Friday 22 February 2019

UN KANNIL NEER VAZHINDHAAL - 1


உன் கண்ணில் நீர் வழிந்தால்...

தட தடவென ரயில் ஓடிக் கொண்டிருந்தது. அவளது மனமும் அதே போல தடதடத்துக் கொண்டுதான் இருந்தது.... துணிவுடன் கிளம்பி விட்டோமே, அடுத்து என்ன என மனம் அலைபாய்ந்தது.... பயம் என்பது லேசாக எட்டி பார்த்தது.... ஆனால் அதன் பயனாக கண்ணில் நீர் மட்டும் துளிர்க்கவில்லை.... இன்றல்ல நேற்றல்ல அவளது கண்ணீர் அணைகடந்து பல மாதங்கள் ஆகிவிட்டன.

அது கோவை செல்லும் விரைவு ரயில்.... இரண்டாம் வகுப்பு அமர்ந்து செல்லும் கோச்....
அதில் ஒரு ஜன்னலோரம் அமர்ந்திருந்தாள் மனஸ்வினி.
அவள் காலின் கீழே அவளது சூட்கேசும் ஒரு அட்டை பெட்டியும் அவளது தற்போதைய உடமைகளாக அமர்ந்திருந்தன.... அவளுக்கென்று உலகத்தில் இருந்த பொருட்கள், உடமைகள் சொந்த பந்தங்கள் எல்லாமும் அதுவேயாக இருந்தது.

ஜன்னல் வழியே உள்ளே நுழைந்த காற்று அவளை தழுவி சென்றது.... அவள் கண்கள் தாமாக மூடிக்கொண்டன.... தன்னையும் அறியாமல் கண் அசந்திருந்தாள் மனு... ஒரு ரெண்டு மணி நேரம் போல உறங்கி இருப்பாள் போலும், ஏதோ ஸ்டேஷனில் வண்டி நிற்க அந்த கலகலப்பில் கண் விழித்தாள்....‘ஐயோ தூங்கீட்டோமே,சாமான் என்னாச்சோ?’ என கீழே குனிந்து பார்த்துகொண்டாள். பெட்டியை இணைத்து பூட்டி இருந்தாள் தான்... அட்டைபெட்டியின் கயிற்றிலும் செயினை இணைத்திருந்தாள்.... கொஞ்சம் நிம்மதி ஆயிற்று.

லேசாக பசி தோன்றியது.... தன் கை பையை திறந்து சின்ன டிபன் பாக்சை எடுத்து திறந்தாள்... சப்பாத்திகளும் கூட உருளை மசாலாவுமாக வண்டியே மணத்தது.... அடுத்தவரை திரும்பி பார்க்க வைத்தது.... அவளுக்கே சிறிது கூச்சமாகி போனது.... அதுதான் அவளின் கைமணம்... பாதி மூடியை திறந்து வைத்துக்கொண்டு மெல்ல உண்ண ஆரம்பித்தாள்.... உண்டு பாக்சை கழுவிக்கொண்டு வந்து அமர்ந்தாள்.... குளிர்ந்த நீரை பருகியதும் மனமும் வயிறும் நிறைந்தது.... நடந்து போனவற்றை மனம் அசைபோடவும் மறுத்து மரத்து போயிருந்தது.... அடுத்து என்ன என்பதில்தான் அவளது கவனம் மொத்தமும் இப்போது இருந்தது.

‘போதநூரில் இறங்க சொன்னார்களே, அங்கே இறங்கிய பின் எப்படி அங்கே சென்று அடைவது?’ என்ற எண்ணத்தில் சுழன்றது.... மறுபடி கண்ணை அசத்தியது... சீட்டில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.... முந்திய இரவுகளின் தூக்கமின்மை இப்போது ஆளை அசத்தியது பாவம்..... சில மணி துளிகள் தூங்கி எழுந்து முகம் கழுவி தலைமுடியை இறுக்கி கிளிப் செய்தாள்..... சூடாக காபியும் வடையுமாக வாங்கி அருந்தினாள்.... புத்துணற்சியாக தோன்றியது.... வெளியே இருட்டிக்கொண்டு இருந்தது.... மணி ஏழு நெருங்கும் நேரம் இன்னும் ஒரு மணி நேரத்தில் இறங்க வேண்டிய நேரம் என்று உணர்ந்து அவளையும் அறியாமல் ஒருவித பரபரப்பும் படபடப்பும் அவளை வந்து தொற்றிக்கொண்டது.
எட்டை நெருங்க அவளது வெஸ்ட் கோஸ்ட் வண்டி போதநூரை எட்டியது.... இரண்டு நிமிடமே நிற்கும் என பேசிக்கொண்டனர்.... அவள் அசலே பெட்டியின் செயினை கழற்றி தயார் நிலையில் வாயிலில் கொண்டு ஒவ்வொன்றாக சேர்த்திருந்தாள்.... வண்டி நின்றதும் கூட்டம் முண்டியடிக்க அவர்களில் இருந்து மீண்டு அவளும் முயன்று ஒரு கையில் கை பையும் மற்றொரு கையில் சூட்கேசுமாக தொப்பென பிளாட்பாரத்தில் குதித்தாள்.... பின்னோடு திரும்பி அட்டை பெட்டியை நகர்த்தி பிடித்து இறக்கினாள்..... அங்கே நின்ற ஒருவன் அவளுக்கு ஒரு கை கொடுத்து உதவ ‘தாங்க்ஸ்’ என ஒரு பக்கமாக இறக்கி வைத்துவிட்டு ஹப்பா என மூச்சு விட்டுக்கொண்டாள்.

ஒரு கூலியை பிடித்து “ரெண்டே சாமான் தான்” என பேரம் பேசி அவன் தூக்கிக்கொண்டு முன்னே நடக்க அவள் விரைவு நடையில் அவனை பின் தொடர்ந்தாள்.... வாசலை அடைந்தவள் ஒரு ஆட்டோவை பேசினாள்.... போதநூரில் உள்ள ஒரு தனியார் ஹாஸ்பிடலை ஒட்டிய அனாதை இல்லத்திற்கு அவள் செல்ல வேண்டும்.... இடத்தை கூறி பேசி முடித்து ஏறி அமர்ந்தாள்..... குறிப்பிட்ட ஆசிரமத்தின் எண்ணை செல்லில் அழுத்தினாள்.
“மனஸ்வினிதானே மா, வந்து சேர்ந்துட்டீங்களா, ஒ ஆட்டோவில ஏறிட்டீங்களா, சரி வாங்க மா.... உங்களுக்க சார் காத்திருக்காங்க” என்றான் செயலாளன்.
மனம் படபடத்தது, நான் செய்வது சரியா, சரிதான் என திண்ணமாக கண்ணை மூடி தன்னையே சுதாரித்துக்கொண்டாள்..... ஆட்டோ அந்த ஆசிரமத்தை நெருங்கியது..... கீழே இறங்கி பெட்டிகளை காவலாள் அருகில் வைத்தாள்....
“நான் உள்ளே போகணும், போயிட்டு வர வரைக்கும் இவை இங்கேயே இருக்கட்டுமா ப்ளீஸ்... வந்து எடுத்துக்கறேன்” என்று வினையமாக கேட்டாள். அவன் அவளை சந்தேகமாக பார்த்தபடியே “ம்ம் சரி சீக்கிரமா வாங்க” என்று உள்ளே அனுமதித்தான்.

தயங்கி ஆபிஸ் என பொறிக்கப்பட்ட ரூமை அடைந்தாள்..... பசுமையான சுற்றுபுறங்களை கொண்ட ஒரு விஸ்தாரமான இடம் அது..... எங்கும் பளிச்சென்று கண்ணை கவரும் பசுமை, மரங்கள்கொடி செடிகள் காய் கனிகள் பூக்கள் நறுமணம் கமழ அவளை வா வென வரவேற்றன.... மனம் புல்லரித்தது.... ஆபிசை நெருங்கி உள்ளே சென்று அறிமுகம் செய்துகொண்டாள்.

“நீதான் மனஸ்வினியா மா, வா உக்காரு” என்றார் அந்த ஆசிரமத்தின் முக்கியஸ்தர் அறுபதேனும் இருக்கும், முதியவர்.... கருணையே வடிவான கண்கள், திடமான உடல்.... கனிவே குரலாக அவளை பற்றி விசாரித்தார்.... அவள் அவரது கேள்விகளுக்கு பணிவாக வினையமாக பதிலளித்தாள்.

“இந்த வேலை மிக கடினம் மா, உன்னால செய்ய முடியும்னு நம்பிக்கை இருக்கா, முன் அனுபவம் கூட இல்லையேமா, முகம் சுளிக்காம செய்வியா?” என்று கேட்டார்.
“கண்டிப்பா செய்வேன் ஐயா, என்னை நம்பலாம்.... இதற்கு எல்லாம் முன் அனுபவம் என்பது தேவை இல்லை னு என் சிறு அபிப்ராயம் ஐயா” என்றாள்.

“ஹ்ம்ம் உண்மைதான்.... எங்க ஆசிரமத்தை சுத்திகாட்டறேன், நீயே பாரு, உனக்கு முடியும்னு தோணினா முடிவா சொல்லு.... உன்னை வேலைக்கு எடுத்துக்க எனக்கு ஒண்ணும் கஷ்டமில்லை, எங்களுக்கு ஆள் அவசியம் தேவை” என்றார். அவர் எழ கூடவே அவளும் தொடர்ந்தாள்.

ஒரு பக்கம் மொத்தமும் ஆண்களுக்கான வாசஸ்தலம், மறு பக்கம் பெண்களுக்கானது. அதன் முடிவில் ஒரு பெரிய டைனிங் ஹால்.... அதனை அடுத்து பிரார்த்தனை கூடம்.... அங்கே அனைத்து மதத்து இறை வடிவங்களும் வைக்கப்பட்டிருந்தன. அவள் அதை ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டாள்.
பஜனை செய்ய ஏதுவாக ஒரு சிறிய மேடை அமைப்பும் இருந்தது.
அதனை தொட்டடுத்து ஒரு பெரிய ஹாலில் நாற்காலிகள் போடப்பட்டு ஒரு பெரிய ஸ்க்ரீன் தொலைக்காட்சி பெட்டி சுவற்றில் பதிக்கப்பட்டு இருந்தது. வார இறுதிகளில் தொலைக்காட்சி சினிமாவோ அல்லது விசிடி படமோ காண்பிக்க படும் என கூறினார் பெரியவர்.

அது ஒரு தனியார் நடத்தும் அனாதை ஆசிரமம்.... அவ்வளவாக வசதியில்லாத, கைவிடப்பட்ட முதியவர்களுக்கென்றே கட்டப்பட்டது.... ஒரு பெரிய மருத்துவமனையை ஒட்டிய சேவை மையம் என்பதால், அங்கே சிகிச்சைக்கு என வந்த சில முதியோர்கள் கவனிப்பாரின்றி அனாதைகளாக அவதிப்படும் பட்சத்தில், இங்கே சேர்த்துக்கொள்ள படுவர்.... இவர்களிடம் பணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை..... ட்ரஸ்டின் மூலம் பண செலவு நடக்கின்றது.... அந்த ட்ரஸ்டுக்கு பல பல வசதி படைத்தோர், அமெரிக்கா ஆஸ்ட்ரேலிய நாடுகளில் வசிக்கும் செல்வந்தர்களின் அன்பளிப்பும் வந்து சேர்கிறது.... அதனால் பண கஷ்டம் என்பது இல்லை..... ஆயினும் வாரி இரைக்க செல்வம் இல்லை..... எல்லாமே அளவாக நடந்தது... அதே போல தான் சமையல் சாப்பாடும் மருத்துவ வசதிகளும் கூட..... தரம் நிறைந்ததாக இருந்தது, ஆனால், செல்வ செழிப்பில் மிதக்கவில்லை.

வயதான பெண்களின் விடுதிக்குள் அவளை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார்... பலரும் உறங்க முற்பட்டுகொண்டு இருந்தனர்.... உள்ளேயே ஹால் போன்ற அமைப்பும் அதில் தடுப்புகளுடன் பல கட்டில்களும் போடப்பட்டு இருந்தன.... காபின்கள் போல காணப்பட்டன அவை..... அதை தவிர எதிர் சாரியில் அறைகளாகவும் கட்டப்பட்டு இருந்தன.... அதில் தாங்களது செலவிற்கென கொஞ்சமேனும் பணம் குடுக்க முடிந்தவர்கள் தங்கினர் என கூறினார்.... காபின்களில் முற்றும் அனாதைகளாக இருந்தோர் தங்கி இருந்தனர்.

நிறைய பெண்டிர் படுத்த படுக்கை நிலை.... அவர்களின் உடல் நிலை, சுத்தம், சுகாதாரம் கவனிக்க வேண்டிய பொறுப்பு, அவர்கள் குளிக்க கழிக்க, மாற்றுடை உடுக்க, மருந்து உணவு உண்ண உதவ வேண்டும் இதுவே மனு வின் வேலையாக பொறுப்பாக இருக்கும் என விளக்கினார்.
“எனக்கு பரிபூரண சம்மதம் ஐயா” என்றாள் மனதார.

“ரொம்ப சந்தோஷம் மா.... இப்போ ரொம்ப நேரமாச்சு, நீ உன் சாமான்களோட உனக்குன்னு ஒதுக்கப்பட்ட அறைக்கு போய் ஓய்வெடுத்துக்கோ, நாளை காலை மிச்சம் பேசிக்கலாம்” என்றார்.
சரியென திரும்பி வந்தனர். அவள் சாமான்களை எடுக்க முனைகையில் பையனிடம் கூறி எடுத்து வர செய்தார்.
“பாரு மனஸ்வினி, உனக்கு இப்போதைக்கு எட்டாயிரம் சம்பளம் போட்டிருக்கேன் மா, எங்களால நிறைய எல்லாம் குடுக்க முடியாது..... இது சாரிடபிள் ட்ரஸ்ட் நடத்தும் தொண்டு.....உனக்கு இருக்க இடம், உணவு மற்றைய வசதிகள் இலவசமா கிடைக்கும்” என்றார்.

“போதும் ஐயா, இதுவே எனக்கு போதுமானது” என்றாள் கைகூப்பி.
“ஹ்ம்ம்” என புன்னகையுடன் “சரி மா ரொம்ப சந்தோஷம்,போய் சாப்டுட்டு படு” என்றார்.
சரி என வெளியே வந்தாள். தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றாள்.... எட்டுக்கு பத்து ரூம், அதில் விசாலமான ஒரு ஜன்னல், உள்ளேயே சிறிய குளியல் அறை.... ஒரு கட்டில், ஒரு டேபிள், நாற்காலி, சுவற்றில் ஒரு மாடம் அதன் மேல் ஒரு கண்ணாடி..... அதன் அருகிலேயே திறந்த நிலையில் கதவுகள் இன்றி பிறைகள் இருந்தன.... தன் பெட்டிகளை இப்போதைக்கு டேபிளின் மேல் வைத்தாள்.... தன் போர்வையை எடுத்து உதறி போட்டாள்....

“வாங்க சாப்பிட்டு வந்துடலாம், பத்து மணிக்கு மூடிடுவாங்க” என்று குரல் கொடுத்தான் பாபு, அங்கே எடுபிடி வேலை செய்யும் பையன். சரியென அவனுடன் நடந்தாள்.
உணவகத்துக்கு செல்ல, இவள் யார் புதியதாக என்ற குறுகுறு பார்வையுடன் அவளுக்கு எளிய உணவு படைத்தனர் அங்கே இருந்த ஆட்கள். தானே தனது தட்டை எடுத்துக்கொண்டு செல்ல, முதலில் மூன்று புல்கா ரொட்டிகள், உடன் கொஞ்சம் பருப்பு மற்றும் பொரியல் பரிமாறப்பட்டது.... தயிர் ஒரு சின்ன கிண்ணத்தில் தரப்பட்டது.... அதை அங்கேயே ஒரு நாற்காலியில் அமர்ந்து உண்டாள்.

அனைவருமே முதியவர்கள் என்பதால் எந்த உடல் பிணியும் இருக்க கூடும் என்பதாலும் அதிக உப்பு காரம் எண்ணை இன்றி ஆனால் சுவைபட சமைக்கப்பட்டிருந்தது.... உண்ட பின் நன்றி கூறிவிட்டு தன் அறையை அடைந்தாள்.
கொஞ்சம் உலாவினாள்.... கதவை பூட்டிக்கொண்டு தன் பெட்டியை திறந்தாள்.... இப்போதைக்கு அட்டை பெட்டியை திறக்க வேண்டிய அவசியம் இல்லை என உணர்ந்து அதை கட்டிலின் கீழே தள்ளி மறைவாக வைத்தாள்.... சூட்கேசில் இருந்து சில துணிமணிகளை எடுத்து பிறையில் அடுக்கினாள்... அங்கே கட்டி இருந்த கொடியில் துவாலையை தொங்கவிட்டாள்.... பின் படுக்கையில் சாய்ந்து சிறிது நேரத்தில் உறங்கியும் போனாள்.

குயிலனங்களின் இனிய கானம் கேட்டு கண் விழித்த வினாடி வெகு நாட்களுக்கு பிறகு நன்றாக தூங்கியது போன்ற உணர்வு பெற்றாள் மனு. நிறைந்த மனதுடன் பளிச்சென எழுந்து காலை கடன்களை முடித்தாள்.... கையுடன் குளித்து முடித்து ஆறு மணிக்குள் தயாராகி விட்டாள்.... நேரே பெண்கள் ஆசிரம எல்லைக்குள் சென்றாள்.... அங்கே இவளை போன்ற செவிலியர் சிலர் பணி துவங்கி இருந்தனர்.... தன்னை அவர்களிடம் அறிமுகம் செய்துகொண்டாள்.

“ஒ அப்படியா வா வா” என அழைத்து பணியில் ஈடுபடுத்திக்கொண்டனர்.... வயதான சில பெண்டிரை மெல்ல எழுப்பி அமர்த்தி அவர்கள் பல் துலக்க முகம் கழுவ என உதவினாள்.... அருகிலேயே இருந்து முகம் துடைத்து அன்புடன் பணிவிடையாக எண்ணி செய்தாள்.... மற்ற செவிலியர் இவள் அன்புடன் செய்யும் இந்த பணியை பார்த்து நமுட்டு சிரிப்புடன் சிரித்து பேசிக்கொண்டனர்.... அதை கண்டும் காணாததுபோல இருந்தாள் மனு.

“ரொம்ப தாங்க்ஸ் மா, என் கையில இந்த தண்ணீர் மக் பிடிக்க முடியாம நான் தினமும் பல் தேய்க்க திண்டாடுவேன், இன்னிக்கி நீ வாகா பிடிச்சுகிட்டு எனக்கு உதவினே, மற்றதுகளுக்கு அவ்ளோ பொறுமை எல்லாம் கிடையாது” என்றார் அந்த மாது.
“இருக்கட்டும் ஆண்ட்டி, அதுக்குதானே நாங்க இருக்கோம்” என நகர்ந்தாள்.
“என்னடி வந்த அன்னிக்கே காக்கா புடிச்சுட்டா?” என்றாள் ஒருத்தி.
“புதுசு இல்ல, நாலு நாள் இங்க பீ மூத்திரம் வாரினா இதே அழகோட செய்யறாளான்னு தெரிஞ்சுடாது.... புது துடைப்பம் நல்லாதான் பெருக்கும், உக்கும்” என நொடித்தாள் மற்றவள். ‘ஒ பாலிடிக்ஸ் இங்கேயும் உள்ளதா’ என நினைத்து மனதினுள் சிரித்தபடி நகர்ந்தாள் மனு.

மற்ற சில பெண்டிரை கவனித்து பணிவிடை செய்துவிட்டு அடுத்து என்ன என பார்த்தாள்.
“என்ன பராக்கு பார்த்துகிட்டு நிக்கறே, அடுத்தாப்ல இதுங்களுக்கு குளிக்க உதவணும்.... அதோ அந்த ஏழாம் ரூம் அம்மாவுக்கு கை தூக்க முடியாது..... கொண்டு போய் ஸ்டூல்ல உக்கார வெச்சு தண்ணி மொண்டு ஊத்தி குளிக்க வை” என்றாள் மேட்ரன் போல தெரிந்த ஒருத்தி.
சரி என மனு அவரிடம் சென்றாள்.
துவண்டு பஞ்சாக கிடந்தவரை பார்க்கவே பாவமாக இருந்தது அவளுக்கு..... மெல்ல அவர் தோள் பிடித்து எழுப்பி அமர வைத்து, குளியல் அறைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தாள்..... பதமாக நீரை கலந்து மெல்ல மெல்ல ஊற்றினாள்..... சோப் தேய்த்து அக்கறையுடன் கழுவி நீவி விட்டாள்..... குளித்து முடித்ததும்,
“ரொம்ப நாளைக்கு அப்பறமா இன்னிக்கி தான் நானே கவனிச்சு குளிச்சுகிட்டா மாதிரி ஒரு திருப்தி, நல்லா இரு” என்றார் அந்த பெண்.
“நன்றி மா” என்று அழைத்து வந்து நைட்டி மாட்டி விட்டாள்.... தலைமுடியை ஒதுக்கி வாரி பின்னல் போட்டு விட்டாள்.
இப்படியாக ஒன்றன் மேல் ஒன்றாக அன்று நாள் முழுவதும் வேலை நீண்டு கொண்டே போனது.... உடலளவில் சிரமமாகத்தான் இருந்தது, ஓய்ந்து போனாள்..... ஆனால் மனம் நிறைந்திருந்தது..... உடல் உழைப்புக்கு அவள் என்றுமே தயங்கியது இல்லை, சுணங்கியதும் இல்லை.... தன் அவல வாழ்வின் நினைவுகள் கூட வர விடாமல் இங்கே வேலை மூச்சு முட்டியதில் மனசு லேசாக இருந்தது.... சேவையாக நினைத்தே செய்தாள்.

அவள் அங்கு சேர்ந்து ஆறு மாதங்கள் ஆகி இருந்தன.... இப்போது அவள் பர்மநென்ட் ஆகி மாதம் பத்தாயிரம் சம்பளம் வாங்க துவங்கி இருந்தாள்..... வேலை இல்லாதபோது அங்கே இருந்த பெண்டிருக்கு கதை ராமாயணம் மகாபாரதம் என படித்து காட்டினாள்.... தனக்கு தெரிந்த அளவில் விளக்கம் கூறினாள்..... காலாற அந்த அழகிய பூங்காவனம் போன்ற தோட்டத்தில் உலாவினாள்... அந்த ஆசிரம விஸ்தாரத்தை தாண்டி தொலைவில் தெரிந்த நீலகிரி மலை சாரல் அவள் மனதை கொள்ளை கொண்டது..... உற்சாகமாக வேலை செய்தாள்..... அவளுக்கென தேவைகள் கம்மி, அங்கே அனைத்து வசதிகளும் இருந்தன, அதனால் சம்பாதித்த காசில் பெரும் பங்கு சேமிக்க முடிந்தது..... என்றேனும் பெற்றவர்களை சந்திக்க சென்றால் உதவும் என நினைத்து கொண்டாள். பெருமூச்சுதான் எழுந்தது.

பெரியவரின் வேண்டுகோளுக்கு இணங்கி அங்கே இங்கே என சில பெரிய இடத்து பெண்களுக்கு சில நாட்கள் உதவ சென்றாள்.... ஏதேனும் அறுவை சிகிச்சை நடந்தோ அல்லது கீழே விழுந்து சுளுக்கு கை கால் முறிவு என சில மாதங்கள் படுக்கையில் இருக்க வேண்டிய அவசியம் அந்த மாதுக்களுக்கு ஏற்பட்டிருந்தது...... அந்நேரங்களில் இவள் அங்கே சென்று அவர்களை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டாள்.... மூன்று வாரம் முதல் மூன்று மாதங்கள் வரை கூட சென்று வந்தாள்.... காலை எட்டு மணிக்கே சென்று இரவு எட்டு வரை உதவிவிட்டு வருவாள்.

அதே போல இதோ இப்பொழுதும் இதே ட்ரஸ்டின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு பெரிய இடத்து பெண்ணினை கவனித்து கொள்ள வேண்டி பெரியவர் இவளை வேண்டிகொண்டார்.

“ஆனா ஒண்ணுமா, அங்கேயே தங்கணும், இப்போதைக்கு மூணு மாசம்னு சொல்லி இருக்காங்க, நம்ம சீப் டாக்டரின் சிபாரிசு, நாம தட்ட முடியாது மனு மா..... பெரிய பணக்காரங்க, பெண் துணை இல்லை வீட்டில..... பாவம் ஆனாதை போல கஷ்டபடறாங்களாம் மா, நீ போய் நல்லபடி செஞ்சு குடுமா” என்றார்.
“அங்கேயே தங்கறதுனா எப்படி ஐயா?” என்று தயங்கினாள்.
“ஒண்ணும் பயமில்லை, அவங்களோட அறை பக்கத்திலேயே தங்கிக்கலாம்னு சொல்லி இருக்காங்க, ஒரே ஒரு மகன் மட்டும்தான் அவங்களுக்கு.... அவர் ஊர்லே இருக்க மாட்டாரு.... பிசினஸ் விஷயமா சதா ஊர் ஊரா அலைஞ்சுகிட்டே இருப்பாரு.... அப்படியே இருந்தாலும் வீட்டுக்கு வர்றது எந்த இரவு பத்தோ பன்னிரெண்டோ மணிக்குதான்..... இந்தம்மா பாவம் ரொம்ப தனிமையில கஷ்டப்படறாங்க, அதான் கெஞ்சி கேட்டுகிட்டாங்க” என்றார்.
“ஒ, சரி, நான் முதல்ல சில நாள் போய் தங்கி பார்க்கறேன்“ என்று அரை மனதாக ஒப்புக்கொண்டாள்.

சில துணிமணிகள் மட்டுமே பாக் செய்துகொண்டு அங்கே செல்ல முடிவு செய்தாள்.... அங்கே தான் சென்று தங்கும் நேரத்தில் தன் சாமான்களை இங்கே பத்திரமாக இருக்குமா என ஒரு பயம் பிடித்துகொண்டது..... அருகில் உள்ள பாங்கில் ஒரு கணக்கு துவங்கி இருந்தாள், தான் சேமிக்கும் பணத்தினை வைப்பு நிதியாக போட்டு வைக்க வென.... அங்கேயே கெஞ்சி கேட்டு ஒரு லாக்கரையும் ஏற்பாடு செய்தாள்..... அவளின் சில முக்கிய பொருட்களை அங்கே வைத்து லாக் செய்து சாவியை தன்னிடம் பத்திர படுத்திகொண்டாள். நிம்மதியானது.

அடுத்த நாள் காலை அந்த பங்களாவிற்கு ஒரு ஆட்டோவில் சென்றாள் மனு. பெரியவர் அறிமுக கடிதம் கொடுத்திருந்தார்.... அதை அங்கே செயலாளர் போல தோன்றிய ஒருவரிடம் நீட்டினாள்....
“இருங்க தோ வரேன்” என அவன் உள்ளே சென்றான்.
சில நொடிகளில் “உள்ள வாங்க, சார் கூப்பிடறாங்க” என்று ஹாலின் உள்ளே அழைத்து சென்றான்.
வாசலில் நுழைந்ததுமே அந்த பங்களாவை பார்த்து பிரமித்துதான் போனாள். அழகிய வட்ட வடிவ தோட்டம், பல வண்ண ரோஜாக்களும், பலவித பூக்களுமாக பூத்து குலுங்கியது.... சுவற்று ஓரம் பல தினுசான மரங்களும் செடிகளும் தழைத்தன.... மனதுக்கு ரம்மியமாக இருந்தது..... வாச போர்டிகொவை தண்டி வரவேற்பறை.... அதனை ஒட்டி தான் இப்போது உள்ளே நுழைந்தாள்..... மிக பிரமாண்டமான ஹால்.... அதனின்று மேலே மாடிக்கு படிகள் இடது மூலையில் மேலே ஏறின.... ஹாலைதாண்டி பெரியதொரு டைனிங் தெரிந்தது.... அதன் பின் சமையல் இருந்தது போலும்..... ஹாலின் இரு பக்கமும் சில அறைகள் கண்டன....

அவள் கால் பதியாமல் துவள, தயங்கியபடி உள்ளே நுழைய “என்ன அன்ன நடை இப்படிதான் இருக்குமா உங்க வேலையும், என்ன, இதை போல பங்களாவை இதற்கு முன் பார்த்ததே இல்லையா, இப்போதே எதை எப்படி சுருட்டலாம்னு மனக்கணக்கு போட துவங்கியாச்சா?” என நிஷ்டூரமாக வந்து விழுந்தன வார்த்தைகள். இடது புறம் குரல் வந்த திக்கில் திகிலுடன் திரும்பி பார்த்தாள். பெரியதொரு ஆபிஸ் அறை, அங்கே வட்ட மேஜையின் பின் பல கோப்புகளின் மத்தியில் முகம் மறைத்து ஒருவன் அமர்ந்திருப்பது அரைகுறையாக தெரிந்தது.... அங்கே விரைவாக சென்றாள்.
“சாரி சார்” என்றாள்.
“ம்ம் சிட் டவுன்” என்றான் ஆணையாக. தடுமாறி அமர்ந்தாள்.


4 comments: