Tuesday 14 August 2018

NESAMULLA VAANSUDARE 8

அதற்காக இன்னொருவன் முன் போய் நிற்பதா என்று திணறினாள்... மெல்ல தலையை மட்டும் அசைத்தாள்.... ஆபிசிற்கு லீவ் என்று தெரியப்படுத்தினாள். மாலை நான்கு மணிக்கு தாயும் மகனுமாக மூர்த்தி வந்தான்.... அவள் மிதமாக ஆபிஸ் போவதுபோலத்தான் தன்னை ரெடி செய்துகொண்டு இருந்தாள். சிம்பிளான புடவை, எப்போதும் தன் மீது கிடக்கும் நகைகள் என்று.... சிற்றுண்டியுடன் அவர்கள் முன்னே செல்ல கால் தடுமாறியது,... துவண்டு விழுந்து விடுவோமோ என்று பயந்தாள்.... தைரியத்தை வரவழைத்தபடி முன்னேறினாள்..... அங்கே சென்று சிற்றுண்டியை கொடுத்துவிட்டு கை கூப்பி வணங்கிவிட்டு தந்தையின் அருகில் அமர்ந்தாள்.... மூர்த்தியை கண் எடுத்தும் நிமிர்ந்து பார்க்கவில்லை.

அவனே ஏதோ பேசினான் சில கேள்விகள் கேட்டான்.... அவனது தாய் மிகவும் அன்பாக அமைதியாக இருந்தார்.... தனிமையில் பேச அனுமதி கேட்டான்.... அவள் திடுக்கிட்டு தந்தை முகம் கண்டாள்.
“போம்மா பரவாயில்லை” என்று அவளை அனுப்பினார்.... அவளது அறையில் சென்று அமர, “என்னை நிமிர்ந்து நீங்க பார்க்கவெ இல்லையெ, பார்தாதானே என்னை பிடிச்சிருக்கான்னு சொல்ல முடியும்.... நான் என் மனசை சொல்லட்டுமா, எனக்கு உங்கள, உன்னை... ரொம்ப பிடிச்சிருக்கு.... உனக்கு நடந்த அவமானம் எல்லாம் உங்கப்பா சொன்னார்..... அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை, மறந்துடு... நாம இனி புது வாழ்வா ஆரம்பிப்போம்....”

“உனக்கு என்னை பிடிச்சிருக்கும் பட்சத்தில் நான் உன்னை திருமணம் செய்துகொள்ள முழு மனசோட சம்மதிக்கிறேன்.... நீ என்னிடம் ஏதேனும் கேட்கணும்னா கேட்கலாம்” என்றான் . அவனை ஒரு நிமிடம் ஏறெடுத்து பார்த்துவிட்டு கவிழ்ந்து கொண்டாள்.
“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை.... அப்பா திடீர்னு இந்த வரன் னு சொல்லி ஏற்பாடு பண்ணீட்டாரு.... என்னால பழைய நினவுகள்லேர்ந்து மீண்டு இதை ஏத்துக்க தெரியல.... நான் கொஞ்சம் யோசிக்கணும்.... உங்க மீது எந்த குறையும் இல்லை.... நீங்க நல்லா இருக்கீங்க, நல்ல வேலை சம்பளம், குணம்னு அப்பா சொன்னாரு.... எனக்கு தயவு செய்து கொஞ்சம் அவகாசம் கொடுங்க” என்றாள் தரையை பார்த்தபடி. அவன் மெல்ல சிரித்தான்.
“சரி அப்படியே ஆகட்டும்.... இது என்னோட கார்ட், நீ முடிவு செய்ததும் ஆம் என்றாலும் இல்லை என்றாலும் என்னை அழைத்து சொல்லணும் சரியா” என்றான். சரி என்று வாங்கிக் கொண்டாள்.

அவர்கள் சென்று விட்டார்கள்.
“போய் விவரம் சொல்றோம்னு சொல்லி இருக்காங்கம்மா, பாப்போம்” என்றார் அவளது தந்தை யோசனையுடன். அவளுக்கு புரிந்தது அவள் அவகாசம் கேட்டதால் அவனும் அவகாசம் வாங்கி இருக்கிறான் என்று.... நல்ல மனது என்று எண்ணிக்கொண்டாள்.

அடுத்த நாள் ஆபிசில் சித்துவை சந்தித்தாள்.
“என்னாச்சு நேத்து திடீர்னு லீவ்?” என்றான் அவனுக்கு உள்ளே ஒரே உதைப்பு. “என்னை பெண் பார்க்க மூர்த்தினு ஒருத்தர் வந்தாரு” என்றாள் அவனை ஓரக்கண்ணால் கண்டு
“என்னது” என்று அதிர்ந்தான். உடனே மறைத்துக்கொண்டான்.
“ஒ, அப்பறம் என்னாச்சு திருமணம் முடிவாகிடுச்சா?” என்றான் அவசரமாக. “இன்னும் இல்லை.... நான் என் முடிவ சொல்ல கொஞ்சம் அவகாசம் கேட்டிருக்கேன், அதனால் அவரும் எங்கப்பாகிட்ட ஒண்ணும் சொல்லாம டைம் கேட்டிருக்காரு” என்றாள்.
“ஒ என்று தளர்ந்தான். ‘இவனுக்கென்ன இவ்வளவு டென்ஷன் நானல்லவா படுகிறேன் டென்ஷன்’ என்று எண்ணிக்கொண்டாள்.

நான்கு நாட்கள் இப்படி செல்ல மூர்த்திக்கு என்னவென்று பதில் சொல்வதென்று யோசித்து தலை காய்ந்தது. அன்று மாலை அவள் கிளம்பும் முன் சித்துவிடம் ஒரு ரிப்போர்ட் ஒப்படைக்க வந்திருந்தாள்.
“என்ன முடிவு பண்ணே?” என்றான்.
“இன்னும் ஒண்ணும் தோணலை, அதான் ஒரே டென்ஷனா இருக்கு” என்றாள்.
அப்போது டீயுடன் வந்த ஆபிஸ் பையன் “மேடம், உங்கள பார்க்க மூர்த்தினு ஒருத்தர் வந்திருக்காரு, நீங்க மீட்டிங்ல இருக்கீங்கனு வரவேற்புல உக்கார வெச்சிருக்கேன்” என்று செய்தி சொன்னான். இருவருமே அதிர்ந்தனர்.
“நான் வரேன், அவர்கிட்ட என்ன சொல்றதுன்னு தெரியல” என்றபடி எழுந்தாள். அவனும் கூட எழுந்தான்.
“இரு நானும் வரேன்” என்றபடி எழுந்தான்.
“நீங்களா என் கூடவா, எதுக்கு, வேணாமே.... எனக்கு அசலே பயமா இருக்கு” என்றாள் கெஞ்சுதலாக.
“ஒண்ணும் பயமில்லை வா” என்று அவளோடு நடந்தான். வாசலில் மூர்த்தியை எதிர் கொண்டனர்.
“ஹலோ சங்கீதா” என்றான் அவன்.
“ஹலோ” என்றாள். “இது எங்க எம் டி” என்று அறிமுகம் செய்தாள்.
“ஹை” என்று கை கொடுத்துக் கொண்டனர்.
“இப்போ ஆபீஸ் முடியற நேரம்தானே, பர்மிஷன் போடறியா... நாம கொஞ்சம் வெளியில போலாமா சங்கீதா, ஒரு கப் காபி?” என்றான் மூர்த்தி,
“ஹான் வெளியிலா, இங்கேயே பேசலாமே” என்று தடுமாறினாள்.
“இங்கேயா, இல்ல நல்லா இருக்காது ப்ளீஸ் கம், நானே வீட்டுல விட்டுடறேன்.... நான் நல்ல பையன் மா... என்னை நம்பி வரலாம்” என்று பளீரென்று சிரித்தான்.
சித்துவை பார்த்து தலை அசைத்துவிட்டு அவனுடன் எழுந்து நடந்தாள். காரில் அவனுடன் அவள் செல்வதை ஒரு வித கையால் ஆகாத தனத்துடன் கண்டிருந்தான் சித்து.

காரில் ஏறி அவனுடன் பயணம் செய்யும்போது இது தகுந்தது அல்ல என்று மனம் கூறியது. சித்துவுடன் செல்லும்போது ஏற்படாத அசௌகரியமான நிலை இப்போது உணர்ந்தாள். தன் மனது அவனைத்தான் நாடுகிறது என்றும் அறிந்தாள். அந்த கணத்தில் தெளிந்தாள்.

“என்ன முடிவு செய்திருக்கே சங்கீதா?” என்று கேட்டான் காபி அருந்திக்கொண்டே.
“மிஸ்டர் மூர்த்தி, என்னை மன்னிக்கணும்.... நான் நல்லா யோசித்தேன்.... என் மன புண் இன்னும் ஆரலைன்னு இப்போதான் எனக்கே புரிஞ்சுது. உங்களைன்னு இல்லை, யாரையுமே இப்போதைக்கு மணக்க முடியும்னு எனக்குத் தோணலை... அதான்.... உங்க மேல எந்த தப்பும் குறையும் நான் சொல்ல வரலை.... நீங்க ரொம்பவே நல்லவர்.... என் கதை தெரிந்தும் என்னை முழு மனசோட ஏத்துக்க முன் வந்தீங்க.... அந்த நல்ல மனசை பாராட்டறேன், ஆனா என்னை மன்னிச்சுடுங்க” என்றாள் நேராக பார்த்து.

“இந்த முடிவுக்கும் உங்க எம் டி சித்தார்த்துக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா?” என்று கேட்டு அவளை அதிர வைத்தான்.
“என்ன சொல்றீங்க?” என்றாள்.
“இல்லை சித்துவ எம் டி அல்லாத தெரியுமா உனக்கு, ஏன் கேக்கறேன்னா, உன்னை என்னோட அனுப்பிச்சுட்டு தன் ஒரு பாகத்தையே தொலைத்தது போல நின்று கொண்டிருந்தார் சித்தார்த்.... ரியர் மிரர்ல நான் அவர் முகத்த பார்த்தேன்..... அதான் கேட்டேன்.... அவர் உன்னை...?” என்று இழுத்தான். இவ்வளவு தூரம் வந்துவிட்டது இன்னும் என்ன என்று துணிந்தாள். காரில் மூர்த்தியுடன் வரும்போதும் அவளுக்கு சித்துவுடன் சில சமயம் வெளியே போனதும் காபி குடித்ததும் அவன் சிரிக்க சிரிக்க பேசியதுமே நினைவில் ஆடியது வேறு உறுத்தியது.

“ஆம் மிஸ்டர் மூர்த்தி, அவர்தான் என்னை முதலில் மணப்பதாக இருந்தது.... அது நடக்கவில்லை.... அவரது கம்பனின்னு தெரியாமையே தான் நான் இங்கே வேலைக்கு சேர்ந்தேன்..... ஒரு நல்ல நட்புறவோடு தான் நாங்க பழகறோம்.... அதுக்கு மேல என்னனு எனக்கும் தெரியாது.... அவருக்கு என்ன எண்ணம்னும் எனக்குத் தெரியாது” என்றாள்.
அவளது வெகுளித்தனத்தை ரசித்தான்.

“ரொம்பவே வெகுளியா இருக்கே சங்கீதா, உன் சித்துவின் கண்ணில் உன் மெல் உள்ள காதல் அப்பட்டமா தெரியுது, இன்னும் அது உனக்கு புரியலைனா, நீ ரொம்பவே குழம்பி இருக்கே, இல்ல குழந்தைத்தனமா இருக்கேனு அர்த்தம்.... எனிவே, உன்னை சந்திச்சதுல ரொம்ப மகிழ்ச்சி, எனக்குதான் குடுத்து வைக்கலை அவரையானும் சீக்கிரம் பண்ணிக்கோ.... நல்லா இருப்பே, நல்லா வெச்சுப்பாரு” என்றான். அவள் அவனை ஆச்சர்யமாக பார்த்தாள்.
“ரொம்ப தேங்க்ஸ் மூர்த்தி, நீங்க நிஜம்மாவே ஒரு ஜெண்டில்மான்” என்றாள் கை கூப்பி.
“ஹ்ம்ம், ஆனா என்ன பண்றது, அப்படி இருந்தும் நீ கிடைக்கலையே” என்றான் அனுதாபம் போல. அவள் உறைந்தாள்.
“ஹேய் லீவ் இட்.... சும்மா ஒரு ஜோக்காக சொன்னேன்” என்று லேச்சாகினான்.
அவளை வீட்டில் கொண்டுவிட்டுவிட்டு “ஆல் த பெஸ்ட்” என்றுவிட்டு சென்றான்.

அடுத்த இரு நாட்களில் கணேசனை அழைத்து சங்கீதாவின் மனதையும் சித்துவின் மனதையும் புரிய வைத்தான் அவர்களை சேர்க்கும்படி வேண்டினான். அவர் அதிர்ந்து போனார். “ரொம்ப சாரி தம்பி” என்று மன்னிப்பு வேண்டினார்.
“ஐயோ, அதெல்லாம் ஒண்ணுமில்லை விடுங்க அங்கிள்” என்று லேசாக எடுத்துக்கொண்டான்.

அதே வாரத்தில் சித்து கணேசனின் ஆபிசிற்கு மீண்டும் சென்றான்.
“வாங்க” என்று வரவேற்றார். இப்போ அவன் மீது பழைய மரியாதையும் அன்பும் மதிப்பும் தோன்றி இருந்தது. “சொல்லுங்க தம்பி” என்றார்.

“அங்கிள் நான் நேரா விஷயத்துக்கு வரேன், அசலே ஆபிஸ் நேரத்துல உங்களுக்கு அடிக்கடி தொந்தரவு குடுக்கறேன் மன்னிக்கணும்.... எனக்கு சங்கீதாவை ரொம்ப பிடிச்சிருக்கு.... அப்போ சொன்னது வேற, அது உங்களுக்கே தெரியும், இப்போ அவள அறிஞ்சு என்னை அறிஞ்சு தெளிவா யோசித்து நானே எடுத்த முடிவு இது..... நீங்க அவளுக்கு வரன் பார்க்கறீங்கன்னு தெரியும்..... அந்த வரன் ஏன் நானா இருக்கக் கூடாது அங்கிள். அவள் வேற யார் முன்னாடியும் வந்து மணப்பெண்ணாக நிற்பது எனக்கு பிடிக்கலை....”

நான் அவளை மனதார விரும்பறேன் அங்கிள்..... என் சகியை எனக்கே குடுத்துடுங்களேன்” என்றான் தாழ்மையாக. “என்னப்பா சொல்றே” என்று ஆச்சர்யப்பட்டார்.
“யோசிச்சு சொல்லுங்க” என்றான்.
“அவகிட்ட பேசினீங்களா?” என்றார்.
“இல்ல அங்கிள், எனக்கு தைர்யம் இல்லை.... அவ என்னை மறுத்திட எல்லா வாய்ப்பும் இருக்கு அதான்.... நீங்க யோசிங்க, மத்தபடி வேறே வரன் பார்க்கிறது கொஞ்சம் தள்ளியானும் வெய்யுங்க, அதுக்குள்ள நீங்களும் அவளிடம் பேசிப் பாருங்க, நானும் பேச முயற்சி எடுக்கறேன்.... மத்தபடி கடவுள் செயல்” என்றான். அவர் திகைத்தார்.

“சரி, எனக்கு இதுல ஒண்ணும் ஆட்சேபனை இல்லை தம்பி” என்றார்.
“ரொம்ப தாங்க்ஸ் மாமா” என்றான் புன்சிரிப்புடன்.
“நான் பேசறேன் அவளோட” என்றார்.
“வரேன் மாமா” என்று கிளம்பினான் அவர் அவளிடம் இதைப்பற்றி எப்படி பேசுவது என்று ஆலோசித்தார்.

ஒரு மாலை அவளுடன் மீண்டும், கம்பனி.. சித்து... என்று பேச்சை ஆரம்பித்தார்.
“மூர்த்தி வீட்டுல வேண்டாம்னுட்டாங்க, உனக்கேதும் வருத்தமா மா?” என்று கேட்டார்.
“இல்லைப்பா, அவர் ரொம்ப நல்லவர், அவங்களுக்கு என்ன அசௌகரியமோ, விட்டுடுங்க பாவம்” என்றாள்
“ஏம்மா சித்து ரொம்ப மாறீட்டார்னு கேள்வி பட்டேனே?” என்றார்.
“ஓ” என்றாள் புன்னகையுடன்.
“நானும் உனக்கு வரன் பார்க்கலாம்னு தேடிகிட்டு இருக்கேனே, ஏன் அவரையே...” என்று இழுத்தார்.
“என்னப்பா சொல்றீங்க?” என்று அதிர்ந்தாள். “நான் அந்த மாதிரி யோசிக்கலைபா” என்றாள்.
“அவர் உங்களை சந்திச்சாரா உங்ககிட்ட அப்படி ஏதானும் சொன்னாராபா?” என்று கேட்டாள். “ஆமாம்மா சந்திச்சோம், அந்த ஆசை இருக்குமோன்னு எனக்கு தோணிச்சு, ரெண்டு முறை சந்திச்சபோதும் உன்னை பத்தியேதான் பேசினாரு, அதான்...” என்று மேலும் சங்கடமாக இழுத்தார்.
“இப்போதைக்கு எனக்கு கல்யாணமே வேண்டாம்பா, விட்டுடுங்க பாத்துக்கலாம்” என்று எழுந்து சென்றுவிட்டாள். என்ன செய்வது என்று அறியாமல் அமர்ந்திருந்தார் கணேசன்.

“எங்கப்பாவ பாத்தீங்களா?” என்று அவனிடம் அடுத்த நாள் கேட்டாள். அவன் பயந்தான்.
“ஆமா ஏன்?” என்றான்.
“என்ன சொன்னீங்க?” என்றாள்
“இல்லையே ஒன்றும் சொல்லலை” என்றான்.
“என்னை பிடிச்சிருக்குன்னு ஏதானும் பேசினீங்களா?” என்றாள்.
“அது வந்து இல்லை ஆமா” என்றான்.
“நான் உங்கள அப்படி நினைச்சு பழகி பேசினேனா, அப்பறம் ஏன் நீங்களாகவே இப்படி எல்லாம் பேசி எனக்கு பிரச்சினை உண்டு பண்றீங்க.....?”
“ஏன், உனக்கு என்னை...?” என்றான்.
“அதப்பத்தி என்ன இப்போ.... நான் அந்த கண்ணோட்டத்தில யோசிக்கவே இல்லை..... நான் பட்டது போதும், கல்யாணமே வேண்டாம்னு இருக்கு.... அதையே அப்பாகிட்டவும் சொல்லீட்டேன்” என்றாள். அவன் அடங்கி போனான். அவளை மேலும் கோபப்படுத்த விரும்பாமல் மௌனமானான்.
“சாரி சங்கீதா” என்று முடித்தான்.

இப்போது சங்கீதா கம்பனியில் சேர்ந்து ஒரு வருடம் ஆகி இருந்தது. அவளது திறமை கண்டு சிறு பெண் ஆனாலும் அவளை பர்சனல் மேனேஜராக போடலாம் என்று நடராஜன் வெகுவாக பரிந்துரை செய்திருந்தார். அசலே சித்து அவளை ஏற்றம் புரிய காத்திருப்பவன் ஆயிற்றே, உடனே அதை ஒப்புக்கொண்டு அமல் படுத்தினான். அவள் தனது ஆர்டரைக்கண்டு திகைத்து போனாள்.
‘எவ்வளோ பெரிய போஸ்ட், அதற்கு நானா தகுதியானவள், இந்த சித்துவின் வேலையாகத்தான் இருக்கும் இது’ என்று எண்ணினாள். ஆனாலும் மகிழ்ச்சியாக பெருமையாகத்தான் இருந்தது. தந்தைக்கு போன் செய்து கூறினாள். அவரும் சந்தோஷப்பட்டார்.

பின்னோடு நன்றி கூறவென சித்துவின் அறைக்குச் சென்றாள்.
“என்ன இது?” என்றாள். “ரொம்ப நன்றி சொல்ல கடமை பட்டிருக்கேன், ஆனா இது, நீங்க கொஞ்சம் அவசரப்பட்டுட்டீங்களோன்னு தோணுது சர்.... எனக்கு இதுக்கு அனுபவமும் இல்லை வயசும் போதாதோன்னு தோணுது, இந்த பொறுப்ப ஏத்துக்க பயமா இருக்கு” என்றாள். அவன் தான் சொந்தமாக செய்ததாக எண்ணி.

“அதற்கு உனக்கு எல்லா தகுதியும் இருக்கு, நீ நினைப்பது போல இது என் தனிப்பட்ட முடிவு இல்லை.... நடராஜன் சரின் மிகுந்த பரிந்துரையின் பேரில் செய்யப்பட்டது.... அவரே சொல்லீட்டா, பின்ன அப்பீல் எது, நான் அதை உடனே ஒத்துகிட்டு செய்தேன், அதுவரைதான் என் வேலை” என்றான் புன்னகையுடன். “சர் செய்தாரா?” என்று ஆச்சர்யப்பட்டாள்.

“அப்போ நான் பார்த்த வேலை எல்லாம்..?” என்று இழுத்தாள்,
“அதான் சதீஷ அப்பாயின்ட் பண்ணி இருக்கோமே, அவன் பார்த்துப்பான்” என்றான்.
“ஒ அப்படியா சரி” என்றாள்.
“சந்தோஷமா?” என்றான் ஆவலுடன் அவள் முகம் பார்த்து.
“ஆமா, ரொம்ப சந்தோஷம்தான்.... ஆனா ரொம்ப பயமாவும் இருக்கு.... யூனியன் ஆட்கள், அவங்க கோவம், எதிர்பார்ப்பு இதெல்லாம் என்னால முடியுமான்னு...” என்றாள்.
“கண்டிப்பா முடியும், உனக்கு பின்னால நாங்க எல்லாம் இருக்கோமே,... அப்படி தனியா விட்டுடுவேனா என்ன” என்றான் இரு பொருளாக. அன்று நடந்த சண்டைக்கு பின் இப்போதுதான் மீண்டும் சகஜமாக பேசிக்கொள்ள ஆரம்பித்திருந்தனர்.
“நான் வரேன்” என்று எழுந்தாள்.
“ட்ரீட் ஒண்ணும் கிடையாதா சகி?” என்றான்.
“என்ன வேணும்?” என்றாள்.
“எனக்கென்ன தெரியும்” என்றான். அவள் புன்னகையுடன் சென்றுவிட்டாள்.


1 comment: