Thursday 28 February 2019

UN KANNIL NEER VAZHINDHAL - 7


“இல்லை முடியாது அர்ச்சனா... சின்ன வயசு முதல் என் ஆசையே எனக்குன்னு ஒரு இண்டஸ்ட்ரி ஆரம்பிச்சு கால் உரைக்கணுங்கறதுதான்..... அது என் கனவு, அதை நான் யாருக்காகவும் விட்டு குடுக்க மாட்டேன்..... போறாததற்கு என் பெற்றோரை இங்கே அவதிப்பட விட்டுட்டு அப்படி ஒதுங்கி என் வேலையை பார்த்துகிட்டு ஓடிபோகவும் என்னால முடியாது.... எல்லாம் கூடி நான் போக முடியாத நிலையில் இருக்கேன் நான் கம்பனில சொல்லீட்டேன் அவங்களும் புரிஞ்சுகிட்டாங்க..... நான் அசலே என் சொந்த கம்பனிகுண்டான வேலைகளில் இறங்கியாச்சு..... லைசென்சே கூட வந்தாச்சு உனக்கும்தான் இது தெரியுமே” என்றான்.

“ஆமா பெரிய கம்பனி, தெரியாதாக்கும், நீங்க இருக்கறத விட்டுட்டு பறக்கறத பிடிக்க பார்க்கறீங்க, நீங்க எப்போ கம்பனி ஆரம்பிச்சு, அதுல எப்போ காலூனி, அது பெரிசாகி விரிவு படுத்தி நீங்க பெரிய மனுஷன் ஆகறது.... அதுவரைக்கும் நான் இதே வீட்டில உங்க அம்மாப்பாவோட உழண்டுகிட்டு இருக்கணுமாக்கும்..... எனக்கொண்ணும் அப்படி தலை எழுத்து இல்லை..... நான் அசலே சொன்னேன், நான் ராஜகுமாரியா வளர்ந்தவ, அதேபோல தான் இங்கெயும் இருப்பேன்.... நீங்களும் அப்படிதான் என்னை பார்த்துக்கணும்னு.... நீங்க காலில் வந்து விழுந்த சான்சை எட்டி உதைச்சிட்டீங்க.... அதுவும் என்னை கேட்காம நீங்களே வேண்டாம்னு வேற சொல்லீட்டீங்க....” என காலை உதைத்துக்கொண்டு கோவமாக கத்தி ரகளை செய்தாள்.
கீர்த்திக்கு அவளை எப்படி கையாள்வதென தெரியாமல் திணறினான்.

“நான் எங்கம்மா வீட்டுக்கு போறேன் கொஞ்ச நாளைக்கு” என்றாள்.
‘சரிபோய் வரட்டும், கொஞ்சம் தெளியும்’ என டிக்கட் போட்டான்...... போனவள் திரும்பவே இல்லை..... மூன்று மாதங்கள் ஆனது.....

இங்கே காஞ்சனா பட்ட படிப்பு முடிந்த கையோடு அவளுக்கு நல்ல வரன் வந்தது.....முகூர்த்தம் குறிக்கும் நேரத்தில் வீட்டின் மருமகள் அங்கே இல்லாவிடில் நன்றாக இருக்காதே என கற்பகம் மீண்டும் மீண்டும் போன் செய்து அழைத்தாள்....
“பார்க்கறேன் அப்பாக்கு முடியல, அம்மாக்கு காலில் சுளுக்கு” என சாக்கு போக்கு கூறினாள்.

ஒரு மாத காலமும் ஓடிட கற்பகம் அவள் தாயிடமே முறையிட்டாள்.
“கல்யாணம் நெருங்குது சம்பந்தியம்மா, கொஞ்சம் அனுப்பி வையுங்க” என மன்றாடினாள். அவரும் நல்ல வார்த்தையாக சொல்லி அனுப்பி வைத்தார்.... ஏதோ இவர்களுக்காக போனா போகிறதென வந்தவள் போல வந்தவள் ரூமை விட்டு வெளியே வரவில்லை, ஒருவேலையிலும் பங்கு கொள்ளவில்லை..... திருமண நேரத்திலும் கூட அப்படியே நடந்து கொண்டாள்..... சரி ஏதோ ஒன்று இங்கே இருக்கிறாளே என அனைவரும் வாயை மூடிக்கொண்டனர்.

வந்த கையோடு பிரிந்திருந்த உத்வேகத்தில், இயலாமையில் ஒரே ஒரு முறை, அதைத்தவிர அதன் பின்னே கீர்த்தியை அவளிடத்தில் நெருங்கவே அவள் விடவில்லை.
“எனக்கு கொஞ்சம் மென்சஸ் ப்ராப்ளம் இருக்கு அதனால் இதெல்லாம் வேணாம்” என அவனை ஒதுக்கிவிட்டாள்.... கொஞ்சம் சோர்வாகவும் தெரிந்தாள் என்பதால் அவனும் அவளிடம் நெருங்கவில்லை.
பக்குவமாகவே நடந்துகொண்டான்.... அன்பாக நடத்தினான்.... காஞ்சனாவின் திருமணத்திற்கென அவளுக்கும் நகை புடவை என வாங்கி இருந்தான்..... அவை எதுவும் அவளுக்கு ஒரு பொருட்டாக கண்ணிற்கு படவில்லை.

கல்யாணமும் நல்லபடி நடந்து முடிந்து காஞ்சனாவும் புக்ககம் சென்றாள்..
“அதான் எல்லா வேலையும் ஆச்சே, நான் கிளம்பறேன் அம்மா வீட்டுக்கு” என துடங்கினாள்.
“என்ன அர்சு இது, எப்போ பாரு அம்மா வீட்டுக்குனு கிளம்பினா எப்படி, இதானே உன் வீடு நீ இங்கே வாழாம பின்னே?” என்றான் சற்றே கோபத்தோடு.
“இங்கே இருந்து என்ன வாழணும் என்ன பாக்கி இருக்கு, எனக்கு பிடிச்சத என் மனசுக்கு வேண்டியதை எதுவும் நீங்க செய்யறது இல்லை பிறகென்ன,  நான் இங்கே எதுக்கு சும்மா அலங்கார பொம்மையாட்டமா, நான் எங்கம்மா வீட்டிலேயே நிம்மதியா இருக்கேன் கொஞ்ச நாளைக்கானும்” என்றாள்.
அவளை என்ன சொல்லி தடுப்பது என அறியாமல் குழம்பினான்.

“சரி போகலாம் இரு, ஒரு வாரம் போகட்டும்.... அப்பறமா போகலாம், நானே கொண்டு விடறேன்” என்றான். ஒரே வாரம்தான் என கண்டிஷன் போட்டாள்.
சொன்னபடி அடம் செய்து தன் வீட்டிற்கு சென்றேவிட்டாள்..... மீண்டும் சில வாரங்கள் இங்கே வரும் எண்ணமே இன்றி அவள் அங்கேயே இருக்க, கீர்த்தி அழைத்து பார்த்து மடுத்தான்..... ஒரு நாள் திடீரென்று அவளிடம் இருந்து ரெஜிஸ்தர் தபாலில் விவாகரத்து பத்திரம் வந்தது.... அதை வாங்கி கண்டவன் திடுக்கிட்டு போனான்..... உடனே அவளை அழைத்து,
“என்ன இது, உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு, எதுக்கு இப்போ விவாகரத்துக்கு அனுப்பி இருக்கே, நமக்குள்ள அப்படி என்ன நடந்துடுத்து.... நீ முதல்ல இங்க கிளம்பி வா, நாம எதுவானாலும் பேசி தீர்த்துக்கலாம், இல்லேனா சொல்லு, நானே அங்கே வரேன்” என்றான்.

“என்ன பேச பாக்கி இருக்கு, பேசாம கை எழுத்து போட்டு அனுப்ப வேண்டியதுதானே” என்றாள்.
“அப்படி எல்லாம் நீ சொல்றதுக்காக உடனே சட்டுனு கையொப்பம் இட்டு அனுப்ப முடியாது.... இதெல்லாம் சின்ன விஷயம் இல்லை, உனக்கு இன்னும் அதனோட விபரீதமே தெரியலையோன்னு தோணுது..... நீ வரியா நான் வரவா?” என்றான்.
“சரி சரி வரேன்..... நாலு நாளைக்குதான் வரேன், அதுக்குள்ள பேசி முடிவு பண்ணியாகணும்” என்றாள்.
சொன்னபடி வந்து சேர்ந்தாள்.... மற்றவருக்கு இந்த விவரம் தெரியாமல் மறைத்தான்....அவளுடன் என்னவே பேசினாலும் மாடியில் தனித்து தங்களது அறையில் வைத்தே பேசினான்.

“என்னாச்சுனு நீ இபப்டி நடந்துக்கற செல்லம், என்னகோபம் உனக்கு.... எதுவானாலும் சொல்லு பேசி தீத்துக்கலாம், இப்படி அவசரப்படாதே” என்றான்.
அவன் கெஞ்சல் அவள் காதில் எடுபடவில்லை.
“போதும் நிறைய பேசியாச்சு..... நீங்க, உங்களோட பொறுப்புகள், உங்க புதிய கம்பனி இதைப்பத்திதான் உங்களுக்கு அக்கறை..... என்னைப்பற்றி யோசிக்க உங்களுக்கேது நேரம்..... என் விருப்பு வெறுப்பு பத்தி உங்களுக்கு என்ன அக்கறை.... பேசாம பிரிஞ்சுடலாம்” என்றாள் முத்தாய்ப்பாக.

இனி இவளிடம் என்ன பேச, சிறு குழந்தை மிட்டாய் வேண்டும் என அடம் செய்வது போல இவள் விவாகரத்து வேண்டும் என்கிறாளே என மண்டை காய்ந்தது.... யாரிடம் முறையிட என திணறி அவள் தந்தையே அழைத்தான்
“என்ன மாமா சௌக்கியமா இருக்கீங்களா, என்ன நடக்குது... உங்க கிட்டயானும் ஏதானும் சொன்னாளா, என்ன இதெல்லாம்?” என கேட்டான்.

“என்னமோ, விவரமா எதுவும் சொல்லலை, ஆனா என் மக அந்த வீட்டில நிறைய கொடுமைகளை அனுபவிச்சிருக்கான்னு மட்டும் புரிஞ்சுது.... பேசாம ஒதுங்கீடுங்களேன்” என்றார் அவரும் விட்டேர்த்தியாக.... அதிர்ந்தான்.... குடும்பமே இப்படி எண்ணுகிறதா, அப்படி தான் செய்த தவறுதான் என்ன என யோசித்தான் பைத்தியம் பிடித்தது.

நாலு நாள் இருப்பாளே ஏதேனும் செய்ய முயலுவோம் என அடுத்த நாள் ஆபிஸ் சென்றான்.
சில நாழிகையில் அவன் அன்னை அவசரமாக அழைத்தாள்.
“கீர்த்தி, சீக்கிரமா வா பா.... உன் பெண்டாட்டி ரொம்ப வயித்து வலியால துடிக்கிறா..... எனக்கு என்ன பண்றதுன்னே புரியலை” என்றார்.
“தோ வரேன் மா, நீங்க பதறாதீங்க” என ஓடி வந்தான்.

அசலே ஏதோ ப்ராப்ளம் என்றாளே என அவளை அள்ளிக்கொண்டு ஹாஸ்பிடலை அடைந்தான்.
அங்கே சேர்த்துவிட்டு டாக்டர்கள் வந்து சொல்ல வெளியே காத்திருந்தான்.
வெளியே வந்த லேடி டாக்டர் “வாங்க என் ரூமுக்கு” என்று அழைத்து போனார்.

“நீங்க எல்லாம் படிச்சவங்க தானே, குழந்தை வேண்டாம்னா அதுக்கேத்த பாதுகாப்போட நீங்க நடந்திருக்கணும், அதை விட்டுட்டு வயிற்றில் முளைத்ததை இப்படி அநியாயமா கொல்ல முயற்சி செய்திருக்கீங்க, அதுவும்நாள் தாண்டி போய் செய்து அரைகுறையா ஆகி இருக்கு...... அதன் மிச்சம் மீதி உள்ளே தங்கி இப்போ இன்பெக்ஷன் ஆகி இருக்கு, உங்களுக்கெல்லாம் எப்படி சொல்லி புரிய வைக்கறதுன்னே எங்களுக்கு சில சமயம் விளங்கறதில்லை” என பொரிந்து தள்ளினார்.

கீர்த்தி ஒன்றும் புரியாமல் விழித்தான்... ‘குழந்தையா, அர்ச்சனாவிற்கா, தனக்கா, பிறக்க போவதாக... மாசமாக இருப்பதாக ஒரு நாளும் அவள் கூறவில்லையே?’ என திணறினான.

“டாக்டர், ஆனா அவ அப்படி எதுவும் இருந்தா மாதிரி தெரியலையே, நீங்க சரியா செக் பன்ணிணீங்களா, இது அதுதானா இல்லே வேற ஏதனும் இன்பெக்ஷனா இருக்க போகுது?” என அவரையே கெஞ்சினான்.
அவர் இவனை ஏளனமாக பார்த்தார்.
“என்ன சொல்ல வரீங்க, அவங்க மாசமா இருந்ததை உங்க கிட்ட சொல்லக் கூடவா இல்லை, நீங்க கணவன் மனைவிதானே, ரெண்டுபேரும் சேர்ந்துதானே வாழறீங்க?” என்றார்.
“ஆம்” என்றான் தலை குனிந்து.
“அப்போ இதைப்பத்தி உங்களுக்கு ஒண்ணுமே தெரியாதா?” என்றார் அவர் ஆச்சர்யத்துடன். “ஆம்” என்றான்
“ஓ, தென் ஐ ஆம் சாரி.....முதல்ல உங்க மனைவியை அவங்க புத்தியை நீங்க சரி பண்ணிக்கணும்.... என்னால அவங்க உடம்பைத்தான் குணபடுத்த முடியும்.... பெட் ரெஸ்ட்ல இருக்கணும் பதினஞ்சு நாளைக்கு.... நான் இப்போ இன்னொரு டி என் சி பண்ணீட்டேன்” என்றார்
அவன் வாய் மௌனித்து வெளியே வந்தான்..... இதெப்பிடி இப்படியும் இருப்பாளா ஒருத்தி.... என்னிடம் மறைத்துவிட்டாளே.... அதுதான் போதாதென என்னிடம் கூறாமல் கலைத்தும் விட்டாளே பாவி..... நான் குழந்தைக்கு எப்படி ஏங்குகிறேன் என இவளுக்கா தெரியாது....ஒவ்வொருமுறையும் இப்போது இல்லை அப்போது இல்லை என தள்ளி போட்டுக்கொண்டே வந்தாளே....இரண்டு வருடங்கள் ஆன பின்னும் வேண்டி நின்றானே. இப்படியா அக வேண்டும் தன் ஆசை என எண்ணி மருகினான்.

அர்ச்சனாவின் அக்கா அர்பிதாவிற்கு தெரியாமல் இருக்காது என அவள் எண்ணை சுழற்றினான.
அவள் பல ரிங்குகளுக்கு பிறகே எடுத்தாள். தயக்கத்துடனேயே
“ஹலோ கீர்த்தி, சொல்லுங்க” என்றாள்.
“எப்படி இருக்கே அர்பிதா?”என்றான்.
“நான் நல்லா இருக்கேன் கீர்த்தி, நீங்க?” என்றாள். இப்போதும் தட்டு தடுமாறியே வந்தன வார்த்தைகள். அதிலிருந்தே ஏதோ சரி இல்லை என உணர்ந்தான்.

“அர்ச்சனா எப்படி இருக்கா?” என்றாள்.
“ஹ்ம்ம் நல்லா இல்லை” என்றான்.
“ஏன் என்ன?” என பதறினாள்.
“அவளுக்கு என்னாச்சுன்னு நீதான் எனக்கு சொல்லணும் அர்பிதா” என்றான்.
“என்னாச்சு கீர்த்தி?” ப்ளீஸ் சொல்லுங்களேன்” என்றாள்.
“அவ இப்போ ஹாஸ்பிடல்ல இருக்கா அர்பிதா....அவளுக்கு நடந்த டி என் சி நல்லபடி நடக்கலையாம்... அதன் மிச்சம் மீதி இப்போ இன்பெக்ஷனா மாறி இருக்கு னு மறுபடி கொண்டு சேர்த்திருக்கேன்.... இப்போ மீண்டும் பண்ணி இருக்காங்க.”

“உனக்கு தெரியாமல் இருக்காது, இப்போவானும் என்ன நடந்துது னு உண்மைய சொல்றியா எனக்கு..... அதை தெரிஞ்சுக்க எனக்கு எல்லா உரிமையும் இருக்குனு உனக்கும் தெரியும், எனக்கும் தெரியும்” என்றான் வருத்தம் கோபம் நிறைந்த வார்த்தைகளில்.

“அது வந்து கீர்த்தி, நான் அர்சுகிட்ட எவ்வளவோ சொன்னேன்.... அவ எம் பேச்சை கேக்கவே இல்லை.... வேறே யார்கிட்டயோ போய் பண்ணிப்பேன்னு நின்னா..... நான் பண்ண மாட்டேன், உன் கிட்ட பேசுவேன்னு சொன்னேன்.... அதுக்கு என்னோட அவ பேசறதை நிறுத்தீட்டா.... உன்கிட்ட சொன்னா அவ மேல ஆணை னு வேற சொல்லீட்டா.... தானே வேறே டாக்டரை வேற போய் பார்த்தா..... அதுனாலதான் வேற வழி இல்லாம நானே எனக்கு தெரிஞ்ச ஒரு லேடி டாக்டர்கிட்ட அழைச்சுகிட்டு போனேன்..... அவங்க நல்லவங்கதான், நல்லபடி தான் செய்வாங்க..... இது ஏதோ எங்கியோ தவறு நடந்து போச்சு போல.... என்னை மன்னிச்சுடுங்க கீர்த்தி.....

அவள் இங்கே வந்தபோதுதான் எங்களுக்கே சொன்னா அவளுக்கு நாள் தள்ளி போயிருக்குனு..... அப்பா அம்மா நான் எல்லாருமே ரொம்ப சந்தோஷபட்டோம்... ஆனா அவளுக்கு இதில் இஷ்டமில்லை.... அது மட்டுமில்லை, உங்களை பழிவாங்க இதை அவ ஒரு நல்ல ஆயுதமா யூஸ் பண்ணிகிட்டா..... அதான் ஏன்னு எனக்கு இன்னமும் புரியலை....நானா எவ்வளவோ கேட்டும் நல்ல வார்த்தை சொல்லியும் அவ கேட்கலை..... எனக்கு அதில் பலத்த வருத்தம் தான் கீர்த்தி” என்றாள்.

“ஹ்ம்ம் வருத்தம்னு ஒரே வார்த்தையில நீங்க எல்லாம் இதை முடிச்சிட்டீங்க அர்பிதா, ஆனா, எனக்கு இது என்னோட வாரிசு, எனக்கு குழந்தை மேல இருக்கிற விருப்பம் அவளுக்கு தெரியும்..... தெரிஞ்சும் இப்படி என்னையே கேட்காம என் வாரிசை அழிச்சுட்டா..... இதை நான் பொறுத்து போகவே முடியாது அர்பிதா..... என்னால அவளை மன்னிக்கவே முடியாது... என்னோட அனுமதி கை ஒப்பம் இல்லாம இதை எப்படி கலைச்சீங்க, அந்த டாக்டர் எப்படி ஒப்பினாங்க” என்றான் வெறுப்புடன்.

“கீர்த்தி அவசரப்படாதீங்க, அவளுக்கு இன்னும் சிறுபிள்ளைத்தனம் விடலை” என்றாள்.
“இது சிறுபிள்ளைதனமா அர்பிதா?” என்றான் கோபமாக.
“இல்லவே இல்லை, இது அப்படி இல்லை, தெரிஞ்சே, புரிஞ்சே, ப்ளான் பண்ணி நாசபடுத்தீட்டா....
எங்க கம்பனில லண்டனுக்கு பத்து வருடங்கள் போக சொன்னாங்க, நான் போக மறுத்துட்டேன்.... போயாகணும்னு இவ மல்லுக்கு நின்னா..... நான் முடியதுன்னேன்.... இங்கேயே உழல எனக்கு இஷ்டமில்லைன்னு அடம் பிடிச்சா..... நான் போக முடியாது நான் இங்க யூனிட் ஆரம்பிக்க ப்ளான் பண்ணி வேலைகளை ஆரம்பிச்சாச்சுனு சொன்னேன்..... அதுக்காக என்னை பழி வாங்கீட்டா அர்பிதா..... என் மகனை கொன்னுட்டா..... ஒரு கொலைகாரியோட இனி என்னால வாழ முடியாது அர்பிதா” என்றான்.

“ஐயோ என்ன இப்படி எல்லாம் சொல்றீங்க கீர்த்தி.... பொறுமையா இருங்க, பிளீஸ் நான் பேசறேன் அவளோட, உங்க அருமை அவளுக்கு தெரியலை” என மன்றாடினாள்.
“இல்லை நானும் இத்தனை நாளா பொறுமையோட தான் அவ பண்ணின அத்தனை அட்டகாசங்களையும் தாங்கினேன்.... அவளிடம் நல்லவிதமாவே நடந்துகிட்டேன்... அவளை நல்லபடி பார்த்துகிட்டேன்..... ஆனா இது அதற்கெல்லாம் உச்சகட்டம்.... முடிஞ்சு போச்சு, எல்லாமே முடிஞ்சு போச்சு..... யுடிரஸ் வீக்காகி இருக்கு, இன்னும் சில வருடங்கள் அவள் கருத்தரிக்காமல் இருப்பது நல்லதுன்னு இப்போதான் டாக்டர் சொன்னாங்க...... இன்னும் என்ன வேணும்..... தன்னையும் அழிச்சுகிட்டு என் பிள்ளையையும் அழிச்சு என்னையும் அழிச்சுட்டா உன் தங்கை....

சீ இவளும் ஒரு பெண்ணா... செய்யறதெல்லாம் அவ செய்துட்டு என்ன தைர்யம் இருந்தா எனக்கே விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருப்பா, இதுக்கு நீங்களும் உடந்தை வேற... உங்கப்பாவே அதைதான் என்கிட்டே சொல்றாரு.... செய்த பாவத்தை என்னிடம் இருந்து மறைக்கத்தானே இந்த அவசர கதி விவாகரத்து ஏற்பாடு?” என ஆத்திரப்பட்டான்.

“விவாகரத்தா.... நோட்டீசா, என்ன சொல்றீங்க கீர்த்தி, இதெல்லாம் எனக்கொண்ணும் தெரியாதே, அவ உங்களுக்கு அனுப்பிச்சாளா.... எனக்கு ஒண்ணுமே புரியலையே கீர்த்தி?” என்றாள் அர்பிதா.
“என்கிட்டே ஏன் கேட்கிற, உன் தங்கை கிட்டே போய் கேளு..... சீ, நல்ல குடும்பம்..... அவ என்ன எனக்கு விவாகரத்து குடுக்கறது, நான் குடுக்கறேன் அவளுக்கு உடனடியா....இனியும் அவளோட நான் வாழ்வேன்னு நீங்க யாருமே கனவும் காண வேண்டாம்” என கர்ஜித்தான்.

நேரே வீட்டிற்கு சென்றான். அன்னை “என்னப்பா நடந்துச்சு.... நான் கூட வரேன்னேன் என்னையும் கூட்டி போகலை..... எப்படி இருக்கா அர்ச்சனா, நீ ஏன் அவளை அங்கே தனியா விட்டுட்டு இங்கே வந்தே, டாக்டர் என்ன சொன்னாங்க.... ஏன் அப்படி வயித்து வலின்னு துடிச்சா?” என பல கேள்விகள் கேட்டார்.

“அம்மா எல்லாம் முடிஞ்சு போச்சு.... இனி அவ உன் மருமக இல்லை.... அவ்ளோதான் விட்டுடு மறந்துடு” என்றான.
“ஐயோ என்னடா, என்னென்னமோ சொல்றே.... வாய கழுவு, என்ன பேச்சு இது” என அலறினார்.
“அம்மா சத்தம் போடாதே.... அப்பாக்கு இதெல்லாம் தெரிய வேண்டாம்.... இப்போதைக்கு உன்னோட வெச்சுக்கோ” என நாலு வரிகளில் விவரித்தான்.
“ஐயோ” என வாய் பொத்தி அலறினார் கற்பகம்.
“எப்படீடா அவளுக்கு இப்படி செய்ய மனசு வந்தது..... சம்பந்தி கூட ஒரு வார்த்தை விஷயம் இப்படின்னு நமக்கு கூப்பிட்டு சொல்லலையேடா..... இதென்னடா குடும்பமே இப்படி இருக்கு” என்று அங்கலாய்த்தார்.
“அவ எல்லாரையும் ஆணையிட்டு அடக்கி இருக்கா..... அர்பிதா கிட்ட நான் எல்லாத்தையும் கேட்டேன்.... போதும் மா, நான் ஓய்ஞ்சு போய்டேன்.....இவளோட இனி என்னால முடியாதுமா..... இதான் மா உச்சம்... தாங்காது மா.... போதும்” என கை எடுத்து கும்பிட்டான்.

இரண்டாம் நாள் மாலை டிஸ்சார்ஜ் என்றனரே என வேண்டா வெறுப்பாக அங்கே சென்றான்.... அவளிடம் ஒரு வார்த்தையும் பேசாது, அவள் முகம் காணாது ஹாஸ்பிடல் பில் செட்டில் செய்தபின் அவளை கை தாங்கலாக அழைத்து வந்து காரில் ஏற்றினான்.... அவனுக்கு தன் நிலையை டாக்டர் விவரமாக சொல்லி இருப்பார்.... அவன் கத்துவான், திட்டுவான் என எதிர்பார்த்து அர்ச்சனா பயந்து தான் இருந்தாள்..... அவனின் இந்த ஆழ் கடல் அமைதி அவளை திணற வைத்தது.

“அது வந்து, சாரி” என ஏதோ சொல்ல வந்தாள். ஒரு கையை தூக்கி காமித்து அவளை பேசாதே என அடக்கினான்..... நேரே விமான நிலையத்திற்கு சென்றான்.... ஏற்கனவே அவளது டிக்கட் எடுத்திருந்தான்..... அவளை வீல்சேர் கொண்டு வர செய்து அதில் ஏற்றி விமானத்திற்கு அனுப்பி வைத்தான்.... அவனை ஏன் இப்படி செய்கிறான் என கண்டவளை முகமே காணாது மடங்கி நடந்தான்..... அவளுக்கு பயம், கோபம் ஆத்திரம், அழுகை அவமானம் எல்லாம் தோண கண்ணீர் வழிந்தோடியது.

காருக்கு வந்து அர்பிதாவையும் அவனது மாமனாரையும் அழைத்தான்....
“விமானத்தில ஏத்தி விட்டுருக்கேன்.... ஒரு மணியில அங்க வந்து சேரும்..... அவ உடல் நிலை சரி இல்லை.... பார்த்து வீட்டுக்கு அழைச்சுட்டு போய் பார்த்துக்குங்க” என்றான்.
மேற்கொண்டு மாமாவை பேச விடாமல் லைனை கட் செய்தான்... அர்பிதாவிடம் டாக்டர் அவனிடம் சொன்ன அறிவுரைகளை ஒப்பித்தான்.
“அர்பிதா, நீயும் ஒரு டாக்டர்.... அங்கே பக்கத்திலேயே தான் நீயும் இருக்கே, அவளை எப்படி பார்த்துக்கணும்னு நான் உனக்கு சொல்ல தேவை இல்லை, எனக்கு சொல்ல அவசியமும் இல்லை.... இனி நீங்களாச்சு உங்க வீட்டு ராஜகுமாரி ஆச்சு..... எனக்கும் அவளுக்கும் எந்த சொந்தமும் பந்தமும் இல்லை” என்றான்.



4 comments: