Saturday 10 November 2018

NENJAMATHIL UNNAI VAITHEN - 2


“நான் இங்க வந்து சேர்ந்தப்போ கம்பனி புதுசா சீர்தூக்கப்பட்டது. அந்த ஆண்டின் ஆரம்பத்தில்தான் பாசினுடைய தந்தை திடீரென இறந்து போயிருந்தார். பாஸ் அப்போதுதான் மேற்படிப்பு முடிந்து இந்திய திரும்பி இருந்த நேரம். கம்பனியப் பற்றி ஒண்ணுமே தெரியாத நிலை. வீட்டில் அவரது அம்மாவையும் பார்த்துக்கொண்டு, இங்கு கம்பனியையும் பார்த்துக்கொண்டு கொஞ்சம் திண்டாடினார்னு கேள்விப்பட்டேன்.

பின் மெல்ல மெல்ல பாஸ் கற்றுத் தேர்ந்து கம்பனி நல்லபடி ஓட ஆரம்பிச்சது
. அதை விரிவுபடுத்தும்போதுதான் என்னை வேலைக்கு தேர்வு செய்தார். எனக்கு அப்போ கல்யாணமே ஆகி இருக்கலை. இரவு பகல் பார்க்காமல் உழைப்பார் பாஸ்.
பின்னோடு தூரத்து சொந்தம் என்றும், பந்தம் விட்டுப்போய்விடக்கூடாது என்றெல்லாம் பேசி, இவரை கரைத்து, பெண் கொடுக்க முன்வந்தார் இவரது ஒன்றுவிட்ட மாமா.  பாசிற்கு இருந்த நிலைமையில அப்போ கல்யாணமே வேண்டாம் என ஒரே அடியாய் மறுத்தார். அவரது அம்மா பார்வதிதான், தந்தை இறந்த அதே வருடத்தில் திருமணம் செய்தால் நல்லதுன்னு, தானும் தனியே இருக்கிறாள் கூட மருமகள் இருந்தால் தன் துக்கத்தை ஆற்றிக்கொள்ள வசதியாக இருக்கும் என்றும் கெஞ்சி சம்மதிக்க வைத்தார்களாம்.”

“பின்னோடு திருமணம் நடந்தது. நான் வந்த புதிது. எல்லா ஸ்டாபும்  போனோம். அந்த பெண் பார்ப்பதற்கு அழகாகவே இருந்தாள். ஆனால் புதுமணப் பெண்ணிற்கு உண்டான எந்த வெட்கமும் சந்தோஷமும் கனவுகளும் அவள் முகத்திலோ கண்ணிலோ நாங்க யாருமே காணவில்லை. சிலபேர் அப்படி இருப்பாங்கனு நினைச்சேன்.
ஒருவருடம் ஓடியது. அவங்க கருவுற்றிருக்காங்கனு செய்தி வந்தது. ரொம்ப விமர்சையா சீமந்தம் எல்லாம் செஞ்சாங்க பார்வதியம்மா.
குழந்தை பிறந்தது. பவித்ரான்னு பேர் வைத்து ரொம்பவே அன்பா  வளர்த்தாங்க.
திடீர்னு என்னாச்சோ என்னவோ யாருக்கும் ஒண்ணும் புரியலை தெரியலை, ஒரு வாரம் சார் ஆபீஸிற்கும் வரலை, போனும் எடுக்கலை. கம்பனி ஸ்தம்பித்து போனது. “
“பின்னோடு வந்த செய்தி மிகவும் அதிர்ச்சியானது மதுரா..
. அந்த பொண்ணு, மூணு மாதப் பச்சிளம் சிசுவையும் தன் புகுந்த வீட்டையும் விட்டு ஓடி போய்டா யாரோடவோ...”
ஐயய்யோ என்று கத்திவிட்டாள் மதுரா.
உஸ், மெல்ல மதுரா, இது ஆபிஸ்... நாங்க எல்லாமும் அப்படித்தான் அதிர்ச்சி ஆனோம். பாசுக்கு எப்படி இருந்திருக்கும்னு யோசிச்சு பாரு.
ஒருவாரம் பொறுத்து பாஸ் ஆபீஸ்க்கு வந்தார். எப்போதும் போல வேலை நடந்தது. ஆனால் அவர் மட்டும் இறுகி போய்ட்டார்.

முக்கியமா பெண்களைக் கண்டா வெறுப்பு
, கோவம், ஆத்திரம். சொல்லொணா கசப்பு. 
அந்த பொண்ணு பண்ணிட்டுப்போன கோலத்துக்கு நாம எல்லாம் அனுபவிக்கிறோம். இதெல்லாம் தெரிஞ்சப்பிறமா என்னால அவர தப்பா நினைக்க முடியலை மதுரா... நாமளானாலும் அப்படித்தானே இருந்திருப்போம்னு தான் எண்ணினேன்.
அதைத் தவிர அவர்கிட்ட வேறு ஒரு குத்தமும் சொல்ல முடியாது. ஹி இஸ் அ ஜென்டில்மான்.
அவருடைய ஸ்டாபிற்கு எப்போது எதுவேண்டுமோ பார்த்துப் பார்த்து செய்வார். என் கல்யாணத்திற்கு கூட வந்திருந்தார்.

அவங்க அம்மா பார்வதிக்கு என்னை ரொம்ப பிடிக்கும். எல்லா லேடீஸ் ஸ்டாபையும் பிடிக்கும். அவங்க மூலமாத்தான் நான் இந்த கொஞ்ச விவரமும் தெரிஞ்சுண்டேன். மிச்சபடி முக்கிய காரணம் என்னனு இங்க யாருக்கும் தெரியாது.
அதுனால நீ பயப்படவே வேண்டாம். நீ பாட்டுக்கு உன் வேலையப் பண்ணு. அத சரியா பண்ணினா போறும் அவர் ஒண்ணுமே அனாவசியமா சொல்ல மாட்டார். தைர்யமா இரு என்று தேற்றினாள் வசந்தா.

அடக்கடவுளே இந்த மனுஷனுக்கு இப்படி ஒரு கொடுமையா, எவ்வளோ நல்லா இருக்காரு ஜம்முனு, பாரின்ல போய் படிச்சுட்டு வெற்றிகரமா கம்பனி வெச்சு நடத்தி நல்லபேர் சம்பாதிச்சிருக்கார். காரும் பணமும் பங்களாவுமாக,  அழகான குழந்தை இருக்குனு வேற சொல்றாங்க வசந்தா... அந்த பெண்ணுக்கு என்ன லூசா... பாவம் வித்யாதரன் என்று எண்ணியது அவள் மனம்.
சரி உண்மை தெரிந்ததால் வசந்தா கூறியதுபோல், அவருக்கு மேலும் கஷ்டம் ஏற்படுத்தாமல் நமது வேலையை செவ்வனே செய்துகொடுப்போம் என தீர்மானித்தாள்.

மதுரா அங்கு வேலைக்கு சேர்ந்து மூன்று மாதங்கள் ஓடி விட்டன. வசந்தா விடுப்பில் போய் இரண்டு மாதம் ஆயிற்று. இதற்குள் மதுரா திறம்பட வித்யாவின் வேலைகளை செய்துகொடுக்க தேர்ந்துவிட்டாள்.  அவன் எள் எனும் முன் எண்ணையாக நின்றாள். அவனுக்கு அனாவசியமான தொந்தரவு தராமல் ஆனால் அவனுக்கு வேண்டிய ஆவணங்கள், கோப்புகள் என்று தயார் செய்து வைத்தாள். அக்கௌண்ட்ஸில் அவ்வளவாக வேலை இல்லை என்பதால் இந்த வேலை முழுவதுமாக கவனமாக செய்ய முடிந்தது.

அப்போது வசந்தாவிற்கு சீமந்தம் என்று பத்திரிக்கை கொடுத்தாள்
.
அவளுக்கு ஏதேனும் நல்ல பரிசுப்பொருள் வாங்கலாமே என்று மதுரா தன் மற்ற பெண் பணியாளர்களோடு பேசி ஒரு சர்குலர் தயாரித்தாள். அதில் நூறிலிருந்து அவரவருக்கு விருப்பப்படி எவ்வளவு  வேண்டுமெனிலும் கொடுக்கலாம் என்று எழுதி ஆபிஸ் பையனிடம் கொடுத்து அனுப்பினாள். அவளுமே இருநூறு போட்டிருந்தாள். மாலைக்குள் நல்ல கலெக்ஷன் ஆனது. வீடு செல்லுமுன் வித்யாவிடம் சில கோப்புகளில் கை ஒப்பம் வாங்கச் சென்றாள் அதை பெற்றுக்கொண்டு பயந்து தயங்கியபடி
சார் ஒரு சின்ன விஷயம், பேசலாமா?” என்றாள்.
ம்ம் என்றான் முகம் பார்க்காமல்.
இரண்டு நாளில் வசந்தா மேடமின் சீமந்தம், கூப்பிட்டிருக்காங்க...”
ம்ம்...” என்றான்.
இல்லை, அவங்களுக்கு ஏதேனும் நல்ல பரிசுப்பொருள் வாங்கலாம்னு நான்  ஸ்டாப் எல்லோரிடமும் கலெக்ட் பண்ணினேன்... தப்பா இருந்தா மன்னிக்கணும்... நீங்க... ஏதேனும்...”  என்று நிறுத்தினாள். அதற்குள் அவளுக்கு வியர்த்திருந்தது.

அவளை ஏறிட்டு
நல்ல விஷயம்தான்... குட்... கொடுங்க என்று வாங்கி தன் பங்கிற்கு இரண்டாயிரம் என்று எழுதினான்.
என்ன வாங்கலாம்னு ஐடியா?” என்று கேட்டான்.
வசந்தா மேடமிடமே கேட்டோம், கிரிப் அதாவது தொட்டில் போன்றது வாங்கலாம்னு சொன்னாங்க... அதையே...”
ஓ, இதெல்லாம் நீங்க லேடீஸுக்குதான் தெரியும்... அப்படியே செய்துடுங்க... நீங்களே போய் பாத்து நல்லதா வாங்கிடுங்க... மேலும் பணம் தேவைப்பட்ட கம்பனி கணக்கிலிருந்து கொடுக்கச் சொல்லுங்க... நான் அப்ரூவ் பண்ணறேன் என்றான். பின் அவனது வேலையில் மூழ்கினான்.

அட வசந்தா மேடம் சரியாத்தான் சொன்னாங்க... இவனுக்கு நல்ல மனசு என்று மெச்சியபடி நகர்ந்தாள்.
அன்று மாலையே அவளும் உஷவுமாக குழந்தைகளுக்குண்டான கடைக்கு சென்று தேர்வு செய்து வாங்கி வசந்தா வீட்டில் அடுத்த மாதம் டெலிவரி செய்யும்படி பணித்தனர். அதற்குண்டான பில், காரன்டீ எல்லாவற்றையும் அழகாக ஒரு கவரில் போட்டு ஒட்டி கையில் எடுத்துக்கொண்டுபோய் கொடுத்துவிடலாம் என தீர்மானித்தனர்.

மற்றைய நாள் வெள்ளியன்று எல்லோரும் வசந்தா வீட்டிற்குச் சென்றனர். அதிகாலையில் வளைகாப்பும் பின் சீமந்தமும் என ஏற்பாடு செய்யப்பட்டிந்தது. சிம்பிளான ஆனால் அந்த காலத்து கட்டிடம்.. சொந்த வீடு... அக்கம் பக்கம் நிறைய இடத்தோடு இருந்தது.
அங்கேயே பக்கத்து இடத்தில் கூரை வேய்ந்து சாப்பிட டேபிள் சேர் போட்டு ஏற்பாடு செய்திருந்தனர்.
மதுரா தளிற்பச்சையில் மெல்லிய ஜரிகை கீற்று போட்ட சில்க் புடவையும் மாச்சிங் ப்ளவுசுமாக தயாரானாள். அதற்கு நீண்ட கழுத்து செயினும் காதில் குடை ஜிமிக்கி ஆட, இடுப்புக்கு மேலே சுருள் பந்தாக முடிந்த பின்னலில் கொஞ்சம் மல்லிகையுமாக ரெடியானாள். தன் டூ வீலரில் கிளம்பிச் சென்றாள். சீக்கிரமாகவே சென்றுவிட்டாள் மதுரா. அங்கு சென்று தன்னால் ஆன உதவிகளை செய்துகொண்டிருந்தாள். பின்னோடு உஷாவும் வந்து சேர்ந்துகொண்டாள். எல்லோருக்கும்  மஞ்சள் கும்குமம் கொடுக்க, வளையல்கள் அடுக்க என சிறு உதவிகள் செய்தபடி இருந்தனர்.

சீமந்தம் நடக்கும்போது மற்ற ஆபிஸ் பணியாளர்களும் வந்துசேர
, பின்னோடு வித்யாதரனும் தன் அன்னையோடு வந்தான். வசந்தா ஜாடை காண்பிக்க உஷாவும் மதுராவுமாக பார்வதியை உள்ளே அழைத்து வந்து அமரச்செய்து பேசிக்கொண்டிருந்தனர். வித்யா வசந்தாவின் கணவனோடு இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு போய் மற்ற ஸ்டாபோடு அமர்ந்துகொண்டான். 

பின்னோடு சீமந்தம் முடிந்து சாப்பிடச் சென்றனர்
.
அங்கு ஒரே அல்லோகல்லமாக இருந்தது. கேடரிங் செய்பவர் இரண்டு உதவியாளருடன் மட்டுமே வந்து, இங்கிருந்த கும்பலைக்கண்டு தவித்து போனார். இதில் எல்லோருக்கும் ஆபீஸ் போக அவசரமாகியது. எல்லோரும் ஒன்றாக முட்டிக்கொள்ள ஒருவழியாக ஒரு பந்தி முடிந்தது.

மறுபந்திக்கு ஆட்கள் முட்டிக்கொள்ள சட்டென்று அங்கிருந்த நிலைமை பார்த்து உஷாவின் காதோடு ஏதோ சொல்லி இரு பெண்களும் முந்தானையையும்
கொசுவத்தையும் இழுத்து சொருகிக்கொண்டு பரிமாறச் சென்றனர். வித்யாவும் அவனது அன்னையும் இன்னமும் பலரும் இதை ஆச்சர்யத்துடன் பார்த்திருந்தனர்.
இவள் கூட்டை எடுக்க உஷா பச்சடியை எடுக்க மளமளவென்று இலையில் பரிமாற ஆரம்பித்தனர். ஆபீஸ் ஸ்டாப் வந்து சகஜமாக பரிமாறுவதைக்கண்டு சட்டென சொந்தங்களில் இரு பெண்களும் ஆண்களுமாக கைகொடுத்தனர். பந்தி நல்லபடி நிறைவாக முடிந்தது. வசந்தா மதுராவின் கைகளை பிடித்தபடி நன்றியோடு கண் கலங்கினாள்.

உஸ், வசந்தா என்ன இது,  ஒண்ணுமே இல்லை, சின்ன ஹெல்ப் அவ்ளோதான். நீங்க அழவே கூடாதுஎன்று தேற்றினாள்
இல்ல மதுரா, இவர் ஆபீஸ்லேந்து நிறைய பேர் எதிர்பார்க்காம வந்துட்டா... சாப்பாடு நிறையத்தான் இருக்கு... ஆனா இந்த கூட்டத்தை கேடரர் எதிர்பார்கலை அதான் இப்படி...”
போகறது விடுங்கோ... நீங்க களைப்பா இருப்பேள் கொஞ்சம் ரெஸ்ட்  எடுங்கோ. குடிக்க ஏதேனும் கொண்டு வரட்டுமா?” என்றாள் ஆதுரமாக.
இல்லை, இப்போ நாமள்ளம் தான் பாக்கி ஒண்ணாவே சாப்பிடஒக்காந்துடலாம் என்றபடி எழுந்தாள்.

அடுத்த பந்தி சொன்னதுபோல வீட்டினரும் இவர்களது சில ஸ்டாபும் மட்டுமே என பாக்கி இருந்தனர்.
கேடரர் நன்றியோடு ரொம்ப தாங்க்ஸ் மா... நல்ல நேரத்தில கை கொடுத்தீங்க... எங்க பேர் கெட்டுப்போகாம காப்பாத்திட்டீங்கமா என்றார்.
நீங்களும் ஒக்காந்துடுங்கமா... நாங்க பாத்துக்கறோம் என்றார்.
இருக்கட்டும் பரவாயில்லை முதல் ரவுண்ட் போட்டுட்டு ஒக்காரறோம் என்று பரிமாறிவிட்டு வந்தாள். அப்போதுதான் கவனித்தாள் பார்வதியும் வித்யாவும் கூட காத்திருப்பதை.

நீங்க அப்போவே சாப்பிட்டிருக்கலாமே மேடம்... ரொம்ப லேட் ஆயிடுச்சோ, வாங்க சாப்பிடலாம் என்று கூறி அழைத்துச் சென்றாள்.
என்ன பொண்ணுமா நீ, ப்ரமாதம் போ. நீ ஒக்காருமா அப்போலேந்து அலையறே... நானும் வித்யாவும் இதோ வரோம்என்றார் அவர்.
சரி என்று இவள் போய் உஷாவை அடுத்து அமர்ந்தாள்.  வசந்தாவின் கணவன் வித்யாவையும் பார்வதியையும் அழைத்து போய் அதே பந்தி வரிசையின்  முதல் இரண்டு இடத்தை காண்பித்து அமரச் சொல்லி சென்றான்.
அம்மா நீ உள்ள போய் ஒக்காந்துக்கோ நான் கடைசில ஒக்காரறேன் என்றான் வித்யாதரன்.
உள்ள போய் ஒக்காந்துட்டா என்னால எழுந்துக்க முடியாது வித்யா... நீ உள்ள ஒக்காரு என்ன ஓரமா விட்டுடு என்று அமர்ந்துகொண்டார் பார்வதி.

கடனே என்று மதுராவின் அருகில் போய் அமர்ந்தான்
. அவள் முகம் காணாமல் குட் ஜாப் என்றான் முகம் மென்மையாக வைத்தபடி. தன்னைத்தான் சொல்கிறான் என்பதே மதுராவிற்கு சில நொடிகள் கழிந்தபின்னே உரைத்தது.
ஓ தாங்க்ஸ் சார்... இதெல்லாம் சின்ன ஹெல்ப்தானே என்றாள் புன்னகைத்தபடி.
நான் அம்மாவை வீட்டில்விட்டு ஆபீஸ் போவேன்... நீங்க தேவைப்பட்டா வசந்தா மேடத்துக்கு ஏதானும் உதவி செஞ்சுட்டு நாளைக்கு வரலாம்.  ஒண்ணும் முக்கியமான வேலை இல்லை இன்று ஆபிசில் என்றான் எங்கோ பார்த்தபடி.
தாங்க்ஸ் சார். அதெல்லாம் தேவை இருக்கும்னு தோணலை சார்... நான் கேட்டுக்கறேன்... இல்லேன நான் கொஞ்ச நேரத்துல வந்துடறேன் என்று சென்றுவிட்டாள்.

அத்யாயம் ஆறு
நாட்கள் மாதங்களாக துள்ளி ஓட மதுரா அந்த ஆபிசில் வேலைக்கென வந்து ஆறு மாதங்களுக்கு மேலாக ஆகி இருந்தது. இப்போது அவளை நம்பி ஆபிசை ஒப்படைத்துவிட்டு எங்கு என்ன வேலை என்றாலும் செல்லும் அளவு வித்யாதரனுக்கு அவள் மீது நம்பிக்கை வந்திருந்தது. ஆயினும் வாய்விட்டு சொல்லிவிடவில்லை.
பார்வதிக்குதான் பவித்ராவோடு அலைய முடியாமல் உடம்பு படுத்தியது.

ஒரு நல்ல ஆளா போடலாம்னா யாருமே நிக்க மாட்டேங்கறா... அதிலயும் பவி சமத்தாதான் நடந்துக்கறது இப்போ எல்லாம்... என்னடா பண்றது வித்யா... நீ இன்னொரு கல்யாணம்...”  என்று அவர் ஆரம்பிக்கும் முன்பே,
ஏன், பண்ணி வெச்சீங்களே ஒருதரம், போறலையா... வேண்டாம்னு தலையா அடிச்சுகிட்டேனே, யாரானும் கேட்டிங்களா எம் பேச்சை... இன்னொரு முறையும் போய் குட்டையில விழணுமா... அம்மா, ஆள விடு... பவிய நானே பாத்துக்கறேன் என்று கத்திவிட்டு சென்றுவிட்டான்.

அப்பாவின் கோபத்தையும் கத்தலையும் கேட்ட பவி பயந்து நடுங்கி தானே சமத்தாக தயாரானது. ஆயினும் சிறு குழந்தை, மனதின் ஆழத்தில் தாய் பாசத்திற்கு ஏங்கியது. அதை புரிந்தும் இருவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இரவில் தன்
டாடியின் அணைப்பில் தூங்கினாலும் மற்ற நேரங்களில் அவளின் தனிமை, ஏக்கம் என வருந்தி பவிக்கு ஓயாமல் உடம்பு படுத்தியது. தனிமையில் அழுவாள் போலும். எங்கே தந்தையின் முன் அழுதால் திட்டுவான் என்ற பயம் உள்ளே இருக்க, யாரும் அறியாமல் அழுதது குழந்தை. இதனால் நெஞ்சில் சளி எப்போதும் இருந்தது. மருந்து கொடுத்து வந்தார் பார்வதி. அவரால் ஆன வரை நல்லபல கதைகள் சொல்லி அரவணைத்து தான் பார்த்துக்கொண்டார்.

இதனிடையில் வித்யாதரன் பெங்களூரில் ஒரு கான்பரன்ஸ்  என்று போயிருந்தான்
. அடுத்த நாள் திரும்பிவிட ப்ளான் செய்து மதுராவிற்கு அங்கிருந்த ஆபிஸின் முகவரி நம்பர் எல்லாம் தெரியும்தானே என்று செக் செய்துகொண்டு சென்றான்.
அதிகாலை விமானத்தில் அங்கு போய் இறங்கி தன் மீட்டிங்கில் அவன் கவனமாயிருக்க, இங்கே குழந்தைக்கு நெஞ்சில் சளி முற்றியது. மூச்சுவிடவே சிரமப்பட்டது. அதை பார்த்து பார்வதி பயந்து போனாள். குடும்ப மருத்துவர் ஊரில் இல்லை என தகவல் தெரிந்தது.

உடனே சமயோசிதமாக ஆபிசிற்கு போன் செய்தாள்
.
அங்கே மதுரா போனை எடுக்க, பார்வதி பதற்றத்துடன் அழுதபடி எல்லா விவரமும் சொல்ல முற்பட்டாள். மதுராவிற்கு ஒருவாறு விளங்கியது.
அம்மா நீங்க தைர்யமா இருங்கம்மா... நான் தோ வரேன் அங்கே... பயப்பட வேண்டாம் மா... குழந்தையோட ரிப்போர்ட் ஏதானும் இருந்தா எடுத்து வையுங்க, கூடவே என்ன மருந்து குடுக்கறீங்களோ அதுவும்... நான் கிளம்பீட்டேன்மா என்றாள்.

பின்னோடு போய் ஜி எம்மிடம் விவரம் சொல்லி ஒரு டாக்சி பிடித்துக்கொண்டு வித்யாவின் வீட்டை அடைந்து குழந்தையை தூக்கிக்கொண்டு மற்றவையும் எடுத்துக்கொண்டாள்
,
நீங்க வரீங்களா எப்பிடிமா, முடியுமா உங்களால.... இல்ல நான் போயிட்டு கூப்பிட்டு விவரம் சொல்லவா?” என்று கேட்டாள்.
நானும் வரேன் மதுரா... எனக்கு இங்க தனியா பயமா இருக்கும் என்றபடி
காமு வீட்டை பாத்துக்கோ நாங்க போயிட்டு வரோம் என்று கிளம்பினாள்.
இருவருமாக பக்கத்தில் இருந்த சுகவனம் மருத்துவமனை சென்று குழந்தையை சேர்த்தனர். அது குழந்தைகளுக்கான ஒரு நல்ல மருத்துவமனை. உடனே கவனிக்கப்பட்டது. கொஞ்சம் மூச்சு திணறல் அடங்கி குழந்தை உறங்கியது.

டாக்டர் வெளியே வந்து காச்மூச்சென திட்டி தீர்த்தார்
.
ஏன் மேடம், நீங்க எல்லாம் குழந்தை பெத்துக்கறீங்க, நெஞ்சில இவ்வளவு சளி கட்டி இருக்கு, எப்பிடி கவனிக்காம விட்டீங்க... நிறைய அழுதிருப்பா போலிருக்கு... அதான் இந்த நிலைமை... ரொம்ப பயந்து ஒடுங்கி போயிருக்கா குழந்தை... என்னமா பெற்றோர் நீங்கள்ளாம்? பெத்துட்டா போறாதுமா என்று கத்தினார்.
பார்வதி அம்போவென பயந்தபடி வார்ட் வாசலில் ஒக்காந்திருக்க அத்தனை திட்டுகளையும் பேசாமல் வாங்கிக் கொண்டாள் மதுரா. “இப்போ எப்படி இருக்கு?” என்று மட்டும் கேட்டாள்.
இப்போ வந்து கேளுங்க... ட்ரீட் பண்ணியாச்சு... தூங்கறா... அப்சர்வேஷனுக்காக நாளை வரை இங்கேயே இருக்கட்டும்... யாரு உங்க குடும்ப டாக்டர்?” என்று கேட்டுக்கொண்டார்.
இந்த இடைபட்டவேளையில் மதுரா பெங்களூரில் மீட்டிங் நடக்கும் ஆபிஸ் நம்பரை கூப்பிட்டு வித்யாவிற்கு அவசரச் செய்தி என்றும் அவனுக்கு ஒழிந்த உடனே இங்கே இந்த மருத்துவமனை நம்பரை கூப்பிடவேண்டும் எனவும் மெசேஜ் கூறி இருந்தாள்.

தனியே அமர்ந்திருந்த பார்வதியிடம் வந்து அம்மா, ஒண்ணும் பயப்படும்படி இல்லையாம்... ட்ரீட் பண்ணீட்டாங்க... பவி தூங்கறா... நாளைவரை இங்கேயே வைத்திருக்க சொல்லறாங்க என்று விவரம் கூறினாள்.
ஐயோ, வித்யாவும் ஊரில் இல்லையே... எப்போ வருவானோ மதுரா... நான் என்ன பண்ணுவேன் எனக் கலங்க.
ஒண்ணும் கவலைப்படாதீங்கமா... நான் இங்கேயே தான் இருக்கப்போறேன்... இப்போ பயப்படும்படி ஒன்றுமில்லைன்னு சொல்லிட்டாங்க... உங்கள நான் டாக்ஸில ஏத்திவிடறேன், நீங்க வீட்டிற்கு போய் ரெஸ்ட் எடுங்க.. சாப்பிட்டு தூங்குங்க மா... வேணும்னா மாலையில வந்து பாத்துக்கலாம்... நான் சாருக்கு பெங்களூரில் தகவல் கொடுக்கச் சொல்லி ஏற்பாடு பண்ணீட்டேன்மா... நீங்கதான் தைர்யமா இருக்கணும்... என்று ஆறுதல் படுத்தினாள்.

அங்கே மருத்துவமனை பெஞ்சில் காலை தொங்கபோட்டபடி அமரவும் சிரமமாகவே இருந்தது பார்வதிக்கு
. சரி என அரைமனதாக ஒப்புக்கொண்டு குழந்தையை வெளியே இருந்தபடி ஒரு முறை பார்த்துவிட்டு டாக்சியில் கிளம்பினாள். அவள் வீடுசேரும் முன் மதுரா வீட்டிற்கு அழைத்து காமுவிடம் விவரம் சொன்னாள்.
அம்மாவை கூடவே இருந்து பாத்துக்குங்க காமு ஆண்ட்டி... ரொம்ப பயந்திருக்காங்க... அவங்க மாத்திரை எல்லாம் உங்களுக்கு தெரியும்தானே... பாத்து குடுத்திடுங்க... சாப்பிட வையுங்க... இங்க குழந்தைக்கு பரவாயில்லை... நான் இருக்கேன் பக்கத்தில... நீங்க அம்மாவை சமாளிச்சுப்பீங்க இல்லையா?” என்று கேட்டுக்கொண்டாள்.
நீ கவலைப்படாதேமா நான் பாத்துக்கறேன்... நீ குழந்தையப் பாரு, அது முக்கியம் என்று அவர் தைர்யம் கூறினார்.



2 comments:

  1. My heart goes out to this family..Pavi will get a chance to experience mother's love

    ReplyDelete