப்பும் சங்கீதாவிடமே கொடுத்தாள் ப்ரீத்தி.
“எங்க வீட்டுல யாரையும் தெரியாதுபா, நம்ம பாஸ் ஜி எம் எல்லாம் கூட வருவாங்க.... கொஞ்சம் பாத்து கவனிச்சு சாப்பிட வைத்து அனுப்பீடு சங்கீதா” என்று கேட்டுக்கொண்டாள்.
“சரி நான் பாத்துக்கறேன்” என்றாள் சங்கீதா.

ப்ரீத்தியின் அலங்காரம் பார்லர் பெண் பார்த்துக்கொள்ள தன்னை ஆழ்ந்த பொன்வண்டு கலர் பட்டு உடுத்தி தயார் செய்துகொண்டாள். அரக்கு வர்ண பார்டருடன் மிளிர்ந்தது அந்தப் புடவை. அவளை பார்போரெல்லாம் பெருமூச்சு விடும் அளவுக்கு இருந்தாள். ப்ரீத்தி சங்கீதாவின் பெற்றோரையும் அழைத்திருந்தாள். அதனால் கணேசனும் சரோஜாவும் கூட வந்து வாழ்த்திவிட்டு சாப்பிட்டுவிட்டு சென்றனர்.

அதே நேரம் சித்து உள்ளே நுழைந்தான். அவனுக்கு உள்ளே நுழையும்போதே ஒரு விதமான படபடப்பு. அவனது கல்யாணம் நின்றது முதல் அவன் இது போன்ற திருமண விழாக்களில் கலந்து கொள்வதில்லை. ஆனால் ப்ரீத்தி தன்னிடம் வேலை பார்ப்பவள். மிக நல்ல பெண், அதனால் தட்ட முடியாமல் வந்திருந்தான்.... வந்தால் சங்கீதாவை காணலாமே என்பது இன்னொரு ஆசை. அழ் மனதில், அவள் எப்படி இருப்பாள், பேச முடியுமா என்று பலபல எண்ணங்கள் அவனை குடைந்தன.... அலையாதே அடங்கு என்று அடக்கிக்கொண்டான்..... கூச்சமாக உள்ளே நுழைந்தவனை வாச வரவேற்பில் கண்டாள் சங்கீதா.... சந்தன சுடியும் அரக்கு நிற குர்தாவும் அணிந்து அவனது ஆறடி உசரத்திற்கு ஏற்ப ஜம்மென்று ப்ரீத்தி சொல்வதுபோல சினிமா ஹீரோ போலத்தான் இருந்தான்.... அங்கிருந்த வயது பெண்கள் அனைவரின் பார்வையும் அவனையே மொய்த்தது..... அதைக்கண்டு சங்கீதாவுக்கு சுறுசுறுவென கோவம் வந்தது. ‘உனக்கு ஏன் கோவம்’ என்றது உள் மனது.... ‘எனக்கென்ன கோவம், அசிங்கமா இருக்கு அதான்’ என்று மென்று முழுங்கினாள்.

அவனை வாசலிலேயே வரவேற்று உள்ளே அழைத்துச் சென்று அமர வைத்தாள். முதல் வரிசையில் நடராஜன் கூட அமர்ந்திருந்தான். எல்லோரும் வந்திருக்க முகூர்த்த நேரம் நெருங்கி இருக்க சங்கீதா ப்ரீத்தியுடனேயே அவளுக்கு உதவியபடி நின்றாள்.. இங்கிருந்தே மேடையில் அவளை ஆசை ஆசையாக கண்டபடி கண் அகற்றாமல் பார்த்திருந்தான் சித்து.

‘என்ன இந்த மனுஷன், என்னை காணாதத கண்டா மாதிரி பார்த்துகிட்டு இருக்கானே?’ என்று கூசினாள் சங்கீதா. அவன் காண்பதை கண்டு கன்னம் சிவந்தது. அந்த பொன்வண்டு கலர் அவளுக்கு மிகவும் எடுப்பாக இருந்தது. அன்று மணப்பெண்ணாக கண்டது போலவே தோன்றியது சித்துவிற்கு.... முதன் முதலாக அவள் மீது காதல் கொண்டுள்ளான் என்பதை அவன் அறிந்து கொண்டான்.... ஆனால் என்ன பயன், அவளை ஒதுக்கி விட்டு, அவளிடமே ஷாலுவைப் பற்றி கூறி விட்டு, இன்று அவள் வெறுத்துவிட்டதும் திரும்ப சங்கீதாவிடம் வந்தால் அவள் எப்படி ஏற்பாள், யார்தான் ஏற்பார்கள். அவனையே அந்த இடத்தில வைத்து பார்த்தாலும் அவனும் கூட ஏற்கமாட்டான் தானே’ என்று புழுங்கினான்.... ஆனால் பாழும் மனது அவளையே நாடியது.

இதை எல்லாம் அவன் அசைபோடும் நேரத்தில் அங்கே தாலி கட்டினான் கிஷோர். ப்ரீதியையும் அவனையும் வாழ்த்திவிட்டு, “நான் போய் நம்ம ஸ்டாப்பை கவனிக்கிறேன்பா” என்று ப்ரீதியிடம் கூறிவிட்டு மேடையை விட்டு கீழே இறங்கினாள்.
“வாங்க சர், எல்லாரும் சாப்பிட போகலாம்” என்று பெரியவரான நடராஜனை அணுகினாள்.
“இரும்மா ப்ரீதிய விஷ் பண்ணீட்டு சாப்பிட போகலாம்” என்றார் அவர். காலையில் முக்கியமான வெகு சிலர் மாத்திரமே வந்திருந்தனர். ஆபிஸ் சென்ற மற்றவர் மாலை வரவேற்பிற்கு வருவார்கள் என்றாள் ப்ரீத்தி. அதன்படி வந்த சிலர் மேடை ஏறி மணமக்களை வாழ்த்திட போட்டோ எடுத்துக்கொண்டனர் மணமக்கள்.

“சங்கீதா நீயும் வா” என்று அழைத்தாள் ப்ரீத்தி.
“நீங்க எடுத்துக்குங்க” என்றாள் கேட்கவில்லை. அவளும் மேடை ஏற புகைப்படக்காரர் அனைவரையும் ஒழுங்குபடுத்தி நிறுத்தினார். அவள் சித்துவின் அருகில் நிற்க வேண்டியதாகியது. சித்துவின் முகம் மலர்ந்து போயிற்று என்று சொல்லவும் வேண்டுமா. அவளை நெருங்கி அணைத்தார்போல நின்றான். அவளுக்குதான் தர்மசங்கடம் ஆனது.

பின்னோடு அவர்களை அழைத்துச் சென்று சாப்பிட வைத்தாள்.
“நீயும் எங்களோடவே உக்காந்துடேம்மா சங்கீதா” என்றார் நடராசன்.
“ப்ரீத்தி தேடுவாளோ என்னமோ சர்” என்றாள்.
“அதெல்லாம் ப்ரீத்தி, இனி உன்னை தேட மாட்டாமா” என்றார் அவர் ஹாஸ்யமாக இவுளுக்கு சிவந்து போயிற்று.

சாப்பிட்டதும் தாம்பூல பை குடுத்து வாயில் வரை வந்து அவர்களை வழி அனுப்பினாள். நடராசன் தன் வண்டியில் கிளம்ப, சித்து பொறுமையாக கிளம்பினான். அந்த சில நிமிடங்களில் அவளிடம் பேச விழைந்தான்.
“யு லுக் சுபர்ப் டுடே” என்றான். “தேங்க்ஸ்” என்றாள்.
“ஏன் நான் நல்லாயில்லையா, என்னை அப்படி சொல்ல மாட்டியா?” என்றான் கண்களில் குறும்புடன்.
“இல்ல அப்படி இல்ல.... யு லுக் வெரி ஹாண்ட்சம் டு” என்றாள்.
“தேங்க்ஸ்” என்றான் சிரித்தபடி. வேண்டும் என்றே தன்னை கலாய்க்கிறான் என்று அறிந்தாள். இவன் சீக்கிரம் இங்கிருந்து போனால் தேவலை என்று எண்ணினாள்.
“என்ன, இவன் எப்போ ஒழிவான்னு யோசிக்கிறியா?” என்றான். அவளுக்கு தூக்கிவாரி போட்டது.
“ஐயோ இல்லை” என்றாள் சமாளித்து. அவன் ஹோ வென்று சிரித்தான்.
“சரி நான் கிளம்பறேன், நீ ஆபிஸ் வரியா என்ன?” என்றான்,
“இல்லை இன்னிக்கி தான் நான் லீவாச்சே... நாளைக்கு வருவேன்” என்றாள். “ஒ ஆமா, சரி வரேன்” என்று சென்றான்.

மாலையில் மற்ற ஸ்டாப் வர அவர்களையும் கவனித்துக்கொண்டாள் சங்கீதா. இப்போது தனக்கு மிகவும் பிடித்தமான ரோஜா இதழ் வண்ண மைசூர் க்ரேப்பில் திகழ்ந்தாள். ‘சித்து வந்தா கண்ணை எடுக்க மாட்டான்’ என்று மனம் சொல்லியது. ‘சீ, என்ன இது, அப்படீன்னா நான் அவனை எதிர் பார்க்கிறேனா என்ன..... என்ன நான் இப்படி அசிங்கமாக, அதுவும் அவனை போய்’ என்று திட்டிக்கொண்டாள்.
ப்ரீதியிடம் சென்றபோது “என்னடி, நான் மணப்பெண்ணா நீ மணப்பெண்ணான்னு தெரியல..... அவ்ளோ கன்னம் சிவக்குது...” என்று கேலி செய்தாள்.
“அடராமா, ஏண்டீ நீ வேற இப்படி, உனக்கு இன்னிக்கி நாந்தான் கிடைச்சேனா?” என்று அவளை அடக்கினாள்

பின்னோடு வாசலில் நிற்க, சித்து வருவதைக் கண்டாள். ‘காலையில்தான் வந்துவிட்டானே இப்போது வேறு வருகிறானே?’ என்று எண்ணிக்கொண்டாள். ‘கள்ளன் என்னை பார்க்க தான் வந்திருப்பான்’ என்று எண்ணினாள். சிவந்துபோனது. தன்னையும் அறியாமல் தன் சேலை நகைகளை சரிசெய்துகொண்டு அவனை வரவேற்றாள்.

“என்ன ஆச்சர்யமா இருக்கா இல்ல அதிர்ச்சியா இருக்கா?” என்றான் அவள் புறம் குனிந்து.
“இல்ல ஒன்றுமில்லை, வாங்க” என்று வரவேற்றாள். அவன் போய் ப்ரீத்தியை காண அவளுக்கோ பாஸ் இரண்டு முறை வந்து வாழ்த்தியதில் பெரும் சந்தோஷம்.
‘என்னடா இது அதிசயமா இருக்கு.... ரெண்டு முறை வந்து வாழ்த்தறாரு, இது எனக்காகவா வேறு யாருக்காகவானும் வந்தாரா, அப்போ அது யாரு, ஒரு வேளை சங்கீதாவா?’ என்று இருவரையும் நோட்டம் விட ஆரம்பித்தாள்.

“என்ன ப்ரீத், நான் உன் பக்கத்திலேயே நிற்கிறேன்.... நீ என்னடான்னா உன் பாசை சைட் அடிசுகிட்டு இருக்கியா என்ன கொழுபுடீ உனக்கு?” என்று கிண்டல் செய்தான் கிஷோர்.
“ஐயோ இல்லைங்க, இது அதில்லை.... அப்பறமா சொல்றேன்” என்று தொடர்ந்தாள். சங்கீதாவுடன் ஏதோ சன்னக்குரலில் பேசியபடி சிரித்தபடி சித்து செல்வதை கண்டவளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ‘கள்ளி என்னமோ நடக்குது என்கிட்டேயே மறைச்சுட்டா போல’ என்று எண்ணிக்கொண்டாள்.

“என்ன, எனக்கும்தான் சொல்லேன்?” என்றான் கிஷோர்.
“அதப்பாருங்க, சித்து எங்க பாஸ், கூடவே சங்கீதா.... எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு..... இல்லேனா பாஸ் ரெண்டு முறையெல்லாம் வரமாட்டாரு..... ஒரு முறை வந்ததே அதிசயம்” என்று சுட்டி கட்டினாள். “ஓஹோ அப்படி போகுதா கதை, ஆனா பரீத், ரொம்ப நல்ல ஜோடி இல்லையா?” என்றான். “ஆமா” என்றாள் ப்ரீத்தியும்.

எல்லொரையும் கவனித்து ஓய்ந்து போனாள் சங்கீதா. ஸ்டாப் அனைவரும் கிளம்பினர். சித்து தங்கினான். என்னடா இவன் கிளம்பலையே என்று எண்ணிக்கொண்டாள்.
“நீ இப்போ வீட்டுக்குதானே?” என்றான். ஆம் என்று தலை அசைத்தாள்.
“வா நான் டிராப் பண்ணறேன், யு லுக் வெரி டயர்ட்” என்றான்.
“ஐயோ வேண்டாம்” என்றாள்.

“ஏன் என்ன தப்பு, இரவு நேரம் இத்தனை நகை போட்டுக்கிட்டு நீ தனியா ஸ்கூட்டியிலோ ஆட்டோவிலோ போகறது தப்பு.... நான் பத்திரமா கொண்டு விடறேன் னு சொல்றேன்.... வந்தா என்ன?” என்று முனகினான்.
“இல்லை, நான் வரலை.. ப்ளீஸ், நீங்க கிளம்புங்க” என்றாள் அடமாக. அதற்குமேல் அவளை வற்புறுத்த அவனுக்கு மனமில்லை. என்ன பெரிய போகட்டுமே எனக்கென்ன என்று கோபித்துக்கொண்டு சட்டென்று கிளம்பி சென்றுவிட்டான். அவன் அவ்வாறு போவதைக் கண்டு அவளுக்கு வருத்தமாகிப் போனது. ஆனாலும் என்ன செய்வாள் அவனோடு அந்த நேரத்தில் இந்த அலங்காரத்தில் தனியே போவது அவளுக்கு ஏனோ கூச்சமாகப் போனது. அவள் மீது அவளுக்கே நம்பிக்கை இருக்கவில்லை. அதனால்தான் மறுத்துவிட்டாள்.

அடுத்த நாள் ஆபிசில் சந்தித்த போதும் அவளை விஷ் செய்ததோடு சரி, மேற்கொண்டு ஒன்றும் அவன் பேச விழையவில்லை. வேலை விஷயமாக மட்டுமே பேசினான்.... அவளுக்கு அது என்னவோ போல இருந்தது....
மாலை வரை கண்டவள், இருக்கட்டுமே, இதுவும் நல்லதுக்குதான்..... இந்த ஒதுக்கம் அவசியம்..... அவன் யார் எனக்கு, நான் யார் அவனுக்கு.... எந்த ஓட்டும் உறவும் இல்லை..... அவன் என் பாஸ், அவ்வளவு மாத்திரமே..... இப்படியே இருப்போம்’ என்று ஒதுங்கினாள்.

இப்படியாக இரண்டு மாதங்கள் கழிந்தன. அவளும் இறங்கி வரவில்லை, அவனுக்கு இறங்கிபோய் அவளிடம் இசைந்து பேச தயங்கினான். இருவரும் தங்கள் கூச்சத்தில் அப்படியே தயங்கிக்கொண்டு இருக்க நாட்கள் மாதங்களாகியது.

சித்துவின் மனது பித்தாகியது. ஷாலுவை விரும்பியதும் சங்கீதாவை மறுத்ததும் அவன் வாழ்வின் ஒரு கசப்பான தருணமாக கருதினான். அதிலிருந்து விடுபட்டு புதிய மனிதனாக சங்கீதாவின் வேண்டுகோளுக்கு இணங்க தன்னை தானே மாற்றி அமைத்துக்கொண்டு வாழ ஆரம்பித்தான். தினம் தினம் சங்கீதாவை கண்டு மனம் அவனையும் அறியாமல் அவள்பால் செல்லத் துவங்கி இருந்தது. அடக்கும் வழி தெரியாமல் அந்த எண்ணங்களை வளர்க்கவும் முடியாமல் தவித்தான். அவளிடம் அதைப்பற்றி சொல்ல அறவே பயந்தான். தன்னால் புறக்கணிக்கப் பட்டவள் திரும்ப தன்னை ஏற்பதாவது, தன்னை அவள் வெட்டி போட்டாலும் ஆச்சர்யப்பட முடியாது என்று அஞ்சினான். ஆனால் அவளில்லாமல் தனக்கு இனி ஒரு வாழ்வு இல்லை என்று உணர்ந்தான். ஆனால் அவள் கிடைக்கமாட்டாள் என்றும் அறிந்தான். மனம் அல்லல்பட்டது. அரும்பாடுபட்டு உறங்கினான். உறக்கத்திலும் அவள் ஞாபகம் மட்டுமே சுழன்றது. கனவாக வந்து நின்றது. வெறுத்தான்.
யாரிடமும் இதைப்பற்றி பேசக் கூட தைரியமின்றி தவித்தான். அப்போதெல்லாம் அவனுக்கு ஒரே துணை அவளின் புகைப்படங்கள்.... அதையே மாற்றி மாற்றி பார்த்தவண்ணம் மகிழ்ந்து கொள்வான்.


4 comments:

  1. Oh my god..Love is in the air! Fantastic narration..only missed the Kalyana Sappadu...hahaha!!

    ReplyDelete

  2. ரொம்ப அழகாக எழுதி உள்ளீர்கள்! Like ur writting style.

    ReplyDelete
  3. Going very well.only I feel men need not be shown as taking support of alchohol whenever depressed.what should a woman do then?.

    ReplyDelete