Wednesday 27 February 2019

UN KANNIL NEER VAZHINDHAL - 6


“இந்த பூஜைக்கெல்லாம் பெண்கள்தான் எல்லாம் செய்யணும், இதிலெல்லாம் அவனுக்கு பெரிய பழக்கமும் இல்லை... நீயே செய்துடு மனு மா, போ என்ன தயக்கம்” என ஊக்கினார்.
சரி என பிரசாதம் வைத்து ஆரத்தியும் எடுத்தாள். ஆரத்திக்கென ஒரு சிறிய பாட்டும் பாடி ஆரத்தி காட்டி முடித்து அனைவருக்கும் அதை கொடுத்தாள்.

கண்ணில் ஒற்றிகொண்டவன் அவளை ஓரக்கண்ணால் கண்டான்.... ஆழ்ந்த நீலத்தில் லேசான கனகாம்பர வண்ண பார்டருடன் காட்டனில் சரிகை இட்ட சேலை நேர்த்தியாக கட்டி, நீண்ட பின்னலின் மேல் ரெண்டு முழம் மல்லிகையை சூடி, கைகளில் கண்ணாடி வளையல்கள் காலில் கொலுசும் சப்திக்க அவள் பாங்காக இருந்தாள்.... கண்ணை நிறைத்தாள்.... அவனையும் அறியாது அவன் மனம் அவள் பால் செல்லத் துவங்கியது....

அவளது நடை உடை பாவனை, அடக்கம், பணிவு, துணிவு, அன்னையை கவனித்துக்கொள்ளும் பாங்கு, அவளது அறிவு என எல்லாமும் அவன் இந்த சில மாதங்களாக கவனித்துதான் வருகிறான்..... அவன் சந்தித்த மாய பிசாசுகளில் இருந்து இவள் முற்றிலும் மாறுபட்டு நின்றாள் என அவன் மனம் அவனுக்கு எடுத்துரைத்தது..... ஆனால் அதை வெளிகாமிக்காது மனதை அடக்கினான்.
தன்னை அடக்க முடியாமல் அதை எரிச்சலாக அவளிடமே காண்பித்தான்.

பூஜை முடிந்து தன் ஆபிஸ் அறைக்கு சென்றமர்ந்தான்..... கண் மூடி சாய அவன் மனக்கண் முன் மனு நடமாடினாள்..... மனதை கட்டுபடுத்த முடியாமல் திணறினான்..... அவளை அள்ளி அணைக்க அவனது வாலிப வயது அவனை உந்தியது.... அவளை போன்ற ஒருத்தியுடன் கொஞ்சி குலாவி குடும்பம் நடத்திட மனம் ஏங்கியது.... உடல் சூடானது..... தன்னையும் மீறி அவளிடம் அப்படி தன் ஆசையை எப்படியேனும் வெளியிட்டு விடுவோமோ என குழம்பினான்.... அதே நேரம் கற்பகத்தின் உந்துதலின் பேரில் அவள் ஒரு ட்ரேயில் பிரசாதங்களை சிறு கிண்ணங்களில் இட்டு எடுத்துக்கொண்டு கதவை தட்டிவிட்டே தான் உள்ளே நுழைந்தாள். அவனும் தான் மன மயக்கத்தில் ம்ம் வா என கூறி இருந்தான்.

உள்ளே வந்தவள் “பிரசாதம், அம்மா தர சொன்னாங்க” என வைத்தாள் அவன் டேபிள் மீது. அந்த சப்தத்தில் கண் விழித்தவன் அவ்வளவு அருகாமையில் அவளை கண்டு தன்னையும் மீறி கண்ணில் ஆவலுடன் அவளை தீண்டிட மனம் சென்றது.... கைகளை நீட்ட போனவன் தன்னை மீட்டான்.
“என்ன, இங்கே எதுக்கு இப்போ வந்தே, என் அனுமதி இல்லாம உன்னை யாரு உள்ள வர சொன்னா, இப்படி எல்லாம் பட்டும் பூவும் பொட்டுமா உடுத்தி என்னை மயக்க பார்க்கறியா, ச்சே வெளியே போ” என்றான்.
அவனுக்கே தானா அவளை அப்படி பேசினோம், என்ன இது, நான் ஏன் இவ்வளவு கீழ்தரமாகி போனேன் என வெட்கி தலை குனியும் வண்ணம் தன்னையும் அறியாமல் வாய்க்கு வந்ததை பேசி முடித்திருந்தான்.... அவன் சொன்னதை கேட்டு விதிர்விதிர்த்து போய் நிமிர்ந்து அவனை பார்த்தாள். ‘சீ நீ இவ்வளவுதானா?’ என்பது போல பார்த்தவள்.

ஒரு நொடிதான் தன்னை மீட்டுகொண்டாள். தன்னை அவமானமாக அசிங்கமாக பேசினவனை ஏறிட்டாள்.
“ஆமா நாந்தான் தெரியாம கேக்கறேன், நீங்க என்ன மகமகாராஜா பெரிய மன்மத ராஜா உங்க மேல எல்லாரும் மயங்கி கிடப்பதா ஒரு பிரமையா, என்னை பார்த்து இப்படி எல்லாம் பேச உங்களுக்கு யாரு அனுமதி கொடுத்தா..... நான் இங்கே வேலை செய்பவள்தான், ஆனாலும் எனக்கும் தன்மானம்னு ஒண்ணு இருக்கு, உங்களை மயக்கி எனக்கு ஒண்ணும் ஆக வேணாம் மிஸ்டர் கீர்த்திவாசன்..... உங்கள் மேல் எனக்கு அப்படி ஒரு அபிப்ராயம் இந்நிக்கில்லை என்னிக்குமே ஏற்படாது..... உங்க மேலேனே இல்லை, எந்த ஆணின் மீதும் ஏற்படாது.... நான் பட்டவரை போதும்.

உங்க அம்மாக்காக நீங்க எப்படி நடந்துகிட்டாலும் என்ன பேசினாலும் நானும் பொறுமையா போறேன்.... ஆனா, எப்போதுமே இதே போன்ற பொறுமையுடன் நான் இருப்பேன்னு சொல்லீட முடியாது.... பார்த்து பேசுங்க..... இனி ஒரு முறை இதை போன்ற அவமானங்களை நான் தாங்கிகிட்டு சும்மா இருக்க மாட்டேன்” என்றாள் நேராக அவன் கண்ணை பார்த்து.

“என்ன தைர்யம்?” என்றான்.
“இதுக்கு கூட தைர்யம் இல்லைனா உங்கள மாதிரி தற்பெருமை ஆண்களிடம் பிழைக்க முடியாது” என்றாள் அதற்கும்.
“ஹே, யார் கிட்ட? ஜாக்ரத” என்றான் விரல் நீட்டி
“அதையேதான் நான் உங்களிடமும் சொல்றேன் மிஸ்டர் கீர்த்தி, ஜாக்ரதையா வரட்டும் வார்த்தைகள்” என்றாள். பின்னோடு அவனை தூசி என மதித்து சரசரவென வெளியே வந்துவிட்டாள். முகம் சிவந்து விட்டிருந்தது கோபத்தினால் ஆத்திரத்தினால்.

‘ச்சே இப்படியானும் இங்கே இருக்கணுமா, பேசாம ஆசிரமத்திற்கே போயிடலாம்’ என எண்ணினாள்.
இப்போது இந்த நேரத்தில் உடனே எடுக்கும் எந்த முடிவும் அவசரகோலமாக தான் இருக்கும்.... ஆற அமர யோசித்து ஒரு முடிவுக்கு வருவோம்.... நல்லதொரு பூஜை நாளில் அவன் என்னமோ சொன்னான்னு நான் ஏன் மனம் கலங்கணும்.. நான் இங்கே கற்பகம் ஆண்ட்டிக்காக தான் இருக்கேன், இவனுக்காக அல்ல..... அவன் என்ன பேசினால் என்ன, எப்படி நடந்தால் என்ன, என் மீது ஒட்டிக்கொள்ளவா போகிறது’ என பிரசாதத்தை வாயில் போட்டுகொண்டு வெளியே நடந்தாள்
மாலை தென்றல் குளுகுளுவென வீசுகிறதே, அங்கே சென்றால் மனம் லேசாகுமோ என எண்ணி வெளியே தோட்டத்தில் நடக்கத் துவங்கினாள்.
மல்லிகை ரோஜா கனகாம்பரம் என பூக்கள் நிறைந்த பகுதியில் அவற்றை வருடியவாறே மெல்ல நடை பயின்றாள்.

தன் கோபத்தை அடக்க முடியாமல் ‘என்னை போய் என்னவெல்லாம் பேசிவிட்டாள் இவளை உடனே வேலையை விட்டு தூக்கியே ஆக வேண்டும்’ என முடிவெடுத்தவன் ஒரு நொடி கற்பகத்தை எண்ணி தயங்கினான்.
பாவம் அம்மா தன் தனிமை உணர்விலேர்ந்து இப்போதான் வெளியே வந்திருக்காங்க... சந்தோஷமா காணப்படுறாங்க, அவங்களுக்காகதானே நான் இவ்வளவு பாடு படறேன்..... என்னால என்னிக்குமே அவங்களுக்கு எந்த சந்தோஷமும் இல்லை, இதிலேயானும் அவங்க சந்தோஷத்த கெடுக்காம இருக்கலாம், அவ என்னவானும் பேசினா பேசீட்டு போறா’ என மேலே சென்றான்.

தன் அறைக்குள் சென்று அங்கே இருந்த பால்கனியில் நாற்காலியில் அமர்ந்தான்.... அங்கிருந்து பார்க்க மனு தோட்டத்தில் உலாவுவதை கண்டான்..... அவள் முகமும் தன்னை போலவே தெளியாமல் இருப்பதை பார்த்தான்....‘ஆனாலும் இன்னிக்கி நான் பேசினது கொஞ்சம் அதிகம்தான், அதான் அவளும் பதிலுக்கு பதில் பேசீட்டாள்’ என எண்ணினான் சிரிப்பு வந்தது.
‘ஹப்பா என்னமா கோபம் வருது இவுளுக்கு’ என எண்ணிகொண்டான்.
‘எனக்கு இவளை போன்ற ஒருத்தி ஏன் அமையவில்லை, எனக்கு மட்டும் ஏன் இப்படி?’ என்ற சுய கழிவிரக்கத்தில் மூழ்கி போனான்.

மனம் பின்னோக்கி ஓடியது.
அப்போது அவன் கல்லூரி படிப்பை முடித்து விட்டிருந்தான்…. லக்னோவில் ஐ ஐ எம் இல் எம் பி ஏ முடித்த நேரம், காம்பஸ் நேர்முகத்திலேயே அவனுக்கு பல பன்னாட்டு கம்பனிகளில் இருந்தும் அழைப்பு வந்தது.... அதில் நல்லதொரு கம்பனியை தேர்ந்தெடுத்து வேலைக்கும் சேர்ந்தவனுக்கு வாழ்க்கை நீரோடையாக போய் கொண்டிருந்தது.... அப்பா அம்மா தங்கை என குடும்பம் நிம்மதியுடனும் சந்தோஷத்துடனும் இருந்த நேரம்.

எடுத்துக்கொண்ட வேலையில் மனமொன்றி உழைத்தாலும், கீர்த்தி, ஒரு பக்கம் தனது நெடு நாளைய கனவான ஒரு சிறிய இண்டஸ்ட்ரி போட வேண்டும் என்ற ஆசையை நீரூற்றி வளர்த்து வந்தான்.... அதற்குண்டான பணமும் சேர்த்து வந்தான், அதற்கு வேண்டிய ஆவணங்களையும் சேகரித்து வந்தான். இதற்கெனவே அவன் கெமிகல் இஞ்சினியரிங் எடுத்திருந்தான். உடலுக்கும் அழகுக்கும் உதவும் லோஷன் க்ரீம் வகைகளில் சேர்க்கப்படும் வாசனை திரவியங்கள், எண்ணெய்கள் தயாரிக்க அவனுக்கு பெரும் ஆசை இருந்தது. எஸ்சென்ஷியல் ஆயில்ஸ் எனப்படும் பிரிவு அவனை பெரிதும் ஈர்த்திருந்தது.

புயலென அவன் வாழ்வில் நுழைந்தாள் அர்ச்சனா..... அவன் வேலையில் நல்லபடி செட்டில் ஆகிவிட்டான் என கண்டு அவனுக்காக அவனது பெற்றோர் பார்த்த பெண்தான் அர்ச்சனா..... தங்கையின் திருமணத்திற்கு இன்னும் பல ஆண்டுகள் உள்ளன ஆதலால் இவனுக்கே முதலில் முடித்துவிடுவோம் என தீர்மானித்திருந்தனர் பெற்றோர்.

பெண் பார்க்கும் படலம் நடந்தது..... ஒயிலாக இக்காலத்திற்கு ஏற்றபடி நடை உடை பாவனையுடன் வந்து வணங்கினாள் அர்ச்சனா.... அழகோவியமாக இருந்தாள்..... இவனுக்கு அவளுடன் தனியே பேச ஆசை இருந்தது.... அவளைப் பற்றி கொஞ்சமேனும் திருமணத்திற்கு முன் தெரிந்து கொள்ள ஆவல்..... அதை தங்கை மூலம் தூதுவிட்டு பெற்றோரிடம் நடத்திக்கொண்டான்.
பெண் பார்க்கும் படலம் முடிந்த கையோடு அவளது அறையில் அவளை பத்து நிமிடங்கள் சந்தித்து பேசினான்.

“என்ன படிச்சிருக்கீங்க?” என்றான்.
“பி ஏ” என்றாள்.
“நீங்க சிகரெட்டு குடின்னு ஏதானும் பழக்கம் வெச்சிருக்கீங்களா?” என அவள் கேட்டாள். அவன் சிரித்தபடி இல்லை என்றான்.
“ஹப்பா நான் பொழச்சேன், இல்லேனா நான் உங்கள வேணாம்னு சொல்லி இருப்பேன், எனக்கு இந்த பழக்கம் உள்ளவங்கள எல்லாம் கட்டோடு பிடிக்காது” என்றாள்.
“சரி அடக்கமான பெண்” என எண்ணிக்கொண்டான்.
பிடித்தது பிடிக்காதது என பேசி தெரிந்து கொண்டனர்.....தன் மனதில் உள்ள பல நாள் ஆசையை அவளிடத்தில் பகிர்ந்து கொண்டான்.

“எனக்குன்னு சொந்தமா ஒரு இண்டஸ்ட்ரி அமைச்சு அதை நல்லா நடத்தி பெருமை அடையணும்னு.... இது என் நெடு நாளைய ஆசை” என்றான்.
“அப்போ நீங்க அதுக்கு முதலாளியா, காரு பங்களா எல்லாமும் வருமா?” என்றாள் கண்ணில் ஆவலுடன். அவளை ஆச்சர்யத்துடன் பார்த்து, “ம்ம் வரும் வரலாம், அதுக்கு முதல்ல நான் உழைக்கணும், யூனிட் செட் பண்ணணும், அது நல்லா பிடிச்சு வரணும் வளரணும்.....
ஆனா அர்ச்சனா, இப்போதும் நீ சொன்ன கார் பங்களா எல்லாமும் இருக்குதானே?” என்றான்.
“ஆமா, ஆனா, அது உங்கப்பா சம்பாதிச்சது தானே” என்றாள்.
“உண்மை” என்றான்.
பெரும்பான்மையானவற்றில் நிறைய வேறுபாடு இருந்தது.... ரசிப்பில் ருசியில்...... ஆனால் இதெல்லாம் சாதாரண விஷயங்கள் தானே யாராலும் மாற்றி கொள்ள முடியும் என்றேண்ணினான்.

அர்ச்சனாவை பிடித்திருக்கிறது என்றான்.... முகூர்த்த நாள் குறிக்கப்பட்டது.
புடவை துணிமணி எடுக்க என ஒன்றாக சென்றது இரு குடும்பமும்..... அதிலும் கூட இவனுக்கு பிடித்த நிறம் என அவன் கை காட்டியது எதையும் அவள் தொடவில்லை, “ஐய்யே இதெல்லாம் பழங்கால கலர்ஸ்..... இதான் லேட்டஸ்ட்” என அவளுக்கு பிடித்தவற்றை தேர்ந்தெடுத்தாள்..... சரி அவள்தானே கட்டிக்க போகிறவள், இருக்கட்டும் அவள் இஷ்டபடியே என விட்டுவிட்டான்.

திருமண நாளும் வந்தது.... அவன் தனக்கென காலூன்ற முயன்று கொண்டிருந்த நேரம்..... அதனால் அவளுடன் போனில் கூட அதிகம் பேசியது இல்லை..... எந்நேரமும் வேலை வேலை என ஓடவே அவனுக்கு நேரம் சரியாக இருந்தது.... அதில் அவளுக்கு பெரும் மன குறை என பின்னால் தெரிய வந்தது.

திருமணம் நல்லபடி நடந்தது..... நல்ல வசதி படைத்தவர்கள் தான் என்பதால் ஒரு குறையும் இன்றி நன்றாகவே திருமணத்தை நடத்தினர் அவள் பெற்றோர்.
அவளுக்கு மேலே ஒரு தமக்கை மணமாகி இருந்தாள். அர்பிதா, அவள் ஒரு மகப்பேறு மருத்துவர்...... இவர்கள் இருவர் மட்டுமே அக்ககுடும்பத்தில் மக்கள்.

மாலை வரவேற்பு விடை பெறல், புகுந்த வீடு செல்வது என அனைத்தும் கிரமப்படி நடந்தேறின.
அன்றைய இரவு முதல் இரவு என இவனது வீட்டிலே தான் ஏற்பாடு செய்திருந்தனர்..... அவளை அலங்கரித்து உள்ளே கொண்டுவிட்டனர்..... அபிரிமிதமான வெட்கம் எதுவுமில்லை சாதாரணமாக தான் உள்ளே வந்தாள்..... கதவை தானே தாளிட்டாள்.... அவனருகே வந்து பாலை நீட்டினாள்.
“உக்காரு” என அமர்த்தினான். பாலை குடித்து மிச்சம் குடுத்தான்.
“ஐய்யே, உவ்வே.... எனக்கு முதலாவது பாலே பிடிக்காது, உமட்டும்..... இதில உங்க எச்சில் வேற, எனக்கு வேண்டாமே ப்ளீஸ்” என்றாள். சரி என விட்டுவிட்டான்.

கல்யாண நேரத்து கதைகள் பேசி சிரித்தனர்..... ரதிமன்மதன் தாம் வேலையை ஆரம்பிக்க சங்கமமும் இனிதே நடந்தது.... காலையில் கண் விழித்தெழுந்தனர்..... எல்லா வீடும் போல சீண்டல்கள் தொடல்களும் சிணுங்கல்களும் என பொழுது ஓடியது.... அவளது வீட்டிற்கு மறுவீடு சென்றனர்.... அங்கே சென்றதுமே அவள் உண்மை குணம் கொஞ்சம் புரிய ஆரம்பித்தது.... அங்கே, தான் தன் வீடு.... தான் ஒரு ராஜகுமாரி என்பது போலவே நடந்து கொண்டாள்.... அவளை அவள் வீட்டிலும் கூட அனைவரும் அப்படியே நடத்தினர்.... ஏகபோக செல்லமாக பேசி கொண்டாடினர். அவள் துரும்பையும் அசைக்கவில்லை, அசைக்கவிடவில்லை.

“நீ என்ன இன்னும் குழந்தையா, உன்னை இன்னும் எல்லாரும் கொஞ்சணும்னு எதிர் பார்க்கிற?” என்றான் சிரித்தபடி.
“இதில என்ன சிரிப்பு, நான் குழந்தைதான், இந்த வீட்டு ராஜகுமாரி நாந்தான்” என்றாள். “உண்மைதான், அதான் பார்த்தாலே தெரியுதே” என்றான்.
“அது மட்டுமில்லை, இனிமே நீங்களும் நம்ம வீட்டிலேயும் கூட என்னை அப்படித்தான் நடத்தணும்” என்றாள்.

“அதெப்பிடி முடியும், அது நீ புகுந்த வீடு. அங்கே உன் மாமியார் மாமனார் நானு என் தங்கை எல்லாரும் இருக்கோம்.... என் தங்கைய கூட அம்மா செல்லமா வளர்த்தாங்கதான், ஆனா இப்படி ஒரே அடியா தலைமேல எல்லாம் தூக்கி வெச்சு கெடுக்கலை” என்றான். “உனக்கு கிடைக்க வேண்டிய அன்பு பாசம் பெருமை கவனிப்பு எல்லாமும் இருக்கும், ஆனா தனி கவனிப்புனு எல்லாம் நீ எதிர் பார்க்க முடியாது, கூடாது இல்லையா..... உனக்கு இப்போ திருமணம் ஆகிட்டதே” என்றான்.

“என்ன சொல்ல வரீங்க, நான் உங்களுக்கு ஸ்பெஷல் இல்லையா?” என்றாள் முரண்பட்டு. “நீ எனக்கு என்றுமே ஸ்பெஷல்தான் டா..... ஆனா அதுக்குன்னு உன்னை எல்லார் முன்னாடியும் நான் கொஞ்சிகிட்டு திரிய முடியாது இல்லையா, நம்மளோட தனிமை நேரங்கள்ல நான் கொஞ்சுவேன் தான் உன்னை கொண்டாடுவேந்தான்” என்றான்.

“போதும், நீங்க ஒண்ணும் சப்பை கட்டு கட்ட வேண்டாம்.... உங்களுக்கு அப்படீனா உங்க தங்கை தான் உசத்தி, நாந்தான் பார்த்தேனே, கல்யாண நேரத்திலேயே எல்லாம் அவ இஷ்ட்படி தானே நடந்தது..... அவ புடவை எனக்கு உங்க வீட்டில எடுத்த புடவையை விட எடுப்பா இருந்துது” என துவங்கினாள்.

“ஹே என்ன பேசறே நீ, அவ குழந்தை... அவளபோய் உனக்கு போட்டியா நினைக்கலாமா?” என்றான்.
“அவ குழந்தையா பன்னிரெண்டாம் வகுப்பு முடிச்சுட்டா இன்னும் என்ன குழந்தை?” என்றாள்.
“அப்போ நீ மட்டும்?” என்றான்.
“நான் எங்க வீட்டின் ராஜகுமாரி” என்றாள் இறுமாப்புடன்.
“ஆம் அதே போலதானே அவங்கவங்க பெண்கள் அவங்கவங்க வீட்டில ராஜகுமாரிதான்” என்றான் சிரிப்புடன்.
“அதெல்லாம் எனக்கு தெரியாது..... நீங்க நான் சொல்றபடிதான் கேக்கணும்.... எல்லாம் செய்யணும்.... எனக்குதான் முதலுரிமை இருக்கணும்” என்றாள்.
“நடக்க நடக்க பார்த்துக்கலாம் அச்சு” என அப்போதைக்கு சமாதானபடுத்தினான்.

வீட்டிற்கு திரும்ப, நாளொரு பொழுதும் ஏதோ சண்டை ரகளை என ஆரம்பித்தாள்.... தினமும் வீடு போர்களமானது.... அம்மாவுடன் எதற்கெடுத்தாலும் சண்டை....

“எங்க வீட்டில வெண்டைகாயை இப்படி பெரிசா நறுக்கி மசாலா பொடி தூவி தான் வறுப்போம், அப்போதான் ருசியா நல்லா வரும் அப்படிதான் செய்யணும்” என இவள்.
“நம்ம வீட்டில கீர்த்திக்கு, அவ அப்பாவுக்கு நம்ம காஞ்சனா எல்லாருக்கும் பொடிபொடியா நறுக்கி வதக்கினா தான் மா பிடிக்கும்” என புரிய வைத்தார்.
“அதெல்லாம் முடியாது, அப்படி பண்ணினா எனக்கு பிடிக்காது, நான் சொல்றபடிதான் செய்யணும்.... இது என் வீடு, என் புருஷன் வீடு” என துவங்கினாள். அதிர்ந்து போனார் கற்பகம்.
சரி ஏதோ சிறுபிள்ளைத்தனம் என பேசாமல் அவள் இஷ்டத்திற்கே விட்டு விட்டார்.... இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் அவளுடன் காஞ்சனாவுடனும் போட்டி, வாய் வார்த்தை தடித்து பூகம்பம் வெடித்தது.... அவர்களுடன் வாழ அசல் பிடிக்காமல் போனது அர்ச்சனாவிற்கு.

“என்ன குடித்தனமோ என்னமோ, என் இஷ்ட்படி ஒண்ணுமே செய்ய முடியல, எனக்கு பிடிச்சத சமைக்க முடியல, என் இஷ்டப்படி டிரஸ் பண்ண முடியல, எனக்கு பிடிச்ச டிவி கூட பார்க்க முடியல” என தினமும் புலம்பல்.... நிம்மதி கேட்டது கீர்த்திக்கு.... அவளுக்கென தங்கள் படுக்கை அறையில் ஒரு டிவி வாங்கி போட்டான்..... அப்போதும் திருப்தியின்மை தான்.

“கீர்த்தி, நாம தனியா போய்டா என்ன?” என்று குண்டை தூக்கி போட்டாள் ஒரு நாள். “முடியாது” என்றான் ஒரே வார்த்தையாக.
அதற்காக மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டு நாலு நாள் அவனுடன் பேசாமல் உணவு பரிமாராமல் இருந்தாள். இரவும் பகலும் அவனை வருத்தெடுத்தாள்.

இதன் நடுவே அவனுடைய பன்னாட்டு நிறுவனம் அவனது திறமைகளை கண்டு மேலே மேலே அவனை வளர்த்துவிட்டது.... அவனது திறமையை கண்டு ஒரே அடியாக பத்து பதினைந்து வருடங்களுக்கு வேலை உயர்வுடன் என லண்டனுக்கு செல்ல பணித்தனர்.... அவன் அதிர்ந்தான்.... தங்கை திருமணத்திற்கு நிற்கிறாள்..... அவனது லட்சியமே தான் தன் சொந்த காலில் நிற்க வேண்டும், தனக்கென ஒரு சின்ன யூனிட் போட வேண்டும் என்பதுதான்...  அதை நல்லபடி நடத்தி பேரெடுக்க வேண்டும் என்ற பெரும் ஆவலுடனேயே அவன் படித்து முடித்தான்.... பல வருடங்கள் பெற்றோரை ஒதுக்கி அவதிப்பட வைத்துவிட்டு அப்படி போக அவனுக்கு துளியும் விருப்பமில்லை..... இந்த விஷயம் அர்ச்சனாவுக்கு தெரிய வர பேயாட்டம் ஆடினாள்.

“எவ்வளோ பெரிய சான்ஸ், இங்க கிடந்து அல்லாடிகிட்டு இருக்கோம், பேசாம லண்டன்ல போய் ஹாயா வாழறத விட்டுட்டு அப்பா அம்மா தங்கை கல்யாணம்னு உழண்டுக்கிட்டு இருக்க சொல்றீங்களா, நான் மாட்டேன், நாம லண்டனுக்குதான் போயாகணும்” என்றாள்.

“முடியாதுமா, அப்பாக்கு வேற இப்போவெல்லாம் உடம்பு முடியறதில்லை.... அவருக்கும் வயசாகுது, தனியா வீட்டை மேனேஜ பண்ண முடியாது.... அம்மா மட்டும் என்ன செய்வாங்க இப்போவே ஆர்த்ரைடிஸ் வேற ஆரம்பிச்சிருக்கு” என எடுத்து சொன்னான். அதை எதையும் அவள் காதில் வாங்கிக்கொள்ள இசையவில்லை..... போயாக வேண்டும் என ஒற்றை காலில் நின்றாள்.


No comments:

Post a Comment