Saturday 24 November 2018

NENJAMATHIL UNNAI VAITHEN - 16


இவற்றை எல்லாம் ஒரு மென்மையான புன்சிரிப்போடு பார்த்திருந்தான் வித்யா.
கிளம்பி வீடு வந்து சேர்ந்தனர். வாசு விடை பெற்றான்.
இந்த நேரத்துக்குமேல அங்க போய் என்ன சாப்பிடுவே..... பேசாம இங்கேயே கொஞ்ச நேரம் இரு..... இரவு இங்கேயே சாப்பிடுட்டு போலாம் என்றாள் மது கண்டித்து.
ஐயோ வேண்டாம் மேடம்..... காலைலேர்ந்தே நீங்க எங்க எல்லார் வயிற்றையும் அன்னபூரணியா ரொப்பிகிட்டே தான் இருக்கீங்க, இன்னமும் உங்களுக்கு சிரமம் கொடுக்க நான் விரும்பலை..... வயிறும் புல்லா இருக்கு நான் கிளம்பறேன் என்றான்.
போதும் போதும்.... நீ என்ன சாப்பிட்டேனு எனக்குத் தெரியும்.... பேசாம உட்காரு.... இது உன் பாசோட பாசின் ஆர்டர் என்றபடி சிரித்துக் கொண்டே உள்ளே சென்றுவிட்டாள்.

அவனுக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை
.
என்னப்பா, பெரிய பாஸ் ஆர்டர் போட்டுட்டாளா..... பேசாம ஒக்காரு.... நானே அவள எதிர்த்து ஒண்ணும் பேச முடியாது.... நீ என்ன பண்ண முடியும் என்று பெரிதாக சிரித்தான் வித்யா.

பின்னோடு எல்லோருமாக பேசி சிரித்தபடி சாப்பிட்டு முடித்தனர். அவன் அனைவரிடமும் விடைபெற்று வீட்டை சென்று அடைந்தான். அங்கே போனதும் ஒரு வெறுமை அவனை சூழ்ந்து கொண்டது. குடும்பம் பெற்றோர் உடன் பிறப்பு என்று அந்த குடும்பத்தின் சூழலை ரசித்த மனம் அடங்க மறுத்தது.
மிகவும் வருத்தமாக இருக்க தங்கை கோமதியை கூப்பிட்டு பேசினான்.

என்ன அண்ணா இந்த நேரத்தில... ஒனக்கு ஒடம்புக்கு ஒண்ணுமில்லியே?” என்றாள் அவள் பதறிபோய்.
இல்லைடா, என்னமோ பேசணும்னு தோணிச்சு அதான் கூப்பிட்டேன்.... எப்பிடீம்மா இருக்கே.... வெங்கட் எப்படி இருக்கார்?” என்று விசாரித்தான்.
வெங்கட் மிகவும் நல்லவன்... தன் தங்கையை சந்தோஷமாக வைத்திருக்கிறான் என்று அவன் அறிவான். ஆயினும் அதை கோமதி வாய் வழியே கேட்பதில் ஒரு நிம்மதி திருப்தி.
அவளும் அப்படியே சொன்னாள். “நாங்க நல்லா இருக்கோம் அண்ணா..... எனக்கு உன்னப்பத்தின கவலைதான்.... புது கம்பனில வேலை எப்படி இருக்குண்ணா.... நல்லா நடத்தறாங்களா?”

ஏண்ணா, அதான் நல்ல கம்பனில நல்ல வேலையில் அமர்ந்தாச்சே இப்போவானும் கல்யாணம் பண்ணிக்கொள்ளேன்..... நான் பொண்ணு பார்க்க ஆரம்பிக்கவா.... இவர் கூட ஏதோ சொந்தக்கார பொண்ணு பத்தி சொன்னார் என்றாள்.
அடிகுட்டி, நீ எனக்கு பொண்ணு பார்த்து மணம் முடிக்கும் அளவு பெரிய மனுஷி ஆயிட்டியா!!?” என்று சிரித்தான்.
என்னவாம் இப்போ சிரிப்பு.... எப்போ கேட்டாலும் இது என்ன சிரிச்சு மழுப்பீடற.... யாரையானும் காதலிக்கிறியா அண்ணா என்றாள் சந்தேகமாகி.
அடராமா, அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லைடா என்று கூறும்போதே தன்னை அறியாமல் பவியின் முகம் மனக் கண்ணில் வந்துபோனது.
ஐயோ, இது என்ன இப்படி... சீ சீ என்று தலையை சிலுப்பிக்கொண்டு பேசினான்.
அப்படி எல்லாம ஏதானும் இருந்தா முதல்ல உன்கிட்டே சொல்லாமையா.... சரிமா.... சும்மாதான் கூப்பிட்டேன்.... குட்நைட் என்று கூறி வைத்தான்.

அடுத்த நாள் ஞாயிறு
. விடுமுறை. புரண்டு படுத்தான் வாசு. எழுந்து என்ன செய்யணும் இப்போ என்று வெறுப்பு மண்டியது. இது என்ன ஒரே நாளில் நான் இப்படி ஆகிப்போனேன். இது நல்லதில்லை. என் வாழ்வு எனக்குள்ளது. அதில் நிறைவாக இருக்கேன் போதும் என்று மனதை அடக்கி எழுந்தான்.

காலைக் கடன்களை முடித்து வர, சமையல் மற்றும் வீட்டு வேலை எல்லாமும் பார்த்து செய்யும் சுந்தரம் வெளியே வந்தார்
. அவர் ஐந்து வருடங்களாக அவர்களிடம் வேலை பார்த்து வந்தார்.... அவருக்கென யாரும் இல்லை.

அவரை அவன் கண்டதே ஒரு கதை.... மதுரையில் வேலை விஷயமாகப் போய்விட்டு திரும்பும்போது சுந்தரம் பூப்போன்ற இட்லிகளை செய்து அவற்றை பொட்டலமாகக் கட்டி எடுத்துக்கொண்டு ரயிலடியில் ஓடி ஓடி விற்றுக் கொண்டிருந்தார். அவரூக்கு ஐம்பதைத் தாண்டி இருக்கும் வயது.... இந்த வயதில் திடமாக இருந்தாலும் இப்படி ரயிலின் வேகத்துக்கு ஓடி ஓடி சம்பாதிக்க வேண்டியுள்ளதே என்று அவன் மனம் வேதனை பட்டது.... அருகே அழைத்து இட்லி வாங்கினான்.... இன்னும் ரயில் கிளம்ப நேரம் இருப்பதைக் கண்டு அவரைப் பற்றி விசாரித்தான்.

நான் ஒரு அநாதை தம்பி.... எனக்குன்னு யாருமில்லை.... என் வயிற்றுப் பாட்டுக்கு எனக்கு செய்யத் தெரிந்த ஒரே வேலை சமையல் தான் என்றார் அவர்.
அதற்குள் ரயில் மணி அடிக்க, சட்டென்று அவரை பார்த்து என்னோட வரீங்களா ஐயா... எங்க வீட்டுல இருந்து என்னையும் என் தங்கையையும் கவனிச்சுக்கறீங்களா... எங்களுக்கும் யாருமில்லை என்று கேட்டான். அவன் குரலும் முகமும் கண்ட அவர் ஏதோ தோன்ற சரி என்று வண்டியில் ஏறிவிட்டார்.
வாசு டிடியிடம் சொல்லி பணம் கட்டி டிக்கட் போட்டான்.. அவனுடன் வந்து இறங்கியவர்தான். அதுவும் இவனைவிடவும் கோமதிமேல் அவருக்கு கொள்ளை இஷ்டம்.

எனக்குன்னு ஒரு பொண்ணு இருந்தா இப்படித்தானே இருந்திருப்பா என்று மாய்ந்து போனார்.
நீங்க கல்யாணமே பண்ணிக்கலையா சுந்தரம் அண்ணா?” என்று கேட்டான்.
பண்ணிகிட்டேன் தம்பி.... அதுக்கு சமையல்காரனோட குப்பைகொட்ட பிடிக்காமல் ஓடிபோச்சுதுஎன்றார். பாவம் எனத்தோன்றும். கோமதிக்கும் சுந்தரம் அண்ணா என்றால் பெரும் பாசம்.
அவளை பெண்பார்க்க வந்ததிலிருந்து கல்யாணம் செய்து வழி அனுப்பும்வரை பெற்ற தாயை விடவும் மேன்மையாக பார்த்துச் செய்தார். அவள் விடைபெறும்போது வாசுவை விடவும் கலங்கியவர் அவர்தான்.

என்ன சுந்தரம் அண்ணா என்ன டிபன்?” என்றான். அவருக்காகவானும் அவன் சிரித்தபடி இருப்பான்.
இல்லையெனில் என்ன தம்பி என்ன உம்முன்னு இருக்கே? இதுக்குத்தான் காலாகாலத்துல கல்யாணம் கட்டிகிடணும்.... சொன்னாக் கேட்டாதானே என்று ஆரம்பித்துவிடுவார்.
ஐயோ அண்ணா நான் நல்லாத்தான் இருக்கேன் என்பான் சிரித்தபடி.
என்னவோ இந்தக் கிழவன் பேச்சை யார் கேட்கறா என்பார்.
நீங்களா கிழவன்... இப்போவும் இளமையோட இருக்கீங்க... பேசாம நீங்க முதல்லா ஒரு நல்ல பெண்ணா பாத்து கல்யாணம் செய்துக்குங்க அண்ணா என்று வாருவான்.
எனக்கு தேவைதான் இந்த வயசுல..... இன்னிக்கி உனக்கு வம்பு பண்ண நாந்தான் கிடைச்சேனா, போ போய் குளிச்சு வேலையப் பாரு என்பார் அன்பாக அதட்டியபடி. அவன் சிரிப்பான்.

இன்னிக்கி இடியாப்பம் தேங்காய்பால், குருமா என்றார்.
அடிசக்கை என்று ஒரு வெட்டு வெட்டினான்.
நேத்து எங்க, ரொம்ப லேட் ஆச்சே...?” என்றார் தயங்கியபடி. தன் நிலைமையில் கேட்கலாமோ தப்போ என்று தடுமாறி.
இவன் தன்மையாக சிரித்துக்கொண்டே, “நீங்க என்னை என்னவும் கேட்கலாம் அண்ணா.... உங்களுக்கு அந்த உரிமை நான் குடுத்திருக்கேன்.... நேத்து ஒரே ஆச்சர்யம் தெரியுமா அண்ணா.... நான் ஆபிசிற்கு போனேன்.... அங்கே இருந்து ஒரு பாக்ஸ்(Fax) எடுத்துக்கொண்டு பாசின் வீட்டிற்கு போனேன்.... அங்க போனா அவங்க குடும்பமா எங்கியோ பிக்னிக் கிளம்பிக்கொண்டு இருந்தாங்க.... அவங்க வீட்டுப் பிள்ளைங்க எல்லாம் லீவுக்கு வந்திருக்குக.... என்னையும் கூட வான்னுட்டாங்க.... நான் மறுத்தேன்... கேட்கலை... கூடப் போக வேண்டி வந்தது..... எனக்குனு யாரும் இல்லைன்னு சொன்னேனா பாசின் மனைவிக்கு என்மேல ஒரே பரிதாபமோ பாசமோ தெரியல, இருந்து நைட்டும் சாப்பிட்டுதான் போகணும்னு பிடிவாதமா சொல்லி போட்டுதான் அனுப்பிச்சாங்க என்றான் ஒரே மூச்சில்.

அட பரவாயில்லியே தம்பி.... இந்த காலத்திலும் தன்னிடம் வேலை செய்யறவங்கள இப்படி அன்பா நடத்தறவங்க இருக்காங்களே! உங்களையும் சேர்த்து தான் சொல்றேன்..... அவங்க நல்லா இருக்கணும் என்று உள்ளே சென்றார்.

அன்று வீட்டை சுத்தம் செய்து வாஷிங் மஷினில் துணி துவைத்து வைத்திருந்ததை பெட்டிபோட குடுத்து என்று சுந்தரத்திற்கு உதவினான்.
பழைய அலமாரிகளை திறந்து சுத்தம் செய்து வேண்டுவதை வைத்து மற்றதை ஒதுக்கினான். எல்லாம் செய்தும் மனம் உள்ளுக்குள்ளே வெறுமையாக இருந்தது.

சரியாபோச்சு.... இது ஆகாது என்று டிவியை போட்டுக்கொண்டு அமர்ந்தான். வேலை முடிந்து சுந்தரமும் வந்து அமர்ந்தார்.
அண்ணா கோமதியோட பேசினேன்.... நல்லா இருக்காங்களாம்.... உங்களக் கேட்டதாகச் சொல்ல சொன்னா என்றன்.
ஓ அப்பிடியா ரொம்ப சந்தோஷம்.... குழந்தை நல்லா இருந்தா சரி என்றார் வாஞ்சையோடு.
டிவியில் திருப்பிக்கொண்டே போக ஒரு சானலில் பழைய பாடல்கள் ஓடிக்கொண்டிருக்க சட்டென நின்றான். நேற்றைய நினைவுகள் அலை அலையாக மேலே எழும்பின. ‘அட மறக்க நினைத்தா இது மேலும் நினைவுக்கு வந்து வாட்டுதேஎன்று எண்ணிக்கொண்டான்.
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும்...” என்ற பாடல் அவனை என்னவோ செய்தது.

சின்ன வயது முதலே கேட்டு வந்த பாடல். அவனுக்கு இந்தப் பழைய பாடல்களின் மேல் ஆர்வம் வரக் காரணமே அவனது பெற்றோர் தான். சிறுவயதில் எப்போதும் வானொலி ஒலித்துக் கொண்டே இருக்கும். அதிலும் பழைய பாடல்களை அப்போதிருந்த டேப் ரெக்கொர்டரில் கேசட் வாங்கிப் போட்டு ரசித்தனர் அவன் பெற்றோர்.

இந்தப் பாட்டைக் கேட்கும்போதெல்லாம் தனக்கு வரப்போகும் மனைவி இப்படித்தான் இருக்க வேண்டும்
. தான் ரசிப்பதை அவளும் அவள் ரசிப்பதை நானும் ரசிக்கும்படி வாழ வேண்டும் என்று மனதில் ஆழமாக ஒரு எண்ணம் படிந்திருந்தது. இப்போதும் அதே எண்ணம் மேலெழுந்தது. ஹம் என்று பெருமூச்சு விட்டான்.
மேலும் அதேபோன்ற இனிமையான பாடல்களை கேட்டு மெய் மறந்து அமர்ந்திருந்தான்.

பின் இது ஆவறதில்லை என்று எழுந்து
நான் காலாற ஒரு வாக் போய்ட்டு வரேன் அண்ணா என்று கூறி நடக்கச் சென்றான். தென்றல் வீசிவர இனிமையான மாலை பொழுது அவன் மனதிற்கு இதமாக இருந்தது.
அண்ணா சொல்வது நிஜம் தான்... எத்தனை நாள்தான் இப்படி ஒண்டியாக வாழ்வது... வேலை வசதி அனைத்தும் உள்ளது... தங்கைக்கும் திருமணம் முடித்தாகி விட்டது... பின் ஏன் காத்திருப்பானேன் நல்லப் பெண்ணாகப் பார்த்து சீக்கிரமே மணம் புரியவேண்டும் என்று எண்ணிக்கொண்டான். அந்த எண்ணம் மறையும் முன்பே மீண்டும் கண் முன்னே பாடலை முணுமுணுத்தபடி பவியின் முகம் தெரிந்து மறைந்தது. அடக் கடவுளே என்று நொந்து போனான்.
வீட்டை அடைந்து சாப்பிட்டுவிட்டு படுத்துவிட்டான்.

அடுத்த நாள் வேலைக்குச் சென்றதும் கண்கள் அவனையும் அறியாமல் பவியை தேடியது.
கஷ்டம், பாசின் மகள்.... அவளை நான் தேடுவதை யாரேனும் பார்த்தால் அவ்வளவுதான்.... இருக்கும் வேலையும் கைவிட்டு போகும்.... அடங்குடா என்று அதட்டிவிட்டு தன் வேலைகளில் கவனத்தைத் திருப்பினான்.
குட் மார்னிங் வாசு என்று உற்சாகமான குரல் கேட்டதும் அவனது கட்டுப்பாடு எல்லாம் உடைந்து பொடிப் பொடியானது.
குட் மார்னிங் பவித்ரா என்றான் புன்னகையுடன்.
நேத்து எப்படி போச்சு, டிட் யு என்ஜாய் யூர் சண்டே?” என்று கேட்டபடி அவன் எதிரே அமர்ந்தாள்.

அன்றும் கூட அழகான காஞ்சி காட்டன் சாரிதான் உடுத்தி இருந்தாள்
. சன்ன ஜரிகை போட்ட அழ்ந்த நீலப் புடவை. ஜரிகையை ஒட்டி ஆரெஞ் நிற கோபுரங்கள் மேலேறின. அதற்கேற்ப ஆரெஞ் ப்ளவுஸ் அணிந்து மிக எளிமையான அலங்காரத்திலும் ஒயிலாக இருந்தாள். தந்தையின் கம்பீரம் இவளிடமும் ஒளிர்ந்தது. அனைத்தையும் மீறி அவனைக் கண்டு பேசிக்கொண்டிருக்கும் அந்த கண்களில் ஒரு ஒளி. அதன் அர்த்தம் அவனுக்கு புரியவில்லை எனினும் இந்த முக மலர்ச்சி அந்த கண்களின் மின்னல் புதிது... இந்த சில மாதங்களில் அவளை எத்தனை எத்தனை முறையோ தனிமையில் கண்டு ஆபிஸ் விஷயங்கள் விவாதித்துள்ளான்.... அப்போது காணாத தன்மை இப்போது...

டேய் டேய் அடங்குடா... அவ என்ன டிரஸ் பண்ணி இருக்கா... அவ முகத்துல என்ன இருக்கு.... கண்ணுல மின்னல் வெட்டுதா.... எல்லாம் உனக்கு தேவையாடா...... வேலையப் பாரு என்று மனம் அடக்கியது.
நல்லா இருந்துது கொஞ்சம் க்ளீனிங், கொஞ்சம் ரெஸ்ட், வாகிங் போனேன் டிவி பார்த்தேன் அவ்ளோதான்.... என் வாழ்க்கை ரொம்ப சிம்பிள் பவித்ரா என்றான் சிரித்தபடி.
ஐ விஷ் என்றாள்.
என்ன?” என்றான்
ஒன்றுமில்லை, சரி வேலையப் பாப்போம்... பிறகு சந்திக்கலாம் என்று எழுந்து சென்றுவிட்டாள்.
அதுசரி, வேலையப் பார்ப்போம்னு நீ ஈசியா சொல்லீட்டு போய்டே.... உன்னை பார்த்தப்பறமா, இங்க வேலை ஓடினாத்தானே என்று மனம் மீண்டும் அங்கலாயத்தது.
வித்யா வெளிநாட்டிலிருந்து மேலும் சில புதிய ஆர்டர்கள் ஏற்று வந்திருந்தான். அதற்கான பிளானிங், பர்சேஸ் என்று விறுவிறுப்பாக ஓடியது அடுத்து வந்த நாட்கள். ஒவ்வொரு நாளும் பவித்ராவைக் கண்டும் காணாமல் ஒரே அலுவலகத்தில் வேலை செய்வதே இப்போதைக்கு போதுமானதாக இருந்தது வாசுவிற்கு. அதற்குமேல் ஆசைப்பட பயந்தான் எனலாம்.

அங்கே பவி அதே நிலையில் இருந்தாள். அவனைப் பற்றிய சின்னச் சின்ன விஷயங்களையும் பார்த்துப் பார்த்து சேகரித்தாள்..... ஆபிசில் அவன் பேசும்போது அவள் கவனம் எல்லாம் அவன் மேலேயே இருக்கும்.... பழைய பாடல்கள் கேட்கும்போதும் அவன் நினைவே....
ஐயோ அவன் என் அப்பாவின் அலுவலகத்தில் வேலை செய்பவன்..... நான் பிறந்த குடும்பம் என்ன அவன் நிலை என்ன என்று பெற்றோர் ஒத்துக்கொள்வார்களோ மாட்டார்களோ என்று பேதலித்தது அந்தப் பேதையின் மனம் .
மதுவின் கண்களில் இவை தப்பவில்லை.... ‘ஹ்ம்ம் பார்க்கலாம் என்று அவளை கண்காணித்து வந்தாள்.

அடுத்து வந்த மாதத்தில்  கோமதி சென்னை வந்திருந்தாள். வெங்கட்டிற்கு இங்கே வேலை இருந்ததால் அவளையும் அழைத்துக்கொண்டு வந்து வாசுவின் வீட்டிலேயே தங்கினர். அவன் வேலையை கவனிக்க, இவள் அண்ணனோடு நேரம் சிலவழித்தாள். வாசுவிற்கு இப்படி அவள் திடீரென வந்ததில் பெருமகிழ்ச்சி. அவளுடன் நேரம் கழிக்க வேண்டி பர்சனல் ரீசன் என்று மட்டும் குறிப்பிட்டு லீவ் கேட்டு அனுப்பினான். வித்யாவும் அதை ஒப்புக்கொண்டு பதில் தந்தான். இதை ஒன்றும் அறியாத பவி தவித்துப் போனாள். அவனை ஆபிசில் காணாது யாரையும் நேரடியாக கேட்கவும் முடியாமல் தவித்தாள்.

லேசாக
டி ஜி எம் சார் வரலியா... ஏதானும் மெசேஜ் உண்டா?” என்று விசாரித்ததில்
எம் டி கு லீவ் ரிக்வெஸ்ட் வந்திருக்காம் மேடம் என்றாள் வித்யாவின் பி ஏ.
ஓ என்னவாம்?” என்றாள் அலட்சியமாக கேட்பது போல் உள்ளூர ஆவலோடு.
என்னவோ பர்சனல் ரீசன்னு...” என்றாள் அவள்.
ஓ ஓகே தாங்க்ஸ் என்று நகர்ந்துவிட்டாள்.
அப்படி என்ன பர்சனல் விஷயம் என்கிட்டே ஒண்ணுமே சொல்லலையே என்றது மனது மனத்தாங்கலோடு.
உன்கிட்ட ஏன் சொல்லணும்... அவனுக்கும் உனக்கும் என்ன...?’ என்றது இன்னொரு மனம்.

ஒண்ணுமில்லைதான்... ஆனாலும் ஒரே ஆபிசில் வேலை செய்யறோம்னு சொல்லி இருக்கலாம்தானே என்று பொருமினாள்.
வித்யாவிடம் எரிந்து விழுந்தாள். என்னவாயிற்று இவுளுக்கு என்று அவன் யோசித்தான்.
வாசு நாலு நாள் லீவ்.... இந்த டெண்டர பார்த்து பில் பண்ணி அனுப்பீடு பவி என்றான்.
ஏன் உங்க டிஜிஎம் கு என்ன கேடாம்.... அவர் வேலைய நான் ஏன் பார்க்கணும்?” என்று சீறினாள்.
பவி, இது ஆபிஸ்.... என்ன இது, அவருக்கு என்னமோ பர்சனல் வேலை லீவ் கேட்டிருக்கார்.... எப்போதும் கேட்காதவர்.... நானும் சாங்க்ஷன் பண்ணிட்டேன்..... உன்னால முடிஞ்சா செய் இல்லேனா நான் பாத்துக்கறேன் என்றான் வித்யா கறாராக.
சரி சரி குடுங்க.... பண்ணிடறேன் என்று அடங்கினாள்.

அவளின் போக்கை விசித்திரமாகப் பார்த்தபடி பைலை அவளிடம் தந்தான்
.
வாசு வேலைக்கு வராததில் இவளுக்கென்ன அவ்வளவு கோபம்?’ என்று யோசித்தான். காரணம் புரியவில்லை.
அடுத்த இரு நாட்களும் பவியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.... வீட்டிலும் அதே நிலை.... என்னமோ நடக்குது.... என்ன காரணம் என்று யோசித்து வித்யா மதுவிடம் கூறினான்.

ஓ அப்படியா என்று உள் வாங்கிக் கொண்டாள்.
விது, எனக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டது... விட்டு பிடிக்கலாம்னு கண்காணிச்சுட்டுதான் வரேன்.... வரவர அவள் போக்கு சரி இல்லை.... அவ மனசுல யாரோ இருக்காங்கன்னு தோணுது..... இப்போ நீங்க சொல்றதெல்லாம் பார்த்தா...” என்று இழுத்தாள்.
வாட்!!! என்ன சொல்றே நீ,  நம்ம பவி அந்த வாசுவை...?” என்று அவனும் இழுத்தான்.
இது யூகம் தான் விது..... பொறுப்போம் என்றாள் மது
சரி என்று அப்போதிலிருந்து பவியை இருவரும் வீட்டிலும் ஆபிசிலும் நோட்டம் விட்டனர்.

இதன் நடுவே அசோக் வீட்டிற்கு வந்திருக்க அவனிடம் வாய் ஓயாது பேசும் பவி அடக்கி வாசித்தாள். அவனுக்கு ஆச்சர்யம்.
என்ன பவிக்கா?” என்றான் அவள் அறைக்கு போய் அமர்ந்துகொண்டு.
என்ன டா?” என்றாள்.
நீயா இவ்வளவு சைலன்டாவா என்றான்.
அதுக்கு என்ன?” என்றாள்.
இஸ் எனிதிங் பாதரிங் யு?” என்று கேட்டான் அன்பாக.
இல்லைடா அதேல்லாம் ஒன்றுமில்லைஎன்றாள்.
சொல்லணும்னா சொல்லு... ஷேர் பண்ணிக்கோ என்றான்.

சரி, வாசு சார் எப்படி இருக்காரு?” என்று சாதாரணமாக விசாரித்தான்.
ஹ்ம்ம் நல்லா இருக்கார்.... ரெண்டு மூணு நாளா லீவ்..... என்னமோ பர்சனலாம் என்றாள் ஆற்றாமையோடு.
அவளை அசோக் விசித்திரமாக பார்த்தான்.
ஓ அப்பிடியா.... நீ கூப்பிட்டு கேட்க வேண்டியதுதானே..... அவர்தான் உனக்கு நல்ல பழக்கம் ஆச்சே?” என்றான் வேண்டும் என்றே.
ஏன், நான் எதுக்கு போய் கேட்கணும்.... அவருக்கும் எனக்கும் என்ன வெச்சிருக்கு?” என்றாள்.
அதற்குள் முகம் கன்றி சிவந்து கோபமும் இயலாமையும் சேர்ந்து சுணங்கியது.
சரி, எனக்கு அவர்கிட்ட பேசணும் போல இருக்கு.... நான் கூப்பிடப் போறேன் என்று அழைத்தான்.

அவன் கூப்பிடுவதைக் கண்டு அவள் முகம் பரபரத்தது
.
அதைக் கண்டும் காணாது அசோக் வாசுவிடம் பேசினான்.
ஹெலோ என்றான் வாசு புதிய நம்பரைக் கண்டு.
நாந்தான் அசோக், எப்பிடி இருக்கீங்க வாசு சார்?” என்றான் ஆவலாக.
ஹாய் அசோக், நீ எப்பிடி இருக்கே?  ஐ அம் பைன். என்ன லீவ் அ இப்போ?” என்று கேட்டான்.
இவனிடம் எல்லாம் அன்பு சொட்ட பேசத் தெரியுது என்று உள்ளுக்குள் பொருமி தீர்த்தாள் பவி.
ஆமாம் சார்
சார் எல்லாம் வேண்டாமே அசோக்.... ஜஸ்ட் கால் மி வாசு என்றான்.
என்ன நீங்களும் லீவ்ல இருக்கீங்க போல?” என்றான்.
ஆமாம் அசோக் வீட்டுக்கு முக்கியமானவங்க  வந்திருக்காங்க.... அதான் கொஞ்சம் பிசி என்றான்.
உங்களுக்கு தெரிஞ்சவங்களா சொந்தமா?” என்றான்.
ஆமா, ஷி இஸ் வெரி ப்ரஷியஸ் டு மி என்றான் வாசு.
ஓகே அப்போ நான் டிஸ்டர்ப் பண்ண விரும்பலை.... அப்பறம் பேசலாம் என்று வைத்துவிட்டான் அசோக்
ஓகே சி யு என்று அவனும் வைத்தான்.

என்னவாம்?” என்றாள் அசிரத்தைபோல் காட்டிக்கொண்டு.
வீட்டுக்கு யாரோ முக்கியமான கெஸ்ட் வந்திருகாங்களாம்.... அந்த லேடி ரொம்ப க்ளோசாம் அதான் லீவ் என்றான் அசோக்.
அது யாரு லேடி என்று ஆத்திரம் கொண்டாள்.
நமக்கென்ன, அவர் வீடு.... யாரும் வருவாங்க பவிக்கா என்றான்.
இவளது கோபம் கண்டு அவனுக்கும் மனதில் ஏதோ தோன்றியது. ‘சரி பெற்றோரின் காதில் போட்டு வைப்போம் என்று எண்ணிக்கொண்டான்.


2 comments:

  1. what a nice family...Enjoyed the day with them at farmhouse!! Thank you

    ReplyDelete
  2. History repeating...Love story in another love story!!

    ReplyDelete