Wednesday 15 August 2018

NESAMULLA VAANSUDARE - 9

அடுத்த நாள் சதீஷுக்கும் ஆர்டர் போக அவன் இவளிடம் வந்து கலந்து பேசினான். அவனுக்கும் சந்தோஷமே. அவளுடன் வேலை பார்க்க அவனுக்கு கசக்குமா என்ன, இவளை கண்ட நாள் முதல் அவள் துதி பாடிக் கொண்டிருந்தான் அவன். அவன் அவளிடம் ஓவராக ஈஷுவதை இப்போதைக்கு கண்டும் காணாமல் விட்டிருந்தான் சித்து.

“உங்க கூட வேலை செய்ய போறேன்னு நினைக்கும்போதே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு சங்கீதா” என்றான் சதீஷ்.
“எனக்கும் மகிழ்ச்சி” என்றாள் அவள் பொதுவாக.
“நீங்க எதுலயும் தெளிவா இருக்கீங்க, நல்ல ப்ரசன்ஸ் ஆப் மைண்டோட வேலை செய்யறீங்க, இதெல்லாம் நான் உங்ககிட்ட கத்துக்கணும்” என்றான். “ஐயோ அதெல்லாம் ஒண்ணும் இல்லை, ரொம்ப புகழறீங்க” என்று தவித்தாள்.
‘இவன் என்ன இப்படி பல்லை இளிக்கிறானே..” என்று தோன்றியது. வந்த இந்த சில வாரங்களிலேயே அவன் புத்தி தெரிந்து போனது. ஏனோ அவன் ஈஷல் பிடிக்காமல் போனது.

“உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?” என்று கேட்டான் ஒரு நாள்.
‘இப்படியா கேப்பான் ஒருத்தன்?’ என்று கடிந்து கொண்டு, “இன்னும் இல்லை, ஆனா இப்படி கேக்கறது அநாகரீகம்னு நீங்க புரிஞ்சுக்கணும் மிஸ்டர் சதீஷ்” என்றாள் பல்லை கடித்துக்கொண்டு.

“ஒ, ஐ ஆம் சாரி, நான் அதைப்பற்றி யோசிக்கலை..... நீங்க வேத்து மனுஷங்க இல்லையே, நாம ஒண்ணா வேலை செய்யறோம்... அதான் உரிமை எடுத்துகிட்டு சட்டுன்னு கேட்டுட்டேன்” என்று வழிந்தான்.
‘சகிக்கலை, அந்தண்டை போடா ராஸ்கல்’ என்று திட்டலாம் போல வந்தது. ‘கஷ்டம், எனக்குன்னு வந்து சேருது பாரு’ என்று எண்ணிக்கொண்டாள்.

அந்த வாரத்தில் தன் புதிய பொறுப்பினை ஏற்று அதன்படி சீட் மாறி அமர்ந்து தன் வேலையில் கவனமாக இருக்க, சதீஷின் தொல்லை அதிகமானது,
“என்ன செய்யறீங்க, சாப்டீங்களா, நீங்க சமைப்பீங்களா, நானும் உங்களோட சாப்பிடட்டுமா” என்று ஓயாமல் அவளை சுற்றி சுற்றி வந்தான். இது அவளுக்கு சங்கடத்தை கொடுத்தது. இவனை என்ன செய்யலாம் எப்படி ஒழிப்பது சித்துவிடம் கூறினால் விபரீதம் ஆகிவிடும் என்று பொறுத்து போனாள்.

ஆனால் சித்து இதை எல்லாம் கண்டுகொண்டுதான் விட்டு பிடிப்போம் என்று காத்திருந்தான். அவள் பின்னோடு சதீஷ் சுத்த ஆரம்பிக்க,
“என்ன இது மிஸ்டர் சதீஷ், நீங்க ஏன் என் பின்னாடியே எல்லா இடத்துக்கும் வரீங்க,... உங்களுக்குன்னு அலாட் பண்ணி இருக்கிற வேலையை மட்டும் பாருங்க” என்று அவளே ஒரு முறை சற்று சத்தமாக கூற அது சித்துவின் காதை எட்டியது. அவன் ரொம்பவே சங்கீதாவை இம்சை செய்கிறான் என்று உணர்ந்து ஒன்றும் பேசாமல் காரியத்தில் காட்டினான் நடராஜனோடு பேசிவிட்டு அவனை தொழிற்சாலைக்கு மாற்றினான்.

“அங்கே பர்சனல் ஆபிசர் னு ஒருத்தர் இருக்கணும், அதுவும் ஆணா இருக்கறது நல்லது.... எந்த நேரத்திலும் எந்த நிலைமையும் சமாளிக்க வேண்டும், நீங்கதான் சரியான ஆளு.... நாளைலேர்ந்து நீங்க அங்க போயிடுங்க” என்றான்.
“அங்கேயா சார்?” என்றான் முகத்தில் விளக்கெண்ணை வழிந்தது.
“ஆமாம்” என்றான் அழுத்தமாக.

“அப்போ இங்க சங்கீதா மேடமுக்கு ஹெல்புக்கு?” என்றான் என்னமோ இவன்தான் அவளை தாங்குவது போல. சித்துவுக்கு எரிந்தது,
“அவங்களுக்கு எதுக்கு உங்க ஹெல்ப், அவங்க உங்கள விட திறமைசாலி உழைப்பாளி, நீங்க தான் இன்னும் நிறைய கத்துக்கணும், அவங்கள பார்த்துக்க அவங்களுக்குத் தெரியும், நீங்க அவங்களப் பத்தி பேசறதை கவலைப் படறதை நிறுத்திக்கிட்டு உங்க வேலைய மட்டும் பாருங்க” என்றான் கண்டிக்கும் குரலில்
“சரி சர்” என்று கிளம்பினான்.
சங்கீதாவிடம் அவன் போய் முறையிட, ‘அட சித்து பரவாயில்லையே எப்படியோ தெரிஞ்சுகிட்டு இவனை மாத்தீட்டாரே, எனக்காகத்தான் இருக்கும். ஒவ்வொண்ணும் பார்த்து பார்த்து செய்யறாரு’ என்று மகிழ்ந்தாள்.

சித்துவைக் கண்டு நன்றி சொன்னாள்.
“ஆமா, எவன் எவனோ வழியறான் ஈஷறான் அவனையெல்லாம் நீ தாங்கிக்கணும்னு என்ன தலை எழுத்தா என்ன..... அதான் மாத்தினேன் ராஸ்கல்” என்றான் ஆத்திரத்துடன். உள்ளுக்குள் சிரித்துக்கொண்டாள்.
“என்ன அவ்ளோ கோவம்?” என்றாள்,
“என்ன சிரிப்பு, முதல்லியே கண்டிச்சு எட்ட வைக்கறதில்லையா?” என்றான் கடினமாக.
“இது நல்ல கதையா இருக்கே, நானா வாங்க னு பிடிச்சு வழிய சொன்னேன், அவனா வந்து மேல விழுந்தா நான் தான் என்ன பண்ண முடியும்.....”
“என்ன செய்யறதா...., என்கிட்டே வந்து சொல்றது” என்றான் கெத்தாக.
“ஆமா, இப்படி ஆயிரம் நடக்கும்.... ஒவ்வொண்ணுக்கும் உங்ககிட்ட வந்து எல் கெ ஜி பொண்ணு மாதிரி கம்ப்ளேயின்ட் பண்ணினா விளங்கிடும்.... முடிஞ்ச வரை சமாளிச்சேன்” என்றாள்.

அவள் பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் ஆகி இருந்தன. தொழிற்சாலைக்கு வாரம் இரு முறை போய் வந்தாள். பல உதிரி பாகங்களை பொறுத்தி ஆட்டோமொபைல் தொழிலுக்கு அவசியமான பாகங்களை தயாரித்தது அவர்கள் நிறுவனம்.... அப்படி பாகங்களை பொருத்தும் இடத்தில் கன்வேயர் எனும் பெல்ட் சிஸ்டம் இருந்தாலும், கை உரை அணிந்து அந்த பாகங்களை சரியாக எடுத்து அடுத்ததில் போட, எடுக்க, பொருத்த, பாக் செய்ய என்று பல பெண்கள் வேலையில் அமர்த்தப்பட்டிருந்தனர்.... அத்தனை பெண்களும் அங்கே பக்கத்து கிராமங்களில் குப்பங்களில் வாழ்பவர்கள்.... கணவனால் கைவிடப் பட்டவர்கள்,, காதலனால் கைவிடப்பட்டவர், கல்யாணம் ஆகாத முதிர் கன்னிகள், விதவைகள் என்று பார்த்துப் பார்த்து வேலைக்கு அமர்த்தி இருந்தான் சித்து.... அவர்களின் வாழ்வை மலரச் செய்த புண்ணியம் அத்தனையும் அவனையே சாரும்..... அவர்களுக்கு அவன்தான் தெய்வம்...

சங்கீதா பொறுப்பேற்றபின் அவர்களை சென்று கண்டு பேசினாள்.
“நீங்க உங்களுக்கு என்ன குறை இருந்தாலும் என்கிட்டே சொல்லலாம்..... பயப்படாம என்கிட்டே வந்து உங்க புகார்கள கூறலாம்..... அது மேனேஜ்மென்ட் பத்தினதாகவோ மற்ற தொழிலாளர்கள பற்றியதாகவோ எதுவாக இருந்தாலும் சரி, கவலையோ பயமோ வேண்டாம்..... நேர்ல சொல்ல தயக்கமா இருந்தா, இதோ இந்த புகார் பெட்டி வெச்சிருக்கோம், அதுல எழுதி போடலாம்..... உடனே நடவடிக்கை எடுக்கப்பாடும்” என்று உறுதி கூறினாள். அதற்குப் பிறகு தான் மளமளவென பல புகார்கள் வந்து குவிந்தன. கேள்விப்பட்ட சித்துவுக்கே மனம் பதறியது.
“இதை உடனே சரி பண்ணனும் சங்கீதா” என்று வேண்டிக்கொண்டான்.


அங்கே ஒரு இளம் வயது வேலை ஆள் பெண்கள் இருக்கும் பக்கமே சுற்றிக்கொண்டும் கமென்ட் அடித்துக்கொண்டும் மேலே விழுந்து கொண்டு அசிங்கமாக நடந்து கொண்டான் என்று பல புகார்கள் வந்திருந்தன..... முன்பு இதை மேலிடத்தில் எப்படி சொல்வதென யோசித்த பெண் பணியாளர்கள் இப்போது இவள் பெண்ணாக இருந்ததால் இலகுவாக கூற முன்வந்தனர்.

அவள் உடனடியாக அவனை அழைத்து இரு முறை வார்ண் செய்தாள். அவன் அடங்கிய பாடில்லை, கூட இவளையுமே அப்படி பேசத் துவங்கினான். சித்துவின் பார்வைக்கு எட்டும்படி ஒரு மெயில் அனுப்பினாள். பின்னோடு பொறுக்க முடியாமல் அந்த ஆளை சஸ்பெண்ட் செய்தாள். ஒரு வாரம் வேலை நீக்கம் என்று லெட்டர் அவன் கைக்கு வர அவனுக்கு ஆத்திரமாகியது. அத்துமீறி அவளை அசிங்கமாக வர்ணித்தான், ஏசினான்.

“உன்னை பாத்துக்கறேண்டீ உன்னை என்ன செய்யணும்னு எனக்குத் தெரியுமடீ“ என்று நடு ஹாலில் நின்று கத்திவிட்டு வெளியேறினான். அவள் அஞ்சாமல் நின்றாள். செக்யுரிடியிடம் கூறி அவன் மீது ஒரு கண் வைக்கச் சொன்னாள். அன்று வேலை முடிந்து அவள் வெளியேறும் சமயம் சதீஷும் அவளுடனேயே அந்த ஆளைப்பற்றி பேசியபடி நடந்தான்.

“நல்ல பனிஷ்மென்ட் சங்கீதா, அவனுக்கு அது தேவைதான், நானும் பல முறை வாரண் பண்ணீட்டேன் ஆனா அவன் திருந்தலை” என்று பேசியபடி நடந்தான். அவள் தொழிற்சாலைக்கு போக வர ஆபிஸ் கார் கொடுத்திருந்தது. அந்தக் காரை அடைய கொஞ்ச தூரம் வெளியே நடந்து வந்தாள். அந்நேரத்தில் அந்த தொழிலாளி இன்னும் இருவருடன் வந்து,
“ஹே என்னையாடீ சஸ்பெண்ட் பண்ணறே, உன்னை என்ன செய்யறேன் பாரு” என்று அவள் சல்வாரை பிடித்து இழுக்க தோளில் பின் செய்திருந்த துப்பட்டாவுடன் பின் பிளந்து அவள் தோளை கிழித்தது, அவள் ‘அம்மா’ என்று அலற அவளை பின்னிருந்து இழுத்து பக்கத்து மரத்தடிக்கு கொண்டு செல்ல முயன்றான். அதற்குள் சதீஷ் அவனை அடிக்க முயல, அவளை மீட்கவென முயற்சியும் செய்ய, மற்றொருவன் அவனை புடைத்து எடுத்துவிட்டான். நாலு அடிகள் பட்டதுமே அவன் ஒரு மூலையில் சுருண்டு விழுந்தான்
செக்யூரிட்டி ஆட்கள் அவர்களை வளைத்து பிடிக்க முயல, அவனுடன் வந்த முரடர்கள் அவர்களை சங்கீதாவை நெருங்கவே விடாமல் அடித்து தள்ளினர்.
முருகேசனோ சங்கீதாவை முரட்டுத்தனமாக கையாண்டு கொண்டிருந்தான். தரையில் இழுத்து முட்புதரின் மேல் தள்ளி அவள் மேல் சாய என முயற்சிக்க,

அதன் கொஞ்சம் முன்பு அங்கே சித்துவிற்கு ஒரு போன் வந்தது.
“சர் நானும் உங்க தொழிலாளிதான்.... நான் என்னை காமிச்சுக்க விரும்பலை.... மேடம் அந்த முருகேசன சஸ்பெண்ட் பண்ணீட்டாங்க.... அவன் ரொம்ப கோவமா இருக்கான்.... அவன் அசலே ரொம்ப மோசமானவன்.... இன்று மாலை அவன் மேடம ஏதானும் பண்ணீடுவானொன்னு எனக்கு தோணுது.... அவங்க ரொம்ப நல்லவங்க, நேரா உங்க கிட்டேயே சொன்னா சீக்கிரமா ஏதானும் ஸ்டெப் எடுப்பீங்க, அவங்கள காப்பாத்துவீங்கன்னு உங்கள கூப்பிட்டேன் பாத்துக்குங்க” என்று கூறி வைத்துவிட்டான் ஒருவன்.

சித்து ஒரு கணம் என்ன ஏது என்று புரியவில்லை ஆனால் உடனே உணர்ந்து வெளியே ஓடி காரை எடுத்தான். போலிசுக்கு கூறும்படி நடராஜனுக்கு ஆர்டர்ஸ் கொடுத்துக்கொண்டே புயல் வேகத்தில் தொழிற்சாலையை அடைந்தான். இருபது கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது அது. அங்கே சென்று காரை பார்க் கூட செய்யும் முன்பே அந்த முரடன் முருகேசன் சங்கீதாவை நாசபடுத்த முயலுவதை கண்டு கொதித்தே போனான்.
காரை திறந்து அப்படியே விட்டுவிட்டு அவளுடன் ஓடி அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டான். அவனின் ஆகிருதிக்கு முன் முருகேசனின் தெம்பு பலிக்கவில்லை. சுருண்டு விழுந்தான். செக்யுரிடியை பார்த்தான். அவர்கள் ஒரு வழியாக அடியாட்களை வளைத்திருந்தனர்.
“எல்லாம் என்ன பிடுங்கறீங்க, முதல்லியே மேடமுக்கு பாதுகாப்பா இருந்திருக்க வேண்டாமா... இத்தன ஆபத்து, அவங்கள காப்பாத்த இங்க யாருமில்லை.... என்ன செய்யறீங்க” என்று கத்திக்கொண்டே அவனை புரட்டி எடுத்து விட்டான்.

பின்னோடு போலிசும் அதன் பின்னோடு நடராஜனும் வந்து சேர, இந்த இடைப்பட்ட நேரத்தில் தன் நிலை இழந்து மூர்ச்சையாகி இருந்தாள் சங்கீதா, காலில் கையில் சிராய்ப்பு, தோளில் தலையில் அடி, பின் வேறு குத்தி கிழித்து ரத்தவிளாராயிருந்தது. முட்கள் கீறி அதிலிருந்து கசிந்தது. அவளைக் கண்டு கண்ணீர் திரண்டது,

“சர் டேக் சார்ஜ்” என்று நடராஜனிடம் கூறிவிட்டு அவளை பூப்போல இரு கைகளில் ஏந்திக்கொண்டு தன் காரை நோக்கி ஓடினான். அவளை பின் சீட்டில் கிடத்தி புயலாக கிளம்பி மருத்துவமனையை அடைந்தான். ஸ்ட்ரெட்சருக்கும் காத்திராமல் அவளை கைகளில் ஏந்திக்கொண்டு அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்றான். அவளை கிடத்தி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தான்.
அவளது காயங்களுக்கு மருந்திட்டு கட்டிட்டு அவள் உடை மாற்றி ஹாஸ்பிடல் கவுன் போட்டு படுக்க வைத்தனர். ஸ்பெஷல் ரூமில் அனுமதிக்கப்பட்டாள். “தலையில் அடிபட்டிருக்கு சர், ஸ்கான் பண்ணி இருக்கோம், அதனால் அப்சர்வேஷனுக்கு இங்கே சில மணி நேரம் இருக்கட்டும்” என்றார்கள். அவளுக்கு இன்னமும் நினவு திரும்பவில்லை....

வந்து பரிசோதித்த முக்கிய டாக்டர் வெளியே வந்து, “ஒன்றும் இல்லை.... ஸ்கான் பாத்திட்டோம். ஆபத்து இல்லை... பயப்பட தேவை இல்லை.... உங்க மனைவி சீக்கிரமே முழிச்சுக்குவாங்க, ஏதோ அதிர்ச்சி, அதான் மயக்கம் தெளியல.... இங்கே இருக்கட்டும் கொஞ்ச நேரம்.... அப்பறமா பார்த்துகிட்டு அனுப்பறோம் மிஸ்டர் சித்தார்த்” என்றார்.

“என்னை உங்களுக்கு...” என்று இழுத்தான்.
“தெரியுமே, நான் உங்க தந்தையின் நண்பர், உங்க கல்யாண வரவேற்புக்கு கூட வந்தேனே நானு” என்றார்.
“ஒ அதான் என் மனைவி என்றாரா”. என்று எண்ணிக்கொண்டான். மனைவி என்று கூறி பார்த்துக்கொண்டான். இனித்தது. நாணம் தோன்றியது.
“ஓகே டேக் கேர்” என்று அவர் சென்றுவிட நர்ஸ் வந்தாள்.
“சர் உங்க மனைவியின் உடை எல்லாம் கிழிஞ்சுடுச்சு... வேறயா கொண்டுவாங்க, அனுப்பும்போது மாற்றணுமே” என்றாள். அவனுக்கு என்ன செய்வது தன் தாயை அழைக்கலாமா, அவளது பெற்றோரை அழைக்கலாமா, எல்லோரையும் கவலை படுத்த வேண்டுமா என்று எண்ணியபடி வாசலுக்கு வந்தான். வண்டியை எடுத்து மெயின் ரோடை அடைய சில மகளிர் ஷாப்கள் கண்ணில் பட்டன. அங்கேயே அவளுக்கு மாட்டிக்கொள்ள ஈசியாக இருக்கும் என்று எண்ணி இரண்டு நைட்டிகள் வாங்கினான். ரோஜா பூ குவியலாக டிசைன் போட்டது ஒன்றும், சின்ன தூறல்கள் போல டிசைன் போட்டது ஒன்றும் வாங்கினான். அதை கொண்டு நர்சிடம் கொடுத்தான்.

அவளது தந்தைக்கு போன் செய்து விஷயத்தைக் கூறினான்.
“பதட்டபடாம வாங்க அங்கிள்..... ‘ஒண்ணும் பயப்பட தேவை இல்லை’ என்று டாக்டர் சொல்லீட்டாரு... நான் இங்கேதான் இருக்கேன், அவளுக்கு துணையா” என்றான்.
“ரொம்ப தேங்க்ஸ் பா... நான் இதோ வந்துர்றேன் பார்த்துக்க” என்றார்.
“சரி பொறுமையா வாங்க” என்றான். உள்ளே சென்று அவள் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான். அவள் கைகளை தன் இரு கைகளிலும் இறுக்க பற்றிக்கொண்டு அவள் சீக்கிரம் கண் முழிக்க வேண்டும் என்று வேண்டியபடி அமர்ந்தான். கண்மூடி அவன் பிரார்த்தித்து அமர்ந்திருக்க சங்கீதா மெல்ல கண் விழித்தாள். கண்ணீர் மல்க கைகளை பிடித்தபடி அவன் கண் மூடி அவள் அருகே அமர்ந்திருப்பதைக் கண்டாள். ‘சித்து’ என்று மனம் அவன்பால் சென்றது. மெல்ல “சித்து” என்றாள். அந்தக் குரலில் பளிச்சென்று கண் திறந்து மலர்ந்தான்.

“சகி, கண்ண திறந்துட்டியா” என்றான் ஆவலாக.
“ரொம்ப பயன்துட்டீங்களா?” என்றாள். தான் அணிந்திருக்கும் ஹாஸ்பிடல் கவுனில் அவன் முன் படுத்திருக்கிறோம் என்று கவனம் வந்தது. போர்வையை மேலே இழுக்க முயன்றாள். கையில் இருந்த கட்டுகளால் சரிவர செய்ய முடியாமல் திணறினாள்
“என்ன போர்வையா, இரு” என்று அவனே மேலே கழுத்து வரை இழுத்து போர்த்திவிட்டான். “அப்பாக்கு..?” என்றாள்.
“சொல்லீட்டேன் சகி.... இப்போ வந்துடுவாரு..... பயப்பட வேண்டாம் ஒண்ணும் இல்லைன்னு தைரியம் சொல்லி இருக்கேன்” என்றான்.

“இப்போ எப்படி இருக்கு?” என்றான்.


4 comments: