Tuesday 26 February 2019

UN KANNIL NEER VAZHINDHAL - 5


“வீட்டை சுத்தம் செய்து அலங்கரித்து நாலு வகை நல்லதாக சமைத்து இனிப்புடன் மொத்தமும் ரெடி செய்து டைனிங் டேபிள் மீது அடுக்கினேன்.
“எல்லாம் ஆச்சா?” என கேட்டுக்கொண்டே வந்தவன் “ஆச்சில்ல, போய் நீயும் ரெடியாகு, எண்ணை வழியும் முகத்தோட இப்படியே அவங்க முன்னாடி வந்து நிக்காதே.... என் வீட்டு வேலைக்காரின்னு நினைச்சுட போறாங்க, பளிச்சுன்னு உடுத்திகிட்டு ஸ்டையிலா வந்து நில்லு” என்றான்.

நானும் தயாராகி வர நண்பர்கள் வந்தனர்.... என்னை மனைவி என அறிமுகம் செய்தான்... நான் கை குவித்து வணக்கம் கூறினேன்.... அதில் ஒருவன் என்னிடம் கை குலுக்க கை நீட்டினான்.... நான் மெல்ல தவித்தபடி கை நீட்டினேன்.... அதை பற்றியவன் உள்ளங்கையில் அழுத்தினான்... நான் அதிர்ந்து அவனை பார்த்தேன்.... என்னை பார்த்து கண் அடித்தான்.... நான் வாசுவை அதே அதிர்ச்சியுடன் பார்த்தேன், அவனோ அதை கவனித்ததாகவே தெரியவில்லை.
“உன் மனைவி பேரழகி தான் டா வாசு” என்றான் அந்த நண்பன் இளித்தபடி.
“பேரழகியா, இவளா, ஹைய்யோ” என ஏளனமாக சிரித்தான்.
“பேரழகினா நம்ம சுலோ தான், இப்போ வருவா பாரு, ரதி னா அவதான் டா, என்ன அழகு என்ன பிகர் பித்தனாக்குறா டா” என்றான். வெட்கமேயில்லாமல்.
சுலோச்சனா என்பவள் இவனது ஆபிசில் இவனுக்கு காரியதரிசி.... இவனும் அவளுமாக சுற்றுகிறார்கள் என அவன் பேச்சில் பல முறை அடிப்பட்டது பெயர் என தெரியவந்தது.

சாப்பாடு ரெடி எனும்போதே உள்ளே வந்தாள் அந்த சுலோ, ஸ்லீவ்லெஸ் ப்ளவுசும் கீழே இறக்கி தொப்புள் தெரிய கட்டிய சேலையுமாக விரித்த விட்ட தலை முடியும் என மேகப்பின் உதவியுடன் மிதந்து வந்தாள். எல்லா ஆண்களிடமும் வழிந்துதான் பேசினாள் என்றாலும் வாசுவிடம் மேலே விழுந்து ”வாசு டார்லிங்” எனக்குழைந்தாள்... “இவங்க என்ன இவளோ சாதாரணமா இருக்காங்க.... இவங்களை எப்படி நீங்க மேரேஜ் பண்ணிகிட்டீங்க?” என இழைந்தாள்.... எனக்கு பற்றிக்கொண்டு வந்தது.... சீ என நான் சமையல அறைக்குள் புகுந்து கொண்டேன்.

சிறிது நேரத்தில் “இங்கே வந்து நின்னுகிட்டு என்ன கனவு காணுறே, அங்கே எல்லாரும் சாப்பிட காத்திருக்காங்க, வந்து பரிமாறு” என உறுமினான்.... செய்தேன்..... அனைவரும் சாப்பிட்டுவிட்டு ஆஹா ஓஹோ என பாராட்டினர்....
“இவளால ஆன ஒரே நன்மை இதான், நல்லா சமைப்பா, வீட்டை நடத்துவா, நல்ல சமையர்காரியா வேலைக்காரியா வெச்சுக்கலாம் அவ்வளவே” என்றான் அனைவரின் முன்னும் வைத்து.
எனக்கு அசிங்கமாகவும் அவமானமாகவும் போனது.... ‘இதை விட சிறுமைப்பட முடியுமா, பூமித்தாய் என்னை விழுங்கிக்கொள்ள மாட்டாளா’ என புழுங்கினேன். அவன் என்னமோ பெரிய ஜோக் அடித்ததுபோல எல்லோரும் சுலோவும் ஓஹோ என சிரித்தனர்.

நான் அனைத்தையும் எடுத்துக்கொண்டு உள்ளே சென்று சாப்பிட்டேன் என பேர் செய்து டேபிளை சுத்தம் செய்து அடுப்பு மேடையை சுத்தம் செய்து கொண்டு இருந்தேன்.... அப்போது பின்னே நிழலாடியது.... வாசுவே இருக்கும் என திரும்பியவள் அதிர்ந்தேன்.... முதலில் என் கை பிடித்து அமுக்கியவன் அசிங்கமாக வழிந்தபடி அங்கே நின்றிருந்தான்....
“என்ன வேணும் இங்கே ஏன் வந்தீங்க?” என்றேன் கோபமாக.
“ஹீ ஹீ ஒண்ணும் வேண்டாமே, பாவம் நீ தனியா கஷ்டபடறியே ஏதானும் உதவலாமேன்னு வந்தேன்” என மேலும் வழிந்தான்.
“இல்லை, எனக்கு எந்த உதவியும் தேவை இல்லை வெளியே போங்க” என்றேன் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு.

“நீ எவ்வளோ அழகா இருக்கே, எவ்வளோ நல்லா சமைக்கற... ஆனா உன் அருமை அந்த வாசு பயலுக்கு தெரியவேயில்லை.” என என் தோளை பற்றினான்.

அவனை ஆத்திரத்துடன் திரும்பி முறைத்து, “வாயை மூடு, எடு கையை பொறுக்கி ராஸ்கல்” என பளார் என அவன் கன்னத்தில் அறைந்தேன்.... அவனை அறைந்த பின்னும் என் உடல் கோபத்தில் நடுங்கியது.... உடல் வெடவெடத்தது...
“என்னய்யா அடிக்கறே, கேட்க நாதியில்லை உனக்கு, அப்போதே இவ்வளவு திமிரா?” என அவன் என்னை கட்டி பிடிக்க வந்தான். அவனை ஒரே தள்ளாக ஆவேசம் வந்தவள் போல பிடித்து கீழே தள்ளினேன்.... அங்கே இருந்த அரைக்கும் கல்லின் குழவியை எடுத்து அவன் மண்டையில் போட தூக்கினேன்,

“ஐயோ வேண்டாம் என்னை விட்டுடு” என அலறினான்.
“போடா வெளீல” என கத்தினேன்.
அவன் பயந்து எழுந்து வாசலை நோக்கி ஓடினான்.... என் அறைக்கு சென்று கொஞ்சம் என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள வேண்டும் முடிந்தால் வாசுவை அழைத்து நடந்தவற்றை கூற வேண்டும் என நினைத்து என் அறையை நோக்கி நடந்தேன்....
நான் இருந்த நடுக்கத்தில் உள்ளே கேட்ட முனகல் என் காதில் விழவில்லை போலும்.... சாத்தி இருந்த கதவை மெல்ல தள்ள அது திறந்து கொண்டது..... உள்ளே நான் கண்ட காட்சி என்னை உறைய வைத்தது..... எந்த ஆணையும் எந்த பெண்ணையும் சேர்த்து பார்க்க கூடாத நிலையில் வாசுவையும் சுலோச்சனாவையும் அங்கே என் அறையில் என் படுக்கையில் நான் கண்டேன்..... என் அண்டசராசரமும் உதறியது..... ஆத்திரமும் கோவமும் இயலாமையும் ஒருங்கே என்னை ஆட்டி பார்த்தது....

எதுவுமே நடக்காதது போல சுலோ சரிந்த தன் முந்தானையை சரி செய்துகொண்டு நிமிர்ந்தாள்.
“ஹே அறிவில்லை, கதவை தட்டிவிட்டு உள்ளே வர்றதில்லை?” என இரைந்தான் வாசு. “நான் என் அறைக்குள்ள நுழைய யாரிடம் அனுமதி கேட்கணும்” என்றேன் முதன் முறையாக நேர்கொண்ட பார்வையுடனும் எதிர்த்த குரலுடனும்.
“உன் அறையா, அப்படி ஒண்ணு இந்த வீட்டில இருக்கா என்ன, என்ன டார்லிங் இது, அவங்க அறையாமே.... அப்போ இது உங்க அறை இல்லையா?” என சீண்டினாள் சுலோ.

“அவகெடக்கா டார்லிங்” என அவளை பார்த்து கூறியவன்.
“உன் அறையா, இது என் வீடு என் அறை..... இங்கே நீ எனக்கு சமைத்து போட்டு கட்டிலில் சுகம்குடுக்கும் ஒரு வேலைக்காரி, அவ்வளவே” என்றான் ஏளனமாக.
நான் உறைந்து போனேன்.... சீ என இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு நேரே திரும்ப சமையல் அறைக்கே சென்று கதவை அடைத்து உள் பக்கம் தாழிட்டேன்.

அங்கே ஒரு ஓரமாக இருந்த பாயை விரித்து படுத்தேன்.....தூக்கம் வரவில்லை.... என் வாழ்க்கையில் ஏதேதோ நடக்க கூடும் என நான் நினைத்தது போக இப்படி ஒரு திருப்புமுனையை நான் எதிர்பார்த்திருக்கவில்லை..... என் மூளைக்குள் பலவித யோசனைகள்..... நல்லது கெட்டது நடக்கப்போவது நடந்தது என பலதும் ஆலோசனை செய்தேன்..... கொஞ்சம் கொஞ்சமாக நான் அடுத்து இன்னது செய்ய வேண்டும் என தெளிந்தது மனது..... அதை எப்படி நடத்த வேண்டும் என ப்ளான் செய்துகொண்டேன்.

இந்நிலையில் பொழுதே விடிந்து போனது....பொட்டு தூக்கம் இன்றி இரவு முடிந்தது.... எழுந்து எதுவுமே நடவாதது போல நானும் இயற்கையாக சமைத்து துடைத்து கழுவி என தினசரி வேலைகளில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன்..... இரவு நான் உள்ளே வந்து தாளிட்டுகொண்ட பின் வெளியே என்ன நடந்தது என அறிய எனக்கு இஷ்டமில்லை, அதனால் அவனிடம் நான் வேறே எதுவுமே கேட்கவில்லை..... அவனுமே நான் எதையேனும் கேட்பேன் அழுவேன் கத்துவேன் என எதிர்பார்த்தான் போலும், என் அமைதி அவனை ஆச்சர்யபடுத்தியது..... அது அவன் கண்களில் நான் கண்டேன்.

அவன் டிபன் தின்றுவிட்டு தன் டிபன் பாக்சுடன் ஆபிசிற்கு கிளம்பினான். அடுத்த விநாடி நான் சுருசுருப்பானேன்.... எனக்கென ஒரு பெட்டியை தயார் செய்துகொண்டேன்.... என் பன்னிரெண்டாம் வகுப்பு மார்க் சீட், நன்மதிப்புசான்றிதழ், எனக்கு வேண்டிய துணிமணிகள், என் தந்தை எனக்கு கஷ்டப்பட்டு போட்ட என் நகைகள், சில வெள்ளி சாமான்கள், தேவைப்படும் என நான் நினைத்த இன்னும் சில உடைமைகள் எல்லாவற்றையும் அந்த பெட்டியில் அடுக்கினேன்..... சமையல் அறைக்குச் சென்று மேலே பரணிலிருந்து ஒரு அட்டை பெட்டியை எடுத்து தூசி தட்டினேன், பொறுமையாக சின்ன ஸ்டவ், ஒரு சிறிய குக்கர், வாணலி, குழம்பு பால் தயிருக்கென சில கிண்ணங்கள், கரண்டிகள், ஒரு தட்டு என அதில் அடுக்கினேன்..... அந்த அட்டை பெட்டியில் கொள்ளுமளவு பாத்திரங்கள் நிறைந்ததும் பிடித்து தூக்கிக்கொள்ள வசதியாக அதை கயிறு கொண்டு கட்டினேன்.

பின்போய் குளித்து வந்து கடவுளை வணங்கி என் காமாக்ஷி விளக்கும் சுவாமி படமும் தொழுது எடுத்து என் பெட்டியில் மேலெழ வைத்துக்கொண்டேன்.... என் இருப்பில் சேர்த்து வைத்திருந்த பணத்தை எண்ணி எடுத்து பர்சில் வைத்துக்கொண்டேன்..... அன்றைய நாளிதழையும் எடுத்து கைபையில் சொருகினேன்... எல்லாம் ஆன பின் ஒரு நிம்மதியுடனும் படபடக்கும் இதயத்துடனும் அவனுக்கு ஒரு கால் கடிதம் எழுதினேன்....

“மிருகத்துடன் வாழ்ந்தது போதும் என மனிதர்களின் நடுவே வாழ துணிந்து புறப்பட்டு விட்டேன், தேட வேண்டாம், எந்த முயற்சியும் எடுக்க வேண்டாம்.... நான் எப்போதுமே பொறுமையாக இருப்பேன் என சொல்ல முடியாது” என நாலு வரி எழுதி கை ஒப்பம் இட்டு வாசல் அறை பூ ஜாடியின் கீழே பார்வையாக வைத்தேன்.
பக்கத்து பிளாட்டில் சாவியை குடுத்துவிட்டு இரு பெட்டிகளுடன் கீழே வந்து ஒரு ஆட்டோ பிடித்தேன்.... ரயிலடிக்கு என்றேன்.....ஆட்டோவில் பிரயாணிக்கும் நேரத்தில் கையில் கொண்டு வந்த பேப்பரில் வேலைக்குண்டான பகுதியை ஆராய்ந்தேன்.... கோவையின் அருகே போதநூரில் ஒரு ஆசிரமம் இருப்பதாகவும் அதில் வயதானவர்களை பார்த்துக்கொள்ள ஆயா வேலைக்கு ஆள் வேண்டும் எனவும் கண்டது....சரி கோவைக்கு செல்வது என்ற முடிவோடு ரயிலடியில் இறங்கினேன்...வெஸ்ட் கோஸ்ட் கிளம்ப தயார் நிலையில் இருக்க அதற்கு டிக்கட் எடுத்துக்கொண்டு பெட்டியில் ஏறி அமர்ந்தேன்...

‘இது நாள் வரை கட்டுகோப்பான குடும்பத்தில் பாதுகாப்பாக வளர்க்கப் பட்டேன், பின் கணவன் புகுந்த வீடு என தள்ளப்பட்டேன், எதிலும் என் மனது சுகப்படவில்லை, இனி நான் தனி, என் அடுத்த பொழுதின் வாழ்வு நிலை என்னவாகி இருக்கும் எப்படி இருக்கும் என அறியாத நிலை. ஆனால் இதில் மன நிம்மதி இருக்கும், கண்டிப்பாக இருக்கும்’ என மனதில் ஒரு திடமான எண்ணம் உருவானது.

ஆசிரமத்தை சென்றடைந்தேன்.... அங்கே ஒரு வருட காலம் வேலை செய்தேன்..... மனசுக்கு மிகுந்த உற்சாகத்தை குடுத்தது அந்த வேலை.... பல முதியவர்களுக்கு உதவியாக இருந்தது மன காயங்களை ஆற வைத்தது.... பின்னோடு பெரியய்யா உங்களை பத்தி சொல்லி இங்கே அனுப்பிச்சாங்க, இதோ இப்போ உங்க கிட்ட இப்படி பேசிகிட்டு இருக்கேன்.... சந்தோஷமா இருக்கேன் நிம்மதியா இருக்கேன்..... மனதின் ஓரத்தில் இன்னமும் பழைய ரணம் காயாமல் இருக்கத்தான் இருக்கு, அதை கிளராம ஒதுக்கிவிட்டு நாளை என்பதை நோக்கி ஓடிகிட்டு இருக்கேன்.....

இங்கே உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஆண்ட்டி.... எங்கம்மா கிட்ட எனக்கு கிடைக்காத அன்பு பாசம் பரிவு எல்லாத்தையும் நான் உங்ககிட்ட உணர்ரறேன்..... ஆனா உங்க மகனுக்கு தான் என்னமோ என்னை எதன் காரணமாகவோ பிடிக்கலை. அதைப்பத்தி எனக்கு கவலை இல்லைதான், ஆனா அதன் காரணமா என்னிக்கானும் என்னை போகச் சொல்லீடுவாரோ னு ஒரு பயம் ஓயாம இருக்கு..... அப்படியே போக சொன்னாலும் நான் ஆசிரமத்துக்கு தான் போவேன், மறுபடியும் உங்கள போன்ற பெரியவங்களுக்கு அன்பா கவனிச்சு சேவை செய்வேன்.... ஆனாலும் கூட உங்களை அடிக்கடி வந்து பார்த்துட்டானும் போவேன், உங்களை என்னால மறக்கவே முடியாது ஆண்ட்டி” என்றாள்.

இத்தனையும் கூறி முடித்து நிமிர்ந்த போதும் மனுவின் கண்கள் கலங்கவில்லை, கண்ணீரை பொழியவில்லை..... மனதின் திடம் அவள் முகத்தில் மிளிர்ந்தது..... மென்மையாகவே இருந்தபோதும் பேசும்போது உணர்ச்சியின் வேகத்தில் கொஞ்சம் கடினப்பட்டு மீண்டது.... இதை எல்லாம் கவனித்த கற்பகம் அதிசயித்தார்.....‘இந்த வயதில் இப்படி ஒரு பக்குவம், இது எப்படி சாத்தியம்.... அவள் பட்ட கஷ்டங்களினாலா வேதனைகளாலா’ என ஆச்சர்யபட்டார்.

“உன்னை மெச்சுக்கறதா பாராட்டறதா, உனக்காக பாவப்படறதா னு புரியலை மனு மா.... எனக்கும் உன்னை ரொம்பவே பிடிச்சுதாண்டா இருக்கு.... அவன் உன்னை போக சொல்ல மாட்டான்..... எனக்காக தான் நீ, அவனுக்காக இல்லை.... சொ நீ அந்த பயத்தை விட்டுடுமா” என்றார் ஆதுரத்துடன் அவள் தலை கோதி.

“இத்தனை சோகத்தை மனசில வெச்சுண்டு நீ எப்படிமா சிரிச்ச முகமா மனசார என்னை அன்பா பார்த்துக்கற?” என்றார்.
“என்னோட பழசை மறக்கணும், எனக்குன்னு ஒரு புது வாழ்வை ஏற்படுத்திக்கணும்னு தானே ஆண்ட்டி நான் வீட்ட விட்டு வெளியே வந்தேன், அதையே நினைச்சுகிட்டு நான் என் வாழ்வையும் மிச்சவங்க வாழ்வையும் கூட நாசம் பண்ணிக்கிட்டு இருந்தா அதில என்ன நன்மை இருக்க போகுது..... அதை விடுங்க, ஏதோ நீங்க கட்டாய படுத்தி கேட்டதால நானும் எல்லாத்தையும் சொன்னேன்” என்றாள்.

“அது சரி மனு, அதுக்கு பிறகு நீ உன் பெற்றோரை பார்க்கவே இல்லையா, பேசலையா மா?” என்றார். “அவங்க உன்னை பத்தி கவலைப்படமாட்டாங்களா..... அந்த வாசு நீ இல்லை போய்ட்டேன்னு அவங்களுக்கு தெரியபடுத்தி இருப்பான் இல்லையா..... நீ என்னானியோ ஏதாச்சோன்னு கவலையானும் அவங்களுக்கு இருக்குமே மா?” என்றார் கற்பகம்.

“ஹ்ம்ம் அதுக்கெல்லாம் குடுத்து வெச்சிருக்கணும் ஆண்ட்டி” என்றாள் விரக்தியுடன்.
“ஏன்மா அப்படி சொல்றே?” என்று கேட்டார்.
“நீங்க சொன்னபடி அந்த ஆளு எங்கப்பாம்மாகிட்ட ஏதானும் சொல்லி அவங்கள கலங்க வெச்சிருப்பானோ, அவங்களும் கவலைப்பட்டு போயிருப்பாங்களோன்னு எனக்கும் தோணிச்சு.... அதனால நான் கோவையில ஆசிரமத்தில சேர்ந்த பின்னால நாலு நாள் கழிச்சு என் பெற்றோரை கூப்பிட்டேன்....
எடுக்கும்போதே “என்னடி ஓடுகாலி, இங்கே ஏன் போன் பண்ணினே, எங்கியோ எவனோடையோ ஓடி போனவ போனவளாகவே இருந்திருக்க வேண்டியதுதானே, இப்போ என்னத்துக்காக எங்களை கூப்பிட்டே.... நீ எங்களைபொறுத்தவரைக்கும் இனி இல்லை, நீ செத்துட்டேன்னு நாங்க தலை முழுகியாச்சு. இனி அம்மா அப்பா தங்கைகள்னு உறவு வெச்சுண்டு இப்படி போன் பண்ணலாம், வீட்டுக்கு வரலாம்னு எல்லாம் கனவிலேயும் நினைக்காதே... ஆமாம் சொலீட்டேன் னு’ அப்பா எடுத்த எடுப்பில கத்தி தீர்த்துட்டாரு.

“அம்மா கிட்ட ஒரு நிமிஷம் பேசணும்னு சொன்னேன்.... இனி கூப்பிட மாட்டேன், ஒரே ஒரு முறை னு கெஞ்சினேன்.....அம்மா வந்தா லைன்ல, ‘நீ இன்னும் உயிரோடவா இருக்கே, வெட்க கேடா இல்லையா உனக்கே, நீயெல்லாம் என் வயித்தில எப்படி பிறந்தேனு கேட்டாங்க....
“அம்மா நீயானும் நான் எந்த நிலையில வெளீல வந்தேன்னு நான் சொல்றதை கொஞ்சம் கேளேன் மா” னு கெஞ்சினேன்.... இன்னும் என்ன கேட்கணும், அதான் மாப்பிள்ளை எல்லாம் விவரமா சொல்லீட்டாரே, ‘அவளுக்கு என்னை தவிர வேறே ஆம்பிள்ளை ஸ்நேகிதம் இருந்திருக்கு, அதை நான் கண்டுபிடிச்சுடுவேன்னு அவனோடவே ஓடி போய்டா லெட்டர் எழுதி வெச்சுட்டு.... இதான் உங்க பொண்ணு லக்ஷணம்னு அசிங்கமா பேசி அவமானபடுத்தீட்டார் உங்கப்பாவ..... சீ இப்படியும் ஒரு பொழப்பாடி, இனி நீ எங்க பொண்ணும் இல்லை, நாங்க உனக்கு உறவுமில்லை..... மிச்ச ரெண்டுத்தையானும் நாங்க ஒழுங்கா கரை சேர்க்கணும்... இனி உன்னோட எந்த தொடர்பும் எங்களுக்கு வேண்டாம்’னு சொல்லி போனை வெச்சுட்டாங்க” என்றாள்.
இப்போதும் கூட அவள் கண்கள் கலங்கவில்லை..... வரட்சியான ஒரு சோகம் மட்டுமே காணப்பட்டது.
‘இவள் என்ன பெண்ணா, கல்லா மண்ணா, இப்படியும் ஒருத்தியால் இத்தனை துன்பங்களையும் அவமானங்களையும் தாங்கி வாழ்வில் எதிர் நீச்சல் போட முடியுமா?’ என பிரமித்தார் கற்பகம்.
பேச்சே இல்லாது அவளை இழுத்து தன் மடி சாய்த்து அவள் தலை கோதினார்.

“நீ சொன்னத எல்லாம் நான் பொறுமையா கேட்டேன், உன்னை நல்லபடி புரிஞ்சிகிட்டேன் மனு மா, ஆனா நான் சொல்லக் கூடியது ஒண்ணே ஒண்ணு இருக்கு” என்றார்.
“என்ன ஆண்ட்டி?” என்றாள்.
“நீ இப்படியே இருக்க கூடாது டா.... இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும், உனக்கு இன்னமும் ரொம்ப சின்ன வயசு, நீண்ட வாழ்வு பாக்கி இருக்கு, அதை இந்த பொல்லாத உலகத்தில நீ தனியா கழிக்க முடியாது..... கண்டிப்பா உனக்கு ஒரு துணை தேவை” என்றார்.

“ஐயோ ஆண்ட்டி, எனக்கு இன்னொரு திருமணமா, செய்யாத பாவத்துக்கே பழி போட்டு என்னை அசிங்கபடுத்தி இருக்காங்க எல்லாருமா, இன்னொரு மணம் செய்துகிட்டு அதிலே வேற நான் அவதி படணுமா.... கண்டிப்பா முடியாது..... இந்த மாதிரி பேச்சை இன்னொரு முறை எடுக்காதீங்க ஆண்ட்டி.... அப்பறம் இதற்காகன்னு நான் இந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டி இருக்கும்” என்றாள் திண்ணமாக.
“என்ன மனு மா, நான் ஏதோ ஒரு யோசனையானு சொல்ல வந்தா நீ இப்படி பேசீட்டியே, உனக்கு இஷ்டமில்லைன்னா விட்டுடு.... அதுக்காக என்னைவிட்டு போய்டுவேன்னு நீ எப்படி சொல்லலாம்?” என கோபித்து கொண்டார்.
“சாரி ஆண்ட்டி, நான் உங்களை புண்படுத்த சொல்லலை, ஆனா என் நிலை நான் பட்ட அவதி, என்னை அப்பிடி பயப்பட வைக்குது..... மன்னிச்சுடுங்க” என்றாள்.
“சரி சரி இந்த பேச்சை விடு” என்றார்.
அது முதல் அவளை தன் உறவாகவே நினைத்து அவளை அன்புடன் அவர் கவனித்துகொள்ள துவங்கினார்... அவர்கள் மத்தியில் இருந்த பாச பிணைப்பு இன்னும் இறுகியது.... பலப்பட்டது.

மனுவின் கவனிப்பால் கற்பகத்திடம் நல்ல பலன் ஏற்பட்டது.... அதிக சிரமம் இன்றி நடமாட துவங்கினார்.
கீர்த்தி இதை எல்லாம் கவனித்து வந்தான் தான்..... அவள் மீது நல்ல அபிப்ராயம் ஏற்பட்டது எனினும் அதை ஒப்புக்கொள்ள மனசில்லை....
‘ஆமா என்ன பெரிய, அவ ட்யூட்டிய அவ செய்யுறா, என்னவாயினும் இவளும் பெண் தானே, மாயப்பிசாசுகள்’ என எண்ணிக்கொண்டான்.

அன்று நவராத்திரி நவமி திருநாள்.... கற்பகம் மிகவும் கேட்டுகொண்டதன் பேரில் நல்ல சேலை உடுத்தி பூ பொட்டு என அவருக்காக மட்டுமே தன்னை அலங்கரித்துகொண்டாள். சமையல் சுபாவிடம் கூறி பிரசாதங்கள் ரெடி செய்துகொண்டு பூஜை அறையில் கற்பகத்தை கொண்டு சேரில் அமர்த்தினாள்..... கூட தானும் தரையில் அமர்ந்து லலிதா சகஸ்ரநாமம் படித்தாள்..... ஊதுபத்தியும் சந்தனமும் கமழ, வெள்ளி விளக்குகள் ஒளிவிட மனதை அமைதிபடுத்தி பரவசபடுத்தும் படி அமைந்தது அந்த சூழல்.

வீட்டினுள் நுழையும்போதே நாம உச்சாடனங்கள் கேட்க எங்கே என்ன என கீர்த்தி உள்ளே தலை நீட்டி பார்த்தான். அங்கே கற்பகம் பரவசமாக கண் மூடி த்யானித்தபடி அமர்ந்திருக்க மனு உச்சரித்துக்கொண்டு இருப்பதை கண்டான்..... அவன் அரவம் கேட்ட கற்பகம் கை கால் கழுவி வா பூஜைக்கு என சைகை செய்தார்.... அவருக்காகவென அவனும் அப்படியே வந்தான்.... அவன் வந்து அமர்ந்த கால் மணியில் மனு முடித்தாள்.... எழுந்து ஆரத்தியை கையில் எடுக்க அவனை கண்டாள்.

“ஆண்ட்டி உங்க மகனையே ஆரத்தி எடுக்க சொல்லுங்க, என்ன இருந்தாலும் உங்க வீட்டு பூஜை அறை” என்றாள் அவர் காதோரம்.


4 comments: