Thursday 4 October 2018

En Paatti - En Guru


நம் வாழ்வில் பல சமயங்களில் பலரும் நமக்கு குருவாக விளங்கி பலவற்றையும் நமக்கு கத்துக்கொடுப்பதுண்டு. யாரென்றே அறியாத சிலரிடமிருந்தும் நாம் சிலவற்றை கற்றுக்கொண்டது பின்பற்றியது என உண்டு. தாய் தந்தை மற்றும் நம் ஆசிரியர்கள் நமக்கு என்றுமே முதன்மையான குருவாக விளங்கியவர்.

அதை மீறி, அழிக்க முடியாத, நம் வாழ்வில் முத்திரை பதித்த சிலர் இருப்பார்கள்... அவ்வழியில், என் வாழ்வில், நான் என் குருவாக எண்ணுவது என் தாய்வழி பாட்டி அவர்களைத்தான்.

ஒரே வார்த்தையில் குறிப்பிட வேண்டுமென்றால் “கலையரசி எனலாம்.

ஆய கலைகள் அறுபத்தி நான்கு என்பார்கள். அதில் ஐம்பதையும் தேர்ந்தவரோ என எண்ணி வியந்திருக்கிறேன்.

சிறு வயது முதலே, படைக்கும் உணவோ, தலைமுடி பின்னும் அழகோ, கையில் மருதாணி இடும் அற்புதமோ, நெளி நெளியாக பரவசமூட்டும் கோலமோ ஒவ்வொன்றையும் பார்த்து ரசித்து வியந்திருக்கிறேன்.

அவருக்கு பத்து விரல்களும் பத்தாயிரம் காரியம் எனலாம். அவருக்கு தெரியாத கைவினையே இல்லை. மணிகள் கொண்டு செய்யும் பை, பர்ஸ், மெல்லிய அகல வயர் கொண்டு பின்னப்பட்ட கூடைகள், பைகள், பலவிதமான கைவினை பொருட்கள், crochet, தையல் வகைகள், சின்ன சின்ன துணி துண்டுகளை கோர்த்து மிதியடி என கூறிக்கொண்டே போகலாம். அவர் தொடாத கலை நடனம் மட்டுமே. 

காகிகத்தில், பிட் துணிகளில் பூக்கள் செய்தார், பூஜாடிகளுக்கு மணியால் உரையிட்டார், படங்கள் பல வரைந்தார். அவர் வரைந்தால் சிட்டுகுருவி கூவிற்று, மயில்கள் நடனமாடின. குழந்தை சிரித்தது, பூக்கள் தலை அசைத்தன.

அவரிடம் ஆவலாக 6 வயதில் கோலம் பழகினேன். மருதாணி பக்குவமாக இட கற்றுக்கொண்டேன்.

அப்போது தொற்றியதுதான் என் கலையார்வம். அதன் பலனாக என்னுடைய இளங்கலை படிப்பில் பைன் ஆர்ட்ஸ் எனப்படும் நுண்கலை பாடமாக எடுத்து பட்டம் பெற்றேன். அந்த அளவிற்கு அவர் என்னை ஊக்குவித்துளார்.

என் பிள்ளை பருவத்தில் நான் கண்டு வியந்தவைகள்:
எங்கள் குடும்பத்தில் எந்த திருமண விழாவாகினும், சீர் முறுக்கு சுற்றுவது என் பாட்டியாகத்தான் இருக்கும். அரும்பருமாக அவர் சுற்றும் அழகே தனி. நாவில் கரையும் ருசி அபாரம், அது வேறு விஷயம். 

மணமகளுக்கு மருதாணி இடுவதிலிருந்து மடிசாரு எனப்படும் பிராமண புடவை கட்டல் மற்றும் தலையில் பூஜடை அலங்காரம், என் பாட்டி கையால்தான் நடந்தது.

மணமேடை கோலங்களில் அவர் பிரசித்தம். பாம்பு போல நெளிந்து வெள்ளை மாக்கோலமும் செம்மண்ணும் மிளிரும். அதன் மீது கால் வைத்து நடக்கவோ அமரவோ கூட மனம் வராது.

எந்த கலையாகினும் கண் பார்த்ததை கை செய்யும் பக்குவம் உடையவர்.

சமைப்பது, பூ தொடுப்பது போன்ற தினசரி விஷயங்கள் எல்லாவற்றிலுமே கூட ஒரு நளினம், நுணுக்கம், நேர்த்தி இருக்கும்.. பார்த்து பார்த்து வியந்து ‘நானும் பாட்டி’ என கூட கூட அமர்ந்து நச்சரித்து கற்றுக்கொண்டதன் பலனோ... என்னையும் கலையார்வம் தொற்றிக்கொண்டுள்ளது. இந்நாள் வரையிலும் அதைவிட்டு விடுபடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறேன்.

கை பிடித்து கோலம் பழக்கினார், சொல் பற்றி பாட வைத்தார் ஸ்லோகங்கள் பல சொல்லி கொடுத்தார்.

மடி அமர்த்தி பின்னலிட்டார். கூடி அமர்ந்து மணியும் வயருமாக பின்னி பிணைத்தோம். சிரித்து அளவளாவினோம். கை மணக்க அப்போதே சமைத்ததோ, பழைய சோற்றுடன் மாவடுவோ, மருதாணி கையில் மணக்க, உண்ட அந்த சோறு நெஞ்சில் மணத்தது.

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே, பத்து பைசாவிற்கு கடலை வாங்கிக்கொண்டு நடந்தே பக்கத்து கொட்டகையில் நானும் அவருமாக மதிய காட்சி பார்த்த படங்கள் பலவும் உண்டு.

ஒன்பது பிள்ளைகளின் தாய்... 12 பேரப்பிள்ளைகளின் பாட்டி. குடும்பத்தலைவி, தாத்தாவின் கைபிடித்த காதல் மனையாள். குடும்ப பாரம் அத்தனையையும் மீறி எப்போதுமே முகத்தில் மிளிரும் குழந்தை போன்ற சிரிப்பு, பால் போன்ற மனசு. வெளேரென்ற நிறம், பட்டு போன்ற சருமம், நீண்ட தலைமுடி. என்றென்றும் என் நெஞ்சில் குடிகொண்டிருக்கிறார். வழி நடத்துகிறார்.

தள்ளாத வயதிலும் எல்லா மூட்டுகளும் வலியில் துவண்டபோதும் பேரப்பிள்ளைகளுக்கு மணியில் காயின் பர்ஸ் செய்து பரிசளித்தார். இன்றும் என் மிகப்பெரிய பொக்கிஷமாக பாதுகாக்கிறேன்.

வளர்ந்து வந்த அந்த பருவ வயதில், என்ன எப்படி எதை செய்யலாம் எதை செய்யலாகாது என எனக்கு மென்மையாக அன்பாக உரைத்தவர். அதிர்ந்து பேசி கேட்டதில்லை. யாரையும் திட்டி அவச்சொல் சொல்லி காதில் விழுந்ததில்லை. அவரின் ஆற்றல்கள் கலை போக்கிஷங்கள் போற்றி பாதுகாக்க பட வேண்டியவை. வாழ்ந்து காட்டிய வாழ்க்கையோ ஒரு வரலாறு.

அவர் கற்று தந்த பலதும் என்னையும் மற்ற குடும்பத்தினரையும் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.



No comments:

Post a Comment