Sunday 24 February 2019

UN KANNIL NEER VAZHINDHAL - 3


கற்பகத்தின் அறையை சுத்தமாக வைத்துக்கொண்டாள், அன்றலர்ந்த மலர்களை குடுவையில் நிரப்பி அங்காங்கு வைத்தாள்.... பக்தி பாடல்கள் காற்றில் மிதந்தது வந்தன... துப்புரவான படுக்கை விரிப்புகளும் திரைசீலைகளும் மிளிர்ந்தன.... கற்பகமே இதை எல்லாம் கண்டு உற்சாகமாக தென்பட்டார்..... உண்மையான நேசத்துடன் மனு அவரை கவனித்துக்கொள்வதை உணர்ந்தார்.

சில நாட்கள் அவளை அவளது அன்பான கவனிப்பை அவள் காணாமல் கண்டுகொண்டுதான் இருந்தான் கீர்த்திவாசன்.
அம்மாவிடமும் நல்ல வார்த்தைகளே வந்தன அவளை பற்றி....
“ரொம்ப நல்ல மாதிரி கீர்த்தி.... நன்னா பார்த்துக்கறா என்னை” என்று மொழிந்தார் கற்பகம்.
“ஹ்ம்ம் பார்க்கலாம் எத்தனை நாளைக்கு நிலைக்கறதோ அத்தனை நாள்” என்றான் பெருமூச்சுடன்.
வேலை விஷயமாக இனி தான் நிம்மதியாக சுற்ற முடியும் என கொஞ்சம் நம்பிக்கை வந்ததுதான்.
வெளிநாடு போக வேண்டி வந்தது. போகும் முன் மனுவை அழைத்தான்.

“பாரு மனஸ்வினி, நான் வெளிநாடு செல்ல வேண்டிய கட்டாயம், நீ இருக்கே, அம்மாவை நல்லபடி பார்த்துப்பேன்னு நான் நம்பி கிளம்பறேன், அதுக்கு தகுந்தாற்போல நல்லபடி பார்த்துப்பேன்னு நம்பறேன்.... இங்கேயே தான் இருக்கணும், அம்மாவை விட்டு எங்கும் போக கூடாது, அரட்டை அடிக்கறேன்னு யாரோடும் எதுவும் வைத்துக்கொள்ள கூடாது..... பார்த்து நடந்துக்க” என்றான். குரல் திண்ணமாக வந்தாலும் முன்பு போல கடினம் இல்லை. மிரட்டலாகவும் இல்லை.

“கண்டிப்பா பார்த்துப்பேன்..... நீங்க நிச்சிந்தையாக போய் வரலாம்” என்றாள் அவனை நேரே பார்த்து.
அவன் கிளம்பியபின் கற்பகமும் மனுவுமாக மிகுந்த மகிழ்ச்சியாக அரட்டை அடித்தபடி காலம் கழித்தனர்..... காமெடி படங்கள் காட்சிகள் என ஓடவிட்டு இருவரும் சிரித்தனர்.....அவளுடன் நேரம் போவது தெரியாமல் சந்தோஷமாக நேரம் கழித்தார் கற்பகம்.....

“நீ வந்தப்பறமா நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் மனு, என்னை இந்த அளவு சொந்த தாயை போல யாரும் பார்த்துகிட்டது இல்லை..... உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, நீ ஏன் இந்த நாலு புடவையையே திரும்ப திரும்ப தோய்ச்சு கட்டிக்கற, இந்தா என் பீரோ சாவி, அதை திற.... நான் என் புடவை எல்லாம் கட்டிக்கறதே இல்லை, அதிலே நாலு எடுத்துக்கோ” என்றார்.

“ஐயோ வேண்டாம் ஆண்ட்டி, இருக்கறதே போதும்” என்று தடுத்தாள்.
“நான் சொன்னா கேக்கணும், இல்லேனா நான் கோச்சுப்பேன் திற”. என்றார்.
“இல்ல ஆண்ட்டி, சார் ஏதானும்...” என தயங்கினாள்.
“அவன் கெடக்கான், அதெல்லாம் ஒண்ணும் சொல்லாம நான் பார்த்துப்பேன்.... அவனும் நல்லவன் தான் மனு மா.... அவன் ரொம்பவே பாவம் மா... அவனுக்கு ஏற்பட்ட நிலைமை அப்படி, அதுக்கு பிறகுதான் அவன் இப்படி ஆயிட்டான்...... நீ அவனை தவறா எண்ணாதே” என்றார் கண்ணில் சோகம் வழிய.

“ஐயோ இல்லை ஆண்ட்டி, ஸ்ட்ரிக்டா இருக்கறது நல்லதுதான்.... எல்லோரும் நல்லவங்களா இருக்க மாட்டாங்க இல்லையா.... அப்படி இருந்தாதானே பயத்தோடு சரியா வேலை செய்வாங்க” என்றாள்.
“ம்ம் நல்லா பேசறே, சரி இப்போ பிரோவை திற” என்றார்.
“வேண்டாம் ப்ளீஸ்” என்றாள்.
“திறக்க போறியா இல்லையா” என்றார்.
சரியென சாவியை வாங்கி திறந்தாள்..... அதில் மேலெழ இருந்த சில புடவைகளை காட்டி “இந்த நாலையும் எடுத்துக்கோ” என்றார்.
“வேண்டாம் ஆண்ட்டி” என்றாள்.
“அட ராமா, என்ன இது கிளிப்பிள்ளை மாதிரி வேண்டாம் வேண்டாம்னு.... நான் சொல்றேன் எடுத்துக்கோ” என இரைந்தார்.
கீழே வேலை செய்யும் வேலைக்கார பெண்ணையும் அழைத்து இரண்டு புடவைகளை குடுத்தார். இவளுக்கு என்ன கொடுத்தாரோ என்பதிலேயே இருந்தது அந்தப் பெண்ணின் பார்வை.

வேறு வழி இன்றி புடவைகளை எடுத்துக்கொண்டாள் மனு..... தான் தன் நிலை இப்படியா என ஒரு கணம் மனம் துணுக்குற்றது..... ஆனால் ‘இப்படிதானே இருக்கிறோம் இருக்கற இடத்தில உள்ளபடி நிலையில் அப்படியே வாழ்வதுதான் உசிதம்’ என மனதை திடபடுத்திக்கொண்டாள்.

கீர்த்தி வர மாதம் பிடித்தது, அந்த ஒரு மாத காலத்தில் கற்பகமும் மனுவும் மிக நெருங்கி விட்டனர்.... இவளின் அன்பான உபசரிப்பில் கவனிப்பில் கற்பகம் நல்லபடியாகவே தனியே  ஸ்டிக்குடன் நடமாடும் அளவுக்கு வந்துவிட்டார்.... காலை மாலை இரு பொழுதும் தோட்டத்தில் விரும்பி நடமாடினார்.... டாக்டரும் அதை கண்டு நல்லது என பாராட்டினார்.

அன்று காலை எழுந்து குளித்து உடுத்தி பூஜை அறையில் சில நிமிடம் நின்று தொழுது விட்டு சிற்றுண்டி எடுத்துக்கொண்ட பின் மெல்ல தோட்டத்தில் நடமாடிக்கொண்டு இருந்தார். புத்துணற்சியுடன் மனுவிடம் சிரித்து பேசியபடி அவர் ஈசியாக நடமாட அதை ஆச்சர்யத்துடன் கண்டபடி கீர்த்தி காரில் உள்ளே நுழைந்தான்.
‘அம்மாவா இது, அவ்ளோ சிரிப்பு சந்தோஷம், நல்லபடியா ஈசியா நடமாடறாங்க வேற’ என அதிசயித்தான். காரை விட்டு இறங்கியவன் சுற்றும் மனுவை தேடினான. மனு தடுப்பு சுவரின் பக்கத்தில் நகர்ந்து நின்று தன்னை நோக்கி நடந்து வரும் கற்பகத்தை உற்சாகப்படுத்திக்கொண்டு நின்றிருந்தாள். அவன் நின்ற இடத்தில இருந்து அவனால் அவள் நின்றதை காண முடியவில்லை.

‘ஆமா மனு எங்கே போனா, அம்மா தனியாவா நடக்கறாங்க?’ என துணுக்குற்றான்.
“அம்மா” என்றான் அருகே சென்றபடி.
“வாப்பா கீர்த்தி” என ஆசையுடன் சிரித்தபடி வரவேற்றார் கற்பகம்.
“ஆமா நீ இங்க தனியா என்ன பண்ணறே, தனியா யாரு உன்னை நடமாட சொன்னா, எங்கே போனா அந்த மனு?” என்று இரைந்தான்.
“கஷ்டம், வந்ததுமே ஆரம்பிச்சுட்டியா, தோ இங்கேதானே இருக்கா, அவ இல்லாம நான் ஏது, அப்படி என்னை அவ தனியா விட்டுடுவாளா என்ன, சரியான சந்தேகப்ராணி டா நீ பையா” என செல்லமாக கடிந்து கொண்டாள்.
“தோ நிக்கறா பாரு, எதிர்த்தாப்ல நின்னு என்னை தன்னை நோக்கி நடந்து வர வெச்சுண்டு இருக்கா, அவ்ளோதான்” என்றார்.

அப்போதே அவன் குரல் கேட்டு சரேலென வெளியே வந்தாள் மனு..... சாதா காட்டன் சேலை நீட்டாக உடுத்தி தலை குளித்து நுனியில் முடிச்சிட்டு விரித்து விட்ட முடியும் சிரித்த அழகு முகமாக மிளிர அவள் அப்படி சரேலென முன்னே வந்தபோது கீர்த்தி தடுமாறித்தான் போனான்.
“ஹப்பா ஆள அசத்தறாளே’ என தலை கிறுகிறுத்து போனது.... உடனே மறைத்துக்கொண்டான்.
“ஒ” என்றான் அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடி. பார்வையை அகற்ற முடியாமல் திணறினான்.
“நல்லபடி நடக்கறியே மா” என்றான் மகிழ்ச்சியாக,
“ஆமா பின்ன, யாரோட ட்ரெயினிங்” என்றார் பெருமையாக. கூச்சத்துடன் சிரித்தாள் மனு. பளீரென்ற அவள் சிரிப்பில் மேலும் மதி மயங்கி போனான் மெல்ல சுதாரித்துக்கொண்டான்.
“வா பா, உள்ள வா, கை கால் கழுவி ஏதானும் சாப்பிடு, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ ஜெட் லாக் இருக்குமே பாவம்” என்றார்.

அவனுடனேயே பேசியபடி அவர் மெல்ல நடக்க மனு கொஞ்சம் பின் தங்கினாள்..... தாய்க்கும் மகனுக்குமான அந்த பாச பிணைப்பான நேரத்தில் தான் நடுவில் போக தேவை இல்லை என நின்று மெல்ல பின் தொடர்ந்தாள். உள்ளே வந்து டைனிங் ஹாலை அடைந்து அவன் அமர அவனுடன் கூடவே கற்பகமும் அமர்ந்தார். பின்னே வந்த மனுவை கண்டு

“என்ன மனு, பின் தங்கீட்டே, போய் சுபாகிட்ட சொல்லி சிற்றுண்டி எடுத்து வர  சொல்லு கீர்த்திக்கு” என்றார்.
“சரி ஆண்ட்டி” என உள்ளே ஓடினாள்.
“சுபாகா, சார் வந்துட்டாரு, அம்மா டிபன் எடுத்துட்டு வர சொல்றாங்க” என்றாள்.
“அப்படியா, சார் வரப்போறது தெரியாதே.... போட்ட பூரி எல்லாம் ஆயிடுச்சு... தேய்ச்சா தான், சாகு மட்டும்தான் இருக்கு” என கையை பிசைந்தாள்.
“அவ்ளோதானே, நான் பூரியை தேய்கறேன், நீங்க சாகுவை சுட பண்ணுங்க, அந்த அடுப்பில எண்ணையை சுட வையுங்க.... ரெண்டு நிமிடத்தில் ஆயிடும்” என மள மள வென காரியத்தில் இறங்கினாள்.

அவள் சொன்னபடி சாகுவை சுட பண்ண இவள் பூரிகளை மிருதுவாக தேய்த்தாள்.எண்ணெய் காய்ந்ததும் அதில் போட்டு பதமாக அமுக்க, பொங்கி பூரித்து எழுந்தன பூரிகள்..... அவற்றை வடித்து ப்ளேட்டில் அடுக்கினாள். ஆறு பூரிகள் தயாரானதும் சாகுவுடன் சுபாவிடம் குடுத்து அனுப்பினாள்.

“வா வா சுபா, ஒ சூடா பொரிச்சியா நல்லது, ஆமா மனு எங்கே” என்று கேட்டார்.
“மனுதாங்க மா பூரி போட்டுச்சு, நான் சாகு ரெடி செய்யற நேரத்தில, மேலே பூரிகள தேய்சுகிட்டு இருக்குது உள்ளார” என்றாள் சுபா.
“என்னது, அவ ஏன் இந்த வேலை எல்லாம் செய்யறா, சரி பசி அறிஞ்சு கை குடுத்து செஞ்சிருக்கா நல்லதுதான், போ நீ போய் பூரிகளை போடு, அவள இங்க அனுப்பு” என்றார். சரிமா என சுபா உள்ளே ஓடினாள்.

“பரவாயில்லை எல்லா வேலையிலும் சிறந்தவளா இருக்கா, இத்தனை நேரம் எனக்கு வந்த பூரி எல்லாம் உப்பவே இல்லை, உள்ளே சரியா வேகவும் இல்லை, நான் வேணா போய் போட்டுட்டு வரட்டுமான்னு என்னை மனு கேட்டா, நாந்தான் அதிகமா எண்ணெய் பண்டம் வேண்டாம், போதும்மா போறது விடுன்னு சொன்னேன்..... இப்போ உனக்கு புதுசா பக்குவமா செய்து குடுத்து அனுப்பி இருக்கா பாரு” என மெச்சிகொண்டார்.

சுவையான பூரியை மெல்ல மென்றபடி ‘ஒ அவளா செய்தாள்?’ என எண்ணிக்கொண்டான்.
மனு வெளியே வர “உனக்கு எதுக்கு சிரமம், எனிவே தாங்க்ஸ்” என்றான்.
“இட்ஸ் ஒகே” என்றாள் புன்னகையுடன். பசியாற சுவையான உணவை உள்ளே தள்ளியதும் மனதும் நிறைந்தது. இவனும் புன்னகைத்தான்.
‘ஹப்பா இவனுக்கு சிரிக்க கூட தெரியுமா.... என்னமா சிரிக்கறான்’ என எண்ணி ஆச்சர்யபட்டாள் மனு.

கற்பகத்தை வந்து பார்த்த டாக்டரும் நல்ல முன்னேற்றம் என ஆச்சர்யபட்டார்.... மருந்துகளை குறைத்து செய்ய வேண்டிய அசைவுகளை அதிகப்படுத்த கூறினார்.... காலை மாலை நடப்பது நல்லது என கூறினார்.... அதை கேட்ட கீர்த்திக்கு மனசு நிறைந்தது.... சந்தோஷமான சிரிப்பை வெளியிட்டான்.... அதை பார்த்து அசந்தே போனாள்.... டாக்டர் சென்றதும் இவளிடத்தில் வந்து “தாங்க்ஸ்” என்றான்.
“எதுக்கு?” என்றாள்.
“அம்மாவை நல்லபடி பார்த்துக்கறே, நல்லபடி நடமாட வெச்சிருக்கே, நல்ல முன்னேற்றம்னு டாக்டர் சொல்லீட்டு போறாரே அதுக்கெல்லாம் நீதானே காரணம்” என்றான்.
“ஒ அது என்னோட ட்யூடிதானே... அதுக்கு எதுக்கு நன்றி எல்லாம்” என்றாள்.
“எனிவே தாங்க்ஸ்” என்றாள் புன்சிரிப்புடன் நகர்ந்துவிட்டாள்.

அடுத்து வந்த நாளில் வேலை அதிகமின்றி வீட்டிலேயே விஸ்ராந்தியாக அமர்ந்து டிவி பார்த்தபடி இருந்தான் கீர்த்தி.... டைனிங் ஹாலில் நிழலாட திரும்பி பார்த்தான்....
‘இது இது நான் அம்மாக்கு வாங்கித்தந்த புடவை அல்லவா’ என நினவு கூர்ந்தான்.
இது மனு அல்லவா, இவளுக்கு ஏது இந்த புடவை?’ என யோசித்தான்.
“அம்மாவை வசியபடுத்தி வாங்கிக்கொண்டு இருப்பாள் ஸோ இவளும் துவங்கிவிட்டாள் இந்த வேலைகளை’ என சுறுசுறுவென கோபம் ஏறியது.
“ஏய் நில்லு” என இரைந்தான். கற்பகத்திற்கு பழச்சாறு எடுத்துக்கொண்டு திரும்பியவள் அவன் கத்தலில் அதிர்ந்து அப்படியே நின்றாள். கையில் க்ளாஸ் தடுமாறி சிந்தியது.

“இது ஏது இந்த புடவை உனக்கு, அம்மாவை ஏமாற்றி வாங்கிகிட்டியா, இல்லை திருடினியா?” என்று இரைந்தான். மனுவுக்கு அதிற்சியாகவும் அவமானமாகவும் போனது. “நானா திருடியா இல்லவே இல்லை” என்றாள்.
“பேசாதே, உங்க மாதிரி பெண்கள் புத்தி எனக்கு தெரியும், நீ நல்லவளாட்டமா வேஷம் போடும்போதே நினைச்சேன், இப்படி தான் ஏதானும் நடக்கும்னு..... இன்னும் என்னென்னா சுருட்டினே நான் இல்லாத இந்த ஒரு மாதத்தில?” என்று மேலும் கத்த, கற்பகம் மெல்ல வெளியே நடந்து வந்தார்

“என்னடா கீர்த்தி, யாருகிட்ட எதுக்கு கத்திகிட்டு இருக்கே?” என்றபடி.
கண்ணில் நீர் தளும்ப மனு நிற்பதை கண்டவர் துணுக்குற்றார்.
“என்னமா நடந்துச்சு?” என்றார். அவள் பேசாமல் உதட்டை கடித்தபடி அழுகையை அடக்க முயன்று தோற்றாள்.
“என்னடா, நீயானும் சொல்லேன்” என்றார் கீர்த்தியிடம்.

“இந்த சேலை உங்கள ஏமாத்தி இவ வாங்கிகிட்டாளா இல்ல திருடி கட்டி இருக்காளா?” என்றான்.
“சீ வாய மூடு.... அவ அந்த மாதிரி பொண்ணு இல்லை.... நாந்தான் அவளுக்கு குடுத்தேன்..... நாலு புடவையையே மாத்தி மாத்தி கட்டிக்கறாளேன்னு..... வேலைகாரிக்கும்தான் குடுத்தேன், இப்போ என்ன” என்றார்.

“நீங்களா குடுத்திருக்க மாட்டீங்க, இவ வேணும்னு உங்கள வசியம் பண்ணி வாங்கி இருப்பா” என்றான்.
“போதும் கொஞ்சம் உன் வாய மூடு கீர்த்தி.... அசிங்கமா பேசாதே..... எனக்கும் இவளுக்கு பெரிய சண்டையே ஆயிடுத்து, இவ வேணாம்னு மறுக்க.... நான் எடுத்துண்டுதான் ஆகணும்னு வர்புறுத்தனு...... அவளை கண்டிச்சு தான் நான் இந்த புடவைகளை தந்தேன்..... அவ ஏன் பயந்தானு இப்போதான் எனக்கு புரியுது, ஒரு நிமிஷத்தில அவளை தரக்குறைவா எடைபோட்டு அசிங்க படுத்தி பேசீட்டியே, இதான் என்னோட வளர்ப்பா பையா, உனக்கே அசிங்கமா இல்லை.... பேசற முந்தி யோசிக்கவே மாட்டியா..... உன் மனசில ஆயிரம் ரணம் இருக்கலாம் கீர்த்தி, அதுக்காக எல்லாரும் அப்படிதான்னு முடிவுகட்டி பேசக்கூடாது.... போதும் உன் அபத்தம்” என இரைந்தார். அவருக்கு மூச்சு வாங்கியது.
“ஆண்ட்டி நீங்க உக்காருங்க, ஜூச குடியுங்க” என அமர வைத்து அந்த நிலையிலும் அவருக்கு ஜூசை குடிக்க வைத்தாள் மனு.

பாதி குடித்தபின் மீண்டும் “நான் என் புடவைகளை யாருக்கும் குடுப்பேன்.. இல்ல உள்ளேயே வைத்து பூட்டி வீணாக்குவேன், நீ ஏன் இதை எல்லாம் தலையிடற கீர்த்தி.... அவகிட்ட மன்னிப்பு கேளு..... நீ இன்னிக்கி பேசியது அதிகம், தப்பு, மன்னிப்பு கேளு” என்றார்.

“ஆண்ட்டி பேசாம இருங்க” என்றாள் மனு அவளிடம்.
“நீ பேசாம இரு மனு, கீர்த்தி....” என அதட்டினார்.
“அம்மா” என்றான் தயங்கி.
“ம்ம்” என்றார் கடுமையாக.
“மன்னிச்சுடு, நான் யோசிக்காம பழி போட்டு உன்னிடம் அப்படி பேசி இருக்க கூடாதுதான் சாரி” என்றான்.
“ஐயோ பரவாயில்லை மறந்துடுங்க” என்றாள் மனு அவசரமாக அவனை காணாது

அவன் சரேலென விலகி மேலே தன் அறைக்கு சென்றுவிட்டான். அன்னைக்காகவென மன்னிப்பு கேட்டுக்கொண்டது அவனுக்கு இன்னமும் கோபத்தை அதிகரித்தது..... உள்ளே கனன்றது.... ‘போயும் போயும் ஒரு பெண் பிள்ளையிடம் மன்னிப்பு கேட்க சொல்லிட்டாங்களே அம்மா’ என கோபம் இப்போது அவர் மீது திரும்பியது. அன்று முழுவதும் எதேற்சையாக மனுவை சந்திக்க நேர்ந்தாலும் கண்கள் வெறுப்பையே உமிழ்ந்தன.
‘இவனுக்கு என்னதான் ஆயிற்று, ஏன் இப்படி என்னை கண்டாலே எரிமலையாகி வெடிக்கிறான்.... சில நேரம் என்னமோ மிகவும் சகஜமாக பேசுகிறான், என்னதான் இவன் மனதின் சிக்கல்?’ என குழம்பினாள் மனு. அவனது அன்னைக்கே அவன் புதிராக இருக்கும்போது நேற்று வந்த இவுளுக்கா அவனின் மன நிலை புரிய போகிறது.

“என்ன ஆண்ட்டி நீங்க இப்படி எல்லாம் திட்டீட்டீங்க.... என் மேல இன்னும் கோபம் அதிகமாகீடுமோ என்னமோ..... உங்க மகனுக்கு” என்றாள்.
“ஒண்ணுமாகாது.... நான் சொன்னேனே, ரணப்பட்ட மனது, எப்போதும் மேலே எழும்பி அவனையும் வேதனைபடுத்தி மிச்சவங்களையும் ரணபடுத்த வைக்குது.... எம் பிள்ளைக்குனு வந்து வாய்ச்சுதே, அவனுக்கு எப்போ விடியுமோ” என்று கலங்கினர். “என்னாச்சு ஆண்ட்டி?” என்றாள்.
“ஹ்ம்ம் ஆச்சு சட்டியும் பானையும், அப்பறமா சாவகாசமா ஒரு நாள் சொல்றேன் மனு... இன்னிக்கி வேண்டாம், என் மனசே சரியில்லை” என்றார்
“சரி ஆண்ட்டி, நீங்க வாங்க, கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க” என்று அழைத்துச் சென்றாள்.

அடுத்து வந்த நாட்களிலும் அவன் முகம் கடுவன் பூனையாக தான் இருந்தது.... அவனது வேதனையையும் கோபத்தையும் அதிகரிக்க விரும்பாமல் அவள் ஒதுங்கியே இருந்தாள்.... அனாவசியமாக அவன் கண் எதிரே வருவதை தவிர்த்துக்கொண்டாள்.

அன்று காலையிலேயே சிற்றுண்டி உண்டுவிட்டு கீர்த்தி ஆபிசிற்கு கிளம்பி சென்றுவிட்டான். கற்பகமும் மனுவின் உதவியுடன் குளித்து முடித்து பூஜை அறையில் கண் மூடி பிரார்தித்து பின் அவருக்கு மிகவும் பிடித்தமான தோட்டத்து மாமரத்து திண்டருகில் வந்து சேரில் அமர்ந்தார். அது பெரியதொரு பறந்து விரிந்த மாமரம், பல வருடங்கள் பழையது, மிகவும் ருசியான மாங்கனிகளை ஒவ்வொரு வருடமும் தவறாமல் குடுத்து வருகிறது.

“இது நான் கல்யாணமாகி வந்தபோது நட்ட மரம் மனு, என்னோட குழந்தை தோழி எல்லாமே இதுத்தான்..... வந்த அன்னைக்கே என் மாமனார் இந்த மாங்கன்றை கொண்டு வந்து என் கையில் குடுத்து இங்கே நட சொன்னார்..... அதை நானே நீர் ஊற்றி வளர்த்தேன், கொஞ்ச கொஞ்சமா பெரிசாச்சு..... அதே போல என் குடும்பமும் தழைத்தது..... கீர்த்தி பொறந்தான், அவனுக்கு அடுத்தவ காஞ்சனா பிறந்தா, அவளை நீ பார்த்ததில்லை, கல்யாணமாகி பம்பாயில இருக்கா, எப்போவானும் வருவா என்னை பார்க்க...” என்பார் ஆசையாக எப்போதுமே அந்த மரத்தின் கீழே தான் அவருக்கு அமர பிடிக்கும், அவரைசேரில் அமர்த்தி, அருகே மாமரத்தை சுற்றி கட்டப்பட்ட சிமென்ட் திண்ணையில் தான் அமர்ந்துகொண்டு இருவரும் புத்தகம் படிப்பதோ அரட்டை அடிப்பதோ செய்வர்.... நல்ல குளுகுளுவென தென்றல் காற்று வீச மாமர வாசனையுடன் பொழுது இனிமையாக கழியும்....
“ஏம்மா மனு, உன்னை பத்தி நீ ஒண்ணுமே சொல்லலையே, நீ யாரு.... பார்த்தா நல்ல குடும்பத்து பெண்ணாக தெரியுது, அப்படி இருக்க, நீ ஏன் இந்த மாதிரி வேலைக்கு வந்திருக்கே, என்ன படிச்சிருக்கே, உனக்குன்னு இந்த உலகத்தில யாரும் இல்லையா என்ன?” என்றார் கற்பகம்.



No comments:

Post a Comment