Thursday 4 October 2018

ENGIRUNDHO VANDHAAN - 14 - FINAL EPISODE


அனிதா மணப்பெண் அலங்காரத்தில் அழகுச் சிலையாக நடந்து வந்தாள். அவளையே வைத்த விழி மாறாமAல்  பார்த்திருந்தான் கிருஷ். அவனை ஓரக்கண்ணால் அவளும் கண்டாள். அவன் பார்வை கண்டு சிவந்தாள்.
“ஹேய் ஹனி”  என்றான் அருகே அமர்ந்தவளைக் கண்டு. “யு லுக் ஆசம் அனி” என்றான் குழைந்தபடி.
“யு லுக் ஹேண்ட்சம் டூ” என்றாள், மேலும் சிவந்து.

மாலை வரவேற்பு தடபுடல் பட்டது. நகரத்தின் பெரும் புள்ளிகள் அனைவரும் அங்கே இருந்தனர். அவர்களின் குடும்ப நிலை நிஜத்தில் அப்போதே அறிந்து திணறிப் போனார் சுப்பிரமணியம்.
அழகு மயிலாக அன்ன நடையில் ஒயிலாக வந்தாள் அனிதா. க்ருஷின் சூட்டிற்கு மாட்சாக புடவை நார்த் இந்தியா ஸ்டைலில் அணிந்து அவனருகே வந்து நின்றாள்.

வரவேற்பு மும்மரமாக நடந்துகொண்டிருக்க இரு கண்கள் மட்டும் அனிதாவை அன்றி வேறே ஒரு அழகிய பொன் மயிலைக் கண்டு பார்வையால் தொடர்ந்தது சொக்கிப்போனது. அதுதான் சுந்தரின் கண்கள். அவனை அவன் மனதை கொள்ளைகொண்ட தேவதை வேறு யாருமல்ல சுதாதான். அவனின் பார்வையை அறிந்தாள் தான்.
‘என்ன இவன் இப்படி பார்த்து வைக்கிறானே?’ என்று கூச்சம் ஏற்பட்டது. அண்ணனின் மைத்துனன் என்று பேசாமலிருந்தாள். மாலை வரவேற்பிலும் அவன் பார்வை அவளைத் தொடர அவளுக்கு கொஞ்சம் வெட்கம் கொஞ்சம் அச்சம் கொஞ்சம் வியப்பு எனத் தோன்றியது.

சரியான நேரம் பார்திருந்தவன் அவள் ஒரு வேலையாக மணப்பெண் அறைக்கு சென்று வெளியே வர, அவளை நிறுத்தினான்.
“ஹை சுதா” என்றான்.
“ஹை” என்றாள் சுதா படபடப்பாக இருந்தது அவளுக்கு.
“நான் ஒண்ணு கேட்கலாமா?” என்றாள் துணிவுடன்
உடனே மகிழ்ந்து “ஷ்யூர்” என்றான் சுந்தர்.
“ஏன் காலையிலையும் இப்போதும் கூட என்னையே பார்த்துகிட்டு இருக்கீங்க..... எனக்கு என்னமோ மாதிரி இருக்கு சங்கடமா” என்றாள் அவனை காணாது.
“ஒ, ஐ ஆம் சாரி.... உன் அழகு என்னை சொக்க வெச்சுது..... உன்னையே பார்த்திருக்க என் மனம் ஆசை கொண்டது..... என் மனசு என் சொல்பேச்சு கேட்க மாட்டேங்குது..... அது உன்னை துன்பப் படுத்தி இருந்தால் மன்னித்துக்கொள்.... இனி அப்படி நடக்காது” என்று சென்றுவிட்டான்.

சுதாவிற்கோ மனம் துவண்டது ‘என்ன இவன் இப்படி சொல்லிவிட்டு உடனே சென்றுவிட்டானே..... என்னதான் நடக்கிறது... உண்மையில் அவன் என்ன பேச வந்தான்’ என்று இப்போது அவள் உள்ளம் பரபரத்தது. அவன் அப்படி சட்டென்று கண்ணியமாக மன்னிப்புடன் விலகியது அவள் மனதில் அவனைப் பற்றிய நல்லதொரு எண்ணத்தை வளர்த்திருந்தது. மற்ற பொருட்களை எடுத்துக்கொண்டு மீண்டும் சென்றவள் அவனை கண்டு நின்றாள். அவன் அவளை காணவில்லை இப்போது.

“ப்ளிஸ் கொஞ்சம் உதவறீங்களா?” என்று இவளே சென்று கேட்டாள்.
“ஷ்யூர்” என்று அவள் முகம் காணாமல் அவளிடம் இருந்த பொருட்களை வாங்கிக்கொண்டு கூடவே நடந்தான்.
“ஐ ஆம் சாரி, உங்களை புண்படுத்த நினைத்து நான் அப்படிப் பேசலை.... நீங்க என்னவோ சொல்ல வந்தீங்களே... என்னதது?” என்று கேட்டாள் துணிச்சலுடன்.
“அது எதுக்கு இப்போ” என்றான் துவண்ட குரலில்.
“இல்லை சொல்லுங்களேன் ப்ளிஸ்” என்றாள்.
“அது ஒண்ணுமில்லை” என்றான். பின் கொஞ்சம் துணிவுடன் அவள் மலர் முகம் கண்டு
“சுதா.... நீ.. உன்னை... உங்களை...” என்று தடுமாறினான்.
“சொல்லுங்க” என்று ஊக்கினாள்.
“இல்லை நீங்க எப்படி எடுத்துப்பீங்களோன்னு...” என்று தயங்கினான். “உங்களை எனக்கு ரொம்பவே பிடிச்சுபோச்சு..... அனிதா உங்களைப் பற்றி நிறைய சொன்னாள்.... அப்போதே உங்களை சந்திக்க ஆவல் இருந்தது..... இந்த சில நாட்களில் நாம நிறைய பார்த்துகிட்டோம்..... உங்க நடை உடை பாவனை பண்பு அன்பு நற்குணம் எல்லாம் என்னை மிகவும் கவர்ந்திடுச்சு.... அது இப்போது காதலா மாறிடுச்சு” என்று நிறுத்தினான்.

“அதற்குமேல் கேட்க முடியாமல் வெட்கம் சூழ சிவந்து தலை குனிந்து மெல்ல நடக்கத் துவங்கினாள் சுதா.
“என்ன சுதா நான் ஏதானும் தவறா..?” என்று இழுத்தான்.
‘இல்லை’ என்று மட்டும் தலை அசைத்தாள்.

“அப்போ உனக்கும்..?” என்று கேட்டு நிறுத்தினான்.
“சுந்தர்..  காதல்னு நான் பொய் சொல்ல மாட்டேன்...ஆனா நான் கண்டவரை அண்ணா மூலமா கேள்விப்பட்டவரை நீங்களும் நல்லவர் தான் பண்பானவர்..... என்னிடம் மன்னிப்பு கேட்டு உடனே கண்ணியமாக விலகினீர்கள்..... இவை எல்லாம் உங்களிடம் எனக்கும் பிடித்துதான் உள்ளது.... காதலா என்றால் அதற்கு இன்னமும் எனக்கு விடை சொல்லத் தெரியலை.... ஆனா பிடிச்சிருக்கு” என்றுவிட்டு ஒரே ஓட்டமாய் உள்ளே ஓடிவிட்டாள்.

ஆச்சர்யத்துடன் மகிழ்ச்சியுடனும் பிரமித்து நின்றான் சுந்தர். மனம் உல்லாசமாக விசில் அடித்தது.
“என்னா மாம்ஸ் ஒரே சந்தோசம்?” என்றபடி வந்தான் தினா.
“அது ஒண்ணுமில்லையே” என்று சமாளித்தான் சுந்தர்.
“என்ன இந்த கல்யாணத்துல உங்களுக்கு எதாச்சும் மாட்டிகிச்சா?” என்றான் கண் அடித்து.
“ஐயோ தினா, சும்மா இருங்க மச்சான்” என்றான்
“மச்சானா அப்போ....” என்றான்.
“ஐயோ நான் ஒரு பேச்சுக்கு தான்..” என்று சமாளித்தான் சுந்தர்.
“சரி சரி” என்று ஒரு மார்கமாக சிரித்தபடி சென்றுவிட்டான் தினா.
‘அடக்கடவுளே, இவனிடம் இப்படி மாட்டிக்கொண்டேனே’ என்று பயந்தான் சுந்தர்.

“அண்ணி எனக்குதான் கொடுப்பினை இல்லை.... உங்களுக்கு தங்கை இல்லாம போச்சு ஆனா உங்களுக்கு ஒரு அண்ணன் இருக்காரே...” என்று இழுத்தான் தினா.
“ஆமா அதுக்கு...?” என்றாள் இன்னமும் புது மணப்பெண்ணின் வெட்கத்துடன் தலை குனிந்தபடியே.
“இல்ல சும்மாதான்.... சுந்தர் அங்க.... இங்கேயும்.....” என்றுவிட்டு நடந்துவிட்டான். அனிதா ஒன்றும் புரியாமல் கிருஷ்ணனைப் பார்த்தாள். அவனும் சிந்தனையில் இருந்தான்.

அத்யாயம் இருபத்தி இரண்டு

வரவேற்பு முடிந்து அடுத்த நாள் மறுவீடு சென்றனர். அவள் வீட்டிற்குச் செல்லும்போது சுதாவையும் கூட அனுப்பி வைத்தனர் பழக்கம் போல. அங்கே சுந்தருக்கு ஒரே உல்லாசம் உற்சாகம். கண்ணால் பேசிக்கொண்டே தங்கள் காதலை வளர்த்தனர் அந்த இளம் ஜோடிகள். சில நேரம் அது அனிதா கிருஷ் கண்ணிலும் மாட்டியது. நடப்பது நல்லதாக இருக்கட்டும் என்று  எண்ணிக்கொண்டனர். 
க்ருக்ஷிற்கு அனிதாவிடம் கொஞ்சவே நேரம் போதவில்லை.... ஆயினும் தங்கை உடன் இருக்கிறாள் என்று அவன் அடக்கி வாசித்தான். தனிமையில் சந்திக்கும் நேரங்களில் அவனின் சீண்டல்களும் சில்மிஷங்களும் அவளை சிவக்க வைத்தன.
“ஆனாலும் மோசம்” என்று சிணுங்கினாள் அனிதா.
“என்னவாம், என்னமோ இந்நிக்கிதான் முதன் முதலா பார்க்கிரா மாதிரி வெக்கம்” என்று கண் சிமிட்டினான்.
“ஆனாலும் நீங்க ரொம்ப வம்பு பண்றீங்க கிருஷ்” என்று புகார் கூறினாள்.
“இவ்வளவு அழகா புது பெண்டாட்டிய பக்கத்துல வெச்சுகிட்டு வம்பு பண்ணலைனா தாண்டி தப்பு” என்றான்.
“சி போ உங்களோட பேச என்னால முடியாது.... அது போகட்டும், சுதாவும் சுந்தரும் விரும்பறாங்க போலிருக்கே கிருஷ்” என்றாள் சிறிது தயக்கத்துடன்.
“ஆமாம் அனி, எனக்கும் பார்த்தா அப்படிதான் தோணுது... பார்க்கலாம் அவங்களா சொல்லிக்கிட்டு வந்தாத்தானே மேற்கொண்டு நாம ஸ்டப் எடுக்க முடியும் டா” என்றான்.

மருதமலை கோவிலுக்கு செல்லும்படி கூறினார்கள் பெரியோர். சரி என புதுமண தம்பதிகள் கூடவெ சுந்தரும் சுதாவும் சென்றனர். மலைமேல் முருகன் அழகு சிரிப்புடன் தரிசனம் தந்திருந்தான். மனம் உருகி தெய்வத்தை கண்டுவிட்டு வெளியே வந்தனர் நால்வரும். சிலுசிலுவென  குளிர் காற்று வீச சிரித்து பேசியபடி படி இறங்கினர். அப்போது அனிதாவின் கையைப் பற்றி  நிறுத்தினான் கிருஷ். என்ன என்பது போல அவனை ஏறிட்டாள்.

“கொஞ்சம் விட்டு நடப்போம்.... இவங்க சங்கதி என்னனு புரிஞ்சுடும்” என்றான் சரி என்றாள் சிரித்தபடி. அதன்படி இழைந்தபடி பேசிக்கொண்டே இவர்கள் மெல்ல இறங்க அதை கூட அறியாமல் சுந்தரும் சுதாவும் ஏதோ சிரித்து பேசியபடி முன்னே இறங்கி விட்டிருந்தனர். நடுவில் திரும்பிப் பார்க்க இவர்களை காணாது ஒரு மர நிழலில் திண்டில் அமர்ந்தனர் சுதாவும் சுந்தரும். அப்போதும் அவர்கள் உலகத்தில்  மெய் மறந்திருந்தனர்.

அவர்களை அடைந்த அனிதா கிருஷ்
“என்ன எங்களுக்கு கூட காத்திருக்காம முக்கியமா ஏதோ பேச்சு நடக்குது போல” என்றான் கிருஷ்.
“இல்லே அண்ணா அப்படி ஒண்ணும் இல்லை” என்று பதறி போனாள் சுதா. சுந்தர் என்ன சொல்வது பிடிபட்டோமே என்று தடுமாறினான்.
“ஹே நான் சும்மா கிண்டலுக்காக சொன்னேன், வாங்க போகலாம்” என்று முன்னே சென்றான்.
கீழே சென்று நால்வரும் வண்டியில் ஏறி வீட்டை அடைந்தனர். அன்று ஊர் திரும்ப வேண்டும்.
சுதா முகத்தில் அந்த ஏக்கம் தெரிந்தது. “என்னடா அதான் தினமும் மொபைலில் பேசிக்கொள்வோமே.... தைரியமாக போ.... நான் கூடிய சீக்கிரம் நம்ம திருமணத்திற்கு ஏற்பாடு செய்யறேன்.... பார்க்கணும்னு தோணிச்சுன்னா  மெசேஜ் குடு... ஊட்டியிலிருந்து கேத்தி என்ன பெரிய தூரம்.... ஓடி வந்துடுவேன்” என்று அவளை யாரும் அறியாமல் தேற்றினான் சுந்தர். சரி என்று அரை மனதாய் சென்றாள் சுதா.

தங்கள் வீடு சென்று அடைந்து கலகலப்பு மீண்டது. சுதாவும் அனிதாவும் மிகவும் நெருங்கி விட்டனர். பல நாள் தோழிகள் போல திரிந்தனர். “அண்ணி உங்க அண்ணன்...” என்று எப்போதும் என்ன பேச்சு பேசி இருந்தபோதும் சுந்தரைப் பற்றிய பேச்சிலேயே வந்து நின்றது அவளின் கேள்விகள். அதனை அறிந்த அனிதாவும் சுந்தரைப் பற்றி பலதும்  கூறினாள். அதை கண்களில் ஒரு ஆவலுடன் சற்றே முக சிவப்புடன் கேட்டு மெய் மறந்தாள் சுதா.

இவை அனைத்தையும் கண்டு அனிதா ஒரு நாள் துணிந்து தனிமையில்
“ஏன் சுதா நான் ஒண்ணு கேட்கலாமா?” என்றாள்.
“கேளுங்க அண்ணி, என்ன தயக்கம்” என்றாள் சுதா.
“நீ எங்க அண்ணனை விரும்பறியா சுதா?” என்று நேரே கேட்டாள். அந்தக் கேள்வியில் திக்குமுக்காடி போன சுதா உடனே சுதாரித்துக்கொண்டாள். ஆனால் மௌனமாகவே இருந்தாள்.
“சொன்னால்தானே சுதா” என்று கிண்ட
“ஆம் அண்ணி, ஆனா பெரியோர்கள் என்ன சொல்வார்களோ என்று பயம்..... உங்க அண்ணா சீக்கிரமே ஏதானும் ஏற்பாடு செய்வதாக கூறினார் அண்ணி..... நான் உங்க கிட்டயும் என் அண்ணன்கிட்டயும் எப்போதோ சொல்லணும்னுதான்... ஆனா ஒரு பக்கம் வெட்கம் இன்னொரு பக்கம் பயம் அதான்... தப்பா எடுத்துக்காதீங்க அண்ணி” என்று அவள் மடியில் தலை கவிழ்ந்தாள்.

அன்புடன் அவள் தலை வருடி “ம்ம்ம் ஆனாலும் நீ ஆளு உள்ளுக்குள்ள..... உன்னை நான் குழந்தைன்னு நினச்சேன்” என்றாள் சிரித்துக்கொண்டே.
“சரி என்கிட்டே சொல்லிட்டே இல்ல, நான் உங்க அண்ணாகிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணறேன்” என்றாள்.
உடனே மலர்ந்து “தாங்க்ஸ் அண்ணி” என்றாள் சுதா.

அன்று மாலை கிருஷ் வேலை முடிந்து வந்ததும் அனிதா அவனிடம் இந்த விஷயம் பற்றி கூறினாள்.
“ம்ம்ம் ஒரு வழியா வாய் திறந்தாளாக்கும்” என்று சிரித்துக்கொண்டான்.
“சரி நான் அப்பாகிட்ட பேசறேன்” என்றான்.
பெற்றோரிடம் பேச திலீபோ அதெப்பிடிபா கண்ணா, பொண்ணு குடுத்து பொண்ணு எடுத்துன்னு அவங்க வீட்டுல ஒத்துக்கணுமே....” என்று தயங்கினார்.
“அப்பா நானாச்சு, எங்க மாமனார் கிட்ட பேசி ஒத்துக்க வைக்கிறேன் பா..... என்கிட்டே விட்டுடுங்க” என்று தைர்யம் கூறினான்.

அதன்படி அந்த வார இறுதியில் அனிதாவின் தாய் வீடு சென்று அவள் தந்தையிடம் உறவாடியபடி அது இது என்று சுற்றி வளைத்து
“சுந்தரின் கல்யாண விஷயமா என்ன முடிவு பண்ணி இருக்கீங்க அங்கிள்?” என்று கேட்டான்.
“நான் என்னத்த முடிவு பண்ண மாப்பிள்ள, அதான் இந்த காலத்து இள வட்டங்கள் தாங்களே முடிவு செய்துக்கறீங்களே” என்று இவனைப் பார்த்து சிரித்தார்.
அவனும் சிரித்துவிட்டு “அப்போ சுந்தர் கிட்ட கேட்டீங்களா.... அவனுக்கு யாரையானும் பிடிக்குதான்னு?” என்றான்.
“தெரியல, பையன் என்னமோ என்னைக்கண்டா நேரா நின்னு பேசாம பம்மறான்... ஏதோ விஷயம் இருக்குன்னு தோணுது.... ஆனா வாய் திறக்கல இன்னும்.... நீங்கதான் ஒற்ற  வயதாச்சே, பேசிப்பாருங்களேன்..... சீக்கிரமா இவனுக்கு முடிச்சு போட்டுட்டா நான் நிம்மதியா இருப்பேன். தாயில்லா பிள்ளைங்க பாருங்க.... உங்களைப்போல உசத்தியான மாப்பிள்ளை கிடைத்தாற்போல நல்ல மருமகளாகவும் கிடைச்சிட்டா ரொம்பவே நல்லது” என்றார்.

“சரி நான் பேசறேன், ஆனா இது சம்பந்தமா நான் ஒரு விஷயம் உங்ககிட்ட....” என்று தயங்கினான்.
“என்ன மாப்பிள்ள தயக்கம், பட்டுன்னு சொல்லுங்க” என்றார்.
“இல்ல சுதாவுக்கும் திருமண வயசாயிடுச்சு..... டிகிரி முடிச்சுட்டா..... அவளுக்கும் நாங்க சம்பந்தம் பார்க்க ஆரம்பிக்கணும்....”
ஆமா அதத அந்தந்த வயசுல செய்துடணுமே” என்றார் அவர்.
“அதான்... நம்ம சுந்தருக்கு சுதவையே பண்ணிகிட்டா நல்லா இருக்கும்னு வீட்டுல எல்லாரும் நினைக்கிறாங்க அங்கிள்” என்றான்.

அவர் ஒரு நிமிடம் ஒன்றும் பேசவில்லை. மௌனமாகவே கழிந்தது.
பின், “நல்ல யோசனைதான், ஆனா சுந்தர்கிட்ட ஒரு முறை கேட்டுட்டு செய்யலாம்.... அவனுக்கும் மனசுல அப்படி இருக்கணுமே மாப்பிள்ள, நாம திணிச்சதா இருக்கக் கூடாது..... அனிதா விஷயத்துல நான் அந்தத் தப்ப தான் பண்ண இருந்தேன்.... நல்ல நேரத்துல உங்க பெற்றோர் வந்து உங்க விஷயத்தச் சொல்லி பெண் கேட்டாங்க..... உங்கள பார்த்ததுமே மனசு நிறைஞ்சு போச்சு, அதான் உடனே ஒத்துகிட்டேன். சுதாவ பொறுத்த மட்டுல நல்ல பொண்ணு.... குடும்பத்துக்கு ஏத்த பொண்ணு நல்லா வளர்த்திருக்காங்க.... சுந்தர் ஒகே னா எனக்கு ஆட்சேபனை இல்லை மாப்பிள்ள” என்றார்.
‘ஹப்பா’ என்று இருந்தது க்ருஷிற்கு.
“சரி அங்கிள், நான் சுந்தர்கிட்ட பேசீட்டு வரேன்” என்று உள்ளே எழுந்து சென்றான்.

சுந்தர் இவனைக் கண்டு “வாங்க மச்சான் எப்போ வந்தீங்க, அனிதா வரலை?” என்று கேட்டான்.
“இல்ல நான் மட்டும்தான், அதுவும் உங்க விஷயம் பேச வந்தேன்... உங்க அப்பாகிட்ட” என்றான்.
சுந்தருக்கு இதயம் வாய்க்கு வந்துவிட்டது.
“அப்பாகிட்ட பேசீட்டீங்களா மச்சான்... என்ன சொன்னாரு?” என்றான் பயந்தபடி.
“உங்க காதல் விஷயம் சொல்லாம, எங்க பெற்றோர் சுதாவ உங்களுக்கு செய்துகுடுக்க நினைக்கறாங்கன்னு சொன்னேன்.... சுதா நல்ல பொண்ணுதான், சுந்தருக்கு அந்த மாதிரி எண்ணம் இருந்தா எனக்கு ஒண்ணும் ஆட்சேபனை இல்லைன்னு சொல்றாரு” என்று சிரித்தான்.

“ஒ தாங்க்ஸ் மச்சான்.... ரொம்ப தாங்க்ஸ்..... எப்படி அவர்கிட்ட பேசறதுனு ரொம்ப பயந்துட்டு இருந்தேன்..... சுளுவாக்கீட்டீங்க.... யு ஆர் சிம்ப்ளி கிரேட் ... இப்போ நான் என்ன பண்ணணும்?” என்று கேட்டான்.
“உங்ககிட்ட பேசீட்டு சொல்றேன்னு சொல்லி உள்ள வந்தேன்... இப்போ ரெண்டு பேருமா போவோம், சுந்தருக்கும் அந்த மாதிரி கொஞ்சம் எண்ணம் இருக்காம், அதனால அவனுக்கும் முழு சம்மதம்னு சொல்றான்னு சொல்றேன்... என்ன சொல்றீங்க?” என்று அவனையே கேட்டான்.

“நான் என்ன சொல்றது மச்சான்.... நீங்க எது செஞ்சாலும் எங்களுக்கு நல்லதா தான் இருக்கும்” என்றான் அவனை அணைத்துக்கொண்டு.
“சரி வாங்க” என்று மீண்டும் அவன் தந்தையிடம் வந்து அப்படியே கூற அவருக்கும் “அட அதுவும் அப்படியா ரொம்ப நல்லாதா போச்சு. சரி மாப்பிள்ள, உங்க பெற்றோர்கிட்ட சொல்லீடுங்க, நல்ல நாள் பார்த்து வந்து நாங்களே தாம்பூலம் மாத்திக்கறோம்.... நீங்களே முன்னால நின்னு இந்த நல்ல கார்யத்தையும் நடத்தீடுங்க” என்றார் நிறைவாக.
“நல்லதுங்க அங்கிள்” என்று விடை பெற்றான்.

அவனுக்கு விடை கொடுத்த சுந்தர் உள்ளே ஓடி சென்று சுதாவை அழைத்தான்
“ஹை செல்லம்ஸ், உங்க அண்ணா பலே ஆள்” என்று எல்லாமும் கூறினான்.
சுதாவிற்கு தன் அண்ணனை நினைத்து பெருமையும் சந்தோஷமும் உண்டானது.
“எங்க கிருஷ் அண்ணா மாதிரி வருமா” என்றாள் கண்கள் கலங்க.
“ஹே எனக்கு உன்னை இப்போவே பார்க்கணும் போல இருக்குதுடா” என்றான்.
“எனக்கும்தான்” என்றாள் அதே குரலில் குழைந்து.
“சரி நாளைக்கு அங்க வர முடியுமான்னு பாக்கறேன் என்ன” என்றான்.
பின்னோடு கிருஷ் வீடு திரும்பி எல்லோரிடமும் இந்த நல்ல விஷயத்தை கூற வீடே மகிழ்ச்சியானது.
“அண்ணா” என்று ஓடி வந்து அவன் கால் பணிந்தாள் சுதா.
“அட என்னடா குட்டி இது... ச்சே தப்பும்மா... நான் உனக்கு செய்யாம யாருக்குடா செய்யப் போறேன்.... அதுலயும் சுந்தர் நல்லவன் வேற” என்றான். அனிதாவிற்கும் இதில் மிக்க மகிழ்ச்சி.

அன்று இரவு மதுவும் திலீப்பும் தங்கள் அறையில் கட்டிலில் அமர்ந்திருக்க, மது ஆழ்ந்த யோசனையில் இருக்கக் கண்டார் திலீப்.
“என்னம்மா, தூங்கல?” என்று கேட்டார். அவரை நிமிர்ந்து பார்த்த மதுவின் கண்கள் பனித்திருந்தன. அவள் முகத்தில் ஒரு பரவசம் ஆனந்தம் குடி கொண்டிருந்தது.
“என்னம்மா?” என்று அருகில் வந்து தன் தோளோடு அணைத்துக்கொண்டார்.
“என்ன புண்ணியம் பண்ணினோமோ, நம்ம கண்ணன் போல பிள்ளையை நாம அடைய..... இப்படி ஒரு பிள்ளை என் வயிற்றில் பிறக்கலையேன்னு தோணுதுங்க” என்று கலங்கினாள்.
“ம்ம் உண்மைதான் மதும்மா..... அவன் ஒரு உத்தமன்.... நீ பழைய  பாட்டு ஒன்று கேட்டிருக்கியா,

‘எங்கிருந்தோ வந்தான்
இடை ஜாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே
என்ன தவம் செய்துவிட்டேன்
கண்ணன் எங்கிருந்தோ வந்தான்’ என்று மெல்ல பாடினார் திலீப்.
“மது அதை மெய் மறந்து கேட்டாள்.

“உண்மைதாங்க எங்கேயோ யாருக்கோ பிறந்து என் மடியில் தவழ்ந்து உங்க தோளில் வளர்ந்து இன்று நம்ம குடும்பத்துக்கே ஆல மர விழுதா நிக்கறான் நம்ம பிள்ளை” என்றாள் நிறைந்த மனதுடன்.

பின்னோடு கல்யாண வேலைகள் தடபுடலாக செய்யப்பட தினாவும் க்ருஷுமாக தங்கள் ஒரே தங்கையின் திருமணத்தை மிக வைபோகமாகவே நடத்தி முடித்தனர்.
இப்போது தினாவும் தங்கள் பிசினசை மிகுந்த உற்சாகத்துடன் தெளிவாக சிந்தித்து பொறுப்புடன் செய்து வந்தான்.
கல்யாணம் முடிந்து எல்லோருமாக குடும்பமாக போட்டோ எடுத்துக்கொள்ள நின்றபோது

“பாத்தீங்களா அண்ணி, இதுக்குதான் கேட்டேன் அன்னிக்கே.... உங்களுக்கு ஒரு தங்கையும் இருந்திருந்தா இந்த நேரத்துக்கு எனக்கும் லைன் கிளியராகி அவங்க கழுத்தில நானும் மூணு முடிச்ச போட்டிருப்பேன்...” என்று அங்கலாய்த்தான்.

எல்லோருமாக சிரித்தனர். மந்தகாசமாக சிரிக்கும் கிரிஷை அண்ணாந்து பார்த்தனர் மதுவும் திலீப்பும். அனிதா உரிமையோடு அவன் இடையை கட்டிக்கொண்டு போஸ் கொடுத்தாள். சுதாவுக்கும் சுந்தருக்கும் கண்கள் பனித்தன. எல்லோர் மனமும் நிறைந்திருந்தது.
முற்றும்



1 comment:

  1. Excellent story, arumaiyaaga irundhadhu. melum idhuponra story edhirpaarkiren...

    ReplyDelete