Wednesday 8 August 2018

NESAMULLA VAANSUDARE - 2

“அம்மா அப்பா, மனச தேத்திக்குங்க, அவருக்கு இந்த திருமணத்தில் இஷ்டமில்லையாம்...... நிறுத்த சொல்றாரு..... ஒருவேளை நாம அடம் பிடிச்சு நடத்தினா சபைக்காக தாலி கட்டுவாராம்..... அவரோட எந்த உறவும் இல்லாம காலம் முழுதும் ஒரே வீட்டுல வேற்று மனிதர்களாத்தான் வாழணுமாம்..... முன்னாடியே சொல்லி இருக்கணும், சந்தர்ப்பம் அமையலை, தைரியமும் இல்லைன்னு புலம்பறாரு..... யாரையோ விரும்பினாராம், அந்தப் பொண்ணு காணாம போயிடுச்சாம்...... காத்திருந்தவர மிரட்டி இந்தக் கல்யாண ஏற்பாடு செய்திருக்காங்க அவர் பெற்றோர்..... என்ன செய்யணும்னு நீயே யோசிச்சு முடிவெடுன்னு சொல்லி அனுப்பிச்சுட்டாருபா” என்றாள். இப்போது கண்ணீர் இல்லை. கவலை இல்லை. சற்றே தெளிந்தார்போல இருந்தாள். பெற்றோரை தாங்க வேண்டிய கட்டம். தான் தொய்ந்து போனால் அவர்களை பார்ப்பது எப்படி என்று துணிந்தாள்.

“இப்படி வந்து சொன்னா எப்படி, ஒண்ணா சபையில நின்னாச்சு..... நிச்சய தட்டு மாத்தியாச்சு..... இவளோ போட்டோ எடுத்தாச்சு,.... இனி எம் பொண்ண எவன் கட்டுவான்..... இப்போ கல்யாணம் நின்னு போச்சுன்னா மறுபடி வேற ஒருத்தனும் முன் வர மாட்டானே, நான் போய் சம்பந்தி சட்டைய பிடிச்சு கேக்கறேன்..... இது என்ன விளையாட்டா..... முன்னாடியே அறிவு வேணாம்....” என்று ஆத்திரம் கொண்டு கிளம்பினார்.
“கேட்டு என்ன செய்ய போறீங்கபா?” என்றாள் நிதானமாக.
“என்னம்மா சொல்றே நீ?” என்றார். “இதை இப்படியே விட முடியுமா, நிறுத்தவா முடியும்?” என்றார்.
“ஐயோ என் ஒரே பொண்ணு வாழ்க்கை இப்படி ஆகணுமா, கல்யாண அன்னிக்கிதானா இந்த மாப்ள பயலுக்கு இப்படி கிறுக்கு பிடிக்கணும்” என்று வாய் பொத்தி புலம்பி அழுதாள் தாய் சரோஜா.
“நான் அப்படி விட்டுடுவேனா என்ன” என்றார் தந்தை.
“இருங்கப்பா..... பேசி ஒண்ணும் ஆகப்போறதில்லை..... அவரேதான் கண்டிப்பா சொல்லீட்டாரே, அடம் பிடிச்சு தாலி கட்டிகிட்டாலும் நான் வாழ முடியாதுன்னு..... தெரிஞ்சும் கண்ணை மூடிகிட்டு விழச் சொல்றீங்களா..... உங்க பொண்ணுக்கு கல்யாணம்னு ஒண்ணு நடக்கறதுதான் முக்கியமா, இல்லை நான் அந்த திருமணத்தால சந்தோஷமா வாழறது முக்கியமாபா?” என்றாள் தீர்கமாக.

“என்னடா, நீ சந்தோஷமா வாழத்தானே இவளோ சிரமப் படறோம்” என்றார். “அப்போ பேசாம நிறுத்தீடுங்க” என்றாள் “ஐயோ” என்றாள் தாய்.
“அம்மா சத்தம் போட்டு ஊரைக் கூட்டாதே...... அவங்களாகவே நிறுத்தினதாகவே இருக்கட்டும்.... நமக்கு இதுல சம்பந்தம் இல்லைன்னு காமிச்சுக்குவோம் அவ்ளோதான்....”
“நீ யோசிச்சுதான் இந்த முடிவ எடுத்தியா தங்கம்?” என்றார் தந்தை கண்ணீர் மல்க.
“ஆமாப்பா, எனக்கென்னப்பா குறை, இவன் இல்லைனா எத்தனையோ பேரு. என் மனசை புரிஞ்சுகிட்டு எப்போ எவன் என்னை தானா ஏத்துக்க வரானோ வரட்டும்பா.... அப்போ பண்ணிக்கிறேன்.... இல்லேனா இப்படியே உங்களோட இருந்துக்கறேன்பா..... போதும்” என்றாள் தீர்மானமாக.

“அவ அப்படிதான் உளருவ, நீங்க போங்க, சம்பந்திகிட்ட என்னன்னு கேளுங்க.... ஏதானும் பண்ணுங்க” என்றாள் சரோஜா.
“இல்லை சரோ, அவ தீர்மானமா இருக்கா..... அவ சொல்றதும் சரிதானே.... தாலி கட்டி கூட்டிபோய் வீட்டுக்குள்ள அடைச்சு வைக்க அவ என்ன ஆடா மாடா.... அவ சந்தோஷமா வாழாத வாழ்க்கைதான் எதுக்கு, திருமணம் தான் எதுக்கு... வேண்டாம் இந்த கல்யாணம்னு அவன் கிட்ட சொல்லி அவனை விட்டே நிறுத்த சொல்றேன்.... நீ இரு” என்று கிளம்பினார்.

“இருங்கப்பா நானும் வரேன், லல்லி கவி, அம்மாவோட இருந்து பார்த்துகுங்கபா” என்று நிறுத்திவிட்டு சென்றாள்.

சித்துவின் அறையை அடைந்து மெல்ல தட்டினாள். “கம் இன்” என்று மெல்லிய குரல் வந்தது. உள்ளே சென்றனர். அவள் தந்தை கணேசனையும் அங்கே கண்டு திகைத்தான். அவனை புழுவையும் விட கேவலமாக பார்த்தவர், “என்ன தம்பி இதெல்லாம்?” என்றார்.

“இல்ல, வந்து... நான் சொன்னேனே சங்கீதா கிட்ட...” என்று தடுமாறினான். குரலும் உடலும் தடுமாறியது. ‘இதுவேறையா’ என்று மறுகினார் கணேசன். “சரி நீங்க எப்போ இவளோ தீர்மானமா இருக்கீங்களோ, நாங்களும் நல்லாவே யோசிச்சு அவ முடிவெடுத்துட்டா.... அவளுக்கும் இந்த திருமணத்த மேற்கொண்டு நடத்த விருப்பமில்லை..... ஆனா பழி எங்க மேல விழக்கூடாது.... அதை நான் ஒரு நாளும் அனுமதிக்கமாட்டேன்.... நீங்க என்னவும் பண்ணுங்க.... நிறுத்திகுங்க..... நாங்க கிளம்பறோம்.... காலையில கிளம்பிடுவோம், இப்போ நடு இரவாகிபோச்சு” என்றார் எங்கோ பார்த்தபடி.

“தாங்க்ஸ் அங்கிள். தாங்க்ஸ் சங்கீதா... என் மன நிலை புரிஞ்சு ஒத்துகிட்டதுக்கு” என்று கை கூப்பினான். அவனையே கண்கொட்டாமல் பார்த்தாள். ‘இவன் ஏன் இப்படி இருக்கிறான்.... என் மனதின் காயங்கள் இவன் கண்ணிலேயே படாதா?’ என்று தவித்தாள். ‘அவனே உனக்கில்லை அவன் கண்ணில் பட்டால் என்ன படாவிட்டால்தான் என்ன’ என்று தேற்றிக்கொண்டாள்.
“என்ன செய்ய போறீங்க?” என்று மெல்ல கேட்டாள்.
“அப்பாம்மாகிட்ட பேசறேன்.... எனக்கு தான் இதில் இஷ்டமில்லைனு சொல்றேன்.... நாந்தான் நிறுத்தினேன்னு சொல்றேன்..... எல்லார் முன்னாடியும் சொல்றேன்.... என் ஷாலுவ மறக்க முடியலைன்னு ஒத்துக்கறேன், உன் வாழ்க்கை கெடாம இருக்க என்னென்னா செய்யணுமோ செய்யறேன் சங்கீதா” என்றான் நேராக பார்த்து. ‘இனிமேல்தானா கெட வேண்டும்’ என்று ஒரு பார்வை பார்த்தாள்
சரி என்று வெளியே வந்துவிட்டாள்.

பின்னோடு இரவோடு இரவாக இரு வீட்டாரும் கூட, சித்து அனைவரின் முன் தன்னால் ஷாலுவுவை மறந்து இவளை மணமுடிக்க முடியாதென்று திருமணத்தை நிறுத்திவிட்டதாகக் கூறினான். அவனது தாய் மரகதம் அடித்துக்கொண்டு அழுதாள்.

“பாவி, பெண் பாவத்தை தேடி குடுத்துட்டியே, அப்போதே சொல்லி இருக்கலாமே..... அந்தப் பொண்ணை அவமானப்படுத்திட்டியே, நீ என் வயிற்றில் ஏன்டா வந்து பிறந்தே, ச்சே என் பிள்ளைன்னு சொல்லிக்கவே அசிங்கமா இருக்கு” என்று அவனை ஒரு அரை வைத்தாள். கன்னத்தை பற்றியவன் மன வலியில் கண்ணீர் சிந்தினான்.

கண்ணீர் மல்க செய்வதறியாது குனிந்த தலையுடன் அனைவரின் முன் நின்ற சங்கீதாவைக் கண்டவன் ‘தப்பு செய்துவிட்டோம்’ என்று அறிந்தான். ‘ஆனால் என்ன செய்ய...’ என்று தவித்தான். கை கூப்பி அவளிடமும் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டான். இரு குடும்பமும் வெவ்வேறு மன நிலையில் அவரவர் அறைகளுக்கு சென்று கொஞ்சம் தூங்கி தூங்காமல் படுத்து எழுந்தனர். அதிகாலை எழுந்து சாமான்களை பாக் செய்துகொண்டு கிளம்பி விட்டனர். சத்திரம் சமையல் எல்லோருக்கும் சித்துவே செட்டில் செய்வதாகக் கூறி செயலாளர் மூலம் பணம் அடைத்துவிட்டான்.

சங்கீதாவிடம் மீண்டும் ஒரு முறை பர்சனலாக மன்னிப்பு வேண்டி அவளை காண வந்தான் சித்து. மெளனமாக தலை குனிந்து அவன் முன் வந்து நின்றாள்.
“மன்னிச்சுடுன்னு ஒரு வார்த்தையில சொல்லி உன்னிடம் நான் மன்னிப்பை வாங்கீட முடியாது..... நான் செய்தது சின்னப் பாவம் கிடையாது..... ஆனா என் நிலையை புரிஞ்சுகோ..... என்னை மன்னிக்க முயற்சி செய்.... அது மட்டுமில்லை, ஒரு நல்ல தோழினா, உனக்கு வாழ்க்கையில என்ன விதமான உதவி தேவைபட்டாலும் என்னிக்கும் என்னை நீ அணுகலாம்..... நான் செய்ய காத்திருக்கேன் சங்கீதா..... உனக்கு ஒரு நல்ல வாழ்வு அமைய என் வாழ்த்துக்கள்” என்றான்.
“தாங்க்ஸ்” என்று கை கூப்பிவிட்டு உள்ளே திரும்பி சென்றுவிட்டாள். அவர்கள் அனைவரும் கிளம்பிப் போவதை கண்ணுற்று நின்றான்.
“என்னடா மச்சான் இப்படி பண்ணீட்டே?” என்று நொந்துகொண்டான் ஷ்யாம். “பாவம்டா, சிஸ்டர் மூஞ்சிய கண்கொண்டு பார்க்க முடியல.... ச்சே போடா..” என்று நகர்ந்து விட்டான். சித்துவுக்கு தன்மேலேயே வெறுப்பாக வந்தது. ஆனால் என் ஷாலுவுக்காக என்று தேற்றிக்கொண்டான்.

பெரியவீட்டின் திருமணம் நின்றால் பலதும் பேசுவார்கள்தானே. அதேபோல சில பத்திரிக்கை முதல் டிவி சானல்கள் வரை இந்த ந்யூஸ் பரவியது. மீடியாவிடம் தன்மையாக பேசி எந்த இடத்திலும் பெண்ணின் பெயரோ புகைப்படமோ வரக்கூடாது என கெஞ்சி கேட்டுக்கொண்டான். அவளது வாழ்வை அது பாதிக்கும் என வேண்டினான். பெரும்பாலோனோர் ஒத்துழைத்தனர். சங்கீதாவின் குடும்பம் ஒதுங்கிவிட்டனர். எந்த மீடியாவையும் உள்ளே நுழைய விடவில்லை.

ஒரு பத்துநாள் போல அப்படி இருந்துவிட்டு சங்கீதாதான் முதலில் தெளிந்தாள்.
“அம்மா எழுந்து போய் சமை.... அப்பா கிளம்புங்க, குளிச்சு சாப்டு ஆபிஸ் கிளம்புங்க.... போங்க வேலையப் பாருங்க” என்று கிளப்பினாள்.
“எப்படிமா?” என்றார்.
“ஏன், இப்போ என்ன குடி முழுகி போச்சு, சாவா விழுந்துடுச்சு..... போதும் துக்கம் கொண்டாடியது.... அவங்கவங்க போய் வேலையப் பாருங்க” என்று அதட்டினாள். அவள் தம்பி ஸ்கூலுக்கும் தந்தை ஆபிசுக்கும் கிளம்ப, “நான் என் காலேஜ் வரை கொஞ்சம் போயிட்டு வரேன் மா” என்று கூறி கிளம்பினாள்.
அங்கே சென்று பிரின்சிபாலை சந்தித்தாள். அனைவரும் முதலில் துக்கம் போலத்தான் விசாரிப்பர், என்று எதிர் பார்த்ததே. தேற்றிக்கொண்டாள். தயாரானாள். நிமிர்ந்து முகம் பார்த்து புன்னகையுடன் பதில் கூறினாள். அவளது நிமிர்வு கண்டு துக்கமாக பேச வந்தவருக்கு வாய் தடுக்கியது. பிரின்சிபாலிடம் தான் எம் பி யே சேர விரும்புவதாக கூறினாள். விண்ணப்பம் பூர்த்தி செய்து ஒப்படைத்தாள்.

அவர் புன்னகையுடன் “தட்ஸ் லைக் மை ஸ்டுடென்ட்” என்றார். பின்னோடு சீட் கிடைத்து காலேஜில் சேர்ந்தாள்.
சில நாட்கள் ஞாபகங்கள் வந்து போகும், எந்தப் பெண்ணின் வாழ்க்கையிலும் மறக்க கூடியதில்லையே இந்த சம்பவம்..... ஆற்றாமல் அழுததும் உண்டு. ‘என்னை ஏன் இப்படி செய்தாய் இறைவா’ என்று கடவுளை நிந்தித்ததும் உண்டு. பின் தனக்கு தானே தேறியதும் உண்டு. பல நாட்கள் தன் அறையின் பால்கனியில் கூடை நாற்காலியில் அமர்ந்து நிலவை வேடிக்கை பார்த்தபடி இருப்பாள். நிலவின் தண்ஒளியும், இரவின் குளுமையும் கூட அவள் மனதின் புழுக்கத்தை மாற்றி அமைக்க முடியவில்லை. போனதை நினைத்து மருகியது நெஞ்சம்...

நடு நடுவே லலிதாவும் கவிதாவும் வந்தனர். அவளை நார்மலாக பழகி பேச வைத்தனர். அங்கே இங்கே என்று அவளையும் இழுத்துக்கொண்டு ஊர் சுற்றினர். அவர்கள் தனக்காக பார்த்து நேரம் ஒதுக்கி முயற்சி எடுக்கும்போது அதற்காகவானும் தானும் ஒத்துழைக்க வேண்டுமே என்று அவளும் புன்சிரிப்போடு சென்றாள். ஆன வரையில் மலர்ந்த முகமாக சாதாரணம் போல காட்டிகொண்டாள். ஜோக் அடித்தனர். சினிமா மால் என்று சுற்றித் திரிந்தனர். வீட்டுக்குள் வந்து முடங்கியதும் வாழ்க்கை வெருமையானதுபோலத் தோன்றியது.

நினைவுகளின் தாக்கம் அவளை மழுங்க செய்துவிடுமோ என்று அஞ்சினாள்... என்னவாயிற்று ஏன் இப்படி எல்லாம், என்று நடந்தவற்றை யோசித்து தலை புண்ணானது...
டிக்ரீ படித்து முடித்தாள்.... வெற்றிகரமாக பாஸ் செய்தாள்.... வீட்டில் கல்யாணம் என்றனர், ஒப்புக்கொண்டாள்.... சித்தார்த்தின் பெற்றோர் மட்டுமே வந்து பெண் பார்த்து சென்றனர்.... அவன் பிறகு வருவான் என்றனர்.... போட்டோவில் பார்த்தவனுக்கு மிகவும் பிடித்துப் போனது சம்மதம் சொல்லிவிட்டான் என்றனர்..... அனைத்துக்கும் சரி என்றாள்.... அவனை நேரில் காணாமலே கல்யாணமா என்று தயங்கியது உண்டு..... அவனின் புகைப்படத்தை காட்டினர். பார்த்தவளுக்கு மிகவும் திருப்தியே, ஆனால்.....

கல்லூரி காலத்தில் கூட படித்த தோழிகளில் சிலருக்கு திருமணம் நிகழ்ந்திருந்தது.... அப்போது அவர்கள் சொல்லக் கேட்டதுண்டு.... ‘பெண் பார்த்து ஒப்புதல் கூறியது முதலே மாப்பிள்ளைகள், பெண்களை திருட்டுத்தனமாக அழைத்து பேசிக்கொள்வர்.... கொஞ்சுவார்கள்.... ரகசிய சந்திப்புகள் நிகழ்வதுண்டு’ என்று. இங்கே அப்படி ஒன்றுமே இல்லையே, அவனை நேரில் கூட ஒரு முறை சந்திக்க முடியவில்லையே பேசக்கூட இல்லையே.... என்ன அப்படி பிசியாக...’ என்று செல்லக் கோபம் கொண்டாள். ஆனால் இவை எல்லாம் தன் மனதினுள் மட்டுமே. பெற்றோரிடம் இதைப்பற்றி பேசக்கூட அவளுக்கு வெட்கமாக இருந்தது. கூச்சப்பட்டு பேசாமல் விட்டாள். அதுதான் தப்போ.... என்று எண்ணம் எழுந்தது.

‘அவன் என்னை ஏன் இப்படி செய்தான்.... அன்று இரவு தனியாக அழைத்து சொன்னவனுக்கு திருமணத்தின் முன் என்னை தனியாக அழைத்து கூற ஏன் தயக்கம்?’ என்று புழுங்கினாள். இனி அழுது ஒரு லாபமும் இல்லை என்று தெளிந்தாள். கல்யாணம் நின்று போனதும் படிப்பே சர்வமும் என்றானது. லல்லியும் கவிதாவும் கூட அதே கல்லூரியில் வேறே வகுப்புகளில் படித்து வந்தனர். இவளது பெற்றோர் அவர்களிடம் இவளுக்கு நடந்தவற்றை தாமாக போய் யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். “அத நீங்க சொல்லணுமா மா, நாங்க பார்த்துக்கறோம் தைர்யமா இருங்க” என்றனர்.

இரு வருடங்கள் ஒரே முனைப்பாக வேறு எதையும் கருத்தில் கொள்ளாது படித்து டிஸ்டிங்க்ஷனில் பாஸ் செய்தாள். பெற்றோர் துவண்ட மனதுக்கு மயிலிறகாய் வந்தது இந்த செய்தி. ஆனாலும் தாய் சரோஜா மாத்திரம் அவ்வப்போது புலம்பிக் கொண்டுதான் இருந்தார்.
“அவள இப்படியே விட்டா எப்படிங்க, அவ கல்யாணம்...” என்று.
“முடிப்போம், அவ படிச்சு முடிக்கட்டும்.... அவ இஷ்டப்படி வேலைக்கு கொஞ்ச நாள் போகட்டும்..... அப்பறமா அவளுக்கேத்தவனா நல்லா விசாரிச்சு பார்த்து செய்வோம்” என்று அடக்கினர். “அவ மனப் புண் ஆறணும் சரோ” என்றார்.

பர்சனல் மேனேஜ்மென்ட் எடுத்திருந்தாள். எம் பி யே முடிக்கும் முன்பே நல்ல பல பன்னாட்டு நிறுவங்களின் பிரதிநிதிகள் வந்து கல்லூரியிலேயே நேர்முகம் நடத்தி ஆட்களை தேர்ந்தெடுத்தனர். அவளும் சமீபத்தில் மிகவும் பெயர் பெற்ற ஒரு நிறுவனத்தால் தேர்ந்தேடுக்கப்பட்டாள். சந்தோஷமானது. பெற்றோருடனும் தம்பியுடனும் கொண்டாடினாள்.

அவள் புதிய கம்பனியில் வேலைக்கு சேரும் நாளும் வந்தது. அழகாக கஞ்சியிட்ட காட்டன் புடவை அணிந்து லேசான ஒப்பனையுடன் பதவிசாக கிளம்பினாள். தனக்கென ஒரு ஸ்கூட்டி வாங்கி இருந்தாள். அதில் அலுவலகம் சென்று இறங்கினாள். முதல் நாள் என்பதால் தலைமை செயலாளரைக் கண்டு வேலை ஒப்புதல் செய்யச் சொன்னார்கள். அவளும் அப்படியே செய்ய, அந்த முதியவர் நடராஜன் அவளுக்கு அவளது வேலைகளை அவளது சீட்டை காண்பித்து விளக்கி அனைவருக்கும் அவளை அறிமுகம் செய்து வைத்தார்.

“பாஸ் ஊர்ல இல்லைமா, ஒரு கான்பரன்சுக்காக ஜெர்மனி போயிருக்கார். திங்கள் அன்று தான் வருவார்..... நீ அதுவரைக்கும் நான் சொன்ன இந்த வேலைகளை செய்துகொண்டு இரு.... அவர் வந்ததும் அவரே வேலை அலாட் செய்வார்மா” என்று சென்றார். சந்தோஷமாக உற்சாகமாக அவர் கூறின வேலைகளில் ஈடுபட்டாள். மூன்று நாட்களும் மிகுந்த சந்தோஷத்துடனும் திருப்தியுடனும் சென்றது.

சனி ஞாயிறு விடுமுறை. குடும்பத்துடன் கழித்தாள். ஆற அமர எழுந்து குளித்து தாயுடன் சமைத்து பரிமாறி சாப்பிட்டு அரட்டை அடித்தாள். அடுத்த வார தேவைக்கென தன் உடை அணிகலன்களை எடுத்து தயாராக வைத்தாள்.

திங்கள் அன்று அழகிய செந்தாமரை வண்ண சல்வார் அணிந்து லேசான ஒப்பனையுடன் கிளம்பினாள்.
“இந்த கலர் உனக்கு சூப்பரா பொருந்துது சங்கீதா” என்றாள் கூட வேலை செய்யும் ப்ரீத்தி.
“தேங்க்ஸ் ப்ரீத்தி” என்றாள் புன்னகையுடன்.
“நம்ம பாஸ் ஊர்லேர்ந்து வந்தாச்சு.... இன்னிக்கி ஆபிசுக்கு வருவார்..... நீ அவரை பார்த்ததில்லையே, ஜம்முனு சினிமா ஹீரோ மாதிரி இருப்பார்.... ஆள் கொஞ்சம் முசுடோன்னு தோணும், ஆனா நன்னா பண்பா நடந்துக்குவார்.... கொஞ்சம் சட்டு சட்டுனு கோவம் வரும், கத்துவாரு.... ஆனா உடனே அடங்கிடும்.... நல்லா பழகுவாரு” என்று அடுக்கினாள் ப்ரீத்தி.
‘ஓஹோ அப்படியா, அப்போ அவரிடம் தப்பு செய்து மாட்டிக்காமல் திட்டு வாங்காமல் தப்பிக்கணும்’ என்று மனதில் குறித்துக்கொண்டாள். கொஞ்சம் படபடவென இருந்தது.

செயலாளர் நடராஜன் இன்டர்காமில் அழைத்தார், “அம்மா சங்கீதா, நம்ம பாஸ் வந்தாச்சு, உன்னை பார்க்கணுமே, அவர் அறைக்கு வாம்மா” என்றார்.
“இதோ சர்” என்று உடனே தன்னை திருத்திக்கொண்டு கிளம்பினாள். கதவை மெல்ல தட்டினாள்.
“எஸ் கம் இன்” என்று கேட்டது. படபடக்க உள்ளே நுழைந்தாள்.
“குட் மார்னிங் சர்” என்றபடி நிமிர்ந்தாள். சுழல் நார்காலியில் அமர்ந்து அந்தப் பக்கம் திரும்பிய வாக்கில் இருந்தான். நடராஜனும் பக்கத்து இருக்கையில் இருந்தார்.
“ப்ளீஸ் சிட் டவுன்” என்று கை காட்டினான். ‘இந்த குரல்..’ என்று உள்ளே உதைத்தது. அதே விநாடி அவனும் சுழன்று முன்னே பார்த்து திரும்பினான். இருவரும் ஒருவரை ஒருவர் கண்டு திகைத்தனர். ஆம் சித்தார்த் தான் அவளது முதலாளி. அவள் கேள்விப்படவில்லை. அவன் இவ்வளவு பெரிய கம்பனியின் முதலாளியாக இருப்பான் என்று கனவிலும் நினைக்கவில்லை. அவனைப்பற்றியே கூட நினைத்திருக்கவில்லையே.

“ஹலோ சங்கீதா, எப்படி இருக்கே?” என்றான் இயல்பாக. ஆனால் அவன் முகத்திலும் தர்மசங்கடம் தெரிந்தது. திறமையாக மறைத்தான்.
“சார், இதான் நம்ம புதிய ஸ்டாப்... அட்மின் பாத்துக்கறாங்க..... பர்சனல் மேனேஜ்மெண்ட்ல எம் பி யே.... நல்ல திறமைசாலி.... வந்த இந்த மூணு நாளிலேயே திறம்பட வேலை செய்யறாங்க..... பொறுப்பா இருக்காங்க” என்று அடுக்கினார் நடராசன்.

“ஐ சி” என்று புன்சிரிப்புடன் அவளையே பார்த்திருந்தான். “குட் டு நோ” என்றான். அவளுக்கு நெருப்பில் நிற்பது போலத் தோன்றியது. இங்கிருந்து வெளியே போனால் தேவலை என்று இருந்தது.
“என்ன சங்கீதா, ரொம்ப டென்சா இருக்கே.... ரிலாக்ஸ்” என்றான். ‘கொழுப்பு’ என்று கூறிக்கொண்டாள் மனதுள்.


5 comments: