Wednesday 14 November 2018

NENJAMATHIL UNNAI VAITHEN - 6


வேறுவழி இல்லாமல் சென்றாள் மதுரா. அங்கு போய் பவியோடு ஓடி பிடித்து விளையாடி களைத்தனர். இருவரையும் பார்த்தபடி வித்யா ஒரு மூலையில் பெஞ்சில் அமர்ந்திருந்தான். அப்போது முதல் முறையாக மதுராவை ஆழ்ந்து கவனித்தான்.
வட்டமுகம், மத்திய உயரம்... ஒயிலான கச்சிதமான உடலமைப்பு... எந்த கவர்ச்சியும், ஒப்பனைகளும் இல்லை... மிக சாதாரணமான ஒரு சல்வார் அணிந்திருந்தாள்... இடைக்கு மேலே சுருளாக தலை முடி நாலு கால் போட்டு பாண்டில் இறுக்கி இருந்தாள். காதில் தொங்கட்டான்... சிம்பிளான நகைகள்... ஆபீஸிற்கும் இப்படித்தான் அடக்கமாக கண்ணியமாக வருகிறாள்.
என்னதிது நான் போய் இவளை இப்படி எல்லாம் பார்த்துக்கொண்டு என்று தன்னைத் தானே கடிந்தபடி எழுந்தான்.

போலாம் பவி என்றான். அதற்குள் இருவருமே களைத்திருந்தனர். சிறிது அமர்ந்த பின்னர் காரில் ஏறி மதுராவை அவள் வீட்டில் விட்டு தங்கள் வீடு வந்தனர்.
பாத்தி எவ்ளோ ஜாலி தெரியுமா என்று பாட்டியிடம் விவரித்தது குழந்தை. ‘பவி இவ்வளவு சந்தோஷப் படுகிறாள். இது எத்தனை நாளைக்கு நிலைக்கும், கடவுளே இதற்கு முடிவுதான் என்ன என்று எண்ணிக் கலங்கினான் வித்யா.
அடுத்த வாரம் வேலை மும்மரத்தில் பறந்தோடியது.

அந்த வெள்ளியன்று எப்படியும் வசுவின் திருமணத்திற்குப் போக அவனிடம் பர்மிஷனும் டிக்கட்டும் எடுத்துவிட வேண்டும் என்று இருந்தது மதுராவிற்கு
.
மெல்ல அன்று மாலை வேலை முடிந்து இருவரும் கிளம்ப ஆயத்தமாகும்போது சார்...” என்றாள் தயங்கி.
என்ன மதுரா?” என்றான்
இல்லை, வசுவின் திருமணம் பத்தாம் தேதி
ஆமா சொன்னீங்களே...”
அதான் ஒரு வாரம் லீவ் கிடைக்குமான்னு...?”
ஒரு வாரமா! அவ்வளவு நாள் வேணுமா மதுரா... இங்க வேலை அப்படியே நிக்குமே என்று யோசித்தான் தாடையை தடவியபடி.

இல்லைங்க சார், எங்க நட்பு பத்தி நான் உங்களுக்கு புதுசா ஒண்ணும் சொல்லவேண்டாம்... பந்தக்கால் நடறதுலேந்து நான் அவகூட இல்லைனா அவ என்ன கொன்னேபோட்டுருவா ... திங்கள் காலையில பந்தக்கால்... அதான் நான் சனிகிழனை இரவு கிளம்பலாம்னு... அடுத்துவரும் திங்கள் காலையில ஆபீசுக்கு வந்துடுவேன் சார் என்றாள். அவள் கண்களின் ஆவல், மகிழ்ச்சி அவனுக்கு மறுப்பு சொல்லத் தோன்றவில்லை.
சரி. உஷாகிட்ட ஹான்டோவர் பண்ணீட்டுப் போங்க நான் பாத்துக்கறேன்என்றான்.
ஓ தாங்க்யு சார்... தாங்க்ஸ் அ லாட் என்றாள் மலர்ந்து.
இட்ஸ் ஓகே என்றான் அவனும் புன்னகைத்தபடி.

அவனுக்கும் அந்த நட்பின் ஆழம் புரிந்துதான் இருந்தது. அவனுடைய பார்த்தி எனும் பார்த்திபனுடன் கூடிய நட்பும் இது போன்றதுதானே. ‘ஓ பார்த்தி, என் உயிர் நண்பன்... பேசி ரொம்ப நாளாச்சு... வீட்டுக்கு போய் நிதானமா கூப்பிடணும் என்று நினைத்துக்கொண்டான்.

வீட்டைச் சென்றடைந்ததும் உள்ளே பேச்சுக் குரல் கேட்டது
.
டேய் பார்த்தி. நூறு ஆயுசுடா!  என்று ஓடிப் போய் நண்பனைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். எப்பிடிரா இருக்கே?” என்று விசாரித்துக்கொண்டனர்.
என்னடா அதிசயமா என்வீட்டு பக்கம் மழை அடிக்குது என்று வாரினான்.
ஏன் சொல்ல மாட்டே.... பாருங்க மா, நானா வந்தாத்தான் உண்டு... இவன் கண்ளையே அம்புடறதில்லை... இதில என்னைச் சொல்றான் என்று திட்டிக்கொண்டனர். வெகு நாளைக்குப் பிறகு பார்த்தியை கண்டதில் வித்யாவிற்கு பெருமகிழ்ச்சி.

மேல வாடா என்று அழைக்க, 
நீ இப்போதானே ஆபீஸ்லேந்து வந்தே... நீ பிரெஷ் ஆகு... நான் தோ வரேன் அம்மாட்ட பேசிட்டு என்றான். சரி என்று வித்யா மேலே செல்ல, பவி அதற்குள்ளாகவே அவன் வாங்கிக்கொண்டு வந்திருந்த கேம்ஸ், சாக்லேட் என்று சந்தோஷமாக பார்த்தியின் மடியில் உட்கார்ந்து கதை பேசிக்கொண்டிருந்தது.  தன் மற்ற பொம்மைகளை காண்பித்தது.
இது யாரு வாங்கித் தந்தா?” என்று கேட்டான் பார்த்தி.
எங்க மம் ... ஆண்ட்டி வாங்கித் தந்தாங்க என்றது. புருவம் முடிச்சிட மம் என்று ஆரம்பித்தாளே... அப்படி என்றால் என்று குழப்பத்தோடு பார்வதியை பார்க்க
பவி உள்ள போய் புது கேம் ஆடு போ என்று அனுப்பினாள் பார்வதி.

என்னம்மா ம்ம்மீ னு சொல்லவந்தாப்ல..”. 
ஆமாம்பா பார்த்தி. அது ஒரு கதை என்று முழுவதும் கூறினாள்.
அதைக்கேட்ட பார்த்திக்கு ஆச்சர்யம்.
சரிம்மா கவலைப் படாதீங்க... நடப்பது எல்லாம் நல்லதுக்குன்னே நினைப்போம் என்று கூறிவிட்டு மேலே சென்றான்.
வித்யாவை ஆழம் பார்க்க, என்னடா அம்மா இப்போதான் சொல்றாங்க பவிக்கு உடம்பு முடியாம இருந்துதாமே?” என்றான்.
ஆமாடா  ஒரு நாளானாலும் எங்கள எல்லாம் பயமுறுத்தீட்ட இந்த குட்டி என்றான்.
நல்லவேளை என் பி யே தான் நல்லாவே ஹாண்டில் செஞ்சாங்க... நல்ல நேரத்துல ஹெல்ப் பண்ணினாங்க... அதுல அந்த டாக்டர் பண்ணிவெச்ச கூத்து, அவங்கதான் மம்மி னு நினச்சுடுச்சு பவி... இப்போதான் கொஞ்ச கொஞ்சமா மாத்திக்கிட்டு வரோம் அவ மனச... பார்க்கலாம்

சரி, வித்யா நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே, அந்தப் புள்ளைய ஏண்டா இப்படி ஏங்க வைக்கணும்? உன் முதல் மனைவி அப்படி செஞ்சுட்டா அதுக்காக எல்லாப் பெண்களுமே மோசமானவங்கனு நினச்சுடறதா... அப்பறம் வாழ்க்கை எப்பிடீடா வித்யா... அம்மா நெலமைய யோசிச்சு பார்த்தியா... அவங்களுக்கென்ன வாலிபமா பவி பின்னாடி ஓடிகிட்டிருக்க என்றான்.
பேசாம நீ இன்னொரு நல்ல பெண்ணை பார்த்து கட்டிக்கடா வித்யா
ஆமா, வர்றவளும் அவளப்போலவே இருந்தாலும் போச்சு... என் மகளை கஷ்டப்படுத்தினாலும் போச்சு.. போடா வேலையப் பாரு... என்னைச் சொல்றே நீ எப்போ கட்டிக்க போறே?” என்றான் வித்யா.
அதுக்குதான் வந்தேன் என்று பத்திரிகை எடுத்து வைத்தான்.
என் கல்யாணம் முடிவாகி இருக்குடா... கண்டிப்பா பவியையும் அம்மாவையும் அழச்சுகிட்டு நீ வந்தே ஆகணும்.. இல்லேனா நான் இந்த வீட்டு வாசற்படியே...”
ஏண்டா பெரிய வார்த்தை எல்லாம்... நீ சொல்லணுமா, நான் இல்லாம உனக்கு ஏதுடா கல்யாணம்... கண்டிப்பா வருவேன்... அங்கெல்லாம் அலைய அம்மாக்கு முடியாதுடா... வெளி இடங்கள்ள பவிய நான் தனியா மேனேஜ் பண்ணறதும் கஷ்டம்... நான் கண்டிப்பா வருவேன் பார்த்தி என்றான். எங்கு என்றைக்கு என்று பேசியபடியே நடந்தனர்.
கீழே போய் பார்த்தி அம்மாவிடம் வணங்கி ஆசி பெற்று விடை பெற்றான்.

அடடா மதுராவும் இல்லை நானும் இந்த கல்யாணத்திற்கு போகணுமே ஆபீஸ் என்ன ஆகும்...ஜி எம் கிட்டதான் பொறுப்ப குடுக்கணும். அடுத்த வெள்ளி திருமணம்... நான் புதன் இரவானும் கிளம்பணும்... சனி இரவு தான் திரும்ப முடியும்... மூணு நாளு இந்த பவிக்குட்டி அம்மாவ என்ன பாடுபடுத்துவாளோ... அவளுக்கு நல்ல புத்தி சொல்லணும்...’ என்றெல்லாம் மனசுக்குள் குழப்பியபடியே சாப்பிட வந்தான்.
என்னப்பா வித்யா, கல்யாணத்துக்கு போகணுமே நீ என்றார்.
ஆமாம்மா நீ வர முடியுமா, வரியா?” என்று கேட்டான்.
இல்லைடா என்னால அலைய முடியாது. நான் இங்க காமுவை வெச்சிண்டு பவிய பாத்துக்கறேன்... நீ போய் நல்லா என்ஜாய் பண்ணீட்டு வா.. உனக்கும் ஒரு சேஞ்ஜ் ஆக இருக்கும் என்றாள்.
சரி நான் நாளைக்கு டிக்கட்  ஏற்பாடு பண்றேன் என்றான்.

அடுத்த நாள் அதேபோல டிக்கட் போட்டுவிட்டு பவியை மடியில் அமர்த்தி நல்ல வார்த்தை சொன்னான்.
நீ சமத்தா இருப்பியாம்... நான் ஊர்லிருந்து வரும்போது உனக்கு விடியோ கேம்ஸ் வாங்கி வருவேனாம்... தினமும் நான் பாட்டிகிட்ட போன்ல கேப்பேன்.. அவங்க உன்னைப் பத்தி ஏதானும் கம்ப்ளெயின்ட் பண்ணினா உனக்கு கேம்ஸ் கிடையாது என்று பேரம் பேசினான்.

இல்ல டாடி, மது ஆண்ட்டி கூட சொல்லி இருக்காங்களே, நான் சமத்தா இருந்தாதான் எங்க சண்டே டீல் னு. நான் பாத்திய படுத்தாம இக்கேன்... நீ போய்துவா என்றது.
அடிப்பாவி, நான் சொல்றதும் கேம்சும் லட்சியம் இல்லையாம்... அவளோட மது ஆண்ட்டி சொல்லீட்டாளாம் அதுனால சமத்தா இருப்பாளாம்... பாரேன் இவள என்று மனதுகுள் நினைத்தபடியே,
சமத்துக்குட்டி டீ நீ என்று முத்தம் வைத்தான். “போப்பா மீசை குத்துது என்று கிளுகிளுவென சிரித்தது.

அத்யாயம் பதிமூன்று
அங்கு தன் வீட்டில் மதுரா திருமணத்திற்கு பாக்கிங் செய்துகொண்டிருந்தாள். நாளை இரவு கிளம்பவேண்டும். நாளைக் காலையிலேயே ஆபீஸ் போகும்போது சாமான்களோடு சென்றுவிட்டால், அங்கிருந்து ரயிலடிக்குப் போய்விடலாம் என்று எண்ணி ஒன்றையும் விடாமல் லிஸ்ட் எழுதி வைத்துக் கொண்டு பாக் செய்தாள். வசுவிற்கும் அவளது கணவனுக்குமாக ஜோடி வாட்சுகள் வாங்கி இருந்தாள்.
தனக்கென இரண்டு மெல்லிய சாதா ப்ரிண்டட் மற்றும் கிரேப் சில்கும் இரண்டு நல்ல உசத்தி பட்டுப் புடவைகளும் பாக் செய்தாள்.

அதில் அந்த ஆழ்ந்த பச்சை பட்டுப் புடவையை கையில் எடுத்ததும் கண்ணில் நீர் முட்டியது. அது அவளின் தாய் லக்ஷ்மி இவளுக்கென ஆசையாக முதன்முதலில்  வாங்கியப் பட்டுப்புடவை. அதற்கு மாச்சிங்காக மரகத நெக்லஸ் ஜோடியாக காதணிகளும் வளையலுமாக செட்டாக வாங்கி இருந்தார். ஆனால் அவர் தவறியபின் மதுராவிற்கு அதை அணியவே தோன்றவில்லை. இப்போது வசுவின் திருமணம் என்பதால் எடுத்து வைத்தாள். அதை முகூர்த்தத்திற்கு கட்டலாம் என.
மாலை வரவேற்பிற்கு ஆழ்ந்த வயலட்டில் உடம்பிலும் பார்டரிலும் சம்கி வர்க்குடன் முத்துக்கள் பதிக்கப்பட்ட ஷிபான் சேலை மாச்சிங் ப்ளவுஸ் என வைத்தாள். அதற்கு முத்துக்களால் ஆன நீண்ட ஹாரம் கீழே அழகிய பெண்டண்டில் முடிந்தது. மாச்சிங் தொங்கட்டான்களும் முத்து வளையல்களும் என எடுத்து வைத்தாள். சில நல்ல சல்வார்களும் என பாகிங் முடிந்தது.

எல்லாம் இருமுறை சரிபார்த்து கட்டி வைத்துவிட்டு
, குளிர்பெட்டியை திறந்து ஒதுக்கி சுத்தம் செய்து காய வைத்தாள். பால், பேப்பர் ஒரு வாரம் வேண்டாம் என்று செக்யுரிடிக்கு கூப்பிட்டுக் கூறினாள்.
காலை எழுந்து ஆபிசிற்கு சாமான்களோடு சென்று அங்கே அதை பெண்கள் அறையில் வைத்துவிட்டு வேலைகளை பார்த்தாள். அடுத்தவாரம் ஒருவேளை வித்யாவிற்குத் தேவைப்படலாம் என்ற கோப்புகளையும் குறிப்புகளையும் கூட ரெடி செய்து அவனுக்கு பார்வையாக வைத்தாள்.

என்ன கிளம்பியாச்சா, எனக்கு கூட எல்லாம் ரெடி பண்ணீட்டீங்க போல... வெரி நைஸ்... ஐ அப்ரிஷியேட் என்றான். “போயிட்டு வாங்க என்ஜாய் என்றனுப்பினான்.
தாங்க்யு சார் என்றுவிட்டு வெளியே வந்து ஆட்டோ பிடித்து ரயிலேறினாள்.
விடியற்காலை மதுரை வந்து சேர்ந்தது ரயில். அங்கே வீராசாமி காத்திருந்தார்.
என்னப்பா, நீங்க எதுக்கு இந்த காலைவேளையில வந்தீங்க... நானே மெல்ல விசாரித்து வந்திருப்பேனே என்றாள்.
நல்லா இருக்கு கண்ணு, வயசு பொண்ணு ஊருக்கு வேற புதுசு... நான் வராம பின்ன, வசு என்ன கொடஞ்சுட மாட்டாளா என்றார் சிரித்தபடி அவரது வண்டியில் ஏறி வீடு வந்து சேர்ந்தனர்.
மது என்றபடி ஓடி வந்து கட்டிக் கொண்டாள் வசு
என்னடி ஒரு சுத்து பெருத்திருக்கே கல்யாணக் களையா என்று வாரினாள். “இல்ல அம்மா கை சமையலா என்றாள்.
போடி நீதான் இளைச்சிருக்கே. அம்மா கையால சாப்பிடு இந்த நாலுநாள், தானே தேறிடுவே என்றாள்.
குளித்து சாப்பிட்டு அரட்டை அடித்து என பொழுது போனது. அன்றிலிருந்தே வீட்டில் கல்யாண வேலைகள் என்ன உண்டோ பொறுப்பெடுத்துக் கொண்டாள் மதுரா.
பொண்ணுன்னா இது இல்ல பொண்ணு என்று மெச்சிக் கொண்டாள் கற்பகம்.’ உக்கும் என்று இடித்தாள் வசு
கோவை மாப்பிள்ளையின் ஊர்... அங்கேதான் திருமணம் வைத்திருந்தது.
திங்கள் காலை பந்தக்கால் நட்டனர். செவ்வாய் அன்று வீட்டில் பூஜை செய்து வேண்டிக்கொண்டனர். குலதெய்வம் முருகன் என்பதால் செவ்வாய் மங்களமாக இருக்கும் என. புதன் வசுவை அமரச்செய்து  ஐந்து சுமங்கலிகள் நலங்கு வைத்து பூவைத்து அவளை வாழ்த்தினர். அன்று மாலை எல்லோருமாக திருமண சாமான்களோடு மதுரையிலிருந்து கோவைக்குச் சென்றனர்.
ஜாலியாக வழி எல்லாம் வசுவும் மதுவுமாக அரட்டை அடித்தபடி சென்றனர்.
ராவெல்லாம் தூங்கல ரெண்டு பேரும்.. அங்க போய் பெண் அழைப்புல செவேல்னு இருக்கப்போவுது கண்ணும் முகமும் என்று அதட்டு போட்டார் கற்பகம். கிளுகிளுவென சிரித்தபடி தூங்கிப் போயினர்.

அங்கே கோவையில் மாப்பிள்ளை வீட்டினர் இவர்களுக்கென ஒரு ஜாகை பார்த்து வைத்திருந்தனர். அவர்களுடைய வீட்டிலிருந்து நடக்கும் தூரத்தில் இருந்தது பெண் வீட்டினர் வீடு. பக்கத்தில் மண்டபத்தில் திருமணம். மாலை வரவேற்பு பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டல் லானில்.
அங்கு சென்று குளித்து வசுவை ரெடி செய்து மண்டபத்திற்குச் செல்ல எல்லாமும் எடுத்து வைத்து என்று பம்பரமாய் சுழன்றாள் மதுரா. கூடவே வசுவின் சித்தி மகள் சுமதியும் சேர்ந்துகொண்டாள். ஒரே அரட்டையும் வேலையுமாக நடந்தது. எல்லோருக்குமே மதுராவை மிகவும் பிடித்துப்போனது. யார் யார் வீட்டில் திருமண வயது பிள்ளைகள் உள்ளனர்... யாருக்கு மதுராவை பார்க்கலாம் என்றவரை போயிற்று பேச்சு.


மண்டபத்தை அடைந்து வயது பெண்கள் எல்லோரும் அழகாக உடுத்தி ஆலம் சுற்ற ரெடி ஆகினார்
. மாப்பிள்ளை வந்ததும் ஏழு பெண்கள் ஆலம் சுற்றி வரவேற்பது ஒரு சடங்கு முறை. அதன்பின் பெண்ணை அமரச்செய்து நலங்குவைத்து பூ முடித்து மாப்பிள்ளை கையால் மோதிரம் இடுவர்.
அந்நேரத்திற்கு என வசுபோலவே அவளுக்கும் வாங்கி இருந்த பட்டுப் புடவையை கட்டச் செய்தார் கற்பகம். பொன்வண்டு நிறத்தில் ஆழ்ந்த நீல வண்ண பார்டர் ஜரிகை வேலைபாட்டோடு கச்சிதமான பிளவுசுடன் மிளிர்ந்தாள். தன் முடியை அழகாகப் பின்னலிட்டு அதில் நீளமாக மல்லிகையை தொங்கவிட்டாள். காதில் ஜிமிக்கி ஆட கழுத்தில் தங்க அட்டிகை மின்ன அழகோவியமாக தயாரானாள். ‘யாருக்கு குடுத்து வெச்சிருக்கோ என்று பல பெருமூச்சுகள் வெளிப்பட்டன அங்கே.

மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்தாச்சு வாங்கடி பொண்ணுங்களா என்று குரல் கொடுத்தனர். பெண்கள் கிளுகிளுவென சிரித்தபடி விளக்குடன் ஆரத்தி தட்டுகளில் மிட்டாய்கள், பழங்கள், முந்திரி, பாதாம் என தினுசு தினுசாக அலங்கரிக்கப்பட்ட ஆலம் தட்டுகளோடு சென்றனர்.
கடைசியாக சென்றாள் மதுரா. மாப்பிள்ளைக்கு ஆலம் சுற்ற வந்தவள் ஆலம் சிந்தாமல் இருப்பதிலேயே கவனம் வைத்தாள். ஆலம் சுற்றி பொட்டுவைக்க நிமிர, பக்கத்தில் அப்போதுதான் கவனித்தாள்.

இவனா! இவன் இங்கே எப்படி?’ என்று திகைத்து நிற்க.
என்ன மதுரா, மாப்பிள்ளை காத்திருக்காரு, பொட்டு வைமா என்று குரல் கேட்க சட்டென்று தன்னை மீட்டுக்கொண்டு வெட்கி பொட்டு வைத்துவிட்டு நகர்ந்தாள்.
அந்த பொன்வண்டு சேலை உடுத்தி வரும் பெண் மதுரா... மதுராவேதான்... அவள் இங்கே எப்படி?... என்ற ஆச்சர்யத்தோடு திகைப்புமாக அவளை அங்கே கண்ட சந்தோஷமுமாக ஒரு மலர்ந்த சிரிப்போடு அவளையே கண்டுகொண்டிருந்தான் அவன், ஆம் வித்யாதரன் தான்

அனைவரும் உள்ளே வந்து மற்ற சடங்குகள் நடந்தன
. பார்த்தியின் அருகில் அமர்ந்திருந்த வித்யாவின் பார்வை மதுராவிடமே இருந்தது. ‘ஹப்பா இவள்தான் என்ன அழகு என்றது மனது.
தடீரென ஒரு உற்சாகமும் துள்ளலுமாக இருந்தது மதுராவிற்கும்.
ஏண்டீ என்ன மெதக்கற?” என்றது மனது. ஒன்றும் இல்லையே என்று அடக்கினாள்.
வசுவிற்கு நலங்கு வைத்து புடவை கொடுத்தனர். அவளை அழைத்துச்சென்று அதை அழகாக உடுத்தி அழைத்து வந்தாள். மோதிரம் இட்டான் பார்த்தி. வசுவும் பார்த்தியும் கண்களால் பேசிக்கொண்டனர்.
என்னடி எப்படி இருக்காரு?” என்றாள் வசு மதுவிடம் பார்த்தியைப் பற்றி.
நல்லா ஜம்முனு இருக்கார்டீ.. அழகான ஜோடியா இருக்கீங்க என்றாள் மதுரா நிறைவாக.
புது புடவை உடுத்தி மெல்ல நடந்துவர  யு லுக் பியுடிபுள்என்றான் பார்த்தி அவள் காதோரம்.... அவளையே பார்த்திருந்தான்.

நிச்சயம் நல்லபடியாக முடிய சாப்பிடச் சென்றனர்.
மது, மாப்பிள்ளை வீட்டுக்காரங்கள நல்லபடி கவனிக்கணும்மா... ‘வாங்க சாப்பிட னுபோய் அழச்சுட்டுவா கண்ணு என்று அனுப்பினார் கற்பகம்.
மதுரா அங்கே பார்த்தியின் குடும்பத்தாரிடம் சென்றாள்எல்லாரும் வாங்க சாப்பிடலாம்... எல்லாம் தயாரா இருக்கு என்றாள் பொதுவாக பணிவாக.
ஏன் எங்கள எல்லாம் அழைக்க மாட்டீங்களா?” என்றான் பார்த்தி.
எல்லாரையும் தான் அழைக்கிறேன் என்றாள் தடுமாறியபடி.
என்னையும் என் ஆருயிர் தோழனையும் தனியா ஸ்பெஷலா கூப்பிடணும், அப்போதான் வருவோம் என்று பிகு செய்தான்.

அப்படியா, தோ அப்பாவ வரச்சொல்றேன் வந்து அழைச்சுட்டு போவார் என்றாள் இவளும் மிடுக்காக சிரிக்காமல்.
ஐயோ வேண்டாம். வாடா  வித்யா போய்டலாம் சாப்பிட என்றான்.
வாங்க சார் சாப்பிடலாம் என்றாள் மதுரா.
உன்ன இங்க இதே கல்யாணத்துல பார்ப்பேன்னு நான் நினைக்கவே இல்லை மதுரா என்றான் அவன் சிரித்தபடி.
நானும்தான் சார் என்றாள் அவள்.
“உன் தோழி வசுதான் இவனுக்கு பார்த்திருக்கற வசுன்னு எனக்கும் உறைக்கல... ஸ்ட்ரேஞ்”
என்னடா உனக்கு இவங்கள முன்னமே தெரியுமா?” என்றான் பார்த்தி.
ஆமாடா இவங்கதான் மதுரா... என் பி ஏ... நம்ம பவிய காப்பாத்தினாங்கனு சொன்னேனே என்றான்.
அட, வாட் அ ஸ்மால் வர்ள்ட்!” என்றபடி சாப்பிடச் சென்றனர்.

மதுரா போய் வசுவை பார்த்திக்கு நேர் எதிர் வரிசையில் அமரவைத்துத் தானும் அவளருகில் அமர்ந்து உண்டனர்
. கை கழுவ செல்லும்போது அவளை முன்னே விட்டு தான் பின்தங்கி சுற்றும் காத்துக்கொண்டாள். பார்த்தியும் வசுவும் இரு வார்த்தை பேசிக்கொள்ள முடிந்தது.
உன் ப்ரண்ட் ரொம்பவே ஸ்மார்ட். என் உயிர்த் தோழன்தான் அவங்க பாஸ் தெரியுமா என்றான் பார்த்தி
தெரிஞ்சுது, நானும் இப்போதான் பார்த்தேன்!”  என்றாள் வசு.
ஹேய் வசு ரொம்ப க்யுடா இருக்கேடா என்றான்.
நீங்களும்தான் ஜம்முனு இருக்கீங்க என்றாள் வெட்கத்தில் சிவந்தபடி. சரி அப்பறம் பார்க்கலாம் என்றபடி பிரிந்தனர்.
என்னடா சைக்கிள் காப்பில கடலைபோட்டாச்சா... சைட் அடிச்சாச்சா?” என்று வாரினான் வித்யா.
போடா என்றான் பார்த்தி வெட்கியபடி.

உடை மாற்றி படுக்கச் செல்ல கற்பகம் வந்தார். “இதப் பாருங்கடி பெண்களா, பொழுது விடிஞ்சா முகூர்த்தம்... இருக்கறதே நாலு இல்ல அஞ்சுமணி நேரத் தூக்கம்... சீக்கிரமே எழுந்து குளிச்சு இவள ரெடி பண்ணனும்... பேச்சு சத்தம் கேட்டுது கொன்னுடுவேன், பேசாம அடங்குங்க ஆமா என்று செல்லமாக மிரட்டினாள். உண்மை எனத் தெரிந்த பெண்கள் பேசாமல் தூங்கி போயினர்.

பொழுது விடியும் முன்பே எல்லோரும் விழித்தனர். மளமளவென குளித்து முதலில் வசுவிற்கு அலங்காரம் செய்ய ஆரம்பித்தனர். அவளை ரெடி செய்தபின் தான் ரெடி ஆகலாம் என மதுரா குளித்து ஒரு நைட்டியில் நின்று வசுவை கவனித்தாள். நெற்றி சுட்டியில் ஆரம்பித்து, புடவை முன் கொசுவம் ஒழுங்கு செய்வது வரை பார்த்துப் பார்த்து அலங்கரித்தாள். அதைக்கண்டு அங்கு எல்லோரும் வியந்து போயினர். அரக்குநிற கூரை புடவையில் மிளிர்ந்தாள் வசு. மதுராவின் அலங்காரம் அவளின் அழகுக்கு அழகு சேர்த்தது.
போச்சுபோ அண்ணன் மயங்கிட போறாருஎன்றபடி கன்னத்தில் கருப்பு பொட்டு வைத்தாள்.

வசுவின் கண்கள் நிறைந்தன. “மது...” என்று சட்டென உடைந்து கட்டிக்கொண்டாள்.
என்னடி என்ன ஆச்சு?” என்று பதறினாள் மதுரா.
இல்லைடி, நீ எனக்கு கிடைச்சது பெரும் பாக்கியம்டீ... உன்னைவிட்டு பிரியணுமேன்னு இருக்கு என்றாள் தேம்பியபடி.
என்னமோன்னு பயந்துட்டேன்... எங்கடீ போகப் போறே... வெளி ஊர் ஒண்ணும் இல்லியே... நீயும் சென்னைலே தானே டீ வாழப்போற. எப்போ வேணும்னாலும் பேசிக்கலாம், பாத்துக்கலாம். கண்ணத் துடை. யாராச்சும் பாத்தா பொண்ணுக்கு கல்யாணம் பிடிக்கலையோனு நினைக்கப் போறாங்க. அப்பறம் எங்கண்ணனுக்கு வேறப் பொண்ணப் பாத்துடுவாங்கடீ என்று கிண்டல் செய்தபடி அவள் விழிகளை துடைத்து மேக்கப் சரி செய்தாள்.
அசடு, பாரு எல்லாம் கலஞ்சிருச்சு என்று அவளை அணைத்து ஆறுதல் படுத்தினாள். உள்ளுக்குள் இவளுக்குமே வசுவை பிரிய வேண்டுமே என்று இருந்ததுதான்.

வசு ரெடி ஆனபின் தான் தனது பச்சை பட்டை எடுத்து பிரித்து கட்டி அலங்காரம் முடித்தாள்
.
டீ மதுரா நான் மட்டும் ஆம்பளையா இருந்திருந்தா இந்த நிமிஷம் உன் கழுத்தில தாலி கட்டி இருப்பேண்டீ... என்ன அழகுடி... அதுவும் இந்த புடவையும் நகையும் அள்ளுதுடீ... அம்மா இவளுக்கு கொஞ்சம் திரூஷ்டி கழியேன் என்று கேட்டுக்கொண்டாள். இதை எல்லாம் கேட்டு சிவந்து போனாள் மதுரா மிகவும் கூச்சமாகியது. கற்பகம் இரண்டு பெண்களையுமே நிற்க வைத்து திருஷ்டி கழித்தார்.

அங்கே வித்யாவும் பார்த்தியை அவ்வண்ணமே அழகு படுத்திக்கொண்டிருந்தான்
.
போதும்டா பொம்பள மாதிரி அலங்காரம் பண்றே என கூச்சப்பட்டான் பார்த்தி. இருவரும் கீழே வர அவனை மணமேடையில் அமர வைத்து வித்யா சுற்றும் முற்றும் பார்வையை ஓடவிட்டான். அவன் கண்கள் மதுராவை சல்லடை போட்டுத் தேடிக் கொண்டிருந்தன. மணப்பெண் வரவில்லையே, உள்ளே அவளை கவனித்துக்கொண்டு பிசியாக இருப்பாள் என எண்ணிக்கொண்டான்.
 
அப்போதே பொண்ண அழச்சுண்டு வாங்கோ என்று ஐயர் குரல் கேட்டு சில சுமங்கலிகள் வசுவை மணவறைக்கு அழைத்து வந்தனர்.

அந்நேரம் வரை அலைபாய்ந்த வித்யாவின் கண்கள் குளிரும் வண்ணம் வசுவை அணைத்தபடி கூடவே வந்த மதுராவைக் கண்டான்
. அந்த பச்சைவண்ண சேலை அவளை கோவிற்சிலையாக அழகு சேர்த்துக்கொண்டிருந்தது. எதேர்ச்சையாக அவள் கண்களும் அவனை சந்திக்க முறுவலித்தாள். அவனும் பதிலுக்கு முறுவலித்தான். அவனும் அன்று ஜரிகை கரையிட்ட வேட்டியும் அதன் மேல் ஆழ்ந்த பச்சையில் சில்க் காட்டன் குர்தாவும் அணிந்திருந்தான். அட என நினைத்துக்கொண்டனர் இருவரும்.

டேய் வித்யா இங்க வா என்று ஜாடை காட்டி அழைத்தான் பார்த்தி. இவனும் அருகே செல்ல
வசு, இதான் என் நெருங்கிய நண்பன் வித்யாதரன் என்று அறிமுகம் செய்தான்.
வணக்கம் அண்ணா என்றாள் வெட்கத்தோடு. அவனும் வணக்கம் சொன்னான்.
என்னடா உடனே அண்ணானுட்டா என்றான் பார்த்தி வேண்டுமென்றே.
ஆமா அதுக்கென்ன, எனக்கு தங்கை இல்லாத குறையத் தீர்க்க கடவுள் கொடுத்த தங்கை, போடா என்றான் அவனும் மனம் நிறைய.
பின்னோடு திருமணச் சடங்குகள் ஆரம்பித்தன. இந்த பக்கம் வசுவின் அருகில் மதுராவும், அந்த பக்கம் பார்த்தியின் அருகில் வித்யாவுமாக மிக அழகான ஒரு தோற்றமாய் அமைந்தது. போடோக்ராப்ர் அதைக் கண்டு சார் நாலுபேரும் அப்படியே நெருங்கி போஸ் கொடுங்க சார்... ரொம்ப அழகா இருக்கு இந்த அமைப்பு என்று தன் காமிராவில் படம்  பிடித்துக்கொண்டார்.

வசுவிற்கு உதவும்போது குனிந்த நிலையில் மதுரா நிற்க அவள் சூடிய மல்லிகைச்சரம் முன்வந்து அவள் கன்னத்தை வருடி விளையாடியது
. அதை மீண்டும் பின்னே தள்ள அது மீண்டும் வந்து கன்னத்தைத் தொட்டு சில்மிஷம் செய்தது. அதைக்கண்டு தன்னை அடக்கமாட்டாமல் கிளர்ந்தான் வித்யா.
ஓ மது என்று மனம் ஏங்கியது.
சே என்ன நினைப்பு இது. நான் மணமாகி மூன்று வயது மகளுக்குத் தந்தை என அடக்கினான்.  மாலை மாற்றல் முடிந்து முகூர்த்த நேரம் நெருங்க சொந்தங்கள் சூழ்ந்து கொண்டனர்.


1 comment:

  1. Oh..wow..I feel like I am sitting in the wedding hall enjoying the celebrations..By the way, please accept my dhrishti pottu for you!!

    ReplyDelete