Saturday 23 February 2019

UN KANNIL NEER VAZHINDHAL - 2


“பேர் என்ன, என்ன படிச்சிருக்கீங்க, ஏன் மேலே படிக்கலை?” என்றான். கூறினாள். மனஸ்வினி என்று பெயரை கேட்டதும் ‘இவளுக்கெல்லாம் இவ்வளவு நல்ல பெயரா?’ என்பது போல ஒரு ஏளன பார்வை பார்த்தான். அவள் உதட்டை கடித்துக்கொண்டு தலை குனிந்தாள்.
“என் அம்மாவை தான் கவனிச்சுக்க போறீங்க, மரியாதையா நடந்துக்கணும், அவங்கள மட்டுமே கவனிக்கணும்” என்றான். அதில் அழுத்தம் குடுத்து.
“மற்றபடி வீட்டின் நடப்புகள் மற்ற வேலைக்காரர்களிடம் வம்பு பேச்சு வார்த்தைன்னு நான் எதுவுமே கேள்விபட கூடாது....அம்மாவையும் தான் அன்பா பாசமா கவனிச்சுக்கறேன்னு அவங்க இஷ்டப்படி நடந்துக்க விட கூடாது..... டாக்டர் என்ன சொல்லி இருக்காரோ அதை ஸ்ட்ரிக்டா பாலோ பண்ணனும்..... ஒழுங்கா மருந்து மாத்திரை எல்லாம் குடுக்கணும், காலுக்கு மசாஜ் செய்யணும்..... இதெல்லாம் தெரியும்தானே, மருந்து பேர் எல்லாம் படிச்சு சரியா செய்வீங்களா?” என்றான்.

இன்னமும் அவளை மதித்து நேருக்கு நேராக முகத்தை பார்க்க கூட இல்லை, கோப்புகளை பார்த்துக்கொண்டே தான் பேசினான்.
“எஸ் சார், பன்னிரெண்டாம் வகுப்பு முடிச்சிருக்கேன், நல்லபடி பார்த்து படிச்சு செய்வேன்” என்றாள்.
“ம்ம் சரி, ஆசிரமத்து பெரியவர் சோமநாதன் உங்கள பத்தி ரொம்ப பெரிசா பேசி சிபாரிசு செஞ்சிருக்காரு, அதனாலதான் வேலைக்கு எடுக்க சம்மதிச்சேன்... அவர் பேர காப்பாத்துங்க.... நீங்க போகலாம்.... வாசலில் காத்திருங்க, நான் கொஞ்ச நேரத்தில் வந்து அம்மா கிட்ட அழைச்சுகிட்டு போறேன்” என்றான். வார்த்தை தடித்தே வந்தது. கடுமையின் மொத்த உருவமாக இருந்தான்..... அப்போது மட்டுமே அவளும் நிமிர அவனும் கோப்பிலிருந்து நிமிர்ந்து அவளை நேருக்கு நேர் கண்டான்.
அவளின் அழகு முகம் கண்டு ஒரு நிமிடம் ‘ஹப்பா என்ன அழகு, அமைதி’ என்று அவன் மனம் ஒரு நிமிடம் அசைந்தது. உடனே அதை முகத்தில் காணவிடாது துடைத்தார் போல முகத்தை மாற்றிக்கொண்டு கடுமையை வரவழைத்துக்கொண்டான்.
‘இந்த அழகுதானே ஆபத்து.... போதுமே இந்த பெண்களோட ச்சே’ என்று உள்ளுக்குள்ளே உமிழ்ந்தான்.

கொஞ்ச நேரம் வாச வரவேற்பறையில் நின்றாள்.... அமர சொல்லவில்லை, அமர்ந்தால் திட்டுவானோ என்று பயம்.... கால் கடுக்க நிற்க அவன் வந்தான்...
“உக்கார்ந்திருக்கலாமே?” என்றான்.
“பரவாயில்லை சார்” என்றாள்.
“வாங்க” என்றான் விடுவிடு நடையில் நாலு நாலு படிகளாக மாடியை அடைந்தான். அவன் வேகத்திற்கு ஈடு செய்ய முடியாமல் வேகமாக தடுமாறி பின்னே சென்றாள்.
அங்கே ஒரு ஹால் அதில் ஒரு டிவி சோபாக்கள் என இருந்தன.... அதன் முடிவில் ஒரு வெராண்டா இருக்க, அதனின்று சில படுக்கை அறைகள் பிரிந்தன.... ஒரு அறைக்குள் அவன் சட்டென நுழைய அவளும் தயங்கி நுழைந்தாள்.

அங்கே கிழிந்த நாராக ஒரு வயதான மாது படுத்திருந்தார்.... அனாதை போல அவர் அங்கே படுத்திருப்பதை கண்டு அவளுக்கு உள்ளம் பொங்கிற்று....
“அம்மா” என்றான் இவன். மெல்ல கண் விழித்தார்.
“என்னப்பா?” என்றார்.
“இதான் மா, உங்கள கவனிச்சுக்க நம்ம டாக்டர் அனுப்பிச்ச புதிய அசிஸ்டென்ட்” என்றான்.
“ப்ச்” என்றார். “எதுக்கு பா?” என்றார்.
“நல்லா இருக்கே, தனியா உங்களால முடியலை, நம்ம வேலைக்காரங்களுக்கு உங்களை அக்கறையா பார்த்துக்க மனசும் இல்லை, நேரமும் இல்லை, நானும் சதா ஓடிகிட்டே இருக்கேன், பின்னே உங்களை யாரு கவனிச்சுபா, நீங்க அடம் பண்ணாதீங்க, இவங்களோட நல்லபடியா ஒத்துழையுங்க.... அவங்க சொல்றபடி மருந்து மாத்திரையை எல்லாம் ஒழுங்கா எடுத்துக்குங்க, என்ன சரியா” என்றான் கடுமை குறையாமல்.
“ம்ம்” என்றார் பிடித்தமே இல்லாமல்.

‘இவருக்கு தான் வந்ததில் இஷ்டமே இல்லையே, எப்படி இவர் மனதில் இடம் பிடிக்க போகிறேன், இவனோ கடுமையே உருவமாக இருக்கிறானே, இங்கேயே வேறே தங்க வேண்டும் என ஐயா கூறினாரே... கடவுளே, எப்படி நான் இங்கே காலம் தள்ள போகிறேன், எனக்கு மனோ சக்தியை குடு’ என வேண்டினாள்.
“குட் மார்னிங் மா” என்றாள் அவர் அருகே சென்று புன்னகையுடன்.
“ம்ம்” என்றார் அந்த மாது வேண்டா வெறுப்பாக.
“என்ன, அம்மா ஆண்ட்டினு சொந்தம் கொண்டாடி கிட்டு, மேடம் னு சொல்லி பழகு” என்றான் அதற்கும். சரி என தலை ஆட்டினாள்.

“இது டாக்டரின் ப்ரிக்ரிப்ஷன், இதன்படி எல்லாம் குடுத்துடு, மசாஜ் செஞ்சுடு, மாலையில இங்கேயே வெராண்டாவில நடக்க வை” என்றான் எல்லாமே ஒருமையில்.
“சாரி” என்றான் சட்டென.
“பரவாயில்லை அப்படியே பேசலாம்” என்றாள் அவனை பாராமல் டாக்டரின் சீட்டை பார்த்து படித்தபடி.... தோளை குலுக்கிவிட்டு “பை மா” என நடந்துவிட்டான்.

‘பத்தோடு பதினொண்ணு, எல்லாம் பணத்துக்காக வேஷம் போட வர்ரதுகள்..... எல்லாருக்கும் இந்த பணத்தின் மேலேயும் என் மகன் மேலேயும் தான் ஆசை.... இது மட்டும் என்ன விதிவிலக்கா என்ன...’ என்று மெல்ல தனக்குள்ளே சொல்வது போல முனகினார் அவர்.... அவளுக்கு அது கேட்டது.... முந்தைய அனுபவங்கள் அவ்வளவாக சரியில்லை அதுதான் அவரின் வெறுப்பிற்கும் இஷ்டமின்மைகும் காரணம் என தேர்ந்து கொண்டாள்.
“ப்ரஷ் பண்ணியாச்சா மேடம், காபி குடிச்சுட்டீங்களா, நான் கொண்டு வரவா?” என்று கேட்டாள்.
“ம்ம் எல்லாம் ஆச்சு பிரஷ் பண்ணியாச்சு.... ஆனா இன்னும் காப்பிய தான் கடன்காரன் கொண்டு வரலை..... பெல்லை அமுக்கி அமுக்கி விரல் வலிச்சு போனதுதான் மிச்சம், எல்லாத்துக்கும் திமிரு ஏறி தான் போயிருக்கு, நான் என்ன இவங்களை கீழே வந்து திட்டி அதட்டவா முடியும்னு ஏளனம் இளப்பம்” என்றார் ஆற்றாமையுடன்.
“ஒ” என்றாள். “நான் கீழே போய் எடுத்துட்டு வரேன்” என பதிலுக்கு காத்திராமல் இறங்கினாள். சமையல் அறையில் போக “என்ன புதிசா இன்னிக்கி ஒண்ணு வந்திருக்காமே?” என அங்கே இவள் பற்றிய பேச்சு அடிபட்டது.
“ஆமா இது எத்தனை நாளைக்கோ, பெரிசு போடற சத்தத்தில இது எத்தனை நாளைக்குனு பாப்போம்” என்றாள் அந்த சமையல்காரி.
“தா சும்மா இரு, அது வருது” என்று அடக்கினான் வேலைக்காரன்.
“அம்மாவுக்கு காபி” என்றாள் அங்கே சென்று.
“நான் மேலே எடுத்து வரேன் கொஞ்ச நேரத்தில” என நொடித்தாள்.
“இல்லை, என் கிட்ட குடுங்க அக்கா... நான் எடுத்துகிட்டு போறேன், உங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும்” என்றால் தன்மையாகவே.
அவள் இவளை வேண்டா வெறுப்பாக பார்த்துவிட்டு காபியை இவளிடத்தில் தந்தாள். அதை எடுத்துக்கொண்டு மேலே ஏற,

“இதை நீ ஏன் கொண்டு போறே? தங்கம் எங்கே போனா, உன்னை மேலேயே இருக்கணும்னு இப்போதானே சொன்னேன்?” என்றான் அவன். கீர்த்திவாசன்.
“இல்ல ரொம்ப நேரமா அம்மா காத்திருக்காங்க போல, அதான் நானே வந்தேன்” என்றாள் பயந்தபடி ட்ரே நடுங்கியது கெட்டியாக பிடித்தாள்.
“ஓஹோ அம்மாவுக்கு காபி கொண்டு குடுக்க முடியாம அப்படி என்ன இங்கே வேலை வெட்டி முரிக்கறாங்க?” என்று இரைந்தான்.
“இல்லை அவங்க எடுத்துகிட்டு தான் வந்தாங்க... நான் கீழே வந்தேன், அதுனால நானே கையில வாங்கிகிட்டேன்” என சட்டென மாற்றிக்கொண்டு அவளை மாட்டி விடாமலும் சாமர்த்தியமாக பேசினாள் மனு. அவன் அவளை ஆச்சர்யத்துடன் பார்த்தான். உள்ளே இவன் குரல் கேட்டு நடுங்கிய தங்கமும் இவள் பேச்சை கண் விழிக்க கேட்டாள்.

“ம்ம்” என்றபடி அவன் சென்றுவிட்டான்.
ஹப்பா விட்டால் போதும் என படி ஏறினாள். பெரியவள் கற்பகத்தை பிடித்து தூக்கி அமர்த்தினாள்.... தலையணை வைத்து சாய்ந்தாற்போல அமர்த்தி காபியை சிறிது சிறிதாக ஒரு கப்பில் விட்டு குடுத்தாள்.... அவர் கைகளும் கால்களும் அனைத்து ஜாயிண்டுகளுமே ஆர்த்ரைடிசினால் பாதிக்க பட்டு இருந்தன..... கப்பை பிடிக்க கஷ்டப்பட இவளுமே கூட பிடித்துகொண்டாள்.... குடிக்க வைத்தாள்.... அதை கண்களில் ஆச்சர்யத்துடன் பார்த்தாள் கற்பகம். மற்ற நர்ஸ்கள் கையில் காபி கப்பை திணித்துவிட்டு பத்திரிகை படிப்பர் இல்லாவிடில் இவளுக்கு குளிக்க வென துண்டு துணிமணி எடுத்து வைக்க நகர்ந்து விடுவர்.... காபியை ருசித்து குடித்தார்.... ஒரு பிஸ்கெட்டை துண்டு செய்து குடுத்தாள் மனு.

பேப்பரை எடுத்து அருகில் அமர்ந்தாள் “படிக்கவா நீங்களே படிக்கிறீங்களா ஆண்... மேடம்?” என்றாள்.
“மேடம் எல்லாம் வேண்டாம், ஆண்ட்டினே கூப்பிடு, அவன் கெடக்கான்” என்றார்.
“நீயே படி” என்றார். இவள் ஹெட்லைன்ஸ் படித்தாள். வேறே என்ன செய்தி படிக்க வேண்டும் என கூறினார். டிவியில் பழைய பாட்டுகளை போட்டு விட்டாள். அதை மகிழ்ச்சியுடன் கேட்டபடி சாய்ந்தபடியே அமர்ந்திருந்தார்.

மருந்து மாத்திரைகளை கிரமபடி எடுத்து குடுத்தாள்.
குளிக்க வெதுவெதுப்பான நீரை விளாவி வைத்தாள்.... அவருக்குண்டான நைட்டி துண்டு உள்ளாடைகள் என தேர்வு செய்து எடுத்து வைத்தாள்.
“குளிக்க போலாமா ஆண்ட்டி?” என்றாள்.
“ம்ம் போலாம்” என மெல்ல நகர்ந்து படுக்கை ஓரத்திற்கு வந்தார். அவர்தோளில் கைபோட்டு இடுப்பில் கை கொடுத்து மெல்ல இறக்கினாள்... கால் தரையில் பாவாமல் தடுமாறியது....தாங்கிகொண்டாள்.... மெல்ல அணைத்து அழைத்துச் சென்று பாத்ரூமில் அமர வைத்து பக்குவமாக குளிக்க வைத்து தலை துவட்டி, உடை உடுத்தி கூட்டி வந்து அங்கே இருந்த சேரில் அமர வைத்தாள்.... பாட்டுகள் இன்னமும் ஒடிகொண்டிருக்க அதை ரசித்தபடி மகிழ்ச்சியுடன் அமர்ந்திருந்தார் கற்பகம்.

மனம் நிறைவாக இருந்தது, ஆனாலும் அதை சட்டென ஒப்புகொள்ள மனம் வரவில்லை, ‘இதே போல பலரும் வந்து முதல் சில நாட்கள் நல்லபடியாக பார்த்துக்கொண்டனர் தான், பின்னோடு புத்தி மாறி போனது..... நல்லவளாகத்தான் தெரிகிறாள், பார்ப்போம்’ என எண்ணிக்கொண்டார்.

அவள் அங்கே வேலைக்கு வந்து இருபது நாட்கள் ஆகி இருந்தன. இங்கே வந்த பின் அதிக வேலை இல்லை.... செய்வதை பக்குவமாக அன்புடன் செய்தாள்.... கற்பகத்திற்கு மெல்ல மெல்ல இவளிடம் ஈடுபாடு ஏற்படத் துவங்கியது.... சிரமம் இன்றி எங்கே எப்போது எப்படி உதவி தேவையோ அதை செய்வதையே அறியாது செய்தாள் மனு..... அவரை அங்கேயே நடமாட வைத்தாள்.

“ஆமா இங்கேயே என்னத்த தினமும் நடக்க.... சுவத்த வெறிச்சு பார்த்துண்டு..” என அலுத்து கொண்டார் நடக்க சுணங்கினார் கற்பகம். இதை கண்டவளுக்கு மனதில் ஒரு யோசனை தோன்றியது.
வந்த இந்த இருபது நாட்களில் வாரத்திற்கு ஒரு முறை கூட கீர்த்தி கண்களில் அவளும் படவில்லை அவனையும் காணவில்லை.... அவனிடம் இப்போது தன் யோசனையை எப்படி சென்று பேசுவது என பயந்தாள். அசலே முரடன் என்ன கத்துவானோ, அதிகப்ரசங்கி என்பானோ என தயங்கினாள்.
ஆயினும் ஆண்ட்டிக்கு வேண்டி என தன்னை தைர்யபடுத்திக்கொண்டு கீழே அவன் ஆபிஸ் அறையில் இருக்கிறானா என எட்டி பார்த்தாள்..... அன்று காலை கற்பகத்திற்கு வேண்டியதை செய்துவிட்டு அவனை காண வென கீழே சென்றாள்..... தயக்கத்துடன் அவன் அறை வாசலில் நின்று மெல்ல கதவை தட்டினாள்....
“கம் இன்” என்று அதிகாரமாக குரல் கேட்டது.

இவளை கண்டவன் முகம் மாறியது.
“என்ன வேணும், நீ இந்த நேரத்தில இங்கே என்ன பண்ணறே?” என்றான்.

“இல்ல, ஒரு சின்ன விஷயம்.... பேசலாமான்னு உங்களிடம் பெர்மிஷன் கேட்க வந்தேன், பேசலாம்னா பேசறேன்” என்றாள் பயந்தபடி.
“ம்ம் என்ன சொல்லு” என்றான் எப்போதும் போல பார்வை கோப்புகளில் பதிந்து இருந்தது.

“மேடம்கு மேலேயே இருந்து இருந்து ஒரே போர் அடிக்குது போல.... நடக்கணும்னா கூட இங்கே சுவத்த பார்த்தபடி என்ன நடக்க னு சுணங்கறாங்க”. என்றாள் மெல்ல.

“அதுக்கு?” என்றான் கோபமாக.
“இல்ல, வந்து.... அவங்கள இங்கே கீழே ஏதானும் அறை இருந்தா அங்கே மாத்தீட்டா காலையும் மாலையும் தோட்டத்தில நடக்க வைக்கலாம், இயற்கை காத்தில நடந்தா உடலுக்கும் ஆரோக்கியம்..... பார்க்க பசுமையா அழகா இருக்கற தோட்டத்தில உலாவின அவங்களுக்கும் மனசு உற்சாகமா இருக்குமோன்னு ஒரு எண்ணம்.... நீங்க ஒத்துகிட்டா, ஏற்பாடு பண்ணலாமானு....” என்று நிறுத்தினாள்.
ஒரு நிமிடம் அவளை ஆச்சர்யத்துடனும் யோசனையுடனும் பார்த்தான் ஏறிட்டு.... பின் புருவம் சுருக்கி “இதன் உள் நோக்கம் என்ன?” என்றான்.

அத்யாயம் 2
அவள் சடாரென நிமிர்ந்து அவனை நேரே கண்டாள். ‘நீ திருந்தவே மாட்டியாடா’ எனத் தோன்றியது
“எந்த உள் நோக்கத்தோடும் நான் இங்கே வேலைக்கு வரலை, அதுக்கு எனக்கு அவசியமும் இல்லை, நேரமும் இல்லை.... உங்கம்மாவின் நலனுக்காக மட்டுமே” என உரைத்தாள். அவள் நேர்கொண்ட பார்வையுடன் நிமிர்ந்து அவனை பார்த்து பேசியதில் அவன் அசந்துதான் போனான்.... அவன் கண்ட நர்ஸ்களில் இவள்தான் முதன் முதலில் அவன் தாயின் நலன் வேண்டி இது போன்ற ஆலோசனையை முன் வைப்பவள்.... இதுவும் நல்ல யோசனைதான் முயற்சி செய்யலாம் என தோன்றியது.

“செய்யலாம் தான், ஆனாதோட்டத்தில எல்லாம் நடமாட அம்மாவால முடியாது..... மேடு பள்ளமா மண்ணும் கல்லுமா இருந்தா தடுக்கி விழுந்துடுவாங்க” என்றான்.
“சீரான பாதையில தான் மெல்ல நடக்க வைக்கணும்” என்றான்.

“தெரியும், ஆனா நான் அதை பார்த்துக்கறேன், சிமென்ட் பாதையிலே மட்டுமே நடக்க வைப்பேன்.... கூடவே இருந்து பிடிச்சுப்பேன்” என்றாள் விடாமல்.
“ம்ம் சரி அப்படியே செய், ஆனா அம்மாவுக்கு இஷ்டமான்னு கேட்டுகிட்டு செய்.... பார்த்துக்க, அவங்களுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது” என்றான்.
“சரி அப்படியே தாங்க்ஸ்” என உடனே வெளியே வந்துவிட்டாள்.
‘ஹப்பா மலையை கடந்தது போல இருக்கு.... சரியான சிடுமூஞ்சி.... எப்படித்தான் இப்படி இருக்கானோ’ என எண்ணிக்கொண்டாள்.

பின்னோடு வேலைக்காரர்களின் உதவியோடு கீழே இருந்த கெஸ்ட் ரூமை சுத்த படுத்தினாள்..... கற்பகத்திற்கு ரொம்பவே சந்தோஷம்...
“நல்ல யோசனைதான்.... நானும் பல முறை இதை யோசிச்சது உண்டு” என்றார் மகிழ்வுடன்.
“அப்போ சுவாமி அறைக்கு கூட போய் தொழலாம் இல்ல மனு?” என்றார் ஆசையாக. “தினமும் காலை மாலை தொழலாம் ஆண்ட்டி” என்றாள் புன்சிரிப்புடன்.
கற்பகத்தின் பெரிய கட்டில் மற்றும் அவசிய சாமான்கள் கீழே மாற்றப்பட்டன.... அனைத்தும் அழகாக செட் செய்தபின் மெல்ல அவரை வீல் சேரோடு வேலைக்காரர்களின் உதவியோடு கீழே இறக்கினாள்.... அவரது அறையில் அமர்த்தினாள்..... அப்போதே அவர் முகம் பளிச்சென்றானது.... அந்த அறை வாசலை ஒட்டி இருந்தது....தோட்டத்தை கண்டபடி பெரியதொரு விசாலமான ஜன்னல் இருந்தது.... அதை திறந்து வைத்தாள்..... அழகிய பூ போட்ட கர்டன்களை ஒதுக்கி ரிப்பன் இட்டு முடிந்து வைத்தாள்.

அம்மா கீழே வருவதை கூடவே இருந்து கை கொடுத்து பார்த்தான் கீர்த்தி.... அவரது அறையில் அவர் செட்டில் ஆனதும் மீண்டும் வந்தான்....
“என்ன இது ஜன்னலை திறந்து வெச்சிருக்கே, ஏதானும் இன்பெக்ஷன் ஆயிடும்” என்றான. “ஒண்ணும் ஆகாது, இயற்கை காத்து வெளிச்சம் உடலில் படணும்... முக்கியமா இவங்கள போல அதிக நடமாட்டம் இல்லாதவங்களுக்கு அது ரொம்பவே முக்கியம்” என்றாள்.

“திறந்திருக்கட்டும் கீர்த்தி.... இந்த தோட்டத்தை இங்கேர்ந்து பார்க்க எவளோ நல்லா இருக்கு” என மகிழ்ந்தார் கற்பகம். அவரின் மலர்ச்சி கண்டு அவனும் சந்தோஷித்தான்.
“ம்ம் என்னமோ செய்ங்க” என்றபடி வெளியேறினான்.

கீழே வந்தபின் கற்பகத்தில் பல மாற்றங்கள்.... தினமும் வலியே இருந்தாலும் அதை சகித்துக்கொண்டு உற்சாகத்துடன் ஒத்துழைத்தார்..... காலை மாலை குளியல் முடிந்து மெல்ல அடி எடுத்து வெளியே வந்து பூஜை அறையை தொழுதார்.
“அம்மா மனு, இத கொஞ்சம் சுத்த படுத்தீட சொல்லேன், ஒரே குப்பையும் அழுக்குமா இருக்கு” என்றார் முதல் நாள்.
“ஆகட்டும் ஆண்ட்டி” என வேலைக்காரியின் துணையுடன் கூடவே உதவி செய்து சுத்தம் செய்தாள்.

“சுவாமி விக்ரகங்கள், படங்கள் அழுக்கு போக துடைத்தாள்.... கும்குமபொட்டு வைத்து மலர் மாலை சூட்டினாள்.... அகர்பத்தி ஏற்றி வைத்தாள்..... விளக்கு தேய்க்க சொல்லி எண்ணெய் ஊற்றி திரியை ஏற்றினாள்.... பூஜை அறை பளிச்சென ஆனது.
“ஹப்பா மனசுக்கு எவ்வளோ நிம்மதி.... ரொம்ப தேங்க்ஸ் மனு மா” என்றார் மன நெகிழ்ந்து.

அது முடிந்து சிற்றுண்டி எடுத்துக்கொண்டார்.... அதுவும் மெல்ல மெல்ல டைனிங் டேபிள் மீது என ஆக்கினாள் மனு.
“அங்கேயா?” என்றார் தயக்கத்துடன்.
“ஆமா, இதில உங்களுக்கு என்ன சிரமம், உங்க மகனோட அமர்ந்து டிபன் சாப்டா அவருக்கும் எவளோ சந்தோஷமா இருக்கும்... இல்ல ஆண்ட்டி” என்றாள். சரி என்றார்.

அன்று அதே போல அவரை மெல்ல ஸ்டிக்குடன் நடத்தி பிடித்து சென்று அங்கே அமர்த்தினாள்..... தினம் போல ஆபிசிற்கு ரெடியாகி டிபன் உண்ண வந்த கீர்த்தி இதை கண்டு அதிசயித்தான்.
“அம்மா நீ இங்க?” என மலர்ந்து சிரித்தான்.
“ஆமா, நானும் இன்னிக்கி ஒன்னோட உக்கார்ந்து டிபன் சாப்பிட போறேன் கீர்த்தி” என்றார். “வெரி குட் மா” என்றபடி தானே அவருக்கும் தனக்குமாக விளம்பினான்.... அவரும் மெல்ல எடுத்து உண்ண துவங்கினார்.... அதுவரை அவன் கண்ணில் படாமல் ஒதுங்கி நின்றவள் இப்போது முன்னே வந்தாள்..... இட்லிகளை பிட்டு சின்ன துண்டுகளாக்கி பக்கத்தில் சின்ன கப்பில் சாம்பார் சட்னி என எடுத்து வைத்து கற்பகத்தின் கையில் ஸ்பூனை தந்துவிட்டு மீண்டும் மாயாமானாள்.... அவன் முன்னே எதற்கு என.... இதை எல்லாம் கண்டவன் மனம் அவளை வாழ்த்தியது.
கற்பகம் ஈசியாக தானே சிந்தாமல் எடுத்து உண்பதை கண்டு அவர் கைகள் நல்ல குணம் அடைந்துள்ளன என்பதை அறிந்தான்.... பரவயில்லையே ஒரு மாசத்தில நல்லா பழக்கி இருக்காளே என மெச்சிக்கொண்டான்.

பின்னோடு அவன் ஆபிஸ் செல்ல மனு முன்னே வந்தாள்....
“நீயும் சாப்பிடு, அதன் பின்னால வெளீல போலாம்” என்றார் கற்பகம். அவள் டிபன் உண்டதும் இருவருமாக தோட்டத்திற்கு சென்றனர்..... அங்கே சுற்றி நடக்கவென செப்பனிட்ட பாதை அமைக்கப்பட்டிருந்தது.... அதன் மீது மெல்ல வாக்கிங் ஸ்டிக்குடன் நடத்தினாள்.... தானும் அவர் தோள் மீது ஒரு கையை வைத்துக்கொண்டாள்.... ஏதேனும் எங்கேனும் தடுக்கினால் சட்டென பிடித்துக்கொள்ள ஏதுவாக....
உற்சாகமாக அவளுடன் சின்ன கதைகள் பேசி சிரித்தபடி அங்கே உலாவினார் கற்பகம். அவரின் அந்த குழந்தைத்தனமான ஆனந்தத்தை கண்டவளுக்கு மனம் நிறைந்தது.


2 comments: