Monday 4 March 2019

UN KANNIL NEER VAZHINDHAL - 11


‘விளையாட்டு பிள்ளை போல, வந்த நேரம் தொட்டு இவன் செய்த ரகளை என்ன.... வம்பு என்ன.... இப்போதோ அவன் பேசும் விஷயம், அதன் தீவிரம் என்ன...?’ என அசந்து போனான் கீர்த்தி.
அவன் பேச பேச அதில் ஒளிந்திருந்த உண்மை அவனுக்கு புலப்பட்டது.
‘ஆம் ராஜன் சொல்வதும் உண்மைதான்’ என மனம் கொஞ்சம் தெளிந்தது.
ஆனால் மனுவிடம், அவள் மனம், அவள் முடிவு, தெரிந்திருந்தும், இதைப்பற்றி பேசுவது யார்.... அவள் எப்படி சம்மதிப்பாள் என பயந்தான்.

“அவங்க நிலை என்ன மணமானவங்களா இல்லையா, அவங்களை மணக்க உனக்கு ஏதானும் தடை இருக்கா, அவங்களுக்கு தடை இருக்கா... இதெல்லாம் நீ சமாளிக்க வேண்டிய விஷயங்கள் டா கீர்த்தி.... ஆனா இந்த சான்சை கோட்டைவிட்டா உன்னை போன்ற அடி முட்டாள் உலகத்திலேயே யாருமில்லைன்னு நான் சொல்லுவேன்.... நல்லா யோசி, நல்ல முடிவை எடு, குட் நைட்” என தனது அறைக்கு சென்றுவிட்டான்.

அவன் போய்விட கலைத்துபோட்ட சீட்டுக்கட்டு போல மனம் கலைந்து கிடந்தது.... அனைத்தையும் ஒருங்கமைத்து ஆழ்ந்து யோசித்தபடி கீர்த்தி அங்கேயே அமர்ந்திருந்தான்....
“என்ன இன்னுமா தூங்கலை?” என குரல் கேட்டு சட்டென தன் யோசனையிலிருந்து மீண்டான். மனுதான் நின்றிருந்தாள்.

“ம்ம்ம் போகணும், நீ ஏன் இன்னும் தூங்கலை?” என்றான்.
விளக்கு அணைக்கப்பட்டு மேலே வானத்து பௌர்ணமி நிலாவின் வெளிச்சம் மட்டுமே ஊடுருவிக்கொண்டு இருந்தது அந்த மாடி பால்கனியில்..... அந்த மங்கிய நிலா வெளிச்சத்தில் காற்றில் அலைபாயும் முடி முகத்தில் விழ, அதை ஒரு கையால் ஒதுக்கியபடி உயிரோவியமாக நிழல் போல நின்றிருந்தாள் மனு.... அவளது அந்த உருவத்தை பார்த்து முதன் முறையாக அவளை கட்டி அணைக்க ஆசை எழுந்தது....

“எனக்கும் தூக்கம் வரலை” என்றாள்
“அப்போ எனக்கு தூக்கம் வரலைன்னு நீ தெரிஞ்சுகிட்டியா?” என்றான் கரகரப்பான குரலில்.
“ம்ம் தெரியும் ராஜனோட ஏதோ பேசிக்கொண்டு இருந்தீங்க.... ஏதோ தீவிரமா இப்போ யோசிச்சுகிட்டும் இருந்தீங்க அதான்” என்றாள்.
“ம்ம்ம், என்னை ரொம்ப சரியா தெரிஞ்சு வெச்சிருக்கே.... ரொம்ப நல்லாவும் புரிஞ்சு வெச்சிருக்கே மனு” என்றான் அழ்ந்த குரலில்.
அவள் தலை கவிழ்ந்தாள்.
“அப்படி என்ன பிரச்சினை, என்ன தீவிர யோசனை.... நேரமாச்சே போய் தூங்க வேண்டாமா, எதுவானாலும் நாளைக்கு யோசிச்சுக்கலாம், போய் படுங்க.... நாளைக்கு ஆபிஸ் இருக்கு.... அங்கே வேலை வேற இருக்கு நிறைய உங்களுக்கு” என்றாள்.

“ம்ம் போறேன்..... நீ ஏன் தூங்கலை, என்ன யோசனை.... என்ன கலவரம் னு நீ சொல்லு... நான் போறேன்” என அவளை ஆழம் பார்த்தான்.
“சொல்லத் தெரியலை.”
“உக்காறேன் மனு” என்றான். எதிரே நாற்காலியில் அமர்ந்தாள்.
“என்ன சொல்லத் தெரியல... என்ன ஆச்சுமா?” என்றான்.

“தெளிந்த நீரோடையா பழசெல்லாம் மறந்து நிம்மதியா நான் இங்க வாழ்ந்துகிட்டு இருந்தேன்..... நீங்களும் ஆண்ட்டியும் என் மேல வெச்ச அன்பு மதிப்பு என்னை கடனாளியாக்கினாலும் மனசை இதமா வெச்சிருந்தது” என்றாள்.
“சரி, அதுக்கு இப்போ என்ன பங்கம் வந்துடுச்சு?” என்றான்.
“இல்ல, வந்து.... இந்த நாலு நாளா மனசு ஒண்ணும் சரி இல்லை.... இவர், உங்க சொந்தக்காரர்,,, வந்ததிலேர்ந்து அவரும் அவர் பேச்சும் என்னை கலைச்சு போட்டுடுச்சு..... இதை போன்ற ஆண்களை நான் அடியோட வெறுக்கறேன்..... அவரோட பேச்சு எனக்கு பிடிக்கலை..... பழசை எல்லாம் கிளறி விட்டுடுச்சு” என பெருமூச்செரிந்தாள்.

“ம்ம் புரியுது.... ஆனா அவன் ரொம்ப நல்லவன் மா” என்றான்.
“இருக்கலாம் ஆனாலும்...” என்றாள்.

“போகுது, நாளை காலைதான் கிளம்பீடுவானே.... இனி அவன் தொல்லை உனக்கு இருக்காது..... அவன் என்ன யோசிச்சான்.... ஏன் அப்படி பேசினான் னு உனக்கும் தெரிஞ்சா இந்த கோபம் போயிடுமா கூட இருக்கும்..... அதை பேச இப்போ நேரமில்லை..... நமக்கு வேலை இருக்கு, நீ போ, படுத்து நிம்மதியா தூங்கு” என்றான். இருவரும் எழுந்தனர். இருட்டில் நடந்து அவரவரது அறையில் முடங்கினர்.

காலை ராஜன் கிளம்ப, கீர்த்தி அவனை அவன் மனதை புரிந்ததால் அவனை ஆரத்தழுவி விடை கொடுத்தான்.....
“இரவு நான் சொன்னதெல்லாம் நினைவிருக்கட்டும், சீக்கிரமா நான் உன்னிடம் இருந்து ஒரு நல்ல முடிவை எதிர்பார்த்து காத்திருப்பேன்” என்றான் இவன் காதோரம்.
இவனும் சிறு புன்னகையுடன் சரி என்பது போல தலை ஆட்டினான்.
அவன் கிளம்ப மனுவிற்கு ஹப்பா ஒழிந்தான் என்று இருந்தது.

அவளை பார்த்து புன்னகைத்தான் “மனு, இப்போ ஹாப்பியா?” என்பதுபோல. அவள் முகம் தெளிந்து புன்னகைத்தாள். இருவரும் ஆபிஸ் சென்று வேலைகளை கவனித்தனர்.

அடுத்து வந்த நாட்களில் கீர்த்தி அவளையும் அறியாது மனுவை கவனித்தான்.....அவள் ஒவ்வொரு வேலையிலும், வீட்டிலும் சரி ஆபிசிலும் சரி, கவனித்து செய்வதாகட்டும், அன்புடன் அவனையும் கற்பகத்தையும் பார்த்துக்கொள்வதில் ஆகட்டும், அவனுக்கு நிம்மதியும் சந்தோஷமுமே நிறைந்தது.... மேலும் மேலும் அவள்பால் மனசு சென்றது..... அவளை தான் எவ்வளவு காதலிக்கிறோம் என்பதை அப்போதுதான் உணர்ந்தான்.....‘முட்டாள், இதை எடுத்து சொல்ல மும்பையிலிருந்து ராஜன் வர வேண்டி இருந்தது’ என தன்னையே கடிந்து கொண்டான்.

‘இல்லை, தான் முட்டாள் அல்ல, மனுவின் மன நிலை அறிந்து அவளது திருமணம் பற்றிய அபிப்ராயம் தெரிந்து அவளிடம் அதையும் மீறி தன் மனதை தெரியபடுத்த, காதல் சொல்ல, தைர்யம் இருக்கவில்லை....மன திடம் இல்லாமல் போனது.... இதை சொல்ல போய், அவளே குறிப்பிட்டது போல எங்கே அவள் இந்த வீட்டை விட்டே போய்விடுவாளோ, என்ற பயம் தான் தயக்கத்தை தந்தது போலும்.... இவ்வளவானும் அவளை எதிரே வைத்து வீட்டிலும் ஆபிசிலும் பார்க்க, பேச பழகவானும் முடிந்ததே, அதே போதும்’ என்ற மன நிலைக்கு தள்ளப்பட்டிருந்தான் கீர்த்தி என்பதுதான் உண்மை.

இப்போது உள்ளே அழுத்தி வைக்கப்பட்டிருந்த காதலானது மேலே எழும்பி நெஞ்சிலே குடிகொண்டு விட்டது..... இனி அதை உள்ளே அமுக்குவது கடினம்.... வாய் வழியே அது வெளிவந்துதான் தீரும் என உணர்ந்தான். துணிந்தான்.

அந்த ஞாயிறு அந்தி மாலை நேரம் மேலே பால்கனியில் அமர்ந்திருக்க, கற்பகம் டிவியில் மூழ்கி இருந்தார். மாடியிலிருந்த துணிகளை எடுத்து மடித்தவண்ணம் பால்கனியில் அமர்ந்த மனுவை கண்டான் கீர்த்தி.
“இப்போ கொஞ்சம் பேசலாமா?” என கேட்டான்.

“ம்ம் பேசலாமே, என்ன புதுசா பர்மிஷன் எல்லாம் கேட்டுகிட்டு?” என சிரித்தாள்.
“கொஞ்சம் தீவிரமான ஆனா நாசூக்கான விஷயம்... அதான், நீ முழுசா நான் சொல்றதை கேட்கணும்.... அதுக்குதான் இந்த பீடிகை..... கோவப்பட்டு எரிச்சல் பட்டு ஆத்திரத்துடன் எதுவும் சொல்லிடாதே....நல்லா யோசிச்சு பதில் சொல்லணும்” என்றான். மனுவை பயம் கவ்வியது.

“என்ன சொல்லுங்க” என்றாள். கை துணி மடித்தபடி இருக்க அவனை ஏறிட்டாள்.

“ராஜன் உன்னிடம் பேசினானே..” என்று ஆரம்பித்தான்.
“அதைப்பற்றி இப்போ என்ன, அவர் பேசி என்னை குழப்பியது போதாதுன்னு உங்களையே அதுக்கு இப்போ தூது அனுப்பி இருக்காரா?” என்றாள் காட்டமாக.
“பார்த்தியா, நான் பொறுமையா கேட்கணும்னு வேண்டினேனே, நீ முதல் வாக்கியத்திலேயே இப்படி குதிக்கிறியே” என்றான்.
“சரி சரி சொல்லுங்க” என்றாள் வேண்டா வெறுப்பாக.

“ராஜன் பேசியதெல்லாம் நம்மளை சீண்ட வேண்டிதான்..... அவன் மனசில் உன்னைப் பற்றி அப்படி ஒரு அபிப்ராயமும் இல்லை” என்றான். அவள் திகைத்து அவனை பார்த்தாள்.
“நான் சொல்வதெல்லாம் உண்மை, நீ நம்பணும் மனு” என்றான்.

“பின்னே ஏன் அப்படி என்னை இர்ரிடேட் பன்ணினாரு?” என்றாள்.
“உன்னை உனக்கும், என்னை எனக்கும் புரிய வைக்க” என்றான்.
“புரியல, என்ன சொல்றீங்க?” என்றாள்.

“கிளம்பும் முன், இரவு நாங்க பேசினோமே.... நீ கூட பின்னோட வந்தியே.... அன்று என்ன சொன்னான் தெரியுமா, என்ன பேசினோம் தெரியுமா?” என அவளுக்கு அவன் பேசியதன் சாராம்சத்தை கூறினான். அவள் அசந்து போனாள்..... முகம் கனன்று போனது.
“நான்சென்ஸ்” என்றாள்.
“இல்லை, அவன் பேசியது நான்சென்ஸ் இல்லை... உண்மை.... நீ இனியும் உன்னையே ஏமாத்திக்க முடியாது மனு..... நானும் நேற்றுவரை அப்படித்தான் இருந்தேன்.... அதுக்கு நானும் வெட்கப்படறேன்”
“ஆனா என் மனசும், கூட உன் மனசும் எனக்கு இப்போ தெள்ளத்தெளிவா புரிஞ்சுபோச்சு..... அதான் உன்கிட்ட தைர்யமா பேச்சை ஆரம்பிச்சேன்....”

“என் மனசில நீ இருக்கே, நான் உன்னை ஆராதிக்கிறேன், நீ, உன் குணம், உன் பண்பு, உன் மனசு, உன் அழகு எல்லாமே என்னை பிடிச்சு பித்தனா ஆக்கிகிட்டு இருக்கு, இப்போ இல்லை, நாம சண்டை போட்டுக்கிட்டு நின்னோமே, அந்த நாளிலேயே உன்னை என்னையும் அறியாமல் பிடித்துதான் இருந்தது..... நான் என் முடிவிலேயே இருந்தேன்..... அதை நீதான் வந்து அசைத்து பார்த்தாய் மனு..... இப்போது முழுவதுமாக என்னை ஆட்கொண்டுவிட்டாய் வினி டார்லிங்” என்றான்.

அவள் அதிர்ந்து போய் அவனை ஏறிட்டாள்.... வினியா, இதென்ன செல்லமாக இப்படி அழைக்கிறானே என நினைத்தாள்... கண்கள் சிவந்து கோபமாக இருந்தது அவள் முகம்...
“கோபப்படாதே, நான் சொல்லி முடித்துவிடுகிறேன்..... நீ இன்னமும், என்னை போலவே, உன் மனதை அறியவில்லை.... அதற்கு காரணம் நீ அதை நினைத்து பார்க்க பயப்படுகிறாய்,
இது எப்படி சாத்தியமாகும், எப்படி நடக்க கூடும்னு பயம்..... அதனால நினைக்க கூட தயக்கம்..... பழசை ஒப்பிட்டு பார்த்து நடுக்கம்..... அதனால் வந்த குழப்பம்.... ஆனாலும் உன் மனசில நான் இருக்கறதாலதான் அட்லீஸ்ட் உன் கண் முன்னேயாவது நான் இருக்கணும், என் கண் முன்னே நீ இருக்கணும்...... என்னை தினமும் பார்த்துகொண்டு பேசிக்கொண்டு பழகிக்கொண்டு எனக்காக கவனித்து பணிவிடைகளை செய்துகொண்டு இப்படியே காலம் கழிச்சா போதும் னு நீயே ஒரு முடிவுக்கு வந்துட்டே...... உனக்கு அதுக்கு மேல ஆசைப்பட கூட துணிவில்லை வினி..... அந்த நிலை எனக்கு புறியுது.....”

“உன் பழைய வாழ்வு உன்னை இன்னமும் புரட்டி போடுகிறது.... எந்த நன்மையும் இனி உனக்கு நடக்காது, கிடையாதுன்னு நீயே மூடிவு செய்து தாளிட்டு பூட்டி வெச்சுட்டே உன் மனசை..... அதான் ரீசன்” என்றான்.
“இல்லை, அப்படி எல்லாம் ஒண்ணுமே இல்லை” என்றாள்.
“நீ இல்லைன்னு சொல்லீட்டா ஆச்சா, எனக்கு தெரியாதா வினி மா” என்றான் அன்பாக.

“நீங்க எதை எதையோ பேசி என்னை குழப்ப பார்க்கறீங்க... உங்க நன்மைக்காக என்னை இதில இழுக்கறீங்க” என்றாள் குற்றம் சாட்டும்படி.

“ஹஹ்ஹா, அப்படியா இருக்கட்டுமே, எனக்காகவானும் நீ உன் மனசை அறிய கூடாதா, என்னை ஏற்றுக்கொள்ள கூடாதா?” என்றான் ஆசையாக.
அவனை ஏறிட்டவள் கலங்கி போனாள்.
“கீர்த்தி, இதைப் பற்றி நான் இனி பேச விரும்பலை..... என்னை விட்டுடுங்க.... நான் பட்டவரை போதும்..... அந்த ரணமே இன்னும் ஆறலை, புதுசா எதையும் அனுபவிக்க என் மனசிலேயும் உடம்பிலேயும் தெம்பில்லை” என்றாள் உறுதியாக.

“உள்ளே ரணம் எப்படி ஆறும் வினி.... நீ அதை புரையோட விட்டிருக்கே, மனதை திறந்து அங்கு அன்பு எனும் காற்றாட விட்டால்தானே மன ரணம் ஆறும்..... மனதை பூட்டி வைத்து எந்த சிகிச்சையும் பார்க்காமல் விட்டதால்தான் அது புரையோடி கிடக்கிறது வினி.....
என்னுடைய அன்பெனும் மருந்தால் உன் மனப் புண்ணை ஆற்ற என்னால் முடியும்..... எனக்கு ஒரே ஒரு சான்ஸ் குடுத்து பாரு வினி” என்றான் கெஞ்சலாக.
“போதும், ப்ளீஸ்.... வேறே எதுவும் பேச வேண்டாம்” என துணிகளை அள்ளிக்கொண்டு உள்ளே சென்று மறைந்தாள்.
எதிர்பார்த்ததுதான் என்றாலும் துவண்டான்.
‘ஒரே நாளில் மாற்றங்கள் எற்படாதுதான்..... மெல்லமெல்ல பேசுவோம்’ என எண்ணிக்கொண்டான்.

உள்ளே சென்ற மனு உடைந்தாள்..... கண்ணீர் வரட்டுமா என்றது.... அத்தனை துன்பங்களை சந்தித்தபோதும் அவள் கண்ணில் ஒரு துளி அளவும் கண்ணீர் உருண்டோடாவில்லை..... ஆனால் இன்று அன்பினால் அவள் மனம் எனும் அணையை  உடைத்து கண்ணீருக்கு பாதை செய்துவிட்டான் கீர்த்தி.
வந்த கண்ணீரை உள்ளே இழுத்து அடக்கினாள்..... இல்லை என தலையை ஆட்டிக்கொண்டாள்.
வேண்டாம் இந்த விபரீதம் என எண்ணினாள்.

அடுத்து வந்த சில தினங்கள் கீர்த்தியை கண்ணோடு கண் காண்பதை தவிர்த்தாள்....‘என்னைவிட்டு ஓடி போக முடியுமா இனி முடியுமா
நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா தெரியுமா’
என பாட்டை ஓட விட்டான்.
அவள் அவனை முறைத்தாள். அவன் சிரித்தான்.
அவனுக்கு வேண்டியதை மட்டும் செய்து விட்டு அவன் எதிரே வராமல் மாயமானாள்.... இது அவளது வழக்கம்தானே விட்டு பிடிப்போம் என காத்திருந்தான்..... ஜி எம்மிடம் சொல்லி அவனது செயலாளரை அவருக்கும் மனுவை தனக்குமாக மாற்றி அமர வைத்தான்.

அவனை அவள் சந்தித்தே ஆக வேண்டும் நித்தமும் பொழுதும் அவனுடனேயே அவனை பார்த்தபடியே அவள் வேலை செய்தாக வேண்டிய நிலை.... அதற்காக வேலையை விட முடியாது..... பல்லை கடித்துக்கொண்டு வேலைக்கு வந்தாள்.
“எஸ் சர் நோ சர்” என மாத்திரமே பேசினாள். அவன் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான்.

ஒரு வாரம் செல்ல அவனின் விடா முயற்சி கண்டு துவண்டாள்.
“என்னை ஏன் இப்படி சித்திரவதை செய்யறீங்க, நான் உங்களுக்கு வேண்டாம்..... நீங்க ரொம்ப உசந்தவர், உங்களுக்கு ஏற்ற பெண்ணை பார்த்து மணந்து கொள்ளுங்கள்” என்றாள். அவன் கடகடவென சிரித்தான்.
“அதைத்தானே செய்யறேன்” என்றான் அவள் விக்கித்து போனாள்.

அவளது நிலை கவலைக்கிடமாகி போனது.... தனிமையில் அவள் அமரும் நொடி, அவள் மனம் நிறைய அவன்தான் வந்து நிறைந்து நின்றான்..... அவனுக்காக பார்த்து பார்த்து செய்தாளே..... அதுவும் அவன் மேல் தான் கொண்ட காதலால்தானே.... அவள் அறிவாள்.... அவள்மனதை அவளல்லாது யாரறிவர்..... அவனையே தான் தன் மனது முழுவதுமாக நிறைத்து வைத்திருந்தாள்.... ஆனால் இது நடக்காது நடக்க வேண்டாம் என ஒதுக்கி வைத்து வாழ முயன்று வந்தாள்..... முடியாமல் பல நேரம் திணறினாள்.....

இப்போதோ அவளது நிலை அவனுக்கும் கூட புரிந்து போனது..... அவனும் அதே நிலையில் வேறு இருந்தான்..... அவனது ஒவ்வொரு அன்பின் வெளிப்பாடும் அவளை திணற வைத்தது.... இனி இங்கேயே இருந்துகொண்டு அவனை கண் எதிரே வைத்துக்கொண்டு அவனை ஒதுக்கி வாழ்வது என்பது முடியாது என உணர்ந்தாள்..... செய்வதறியாது திகைத்தாள்.

யோசித்து தலை வெடித்தது.... மண்டை உளைச்சல் கொண்டது.... மனம் கனத்தது.... இதற்கு என்னதான் வழி என தெரியாமல் கலங்கிதான் போனாள்... அவனை இனியும் மறுக்க முடியாது, மொத்தமாக தன் மனது அவன்பால் சென்றுவிட்டது, அவனும் அவ்வண்ணமே என தெரிந்த பின் மறைத்து பயனில்லை, பேசாமல் ஒத்துக்கொள்வோமா, ஏன் நான் என்ன தவறு செய்தேன்... எனக்குன்னு என் வாழ்வில என்ன சுகத்தை நான் கண்டுவிட்டேன்... அப்படி ஒரு இனிமையான சுகமான திருமண வாழ்க்கை எனக்கு கீர்த்தியால் எழுத பட்டிருந்தால் அதில் என்ன தப்பு என யோசிக்க ஆரம்பித்தது மனது.

மீண்டும் ரணபட்டுவிட்டால் என்ற பயம் கூடவே எழுந்தது.... அவனும் பாதிக்கபட்டவன், என்னை அதுபோல பாதிக்க விட மாட்டான்..... மனதின் வலி அறிந்தவன், அனுபவித்தவன், அவன்... என தேற்றிக்கொண்டாள். இப்படிப்பட்ட மன உளைச்சலில் அவளிருக்க
அப்போது, வேறே வடிவத்தில் பிரச்சினை வெடித்தது.

அன்று ஞாயிறு காலை. சிற்றுண்டி உண்டுவிட்டு கற்பகத்தின் கால்களுக்கு எண்ணெய் தடவி மசாஜ் செய்துகொண்டு இருந்தாள் மனு....நாளிதழை படித்தபடி அவளையும் அவ்வப்போது ஓரக்கண்ணால் கண்டபடி அங்கேதான் அமர்ந்திருந்தான் கீர்த்தி.
அவளது கண்களும் உடல் அசைவுகளும் பாடி லாங்குவேஜ் எனப்படுவது அவனுக்கு ஜெயம்தான் என காட்டினாலும், அதை அவள் வாயால் சொல்லும்வரை அவனை ஏற்றுக்கொள்ள அவள் ஒப்புக்கொள்ளும் வரை தான் பொறுமையாக இருப்போம் என அவன் முடிவு செய்திருந்தான்.

அப்போது வாசலில் யாரோ சத்தம் போடும் அரவம் கேட்டது.... கீர்த்தி யாரென பார்க்க சென்றான்.... அங்கே ஒரு ஆள் நின்றிருந்தான்.... அவனை விசாரித்தவன் விக்கித்து போனான்....
“வா... வாங்க.. உள்ள” என தடுமாறி அழைத்து வந்தான்.
நாலு நாள் தாடியுடன் நின்றான் அந்த ஆள்.... நல்லபடி உடுத்தி இருந்தான்.... சட்டென அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.... அவன் மனுவை தேடி வந்ததாக கீர்த்தியிடம் கூறி இருந்தான், அதனால் தான் கீர்த்திக்கு திகைப்பு.

உள்ளே வந்தவன், “ஹப்பா இங்கேதான் இருக்கியா, நல்லவேளை, எனக்கு கிடைச்ச தகவல் தப்போன்னு நினைச்சேன்..... என்ன, நீ பாட்டுக்கு சொல்லாம கொள்ளாம சீட்டு எழுதி வெச்சுட்டு வெளியே வந்துட்டே, இப்படி கூடவா செய்வாங்க.... ஏதோ கோப தாபம் பிரச்சினைகள் யார் குடும்பத்தில் தான் இல்லை மனு” என்றான் அன்பொழுக.

அவன் குரல் அவனை மனுவிற்கு அடையாளம் காட்டியது..... திணறி விக்கித்து போனாள்....‘இவனா, இவன் இப்போது இங்கே எதற்காக வந்தான்.... இவனை யார் இங்கே அழைத்தது....நான் இங்கே இருப்பது இவனுக்கு எப்படி தெரியும்?’ என உள்ளே பல கேள்விகள்.... கீர்த்தியை பார்த்தாள்.



No comments:

Post a Comment