Saturday 2 March 2019

UN KANNIL NEER VAZHINDHAL - 9


கற்பகம் குரல் கலங்க மனஸ்வினி பட்ட துன்பங்களை விரிவாக எடுத்து சொல்ல சொல்ல அவன் மனம் உருகி போனது.... கலங்கி போனான்....‘என்ன கொடுமை இது, மனு இவ்வளவு கஷ்டங்களை துன்பங்களை பொறுத்தாளா, எப்படி தாங்கினாள்..... அம்மா சொல்வது சரிதான், சீதையை விட பொறுமை அதிகம் போல.... அத்தனை துன்பங்களையும் தனியே தாங்கி நின்றாளே.... ஐயோ கடவுளே நான் பட்ட துன்பங்கள் இவளது துன்பங்கள் முன்னால் ஒன்றுமே இல்லையே.... நானே இந்த அளவுக்கு கோபம் ஆத்திரம் கசப்பு வெறுப்பு என ஆகி இருக்கேனே, அவள் என்னவாகி இருக்க வேண்டும், ஆனால் அவளோ அமுத சுரபி போல அன்பையே அனைவருக்கும் கொடுக்கிறாளே...... அன்பாலே வசப்படுத்துகிறாளே..... அம்மாவை தான் எவ்வளவு அன்புடன் பார்த்துகொள்கிறாள்.
என்னிடமும் மரியாதையுடன் தான் நடந்துகொண்டாள்..... நாந்தான் என் வாயால் அதை கெடுத்துகொண்டேன்..... நான் பேசக்கூடாத வார்த்தை பேசியதும் தான் அவள் பொங்கி எழுந்தாள்’.
‘ஆனாலும் மெச்சுக்கொள்ள தான் வேண்டும், துணிச்சலுடன் வீட்டை விட்டு கிளம்பி விட்டாளே, தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொண்டு விட்டாளே..... தைர்யம்தான்..... துணிச்சலை பாராட்டியே ஆக வேண்டும்’ என மனதிற்குள் அவளை மேடை ஏற்றி சிம்மாசனத்தில் அமர்த்திவிட்டான்.

கொஞ்சம் கொஞ்சமாக அவள் பால் ஏற்பட்டிருந்த ஈர்ப்பு இப்போது மரியாதை  அன்பு அவள் மீது கவுரவம் என பெருகியது.

‘அவள் என்னாளும் சுகப்படவே இல்லையே பாவம் அல்லவா..... இவ்வளவு சிறிய வயதில் எத்தனை எத்தனை துன்பங்களை சந்தித்துவிட்டாள்..... இனியானும் அவளுக்கு விடியுமா, அதற்கு தன்னால் ஏதானும் செய்ய முடியுமா என பார்க்க வேண்டும்’ என நினைத்துக்கொண்டான்.
நன்றாக படித்தாளாமே, பன்னிரெண்டாம் வகுப்பில் முதலாவதாக தேறினாளாமே, மேலே படிக்கச் விருப்பப்பட்டால் படிக்க வைக்கலாமே, தன்னிடம் வேலைக்கு அமர்த்திக்கொள்வோமா, அம்மாவிற்கு இப்போது பரவயில்லையே, அவள் இவ்வளவு புத்தியுடன் இருப்பவளை இப்படியே வேலைக்காரியாகவா வைத்திருப்பது?’ என பல யோசனைகள் மனதில் தோன்றி மறைந்தன... அவள் வாழ்வு மேம்பட ஏதானும் செய்தே ஆக வேண்டும் என மனம் பரபரத்தது.

இந்த யோசனைகள் அவன் முகத்தில் பற்பல உணர்சிகளை காட்டி மறைந்தது.. அதை கண்ட கற்பகம் “என்னப்பா யோசனை பலமா இருக்கு..... நான் சொன்னத கேட்டு நீ ஒண்ணுமே சொல்லலையே?” என்றார்.

“ஆங் ஆமா அம்மா, நான் ரொம்ப கலங்கிதான் போய்டேன்.... இத்தனை சின்ன வயசில இவ இவ்வளோபா பட்டிருப்பானு நான் நிஜமா நினைக்கலை மா.... அதான் அவளுக்கு ஏதானும் செய்தா நல்லா இருக்கும் என்ன எப்படி செய்யறதுன்னு யோசிக்கறேன் மா” என்றான் உள்ளபடி.

“ரொம்ப நல்லது கண்ணா, நிச்சயமா ஏதானும் செய்யணும்..... அவ அறிவுக்கும் அழகுக்கும் திறமைக்கும் இப்படி அவளை வேலைக்காரி மாதிரி வெச்சுக்க எனக்கு மனம் இடம் கொடுக்கலை.... அதுனாலதான் நல்ல புடவைகளை குடுத்து கட்டிக்க சொன்னேன், என்னோட சரிக்கு சரியா அவள நடத்தறேன்.... இப்போ புரியுதா உன் மேல எனக்கு ஏன் அவ்வளோ கோபம் ஏற்பட்டுதுனு” என்றார். “ம்ம்ம்” என்றான்.

“அதுமட்டுமில்லை, முடிஞ்சா அவளுக்கும் கூட வேறே ஒரு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு எனக்கு கொள்ளை ஆசை.... ஆனா அவ என்ன சொன்னா தெரியுமோ?” என்றார். அந்த விஷயத்தை கேட்க ஆவல் கொண்டு அவன் ஆசையுடன் தன் அன்னையின் முகத்தையே கண்டிருந்தான்.

“ஆண்ட்டி, எனக்கு இனி கல்யாணத்தின் மேல ஆசையே இல்லை, நான் பட்டது வரை போதாதா..... இன்னொரு முறை அந்த நரகத்திற்குள்ளே போக நான் விரும்பலை.... இனி நீங்க இந்த பேச்சை என்கிட்டே எடுத்தா, உங்க கிட்ட சொல்லிக்காமையே நான் வீட்டை விட்டு வெளியேற வேண்டி வரும்னு சொன்னா பா.... அதான் எங்க அவளை இழந்துடுவோமொன்னு நான் அன்னிக்கே வாய மூடிகிட்டேன்..... இந்த விஷயத்தில எல்லாம் நீங்க ரெண்டு பேரும் ஒண்ணு..... உன்னை மாதிரியே அவளும் ரொம்ப அடம் பிடிவாதம்..... ரெண்டுபேரும் ரணபட்டு போயிருக்கீங்க..... உங்களுக்கு என்னிக்கி எப்படி விடியுமோ..... உன்னைப்பற்றி மட்டுமில்லாம இப்போ அவளைப் பற்றியும் நான் கவலைப்படறேன்” என்றார் பெருமூச்சுடன்.

“நீ இரு மா, கவலைப்படாதே.... அவளுக்கு ஏதானும் விதத்தில நல்ல வழி செய்ய முடியுமான்னு பார்க்கலாம்..... உன் மூலமாவே நான் அவகிட்ட நல்லபடி எடுத்து சொல்லி ஒரு நல்வழி பண்ணறேன்” என்றான்.
“அதை செய் முதல்ல..உனக்கு கோடி புண்ணியமா போகும்” என்றார்.
அவன் அப்போது அங்கே மண்டையை ஆட்டினாலும் ‘ஹ்ம்ம் கல்யாணத்தை என்னைபோல வெறுக்கிறாளாமா.... இவ்வளோ மூர்கமா, நான் இருப்பது போலதான் அவளும் இருக்கா. பாவம்’ என்று புழுங்கினான்.

“ஏன்மா, அது போகட்டும் என்னை பத்தி அவ கிட்ட நீ ஒண்ணும்....?” என சந்தேகமாக கேட்டான்.
“சொன்னேன் கீர்த்தி, என் மனசு கேக்கலை, ஒரு நாள் ரொம்ப வருத்தமா இருந்தேன் உன்னை நினைச்சு, அவ என்னாச்சு ஆண்ட்டின்னு ஆதுரமா கேட்டாளா, என்னால அடக்கிக்க முடியலைடா..... சாரி பா” என்றார் மன்னிப்பாக.

“ஹ்ம்ம் சொல்லிட்டீயே இனி என்ன, அது ஒண்ணும் அப்படி பாதுகாக்க வேண்டிய ரகசியமும் இல்லையே, என் வேதனை, என் அவலங்கள் உலகத்துக்கே தெரிய வேணாமேன்னு நினச்சேன், அவ்ளோதான், போனா போறது மா” என்றான் முகம் கசங்க.
‘ஹ்ம்ம் என்னைப்பற்றி தெரிந்ததினால்தான் அந்த கொஞ்ச புன்சிரிப்பும் கூட எட்டி பார்த்ததா கடந்த வாரங்கள்ள.... இது அன்பினால இல்லை பாவம் னு இரக்கப்பட்டு வந்த புன்னகையா...?’ என எண்ணிகொண்டான்.

‘ஏதோ ஒண்ணு வீடு நிம்மதியா இருந்தா சரி, அம்மா சந்தோஷமா இருக்கணும், அதுதான் முக்கியம்..... ஆனா கண்டிப்பா அவளுக்கு ஏதானும் செய்யத்தான் வேண்டும்’ என நினைத்தான்.

அந்த மாதம் சம்பள தினத்தன்று அவள் அவனை கண்டு வாங்கிக்கொள்ள வந்தாள் எப்போதும் போல.
“உக்காரு” என்றான்.
அவள் யோசனையாக அவனை பார்த்தாள், பின் நாற்காலியில் பட்டும் படாமலும் அமர்ந்தாள்.

“நீ என்ன படிச்சிருக்கேன்னு சொன்னே?” என வினவினான். அவனை ஏறிட்டு யோசனையுடன் பார்த்தவள், “பன்னிரெண்டாம் வகுப்பு வரைக்கும்” என்றாள் மெல்லிய குரலில்.
“ஒ ஆமாம், சொன்னே அன்னிக்கி.....வேறே என்ன தெரியும்?” என கேட்டான்.
“கொஞ்சம் கம்ப்யுடர் பேசிக்ஸ் தெரியும் பள்ளியில கத்துகுடுத்தாங்க..... மேற்கொண்டு கை வேலை தையல் வேலை சமையல் னு தெரியும்.... அவ்ளோதான்” என்றாள்.

“மேலே ஏன் படிக்கலை.... இவ்வளோ திறமை இருக்கு, புத்தி இருக்கே?” என கேட்டான்.
“வீட்டில அவ்வளவு வசதி இல்லை.... எனக்கு கீழே ரெண்டு பெண்கள்.... எங்க மூணு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணுமே னு எங்கப்பாக்கு ஓயாம கவலை.... அதனால எனக்கு உடனே கல்யாணம் பண்ணி வெச்சுட்டாரு” என்றாள் தலை கவிழ்ந்து.

“ஹ்ம்ம், பாட் வெரி பாட்” என்றான். “நானும் அம்மாவும் உன்னைப்பத்தி பேசினோம், அம்மாக்கு இப்போ கொஞ்சம் பரவாயில்லை, உனக்கும் இங்கே முழு நேரமும் வேலைன்னு இல்லை....அதனால,” என நிறுத்தினான்
‘ஒ என்னை போகச் சொல்ல போகிறான்.... அதை நேரடியாக சொல்ல தயங்கி இப்படி சுத்தி வளைக்கிறான்’ என துவண்டாள். ‘ஐயோ கற்பகம் ஆண்டியை விட்டு போகணுமே’ என துயரம் கொண்டாள்.

அவள் மனதை படித்தவன் போல, “அதுக்காக உன்னை இந்த வீட்டை விட்டு அனுப்ப முடியாது..... அம்மா உன் மேல ரொம்ப உசிரா இருக்காங்க, அவங்க சந்தோஷத்துக்காகவானும் நீ இங்கேயே இருக்கணும், ஆனா நீ விருப்பபட்டா உன்னை மேலே படிக்க வைக்க நான் ஏற்பாடு பண்ணறேன், இல்ல ஏதானும் வேறே வேலை கத்துகிட்டு செய்ய விருப்பப்பட்டா அதுக்கும் ஏற்பாடு பண்ணறேன்.... என் கம்பனியிலேயே கூட சேர்ந்து வேலை செய்யலாம்.... டைப்பிங் ஷார்ட்ஹாண்ட் கத்துகிட்டியானா கம்ப்யுடர் கொஞ்சம் பிரஷ் அப் பண்ணிக்கிட்டு வேலைக்கு சேரலாம்” என்றான்.

அவன் பேசியதை கேட்டு மனம் இளகி ஆச்சர்யத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவள் அப்படி பார்த்ததும் அவனும் மலர்ந்து “என்ன?” என்றான்.
‘ஒண்ணுமில்லை’ என தலை ஆட்டினாள்.
“நானும் கொஞ்சம் நல்லவந்தான்” என்றான் சிரித்தபடி. அவளும் உடனே சிரித்துவிட்டாள்.
“என்ன சொல்றே, உடனே சொல்லணும்னு இல்லை, நல்லா யோசிச்சு சொன்னா போதும்” என அவள் சம்பளகவரை அவளிடம் நீட்டினான்.
“தாங்க்ஸ்” என்றாள்
“இட்ஸ் ஓகே” என்றான் .
“இதுக்காக மட்டுமில்லை...” என்றாள் கவரை காட்டி.
பின்னே என்பது போல புருவத்தை உயர்த்தினான்.
“நீங்க சொன்ன எல்லாத்துக்கும்.... இங்கேயே இருக்க சம்மதிச்சதுக்கும், எனக்கு படிக்கவோ வேலைக்கோ ஏற்பாடு பண்ணறேன்னு சொன்னதுக்கும் எல்லாம்” என்றாள்

“இதில என்ன இருக்கு, உன் திறமைகள் வீணாவதை நாங்க விரும்பலை, அவ்வளவேதான்.... யோசிச்சு சொல்லு” என்றான்.
சரி என தலை ஆட்டிவிட்டு வெளியே வந்தாள்.... அவள் கேட்டதும் கண்டதும் கனவா நனவா என கிள்ளி பார்த்துக்கொண்டாள்.
‘கீர்த்தியா இவ்வளவு ஆதுரமாக கனிவுடன் பேசியது..... குரலில் தடிப்பு போகவில்லை எனினும் எனக்காக என் வருங்காலத்திற்காக இவன் இவ்வளவு யோசித்ததே அதிசயம் அல்லவா’ என எண்ணிக்கொண்டாள்....‘இதற்கெல்லாம் முக்கிய காரணம் ஆண்ட்டிதான்’ என புரிந்தது. நேரே அவரை காண சென்றாள்.

“ஆண்ட்டி” என பாதம் பணிந்தாள்.
“என்ன மா மனு?” என்றார் அவர்
“ரொம்ப தேங்க்ஸ்” என்றாள்.
“எதுக்குடாமா?” என்றார்.
“இல்ல, நீங்கதானே உங்க மகன்கிட்ட சொல்லி எனக்கு ஏதானும் உதவ சொல்லி இருக்கீங்க போல..... படிக்கவோ வேலை செய்யவோ விருப்பட்டா ஏற்பாடு செய்யறதா சொன்னாரு இப்போதான்” என்றாள்.
“அப்படியா சந்தோஷம்..... நான் அப்படி அவன்ட ஒண்ணும் சொல்லலைமா..... நான் உன் நிலையை சொன்னேன், நீ பட்ட கஷ்டத்தை சொன்னேன்..... உனக்கு ஏதேனும் விதமா உதவி பண்ணணும்னு நினைச்சவன் அவன்தான்.... நானில்லை” என்றார்.

“நீ என்ன சொன்னே?” என்றார்.
“யோசிச்சு சொல்ல சொன்னார்.... நான் சரின்னுட்டு வந்தேன் ஆண்ட்டி” என்றாள்.
“என்ன முடிவு பண்ணி இருக்கே, யோசிச்சியா?” என்றார்.
“இல்ல ஆண்ட்டி, நான் என்ன பண்ணணும்னு நீங்க சொல்லுங்களேன், எங்கே என்னை இங்கே விட்டு போக சொல்லீடுவாரோனு பயந்துட்டேன் ஆண்ட்டி, ஆனா அம்மா உன்னை விட்டுட்டு இருக்க மாட்டாங்க, அதுனால, நீ இங்கே இருந்துகிட்டே மேற்கொண்டு ஏதானும் செய்னு சொல்லீட்டாரு” என சிரித்தாள்.
“அடி பைத்தியமே” என தலையை வருடினார்.

“அவன் சொன்ன மாதிரி நீ மேலே கம்ப்ப்யுடர், டைபிங்னு கத்துக்கோ... அவன் கம்பனியிலேயே வேலைக்கு சேர்ந்துடு..... அவனோடவே போயிட்டு அவனோடவே வந்துடலாம், கொஞ்சமா வேலை குடுத்தா போதும்னு நான் சொல்லீட போறேன்..... அப்போதான் என்னோட அதிக நேரம் இருப்பே, இல்லேனா  நாம இப்படி கதை பேச முடியாது” என்றார் குழந்தையை போல. அவள் சிரித்தாள்.
“ஆண்ட்டி” என அவரை கட்டிகொண்டாள்.
“என்ன நான் சொல்றது?” என்றார்.
“சரி ஆண்ட்டி அப்படியே” என்றாள்.

நாலு நாட்கள் யோசித்து பார்த்தாள்.... காலமெல்லாம் ஆண்ட்டிக்கு உதவியபடி அவருடன் இருக்க முடிந்தால் நன்றாகதான் இருக்கும்.... ஆனாலும், அவர்களுக்கு அப்படி ஒரு தேவை இருக்குமா வைத்துக்கொள்ள இஷ்டப்படுவார்களா என இப்போது சொல்ல முடியாத நிலை.... அதன் பின் தனக்கென ஒரு கவுரவமான வாழ்க்கையை அவள் அமைத்துக்கொள்ள வேண்டும் என்றால் அவள் திறமைகளை வளர்த்து கொள்வதுதானே நல்லது..... அதற்கு கீர்த்தி உதவுகிறேன் எனும்போது ஏன் ஒத்துக்கொள்ள கூடாது, என எண்ணம் எழுந்தது....

‘ஆனால் இலவசமாக வேண்டாம்..... சம்பளம் இன்றி அதற்கு பதில் படிப்புக்கு உதவட்டும்..... வேலைக்கு சேர்ந்த பின் பாக்கி உள்ளதை கொடுத்து விடலாம்’ என முடிவு செய்தாள்.
ரெண்டு நாள் கழித்து அந்த ஞாயிறு அதை அவனிடமும் ஆண்ட்டியிடமும் கூறவும் செய்தாள்.
“இலவசமாக எதையும் ஏற்க மாட்டேன்” என அவளது பிடிவாதம் அவளது சுயகவுரவத்தை அவனுக்கு சுட்டி காட்டியது.
‘ஹ்ம்ம், அதை நான் மறுக்க வேண்டாம், இப்போதே மறுத்தால் அவள் படிக்கவே மாட்டாள்’ என ‘சரி’ என்றான்.

முதற் கண்ணாக அவளை ஒரு கம்ப்யூடர் டைப்பிங் ஆபிஸ் நிர்வாகம் சேர்ந்த டிப்ளமாவில் சேர்த்துவிட்டான்.... ஆறுமாத கோர்ஸ் அது.... வீட்டின் அருகிலேயே இருந்தது..... காலை அவன் தானே கொண்டு விடுகிறேன் என்றான்.
“வேண்டாம், பக்கத்தில தான் நானே போய்டுவேன்” என்றாள்.
‘ஹப்பா ஆனாலும்..’ என எண்ணிக்கொண்டான்.

மதியத்தோடு கிளாஸ் முடிய, சாப்பாட்டு நேரத்திற்கு வீட்டிற்கு ஓடி வந்துவிடுவாள்..... கற்பகத்துடன் சாப்பாடு முடித்து அவரிடம் அன்று கிளாசில் நடந்ததை விலாவரியாக அரட்டை அடிப்பாள்..... வீட்டிலேயே பயிற்சி எடுக்கவென தனது பழைய லாப்டாப்பை அவளிடத்தில் கொடுத்திருந்தான் கீர்த்தி..... அதில் படித்ததை பயிற்சி செய்து தன் திறமைகளை மேலும் வளர்த்துக்கொண்டாள்...... நல்ல விஷயங்கள் அவளுக்கு உதவும் என தோன்றும் விஷயங்களின் லிங்குகளை அவளுடன் தினமும் இமெயில் மூலம் கீர்த்தி பகிர்ந்துகொண்டான்.

அவற்றை ஆவலுடன் படித்து தேர்ந்தாள் பலதும் கற்றுக்கொண்டாள்
ஆறுமாத முடிவில் நல்ல நிர்வாக திறமை தெரிந்து பாஸ் செய்து தேர்ந்தாள்.... பின்னோடு அவளை தனது ஆபிசில் தனது ஜி எம்முக்கு உதவியாளராக நியமித்தான்....
தானே முன் நின்று மற்ற உதவியாளர் உதவியுடன் அவளுக்கு பலதும் கற்று கொடுத்தான்....
அப்போதும் தன்னோடு வரும்படி அழைக்க, மறுத்துவிட்டாள்..... எத்தனையே ஆனாலும் நேரத்திற்குள், கற்பகத்திற்கு அனைத்து உதவிகளும் செய்துவிட்டு குளித்து ரெடியாகி பஸ்ஸில் தான் சென்றாள்.... தன் வேலைகளை சுறுசுறுப்பாக கற்றுக்கொண்டு மேலே மேலே உயர்ந்தாள்.

ஆறு மாதங்கள் கடந்தது, ஜி எம்மிற்கே இது இது என பாயிண்ட்ஸ் எடுத்து கொடுக்கும் அளவுக்கு உயர்ந்தாள். அவருடைய பாராட்டை பெற்றாள்..... அவர் இவளது திறமையை மெச்சிக்கொண்டார்
கீர்த்திக்கு அவள் மீது இப்போது மதிப்பு மரியாதை அன்பு எல்லாமே ஏற்பட்டிருந்தது..... மிகவும் தன்மையாக பேசினான்..... இருவருக்குள்ளும் நல்ல புரிதல் ஏற்பட்டது..... சகஜமாக சிரித்து பேசி அரட்டை அடித்து நல்ல நண்பர்களாக நடந்துகொண்டனர்.... கற்பகத்திற்கு மனம் நிறைந்தது.

கீர்த்திக்கு இப்போதெல்லாம் எது நடந்தாலும் சுவையாக எதை கண்டாலும் அதை உடனுக்குடன் அவளுடன் பேசி பரிமாறிக்கொள்ள வேண்டும் என ஆவல் அதிகமானது..... அதை அவனுடைய கண்ணோட்டத்திலேயே கண்டு அவனுடன் அதை பகிர்ந்து சிரித்து ரசிக்க அவளுக்கு தெரிந்திருந்தது.... இந்த அழகியதொரு வேவ்லெங்க்த் மிக அருமையாக அவர்கள் மத்தியில் உருவாகி இருந்தது.
அவளுக்கும் வேற்று மனிதன் முரடன் என்கிற பழைய கோபதாபங்கள் மாறி அவன் மீது நல்மதிப்பும் அன்பும் அக்கறையும் நிறைந்திருந்தது

“என்ன இது இருமறீங்க?” என சுக்கு மிளகு தட்டி போட்டு அவனுக்க ரசம் வைத்தாள்.
“ஐயோ கடவுளே, இது ஒண்ணுமே இல்லை.... இதுக்கா ஆர்பாட்டம்?” என அவன் அதை ஒதுக்கினான் அருகே நின்று “இதை சாப்டுட்டு அப்பறம் நகருங்க” என மிரட்டி சாப்பிட வைத்தாள்.
“அம்மா, என்னம்மா இது கொடுமை, ஒரே காரம், கசப்பா வேற இருக்கும்போல..” என முகம் அஷ்டகோணலாக்கி கற்பகத்திடம் முறையிட்டான்.
“எல்லாம் உன் நன்மைக்குத்தானே சொல்றா..... பாவம் கஷ்டப்பட்டு செஞ்சிருக்கா, சாப்பிடு கீர்த்தி குணமாகீடும்” என்றார் அவரும்.

அவனுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் அருகில் வந்து, “ஆமா, இப்போ அடம் பிடிங்க.... வேலை டென்ஷன் மத்த வர்றி னு சிகரெட்ட ஊதி ஊதி தள்ளும்போது யோசிக்கணும், இப்படி பிடிச்சா இருமல் மட்டுமா வரும் இனி எல்லாமும் வரும்” என கடிந்துகொண்டாள்.

அவன் அவளை ஆச்சர்யத்துடன் நிமிர்ந்து பார்த்தான்.... அவள் உரிமையுடன் அதட்டுவது பிடித்திருந்தது.... ஆசையுடன் அவள் செய்த ரசம் இனித்தது.... முகம் மலர்ந்தது.... முகத்தில் ஒரு மந்தகாசம் குடிகொண்டது....
“இல்ல, வந்து..... ஜாஸ்தி எல்லாம் இல்ல” என்றான் அவனும் முனகலாக.
“தெரியுமே, ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட்” என்றாள்.
‘உனக்கெப்பிடி?’ என்பது போல அவளை ஏறிட்டான்.
“எல்லாம் தெரியும்” என காலி தட்டுடன் உள்ளே சென்றுவிட்டாள். அவன் அப்படியே அந்த செயலை அவள் பேச்சை ரசித்தபடி அமர்ந்திருந்தான்.

“இந்தா மனு, இதை எடுத்து உள்ளே வை” என சில பாக்கெட்டுகளை நீட்டினான்.
“என்ன இது யாருக்கு?” என்றாள்.
“உனக்குத்தான், பின்ன சேலையும் சுடியும் நானா போட்டுக்குவேன்” என்றான்.
“எனக்கா, அதான் வேண்டும் அளவு இருக்கே..... அம்மா வேற வாங்கி குடுத்திருக்காங்க” என அவனை முறைத்தாள்.
“இருக்கட்டுமே, ஒரு பெரிய கம்பனில பெரிய வேலை பார்க்கிற, நல்லா உடுத்த வேணாமா.... அதான், கடைதெருவில பார்த்தேன்... நாலு ஜோடி வாங்கினேன்..... அழகா கண்ணுக்கு பட்டுது.... உனக்கு சூட் ஆகும்னு தோணிச்சு, வாங்கினேன்.... இப்போ என்ன, உள்ள எடுத்து வை” என்று அதட்டினான்.


No comments:

Post a Comment