Saturday 11 August 2018

NESAMULLA VAANSUDARE - 5

“ரொம்ப தாங்க்ஸ்மா, என்னமோ திடீர்னு தலை சுத்தரா மாதிரி இருந்துது” என்று அவளை பார்த்தாள். “நீ, நீ... சங்கீதா தானே?” என்றார். அப்படி கேட்டபோது சங்கீதாவும் அவரை நன்றாக பார்த்தாள். ஆம் அவள் சித்துவின் தாய் மரகதமே தான்.
“ஆமாம் ஆண்ட்டி, நான் சங்கீதாதான்.... நீங்க எப்படி இங்க, நல்லா இருக்கீங்களா, தனியா வந்தீங்களா, உடம்பு சரியில்லையா?” என்றாள் மரியாதையுடன்.
“ஆமாம்மா, என் பிள்ளைக்காக வேண்டிக்க தனியாத்தான் வந்தேன்.... நீ எப்படிமா இருக்கே.... உன் குடும்பத்தில் எல்லாரும் நல்லா இருக்காங்களா?” என்று கேட்டார்.
“நல்லா இருக்காங்க ஆண்ட்டி” என்றாள்.

“ஆனா உன் வாழ்க்கையே பாழாக்கிட்டான் மா எம் பிள்ளை” என்று கண்ணீர் உகுத்தார்.
“ஐயோ, அதை எல்லாம் மறந்துடுங்க ஆண்ட்டி.... என்னமோ தெய்வ செயல்.... விட்டுடுங்க” என்றாள்.
“இல்லைமா நடந்து போனவை எதையும் நாங்க யாரும் மறக்கல, நிம்மதியாகவும் வாழல.... நீயும் உன் குடும்பத்தாரும் கூட நினைச்சிருக்கலாம், நாங்க நிம்மதியா இருக்கோம்னு..... இல்லைமா. நாங்க மட்டும் இல்லை, தப்பை பண்ணின எம் பிள்ளையும் நிம்மதியா சந்தோஷமா இல்லை” என்றார் அவர் வேதனையுடன். அவள் மெளனமாக இருந்தாள். அவள் அவனிடம் தான் வேலை செய்கிறாள் என்று அவருக்கு தெரியாது என்று உணர்ந்தாள்.

“சொன்னா நீ நம்ப கூட மாட்டே சங்கீதா, அவ்வபோது அவன் எங்கேயோ வெறித்தபடி உக்காந்திருப்பான் மா.... “என்னடா அந்த ஓடிப்போனவ நினைப்பான்னு?” நான் கூட ரெண்டு மூணு தரம் திட்டினேன்..., அவசரமா மறுத்து, “இல்லைமா, அவள என்னால மறக்க முடியாதுங்கறது உண்மைதான், ஆனா நான் இப்போ கலங்கறது சங்கீதாவ நினைச்சு.... அவ வாழ்க்கையை நான் பாழ் பண்ணீட்டேன் மா.... கல்யாண ரிசெப்ஷன் வரை வந்து நிறுத்தீட்டேனேமா, அவளுக்கு வேறயா திருமணம் நடக்குமா, இதை காரணம் காட்டி யாராச்சும் கட்டாம போயிட்டா, அந்தப் பெண் பாவம் என்னை சும்மா விடாது.... அவதான் எவளோ நல்ல பொண்ணுமா, என் கஷ்டம் புரிஞ்சு என் மனசு புரிஞ்சு ஒத்துகிட்டு ஒதுங்கி போய்டாளே மா....” என்று ஓயாமல் புலம்புவான். நான் கூட ஆச்சர்யப்பட்டிருக்கேன்” என்றார் அவர். சங்கீதாவிற்கு திகைப்பாக இருந்தது. உள்ளூர அவன் மேல் கனன்று கொண்டிருந்த நீறு பூத்த நெருப்பு கொஞ்சம் நீர் பட்டு அணைந்தார்போல மனம் லேசாகியது.

“நடுவால போன சில மாசமா நல்லபடியா கொஞ்சம் மகிழ்ச்சியா சிரிப்போட கலகலன்னு இருந்தான் மா..... அப்பறம் என்னாச்சோ ஏதாச்சோ, தாடியும் மீசையுமா வாழ்க்கையே வெறுத்துட்டா மாதிரி இருக்கான் என் மகன்.... கல்யாணத்துக்கு முந்தியும் பின்னாடியும் குடிச்சான் தான்.... அதன்பின் இந்தக் கம்பனியை கவனிச்சு வெற்றிகரமா நடத்தி வரும்போது கொஞ்சம் நிறுத்தி இருந்தான்.... இப்போ ரொம்ப அதிகமா குடிக்கிறான் மா.... எனக்கு பயமா இருக்கு... அவனுக்கு ஏதானும் ஆயிடுமோன்னு நான் கலங்காத நாளில்லை..... அதை கொட்டி அழத்தான் நான் அம்மன்கிட்ட வந்தேன் சங்கீதா” என்று அழுதார்.

“என்ன ஆண்ட்டி, நீங்களே இப்படி கலங்கினா எப்படி?” என்று தேற்றினாள். “எல்லாம் சரியாயிடும் கவலை படாதீங்க” என்றாள்.
“என்னமோ தெய்வ வாக்கு மாதிரி சொல்றே, உன் மனசார அவனை மன்னிச்சுட்டியா சங்கீதா, அப்போதான் அவனுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமையும்னு நான் நம்பறேன் மா” என்றார் அவள் கைகளை பிடித்துக்கொண்டு.
“ஐயோ, என்ன ஆண்ட்டி நீங்க... எனக்கு அவர்மேல கோவம் எல்லாம் ஒண்ணுமில்லை..... நீங்க விசனபடாதீங்க” என்றாள்.

“வெளியே சுற்றி திரிந்து குடிச்சுட்டு பாதி ராத்திரிக்கு மேல வீட்டுக்கு வரான் மா..... இவர்தான் கண்டிச்சு, “என்ன குட்டிச்சுவரோ அதை வீட்டிலேயே பண்ணு, நாங்க என் கண் எதிர்ல நீ இருக்கேன்னு நிம்மதியாகவாவது இருப்போம்னு” திட்டினார்..... இப்போ மாடியிலேயே குடியும் குடித்தனமுமா இருக்கான்மா.... என்ன நடந்துதோ தெரியல, ராத்திரி பொழுது சாப்பிடறதே இல்லை.... வெச்ச சாப்பாடு காலையில அப்படியே திரும்பி வருது.... காலை உணவு மட்டும்தான் எனக்காக கொஞ்சம் கொரிக்கறான்..... மதியம் என்ன செய்யறானோ. சில நாள் சாப்பாடு அப்படியே வருது, சில நாள் கொஞ்சம் சாப்பிட்டிருக்கான்.... இப்படி வயிற்றை காயப் போட்டு குடியும் சேர்ந்தா அவன் உடம்பு என்னாகும்னு நீயே யோசிமா” என்றார்.

அவளுக்கு என்ன சொல்வதென தெரியவில்லை. ஆனால் ஒன்று உறுதியாக எண்ணினாள் அவனிடம் பேச வேண்டும்... சரி செய்ய முயல வேண்டும். அவன் அவளுக்கு யாரோதான், ஆனால் இந்தத் தாயின் கண்ணீர், அதற்காக செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள்.
“சரி மா நீங்க கலங்காதீங்க, கிளம்புங்க... எல்லாம் நன்மையிலே முடியும்” என்று அனுப்பி வைத்தாள் அவளும் வீடு திரும்பினாள்.

அடுத்த நாள் அவனை ஆபிசில் கண்டாள்.
“நான் உங்க கூட கொஞ்சம் பேசணும் சித்து” என்றாள் மாலை வேலையானபின். அவனை சித்து என்று முதன் முதலாக அழைத்தாள் என்று உணர்ந்தவன், ஆச்சர்யமாக அவளை பார்த்தான்.
“சொல்லு சங்கீதா” என்றான்.
“இங்கேயே பேசலாமா, இது ஆபிஸ் விஷயம் இல்லை, பர்சனல்” என்றாள் விரல்களை நீவி விட்டபடி.
“என்கூட வா, ஏதானும் காபி ஷாப்பில் அமர்ந்து பேசலாம், உனக்கு ஆட்சேபணை இல்லைனா” என்றான். சரி என்றாள். இருவருமாக கிளம்பி சென்று அமர்ந்தனர். அவளே துவங்கட்டும் என்று பேசாமல் இருந்தான். ஆனால் மனசுக்குள் ஒரு குளுமை நிறைந்தது.
அவளோடு அப்படி அமர்ந்திருப்பது பிடித்திருந்தது. அதற்குமேல் யோசிக்க மனமில்லாமல் மௌனமாகி இருந்தான்.

“நீங்க என்னை உங்க பிரெண்ட் னு சொன்ணீங்களே அன்னிக்கி ஒரு நாள், அது உண்மையா?” என்று கேட்டாள்.
“அதில் என்ன சந்தேகம், நீ என்னை உன் பிரிண்டாகக் கருதினால் நான் ரொம்ப பாக்கியம் செய்தவனாக இருப்பேன்” என்றான் உணர்ச்சி பொங்க.
“எனக்காக வேண்டி ஏதேனும் செய்ய காத்திருக்கேன்னு சொன்னீங்களே அதுவும் உண்மைதானா?” என்றாள். அவளை ஆச்சர்யமாக பார்த்தபடி “கண்டிப்பாக, எங்கம்மா மேல சத்தியமா” என்றான்.

“அப்போ நீங்க குடிக்கறத நிறுத்தணும். கம்ப்ளீட்டா நிறுத்தணும், ஒழுங்கா உங்க வேலைகளை கவனிச்சு மேலும் மேலும் இந்தக் கம்பனிய உசத்தணும், நீங்க பழைய உற்சாகமான சந்தோஷமான சித்துவா மாறணும்... இதுதான் நீங்க எனக்கு செய்யணும்னு நான் கேட்டுக்கறேன்.... செய்வீங்களா, முடியுமா உங்களால?” என்றாள் சவால் விடுவதுபோல. அவன் அசந்து போனான்.
அவளை ஆச்சர்யமாகப் பார்த்தான்.

“இதெல்லாம் உனக்கெப்பிடி தெரியும்னு கேட்கறீங்க, அப்படிதானே.....?”
“ஆம்” என்றான் திகைப்பு குறையாமல்.
“கொஞ்சம் எனக்காகவே தெரியும், நாந்தான் ஆபிசில் தினமும் பார்க்கிறேனே.... மிச்சம் உங்க அம்மா மூலமா தெரிஞ்சுது.... நேத்து கோவிலில் பார்த்தேன்.... மயங்கி விழ இருந்தாங்க, தனியா கோவிலுக்கு வந்திருந்தாங்க.... பிடிச்சு அமர்த்தினேன்.... மனசு விட்டு பேசினாங்க அழுதாங்க, உங்களுக்காக உங்க வாழ்க்கை பாழாகிட கூடாதேன்னு தவிக்கிறாங்க, உங்களுக்காக வேண்டிக்கதான் கோவிலுக்கே வந்திருன்தாங்க.... தேற்றி அனுப்பி வெச்சேன்....”

“அவங்களுக்கு பிரஷர் இருக்குனு தான் என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சீங்க ஆனா பின் வாங்கீட்டீங்க.... அது முதல் தப்பு.... இப்போ அந்தப் பெண் அப்படி நடந்துகிட்டதுக்காகவும் உங்க அம்மாவையே தண்டிக்கிறீங்களே, இது எந்த விதத்துல நியாயம்.... தற்கொலை பண்ணிக்க மாட்டேன்னு சொன்னீங்க, ஆனா தினமும் குடிச்சா, அது கொஞ்ச கொஞ்சமா தற்கொலை பண்ணிக்கறதுக்கு சமானம் தானே..... இதுலயானும் சட்டுனு உயிர் உடனே போயிடும், நீங்க குடிக்கிற விஷம், கொஞ்ச கொஞ்சமா உங்களை கொல்லுமே.... அதுக்கப்பறமா எப்பிடி நீங்க உங்க பெற்றோர், உங்க கம்பனி தொழிலாளிகள் னு கவனிச்சிப்பீங்க சித்து?” என்று ஒவ்வொன்றும் டான் டான் என்று அவன் முகத்தின் எதிரே கேட்க, அவன் வெட்கி அசிங்கப்பட்டு தலை குனிந்து அமர்ந்திருந்தான். மெதுவான மெல்லிய குரலில் தான் பேசினாள். ஆனால் ஆணித்தரமாக பேசினாள்.

“நான் என் தப்பை இன்னமும் உணரலை. மேலே மேலே தப்புகள் செய்துகிட்டே போறேன் சங்கீதா” என்றான்.
“நீ கேட்டது உடனே நடக்கும்..... அது இந்த நிமிஷத்துலேர்ந்து அமலுக்கு வருது..... இனி நான் குடிக்க மாட்டேன் சங்கீதா, உன் மேல் ஆணை. மன்னிச்சுக்க, என் தாய் மேல் ஆணை.... உன் மேல் ஆணை வைக்க நான் யார், எனக்கென்ன உரிமை இருக்கு.... நான் இனி புது மனிதன்.... பழைய சித்துவா மாறி என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நிம்மதியையும் சந்தோஷத்தையும் குடுப்பேன். என் கம்பனிய வளர்ப்பேன்.... இது சத்தியம்” என்றான் சட்டென்று அவள் கைகளை பிடித்து.

அவளுக்கு வெலவெலத்து போயிற்று..... கையை மெல்ல உருவிக்கொண்டாள். “அண்ட் தாங்க்ஸ் சங்கீதா..... உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே எனக்கு தெரியலை.... என்னை என் தப்பை அன்னிக்கும் இன்னிக்கும் மன்னிச்சு என்னை உணர வெச்சுட்டே, என்னை மன்னிச்சுட்டே..... ரொம்ப ரொம்ப நன்றி சங்கீதா” என்றான் உணர்ச்சி வேகத்தில் அவள் கை பிடித்து அதில் தன் முகம் பதித்து கண்ணீர் சிந்தினான். அவளுக்கு சங்கடம் ஆகியது.

“இவளோ பெரிய வார்த்தை எல்லாம் வேண்டாம் சித்து.... நீங்க மாறினா அதுவே போதும்.... அதுவும் எனக்காக இல்லை, உங்க அம்மாவுக்காக” என்றாள்.
“நான் கிளம்பறேன்” என்றாள்.
“இரு போலாம்.... நான் கொண்டு விடறேன்” என்றான்.
“இல்லை இருக்கட்டும்” என்றாள்.
“யாரும் எதுவும் சொல்வாங்கன்னு பயமா சங்கீதா?” என்று கேட்டான்.
“அப்படி இல்லை” என்று தயங்கினாள்.
காபி குடித்து முடித்தபின் வண்டியை கிளப்பிக்கொண்டு அவள் வீட்டருகே விட்டுச் சென்றான்.
“இது யாரு, உன்னை அப்பப்போ வீட்டுல கொண்டு விடறது, இது எதுவும் எனக்கு சரியா படலையே, எனக்கு பயமா இருக்கு” என்றாள் சரோஜா.
“அம்மா, நான் உன் பொண்ணுமா” என்று அவரிடம் கூறிவிட்டு தன்னறைக்குள் சென்றுவிட்டாள் சங்கீதா.

அடுத்த நாள் முகம் மழித்து எப்போதும் போல டிப் டாபாக பளிச்சென்ற புன்னகையுடன் ஆபிஸ் வந்தான் சித்து. அவள் வேலையாக அவன் அறைக்கு செல்லவும் அவளை பார்த்து பளீரென்று சிரித்தான்.
“என்ன இப்போ ஓகேவா?” என்றான். அவள் புன்னகையுடன் ஓகே என்று தலை அசைத்தாள். உற்சாகமாக வேலை பார்த்தான். வேலையின் நடுவே ஏதோ பாட்டை மெலிதாக விசில் அடித்தான். அவனை ஆச்சர்யமாக நிமிர்ந்து பார்த்தாள். பக்கத்தில் இருந்த பர்சனல் ஆபிசரை கண் காண்பித்து அவனை அடக்கினாள். அவனும் கப்பென்று நிறுத்தினான் அவளை பார்த்து அசட்டு சிரிப்பு சிரித்தான்.

பின்னோடு ஆபிஸ் சகஜ நிலைக்கு வந்தது. இப்போதெல்லாம் சித்து நேரத்திற்கு ஆபிஸ் வருகிறான், அனாவசியமாக எரிந்து விழுவதோ யாரையும் திட்டுவதோ இல்லை. ஒரு மகிழ்ச்சியான வேலை சூழல் ஏற்பட்டது. அவன் தனிமையில் அமர்ந்து இதை எல்லாம் யோசிக்கும்போது அவனையும் அறியாமல் புன்முறுவல் பூத்தது.

இதற்கெல்லாம் காரணம் சங்கீதா.... என்ன மாதிரியான பெண் இவள்.... நான் அவளுக்கு கொடுமைகளே செய்திருக்கிறேன், அவள் எனக்கு நன்மைகளையே செய்து வருகிறாள்.... அவளை மணக்க நான் குடுத்து வைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.... அவள் வாழ்வானும் செழிக்க வேண்டும்.... ஷாலு போன்ற பெண்களுக்கு மத்தியில் சங்கீதா போன்ற பெண்களும் இருக்கின்றனரே” என்று வியந்தான். அதை அவளிடம் சொல்லவும் செய்தான்.

“ப்ளீஸ் என்னை யாரோடும் கம்பேர் பண்ணினா எனக்கு பிடிக்காது.... அது அவங்க மனசு, நான் இப்படித்தான்.... அதுக்காக நான் ஒண்ணும் பெரிசா பண்ணீடலை.... இதுவும் என் கடமைதான்” என்று கூறிவிட்டு சென்றாள். அவள் போவதையே பார்த்திருந்தான். அவள் அவன் மனதில் இன்னமும் உசந்தாள்.

அன்று வீட்டிற்குச் சென்றவன் அவனது அறை ஒரே குப்பையாக இருக்கிறதே என்று சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.... வேண்டாதவற்றை நீக்கி குப்பையில் போட்டான். வேண்டியவற்றை அழகாக வேலையாள் துணைகொண்டு அடுக்கி வைத்தான்.... அப்போது அவனது திருமண சிடி கண்ணில் பட்டது.

திருமணம் முறிந்து போனதும் அந்த புகைப்படக்காரரைக் கண்டு முழு பணமும் குடுத்து புகைப் படங்கள் எடுத்தவரை சிடியில் போட்டு வாங்கினான். அதோடு மட்டுமல்லாமல் அவரது டிஜிடல் காமிராவின் மெமரி கார்டையும் பணம் குடுத்து வாங்கிவிட்டான். அந்தப் புகைப்படங்கள் யார் கண்ணிலும் அனாவசியமாக பட்டு சங்கீதாவிற்கு எந்த பின் விளைவுகளும் ஏற்படக்கூடாது என்று தீர்மானமாக வேலை செய்தான். இதோ அந்த சிடி தான் இது. அதை எடுத்து தனியாக தன் லாப்டாபின் அருகே வைத்தான். மற்ற சுத்தபடுத்தும் வேலைகளை முடித்து போய் குளித்து முடித்து பிரெஷாகி வந்து அமர்ந்தான்.

அன்றிரவு சாப்பிட்டுவிட்டு ஏதோ புத்தகத்தை புரட்டிக் கொண்டிருக்கும்போது அந்த சிடியின் நினைப்பு வந்தது. அதை எடுத்து தன் லாப்டாப்பில் சொருகினான். படங்கள் அவன் கண் முன்னே விரிய ஆரம்பித்தன. ஒவ்வொன்றாக ஆழ்ந்து பார்த்திருந்தான். மனதிற்குள் ஏதோ சந்தோஷம் புல்லரித்தது, அதே சமயம் ஏதோ ஏக்கம் சோகம், கிடைக்காத பொம்மையை நினைத்து பிள்ளை ஏங்குவது போல ஏங்கினான். சங்கீதாவை ஒவ்வொரு படத்திலும் ஆழ்ந்து பார்த்தான். மிக அழகாக இருந்தாள். நளினமாக திகழ்ந்தாள்.... அவளது சிரிப்பு கொள்ளை அழகாகத் தோன்றியது....
‘என்ன ஒயிலாக இருக்கிறாள்.... நல்ல உசரம் அதற்கேற்ற உடல்வாகு.... இதிலானும் ஒல்லி என்று கூறும்படி இருக்கிறாள்.... ஆனால் இன்று நேரில் இன்னமும் சற்றே பூசினார்போல ஆகி மிகவும் அழகாக இருக்கிறாள்’ என்று தோன்றியது.

‘டேய் அடங்குடா, நீ அவளை புறக்கணித்தவன், அவள் இன்னமும் உன்னை முழுவதுமாக மன்னிக்க கூட இல்லை..... நீ காற்றில் பறக்காதே’ என்று தன்னை அடக்கிக்கொண்டான். மொத்த படங்களையும் பார்த்து முடித்தான். அதில் அவன் மனதுக்கு பிடித்தமான பத்து படங்களை லாப்டாப்பில் ஒரு தனி ப்ரைவேட் போல்டரில் போட்டு செவ் செய்துகொண்டான்.... என்னமோ அந்த திருட்டுத்தனம் இனித்தது.... அந்த சந்தோஷத்துடன் தூங்கி போனான்.

காலையில் குளித்து ரெடியாகி விசில் அடித்தபடி நாலு நாலு படிகளாக தாவி இறங்கி வந்த பிள்ளையை கண்டு பெற்றோர் மனம் கனிந்தது.
“அம்மா, இன்னிக்கி எப்படி இருக்கு உடம்பு?” என்று அவரை கட்டிக்கொண்டான்.
“எனக்கென்னடா ராஜா, நான் நல்லா இருக்கேன், உன் வாழ்கையை சரி செய்துட்டா போதும்.... நீ நல்லா இருந்தா அதுவே எனக்கு பெரிய மகிழ்ச்சி” என்றார்.
“ஒ அம்மா” என்று அவரை மேலும் இறுக கட்டிக்கொண்டான். பின்னோடு பெற்றோரோடு அமர்ந்து காலை உணவை ருசித்தான். ஆபிசிலும் உற்சாகமாக இருந்தான்.

“ஹே சங்கீதா, கவனிச்சியா, நம்ம பாஸ் ரொம்பவே மாறீட்டாரு இல்லபா, இப்போ எல்லாம் திட்டு இல்லை, கடினமான முசுட்டு முகம் இல்லை.... ஹீரோ இன்னமும் சூப்பர் ஹீரோ ஆகிட்டாரு” என்றாள் ப்ரீத்தி எப்போதும்போல வாயாடியாக.


2 comments: