Sunday 18 November 2018

NENJAMATHIL UNNAI VAITHEN - 10


“உன் வேலைத் திறனை மெச்சிக்கொண்டேன். ஆனால் வாய்விட்டுச் சொல்லப் பிடிக்கவில்லை. என்னவானால் என்ன இவளும் ஒரு பெண்தானே என்ற வெறுப்பு மண்டி இருந்தது. அப்போது நீ என் பவித்ராவை காப்பாற்றினாய். மனது நிறைய நன்றி தோன்றியது. யார் பெத்த பிள்ளைக்காகவோ நீ மருத்துவமனையில் ராத்தங்கி கண் முழித்து பார்த்துக்கொண்டது என் எண்ணத்தை மாற்றி அமைத்தது. கொஞ்சம் கொஞ்சமாக நான் உன் பால் மதிப்பும் மரியாதையும் கொண்டேன்.
பவிக்காகவென உன்னை ரொம்பவே சிரம படுத்துகிறேனோ என்று குற்ற உணர்ச்சி ஏற்பட்டது. ஆயினும் உன்னோடு பொழுது கழிப்பது அவளுக்கு மட்டுமல்ல எனக்கும் பிடித்துதான் இருந்தது

அப்போது மதுரா அவனை நிமிர்ந்து ஆச்சர்யமாக ஏறிட்டு பார்த்தாள்
.
ஆமா மது, இது உண்மை. பவி படுத்தினதா நான் உன்னை என் வீட்டில் ஒரு இரவு தங்கச் சொன்னேன் தெரியுமா, அன்று நீங்கள் இருவரும் தூங்கப்போனபின் நான் அங்கு வந்தேன். பவி உன்னை படுத்துகிறாளோ என்று செக் செய்ய மட்டுமே வந்தேன். அங்கே நீங்கள் இருவரும் உங்களுக்குண்டான தனி உலகத்தில் இருந்தீர்கள். அவள் உன்மேல் கால் போட்டபடி அணைத்துக்கொண்டு படுத்திருக்க, நீ அவள் காதருகில் கண்ணே கமலப்பூ என்று மெல்லிய குரலில் பாடி அவளை அணைத்தபடி தட்டி தூங்கப்பண்ணிக் கொண்டிருந்தாய். அதைக் கண்டவனுக்கு உடம்பெல்லாம் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்ச்சி முதன் முறையாக தோன்றியது. அந்த மாதிரி எனக்கு ரேணுவிடம் ஒரு நாளும் தோன்றியதில்லை. அந்த பரவசம் பவியின் இடத்தில என்னை வைத்துப் பார்க்க தூண்டியது. அன்று நான் உன்பால் ஈர்க்கப்பட்டேன்
இதைக்கேட்டு மதுரா தலைகுனிந்தபடி சிவந்து போயிருந்தாள்.

என்னை நானே கடிந்துகொண்டு சத்தம் போடாமல் அங்கிருந்து நகர்ந்துவிட்டேன். எனக்கே என்மேல் கோபம் பயம்.”
அதன்பின் இது கூடாது எப்போதும் இப்படி நடப்பது என்பது முடியாது என பவிக்கு நல்ல வார்த்தை சொல்லி புரியவைக்க முயன்றேன். நீயும் என்னையும் கண்டித்தாய். அன்றுதான் வித்யா என்று முதன் முறையாக பேரைச்சொல்லி அழைத்தாய்
மதுரா இதுகூட நினைவு வைத்திருக்கிறானே என்று ஆச்சர்யமாக பார்த்தாள்.

பின்னோடு நாமே அறியாமல் இரண்டுபேரும் ஒரே திருமணத்திற்குச் சென்றோம். அங்கே உன்னை மணப்பெண் போன்ற அலங்காரத்தில் பார்த்து நான் கிளர்ந்தேன். மெல்ல மெல்ல நெகிழ்ந்தேன். நாம் நெருங்கிப் பழக நிறைய வாய்ப்பு கிடைத்ததனால் உன் எண்ணம், பண்பு, அன்பு, பாசம், எல்லோருக்கும் எப்போதும் உதவி செய்யும் மனம் என்று கொஞ்சம் கொஞ்சமாக என் மனதில் நீ நிறைந்துகொண்டே வந்தாய்.
என்னோடு நானே போராடமுடியாமல் தோற்றுவிட்டேன் ... சரி ஆவது ஆகட்டும் இந்த பொழுதை நான் திளைக்கிறேன் என்று அந்த நான்கு நாட்களும் இனிமையாக கழித்தேன்... இரயிலில் நீ விதுஎன்று முதன் முதலில் அழைத்தாயே மது அன்று நான் என்னை முழுவதும் இழந்தேன்.

ஊருக்குள் வந்தபின்னும் மனம் உன்னையே நாடியது
... பவியை காரணமாக்கி உன்னை பார்க்க ஓடோடி வந்தேன்... நீ கண்டுகொண்டாய்... ஆனால் பின்னோடு என் மனபூதம் மீண்டும் விழித்து. பலதும் யோசித்து உன் வாழ்வு கெடக்கூடாது என்று முடிவுசெய்து வேண்டும் என்றே உன்னை கடிந்து கொண்டேன். உன்னை அனாவசியமாக திட்டி அழவைத்த அன்று என்னால் சாப்பிடவும் முடியவில்லை தூங்கவும் முடியவில்லை. ஆனால் இது எல்லோருக்கும் நல்லது உனக்கென ஒரு நல்வாழ்வு காத்திருக்கிறது... அதை நான் கெடுக்கக் கூடாது என்று மனதை கல்லாக்கிக் கொண்டேன்...
பவியிடமும் அப்படியே நடந்து கொண்டேன்.
அம்மா உஷாராகி பார்த்தியிடமும் பேசி திருமணத்தில் நடந்ததை தெரிந்துகொண்டார்களாம். என்னை உட்காரவைத்து என்னையே எனக்குப் புரிய வைத்தாள்..

தப்பு என்னிடம் தான் என்று என்னை வைது தீர்த்துவிட்டார். அதை அசைபோட்ட மனம் எந்த ஒரு தீர்மானத்திற்கும் வரமுடியாமல் உளைந்தது. அதனால் எனக்கு காய்ச்சல் வந்து படுத்தேன். நீ அழைத்ததாக அம்மா கூறினார். ‘என்னையும் பற்றிக் கவலைப்பட அக்கறை கொள்ள ஒரு ஜீவன் இருக்கிறது என்று இருமாந்தேன். மெல்லத் தெளிந்தேன்.

உடம்பும் மனதும் சரியானதும் இதோ உன் முன்னால் உட்கார்ந்து என் மனதை புரியவைத்துவிட்டேன்
.
மது, நான் உன்னை மனதார காதலிக்கிறேன். உன்னை மணம் புரிய ஆசைப்படுகிறேன் மது.
நீ என்ன முடிவு செய்தாலும் எனக்கு சம்மதம்தான். அட்லீஸ்ட் என் மனதை உனக்குச் சொல்லிவிட்டேன் என்ற திரூப்தியானும் எனக்கு தக்க வேண்டும் என்றே இவற்றை எல்லாம் கூறினேன்.

நான் உன் மனதில் இருக்கிறேனா
, எந்த அளவு, அது அன்பா காதலா, பவியின் தந்தை என்ற மரியாதை மட்டுமா எனக்குத் தெரியாது.
ஆம் இரண்டாம்தாரம் தான். ஆயினும் உன்னை என் உயிரினும் மேலாக வைத்துக்கொள்வேன். என் முழுமையான காதலுடனும் அன்புடனும் இதை நான் உனக்குச் சொல்கிறேன்.
பவிக்காக உன்னை மணக்கக் கேட்பதாக தயவு செய்து நினைத்துவிடாதே. பவி எனக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு நீயும் எனக்கு முக்கியம். உன்னை உனக்காகவே காதலித்து மணக்க கேட்கிறேன் மது.
ஐ லவ் யு சொ மச் டா என்று நிறுத்தினான்.

இதை எல்லாம் மெளனமாக கேட்ட மதுராவிற்கு வெட்கத்திலும் ஆச்சர்யத்திலும் சிவந்து போனது. முகம் தழைத்துக்கொண்டாள். இதெல்லாம் என்ன நிஜமா, இவன் உண்மையாகவே என்னைக் காதலிக்கிறான்... மணக்க கேட்கிறான்... எனக்கும் இப்படி ஒரு அதிருஷ்டமா நான் நினைத்தவனையே மணக்கப் போகிறேனா... எனக்கும் ஒரு குடும்பம்,  கணவன் குழந்தை எல்லாம் வாய்க்கப்போகிறதா, இனி நான் தனி இல்லையா...’ என்று எண்ணி மகிழ்ந்து கலங்கி சிவந்து போனாள்.

அவளது கலங்கிய விழிகள் உள்ளூர வித்யாவிற்கு கலக்கத்தை கொடுத்தது நிஜம்
.
என்னாச்சு ஏன் அழுகிறாய் மது... நான் சொன்னதில் ஏதும்...”  என்றான் பயந்தபடி.
அவள் அவசரமாக புன்னகைத்து இல்லை விது, நீங்க எதுவுமே தப்பா சொல்லலை. இது ஆனந்தக் கண்ணீர் மட்டுமே.
எனக்குப் போய் இப்படி ஒரு உசந்த வாழ்வான்னு நம்பமுடியாம தான் மௌனமா ஆயிட்டேன்.
விது, நானும் உங்கள மனமாரக் காதலிக்கிறேன்... ஆனா வெளியே சொல்ல பயம்... நீங்க பெண்களை வெறுப்பவர்னு தெரியும். அதேபோல இன்னொரு கல்யாணம்கிறது நீங்க நினைத்தும் பார்ப்பீங்களான்னு சந்தேகம்... எங்கே எட்டாக்கனிக்கு ஆசைப்படுகிறேனோ என்றுதான் பேசாமலிருந்துவிட்டேன்.

எஸ் விது, ஐ லவ் யு சொ மச் டூ என்றாள் மேலும் சிவந்து.
நீங்க சொன்னார்ப்போல நான் உங்கள பவி அப்பாவா மட்டும் பார்க்கலை. ஒரு அன்பான மதிப்பான நல்ல மனதுகாரராத்தான் பார்க்கறேன். ஓரளவு உங்க மனதில் நானிருக்கிறேனோ என்ற சந்தேகம் எனக்கும் வசு திருமணத்தின்போது ஏற்பட்டது நிஜம்.

உங்களோடு இருக்கும் நேரங்களில் நான் மிகவும் பாதுகாப்பாய் உணர்ந்தேன்
. மனம் சில்லென்று கிளர்ந்திருந்தது என்று மேலும் சிவந்து தலை குனிந்தாள்.

ஓ மது! நிஜமா நீயும் என்னை காதலிக்கிறியா மை டியர், என்னை மணக்க உனக்கு சம்மதமா, என் கடந்தகாலம் உன்னை பாதிக்கவில்லையா... நீ எனது ரெண்டாம்தாரமாய்...” என பேசிக்கொண்டேபோக, சட்டென்று மது அவன் அருகில் வந்து அவன் வாய் பொத்தினாள்.

அது ஒரு கெட்ட கனவு விது... அதில் விளைந்த ஒரே நன்மை நம்ம பவி... நமக்கு அதுமட்டும் நினைவில் இருந்தால் போதும்... பாக்கியை குப்பையாகக் கருதி தூக்கிப் போட்டுவிடுவோம் சரியா என்றாள் ஆதுரமாக.
அவள் கைகளை பிடித்து உதட்டில் ஒற்றி எடுத்தான். அவள் நாணி குனிந்தாள்.
தாங்க்யு டார்லிங் என்றான் காதலோடு. ஆசையாக உச்சியில் முத்தமிட்டான். வித்யாவின் மனதில் ஹப்பா என்று ஒரு நிம்மதி நிச்சலனம்.

மது இங்க உட்காரேன் என்றான் தன் பக்கத்தைக் காட்டி. அவள் அமர அவளது மடியில் தலைவைத்து படுத்துக்கொண்டான்.
பெரிய பாரம் குறஞ்சாப்ல இருக்கு என்றான் அவள் முகம் பார்த்து.
மதுவுக்கும் அது புரிந்தது... ஏனெனில் அந்த நிம்மதி அவள் மனதிலுமே அப்போது தோன்றி இருந்தது... மெல்ல அவன் முகத்தை வருடிகொடுத்தாள். தலையை கோதிவிட்டாள். பின் மெல்ல குனிந்து அவனது நெற்றியில் முத்தமிட்டாள்.
அதில் சற்றே தைர்யம் வந்தவனாக அவள் முகத்தை அப்படியே இழுத்து அவள் இதழ் தேடி இதழ் பதித்தான். பின் சுதாரித்து விலகினார். அவன் முகம் பார்க்காமல் அவள் அப்புறம் திரும்பி அமர்ந்தாள்.
என்ன மது?” என்று சீண்டினான்.  ஒன்றும் கூறாமல் சிவந்திருந்தாள்.
ஹே கண்ணம்மா பவிகிட்டையும் அம்மாகிட்டயும் சொன்னா எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு யோசிச்சு பார்க்கறேண்டா என்றான் மந்தகாச புன்னகையுடன்.
அவள் ஆம் என்பதுபோல சிரித்தாள்.
அப்போ போலாமா வீட்டுக்கு?” என்றான் சரி என்றாள்.

மது, உனக்கு இந்த முடிவு எடுக்கும் முன் அம்மாவிடம் பவியிடம் கூறும் முன் யாரிடமானும் அனுமதி கேட்கவேண்டுமா டா? பேசணும்னா சொல்லு நானே போய் பேசறேன் என்றான் குழைவாக.
விது, எனக்குக் அப்படி யாரும் கிடையாதுன்னு உங்களுக்குதான் தெரியுமே... அப்பா அம்மான்னு நான் மனதார அழைக்கிற வசுவோட பெற்றோர் கிட்ட பேசணும்தான்.  வீட்டுக்குப் போய் முதல்ல பார்த்தி அண்ணாகிட்டையும் வசுகிட்டையும் சொல்லீடலாம்... இல்லேன அவ என்ன கொன்னேபோடுவா. என்று சிரித்தாள்.

வெரி ட்ரூ, பார்த்தியும் அப்படியேதான் செய்வான்... சொல்லிடலாம், அப்பறம், வசு பெற்றோர் ஒத்துப்பாங்களா மது? என்றான்.
கண்டிப்பா, அவங்க இங்க இந்த வாரத்துல வரப்போறதா சொன்னாங்க... வசுவ இங்க குடித்தனம் வைக்க... அப்போ நேர்ல நாம ரெண்டுபேருமா சொல்லிக்கலாம் என்றாள். சரி என்று கிளம்பினர்.

வீட்டை அடைந்து வித்யா மதுவுடன் உள்ளே சென்றான். “அம்மா என்று குரல் கொடுத்தான். பார்வதி வெளியே வந்து இருவரையும் ஜோடியாகக் கண்டு பெரும் மகிழ்ச்சிகொண்டாள். ‘இரு பாப்போம், இவன நம்ப முடியாது என்று தன்னையே அடக்கிக் கொண்டாள்.

என்னமா மது, எப்படி இருக்கே?” என்று விசாரித்தார்.
நல்லா இருக்கேம்மா, நீங்க எப்படி இருக்கீங்க? என்றாள்
ஹும், ஏதோ இருக்கேம்மா உனக்குதான் எல்லாம் தெரியுமே...  முடியற வயசா எனக்கு... ஒடம்பு ஒத்துழைக்க மாட்டேங்குதுமா என்றார் புலம்பலாக.
பாவம் மா நீ, அதுனாலதான் நான் ஒரு தீர்மானம் பண்ணி இருக்கேன் மா என்றான் வித்யா நல்ல பிள்ளைபோல.
என்ன என்பதுபோல பார்க்க, வா என்று கண்ணால் மதுவை அழைத்து இருவரும் ஜோடியாக அவள் கால்களில் விழுந்து பணிந்தனர்.
பார்வதிக்கு புரிந்தது. மனம் நிறைந்து கண்ணில் நீர் மல்க ஆசீர்வதித்தார்.
ரொம்ப நல்ல முடிவு வித்யா... மது ரொம்ப ரொம்ப சந்தோஷம்... தீர்காயுச தீர்கசுமங்கலியா ரெண்டு பேரும் நூறு வருஷம் வாழணும் என்று வாழ்த்தினார். எழுப்பி இருவரையும் அணைத்துக்கொண்டார்.

இது நிஜம்தானே வித்யா?” என்றார் சந்தேகமாக.
ஆமா மா நிஜம்தான் மா என்றான் அவளை அணைத்தபடி.
பவி எங்கேம்மா?” என்றான்.
இங்கதான் எங்கியோ விளையாடியது என்று பவிகுட்டி யாரு வந்திருக்கா பாரு...” என்றழைத்தாள்.
என்ன பாத்தி?” என்றபடி வந்தது, “ஹையா ஆன்ட்டி என்று கூவியபடி அவளிடம் ஓடிவந்து காலை கட்டிக்கொண்டது.
அப்போ ஆண்ட்டி மட்டும்போதுமா, இந்த டாடி வேண்டாமா குட்டி?” என்றான் ஏக்கமாக.
டாடியும் வேணும் என்றது. மது அவளை தூக்கிக்கொள்ள அவனையும் இழுத்து அணைத்துக்கொண்டது.

பவி உனக்கு ஒரு சர்ப்ரைஸ் கிப்ட், என்ன சொல்லு பாக்கலாம் என்றான்.
கேம் அ பொம்மையா?” என்றது.
இல்லைடா குட்டி, நீ ஆசைபட்ட மாதிரி உனக்கு மம்மி என்றான்.
தோ, உன் மது மம்மி உனக்கே உனக்கு... எப்போதும் உன்னோடவே இருப்பா...
ஹையா!’ என்று கூவியது... அடுத்த கணம் சந்தேகமாக, நிஜமாவா டாடி, டூப்தானே” என்றது கண்ணை உருட்டிக்கொண்டே, ஆள்காட்டி விரலை அசைத்து அசைத்து.
“இல்லடா நிஜம், பிராமிசா” என்றான் சிரித்தபடியே.
“ஹையா, மம்மீ அப்படீனா இங்கேயே இருப்பாங்களா என்னோடவே?” என்றது.
ஆமாடா நம்மோடவே இருப்பா... அப்பாவுக்கும் கொஞ்சம் விட்டுத் தருவே தானே பவிகுட்டி?” என்றான் மதுவை பார்த்து கண் அடித்தபடி.
சும்மா இருங்க என்றாள் அவள்.
அப்பா மதுவ கல்யாணம் பண்ணிக்கப் போறேண்டா... உனக்கு சந்தோஷம்தானே?” என்றான்.
ஹைய்யா ஜாலி அப்பாக்கு கல்யாணம்என்று குதித்தது ஏதோ பெரிதாக புரிந்ததுபோல. “டாடி, நீ கூட ரொம்ப சமத்து டாடிஎன்றது.
தேவைதான் எனக்கு... யார்கிட்டே எல்லாம் பர்மிஷன் கேட்க வேண்டி இருக்கு பாரு... என் நேரம் என்றான் சிரித்தபடி.

பின்னோடு பார்த்தியையும் வசுவையும் கூப்பிட்டனர்.
டேய் என்னடா புது மாப்பிள்ளை என்ன பண்றே?... எங்க இருக்கீங்க என்றான்.
இதோ இன்னிக்கி இப்போ கொஞ்ச நேரத்துல சென்னைக்குத்தான் கிளம்பறோம்டா... வசு பெற்றோரும் நாளக்காலை அங்கே வராங்களாம் வீடு நான் தங்கின அதேதான் என்றாலும் அவங்க வந்து குடித்தனம் வைத்து எல்லாம் அரேஞ்ச் பண்ணீட்டு போவாங்கன்னு சொன்னாங்க சரின்னுட்டோம்...  இப்போதான் சட்டுன்னு முடிவாச்சு.” என்றான்.
என்னடா மச்சான் திடீர்னு போன்?” என்றான்.
எப்போ வரேன்னு கேட்கலாம்னுதான் கூப்பிட்டேன். சரி அதான் வரியே... நாளைக்கு சந்திக்கறேண்டா பார்த்தி என்று வைத்துவிட்டான்.
சரிடா நாளை மாலை சந்திக்கலாம் என்றான் அவனும்.

என்ன சரிதானே நாளைக்கே நேர்ல பேசிக்கலாம் இல்லையா மது?” என்றான்.
ஆமாம்ங்க அப்போ அம்மாவும் அப்பாவும் இன்னிக்கி கிளம்பி இருப்பாங்களா?” என்று அவள் யோசித்து அங்கிருந்தே அவர்களை அழைத்தாள்.
கண்ணு மதுரா எப்பிடிடா இருக்குறே? நாங்க தோ இப்போ கிளம்பறோம் கண்ணு... நாளக்காலையில அங்க இருப்போம்... திடீர்னுதான் முடிவு பண்ணாங்க வசுவும் மாப்பிள்ளையும் என்றார் கற்பகம்.
சரிமா வாங்க நேரா வீட்டுக்கு வந்துடுங்க... நான் மிச்சமெல்லாம் பாத்துக்கறேன் என்றாள் உற்சாகமாக.
சரிமா நாளைக்கு பார்க்கலாம் என்று வைத்தனர்.

என்ன ஒரே டர்ன் ஆப் இவென்ட்ஸ் இல்லையா!” என்று சிரித்துக்கொண்டனர்.
அம்மாவிடம் சொல்ல ரொம்ப நல்லதாப்போச்சு, அவங்க வரட்டும் நானே நேர்ல பேசறேன்... சீக்கிரம் முடிச்சுடணும்.... ஏதுக்கே லேட் என்றார் ஆர்வமாக.
பவி மதுவின் இடுப்பைவிட்டு இறங்கவே இல்லை. “மம்மி இந்நிலேந்தே இங்கேதானே இருப்பே?” என்றது ஆசையாக.
இல்லடாகண்ணு ... இப்போ இல்லை... டாடி என்னைக் கல்யாணம் பண்ணிக்கணும் இல்லையா... அது முடிஞ்சதும் இங்கேயே என்றாள் அவனை பார்த்தபடி.
அவன் ஹும் என்று ஏக்கப்பார்வை பார்த்தான் பெருமூச்சுவிட்டபடி. ‘போதுமேஎன்றாள் உதடு மட்டும் அசைய. 
அப்போ இன்னிக்கி போயிடுவியா மம்மி?” என்றது பாவமாக.
இன்னும் கொஞ்ச நேரம் இருந்து பாப்பாவோடு விளையாடிட்டு போவேன் சரியா... நீங்கதான் சமத்தாச்சே என்றாள். சரி என்று ஒப்புக்கொண்டது.

அடுத்தநாள் காலை கற்பகமும் வீராசாமியும் வந்தனர்.
கண்ணு மதுரா நல்லா இருக்கியா மா?” என்று பாசமாக வினவினர்.
நான் நல்லா இருக்கேன், நீங்க எப்பிடி இருக்கீங்க, வாங்க கைகால் கழுவிகிட்டு பலகாரம் சாப்பிடலாம் என்று அழைத்துப் போனாள்.
என்ன கண்ணு உன் முகத்துல ஒரே சந்தோஷம்?” என்று கண்டுபிடித்து கேட்டார் கற்பகம்.
மதுரா நாக்கை கடித்துக்கொண்டு ஒண்ணுமில்லியேமா... எப்போதும் போலத்தானே இருக்கேன் என்று சமாளித்தாள்.

பின்னோடு
என்னப்பா பிளான் இப்போ?” என்று கேட்டாள்.
அவங்க ரெண்டு பேரும் தோ வந்திடுவாங்க... நான் லாரியில சீர் செனத்தி சாமானெல்லாம் முந்தின நாளே ஏத்திட்டேன்... இப்போ வந்துரும்... அவங்க மாப்பிளை வீட்டுக்கு வந்து சேரும் நேரம் நாமளும் அங்க போனா சாமானும் வந்திடும்... அதை எல்லாம் அவங்களுக்கு உதவியா அங்கங்க வெச்சு வீட்ட அமைச்சு குடுத்துட்டா நாளை இரவு ரயிலுக்கு கிளம்ப வேண்டியதுதான் கண்ணு என்றார்.
அதேல்லாம் நாளைக்கே கிளம்ப வேண்டாம்... இன்னும் கொஞ்ச நாள் இங்க இருந்துட்டு போகலாம் என்றாள் மதுரா சலுகையாக.
அங்க வேலகிடக்குதுடா கண்ணு... இவங்க சட்டுனு முடிவு பண்ணிச் சொல்ல நாங்களும் அப்படியே போட்டது போட்டபடி கிளம்பி வந்துட்டோம் என்றார் கற்பகம்.

பின்னோடு கிளம்பி பார்த்தியின் வீட்டிற்குச் செல்ல சாமான் லாரியும் வசு பார்த்தியும் வந்தனர். ப்ளான் படி எல்லா சாமானையும் இறக்கி அங்கங்கே வைத்து வீட்டை ஒதுக்கி குடித்தனம் வைக்க ரெடி பண்ணிவிட்டு அமர்ந்தனர். குளித்து விளக்கு ஏற்றி பால் பாயசம் மட்டும் வைத்தாள் வசு. பின் எல்லோருமாக அரட்டை அடித்துக்கொண்டு வெளியே இருந்து வரவழைத்த சாப்பாட்டை உண்டு முடித்தனர்.
கொஞ்சம் இளைப்பாரியபின் அங்கே இங்கே விட்டு போயிருந்த வேலைகளை செய்து வீட்டை அழகுபடுத்தினர் வசுவும் மதுவும்.

என்னடி, புது கல்யாண பொண்ணு நானு, ஆனா, உன் முகத்தில அப்படி ஒரு தேஜஸ்?” என்றாள் வசு.
ஒண்ணுமில்லியே என்றாள் சிவந்தபடி.
ஏதோ இருக்கிறது... அன்று பார்வதி ஆண்ட்டி கூட கூப்பிட்டு இவளைப் பற்றியும் அண்ணன் வித்யா பற்றியும் விசாரித்தாரே என்று எண்ணிக்கொண்டாள். ‘சரி தானாக வெளியே வரும் என்று மௌனமாக இருந்தாள்.
பின்னோடு வித்யா அங்கு வந்தான்.
வாடா  வித்யா என்று ஆசையாக வரவேற்றான் பார்த்தி.
வாங்கண்ணா என்றாள் வசுவும்.
எல்லோருமாக பேசியபடி இருக்க மெல்ல வித்யா மதுவின் முகம் பார்த்து ஜாடை காட்டினான் பேசிவிடலாமா என்று. அவள் ஒப்புதலாக தலை அசைத்தாள்.
எங்களுக்கு மிகவும் வேண்டிய நீங்க எல்லாரும் இங்க இருக்கும்போது ஒரு நல்ல விஷயத்த உங்களிடம் ஷேர் பண்ணிக்க விரும்பறோம் என்றான் பீடிகையோடு வித்யா.
என்ன என்பதுபோல் எல்லோரும் ஆர்வமாக பார்க்க,
நானும் மதுவும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருக்கோம் என்றான்.
எல்லோருக்கும் அது ஒரு ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது.

அடிக்கள்ளி, என்னன்னு கேட்டேன்தானே வாயே திறக்கல... போ, நான் ஒன்னோட பேசமாட்டேன் என்றாள் வசு மதுராவை வந்து கட்டி அணைத்தபடி.
ரொம்ப சந்தோஷம் தம்பி என்றார் வீராசாமி நிறைவாக.
முக்கியமா உங்ககிட்டதான் அங்கிள் நான் பேசி சம்மதம் வாங்கணும்னு நினைச்சேன்... மதுவுக்கு எல்லாமே நீங்கதானே... ஆண்ட்டி உங்ககிட்டேயும் கேட்டுக்கறேன்... எனக்கு மதுவ கல்யாணம் செய்து கொடுப்பீங்களா?” என்றான் தாழ்மையாக.

காத்திருக்கிறோம் தம்பி... என்ன அப்படி கேட்டுட்டீங்க.... குடுத்து வெச்சிருக்கணுமே என்றார் கற்பகம்.
ஏம்மா மதுரா நீ தம்பிகிட்ட எல்லாமும் பேசிகிட்டேதானே... மனசுல ஒண்ணும் சங்கடம் வெச்சுக்காதேமா... ஏதானும் கேட்டு தெரிஞ்சுக்கணும்னு தோணிச்சுனா உடனே கேட்டுடு... அவுங்களுக்கு மணமாகி ஒரு குழந்தையும் இருக்கு தெரியும் உனக்கு... இதுல உனக்கொண்ணும் பிரச்சினை இல்லையே கண்ணு?” என்று கேட்டார் வீராசாமி.
அதேல்லாம் ஒண்ணுமே இல்லைப்பா என்றாள் தலை குனிந்தபடி.

அப்பா இவள நம்பவே முடியாது... ஒண்ணும் தெரியாதவ மாதிரி இருக்காளேன்னு நினைக்காதீங்க... அதேல்லாம் வெவரமா அண்ணன் கிட்ட பேசி தான் முடிவு எடுத்திருப்பா என்றாள் வசு சீண்டியபடி.
போடி என்றாள் மது வெட்கத்தோடு அவள் தோளில் சாய்ந்தபடி.
ஆமா எல்லாரும் எல்லோரையும் கேட்டுக்கறீங்க... பொண்ணுக்கு அண்ணன்காரன் நான் ஒருத்தன் இங்கே கல்லு மாதிரி இருக்கேன்... என்னை கேட்கணும்னு யாருக்காச்சும் தோணிச்சா என்றான் முறைப்பாக விளையாட்டுக்கு பார்த்தி.
அதானே என்றனர் எல்லோரும்.
வித்யா உடனே பணிவுடன் என்னங்க மச்சான் உங்க தங்கச்சிய எனக்கு கட்டித் தரீங்களா?” என்றான். எல்லோரும் குப்பென சிரித்தனர்.

சரி சரி வேற வழி? செய்து கொடுக்கிறேன்... பத்திரமா பாத்துக்க... அவ எங்களுக்கு ஒரு பொக்கிஷம் என்றான் கெத்தாக. அதற்கும் சிரித்தனர்.
ஏன் தம்பி உங்க வீட்டுல பேசீட்டீங்களா, உங்கம்மாவுக்கு மறுப்பு ஒண்ணும் இல்லையே, உங்க பாப்பாவுக்கு?” என்றார் கற்பகம்.
பேசிட்டேன் அத்தை, அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம்... பவித்ரா பத்தி கேட்கவே வேண்டாம்...  இந்த முடிவுக்கு வித்திட்டவளே அவதானே என்றான் புன்னகையோடு.
அப்போ எப்போ திருமணத்த வெச்சுக்கறதா இருக்கீங்க?” என்று கேட்டார் வீராசாமி.
உங்க இஷ்டம் மாமா என்றான் பணிவாக.
அவருக்கு மிகத் திருப்தி. “சரி, நானே கூடிய சீக்கிரமே வெச்சுக்கறாப்ல நல்ல நாள் பாத்துட்டு கூப்பிட்டு சொல்றேன் தம்பிஎன்றார்




3 comments:

  1. Romba nalla irukku. Very decent and interesting! Am reading for the first time. would like to follow!

    ReplyDelete
  2. romba nalla irukku! very decent story and interesting too! peppy vasanangal!

    ReplyDelete
  3. I love the family bonding and their conversation..God bless you!

    ReplyDelete