Thursday 4 October 2018

Ozhukkam enum nagai anindhu...



வணக்கம்,
நம் அனைவரின் வாழ்விலும் நம் முன்னோர்கள் கற்றுதந்ததோ, நாம் பார்த்து வளர்த்துகொண்டதோ, பல குணநலன்கள் இருப்பதுண்டு.

என் வாழ்விலும் உண்டு. அது என் தந்தை வழி தாத்தாவிட
மிருந்து நான் கற்றுக்கொண்ட ஒழுக்கம். 

ஒழுக்கம் எனும் ஒரு குணம் மட்டுமா என்றால் அல்ல... அவரின் வாழ்க்கையே அனைவரும் பின்பற்றுபடி வாழ்ந்து காட்டி சென்றவர்.

அது, ஒழுக்கமாக வாழ்வதைப் பற்றியது மட்டுமல்ல ஒரு நாளின் ஒவ்வொரு நிகழ்விலும் செயலிலும் அது பிரதிபலிக்கப்பட்ட வேண்டும் என்பதே அவரின் குறிக்கோள்.

அவரின் ஒழுக்கத்தின் சான்றுகள் சில பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

89 வயது வரை அதிகாலை நன்கு மணிக்கு எழுந்து குளித்து தானே தன் உடையை துவைத்து காயவைத்தவர். 5 முதல் 8 மணிவரை தியானம் பாராயணம் என கழித்தவர். அதன் பின்னரே காபியோ சிற்றுண்டியோ.

அந்நியன் வந்து ஆட்சி செய்த காலத்தில் தாசில்தாராக பணி புரிந்தபோது நம் மக்களுக்கு எதிராக ஒரு மசோதாவை அமல் படுத்த கோரி ஆணை வந்தது. 
மறுத்தார். விரோதம் மூண்டது. தன் மக்களின் நல்வாழ்வு, கூடவே, தன் ஒழுக்கத்தை விட்டு நீதிக்கு புறம்பாக எதையுமே செய்ய முடியாது எனும் கொள்கை, இன்னமும் ஐந்து வருட சர்வீஸ் இருந்தும் வலுவில் ஒய்வுபெற்று வெளியே வந்தவர்.

வாழ்வின் சிறு சிறு ஒழுங்கீனங்கள் அவரை எரிச்சல் படுத்தும்.

“எந்த பொருள எந்த எடத்தில வைக்கிறோமோ அது அங்கதான் இருக்கணம் கண்ண மூடிண்டு போய் தொட்டாலும் அந்த பொருள் கையில் அகப்படணம்”... இது இன்னமும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

பத்திரிகை புத்தகங்கள் வாசித்த பின் அது சரியாக மடிக்கப்பட்டு அதற்குண்டான இடத்தில இருக்கும், ஒரு மூலை கூட கசங்கியோ மடிந்தோ காணப்படாது.

உடுத்திய துணி பெட்டியிட்டது இல்லாவிடினும் கூட ஒரு துளி சுருக்கமோ கசங்கலோ இல்லாமல் நீவி விட்டபடி நிற்கும்.

நான்கு மணிக்கு மேல் உறங்கியதும் இல்லை, ஒன்பது மணிக்கு மேல் முழித்திருந்ததும் இல்லை. கதர் மட்டுமே அணிந்தார்
நேரம் தவறாமல் துயில்வதோ எழுவதோ, படிப்பதோ வேலையை பார்ப்பதோ, உண்பதோ அனைத்தும் இருக்க வேண்டும்.

Hindu பேப்பர் தலைப்பிலிருந்து “ப்ரின்டட் பை கஸ்துரி&சன்ஸ் வரை படித்து முடிக்கும் ஒரே ஒருவர் என் தாத்தாவகத்தான் இருப்பார் என எண்ணுகிறேன்.

சமைத்த பண்டம் அரியதாக எத்தனை ருசி மிகுந்ததாக இருப்பினும், அவரின் அளவு அந்த 2 மட்டுமே. பசிக்கு அருந்தியவர். ருசிக்கு அடிமையாகவில்லை.

மாலை நன்கு மணி என்றால் தோட்டத்தில் இருப்பார் என கொள்ளலாம். இருந்த ௨௦ தென்னை மா மரங்களுக்கும் தண்ணீர் ட்யூப் கூட உபயோகிக்காமல் இரண்டு கைகளில் இரண்டு வாளியில் நீர் சுமந்து வார்த்தவர். அவருக்கு உதவ என ட்யூப் வாங்கிவந்து என் தந்தை அவரிடம் வாங்கிகட்டிக்கொண்டது வேறே கதை.

இரவு உணவிற்குப்பின் நீண்டு அகன்றிருந்த வீட்டின் குறுக்கும் நெடுக்குமாக 100 முறை நடந்தபின் தான் உறங்க செல்வார்.

காதும் கண்ணும் புத்தியும் எப்போதும் திறந்திருக்க வேண்டும், சுற்றிலும் நடப்பதை அறிந்திருக்க வேண்டும், புரிந்து நடக்க வேண்டும்.

அவர் காலமாகி இத்தனை ஆண்டுகள் ஆனபின்பும் என்னால் முடிந்தவரை அதேபோன்ற ஒரு ஒழுக்கத்துடன் என் வாழ்க்கையை அமைத்து நடத்திக்கொண்டு வர முயர்ச்சி செய்கிறேன். 

நேரம் தவறாமல் அனைத்து செயல்களையும் கையாள்கிறேன். இன்னமும் துணிமணிகளும் பத்திரிக்கைகளும் மற்ற சாமான்களும் அந்தந்த இடத்தில இருக்கின்றன. ஆனாலும் அவரை போல சாத்தியப்படுமா என்றால் அது ஐயப்பாடுதான்.


No comments:

Post a Comment