Thursday 9 August 2018

NESAMULLA VAANSUDARE - 3


“சின்ன பொண்ணுதானே சர், அதான் பாஸ் இன் முன்னே அமர்ந்து கொஞ்சம் டென்சாகீட்டுது” என்றார் நடராஜன்.
“சார், நான் சங்கீதாவோட கொஞ்சம் தனியா பேசணும், ஸோ இப் யு டோன்ட் மைன்ட்...” என்றான் அவரிடம்.
“ஓ ஷ்யூர் சர்” என்று அவர் வெளியேறினார். “நான் வரேன்” என்று எழுந்தாள். “உட்கார் சங்கீதா” என்றான். அவன் குரலின் ஆளுமை அவளை அமரச் செய்தது.
“நீ இப்போ ஏன் எழுந்தேனு சொல்லட்டுமா, நேரா உன் சீட்டுக்கு போய் ராஜினாமா எழுதி கொண்டு வரப் போறே, கரெக்டா?” என்றான்.
‘என் மனதை எப்படி படித்தான் ராஸ்கல்’ என்று புழுங்கினாள். ஆம் என்பதுபோல தலையை குனிந்துகொண்டாள்.

“ஏன் எதுக்கு ராஜினாமா செய்யணும், நான் உன்னை எந்த விதத்திலேயும் தொந்தரவு செய்ய மாட்டேன்.... நான் உன் முதலாளி நீ என்னிடம் வேலை செய்கிறாய், நமக்குள்ளே இருக்கும் உறவு அவ்வளவு மட்டுமே.... நம்ம வாழ்வில் நடந்து போன கசப்புக்கும் இந்த வேலைக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை..... முன்னைவிட நல்லா படிச்சிருக்கே அனுபவ பட்டிருப்பே.... அதனால நான் சொன்னது உனக்கே புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.....”

“இது ஒரு நல்ல பொசிஷன், உன் திறமைகளை வளர்த்துக்கொள்ள வெளிக்கொண்டுவர இது ஒரு நல்ல வாய்ப்பு.... அதை ஏன் என்னை பார்த்துட்டு இழக்கணும்..... நான் அன்னிக்கே சொன்னேனே, என்னாலான எந்த உதவியும் செய்வேன்னு.... நான் உதவி செய்யாமலே நீயாகவே இங்கே வேலைக்கு வந்திருக்கே, உனக்கு இதுவானும் செய்ய முடிஞ்சுதேன்னு எனக்கு சந்தோஷம்..... சோ ப்ளீஸ் போகாதே..... நான் உன் ரெசுமே பைல் இப்போதான். பார்த்தேன்.... நீ னு இப்போதான் தெரியும்.... உனக்கு நல்ல திறமை படிப்பு, உன்னைப் போன்ற ஒருவர்தான் இங்கே எனக்கு உதவிக்கு வேணும்..... லெட்ஸ் பி ப்ரிண்ட்ஸ்..... இல்லேனா அட்லீஸ்ட் நீ உன் வேலையை செய் நான் என் வேலையை செய்யறேன்..... ராஜினாமா வேண்டாம் என்ன..” என்றான் சின்னக் குழந்தைக்கு சொல்வதுபோல.

அவன் சொன்னதின் உண்மை புரிந்தது. சரியென்றே பட்டது. ஆம் படித்து அனுபவப்பட்டு இப்போது மேலும் தேர்ந்திருந்தாள் தான். எதையும் சமாளிக்கும் திறன் இப்போது இன்னமும் வந்திருந்தது. ஆனால் தினம் தினம் இவன் முன்னால் வேலை செய்துகொண்டு முடியுமா நம்மால் என்று கொஞ்சம் தயங்கினாள். மனதை படித்தவன் போல, “தயக்கம் வேண்டாம். நம்மளைப் பற்றி நான் இங்கே யாரிடமும் சொல்லவில்லை சொல்லவும் மாட்டேன்” என்றான். “என்ன?” என்றான். “சரி” என்றாள்.

“தட்ஸ் லைக் அ குட் கர்ள்” என்று மெச்சிக்கொண்டான்.
“சரி இன்னிக்கி இந்த ரிபோர்ட்செல்லாம் கொஞ்சம் பார்த்துடு..... பாயிண்ட்ஸ் போட்டு எடுத்து வந்துடு” என்று வேலை குடுத்தான். எழுந்து “தாங்க்ஸ்” என்று நகர்ந்துவிட்டாள். வாயில் வரை போனவளை நிறுத்தியது அவன் குரல். “சங்கீதா, அப்பா அம்மா தம்பி எல்லாம் நல்லா இருக்காங்களா?” என்றான்.
“ம்ம்” என்றுவிட்டு சென்றுவிட்டாள்.  

தன் சீட்டில் போய் அமர்ந்து அவன் குடுத்த வேலையில் மூழ்க முயன்றாள். இன்னமும் படபடப்பாக இருந்தது. ‘இவனை மறுபடி ஏன் சந்தித்தேன், என் மனதின் புண் ஆறிய நேரத்தில் இது அவசியமா, இவனிடம் கையேந்தி சம்பளம் வாங்கித்தான் நான் வாழ வேண்டுமா, ராஜினாமா செய்தால்தான் என்ன’ என்று எண்ணம் தோன்றியது. ‘அப்படி செய்தால் அவன் இன்னமும் பெரியவனாகி ஜெயித்தது போல ஆகும்.... நான், எனக்கு என்ன குறை.... தவறு செய்தவன் அவன், எனக்கு என்ன வந்தது.... என் திறமைக்கு ஏற்ற வேலை..... நான் பாட்டுக்கு என் வேலையை செய்யப் போகிறேன் அவ்வளவேதான்.... நான் ஏன் ஓடி ஒளிய வேண்டும்.... தேவை இல்லை’ என்று அவளின் இயல்பான நிமிர்வு வெளிவந்தது. மளமளவென வேலையில் மூழ்கினாள்.

அங்கே, அவள் போவதையே பார்த்திருந்த சித்தார்த் பெருமூச்சு விட்டான். ‘சற்றே பூசினாற்போல இருக்கிறாள். இன்னமும் அழகாக தெளிவாக இருக்கிறாள்... அறிவு சுடர் வீசுகிறது முகத்தில்..... அவள் கண்களில் முன்பிருந்த குழந்தைத்தனம் இப்போது இல்லை.... ஒரு நிமிர்வுடன் இருக்கிறாள்.... நல்லதே நடக்கட்டும்.... அவளது வாழ்வானும் செழிக்கட்டும்.... அவளாவது சந்தோஷமாக வாழட்டும்’ என்று மனமார வாழ்த்தினான்.

அவளைக் கண்ட பொழுதினில் அவன் மனதும் அலைபாய்ந்தது, பழையதை போனதை நினைத்து கலக்கம் கொண்டது. திருமணம் நின்றபின் அவனது பெற்றோர் அவனிடம் பேசுவதை அறவே நிறுத்திவிட்டனர். யாரோ போல ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். கொஞ்ச நாள் அப்படியே வாழ்ந்து எதிலும் இலக்கில்லாமல், இரவில் குடியும் பகலில் ஷாலுவை தேடலுமாக கழிந்தன நாட்கள்.
முந்திய சில வருடங்களில்தான் அவன் படித்து முடித்து இந்தியா திரும்பி இருந்தான். உடனே தந்தையின் உதவியுடன் தனக்கென ஒரு சின்ன கம்பனியையும் துவங்கி இருந்தான். துவக்கத்திலேயே நல்ல சூடு பிடித்தது, ஷாலுவுக்கு பணம் என்னும் பாராமல் தண்ணீராக செலவழித்து பரிசுகள் வாங்க அதுவும் ஒரு காரணம். ஆனால் அவள் காணாமல் போன இந்த சில மாதங்கள், அவளை தேடுதலும், திருமணத்தை தவிர்ப்பதும் பின் அதை நிறுத்துவதும் என தன் தொழிலை கவனிக்காமல் விட்டிருந்தான்.

இப்போது தன்னை எண்ணி அவனுக்கே உறுத்தலாக இருந்தது. முதலீடு செய்திருந்தது, தந்தையின் அயராத உழைப்பால் சம்பாதிக்கப் பட்ட பணம், அது அழிந்து நாசம் ஆவதை அவன் விரும்பவில்லை. பெற்றோருக்கு தகுந்த மகனாக விளங்க முடியவில்லை, அவரது பணத்தையும் விரையமாக விடக்கூடாது என்று முடிவு செய்தான். தினமும் சரியாக கம்பனிக்குச் சென்று வேலையைப் பார்த்தான். ஓரளவு நார்மலுக்கு வந்தது. பெரிய நஷ்டம் ஏற்படாமல் தவிர்க்கப் பட்டது. நடைமுறையில் கொண்டுவந்தபின் கொஞ்சம் அமைதியானான்.

ஆபிசிலும் வீட்டிலும் கூட தனிமையாக உணர்ந்தான். அப்படி அமர்ந்து யோசிக்கையில் ஷாலுவைப் பற்றி மட்டுமல்லாமல் அவனுக்காக தானும் மணக்க மறுத்து உதவி புரிந்த சங்கீதாவை அவனால் மறக்க முடியவில்லை. அவள்தான் எவ்வளவு உயர்ந்தவள் என்று எண்ணி மாய்ந்துபோனான். அவளுக்கு நான் செய்ததெல்லாம் கொடுமைகள் மட்டுமே என்று எண்ணி தன்னையே அசிங்கமாக நினைத்துக்கொண்டான்.

தன் நினைவுகளில் இருந்து மீண்டவன், தன் வேலைகளில் ஈடுபட்டான். பத்து நாட்களாக ஊரில் இல்லாததால் குமிந்து போயிருந்தது. அவனுக்கு தேவையான குறிப்புகளை செய்து எடுத்துக்கொண்டு அவனை வந்து மாலையில் சந்தித்தாள் சங்கீதா. அதை புரட்டி பார்த்தவன் திகைத்துப் போனான். மிகத் திறம்பட செய்யப்பட்டிருந்தது. மனதார பாராட்டினான். சின்ன சின்ன மாற்றங்கள் சொன்னான் சரி செய்து கொடுத்தாள்.

“என்ன முடிவு பண்ணி இருக்கே, உன் முடிவு எப்போதுமே சரியானதாகத் தான் இருக்கும்” என்றான் அவளை கேள்வியாக.
“வேலையில இருப்பேன்.... என் கடமைகளை செவ்வனே செய்வேன், ஆனா என்கிட்டே மேற்கொண்டு எந்த பேச்சும் வேண்டாம்..... அதுமட்டுமில்லை, என்னை நீ ன்னு ஒருமையில பேசாதீங்க, யாருக்கும் அது வித்யாசமா படும், அப்பறம் எனக்குதான் பிரச்னை...... எல்லோரையும் போல நீங்க வாங்கன்னே பேசுங்க, இது என் வேண்டுகோள்” என்றாள் கடினமாக முகத்தை வைத்தபடி.

அவன் சிரித்துக்கொண்டான். “சரி அப்படியே மேடம்” என்றான். “மற்றவர் முன் அப்படியே பேசறேன்.... தனியாக நீ என் அறையில் அமர்ந்து நாம் பேசும்போது ஒருமையில் பேசலாம்தானே?” என்று புன்னகைத்தான். அவள் என்ன சொல்லுவாள். பேசாமல் இருந்தாள். “ஒகே, மௌனம் சம்மதம்” என்று சிரித்தான்.
‘ஏன் இப்படி சிரித்து வைக்கிறான்.... இவன் சிரிப்பை பார்த்தாலே எனக்கு இவனிடம் கடுமையாக கோபத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் மறந்து போகிறதே’ என்று புழுங்கினாள். ஆனால் வேலையை அவன் பாராட்டிப் பேசியது அவளுக்கு நிம்மதியைத் தந்தது. இதேபோல தெளிவான நீரோடையாக இந்த வாழ்க்கை இருந்துவிட்டால் போதும் என்று திருப்தி ஏற்பட்டது.

வீட்டை அடைந்தவள் பெற்றோரிடம் இபோதைக்கு ஒன்றும் கூற வேண்டாம் அவர்களை கலவரப்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்தாள்.
தினம் வேலைக்கு போவதும் அங்கே தன் திறமைக்கு சவாலாக இருக்கும் வேலைகளை திறம்பட செய்து நிறைவு கொள்வதுமாக இருந்தாள் சங்கீதா. அவளின் ஒவ்வொரு செயலும் வேலை செய்யும் பாங்கும் அவனை கவர்ந்தது. கிரேட் என்று எண்ணிக்கொண்டான்.
என்னவே வேலைக்காக மட்டுமே என்று இருந்தபோதும் அவளிடம் ஒருவிதமான லேசான நெருக்கத்துடனேயே நடந்து கொண்டான். அவளை யாரோ போல நடத்த அவனுக்கு மனம் இடம் கொடுக்கவில்லை.

ப்ரீத்தி சங்கீதாவிடம் கேட்டுக்கொண்டிருந்தாள் “என்ன சங்கீதா, பாஸ் உன்னிடம் தனி அக்கறை எடுத்துக்கொள்வதாக பேச்சு அடி படுகிறதே... என்ன விஷயம்?” சங்கீதாவுக்கோ தூக்கி வாரி போட்டது.
“யாரு சொன்னா, இதென்ன இப்படி எல்லாம் பேசறாங்க, அப்படி ஒண்ணுமே இல்லையே ப்ரீத்தி” என்று கலங்கினாள்.

“ஐயோ இதுக்கு போய் ஏன்பா நீ கலங்கறே, ஆபிஸ் னா பலதும் பேசுவாங்க, அதில் வம்பும் இருக்கும் விஷயமும் இருக்கும்.... சார் உன்கிட்ட நல்லபடி நடந்துக்கறாரு, தன்மையா பேசறாரு, திட்டுவதே இல்லை.... அதான் போல. ஆனா என்ன சொல்லு சங்கீதா ஆள் ஹீரோவேதான்.... யாருக்கு குடுத்து வெச்சிருக்கோ..” என்று பெருமூச்சுவிட்டாள்.

“என்ன இது ப்ரீத்தி?” என்று சங்கீதா அவளைப் பார்த்து சிரித்தாள்.
“பின்ன என்ன செய்ய சொல்றே, என்னால இப்போதைக்கு முடிஞ்சுது பெருமூச்சு விடறது மட்டும்தான். எனக்குன்னுதான் ஒண்ணு இருக்கே, கிறுக்கு, என் மனசுக்கு பிடிச்ச கிறுக்கு... அதனோட எனக்கு நிச்சயம் வேற பண்ணீட்டாங்க..... அதான் நம்ம ஹீரோவுக்கு யார் குடுத்து வெச்சிருக்காங்களோன்னு பெருமூச்சு” என்றாள் கண் அடித்தபடி.

“அடி வாயாடி, இரு, உன் கிறுக்கு கிஷோர்கிட்ட சொல்றேன்” என்றாள்.
“ஐயோ தாயே பரதேவதை, அது ரொம்பவே பொஸஸிவ்... அதுங்கிட்ட போய் எதுவும் சொல்லி வைக்காதே” என்று திணறினாள்.
“அப்படி வா வழிக்கு” என்று சிரித்தாள் சங்கீதா. கூட சேர்ந்து ப்ரீதியும் சிரிக்க, அப்போது அந்த வழியே கடந்து போன சித்து அதை கண்டபடி சென்றான். புன்னகைத்துக்கொண்டான். அவள் அப்படி சிரித்து அவன் பார்த்ததில்லை. சிரிக்கும்போது கண்களும் கூட சேர்ந்து சிரிக்கின்றனவே. எவ்வளோ அழகாக இருக்கிறது என்று எண்ணிக்கொண்டான்.

“அப்படீன்னா நம்ம பாசுக்கு இன்னும் திருமணம் ஆகலையா?” என்றாள் தெரிந்துகொள்ளும் ஆவலுடன்.
“ஏன், நீ அப்ளை பண்ணலாம்னு பார்க்கறியா, ட்ரை பண்ணு, கிடைச்சாலும் கிடைக்கும் லாட்டரி பரிசு” என்றாள் ப்ரீத்தி மீண்டும் கண் சிமிட்டி.
“சீ சும்மா இரு ப்ரீத்தி, என்ன பேச்சு இது” என்று அவளை அடக்கினாள் சங்கீதா.
“இல்லைப்பா, இன்னும் ஆகலை.... முப்பது நெருங்குது, இரண்டு வருடத்துக்கு முன்ன ஒரு திருமணம் ஏற்பாடாகி ரிசெப்ஷன் வரை நடந்து பின் நின்னு போச்சாம்” என்று நிறுத்தினாள். சங்கீதாவிற்கு சர்வாங்கமும் பதறியது, தடுமாறினாள். “தனக்கு வேற யாரையோ பிடிச்சிருக்கு, இந்த திருமணத்துல தனக்கு துளியும் இஷ்டமில்லைன்னு பாஸ்தான் நிறுத்தினாராம்.... ஊரெல்லாம் ஒரே பேச்சா இருந்துதாம்.... அதன் பின் அடங்கி போச்சு.... ஆனா அதுக்கு பின்னால ஒண்ணும் நடக்கலை” என்றாள் ப்ரீத்தி சங்கீதா தன்னை மறைத்துக்கொள்ள பெரும்பாடு பட்டாள். வியர்த்து வழிந்தது. “என்னடி ஆச்சு?” என்றாள் ப்ரீத்தி. “இல்ல ஒண்ணுமில்ல” என்று சமாளித்தாள். 

“எப்போ பா உன் கல்யாணம்?” என்றாள் பேச்சை மாற்றியபடி சங்கீதா. “இன்னும் மூணு மாசம் இருக்கு.... நல்ல முகூர்த்தம் அப்போதான் இருக்குதாம், கிஷோருக்கும் கூட, அவர் வேலை செய்யும் பாங்க்ல ஏதோ தேர்வு இருக்காம்..... ‘அது முடிஞ்சுதான் கல்யாணம், இல்லேனா என்னால படிக்கச் முடியாது’ அப்படீன்னு சொல்லீட்டாரு” என்றாள்.
“ஒ அப்படியா, அது உண்மைதான்” என்றாள் சங்கீதா ஒரு மாதிரியாக.
“போடி, சும்மா இருக்க மாட்டே” என்று வெட்கப்பட்டாள் ப்ரீத்தி.
“ஆனா, ஏற்பாடுகள் ஆரம்பிச்சாச்சுபா” என்றாள்
“அட அப்படியா.... ஏதானும் ஹெல்ப் வேணும்னா சொல்லு ப்ரீத்தி, நான் செய்ய தயாரா இருக்கேன்....”
“கண்டிப்பா, நீதானே எனக்கு பெண் தோழி.... எனக்குன்னு இங்கே காலேஜ் தோழிகள் யாருமே இல்லைப்பா..... நான் படிச்சதெல்லாம் பங்களூரில.... அதுலேர்ந்து ரெண்டு மூணு பேர் டச்சுல இருக்காங்க, வருவாங்கன்னு நினைக்கிறன்..... நீ தான் என் கூட நிக்கணும் சங்கீதா” என்றாள்.
“கண்டிப்பா” என்றாள் சங்கீதாவும்.

அவள் அங்கு வேலைக்கு சேர்ந்து மூன்று மாதங்கள் முடிந்துவிட்டது. இப்போது அவள் பர்மனென்ட் செய்யப்பட்டிருந்தாள். சம்பளம் அலவன்ஸ் எல்லாமும் கூடுதலாகக் கிடைத்தது. பெற்றோருக்கு பெருமையே.
“என்னம்மா உனக்கு மேற்கொண்டு வரன் பார்க்க ஆரம்பிக்கட்டுமா?” என்றார் கணேசன்.
“ஐயோ அப்பா, நானே இப்போதான் நடந்தத மறந்துட்டு நிம்மதியா சந்தோஷமா சிரிச்சுகிட்டு வாழறேன், விட்டுடுங்கப்பா, அப்பறம் பாத்துக்கலாம்” என்றாள் சிணுங்கலாக.
“சரி மா, இன்னும் ஒரு வருஷம், அப்பறம் ஆரம்பிச்சுடுவேன்” என்றார் அவரும் சிரித்தபடி.

அந்நாளில் ஒரு மதியம் அவள் சித்துவுடன் ஆபிஸ் விஷயங்கள் பேசிக்கொண்டு அவன் அறையில் இருந்தபோது அவனுக்கு ஒரு போன் வந்தது. எடுத்து பேசியவன் முகம் பல உணர்சிகளை காட்டியது. அதிர்ச்சியாக பின் சந்தோஷம் பின் மகிழ்ச்சி மலர்ச்சி என்று. என்னவோ என்று அவன் முகம் பார்த்திருந்தாள். பேசி முடித்து வைத்தவன், “சங்கீதா இதை நாளைக்கு பார்க்கலாமா, எனக்கு கொஞ்சம் அர்ஜெண்டாக வெளியே போக வேண்டிய வேலை வந்திருக்கு” என்றான் கெஞ்சலாக.

“நோ ப்ராப்ளம் சர்” என்று எழுந்தாள். “பை தி பை, போன் ல யாருன்னு சொல்லு பார்க்கலாம்?” என்றான் குறும்பு கூத்தாடும் சந்தோஷ முகத்துடன். அவள் தெரியவில்லை என்று உதட்டை பிதுக்கினான்.
“அது என் ஷாலு” என்றான் எல்லையில்லா சந்தோஷத்துடன். “ஓ” என்றாள் அவளும், மூச்சு ஒரு முறை நின்று தணிந்தது. “எப்படி திடீர்னு, எங்கே போனாங்களாம்?” என்றாள் ஆவல் தாங்காமல். பின்னோடு நாக்கை கடித்துக்கொண்டு “சாரி” என்றாள்.
“நோ நோ, நீ ஏன் சாரி எல்லாம் சொல்லிக்கிட்டு..... உன்கிட்ட ஷேர் பண்ணிக்காம பின்ன வேற யார்கிட்ட ஷேர் பண்ணிப்பேன் நான்.... அதெல்லாம் விவரமா தெரியல..... நான் வந்துட்டேன் உங்கள உடனே பார்க்கணும், நிறைய பேசணும் என்னை பார்க்க வரீங்களான்னு கேட்டா.... ஏதோ ஹோட்டல்ல தங்கி இருக்காளாம்... அவள பார்க்கதான் போறேன்.... நாளைக்கு சந்திப்போம் சரியா, பை” என்று பறந்துவிட்டான்.

‘என் வாழ்வு நாசம் ஆனது இருக்கட்டும், அவன் வாழ்வாவது செழிக்கட்டும்’ என்று வேண்டிக் கொண்டாள். மனம் என்னமோ போல இருந்தது. ஏதோ சொல்லொணா அவஸ்தை.... ஏதோ ஏமாற்றம். ஏன் ஏமாற்றம் என்று கேட்டால் சொல்லத் தெரியவில்லை. மனதை அடக்கி வேலையில் மூழ்கினாள். ‘அவளை கண்டிருப்பானா, அவள் இவனின் காதலியாகவே இன்னும் இருப்பாளா.... இவனை ஏற்றுக்கொள்வாளா..’ என்று மனம் அவனுக்காக அலைபாய்ந்தது.
“ஹேய், நீ என்ன லூசா, அவன், அவளால உன் வாழ்க்கையையே தூக்கி போட்டு மிதிச்சவன்.... அவனுக்காக நீ நல்லது நடக்க வேண்டிக்கறே, இங்க உக்கார்ந்து கலங்கறே’ என்று அவளின் உள் மனது கடிந்து கொண்டது.

இரவு சரியாக தூங்க முடியவில்லை. அவளுக்கே சஸ்பென்ஸ் தாங்கவில்லையே அவன் நிலை எப்படி இருக்கும் என்று எண்ணிப்பார்த்தாள். அன்று காலை எழுந்து சுருக்கவே ஆபிஸ் கிளம்பி சென்றாள். அவன் இன்னமும் வந்திருக்கவில்லை. தன் வேலைகளில் கவனம் வைத்தபடி அவன் வந்துவிட்டானா என்று பார்த்திருந்தாள். அவன் அன்று முழுவதுமே ஆபிஸ் வரவில்லை. ‘வெகு நாட்களுக்குப் பிறகு சந்தித்துள்ளார்களே எங்கேனும் சென்றிருக்கக் கூடும்’ என்று எண்ணி தன்னை தேற்றிக்கொண்டாள்.

மறுநாள் முக்கியமான ஒரு மீட்டிங் இருந்தது. பர்சனல் ஆபிசரும் இவளுமாக வேண்டிய எல்லா ரிபோர்ட்களையும் தயார் நிலையில் வைத்தனர். அது பணியாளர்கள் சம்பள உயர்வு பற்றியது முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டிய மீட்டிங். அவன் வந்தே ஆக வேண்டும். அவள் சகலமும் ரெடி செய்து விரல் நுனியில் வைத்தாள். அவன் பேச வேண்டியவற்றை நோட் செய்து வைத்தாள். காத்திருக்க பதினோரு மணி மீட்டிங்கிற்க்கு அவன் பத்தரை மணி ஆகியும் வரவில்லை. நடராஜனுக்கு டென்ஷன் ஆனது.

“யூனியன் சம்பந்தப்பட்டதுமா, அவர் வராம முடியாது, முரண்டுவானுங்க.... நீ கொஞ்சம் கூப்பிட்டு பேசறியா, எனக்கு கொஞ்சம் உதறலா இருக்கு..... சில சமயம் கத்திடுவாரு” என்றார்.
“என்ன சர், உங்களையே கத்துவாருன்னா, நான் எப்படி?” என்று தயங்கினாள். “இல்லைமா, உன்கிட்ட கத்த மாட்டாரு, கூப்பிடுமா” என்றார். சரி என்று கொஞ்சம் தைர்யத்துடன் அவன் மொபைலுக்கு அழைத்தாள் அவரை அங்கேயே இருக்கும்படி கூறி. அவன் பல ரிங்குகளுக்குப் பிறகுதான் எடுத்தான். குரல் ஓய்ந்திருந்தது. கரகரப்பாக அழுததுபோல தொண்டை கட்டி. அவள் துணுக்குற்றாள்.


2 comments:

  1. I am so proud and happy that you portray the ladies in a strong character! Hats off to you!

    ReplyDelete
  2. Very nice and strong portrayal of Sangeetha! KalakkungO! Actually Sidharth nilamaiyaiyum azhaga padam pidichu kaati irukkeaL! Bravo for that! Keep rocking!

    ReplyDelete