Monday 19 November 2018

NENJAMATHIL UNNAI VAITHEN - 11


மாமா அத்தை, எங்கம்மாவும் உங்களப் பார்க்கணும்னு பேசணும்னு ஆசைப்படறாங்க... அவங்களுக்கு அவ்வளவா முடியாது... முட்டி வலியால அவதிப் படறாங்க... நீங்க நாளை மதியம் சாப்பாட்டுக்கு எங்க வீட்டுக்கு வர முடிஞ்சா எல்லாம் பேசி முடிவு செய்துக்கலாம் என்ன சொல்றீங்க என்று கேட்டான்.
சரி மாப்பிள்ளை, அப்படியே செய்துடுவோம். அவங்கள அலைய வைக்காதீங்க நாங்களே வரோம் என்றார்.
ஆனா தம்பி சாப்பாடெல்லாம் வேண்டாம்... அவங்களுக்கு எதுக்கு சிரமம் என்றார் கற்பகம்.
“அதேல்லாம் ஒண்ணுமில்லைங்கத்தே... வேலைக்கெல்லாம் ஆள் இருக்கு... அவங்க பாத்துப்பாங்க... நீங்க கண்டிப்பா வரணும் என்றான்.
சரி என்றனர்.

என்னம்மா வசு டேய் பார்த்தி கண்டிப்பா வரணும் என்று கேட்டுக்கொண்டான்.
அதான் சொல்லீட்டியேடா நிச்சயமா வரோம்
சரி அப்போ நான் கிளம்பவா, கொஞ்ச நேரம் மதுவ வெளில கூட்டிட்டு போகலாமா... சீக்கிரமே கொண்டு விட்டுடறேன் என்றான் லேசாக கூச்சத்துடன்.
ஓஹோ என்றனர் பார்த்தியும் வசுவும் . மதுவுக்கு சிவந்துபோனது.
போய்ட்டுவா கண்ணு என்றார் கற்பகம். மேலும் சிவந்துபோய் அவனோடு எழுந்து சென்றாள்.
அங்க மது வீட்டிலேயா இங்கேயா எங்க கொண்டுவிட?” என்று கேட்டுக்கொண்டான்.
இங்கே வாங்க. நாள வரை இங்கதான் இருப்போம் என்றனர். சரி என்று கூட்டிச் சென்றான்.

என்ன விது, எல்லாருக்கும் முன்னாடி, இப்போ வெளியே போற பிளானே இல்லையே, அப்பறம் ஏன்?” என்றாள் மது சிணுங்கியபடி.
எல்லோரும் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்க, அத செலிப்ரேட் பண்ணவேண்டாமா டா என்றான் ஏக்கமாக. அவள் குனிந்துகொண்டாள்.
வண்டியில் ஏறி பீச் ரோடுக்கு சென்றனர். அங்கு கடலோரம் மாலை மயங்கும் அழகைக் கண்டு ரசித்தபடி காரிலேயே அமர்ந்து பேசிக்கொண்டனர். அந்தி மயங்கி பொழுது சாய்ந்தது...

இருட்டிவிட
போலாமா விது?” என்றாள் மது மெதுவாக.
என்ன அவசரம்?” என்றான் அவளை நெருங்கி அமர்ந்து. அவளுக்கு மேலும் கூச்சமாகியது. கண்ணில் ஒரு வெட்கம் பயம் கூடவே ஒரு எதிர்பார்ப்பு படபடப்பு என்று அவனை நோக்கினாள்.

மது, நீ நிஜமாவே எனக்கு கிடைச்சுட்டேனு இன்னமும் என்னால நம்ப முடியலைடா என்றான் அவளை அணைத்தபடி. அவளும் அவன் மார்பில் முகம் புதைத்து அந்த கணத்தை கண்மூடி ரசித்தாள்.
மதூ...” என்றான் தாபமாக. பின் அவள் முகம் நிமிர்த்தி அவள் முகமெங்கும் முத்தமழை பொழிந்தான். அவள் சிவக்க சிவக்க வாங்கிக்கொண்டாள். இதழால் இதழ் மூட இருவரும் அந்நிலையில் கிறங்கி போயிருந்தனர்.

மது மெல்ல
ப்ளீஸ் விது என்றாள். அவன் தாபம் தீராமல் நிமிர்ந்தான். பின்னோடு மீண்டும் அவளை கட்டி அணைத்தான். “போதும் விது, ப்ளீஸ் விடுங்களேன்” என வெட்கி நாணினாள்.

கிளம்பலாம் விது என்று கெஞ்சினாள். “இன்னும் கொஞ்ச நாள்தானே அப்பறம் தடை இல்லையே என்றாள்
ஆனாலும் பவி இருப்பா... இப்போவே சொல்றேன் மது. பவி பேரச் சொல்லி என்னை பட்டினி போடக் கூடாது... நானே பாவம் ஆமாம் என்றான் ஏக்கமாக.
அவள் நாணி சரி இப்போ கிளம்புங்க என்றாள் பார்வையை தழைத்தபடி.
அவளை வீட்டில்விட்டு தனது இல்லம் சென்றான். பார்வதியிடம் எல்லோரும் நாளை மதியம் சாப்பாட்டிற்கு வருவர் என்று விவரமாக எல்லாமும் கூறினான்.
ரொம்ப சந்தோஷம் வித்யா... நான் இப்போவே காமுகிட்ட சொல்லி எல்லாம் ஏற்பாடு செய்துடறேன் என்றார் உற்சாகமாக.

அடுத்த நாள் வித்யாதரனின் வீடு களை கட்டியது. அன்றைய தினமே நிச்சய நாள் போல தடபுடல் பண்ணினார் பார்வதி. வேலை ஆட்களை விட்டு வீட்டை சுத்தப்படுத்தி அழகுபடுத்தி கோலமும் மாவிலை தோரணமுமாக அலங்கரித்தாள். காமுவின் உதவியோடு விருந்தின் மணம் மூக்கைத் துளைத்தது.
தன் முட்டிவலியையும் மறந்து சின்னப்பெண் போல அங்கும் இங்கும் ஓடியபடி இருந்த தாயைக் கண்ட வித்யாவிற்கு கண்கள் பனித்தன. ‘அம்மாவுக்குதான் எத்தனை சந்தோஷம்!’ என்று எண்ணிக்கொண்டான்.

அம்மா, போதும் மா…. நீ ஒரு இடமா பேசாம ஒக்காரு... மிச்சவங்க எல்லாம் பாத்துப்பாங்கம்மா... அப்பறம் அவங்க எல்லாம் வந்த நேரத்துக்கு நீ களைச்சுப் போய்டுவேஎன்று நல்ல வார்த்தை சொல்லி அமர வைத்தான்.
பவி பிரில் வைத்த கவுன் அணிந்து டால் போல துள்ளியது. வேறு எது புரிந்ததோ இல்லையோ அவளின் மதுரா மம்மியாக வரப்போகிறாள் என்பதே அவளின் உற்சாகத்திற்குப் போதுமானதாய் இருந்தது.

பின்னோடு எல்லோரும் வர, மகிழ்ச்சியாக வரவேற்றார் பார்வதி. அனைவரும் அமர்ந்து பேசியபடி கல்யாணத் தேதியையும் முடிவு செய்தனர். வீராசாமியும் கற்பகமும் தாங்கள் கொண்டுவந்த தாம்பூலத் தட்டை நீட்ட, வசுவும் பார்த்தியும் அதை வாங்கிக்கொண்டனர். எல்லோருமாக மதுவையும் வித்யாவையும் கிண்டலடித்தனர். 

மது வந்தவுடன் ஓடி வந்து அவள் மடியில் ஏறியவள்தான் பவி. பின் கீழே இறங்கவே இல்லை... அவள் மடியில் இருந்தபடியே பேசினாள், விளையாடினாள். மதுவும் அவளது மழலை கேள்விகளுக்கு பதில் கொடுத்தபடி மெல்லிய குரலில் அவளோடு பேசியபடி இருந்தாள். இதைக்கண்ட வித்யாவிற்கு பெருமையாகவும் பொறாமையாகவும் இருந்தது.
ஹும் என்னால அப்படி நெருங்கி அமர்ந்து பேசி கொஞ்சி எதுவும் முடியலையே என்று பெருமூச்சு வந்தது.
அவனின் தாபமான பார்வையை கண்ட மதுவிற்கு முகம் சிவந்து போனது. கண்ணால் அவனை கண்டித்தாள்.
போடி...” என்றான் உதட்டசைவில்.... யாரும் அறியா நேரத்தில் உதட்டை குவித்து காற்றில் முத்தமிட்டான்.... அவள் மேலும் சிவந்தாள்.

மம்மி நான் ஒன்ன அம்மான்னு கூப்பிடலாமா என்று கேட்டுக்கொண்டது பவி, வித்யாவை பயத்துடன் பார்த்தபடி.. எங்கே அவன் திட்டுவானோ என்று.
நிச்சயமா கூப்பிடலாம்டா குட்டி என்றாள் மது நிறைவாக. அதுவே பவிக்கு போதுமானதாக இருந்தது. அடிக்கொருதரம் மம்மி என்றும் அம்மா என்றும் மதுவை அழைத்து மகிழ்ந்தாள். அதை கேட்க கேட்க மதுவிற்கு இனித்தது. பவியை இருக்க அணைத்து முத்தமிட்டாள். அதுவும் அவளை அணைத்துக்கொண்டு முத்தமிட்டது. பின் பெரும் மகிழ்ச்சியோடு கலகலவென சிரித்தது. இதுபோல் தன் மகள் சிரித்து எத்தனை காலமாகியது என்று நினைத்தான் வித்யா.

மம்மி மம்மம்என்றது பவி.
குட்டிக்கு பசிக்குதா நாம சாப்பிடலாமா என்று அவளை இடுப்பில் தூக்கிக்கொண்டு டைனிங் டேபிலருகில் சென்று அவளை அதன் மீது அமர்த்தி அவளுக்கு என்னவேண்டும் எனக்கேட்டு தட்டில் இட்டு பிசைந்து தானே ஊட்டியும் விட்டாள் மது. இதை மொத்த குடும்பமும் அன்போடு கவனித்து மகிழ்ந்தது. துளி மிச்சம் வைக்காமல் சமத்தாக படுத்தாமல் பவி சாப்பிட்டதை காமுவும் பார்வதியும் கண்டு அதிசயித்து வித்யாவை பார்க்க அவனும் அப்படியே அதை பார்த்து சிரித்தபடி இருந்தான். ‘சரியான வாலு என்று எண்ணிக்கொண்டான்.
நிமிடங்கள் முன் தன் காதலியாக தன்னருகில் கிளர்ந்து முத்தம் வாங்கி சிவந்த தன் மது மறுநிமிடம் தன் பவியின் தாயாகி அவளை மடி சாய்த்து சோர் ஊட்டி சீராட்டியதை பெருமையோடு பார்த்துக்கொண்டான்.
இந்த பெண்கள் தான் எவ்வளவு சீக்கிரமாக உறவு முறையில் நுழைந்து தனதாக்கி கொள்கின்றனர்!’ என்று திகைத்து போனான் வித்யா.

சாப்பிடச் சென்று அங்கேயும் அவர்களை அருகமர்த்தி வாரினர்
. பார்வதிக்கு மனம் நிறைந்தது. ‘தன் மகனுக்கும் வாழ்வு மலருமா, தனக்குப்பின் தாயில்லாக்குழந்தை பவியின் கதி என்ன, வித்யாவையும் அவளையும் யார் கவனித்துக்கொள்வார்கள் என்ற ஏக்கம்... தனக்கும் மருமகள் என்று ஒருத்தி வந்து அந்த வீட்டில் நடமாடுவாளா, பொறுப்பை ஏற்றுக்கொள்வாளா என்ற ஆசை நிராசை ஆகிவிடுமோ என்ற பயம் அவரை நித்தமும் கொன்று கொண்டிருந்தது... போதாததற்கு நடந்தவற்றிற்கு தான் தான் முழுமையான காரணம் என்றும் ஒரு குற்ற உணர்ச்சி இருந்தது. அதுவே அவருக்கு பாதி வியாதியாக இருந்து படுத்தியது எனலாம். இப்போது மனதில் ஒரு நிம்மதி சந்தோஷம் அது உடலையும் ஆரோக்யமாக உணற வைத்தது.

நிச்சயம் என்று தனியே வைத்துக்கொள்ளும் அவசியம் இரு குடும்பத்துக்கும் தோன்றவில்லை. இப்போது மாற்றிக்கொண்ட தாம்பூலமே போதும் என்று மளமளவென திருமண ஏற்பாடுகளை கவனித்தனர்.
மது வசுவோடும் கற்பகத்தோடும் சென்று கல்யாணப் புடவையும் சில நகைகளும் வாங்கினாள். பார்வதி அவளை தன்னோடு அழைத்துச் சென்று தன் பரிசாக புடவையும் நகையும் வாங்கினார்.

அதன் விலை பார்த்து
அம்மா இது ரொம்ப அதிகம் என்று பயந்தாள் மது.
நீ என்னை இப்போ அம்மான்னு கூப்பிட்டியே கண்ணு, அதுக்கு ஈடு இது ஒண்ணுமே இல்லை... அதைவிட என் பவிகுட்டிக்கு அம்மான்னு கூப்பிட நீ வந்தியே... அதுக்கு நான் உனக்கு என்ன கைம்மாறு செய்வேனோ தெரியாதுமா... அதனால ஒண்ணுமே பேசாதே ட என்று அவளை அடக்கிவிட்டார்.
கற்பகம் அவர் பங்குக்கு என மேலும் வாங்க இந்த அன்பின் பிடியில் அவள் கட்டுண்டு போனாள்.

தன்
தனி பரிசாக வித்யாவிற்கு ஏதேனும் வாங்க எண்ணினாள் மது.அவன் எப்போதும் ஆபீசிற்கு முழு கை ஷர்ட் அணிவான் என்பதை அறிந்தவள் ஆதலால் ஸ்பெஷலாக தங்கத்தில் கப்ளிங்சும் டை பின்னுமாக ஜோடியாக வாங்கினாள். அதை அங்கேயே தந்து எம் மற்றும் வீ என்ற இரு ஆங்கில எழுத்தும் பின்னிப் பிணைந்திருப்பதுபோல அதன் மீது டிசைன் செய்து தரச்சொன்னாள். அதை முக்கிய தருணத்தில் தர என ஒளித்து வைத்துக்கொண்டாள்.
இதை எல்லாம் கூடவே இருந்து பார்த்து அறிந்த வசு அவளை கிண்டல் செய்து தீர்த்துவிட்டாள்.

வசுவை மது அடக்க முயல
என்ன, நான் உனக்கு நாத்தனாராக்கும் பாத்து நடந்துக்க இல்லைனா பாரு என்று அவள் மிரட்ட,
நீ எனக்கு நாத்தனார் னா நானும் உனக்கு நாத்தனார்தான் டீ வசு என்று இவளும் மிரட்டினாள்.
அது அப்பா, இப்போ கல்யாணம் உனக்கு அதுனால பாத்துக்க, இல்ல அண்ணன்ட போட்டு குடுத்துடுவேன் என்று மேலும் வாரினாள். இருவரும் சிரித்துக்கொண்டனர்.
பவிக்கு ஏகக் குஷி. புது பட்டுப்பாவாடைகளும் பார்பி டால் கவுனும் நிறைய டாய்சும் கூட கிடைத்தன.

இதோ விடிந்தால் திருமணம். மிக நெருங்கிய சொந்தங்களை மட்டுமே அழைத்திருந்தனர். வித்யாவின் தாய் மாமனும் தந்தையின் சகோதரியான அத்தையும் வந்திருந்தனர். அவனுக்காக அவர்களும் சந்தோஷம் மட்டுமே படக்கூடியவர்கள் ஆதலால் மிகவும் மகிழ்ச்சியாக முன்பாகவே வந்து கை கொடுத்தனர்.
மதுவின் பக்கத்திலிருந்து அவளது சித்தி சித்தப்பா வந்திருந்தனர். சித்திக்கு ஏக சந்தோஷம். பார்த்து பார்த்து அவளை சீராட்டினாள். மாமா பெரியப்பா குடும்பங்கள் மண்டபத்தில் வந்து கலந்து கொண்டனர். ஏதோ அந்த மட்டிலும் விட்டு குடுக்காமல் வந்தனரே என்று இருந்தது அவளுக்கு.

இதனிடையில் வித்யா ஒரு வேலை செய்தான். ரேணுகா கை ஒப்பம் இட்டு தந்திருந்த பத்திரத்தில் அவள் போன உடனேயே விவாகரத்திற்கு வேண்டிய முறையில் தயாரித்து கோர்டில் ஒப்படைத்திருந்தான் தான். ஆனால் அதை மேற்க்கொண்டு என்னவாயிற்று என்று கண்டுகொள்ளவில்லை. இப்போது அதன் அவசியம் தோன்ற, அவனது வக்கீலைக் கண்டு அதன் நிலை அறிந்தான். இவனது வக்கீலும் குடும்ப நண்பருமான நடராஜன் அதை அப்போதே பைல் செய்து மனமொத்த விவாகரத்து என்ற முறையில் ஒப்புதல் வாங்கி இருந்தார். இப்போது இருவரும் ஒராண்டுக்கு மேல் பிரிந்திருந்தனர் என்பதாலும் விவாகரத்து ஒத்துக்கொள்ளப்பட்டு தீர்ப்பு பத்திரம் கைக்கு வந்தது. அதில் பவிக்கும் ரேணுவிற்கும் இனி எந்த வித சம்பந்தமும் இல்லை என்பதையும் வக்கீலிடம் கூறி எழுத வைத்திருந்தான் வித்யா. அப்படியே தீர்ப்பும் இப்போது வந்திருந்தது.

காலை மதுவை எழுப்பி மங்கள நீராட்டி அலங்கரித்து அவளை மணமகளாக்கினர் வசுவும் கற்பகமும். மதுவிற்கு கண்கள் பனித்தன.
ஏன் கண்ணு, அம்மா ஞாபகம் வந்திடுச்சா?” என்று கேட்டார் கற்பகம்.
அது கொஞ்சம் இருக்குதான் ஆனால் அம்மா நீங்க எனக்கு தாய்க்கு தாயா இருந்து அந்தக் குறையே தெரியவிடாம எல்லாமும் செய்யறீங்களே அத நினைக்கும்போது நான் என்ன பாக்கியம் செய்திருக்கேனொன்னு...” என்று மேலும் கலங்கினாள்.
அட அசடு, இதை நான் என் கல்யாணத்தின்போது சொன்னதும் நீ என்னை எப்படி அதட்டின... விடுடீ... நீ வேற நான் வேறையா என்று சமாதானப்படுத்தினாள் வசு.
கடைசீல பாத்தியாடீ மது, எனக்குனு ஒரு கொழுந்தனார் இருந்து உன்னக் கட்டி வெச்சுடணும்னு நான் நினைச்சேன்... கொழுந்தன் இல்லைனாலும் என் அண்ணனுக்கே உன்னைக் கட்டி வைக்க கடவுள் உதவி  செய்துட்டாரூ என்று அவளை கட்டிக்கொண்டாள் வசு. இருவரும் சிரித்துக்கொண்டனர். கற்பகம் இருவரையும் அமர்த்தி திருஷ்டி கழித்தார்.

மணவறைக்கு மதுவை அழைத்துச் செல்ல அங்கே முன்னேயே வந்து வீற்றிருந்தான் வித்யா. பட்டு வேட்டி உடுத்தி நெற்றியில் சிறு சந்தனக் கீற்றுடன் சுருள் கிராப்புடன் கம்பீரமாக அமர்ந்திருந்த அவனை ஓரக்கண்ணால் கண்டபடி தலை குனிந்து நடந்து வந்தாள் மது. அன்னப்பறவையாக அவள் மெல்ல அசைந்து நடந்துவர அவளைக்கண்டு கிளர்ந்து போனான் வித்யா. அரக்கு கல்யாணப்பட்டுடுத்தி நெற்றி சுட்டியும் ராக்கோடியுமாக தன் பின்னலில் முழுவதுமாக மல்லிகை சுற்றப்பட்டு மை இட்ட கண்ணும் மருதோன்றிய விரல்களுமாக நடந்து வந்து அவனருகே அமர்ந்தாள். அவளையே விழுங்குவதுபோல பார்த்திருந்தான். பார்த்தியின் கனைப்பொ வசுவின் விளிப்போ அவன் காதுகளை எட்டவில்லை.

டாடி மம்மி என்று அழைத்தபடி தொம்மென அவன் மடியில் வந்தமர்ந்த பவி தான் கடைசியில் அவன் கவனத்தை கலைத்தாள். அவன் வெட்கத்துடன் மீண்டான்.
ஹாய் பவிகுட்டி, சூப்பரா இருக்கியே செல்லம் என்றான் அவளை அணைத்தபடி.
அப்பா, பாத்தியா பட்டுப்பாவாட கட்டிவிட்டா பாத்தி, என் கை பாத்தியா சேப்பு சேப்பா இருக்கு என்று மருதாணி காண்பித்து. அதைக்கண்டு வித்யாவும் மகிழ்ந்து போனான்.
“ரொம்ப அழகா இருக்கு குட்டிஎன்றான் பவியிடம், பார்வை என்னவோ மதுவை விழுங்கியபடி இருந்தது. அவன் பார்வை அறிந்து முகம் பார்க்கமுடியாமல் நாணி சிவந்திருந்தாள் மது.

பின்னோடு, பவியை மடியில் அமர்த்தியபடி, மந்திரங்கள் சொல்லி முடித்து எழுந்து மதுவின் கழுத்தில் தாலி கட்டி முடித்தான் வித்யா
.
அவளருகில் அமர்ந்து அதை எடுத்து தன் கையில் பிடித்தபடி இது என்ன மம்மி?” என்றது பவி.
அது தாலி னு சொல்வாங்க... டாடி மம்மி கழுத்தில் இத கட்டினாத்தான் அவங்க உன்கூட வந்து தங்க முடியும் என்று அவளைத் தூக்கிக் கொண்டு வந்து கதை போல் சொன்னாள் வசு.
பவி இப்போது அகன்றிருக்க மதுவை வெட்கமே இல்லாமல் சைட் அடித்துக்கொண்டிருந்தான் வித்யா.
அக்னி வலம் வந்து பெரியோரின் ஆசி பெற்று திருமண சடங்குகள் பூர்த்தி செய்தனர் இருவரும்.

விருந்து முடிந்து எல்லோருமாக வித்யாவின் இல்லம் சென்றனர். அங்கு கிரகப்ரவேசம் செய்து விளக்கேற்றி பால் பழம் கொடுத்து என எல்லாமும் எடுத்து பக்குவமாக செய்தாள் வசு. ‘அம்மா அம்மா என்று பார்வதியை அழைத்தபடி அனைத்தயும் கேட்டுக்கொண்டு செய்தாள்.
கற்பகமும் பார்வதியும் இப்போது மிகவும் நெருங்கி இருந்தனர். அதில் இருவருக்குமே மிகுந்த சந்தோஷம்.

அப்போது பார்த்தி கூறினான்
. “மாமா உங்க ரெண்டு பெண்களையும் இங்கே கட்டிகுடுத்துட்டீங்க... பிள்ளைக்கு பிள்ளையா நாங்க ரெண்டு மாப்பிள்ளைகளும் உங்கள பாத்துக்குவோம்... நீங்க இனிமேலும் தனியா அங்க மதுரையில இருக்க வேண்டாம் மாமா... இங்கேயே வந்துருங்க என்று அழைத்தான்.
ஆமா மாமா, பார்த்தி ரொம்ப சரியாச் சொல்றான்... இங்க வந்துருங்க... எங்களோட இருக்க கூச்சமா இருந்தா அதான் மதுவோட வீடு இருக்கே அதுல தங்கிக்குங்க... என்ன மது நான் சொல்றதுஎன்றான் வித்யா.

இதை இவர் இருவரும் பேசக்கேட்டு வீராசாமி கற்பகம் மட்டுமல்லாமல் வசுவும் மதுவுமே நெகிழ்ந்து போயிருந்தனர்
.
ஆமா மா, இங்கேயே வந்துடுங்க... அவங்க சொல்றாப்போல நம்ம வீடு இருக்குதே சும்மாதானே கிடக்கு, அங்கேயே நீங்க தங்கிக்கலாம் மா என்றாள் ஆசையாக மது.
பார்க்கலாம் கண்ணு நானும் உங்கம்மாவும் யோசிக்கறோம்... சீக்கிரமா நல்ல முடிவா சொல்றோம் என்று கூறினார் வீராசாமி.
கற்பகம் அண்ணி, நீங்க இங்கேயே வந்துட்டா நாமளும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா நல்ல சிநேகிதமா இருந்துக்கலாம்... எனக்கும்தான் யாரு இருக்கா என்றார் பார்வதி.
சீக்கிரமா சொல்றோம் அண்ணி, உங்க விருப்படி எல்லாம் நடக்கட்டும்னு நினைப்போம் என்றார் கற்பகமும்.

அன்று மாலை வரவேற்பு தடபுடலாக நடந்து மூடிந்தது. பவி தன் புதிய கவுனில் பார்பி டால் போல அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருந்தாள். பெரியவர்கள் அவள் மீது ஒரு கண் வைத்தபடி ஒரு பக்கமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். 
வித்யா தன் ஆழ்ந்த நீல நிற சூட்டில் மிளிர மதுவும் தேன் நிற பெனாரஸ் பட்டில் மின்னலைப் போல ஒளிர்ந்தாள். ஒயிலாக அவளை அலங்கரித்திருந்தாள் வசு. அவர்கள் அருகில் நின்றபடி பார்த்தியும் வசுவுமாக அவர்கள் கேலி செய்து வஞ்சம் தீர்த்துக்கொண்டனர்.
என்னடா அநியாயம், ஒரே அடியா வாரறீங்க?” என்று குறைபட்டுக்கொண்டான் வித்யா.
பின்ன, பழிக்கு பழிடா... நீங்க எங்கள என்ன பாடு படுத்தினீங்க என்றான் சிரித்தபடி பார்த்தி.
சரி போனா போகுது என்ஜாய் என்று கீழே வந்து விருந்தினரை கவனித்தனர் இருவரும்.

அப்போதுதான் வித்யாவிற்கு மதுவை தனிமையில் காண முடிந்தது
.
மயக்கறடீ என்றான் அவள் காதோரம். அவள் நாணி சிவந்து தலை குனிந்தாள்... அவனை ஓரக் கண்ணால் கண்டவள் கண்களில் ஒரு மயக்கம் தெரிந்தது.
என்ன அப்படி விழுங்கற மாதிரி பார்த்து வைக்கறே?” என்றான் உல்லாசமாக.
என் புருஷன் நான் பாக்கறேன் என்றாள் காதலோடு.
வேண்டாம் அப்படி பார்க்காதே அப்பறம் என்னை குறை சொல்லாதே... நான் எப்போவும் நல்ல பிள்ளையா இருப்பேன்னு சொல்ல முடியாது என்றான் கண் சிமிட்டியபடி. அவள் மேலும் சிவந்து போதுமே என்றபடி குனிந்துகொண்டாள்.

வரவேற்பு நல்லபடி நடந்து முடிய விருந்து உண்டு வீட்டை அடைந்தனர். பவி ஆடி ஓடி விளையாடி களைத்து பார்வதி மடியில் உறங்கி போயிருந்தாள். காமு அவளை தூக்கிக்கொண்டு வர அவளை தன்னோடு படுக்க வைத்துக் கொண்டார் பார்வதி. பல நாட்கள் அது அவருக்கு பழக்கம் தான்.
அன்றிரவுக்கென மதுவை மிதமாக அலங்கரித்தாள் வசு.

வசு எனக்கு படபடன்னு இருக்குடீ என்றாள் மது.
தோ பாருடா. என்னமோ இன்னிக்குதான் அண்ணன மொத முறையா சந்திக்கப்போறா மாதிரி பேசி வைக்கறா என்றாள் கேலியாக வசு. பின் அவளருகில் சென்று மெல்ல பயப்படாதேடீ எல்லாம் எங்கண்ணன் பாத்து நடந்துக்குவார்... நீயும் ஒண்ணும் குழந்தை இல்லை... பேசாம போ... என்ஜாய் யுர் லைப் மது... யு போத் டிசர்வ் இட் என்று வாழ்த்தி உள்ளே கொண்டுவிட்டாள்.
அவள் மெல்ல அறையின் கதவை திறந்து உள்ளே நுழைய அங்கே வித்யா இவள் வரவை ஆவலாக எதிர்பார்த்தபடி காத்திருந்தான். இவளை கண்டு எழுந்து வந்து அணைத்துக் கதவை அடைத்து கூட்டிச் சென்றான்.

கட்டிலில் அமர்த்தி அவள் கை பிடித்து
மது... என் வறண்ட வாழ்க்கையில் நீ தென்றலாக வந்ததற்கு ரொம்ப தாங்க்ஸ்டா, ஐ லவ் யு ஸோ மச் என்றான் காதலோடு நன்றியும் கலந்த குரலில்.
அவசரமாக அவன் வாய் பொத்தி அப்படி எல்லாம் பேசக்கூடாதுஎன்பதுபோல் இடம்வலமாக தலை அசைத்தாள்.
வாய் பொத்திய அவள் மென்மையான கையில் முத்தமிட்டான் வித்யா. அவள் தலை தாழ்த்திக்கொண்டாள் நாணியபடி.
மதூ மை லவ்..” என்று தாபத்தோடு அவளை இறுக்கி அணைத்துக் கொண்டு உச்சியில் முத்தமிட்டான். அவளை படுக்கையில் கிடத்தி அவள் முகத்தில் தன் விரலால் வருடினான். அந்த குருகுருப்பு மதுவிற்கு இன்ப வேதனையை கொடுத்தது. அவள் கண்மூடி உதடு துடிக்க கிளர்ந்து கிடந்தாள்.
அவன் கைகள் எல்லைமீற தன்னை முழுவதுமாக அவனிடம் மனமார்ந்து ஒப்புகொடுத்தாள் அந்த கற்புக்கரசி
.
அவனது அன்பின் தன்மை அலைபோல அவளை தன்னுள்ளே அடக்கி ஆண்டது.

காலை எழுந்தவள் தன் நிலை உணர்ந்து நாணி அவனைப் பார்த்தாள். அவன் அசந்து தூங்கிக்கொண்டு இருந்தான். அவள் மெல்ல அவன் தூக்கம் கலையாமல் எழுந்து போய் குளித்து கீழே சென்றாள். பவி இன்னமும் எழுந்திருக்கவில்லை. பூஜை அறைக்குச் சென்று வணங்கினாள். அங்கு பார்வதி பூஜை செய்துகொண்டிருக்க, மது சமையல் அறைக்குள் நுழைந்து காமு ஆண்ட்டிக்கு உதவி செய்தாள்.

பின்னோடு வித்யாவிற்கு காபி எடுத்துக்கொண்டு போனாள். அவன் இன்னமும் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டாள். தயக்கமாக மெல்ல தொட்டு எழுப்பினாள்.
என்னங்க என்றாள். பதிலில்லை.
அத்தான் என்றாள். ஊஹும் பின் மெல்ல விது என்றாள். உடனே அவன் கண்விழித்து அவள் கை பிடித்து இழுத்து தன்மேல் சாய்த்துக் கொண்டான்.
என்ன இது விடுங்க... விடிஞ்சுடுச்சு... நான் குளிச்சாச்சுங்க ப்ளீஸ் என்று கெஞ்சினாள்.
ஒன்ன யாரு இவ்வளோ சீக்கிரம் குளிக்கச் சொன்னது? மொத இரவுக்கு மறுநாள் காலையில இப்படி விளையாடாத புருஷனும் பெண்டாட்டியும் யாராச்சும் இருப்பாங்களா?” என்றபடி அவளைச் சுற்றி அணைத்து தன்னோடு இறுக்கி முகம் தேடி குனிந்தான்.

அவள் மறுப்புகளும் சிணுங்கல்களும் அவன் காதில் ஒட்டும் விழவில்லை
. அவன் நினைத்ததை அடைந்தபின் மெல்ல விடுவித்து அவளைப் பார்த்து கண்ணடித்தபடி காபியை குடித்தான்.
போடா அசுரா என்றாள் உதடு மட்டும் அசைய. அவன் பெரிதாக சிரித்தான்.
அவள் அவனைச் செல்லமாக திட்டியபடியே மீண்டும் குளிக்கச் சென்றாள்.
நானும் வரட்டுமா, சேர்ந்து குளிக்கலாமா?” என்று அவளை வம்புக்கு இழுத்தான்.
சீ போ என்று கதவை அடைத்துக் கொண்டாள். அவன் பலமாக சிரிப்பதைக்கண்டு அவளுக்கு கோபமும் நாணமும் சேர்ந்து வந்தது.



1 comment: