Monday 13 August 2018

NESAMULLA VAANSUDARE - 7

அந்நாளில் ஒரு மாலை சங்கீதாவின் தந்தை கணேசனை ரோடில் சந்தித்தான். அவன் காரின் பக்கம்தான் அவரும் தன் பைக்கில் இருந்தார். சிக்னல் விழ காத்திருந்தனர்.
“ஹலோ அங்கிள், வணக்கம்” என்றான். அவர் திரும்பி பார்த்து அதிர்ந்தார். “ஹலோ, என்ன தம்பி எப்படி இருக்கீங்க... அப்பாம்மா சௌக்கியமா?” என்று மரியாதைக்கு விசாரித்தார்.
“நல்லா இருக்கோம் அங்கிள்... நீங்க எல்லாம் சுகமா?” என்றான்.
“ம்ம் நல்லா இருக்கோம் தம்பி” என்றார். சிக்னல் விழும் நேரம்,
“அங்கிள் நான் உங்களை சந்திக்கணும் ப்ளீஸ்” என்றான்.
“சரி நாளைக்கு என் ஆபிசுக்கு வாங்க” என்றுவிட்டு ஒட்டி சென்றுவிட்டார்.

அடுத்த நாள் உணவு வேளையின்போது அவரின் அலுவலகம் தேடிச் சென்றான். அவனை அமர வைத்து காபி குடுத்து உபசரித்தார்.
“எதிரியாகவே இருந்தாலும் விருந்தோம்பல் நம் பண்பாடு” என்றார். இன்னமும் அவர் தன்னை மன்னிக்கவில்லை, சங்கீதா அவனிடம் வேலை செய்வதும் அவருக்கு தெரிந்திருக்கவில்லை என்று அறிந்தான்.
“மன்னிச்சுடுங்க. நான் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்னு நான் உணர்ந்துட்டேன்... இன்னிக்கி இல்லை, அன்னிக்கே உணர்ந்துட்டேன்.... பெரிய மனசாக மன்னிச்சுடுங்க....”

“அந்தப் பெண் என்னை ஏமாற்றி எனக்கும் புரக்கணிப்புன்னா என்னன்னு புரிய வெச்சுட்டா.... என் தப்பை முழுவதுமா நான் உணர்ந்துட்டேன்.... அது போகட்டும், சொல்லுங்க உங்க வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா.... சங்கீதா....” என்று இழுத்தான்.
“அவளுக்கு என்ன தம்பி, நல்லா படிச்சா... பாஸ் பண்ணினா, ஒரு பெரிய கம்பனில வேலை செய்யறா, கை நிறைய சம்பளம் கவுரவமா வாழறா.... வரன் பார்க்க ஆரம்பிச்சிருக்கேன்.... இந்த முறை நல்லா தீர விசாரிச்சு நல்லவனா தான் பார்த்து பேசி முடிப்பேன்” என்றார் கெத்தாக.
“ரைட் அங்கிள், நல்லதே நடக்கட்டும்..... உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ சங்கீதா என்கிட்டே தான் வேலை பார்க்கிறா.... அவளாலதான், அவ என்னை திருத்தினதாலதான், நான் இந்த அளவு இன்னிக்கி வாழ்ந்துகிட்டு இருக்கேன்.... என் வாழ்வு அவளுக்குதான் நான் அர்ப்பணம் பண்ணணும்” என்றான் ஆத்மார்த்தமாக.

“நீங்க.... நீங்க... என்ன சொல்றீங்க தம்பி.... சங்கீதா உங்ககிட்ட வேலை செய்யறாளா.... எங்க கிட்ட அவ சொல்லவே இல்லையே.... ஒரு பேச்சு கூட சொல்லலியே...” என்று திணறினார் அவர். அவன் புன்னகைத்தான். “எங்களுக்குள்ள இருக்கும் உறவு அப்படிப்பட்டது.... முதல் நாள் என்னைப் பார்த்து தயங்கி வேலைய ராஜினாமா பண்ணத்தான் முயற்சி செய்தா.... நாந்தான் விளக்கி சொன்னேன்.... அங்க நான் முதலாளி, அவ என்கிட்டே வேலை செய்யறா.... எனக்கு அவங்க திறமை தேவை இருக்கு, அவளுக்கு தன் திறமைய வெளி கொண்டுவர சந்தர்ப்பம் தேவை இருக்கு.... அதை மீறி எங்க ரெண்டு பேருக்கும் எந்த ஓட்டும் உறவும் இருக்காதுன்னு பேசி எங்களுக்குள்ளே முடிவு பண்ணிகிட்டுதான் வேலை செய்யறோம் அங்கிள்....

உங்க மக ரொம்ப உசத்தியானவ, அவளைபோல கிடைக்க குடுத்து வெச்சிருக்கணும்.... இப்போதைக்கு என் கம்பனிக்கு குடுத்து வெச்சிருக்கு, எனக்கு அதுவே போதும்.... என்னை சந்திச்சதா அவகிட்ட சொல்லணும்னு அவசியமில்லை..... அவ மறைச்சான்னு நினச்சு அவளை கோபிக்கவும் தேவையில்லை.... உங்க மக, அவகிட்ட எப்படி நடந்துக்கணும்னு நான் உங்களுக்கு சொல்லக் கூடாதுதான்..... ஆனாலும், நீங்க அவகிட்ட கோச்சுகிட்டு அதனால் அவ வேலைக்கு வரலைனாலோ வேலைய விட்டு நின்னாலோ நஷ்டம் எனக்கும் என் கம்பனிக்கும்தான்..... அதான் சொன்னேன் வரேன்..... பார்க்க அனுமதிச்சதுக்கு நன்றி..... உங்களை நேர்ல பார்த்து மன்னிப்பு கேட்டு அந்த பெண்ணையும் என் பழைய குடிகார வாழ்க்கையையும் நான் மறந்து தூக்கி எரிஞ்சுட்டேன்னு சொல்லிக்கணும்னு தான் வந்தேன்..... அதுக்கு அனுமதிச்சதுக்கு நன்றி அங்கிள், பை” என்று கை குவித்து வணகினான்.

அவர் அயர்ந்து போய் அமர்ந்திருந்தார்.
மாலை வீட்டிற்கு வந்தவர் சங்கீதாவிடம் அமர்ந்தார்.
“உன் வேலை எல்லாம் எப்படி இருக்கும்மா?” என்றார்.
“நல்லா இருக்குபா” என்றாள் சந்தோஷமாக.
“உன் பாஸ் எப்படிமா, நல்ல நடத்தறாரா?” என்றார்.
“ஒ ரொம்ப நல்லவர்பா.... ரொம்ப மரியாதையா நடத்தறாரு” என்றாள் அதே முகத்துடன். எந்த வித்யாசமும் தோன்றவில்லை.
“அவரப்பத்தி சொல், என்ன பண்றாங்க உங்க கம்பனில?” என்று துருவினார். சங்கீதா சித்துவை பற்றி கம்பனியைப் பற்றி உற்சாகமாக பேசினாள். விவரங்கள் கூறினாள். சித்துவை புகழ்ந்தாள். ஆனால் சித்துதான் பாஸ் என்று கூறவில்லை. மகள் சந்தோஷமாகவே வேலை செய்கிறாள். சித்து சொன்னது நிஜம் தான் போலும் என்று எண்ணினார்.

“சரிமா, ரொம்ப சந்தோஷம்.... இப்போ உனக்கு சில வரன் வந்திருக்குமா, பார்க்கலாமா?” என்று கேட்டார்.
“என்னப்பா திடீர்னு?” என்று பதறினாள். அந்நேரம் வரை முகத்தில் இருந்த சந்தோஷம் நிமிடத்தில் மாறியது. ஒரு பதற்றம் குடிகொண்டது.
“சரி, நான் பார்த்த மாப்பிள்ளை வேண்டாம்னா, நீ யாரையனும் விரும்பறையா சொல்லு, பண்ணி வைக்கறேன்” என்றார் ஆழம் பார்த்தபடி. “ஐயோ அதெல்லாம் இல்லைப்பா” என்றாள் சுருதி இறங்கி.
“சரி யோசிச்சு சொல்லுமா, அவங்களுக்கு நான் தகவல் கொடுக்கணுமே” என்றார்.

சங்கீதாவுக்கு தூக்கம் போனது. சித்துவை மனம் நாடியது ஆனால் அவன் மீதிருந்த வெறுப்பும் கோவமும் இன்னமும் கொஞ்சம் பாக்கி இருந்தது.... அவனை முழுமையாக மன்னிக்க மனம் இடம் தரவில்லை.... அவன் தன்னை விரும்புகிறானா என்றால் அதுவும் தெரியவில்லை.... தான் அவனை விரும்புகிறோமா என்று எண்ணி பார்த்தால் ஓரளவு சந்தேகமாக இருந்தது.... இந்நிலையில் தந்தை சொன்ன வரனை பார்த்து ஏற்க முடியுமா, வேறு ஒருவனை மணந்து தன்னால் நிம்மதியாக வாழ முடியுமா என்று தடுமாறினாள்.... சித்துவின் முகம் கண் முன்னே வந்து வந்து மறைந்தது... ஆனால் அவன் அவளை மறுத்தவன் அல்லவா, இப்போது ஷாலு அவனை மறுத்ததும் அவன் தன்னிடம் வந்து நிற்பான், தானும் அவனை ஏற்பதா என்று குமைந்தாள்.... மண்டை வெடிப்பது போல தோன்றியது... தூங்க முயன்று தோற்றாள்.

அடுத்த நாள் ஆபிசிலும் சோர்வாகவே இருந்தாள். அவளை அந்நிலையில் கண்டவன் அவளது தந்தை தன்னை சந்தித்ததை சொல்லி இருப்பாரோ, திட்டி இருப்பாரோ என்று எண்ணினான். அவளிடம் மனம் விட்டு பேச மனம் விழைந்தது. ஆனால் தன் சுய கௌரவம் விட்டு தானே அவள் முன்னே போய் நின்று பேசவும் தயக்கம். தவித்தான்.

அன்று மாலை அவளே ஒரு முக்கிய ரிப்போர்ட்டுடன் அவன் அறைக்கு வர வேண்டிய நிலை. வந்து விஷயம் பேசி முடித்தாள்.
“என்ன ஒரு மாதிரியா இருக்கே?” என்றான் மெல்ல ஆற்ற மாட்டாமல். “இல்லை ஒண்ணுமில்லை” என்று சொல்லும்போதே அவள் முகம் சுருங்கியது. கண்கள் ஈரமாகின.

“என்ன சகி?” என்றான். முதன் முதலாக சகி என்று அழைத்தான் அவன். அதைக்கேட்டு அவள் திகைத்து நிமிர்ந்து அவனை பார்த்தாள். கண்ணோடு கண் கலந்து அப்படியே நின்றன. பின்னோடு தலை கவிழ்ந்து கொண்டாள். “ஏன் அவ்ளோ அதிர்ச்சி, நான் அப்படி கூப்பிடக்கூடாதா, சகி னா பிரியமான தோழின்னு அர்த்தம், தெரியும்தானே, அதான் உன்னை அப்படி அழைக்கணும்னு தோணிச்சு” என்றான் புன்னகையுடன்.
“என்ன விஷயம் சொல்லு” என்று ஊக்குவித்தான்

“அப்பா எனக்கு வரன் பார்க்கிறாராம்..... என் எண்ணம் என்னன்னு கேட்கிறாரு” என்றாள் மெல்ல. “ம்ம்” என்றான். அவனுக்கும் அது தெரியுமே, ஆனால் அதற்கு அவளின் நிலை என்ன பதில் என்ன என்று அவனுக்கு இப்போது தெரிய வேண்டி இருந்தது.
“எனக்கு ஒரே குழப்பமா இருக்கு.... வரன் பார்த்தா போதுமா, அவங்க முன்ன நடந்தத கேள்விப்பட்டு எதையானும் தப்பா பேசீட்டா நான் செத்துடுவேன்” என்றாள்.

“நோ” என்று அலறினான். அவள் திகைத்து அவன் முகம் பார்த்தாள். அதில் சொல்லொணா துயரம் கண்டாள்.
“அப்படி இன்னொரு முறை சொல்லாதே சகி, ப்ளீஸ்” என்றான் கெஞ்சலாக. “சாரி, நான் ஒரு பேச்சுக்கு சொன்னேன், ஆனா, என் நிலை நிஜம்” என்றாள்.
“புரியுது, எல்லாம் என்னால..... நான் உன் வாழ்வையே பாழாக்கிட்டேன் என்னை மன்னிச்சுடு சகி” என்றான் கண்ணீர் மல்க.

“ஐயோ நீங்க ஏன். அதெல்லாம் நான் மறந்துட்டேன்.... ஆனா இந்த உலகம் மறக்கணுமே, அதான் என் கவலை....”
“நடந்தத மட்டும்தான் மறந்தியா இல்லை, அதில் சம்பந்தப்பட்டவங்களையும் மறந்துட்டியா, இன்னுமா எங்கள வெறுக்கற சகி?” என்றான்.
“நான் யாரையும் வெறுக்கவும் இல்லை மறக்கவும் இல்லை” என்றாள்.

“என்ன பதில் சொல்லப் போறே?” என்றான்.
“நான் என் தந்தையின் இஷ்டப்படி விட்டுடப்போறேன்.... என்னால யோசிச்சு மாளல” என்றாள் விரக்தியாக.
“அப்போ இன்னொருவரை மணக்க நீ துணிஞ்சுட்டியா?” என்றான்.
“தெரியல, ஒரே குழப்பமா இருக்கு” என்றாள்.
“ம்ம் சரி. எது செஞ்சாலும் யோசிச்சு செய்....உன் மனசுகிட்ட கேட்டு செய்” என்றான். அவனை விசித்திரமாக பார்த்தாள்.
“நான் வரேன்” என்று எழுந்து சென்றுவிட்டாள். இப்போது பாரம் அவன் தலையில் ஏறியது.

வீட்டிற்குச் சென்றான். அவனின் கலக்கம் நிறைந்த முகத்தைக் கண்ட மரகதம் “என்ன ராஜா, என்னமோ மாதிரி இருக்கே?” என்றார். அவருக்கு பயம் எங்கே மகன் மறுபடி பழயபடி ஆகிவிடுவானோ என்று.
“ஒண்ணுமில்லைமா” என்றபடி அவர் அருகே அமர்ந்தான். அவர் தோளில் சாய்ந்தான். அவருக்கு ஆச்சர்யம். “என்னப்பா உடம்புக்கு முடியலையா இல்ல மனசு சரி இல்லையா?” என்றார். “மனசு” என்றான்.
“என்னாச்சு, சொல்லலாம்னா சொல்லு” என்றார்.


இனி மறைத்து பயனில்லை, தன்னால் தெளிவு காண முடியாததை தாய் கண்டு பிடித்து தெளிவு கூறட்டும் என்று எண்ணினான்.
“இல்லை, நம்ம சங்கீதா...” என்று துவங்கினான்.
“தெரியுமே, அன்னிக்கி கோவில்ல பார்த்தேன், நல்லா இருக்கா, ஆனா இன்னும் கல்யாணம் தான் ஆகலை.... பாவம் நல்ல பொண்ணு” என்றார். “ஆமா தெரியும்” என்றான்.
“என்ன தெரியும்?” என்றார் ஆச்சர்யத்துடன்.
“நீங்க அவளை கோவிலில் பார்த்து பேசியது தெரியும், சொன்னா அடுத்த நாள்” என்றான்.
“எப்படி, எங்கே பார்த்துகிட்டீங்க?” என்றார் திகைத்து.
“அவ என் ஆபிஸ்ல என்கிட்டே தான் வேலை பார்க்கிறா... ரொம்ப நாளா” என்றான்.
“என்னடா சொல்றே?” என்று அதிர்ந்தார்.
“ஆமாமா” என்று அனைத்தும் கூறினான். ஷாலு மறுபடி வந்து அவனை அவமானமாக பேசியதையும் சங்கீதா தாயின் வேதனை அறிந்து அவனிடம் பேசி புரிய வைத்து அவனை திருத்தியதையும் எல்லாம் கூறினான்.
“என் குல தெய்வமே அவதாண்டா ராஜா” என்றார் மரகதம் மகிழ்ந்து போய். “நான் சொன்ன ஒரு சொல்லுக்காக அந்தப் பொண்ணு உன்கிட்ட பேசி உன்னை எனக்கு மீட்டு குடுத்துட்டாளா, எவளோ பெரிய மனசுடா அது” என்று சிலாகித்துக்கொண்டார்.

“ஆம்” என்று புன்னகைதான். “சரி இப்போ என்ன?” என்றார் ஒரு வித ஆவலுடன். அதற்குமேல் தாயின் முகம் கண்டு பேச முடியாமல் வெட்கமாகி போனது சித்துவிற்கு. அவள் மடி சாய்ந்து முகம் மறைத்துக்கொண்டான். மரகதம் அவனை பெற்றவள் அல்லவா என்னமோ வருகிறது என்று உணர்ந்தாள்.
“என்ன ராஜா?” என்றார்.
“எனக்கு சங்கீதாவை ரொம்ப பிடிச்சிருக்குமா” என்றான். “சரி” என்றார்.
“அவளுக்கு என்னை பிடிச்சிருக்கா தெரியலை, ஆனாலும் நான் அவளுக்கு செய்த கொடுமைக்கு அவ எப்படிமா என்னை மன்னிப்பா, என்னை எப்படிமா ஏத்துப்பா, நான் எந்த முகத்தோட அவகிட்ட நான் அவளை காதலிக்கிறேன்னு சொல்றது..... சொன்னா மட்டும் என்ன ஆகிட போகுது.... அவ இன்னமும் என்கிட்டே நெருங்கி ஒரு வார்த்தை கூட பேசறதில்லை.... இந்நிலையிலே அவளுக்கு அவங்க வீட்டுல வரன் பார்க்கிறாங்களாம் அவளே சொன்னா.... தந்தையின் இஷ்டத்துக்கே தான் விடணும், ஆனாலும் யாரனும் வந்து பழசை தெரிஞ்சு ஏதானும் அவமானமா பேசீட்டா செத்துடுவேன்னு சொன்னாமா.... நான் துடிச்சு போட்டேன் தெரியுமா” என்று கலங்கினான். அவன் தலை கோதினார் மரகதம்.

“என்னப்பா செய்யறது, அவ சொல்றது நிஜம்தானே, மானமுள்ள குடும்பத்து பொண்ணு இல்லையா, எப்படி பழி சொல் தாங்கிக்குவா சொல்லு” என்றார். “ஏம்மா நானே அவள பண்ணிகிட்டா அவளுக்கு இந்த மாதிரி பழி பாவம் எல்லாம் ஏற்பாடாது இல்லையாமா?” என்றான் முகம் மறைத்தபடி.
“அப்படி ஒரு எண்ணம் உன் மனசில இருக்கா ராஜா, நீ அந்த எண்ணத்துல இந்த முறை திடமா இருக்கியா?” என்றார். “ஆம்” என்றான்.
“அப்போ நீயே அவகிட்ட பேச வேண்டியதுதானே ராஜா” என்றார்.
“எப்படிமா அவகிட்ட போய் முதல்ல மறுத்துட்டு இப்போ அந்த ராக்ஷஷி என்னை மறுத்ததும் இவளை நீ வா நான் உன்னை பண்ணிக்கிறேன்னு சொன்னா நல்லாவா இருக்கும், இல்ல அவதான் அதுக்கு ஒப்புவாளா.... அதான் தயக்கமா இருக்கு” என்றான்.

“ஹ்ம்ம் அப்போ இதுக்கு என்னதான் வழி?” என்று கேட்டார்.
“அது எனக்கு தெரிஞ்சா. நான் ஏன்மா உன்னிடம் கேக்கறேன்” என்றான் சிறு பிள்ளையாக. சிரித்துக்கொண்டார் மரகதம்.
“போக்கிரி. பூனை பண்றதெல்லாம் கொட்டம் அடிச்சா பாவம்னு சொல்லுவாங்க.... பண்றதெல்லாம் பண்ணீட்டு இப்போ மட்டும் நான் வேணுமாக்கும்.... இரு பாப்போம், என்ன செய்யறதுன்னு யோசிக்கறேன்” என்றார்.
“சரி நீ போய் முகம் கழுவி ஏதானும் சாப்பிடு போ” என்று அனுப்பினார்.
எப்படி என்ன செய்வதென்று ஆலோசித்தபடி நாட்கள் கடக்க சித்து தவித்தான்.

அதே நேரம் அங்கே சங்கீதாவின் தந்தை அவளுக்கு ஒரு வரனை பேசி இருந்தார். அவர்களும் அன்று மாலை அவளை பெண்பார்க்க வருவதாக அவளிடம் அன்று காலை கூறினார்.
“பாரு கீதாகுட்டி, அவர் பேரு மூர்த்தி, நான் அவர்கிட்ட நடந்தது அத்தனையும் சொல்லீட்டேன்.... ஒளிவு மறைவே வெச்சுக்கலை. மொத்தமும் கேட்டுட்டு தாயும் மகனும் ரொம்ப வருத்தப் பட்டாங்கம்மா.... முழு மனசோட சம்மதிச்சு இன்னிக்கி உன்னை பார்க்க வராங்க.... நீ ஆபிஸ் போக வேண்டாம் மா... வீட்டுல ரெஸ்டா இரு, மாலை அவங்க வர்ற நேரத்துக்கு பளிச்சுன்னு சிரிச்சாபோல அலங்காரம் பண்ணிக்கிட்டு இருடா மா” என்றார்.
அவள் அதிர்ந்தாள். ‘வரன் இத்தனை சீக்கிரம் அமைந்துவிட்டதா அதுவும் எல்லாம் தெரிந்து ஒப்புக்கொண்டார்களா... இன்று பார்க்க வேறு வருகிறார்களா.....’ தந்தையின் பொறுப்பில் விட்டாள்தான் ஆனாலும் அவள் மனம் இன்னமும் ஒருநிலை படவில்லை.... சித்துவின் நினவு அவளை வாட்டியது.... இன்று எப்படி சமாளிப்பது, முடியாது என்றால் தந்தைக்கு மீண்டும் ஒரு அவமானம் ஆயிற்றே’ என்று குழம்பினாள்.



1 comment: