Wednesday 3 October 2018

ENGIRUNDHO VANDHAAN -13


“தெரியும்” என்றார் திலீப்.
“அப்பா” என்றான் பயந்தபடி.
“எல்லாம் தெரியும், நாசமாக நான் விடலையே...... சம்பந்தப்பட்டவங்களோட பேசிட்டேன்..... அதை நான் நேரடியா கவனிச்சும் குடுத்துட்டேன்..... நல்லபடியாவே நடந்துடுச்சு டீல்” என்றார்.
“ஒ பா! யு ஆர் கிரேட்” என்றான்.
“சரி இப்போ சொல்லு, கண்ணன் சொல்கிற மாதிரி என்னோட வந்து அடங்கி ஒழுங்கா வேலை செய்து கத்துக்கறியா?” என்று கேட்டார். தயக்கத்துடன் சரி என்றான்.
“தட்ஸ் குட்” என்று அவர் எழுந்து படுக்க போனார்.

மது வந்து கண்ணனின் அருகில் அமர்ந்தாள்.
“பாவம் கண்ணா நீ.... வீட்டு சாப்பாடு இல்லாம கவனிப்பு இல்லாம ரொம்ப தவிச்சிருப்பே இல்லையா” என்றாள்.
“அப்படி எல்லாம் ஒண்ணுமில்லைமா.... ஐ ஆம் ஒகே” என்றான்.
“அதானே அங்கே தான் பார்த்து கேட்டு அன்பா கவனிக்க ஆள் இருக்கே” என்றான் தினா கண் சிமிட்டி வேண்டும் என்றே.
“என்னடா சொல்றே?” என்றாள் மது.
‘அடங்குடா’ என்று அவனை கண் காட்டிவிட்டு “இல்லைமா எல்லாருமே நம்ம ஸ்டாப் தானே என்னை சரியாத்தான் கவனிச்சுகிட்டாங்கன்னு சொல்றான்” என்று சமாளித்தான்.
“ஓ” என்றாள் மது. ஆயினும் என்னமோ சந்தேகமாகத் தோன்றியது.


அவளும் எழுந்து தூங்கப்போக சுதா எழுந்து வந்து இரு அண்ணன்களுக்கும் மத்தியில் அமர்ந்தாள்.
“நல்லா நாடகம் ஆடறீங்க ரெண்டு பெரும், ஒழுங்கா சொல்லீடுங்க.... என்ன விஷயம்?” என்று கேட்டாள்.
“என்னதுடா?” என்றான் கிருஷ்.
“அண்ணா சொல்லு யாரு அது?” என்று தீனாவை பார்த்து கேட்டாள்.
“யாரு எது?” என்றான் அவன் தெரியாததுபோல.
“போதுமே, உனக்கு சமாளிக்கத் தெரியாது தினா அண்ணா, சொல்லு” என்றாள்.
‘மாட்டிவிட்டுட்டான்’ என்று அவனை பார்வையால் எரித்தான் கிருஷ்.
“அண்ணாவையே கேளு” என்றான் தினா.
“இப்போ சொல்லப் போறீங்களா இல்லையா?” என்று கத்தினாள். அவசரமாக அவள் வாயை பொத்தினர் இருவரும்.
“சொல்றேன் தாயே கத்தாதே” என்று தினா கூறினான்.
“உனக்கு அண்ணா ஆபிஸ்ல வேலை செய்யறாங்களே அனிதா அவங்களத் தெரியுமா?” என்றான்.
“ஒ ஆமாம் தெரியுமே.... பாத்திருக்கேன்.... சில முறை பேசி இருக்கேன்.... அன்னிக்கி நாங்க அங்க தங்கப் போனப்போ கூட அவங்கதானே வந்து எல்லா உதவியும் செஞ்சாங்க” என்றாள்.
“அதேதான் அவ்வளோ உதவி ஏன் செஞ்சாங்கன்னா....” என்று கிருஷை கண்டுகொண்டே இழுத்தான் தினா.
“ஏன்?” என்றாள் சுதா.

“ஒண்ணுமில்லைம்மா என் செயலாளர் அதான்” என்றான் கிருஷ்.
“இல்லை சுதா, அவங்கதான் நமக்கு வரப்போகிற அண்ணி” என்று போட்டுடைத்தான் தினா.
“என்ன நிஜமாவா!! உண்மையாவா அண்ணா” என்று குதித்தாள்.
“சு சும்மா இருங்க” என்று அடக்கினான் கிருஷ். லேசாக வெட்கத்துடன் தலை சாய்த்துக்கொண்டு வேறே பார்த்தான். அவனின் இந்த வெட்கம் கூச்சம் இவர்களுக்குப் புதுசு.... அவனை வம்புக்கிழுத்து ஏய்த்து விட்டனர் இருவரும்.

“ஐயோ அவங்க எவ்வளோ அழகு.... ஷி இஸ் சோ க்யூட்..... ரொம்ப நல்ல மாதிரி.... எனக்கு எப்போதுமே அவங்கள பிடிக்கும் அண்ணா” என்றாள் சுதா.
“அம்மாப்பாட்ட சொல்லலையா அண்ணா” என்று அவசரப்படுத்தினாள்.
“இல்லைடா நானே சொல்றேன் நேரம் பார்த்து” என்றான் கூச்சத்துடன்.
“நீங்க ரெண்டு பேரும் ரொம்ப டேஞ்சர்..... கொஞ்சம் அடக்கி வாசீங்கடா கண்ணுகளா” என்று வேண்டினான்.
“சரி அப்போ எனக்கு உன் கல்யாணத்துக்கு என்ன வாங்கித் தருவே?” என்று பேரம் பேசினாள் சுதா.
“அடிப்பாவி, இப்போதே டெண்டர் போட்டுட்டா அண்ணா” என்று சிரித்தான் தினா.
இப்படி கலாட்டாவாகப் பேசி அரட்டை அடித்து பல நாள் ஆகி இருந்தது. மூவருக்கும் மனம் நிறைந்தது. தூங்கச் சென்றனர்.

அடுத்த நாள் முதல் தன் தந்தையுடன் சென்று ஒழுங்காக கவனித்து பணிவாக வேலை செய்யத் துவங்கினான் தினா. அதில் வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சியே. இதனால் தன் வேலைகளை முழு கவனத்துடன் செய்தான் கிருஷ். கூடவே தம்பி தங்கை இருவரும் அவனை படுத்திய பாட்டை அனிதாவிடம் கூறி சிரித்துக்கொண்டனர் இருவரும்.
“ஆனாலும் ரெண்டும் ரெண்டு வாலுங்க அனி” என்றான். அவனின் அந்த கூச்சம் கலந்த சிரிப்பு அவள் மனதை கொள்ளைகொண்டது.

அதே நேரம் அவள் வீட்டில் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்திருந்தனர். அதைக்கேட்டு துவண்டு போனாள் அனிதா. அவர்களது போலவே ஆன மிலிடரி குடும்பம். மாப்பிள்ளை ஆர்மியில் மேஜராக இருந்தான். அவளுக்கு அசலே கலக்கம் அப்பாவிடம் எப்படி பேசுவது என்று பயந்து தன் அண்ணனை துணைக்கு அழைத்துக்கொண்டாள். அவனுக்கு கிருஷைத் தெரியும். அவனிடம் தங்கள் காதலை கூறி உதவி கோரினாள்.

அவளின் அண்ணன் சுந்தர் தந்தையிடம் பேசிப் பார்க்க அவரோ ஆர்மி குடும்பம் போல வருமா அது போன்ற குடும்பத்தில்தான் மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்றுவிட்டார். அனிதாவும் சுந்தரும் என்ன செய்வதென தெரியாமல் கலங்கினர்.
தன் கலக்கத்தை க்ருஷிடம் அனிதா கூறி அழுதாள்.

“அட என்ன அனி இது.... இதுக்கு போய் கலங்குவதா..... இரு என்ன செய்வதென்று பாப்போம்” என்று தேற்றினான்.
நேரே சென்று அவளின் தந்தையிடம் அதிரடியாக பேசிப் பார்க்கலாம் என்று கிளம்பினான். அதற்குமுன் தன் வீட்டில் சொல்லி விடுவது நலம் எனக் கருதி தினா மற்றும் சுதாவுடன் புடை சூழ பெற்றோரிடம் பேசத் துணிந்தான்.

“அம்மா அண்ணனுக்கு எப்போம்மா கல்யாணம்?” என்று ஆரம்பித்தாள் சுதா.
“ஆமா டா சீக்கிரமா பண்ணீடணும்... அப்போதான் ரெண்டு வருடம் பொறுத்து சுதாவுக்கு செய்ய சரியா இருக்கும்” என்று கூறினாள் மது. “பொண்ணு பாக்கலாமா மா?” என்றான் தினா.
“என் கண்ணனுக்கு என்னடா குறைச்சல்.... அவனுக்குன்னா நான் நீ னு போட்டிபோட்டுகிட்டு பொண்ணு குடுக்க வருவாங்களே” என்றாள் மது உற்சாகமாக.

“ஏன் கண்ணா உன் மனசுல யாரானும் இருந்தாலும் சொல்லேன்.... அவளையே பேசி முடிச்சிடுவோம்” என்றார் திலீப்.
“அட அதுவும் அப்படியா” என்று மது கண்ணனைப் பார்க்க அவன் கூச்சப்பட்டு பேசாதிருந்தான்.
“அது என்ன னா மா அண்ணனுக்கு ஒரு பெண்ணை பிடிச்சுட்டது.... நாங்க இரண்டு பேரும் கூட எங்களுக்கு வரப் போகிற அண்ணிய பாத்துட்டோம்.... ரொம்பவே பிடிச்சுபோச்சு... இப்போ நீங்கதான் பாக்கி” என்றான் தினா.
“அது யாருடா சொல்லுடா தினா” என்றாள் மது.
“அண்ணா நீயே சொல்லு” என்றான்.
“இல்லைமா... வந்து.. அதான்... என் ஆபிஸ்ல வேலை செய்யறாங்க அனிதான்னு...”  என்று
“அனிதாவா ரொம்ப நல்ல பொண்ணாச்சே.... அழகு அடக்கம் பணிவு சுறுசுறுப்பு இன்னும் நல்ல குடும்பம் வேற.... இன்னும் வேற என்ன வேணும்.... ரொம்ப சந்தோஷம் டா கண்ணா.... அவளையே பேசி முடிச்சுட்டா போச்சு” என்று குதூகலித்தாள் மது.
“நானும் பார்த்திருக்கேன்.... ரொம்ப நல்ல பொண்ணு” என்றார் திலீப்.
“ஹப்பா” என்றிருந்தது கண்ணனுக்கு.

“அவங்க வீட்டில மாப்பிள்ளை பார்க்கறாங்க.... ஆர்மி குடும்பத்து மாப்பிள்ளைதான் வேணும்னு அவங்க அப்பா சொல்றாராம்.... அதான்..” என்று இழுத்தான்.
“ஒ அப்படியா..... அது ஒண்ணும் இல்லை, மிலிடரி குடும்பங்கள்ள அதுபோல ஆசை இருக்கறது சகஜம் தான்.... நாங்க போய் பார்த்து பேசறோம்” என்றார் திலீப்.
“அண்ணன் முதலில் போய் பேசட்டுமே பா” என்றான் தினா. அவன் மனது அறிந்து.
“வேண்டாம் தினா, அது சரி வராது..... நாங்க பொண்ணு கேட்டு போறோம்..... பின்னாடியே இவன் சிறிது நேரத்தில் அங்கு வந்து சேர்ந்து கொள்ளட்டும்” என்றார் திலீப். சரி என்று அனைவரும் ஒப்புக்கொண்டனர்.


அத்யாயம் இருபத்தி ஒன்று

அடுத்த நாள் நல்ல நாள் என்று கிளம்பினர் திலீப் தம்பதி. பிரிகேடியர் சுப்பிரமணியம் வீட்டிற்குச் சென்று அமர்ந்து மெல்ல திருமண பேச்சைத் துடங்கினார். அவருக்கும் இவர்களது குடும்பம் பற்றி நன்றாகவே தெரியும் என்பதால் மரியாதையாகவே பேசினார். அனிதாவும் கிருஷ்ணனும் ஆசைப் படுகின்றனர் என்றதுமே அவர் முகம் சுருங்கியது.
“ஒ அப்படியா, இது எனக்கு சொல்லப்படவில்லை..... எங்க வழக்கப்படி நான் மிலிடரி மாப்பிள்ளைதான் பார்க்கணும்னு இருந்தேன்” என்றார். அவர் முகத்தில் அதிருப்தி அப்பட்டமாக தெரிந்தது.
“அப்படி சொன்னா எப்படிப்பா.... இது அனிதாவின் வாழ்க்கை இல்லையா.... அவ இஷ்டப்பட்டவனுக்கே கட்டி குடுத்துடலாம் பா” என்றான் சுந்தர்.
“இவரும் நல்ல குடும்பம்... நல்ல மாப்பிள்ளை.... தனியே சிறப்பா தொழில் செய்கிறாரு இல்லையாப்பா” என்றான்.
“அதில் ஒண்ணுமே சந்தேகம் இல்லை என்றாலும்...” என்று இழுத்தார். அந்த நேரத்தில் கம்பீரமாக சூட் அணிந்து சிவந்த மேனியும் சுருள் கிராப்பும் மிக கச்சிதமான உடலுமாக ஸ்மார்டாக உள்ளே நுழைந்தான் கிருஷ்ணன். அவனை சுப்பிரமணியம் கண்டதில்லை அதனால் அவனைக் கண்டு பிரமித்தார்.

“எஸ்” என்றார் அவனிடம் யாரென்று வினவி.
“இவன்தான் எங்க பிள்ளை கிருஷ்ணன்” என்றார் திலீப்.
“ஒ அப்படியா இவரா?” என்று ஒரு நிமிடம் மலைத்தார். அவர் கிருஷ்ணனை இவ்வளவு ஸ்மார்டாக எதிர்பார்க்கவில்லை போலும். அவனின் நடையே அவனின் ஆளுமையைச் சொன்னது. அவன் முகத்தில் ஒளிர்ந்த அறிவு களை நிதானம் கனிவு அவருக்கு முழு திருப்தி கொடுத்தது.
“சுந்தர், அனிதாவை கூப்பிட்டு மாப்பிள்ளைக்கு காபி கொண்டு வரச் சொல்லு” என்றார் மறைமுகமாக தன் ஒப்புதலை கூறியபடி.

அனைவருக்குமே ஹப்பா என்று இருந்தது. சுந்தர் போய் நடந்தவற்றை சொல்லவும் அனிதாவிற்கு கொள்ளை சந்தோஷம் உடனே காபியுடன் வெளியே நடந்து வந்தாள். அங்கே க்ருஷ்ணனையும் அவன் பெற்றோரையும் கண்டு ஆனந்தித்தாள். கிருஷ்ணனை ஓரக்கண்ணால் கண்டாள். அவனும் அவளையே பார்த்திருந்தான். கள்ளன் என்று உள்ளுக்குள்ளே சிரித்துக்கொண்டாள். ‘தான் வரப்போவதாக சொல்லவே இல்லையே வந்த  உடனே என் தந்தையை கவர்ந்துவிட்டானே, என் உள்ளம் கவர் கள்வன்’ என்று மயங்கிப்போனாள். அவனிடம் காபியை நீட்டினாள்.

“என்ன மாப்பிள்ளை, இதான் என் பொண்ணு.... நல்லா பார்த்துக்குங்க” என்று சிரித்தார் அவள் தந்தை அவனும் புன்னகைத்தான்.
“நித்தமும் பார்த்துகிட்டேதானே இருக்கிறாங்க” என்று சிரித்தனர் அனைவரும் வெட்கம் மேலிட உள்ளே ஓடிவிட்டாள் அனிதா. நிச்சயத்துக்கு தேதி குறித்துவிட்டு வீட்டை அடைந்தனர்.
“நான் அண்ணிய பார்க்கணும்” என்று அடம் பிடித்தாள் சுதா
“நாளைக்கு என்னோட  ஆபிசிற்கு வா டா.... பார்த்து பேசு” என்று அனுமதி கொடுத்தான் கிருஷ்.

அதன்படி அடுத்த நாள் மாலை ஐந்து மணி வாக்கில் அவனின் ஆபிசை அடைந்தாள் சுதா. அங்கே அனிதாவை கண்டு ‘அண்ணீ’ என்று கட்டிக்கொண்டாள்.
“நீங்க ரொம்ப அழகு அண்ணி” என்று அணைத்து முத்தமிட்டாள். சிவந்து போனாள் அனிதா. இதைக்கண்டு மனம் ஏங்க பார்த்திருந்தான் கிருஷ். அவன் பார்வையை உணர்ந்து மேலும் சிவந்து போனாள் அனிதா. சகஜமாக மிக நெருங்கிய தோழியர் போல பேச துடங்கிவிட்டனர் இருவரும்.
“அதுசரி கொஞ்சம் வேலையும் பார்ப்போமா.... என்னை அம்போன்னு விட்டுட்டு என்ன அரட்டை?” என்றான் கிருஷ்.
“போண்ணா, அண்ணிக்கு இன்னிக்கி இத்தோட வேலை முடிஞ்சுது.... என்னோட தான் டைம் ஸ்பென்ட் பண்ணப் போறாங்க”  என்றாள் சுதா.
“அப்போ நானில்லையா வேண்டாமா” என்றான் வேண்டுமென்றே.
“அப்போ நீயும் வா.... எங்களை அழைத்துக்கொண்டு போய் ஐஸ்க்ரீம் வாங்கிக்கொடு லெட்ஸ் செலிபரேட்” என்றாள் சுதா. அவன் புன்னகைத்துக்கொண்டான்.

அனிதாவிற்கும் ஐஸ்க்ரீம் பிடிக்கும் என்பதால் உடனே ஒப்புக்கொண்டான். அவசர வேலைகள் உள்ளனவா என்று ஒருதரம் சரிபார்த்துவிட்டு மூவரும் கிளம்பினர்.
சுதா காரின் பின் சீட்டில் அமர்ந்து வளவளவென அனிதாவிடம் எதையோ பேசியபடியே வந்தாள். அனிதாவிற்கு அவளின் குழந்தைத்தனம் மிகவும் பிடித்துப்போனது. அவர்கள் இருவரையும் புன்சிரிப்புடன் கண்டபடி வண்டி ஓட்டிச் சென்று ஐஸ்க்ரீம் இடத்தில் நிறுத்தினான் கிருஷ்.

அவரவருக்கு வேண்டியதை ஆர்டர் செய்து வாங்கிக்கொண்டனர். அதை சாப்பிட்டுக் கொண்டே மேலும் அரட்டை அடித்தனர்.
“ம்ம் நடத்துங்க.... எப்போவுமே நான்னா வேறதான்.... நீங்க எல்லாம் ஒண்ணா சேர்ந்துட்டீங்க” என்று குரல் கேட்டு மூவரும் திரும்பினர். தினா நின்று கொண்டிருந்தான் கோபமாக.
“ஐயோ அப்படி இல்லைடா.... சுதா தான் என் ஆபிசிற்கு வந்து எங்களை இங்கே அழைத்து வந்தா... வா டா நீ இல்லாமையா.... உனக்கு என்ன வேணுமோ சொல்லு” என்று அழைத்து அருகில் அமர்த்திக்கொண்டான்.

“நான் எதுக்குப்பா உங்களுக்கு நடுவில உக்கார்ந்து அண்ணியின் கோபப் பார்வைக்கு ஆளாகணும்...... வேண்டவே வேண்டாம்.... நான் சுதா பக்கத்துல ஒக்காந்துக்கறேன்” என்றான் சிரிக்காமல் பாவமாக முகம் வைத்துக்கொண்டு.
“அனிதா தலை குனிந்து சிரித்துக்கொண்டாள்.

“சாரி தினா அன்னிக்கி நான்.....” என்று தடுமாறினாள்.
“பரவாயில்லை அண்ணி” என்றான் அவனும் சிரித்தபடி “நான் சும்மா ஜோக்குக்குதான் சொன்னேன்” என்று அவனும் ஐஸ்க்ரீம் வாங்கிக்கொண்டு வந்து அமர்ந்தான். நால்வருமாக பேசியபடி காலி செய்தனர். பின் கொஞ்சம் பொதுவாக பேசியபடி இருந்தனர்.
“ஏன் அண்ணி உங்களுக்கு தங்கை யாருமில்லையா?” என்று கேட்டான் தினா. எல்லோரும் அவன் ஏன் கேட்கிறான் என்று உணர்ந்து பக்கென சிரித்துவிட்டனர்.
“இல்லையே தினா... சாரி” என்றாள் சிரித்தபடி அனிதா.
“ச்சே மை பாட் லக்” என்றான் பாவமாக முகம் வைத்துக்கொண்டு.
“சரி கிளம்பலாம் வீட்டுல தேடுவாங்க” என்று அனைவரையும் கிளப்பினான் கிருஷ்.

சின்னதாக நிச்சயம் வைத்துவிட்டு முகூர்த்த தேதி குறிக்கப்பட்டது. புடவை நகை மற்றவருக்கு ஜவுளி என்று ஷாப்பிங் நடந்தது. இதன் நடுவே மது திலீப்போடு சென்று அனிதாவின் தந்தையிடம் கிருஷ்ணனைப் பற்றிய உண்மையை கூறி வைத்தனர். பின்னால் எந்த இழி சொல்லும் வரக்கூடாது என்று..... அவருக்கு அது ஒரு பொருட்டாகப் படவில்லை என்பதே ஆறுதல்.

இவர்கள் வீட்டின் முதல் திருமணம் என்பதால் உற்றாரும் சுற்றாரும் கூடி வந்து அமர்க்களமாகக் கல்யாண ஏற்பாடுகள் நடந்தன. காலையில் பங்களாவிலேயே பந்தலிட்டு முகூர்த்தம் நடத்தப்பட்டது. திலீபன், கிருஷ்ணனின் பிசினஸ் ஆட்கள், சொந்தங்கள் பந்தங்கள் நண்பர்கள் என்று அந்த பங்களாவே களை கட்டியது.


4 comments: