Tuesday 2 October 2018

ENGIRUNDHO VANDHAAN - 12


இங்கே உள்ள இந்த அவசர நிலை திலீப்புக்கு தெரியப்படுத்தப்பட்டது. அவர் அந்தக்  கம்பனி முதலாளியை தானே அழைத்து தனக்கு உடம்பு சுகமில்லை அதனால் சில நாட்களில் இதனை தானே வந்து முன்னிருந்து கவனித்து செய்து கொடுப்பார் என்று வேண்ட அவரும் நல் எண்ணத்துடனே ஒப்புக்கொண்டார். ஆனால் திலீப் கேட்டுக்கொண்டபடி மேனேஜரும் செயலாளரும் ஒரு நாடகம் ஆடினர். அது தினேஷுக்கு சொல்லப்படுவது யாதெனில் அவன் உரிய நேரத்தில் கவனித்து செய்யாமல் போனதால் இந்த டீல் நாசமானது. அதனால் பெரிய லாஸ் என்று உருவகப்படுத்தப்பட்டது.

விஷயம் அறிந்த தினேஷுக்கு உதறல் எடுத்தது. பொறுப்பு என்று எடுத்துக்கொண்டு அந்த நேரத்தில் பெரிய லாஸ் என்றால் தந்தைக்கு என்ன பதில் சொல்வது என்று தடுமாறினான். சில நாட்கள் இப்படியாகக் கழிய அவனுக்கு கம்பனியின் உள் விஷயங்கள்  புரிய ஆரம்பித்தன. எவ்வளவு கடினமான வேலைகள் பொறுப்புகள் உள்ளன, இதில் எம்மாத்திரம் தன் தந்தையும் அண்ணனும் கவனித்து இந்த சாம்ராஜ்யத்தை காத்து வந்தனர் எல்லாமும் மெல்ல மெல்ல புரிய வந்தது. ஆயினும் அவன் எண்ண ஓட்டத்தில் பெரிய மாற்றம் இன்னமும் ஏற்படவில்லை.

வேலையில் இன்னமும் மும்மரமாக அவன் ஈடுபட, முன் போல குடிப்பதிலும் கேளிக்கைகளிலும் பொழுது போக்குவதற்கு என்று அவனுக்கு நேரமிருக்கவில்லை. அவனிடம் இருந்து சரளமாக பணமும் வரவில்லை. இப்போது பொறுப்பு அவனது ஆகியதனால் அவனுக்கு பணத்தின் அருமை தெரிய ஆரம்பித்திருந்தது. ஒவ்வொரு நூறு ரூபாயும் எடுக்கும் முன் மனம் பதைத்தது. என்னவென கணக்கு எழுதுவது என்று யோசிக்க ஆரம்பித்தான். நாளடைவில் அவனது ஊதாரித்தனம் குறைந்தது. அது திவாகருக்கும் ராகேஷுக்கும் பெரும் ஏமாற்றம் ஆனது. அவர்கள் அவன் சொன்னபடி குடுக்கப்பட்ட வேலைகளையும் செவ்வனே செய்வதில்லை அங்கே போகவே இல்லை என்றெல்லாம் தெரிய வந்ததும் அவனும் கேள்வி கேட்டான். அப்போது அவர்களின் நட்பு முகம் மாறியது. இவனிடம் ஊழியம் செய்து ஒழுங்காக வாழ அவர்களுக்கு மனம் இருக்கவில்லை. அதனால் ஏதேனும் சாக்கு போக்கு சொல்லி வேலையிலிருந்தும் பொறுப்பிலிருந்தும் நழுவிக் கொண்டனர். இதனை அறிந்தே இருந்தான் தினேஷ். அப்பாவின் வார்த்தைகள் அப்போது கொஞ்சம் புரிய ஆரம்பித்தன.

வீட்டிற்குச் சென்றால் அது வேறு விதமான கஷ்டமாக இருந்தது. வீடு காலியாக அவனை பார்த்து விழித்தது. பணியாளர்கள் இருந்தனர். வேளைக்கு உணவு உடை கவனிப்பு இருந்ததுதான். ஆயினும் பெற்றோர் சுதா கிருஷ் என அனைவருடனும் அந்த வீட்டில் அவன் கழித்த இனிமையான நேரங்கள் அவன் மனதில் அலைமோதின. ‘பெற்றோர் அண்ணனிடம் போனது போன விதமாகவே இருந்துவிட்டார்களே’ என்று கோபம் வந்தது. ‘சுதா குட்டி கூட ஒடிவிட்டாளே.... நான் யாருக்கும் வேண்டாமா?’ என்று தன்னிரக்கம் தோன்றியது. உண்ணவும் பிடிக்காமல் உறங்கவும் முடியாமல் கலைந்த நிலையில் வாழ்ந்து வந்தான்.

‘ச்சே, நான் செய்தது ஒருவேளை தவறோ’ என்று முதன் முறையாக எண்ணினான் வருந்தத் துடங்கினான்.
இதற்குள் இவன் பொறுப்பெடுத்து ஒரு மாதம் முடிந்திருக்க அந்த மாத சம்பளம் பட்டுவாடா செய்வது கணக்கு ஒப்படைப்பது எல்லாம் நடத்த தடுமாறினான். கணக்கரின் உதவியுடன் ஆடிட்டரின் மேற்பார்வையில் செய்தான். கணக்கு உதைத்தது. கம்பனியின் வரவு செலவு இடித்தது. வரவு கணிசமாக குறைந்திருந்தது. வேலையாட்களிடம் பொதுவான ஒரு வெறுப்புத் தோன்றி இருந்தது. இவை அனைத்தையும் கண்டவன் இது மாயா ஜாலம் அல்ல சுய உழைப்பு மட்டுமே இங்கே வெல்லும் என்று நேராக அறிந்து கொண்டான். படிக்க வேண்டிய வயதில் அதை கோட்டை விட்டதால் பெரிதும் நஷ்டப்பட்டது இவனே என்று அறிந்தான்.

அன்று வீட்டிற்கு போகவே பிடிக்கவில்லை. இங்கே நடக்கும் அனைத்தையும் அவ்வபோது அறிந்தே இருந்தார் திலீப். காலம் கூடி வருகிறது என்று உணர்ந்தார்.

தனியாக சென்று அமர்ந்து கிருஷ்ணன் நிஜமாகவே இவர்களுக்கு எந்த விதத்தினாலும் கெடுதல் நினைத்தானா நன்மையே அல்லவா செய்து வந்தான் என்று முழு மனதுடன் ஆலோசித்தான் தினேஷ்.
மனம் இந்த ஒரு மாதத்தில் பண்பட்டிருந்தது. இனிமேலும் தயங்கத் தேவை இல்லை என்று உணர்ந்தான். அண்ணனிடம் பெற்றோரிடம் எனக்கென்ன கூச்சம் என்று தைர்யமாக அண்ணனின் கேத்தி ரிசார்ட்டுக்கு வண்டியைத் திருப்பினான்.
அங்கு சென்று அண்ணனின் ரூமிற்குள் செல்ல அனுமதி கேட்டான். அனிதா அவனை புழுவை போல பார்த்துவிட்டு,
“இப்போது உடனே பார்க்க முடியாது.... உக்காருங்க நான் சொல்றேன்” என்றாள்.

‘இன்னமும் என்ன பாக்கி இருக்கு கிரிஷை கஷ்டப்படுத்த’ என்று சொல்லாமல் சொல்லியது அவள் பார்வை. அதில் மண்டிய வெறுப்பை கண்டு தினேஷுக்கு ஆச்சர்யம்.
‘இவளுக்கு ஏன் என்னைக் கண்டு அவ்வளவு வெறுப்பு..... இவள் அவனின் செயலாளர் தானே அதையும் மீறி அண்ணனுக்கு இவளிடம் ஏதேனும் ஈர்ப்பு உள்ளதோ’ என்று யோசித்தான். அனிதா மிகவும் நல்லவள் என்று அவனுக்கும் தெரியும்தான், அவளிடம் பழகும் வாய்ப்பு அவனுக்கும் இருந்தது அவ்வப்போது.

உள்ளே சென்று க்ருஷிடம் கூறினாள் அனிதா.
“என்ன சொல்றே, ஆர் யு ஜோக்கிங்?” என்றான்.
“ஐயோ இல்லை, நிஜமாவே தினேஷ் வந்திருக்கான்” என்றாள்.
“ஒ! சரி, வரச் சொல்லு பார்க்கலாம்..” என்றான் யோசனையோடு.
அவள் தினேஷை உள்ளே அழைத்தாள். தயங்கிச் சென்றான்.
அனிதாவும் அங்கேயே தான் இருந்தாள். தினா தன் க்ருஷை ஏதேனும் அசிங்கப்படுத்திவிடுவானோ என்ற பயத்தில் அங்கேயே நின்று கவனித்தாள்.

க்ருஷின் அருகே சென்று “அண்ணா என்னை மன்னிச்சுடு” என்றான் அவன் கைகளை பற்றிக்கொண்டு.
“என்னடா இதெல்லாம் விடு, என்ன இப்போ திடீர்னு.... எப்படி இருக்கே..... பிசினஸ் எல்லாம் எப்படி இருக்கு?” என்று பொதுவாக பேசினான்.
“ஐயோ அண்ணா அதெல்லாம் எனக்கு ஒண்ணுமே புரியல.... நீயே வந்து பொறுப்பெடுத்துக்கோ..... என்னால முடியல.... பயமா இருக்கு அப்பாவும் நீயும் கஷ்டப்பட்டு அமைச்சிருந்த சாம்ராஜ்யத்தை நான் சீட்டுக்கட்டு மாதிரி ஊதி தள்ளீடுவேனொன்னு பயமா இருக்கு அண்ணா.... நான் என் பிரிண்ட்ஸ் பேச்சைக் கேட்டுகிட்டு உன்னை ரொம்ப அசிங்கமா அதிகமா பேசீட்டேன்..... மன்னிச்சுடு அண்ணா” என்றான் அழுகை முட்ட.

அவள் ஆச்சர்யத்துடன் கிருஷ் முகத்தை பார்த்தாள். அதில் தப்பு செய்த பிள்ளையை பார்க்கும் தந்தையின் பாச முகமே கண்டாள்.
“சரி சரி போறது விடுடா... எதுக்கு இப்போ கலங்கற..... முதல்ல கண்ணை துடை.... கிளம்பு அப்பாம்மா கிட்ட போகலாம்..... உன்னை பார்த்தா சந்தோஷப்படுவாங்க” என்று கிளப்பினான்.
“நான் வரலை அண்ணா..... எந்த முகத்தோட அவங்கள பார்க்க வருவேன்.... உன்னை இவ்வளவு மோசமா பேசி நடத்தீட்டு கம்பனியையும் சரியா பார்த்துக்க முடியாம தோற்றுப் போய் வந்திருக்கேன்..... ஐ ஆம் அ லூசர் அண்ணா” என்றான் தலை கவிழ்ந்து.
“பிசினஸ் னா என்னாமோன்னு நினைச்சேன்.... பிசினசின் மறு பெயர் உழைப்பு னு இப்போ புரிஞ்சுது..... நீயே அம்மாப்பாட்ட சொல்லீடு வீட்டுக்கு வரச் சொல்லு.... நீயும் வா அண்ணா.... என்னை நீ மன்னிச்சுட்டது உண்மைனா நீ கட்டாயம் வரணும்.... இல்லேனா நான் அந்த வீட்டுக்கே போக மாட்டேன்” என்றான்.

“போறும் டா, பைத்தியம் மாதிரி எதையானும் பேசாதே.... கிளம்பு போலாம்” என்று அதட்டி எழுந்தான்.
“அனி ப்ளிஸ் கொஞ்சம் பாத்துக்கோ..... நான் ஒன் அவர்ல வந்துடறேன்” என்றான். அவளும் சந்தோஷமாக தலை ஆட்டினாள்.
“தாங்க்ஸ் அனிதா” என்றான் அவளிடம் தினேஷ்
“யு ஆர் வெல்கம்” என்றாள் இப்போது புன்னகைத்தபடி.

இருவரும் மெல்ல பேசியபடியே ஆபிசிலிருந்து நடந்தே பெற்றோர் இருக்கும் காட்டேஜை அடைந்தனர். வழியிலேயே தினேஷ் கேட்டான்
“ஏன் அண்ணா, அனிதா...” என்று
“அவளுக்கு என்ன?” என்றான் கிருஷ்.
“இல்லை உனக்கும் அவங்களுக்கும் ஏதானும்....” என்று நிறுத்தினான்.
“நான் அதிகப்ரசங்கமா பேசறதா நினைச்சா மன்னிச்சுடு” என்றான் பயந்து போய்.
“அது... ஆமா... எனக்கு.... அனிதாவ பிடிச்சிருக்கு அவளுக்கும் என்னை பிடிச்சிருக்கு” என்றான் தடுமாறி.
“ஓஹோ அப்போ அதனால்தான் என்னை கண்ணாலையே எரிச்சாங்களா அண்ணி?” என்று சிரித்தான்.
“அப்படியா என்ன” என்றான் கிருஷ்.
“ஆமாண்ணா, நான் உன்னை பார்க்கணும்னு கேட்டப்போ இன்னும் என்ன திட்டப்போறேங்கறா மாதிரி முறைச்சுப் பார்த்தாங்க அண்ணி” என்றான்.

அவன் அண்ணி என்று கூறியது கேட்டு கிருஷ் லேசாக சிவந்தான்.
“போடா” என்றான் அதை மறைத்தபடி. தினேஷுக்கு மகிழ்ச்சியானது.
“உனக்கு ஏத்தவங்கதான் அண்ணா..... அவங்க ரொம்ப நல்லவங்க.... எனக்கு எப்போதுமே அவங்க மேல நல்ல எண்ணம் மதிப்பு.... அப்பம்மாக்கு தெரியுமா அண்ணா?” என்றான்.
“டேய் டேய் சும்மா இருக்கமாட்டியா..... பேசாம வாடா.... கலகம் பண்ணாதே..... பொறுமையா நானே சொல்லிக்கிறேன்” என்றான்.

அப்போதே காட்டேஜை அடைந்தனர். தினேஷை கண்டு முகம் திருப்பிக்கொண்டார் திலீப். மதுவுக்கு வயிற்றில் புளியை கரைத்தது. ‘இன்னமும் என்ன வைத்திருக்கிறானோ’ என்று.
“அம்மா அப்பா, என்னை மன்னிச்சுடுங்க திருந்தீட்டேன்.... அண்ணனிடமும் மன்னிப்பு கேட்டுட்டேன்” என்று காலில் விழுந்தான்.
க்ருஷை பார்க்க ஆம் என்பது போல தலை அசைத்தான். சில நிமிடங்கள் தான் செய்த தப்பை எல்லாம் தந்தையிடம் கூறி மன்னிப்பு கேட்டுக்கொண்டான். பிசினஸ் நிலவரம் கூறி அவரின் உடனடி உதவியை நாடினான். எப்போதும் போல அவரும் அண்ணணுமே இதை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தான்.

சுதா முகமும் இதைக் கேட்டு மாறியது. கொஞ்சமாக புன்னகைத்தாள்.
கொஞ்சம் சகஜ நிலைமை வந்தது. எல்லோருமாக  பேசிக்கொண்டு இருக்க
“சரி நான் ஆபிஸ் போகணும்.... நீங்க எல்லாரும் பேசிகிட்டு இருங்க” என்று கிளம்பினான்.
“கண்ணா அதுதான் எல்லாம் சரி ஆயிடுச்சே.... வீட்டுக்கு வாயேன்பா?” என்று கூப்பிட்டார் மது.
“வரேன் மா.... வார இறுதிகள் அங்கே வந்து இருக்கேன்..... மற்ற நாட்களில் இங்கேயே எனக்கு சௌகர்யமாக இருக்கிறது” என்று கூறி மழுப்பினான்.

“அப்படீன்னா அண்ணா, நீ என்னை மன்னிக்கலை அதானே உண்மை..... உன் மன்னிப்பை பெற நான் என்ன செய்யணும்னு சொல்லு அண்ணா... செய்யறேன்” என்றான் தினேஷ்.
“டேய் அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை..... நீ சொன்னதிலேயும் ஒன்றும் தப்பு இல்லையேடா” என்றான்.
“ஓஹோ அப்போ அவன் சொன்னது மட்டும்தான் பெரிசா போச்சா.... நாங்க எடுத்தது வளர்த்தது பாசத்தை கொட்டியது எதுவுமே முக்கியம் இல்லையா கண்ணா?” என்று கேட்டாள் மது.
“ஐயோ ஏன்மா இப்படி எல்லாம் பேசறே.... நான் வரேன்.... நான் அப்படி எல்லாம் நினைக்கலை..... இன்னிக்கே வரேன்.... நீங்க முன்னாடி போறதுன்னா போங்க.... நான் வேலை முடிந்து பின்னோடு வருகிறேன்” என்றான்.
“நிச்சியம வருவே இல்லை அண்ணா?” என்றாள் சுதா
“வருவேண்டா நான் சொன்ன சொல் மாறமாட்டேன்னு தெரியும்தானே டா செல்லம்” என்று அவள் தலையை வருடி கொடுத்தான்.
“சரி இரவு பார்க்கலாம்” என்று கிளம்பி ஆபிஸ் சென்றான்.

அனிதா அங்கே ஆவலாகக் காத்திருக்க,  “என்ன அங்க எப்படி போச்சுன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கா.... எல்லாம் பைன் டா.... தாங்க்ஸ் பார் பீயிங் தேர் பார் மீ ஆல்வேஸ்” என்றான் அவள் கையில் முத்தமிட்டபடி. அவள் தலை கவிழ்ந்தாள்.

“உனக்கொண்ணு தெரியுமா... இந்த தினா ரொம்ப விவகாரமான பையன்” என்றான்.
“ஏன் என்ன” என்று பார்க்க
“நம்மளை பற்றி தெரிஞ்சுகிட்டான்... கண்டு பிடிச்சுட்டான்.... அதான் அண்ணி என்னை அப்படி எரிக்கற மாதிரி பார்தாங்களான்னு சிரிக்கறான் பயல்” என்று சிரித்தான்.
‘அண்ணி’ என்ற சொல்லை கேட்டு அவளுக்கும் வெட்கம் கூடியது. முகம் சிவந்து பேசாமல் தன் சீட்டிற்கு போய் அமர்ந்துவிட்டாள். அவளின் சிவந்த முகத்தை ரசனையோடு கண்டிருந்தான் கிருஷ்.
“இன்று இரவு நான் வீட்டிற்குப் போறேன் அனி” என்றான்.
“ஒ குட். பாவம் உங்க பேரெண்ட்ஸ், தவிச்சுப் போயிட்டாங்க” என்றாள்.
“ஆம் அவர்களுக்காகத்தான் போறேன் நானும்” என்றான் ஒரு பெருமூச்சோடு.
அவள் முகம் கண்டு அவளை சீண்டத் தோன்றியது க்ரிஷிற்கு.

“ஆமா இந்த அண்ணனொடு சேர்ந்து இந்த அண்ணியும் எப்போது அந்த வீட்டிற்கு வருவாங்க?” என்று கேட்டான் கண் சிமிட்டியபடி.
“இந்த அண்ணல் கூறும்போது” என்றாள் அவளும் சிவந்தபடி.
அதைக்கேட்டு உல்லாசமாக நகைத்தான் கிருஷ். பல நாட்களுக்குப்பின் அவனின் அந்த மந்தகாசச் சிரிப்பைக் கண்டு மனம் நிறைந்தது அனிதாவிற்கு. சொக்கிப் போனாள்.
“ம்ம்?” என்றான் என்ன என்று கண்ணால் வினவியபடி.
“ம்ஹூம் ஒன்றுமில்லை” என்றாள் அவளும் தலை கவிழ்ந்தபடி.

சொன்னபடி கட்டாயம் வந்துவிடுவான் கண்ணன் என்று நம்பி மற்றவர் முன்னே கிளம்பினர். வீட்டை அடைந்து வீடு இருக்கும் நிலை கண்டு மனம் வெதும்பி சரி இத்தோடு போனதே என்று அதை சீராக்கும் பணியை பார்த்தனர் சுதாவும் மதுவும். சமையல்காரருக்குச் சொல்லி அனைவருக்கும் பிரியமான உணவை தயார் செய்யச் சொன்னாள் மது. கூடவே சென்று பக்குவம் பார்த்துக்கொண்டாள்.
மாலை மயங்கிய நேரத்தில் கிருஷ்  வந்து சேர்ந்தான்.

“வாடா கண்ணா” என்று ஆசையாக அழைத்தாள் மது.
“வா அண்ணா” என்று முன் சென்று அவன் கைகளை பிடித்து அன்போடு உள்ளே அழைத்து வந்து அமர்த்தினான் தினா.
“பிரெஷ் ஆகீட்டு வரியா கண்ணா, சாப்பிடலாம்” என்று கேட்டாள் மது. அவனும் தனது பழைய அறைக்கே சென்று கை கால் கழுவி வந்து அமர்ந்தான். அனைவரும் முன் போல பேசி சிரித்தபடி மகிழ்ச்சியாக உண்டனர்.

அதன்பின் வந்து அமர்ந்து பேச ஆரம்பித்தான் கிருஷ் .
“அப்பா, இப்போ எனக்கிருக்கிற வேலையே தலைக்குமேல இருக்கு..... இந்த ஒரு மாதத்துல ஆபிஸ் நடப்பு எல்லாம் தினாவுக்கு நல்ல பழக்கம் ஆயிடுச்சு.... நீங்க கூடவே இருந்து கைட் பண்ணினா அவன் சீக்கிரமே கற்றுக்கொள்வான்னு எனக்கு நம்பிக்கை இருக்குப்பா. ...நீங்க என்ன சொல்றீங்க..... இப்போ பார்ப்பது போல அவனே தொடர்ந்து பார்த்துக்கொள்ளட்டுமே?” என்றான்.

“ஐயோ அண்ணா, வேண்டாம் இந்த விஷப் பரீட்சை...  எனக்கு அங்கே தலையும் புரியலை வாலும் புரியலை” என்றான் பயந்து போய். “சரிதான் டா, எனக்கு எல்லாம் தெரியும்..... நீ செஞ்சவரைக்கும் சரியாத்தான் செஞ்சே.... உன் உருப்படாத நண்பர்கள் சேர்கை விட்டு ஒழிஞ்ச பின்னாடி நீ செய்தது எல்லாம் நல்ல முடிவுகள் உருப்படியான வேலைகள்” என்றான்.

“அண்ணா!!”  என்றான் ஆச்சர்யமாக.
“ஆமாம் நானும் அப்பாவும் நீ தினப்படி செய்யும் வேலைகள் பொறுப்புகளை அவ்வப்போது கண்காணிச்சுட்டுதான் இருந்தோம்... உன்னால என்ன முடியும்னு எங்களுக்கு இப்போ நல்லாவே புரிஞ்சுபோச்சு.... அதனால்தான் நான் இந்த முடிவுக்கு வந்தேன்.... எத்தனை நாள்தான் நானும் அப்பாவுமே எல்லாவற்றையும் பார்க்கறது..... கற்றுக்க..... என்னிக்கிருந்தாலும் நீ அங்க வரத்தானே வேணும்” என்றான் திண்ணமாக.

தினாவுக்குமே அந்த ஆர்வம் இப்போது வந்திருந்தது, ஆயினும் தனியாக என்றபோது பயந்து ஒதுங்கிவிட்டான் .
“ஆனா என்னால அசலே ஒரு நல்ல டீல் பாழா போயிடுச்சே...” என்று முனகினான். “அதனால நிறைய லாஸ்” என்றான்.


2 comments: