Monday 25 February 2019

UN KANNIL NEER VAZHINDHAL - 4


“என்னைப் பற்றி என்ன ஆண்ட்டி, பெரிசா சொல்லிக்கறா மாதிரி எதுவும் இல்லை” என்றாள் பெருமூச்சுடன்.
“மனு, என்னை உன் அம்மாவா நினைச்சுக்க கூடாதா, உன் கழுத்தில தாலி கொடி இருக்கே மனு, அதுக்கு சொந்தக்காரன் என்னவானான்?” என்றார் உன்னிப்பாக அவள் முகம் பார்த்து. அதை கேட்டு அவள் அதிர்ந்தாள்.

‘எப்படி பார்த்தார்கள், ஜாக்ரதையாக மறைத்து தானே உள்ளே பின் செய்து வைத்தேன்?’ என தோன்றியது.
“நீ இன்னும் அதை கழட்டலை, அதனால அவன் இன்னும் உயிரோட தான் இருக்கான், உன்னை விட்டுட்டு ஓடிட்டானா, உங்களுக்கு விவாகரத்து ஏதானும் ஆயிடுத்தா?” என்றார். இல்லை என்றாள் தலையை மட்டும் மறுப்பாக அசைத்து.
“சரி மா, உனக்கு என்னிடம் எதையும் சொல்ல விருப்பமில்லை போல விட்டுடு” என்றார் .
“அப்படி இல்லை, என் வேதனையை சொல்லி உங்களை கஷ்டபடுத்த விரும்பலை, அதான்” என்றாள்.
முகம் கசங்கினாலும் கண்ணில் மட்டும் உறுதி இருந்தது, அந்த நேரத்திலும் கூட கண்ணீர் மட்டும் நிறையவில்லை.... அவளின் முகத்தில் அதனால் தெரிந்த தேஜஸ் கண்டு அசந்து போனார் கற்பகம்.
“வெளீல கொட்டீட்டா மனசு லேசாகும், என்னை கஷ்டபடுத்தி னு யோசிக்காதே, பேசும்மா” என்றார் ஆதரவாக.
“என்னத்த சொல்ல ஆண்ட்டி” என்றாள் பெருமூச்சுடன் சொல்லத் துவங்கினாள்.

“நான் எங்கப்பா அம்மாவுக்கு மூத்த பெண் ஆண்ட்டி... எங்கப்பா ஓரளவு வசதியாத்தான் எங்களை வளர்த்தார்.... ஆண் குழந்தை வேணும்னு ஆசைப்பட்டு நாங்க மூணு பேரும் பெண்ணாக பிறந்தோம்னு அவருக்கு எங்க மேல ஆத்திரம், அதனால வீட்டில எப்போதுமே சுமுகமான சூழ்நிலை கிடையாது.... இது மூணுத்தையும் எப்படி கரை ஏத்த போறேனோன்னு எப்போதுமே கவலையோட புலம்புவார் எங்கப்பா, எங்கம்மாவுக்கு பூலோகமும் தெரியாது கைலாசமும் தெரியாது... அப்பிராணி..... அதிர்ந்து பேச கூட மாட்டா, எங்கப்பா சொல்றதை அப்படியே செய்யறது மட்டும்தான் அவளுக்கு வேதம்.... அன்பா பாசமா அரவணைச்சு, அப்பா அம்மா னு அந்த பாசத்தையே கண்ணால பார்காத உணராத குழந்தை பருவமும் குமரி பருவமும் ஓடி போச்சு.

இது நடந்து இப்போ அஞ்சு வருஷம் ஆகுது ஆண்ட்டி....அப்போதான் நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிச்சுகிட்டு இருந்தேன்.... படிப்புல எனக்கு ரொம்ப ஆர்வம் இருந்தது.... மேற்கொண்டு நல்லா படிச்சு பெரிய வேலைக்கு போய் என் குடும்பத்தை காப்பற்றணும்னு ரொம்ப ஆசை இருந்தது.... அதுல தண்ணிய கொட்டினா மாதிரி எங்கப்பா நான் பெரிய பரிட்சை எழுதி முடிக்கும் முன்பே எனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டார்.... எனக்கு பெண் பார்க்கும் நாளன்று தான் சொன்னார்.

“சீக்கிரமா வந்து ஒழுங்கா அலங்காரம் பண்ணீண்டு நில்லு அவா எதிர்க்க” என்றார். “என்னத்துக்குபா?” னு கேட்டேன், ஒரு முறை முறைச்சார்,
“உன்னை பெண் பார்க்க வர்றா” என்றார்.
“எனக்கு இப்போதைக்கு கல்யாணம் எல்லாம் வேண்டாம்பா, நான் நிறைய படிக்கணும்... எனக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்கும்னு, ஏற்பாடு பண்றேன்னு எங்க ப்ரின்சி கூட சொல்லி இருக்காபா, உங்களுக்கு செலவு கூட நான் வைக்க மாட்டேன்... ப்ளீஸ் பா” னு அழுதேன் ஆனா தைர்யமா பேசினேன், பளார்னு ஒரு அரை விழுந்தது.

“போதும் வாய மூடு.... உனக்கு கீழ இன்னும் ரெண்டு இருக்கு, உன்னை கரை ஏத்தி முடிக்கவே இங்கே முழி பிதுங்கறது, இதுகளை என்ன செய்ய போறேனோன்னு நானே கவலை பட்டுண்டு இருக்கேன், இதில இவ படிப்பாளாம், வேலைக்கு போவாளாம், அது வரைக்கும் நீ கல்யாணம் ஆகாம இருந்தா அப்பறமா உன் படிப்புக்கேத்த மாப்பிள்ளையா எங்கேடி போய் தேடறது, அதுக்கேத்தார்போல சீர் செனத்தி எங்கேர்ந்து கொடுக்கறது, போதும் சொன்னதை செய்” என்றார் மிரட்டலாக.

நான் செய்வதறியாது அம்மாவிடம் முறையிட்டேன். அவளுக்கு நான் பேசியது காதிலேயே விழவில்லை போல, “போய் மூஞ்சி அலம்பீண்டு ரெடியாகு” என்றாள் விட்டேத்தியாக. எனக்கு வாழ்க்கை வெறுத்தது. வந்தவன் நல்லவனாக இருந்தால் அவனிடமே பேசி மேற்கொண்டு படிக்கச் இயலுமா என பார்க்கலாம் என ஒரு சின்ன ஆசை மனதின் ஓரத்தில் இருந்தது. ஏதோ நானும் ரெடியானேன்.

அவர்களும் வந்தார்கள்.... தரகருடன் கூட அவனும் அவனது அன்னையும் தான் வந்தார்கள்.... நான் அழைக்கப்பட்டேன், வந்து வணக்கம் சொன்னேன்.... அவனது தாய் என்னை சில கேள்விகள் கேட்டார்.... பதில் சொன்னேன், காபி குடுக்கும்போது அவன் முகத்தை மெல்ல ஏறிட்டு பார்த்தேன்.... அவன் பார்வையில் கவுரவம் இல்லை, அவனது கண்கள் என் உடலின் மேலே ஊர்ந்தது கண்டு எனக்கு கசந்தது.... அவனது மனதின் விகாரத்தை உணர்ந்து கொள்ளும் பக்குவம் அப்போது எனக்கு இருக்கவில்லை, எங்கப்பா அதை உணர்ந்தாரோ இல்லையோ அதைப்பற்றி கவலை படவில்லை...
பதினஞ்சு பவுன் நகையும் ஐம்பதாயிரம் ரொக்கமும் கேட்டார்கள்...
“ஐம்பதாயிரம் கொஞ்சம் அதிகம், இன்னும் கல்யாண செலவு வேற இருக்கு...” என இழுத்தார் என் தந்தை.
“குடுக்க முடிஞ்சா பாருங்க, இல்லேனா நாங்க வேறே இடம் பார்த்துக்கறோம்” என்றார் அவனது தாய். அவன் ஒன்றுமே பேசவில்லை....ஆனால் அவன் பார்வை என் உடம்பில் ஊடுருவி பாய்வதை நிறுத்தவில்லை.... அதன் பின் அவனை காண்பதையே நான் நிறுத்திவிட்டேன்.... என் தாயிடம் இப்படி என கூறினேன், அவள் ஒன்றுமே பேசவில்லை. பிறகு “சில ஆண்கள் அப்படி இருப்பாங்க, அது பெண்களின் தலை எழுத்து.... அதற்கு நீயும் விதிவிலக்கல்ல” என்று மட்டும் கூறினார்.

கல்யாணம் நிச்சயமானது.... தனியே காண வேண்டும் பீச் சினிமா என போக வேண்டும் என நச்சரித்தான், நான் ஒப்புக்கொள்ளவில்லை..... என் பன்னிரெண்டாம் ஆண்டு கடைசி பெரிய தேர்வு முன்னே நிற்கிறது என கூறி சமாளித்தேன்.... தேர்வை நல்லபடி எழுதி முடித்து தேர்ந்து முதல் மாணவியாக வந்தேன். ஆனால் தொடர்ந்து படிக்க தான் குடுத்து வைக்கவில்லை.

பின்னோடு திருமணமும் முடிந்தது. மேடையிலும் கூட அவனின் அந்த கூறுபோடும் பார்வைதான்.... அதைகண்டு எனக்கு கூசியது.
அப்பாவால் முழுசா ஐம்பதாயிரம் கொடுக்க முடியவில்லை.... முப்பதாயிரம் தந்தார், பாக்கியை சீக்கிரமா தந்துடறதா சொன்னார்.... அதுக்கே அவன் அசிங்கமா ஏசினான்.
“இதுக்கு கூடவா உங்கப்பாவிற்கு வக்கு இல்லை?” என்றான் என்னிடம்.
எனக்கு அவமானமாக இருந்தது, ஆனால் செய்வதற்கு ஒன்றுமில்லை..... அவனின் பார்வையில் கண்ணியம் இல்லை எனினும் எனக்கும் ஒரு கல்யாணம், கணவன், புகுந்த வீடு எனும்போது இயற்கையான ஆசைகள் என் மனத்திலும் எழுந்தன.... அன்பான கணவனாக அமைய வேண்டுமே என்ற ஆசையும் இருந்தது.... பல எதிர்பார்ப்புகளுடன் பயத்துடனேயே தாலி கட்டிகொண்டேன்

முதல் இரவன்னிக்கி என்னை ரூமில கொண்டுவிட்டாங்க....நானும் ஒன்றுமே அறியாத நிலையில் பயந்தபடியே தான் உள்ளே காலடி எடுத்து வைத்தேன்... அவன் பல நாள் பட்டினியாக கிடந்தவன் போல நான் உள்ளே சென்றதுமே என்னை அள்ளிக்கொண்டு போய் கட்டிலில் போட்டு என் மேல் விழுந்து பிடுங்கினான்.... நான் அப்போது அறியா பெண், முதல் இரவு என்றாலே என்னவென தெரியாத புரியாத வயது அது..... நான் அதிர்ந்தேன், கதறினேன்.... ஆனால் அது எதுவுமே அவன் காதில் விழவில்லை..... என்னை கதற கதற ஆண்டு முடித்துவிட்டு அந்த பக்கம் திரும்பி தூங்கியும்விட்டான்.... நான் கலைந்து கசங்கிய மலராக எழ கூட தெம்பில்லாமல் துவண்டு கிடந்தேன்..... எப்போது அழுதபடியே தூங்கினேனோ தெரியவில்லை...

அதிகாலை எழுந்து மெல்ல சென்று குளித்து உடுத்தி வந்தேன்.... கீழே பூஜை அறையில் விளக்கேற்ற சொன்னார்கள் என் மாமியார்..... பின் காபி போடும்படி அனுப்பினார்கள்.... செய்தேன்....
“நான் இன்னிக்கி மாலை ஊருக்கு கிளம்பிடுவேன், அவன் கொஞ்சம் முரடன், பாத்து நடந்துக்க, என்னால அவனை திருத்த முடியலை, பெண்டாட்டின்னு ஒருத்தி வந்தா அவளாலையாவது அவனை திருத்த முடியுதா பார்க்கலாம்னு தான் கல்யாணம் பண்ணி வெச்சிருக்கேன்... இனி உன் சமர்த்து..... நீயாச்சு உன் புருஷன் ஆச்சு” என்றார் விட்டேத்தியாக. நான் பயந்தேன்...
“ஓ அவன் பெயரை கூட இன்னும் உங்களிடம் சொல்லவில்லை இல்லையா ஆண்ட்டி, அவன் பெயர் வாசுதேவன்.... வாசுன்னு எல்லாரும் சொல்வாங்க.

அவன் எழுந்து குளித்து கீழே வந்தவன் சிற்றுண்டி சாப்பிட்டு முடித்ததும் “மேலே வா” என்றான். எனக்கு சர்வாங்கமும் ஆடி போயிற்று.... பயந்தபடியே சென்றேன்.... பட்ட பகலில் என்னை படுக்கையில் கிடத்தினான்...
“ஐயோ வேணாங்க, பட்ட பகலில்.... வீடு மொத்தமும் இன்னமும் சொந்தக்காரங்க இருக்காங்க” என்றேன் த்ராணியே இல்லாத குரலில்.
“உங்கப்பனுக்கு குடுத்த வாக்கு படி பணத்தை குடுக்க வழி இல்லை, நீ வாயே திறக்க உனக்கு யோக்யதை இல்லை.... பேசாம படுடி” என்று என்னை துவைத்து துவம்சம் செய்தான்.
‘இனி இப்படிதானா என் வாழ்க்கை’ என மனம் துடித்தது.... உடலும் மனமும் ரணமாக இருக்க, அம்மாவிடம் கூறி அழுதேன்.
என் தலையை வருடி ஆறுதல் படுத்துவார் என நான் எண்ணியது போக “ஹ்ம்ம் நீ குடுத்து வெச்சது அப்படி...  பார்த்து நடந்துக்க” என்று கூறி கிளம்பியே விட்டாள் தந்தையுடன்.
எல்லோரும் கிளம்பிவிட நான் அவனுடன் புலி குகையில் மான்குட்டி போல அகபட்டுகொண்டேன்.

ஒரு வாரம் லீவில் இருந்தவன், எந்த தேனிலவுக்கும் அழைத்து போகவில்லை எனினும், அவனுக்கு வேண்டிபோதெல்லாம் பகலென்றும் இரவென்றும் பார்க்காமல் என்னை ஆண்டு முடித்தான்.....எனக்கு வாழ கூட பிடிக்கவில்லை, தனிமையில் அழுது துவண்டேன்.... உடல்ரணத்தை விடவும் மனதின் ரணம் என்னை ஊமையாக்கியது.... அவனுடன் ஒரு வார்த்தையும் பேசவில்லை.... கடமையே என்று அவனுக்கு சமைத்தேன் படுக்க சொன்னால் படுத்தேன்.... வீட்டை நடத்தினேன்.... அதிலும் காய்கறி மளிகை என்ற சாமான்கள் அனைத்தும் அவன் இஷ்டப்படி என்ன எவ்வளவு வாங்கி வருகிறானோ அதைதான் நான் சமைக்க வேண்டும்..... என் கையில் என அவன் செலவிற்கு குடுப்பது மிக கொஞ்சம் பணமே என ஆகிவிட்டது.... எனக்கு இந்நிலை பைத்தியம் பிடிக்க வைத்தது”

மனு சொல்ல சொல்ல கற்பகம் பெரும் வேதனை பட்டார், அவரையும் அறியாது அவர் கண்கள் நீரை வார்த்த வண்ணம் இருந்தன.
“பாருங்க ஆண்ட்டி, இதுக்குதான் நான் ஒண்ணுமே சொல்ல மாட்டேன்னு சொன்னேன்” என்றாள் அவர் கண்ணீரை துடைத்தபடி.
“ஒண்ணுமில்லை மா, இப்படி எல்லாம் கூட ஒரு பொண்ணு கஷ்டப்பட முடியுமான்னு தோணிச்சு, நீ மேலே சொல்லு, எல்லா துன்பத்தையும் கொட்டீடு மா” என்றார்.

“சில மாதங்கள் இப்படியாக செல்ல, மெல்ல மெல்ல மேலே விழுந்து பிடுங்குவது கொஞ்சம் போல குறைந்தது..... ஆனால் எதற்கும் குற்றம் எதிலும் குற்றம் என ஏசினான்... “அதென்ன எப்போ பாரு ஒரு அழுமூஞ்சித்தனம், பளிச்சுன்னு இருக்க தெரியுதா, அழகா டிரஸ் பண்ணிக்க தெரியுதா, படிப்பும் இல்லை, அறிவும் இல்லை, பெரிய அழகியும் இல்லை நல்லா வந்து மாட்டிச்சு எனக்குன்னு” என்று ஏசினான்.

அவன் ஆபிஸ் கிளம்பி செல்லும் வரை முள்ளின் மேல் இருப்பது போல வாழ்ந்தேன், அவன் கிளம்பியதும் ஹப்பா என ஒரு நிம்மதி உண்டாகும்.... பக்கத்து பிளாட்டில் இருந்த ஒருத்தி என் வயதுதான் இருக்கும், பரிச்சயமானாள்...
“நாள் முழுக்க வீட்டில சும்மாதானே இருக்கே, என் மகன் ஆறாவது படிக்கிறான், ஆங்கிலமும் கணக்கும் அவனுக்கு கொஞ்சம் தகராறு, நீதான் நல்லா ஆங்கிலம் பேசறே படிக்கிறே, அவனுக்கு கொஞ்சம் உதவ முடியுமா... ப்ரீயா வேணாம், நான் என்னால முடிஞ்சத ஏதானும் பணம் குடுக்கறேன்” என்றாள்.

“அதுகென்ன கா, வர சொல்லுங்க, ஆனா மாலை ஆறு மணிக்கு இவங்க வீடு வர்றதுக்குள்ள முடிச்சு அனுப்பீடுவேன்” என்றேன்.
“எனக்கு தெரியாதா வாசு தம்பி குணம், அப்படியே செய்” என்றாள்.
அவர் பிள்ளைக்கு என ஆரம்பித்தது அக்கம் பக்கத்தில் உள்ள இன்னும் நாலு பிள்ளைகளுக்கு என முடிந்தது.....எனக்கென நேரம் போக இது உதவியது மட்டுமல்லாமல் அவர்கள் கொடுத்த அந்த சிறு தொகையினால் கையில் எனக்கென கொஞ்சம் பணமும் சேர்ந்தது, மனதின் வெறுமையையும் போக்கியது.

இந்நிலையில் ஏதே எங்கேயோ கணக்கு தவறியதில் நான் கர்பமானேன்,
“என்னது நாள் தள்ளி போயிருக்கு போலிருக்கே, வாய திறந்து சொல்றதில்லையா, எங்கே என்ன தப்பு நடந்துச்சு.... நான் வாங்கி குடுத்த அந்த மாத்திரைகளை சரியா போட்டியா இல்லையா?” என அடித்து கொடுமை படுத்தினான்.
ஏதோ ஒரு நாள் மறந்தேனோ என்னமோ எனக்கே கவனம் இல்லாமல் போனது.... அதை சொன்னதற்கும் அடித்தான்.
“என்ன, இவனோட குடும்பம் நடத்தி புள்ளைய பெத்துட்டா நம்மளை விட்டுடாம இருப்பான் அன்பா குடித்தனம் நடத்துவான்னு கனவு கண்டு ப்ளான் போட்டு நடந்துக்கறியே... கொன்னே போடுவேன்.... ஏமாத்த உனக்கு கத்தா குடுக்கணும், உங்கப்பனே ஒரு ஏமாத்துகாரன், நீ அவன் பொண்ணுதானே” என அசிங்கமாக திட்டினான்.

“இந்தா இது கர்பத்தை கலைக்கும்னு வாங்கி வந்தேன், இப்போ என் கண் முன்னே முழுங்கு” என்று அதட்டி தின்ன வைத்தான்..... வேண்டாம் என கூறவும் தைர்யமில்லாமல் முழுங்கினேன்.
அடுத்த நாள் அதிகாலையில் வயிற்று வலியால் துடித்து அழுது புரண்டு தவித்தேன்.
“என்ன கலைஞ்சிருக்கும், அதுக்கு எதுக்கு இவ்வளோ அமர்க்களம் பண்றே?” என அதற்கும் திட்டினான்.
“இல்லை இது எதுவோ சீரியஸ்னு தோணுது, ப்ளீஸ், என்னை ஏதானும் டாக்டர்கிட்ட கூட்டிகிட்டு போங்கனு” கெஞ்சினேன். நிறைய ரக்த போக்கு இருந்தது.... நானே சிறிய வயது, ரொம்பவே பயந்தேன்.... அவன் பயந்ததாகவோ கலங்கியதாகவோ தெரியவில்லை.

“சரி வந்து தொலை, அபார்ஷன் அது இதுன்னு வேற செலவு வேண்டாம், கச்சிதமா வீட்டோட முடிச்சிடலாம்னு பார்த்தா உன்னால எப்போது கஷ்டம்தான் செலவுதான்” என திட்டி என்னை அழைத்து சென்றான். அங்கே சென்று மகப்பேறு மருத்துவரை காண அவரோ என்னை டெஸ்ட் செய்துவிட்டு கத்தி கூச்சலிட்டார்.
“நீங்க எல்லாம் படிச்சவங்கதானே, இது சாதாரணமா கலையலை, என்னவோ குடுத்திருக்கீங்க, என்ன குடுத்தீங்கனு சொல்லியானும் தொலைங்க, அதை கேட்டுதான் நான் மேற்படி அவங்களுக்கு வைத்தியம் பார்க்கணும்.... ச்சே என்ன இது அறிவில்லை” என திட்ட கொஞ்சம் கூட கலக்கமோ பயமோ இன்றி இன்ன மருந்து என கூறினான்.

“அடப்பாவி, இதையா குடுத்தே, நல்லகாலம் அவ ஒண்ணுதான் சாப்பிடிருக்கா, இன்னும் ஒண்ணு உள்ள போயிருந்தா அவ கார்ப பையே நாசமாகி இருக்கும்.... எங்கேர்ந்துடா வரீங்க நீங்க எல்லாம்.... நீயெல்லாம் ஒரு மனுஷன்” என்ற அவர் ஏச,
“தா பாருங்க, அதிகம் பேச வேணாம்.... சீக்கிரமா அவள சிகிச்சைக்கு அனுப்புங்க, எனக்கு நேரமாகுது ஆபிஸ் போறேன்... மாலை வந்து என்ன ஏதுன்னு பார்க்குறேன்” என கூறிவிட்டு என்னை அம்போவென அங்கே விட்டுவிட்டு சென்றே விட்டான்.

அந்த டாக்டர்ம்மாவே இவனது செய்கை கண்டு அதிர்ந்து நின்றார்.
“எப்படிமா இப்படி ஒருத்தனை கட்டிகிட சம்மதிச்சே.... இவன் மனுஷனே இல்லையே?” என்றார். எனக்கு பதில் சொல்லவும் திராணி இல்லை.... நல்லபடி டி என் சி நடத்தி என்னை பிழைக்க வைத்த பெருமை அவரையே சாரும்.... மாலை வந்து வீட்டிற்கு அழைத்து சென்றான்....
‘இவளுக்கு நான் ஊழியம் பார்க்கணும், மூணு நாள் அசைய கூடாதாம் டாக்டரம்மா கூப்பாடு போடராளுக’ என்று வெளியிலிருந்து ஏதோ காய்ந்த ரொட்டியும் இட்லியும் என வாங்கி வந்து என்னிடத்தில் எறிந்தான் உண்ண சொல்லி.... அது நெஞ்சை விட்டு உள்ளே செல்லவில்லை.

மூணாம் நாள் மெல்ல தட்டு தடுமாறி நான் எழுந்து முகம் கழுவி வர “என்ன, அதான் மூணு நாள் முழு பொழுதா ரெஸ்ட் எடுத்தாச்சு இல்ல, சமைக்கிற வழிய பாரு, வெளீல தினம் தின்னா ருசியும் இல்லை பணமும் செலவாகுது இல்ல” என்றான் ரெட்டை அர்த்தத்துடன் என் உடலை கோரமாக பார்த்தபடி.... என் உடலும் மனமும் நடுங்கியது..... முடிந்தும் முடியாமல் சமைத்து முடித்தேன்.... துவண்டு விழுந்தேன்...

“என்னால முடியலை, எடுத்து போட்டு சாப்பிடுங்க என படுக்கையில் விழுந்தேன்.... ஆபிஸ் சென்றவன் மாலை வந்தான்.... இரவு சமையலையும் தடுமாறி செய்து வைத்தேன்.... சாப்பிட்டவன் “அதான் மூணு நாள் ரெஸ்ட் ஆச்சுது இல்ல, வா” என்றான.
“ஐயோ முடியாதுங்க, என்னை விட்டுடுங்க.... உடல் ரணமா இருக்குங்க, ஒரு மாதம் வரைக்கும் எந்த உறவும் இருக்க கூடாதுன்னு டாக்டரம்மா வேற சொல்லி இருக்காங்க” என்றேன் அழுதபடி.
அவங்களுக்கென்ன, அவனவன் அவஸ்தை அவனவனுக்கு.... வாடி னா” என இழுத்து சென்று என்னை கதற வைத்து அவன் ஆசையை தீர்த்துக்கொண்டான்.

மறுநாள் இனியும் இந்த வேதனை முடியாது என வெளியே சென்று தந்தைக்கு போன் செய்தேன்.... அப்போது அவர்கள் கடலூரில் இருந்தார்கள்....தாயை அழைத்து விவரம் கூற “ஓஹோ அப்படியா, இப்போ உடம்பு எப்படி இருக்கு.... சரி பார்த்துக்க, நான் இப்போதைக்கு அங்க வர முடியாது” என்று வைத்துவிட்டாள்.... தந்தையிடம் என்னால் இனியும் இங்கே இப்படி அவதிப்பட முடியாது என வெட்கத்தை விடுத்து அனைத்தையும் கூற, “குடும்பம் னு இருந்தா அப்படிதான் இருக்கும்.... அதுக்குனு நீ புறப்பட்டு இங்கே வந்து நிக்காதே..... இப்போதான் உன் தங்கை மதுவந்திக்கு வரன் பார்த்திருக்கேன், மூத்தவ வாழாவெட்டியா வந்துட்டான்னு தெரிஞ்சா அவ கல்யாணம் நின்னு போகும்” என்றார் வெகு அக்கறையாக. நான் வாழ்வை வெறுத்தேன்.

வேண்டியஅளவுக்கு உடலுக்கு ரெஸ்ட் இல்லாமல் போக உள்ளமும் உடலும் சேர்ந்து சோர்ந்து போக, என்னிடம் எந்த வித ஒத்துழைப்பும் இன்றி ஜடமே என அவனுடன் இணைய அவனுக்கு என் மேல் இந்த வெறுப்பும் சேர்ந்துகொண்டது.
“சீ, என்ன பொம்பளைடீ நீ.... புருஷன எப்படி சுகபடுத்தறதுன்னு அவ அவ ஜமாய்கறா எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு பாரு ஜடமேன்னு கிடக்கிறே” என ஏசினான்.

இப்போது எல்லாம் என் கண்ணீர் சுத்தமாக நின்று போயிருந்தது..... இதுதான் இனி என் வாழ்வு என தெரிந்தபின் நான் எதையும் பற்றி கவலைப்பட்டு எதுவுமே ஆகப்போவதில்லை என உணர்ந்தேன்.... அவனுடன் படுக்கையில் மட்டுமல்லாமல் தினசரி வாழ்விலும் ஜடமாகவே ஊமையாகவே இருந்தேன்.... ஒரு வார்த்தையும் கூட அவனுடன் பேசுவதை நிறுத்தினேன்..... அற்ப புழுவாய் தோன்றியவனை புருஷனாக தெய்வமாக எண்ண என்னால முடியவில்லை..... பகல் வேளைகளில் நான் எனக்காக வாழ்ந்தேன்.... சிறுக சிறுக மீண்டும் நான் உடல் தேறி தையல் வேலையில் ஈடுபடுத்திக்கொண்டேன்.... என் மனமும் அதில் கொஞ்சம் நிம்மதி அடைந்தது.

இதனிடையில் எங்களுக்கு மணமாகி இரண்டு வருடங்கள் ஆகி இருந்தன..... இரண்டாம் ஆண்டு கல்யாண நாளுக்கென இவனது நண்பர்கள் நச்சரிப்பு தாங்காமல் வீட்டிலேயே விருந்துக்கு ஏற்பாடு செய்ய சொன்னான்..
“வெளீல விருந்து வெச்சா குடிச்சே என்னை அழிச்சுடுவானுங்க... நிறைய செலவாயிடும், நீயே நல்லதா நாலு வகை செஞ்சுடு.... எப்போதும் போல குழம்பு கூட்டுன்னு உயிரை வங்காதே.... ஏதானும் புதுசா செய்...... ஏதானும் இனிப்பும் செய்துடு” என வேண்டிய சாமான்களை வாங்கி வந்து போட்டான்.


2 comments:

  1. Nice story line. Is the story going to continue? It feels like the story is incomplete. Who is that mami? Why is she telling her story to the mami?

    ReplyDelete
    Replies
    1. This is a serial story of mine being published in FB. It will continue daily. All other links are given in the same page right side menu. Thank you.

      Delete