Tuesday 5 March 2019

UN KANNIL NEER VAZHINDHAL - 12


அவனும் அவள் முக உணர்சிகளைதான் கவனித்துக்கொண்டு இருந்தான்.... பேசாமல் அவன் சோபாவில் அமர, “என்ன மனு, என்னை அடையாளம் தெரியலையா, நான்தான் உன்னோட புருஷன் வாசு” என்றான் பல்லை இளித்துக்கொண்டு.

“நீ இல்லாம நான் ரொம்ப தவிச்சு போய்டேன் தெரியுமா, ரொம்ப அவஸ்தை பட்டு போய்டேன்... எங்கெல்லாமோ தேடி அலைஞ்சேன்.... உன்னைப் பற்றி ஒரு தகவலும் இல்லை..... நீ இல்லாம நான் ரொம்ப கஷ்டங்கள் அனுபவிச்சேன்....
சோத்துக்கு கூட வழி இல்லாம நானே பொங்கி தின்னுகிட்டு கைய கால சுட்டுகிட்டு.... வீடு ஒரு பக்கம் அலங்கோலமா கிடக்கு.... என் வாழ்க்கையும் அலங்கோலமா போச்சு.... நல்லகாலம் இப்போவானும் நீ கிடைச்சுட்டே” என்றான்.
தூக்கி வாரி போட அவனை ஏறிட்டாள்.

“என்ன வேணும் உங்களுக்கு, இங்கே எங்கே வந்தீங்க?” என்றாள் நிதானமாக.
“என்ன மனு, இப்படி கேக்கறே..... ஏதோ கோபம் சண்டை.... நீ வீட்டை விட்டு வந்துட்டே, இப்போதான் காலம் எல்லா புண்ணையும் கோபத்தையும் ஆத்திடுச்சே, வா, உன்னை அழைச்சுகிட்டு போகத்தான் நான் வந்தேன், என்னோட கிளம்பு....”

“இவங்க தான் உன்னை இத்தனை நாளா வெச்சு பார்த்துகிட்டாங்களாக்கும், இதென்ன நீ வேலைக்காரி மாதிரி இவங்களுக்கு சேவை பண்ணிக்கிட்டு இருக்கே, நீ யாரு, யாரோட பெண்டாட்டி, உன் நிலை என்ன.... இதென்ன இவ்வளோ தரம் தாழ்ந்து...?” என ஏளனமாக பேசினான்.... கீர்த்தியை ஈனமாக பார்த்தான்.....
மனுவுக்கு உள்ளே எரியத் துவங்கியது.... அது அவள் மனதில் பல வருடங்களாக அணையாமல் எரிந்து பின் நீருபூத்த நெருப்பாக உள்ளே கனன்று கொண்டிருந்த நெருப்பு..... வாசு வந்து இப்போது மீண்டும் வீசி விட்டதில் உள்ளே கொழுந்து விட்டு எரியத் துவங்கியது.

“அனாவசியமா பேச வேண்டாம்.... நான் உங்களோட வர தயாரா இல்லை, நீங்க மேற்கொண்டு இங்கே இருந்து எந்த வம்பு கிளப்பாம வந்த வழிய பார்த்து கிளம்புங்க” என்றாள்.
“என்ன சொல்றே, விளையாடறியா மனு, இன்னுமா உன் கோபம் தீரலை.... ஓஹோ நான் சுலோவோட அப்படி இப்படி இருந்தேனே அந்த கோபமா, அதெலாம் அப்போ, இப்போ தான் அவ கல்யணம் ஆகி போய்டாளே, இப்போ அவளோட நான் டச்லேயே இல்லை தெரியுமோ” என இளித்தான்.

“உங்கள வெளியே போங்கன்னு சொன்னேன்” என்றாள்.
“மனு, பொறுமையா பேசுமா” என்றார் கற்பகம்.
“இனி இவனோட பேச்சே எனக்கு அனாவசியம் ஆண்ட்டி... இதில பொறுமையா வேற பேச என்ன இருக்கு” என்றாள் ஆத்திரத்தை அடக்கி.

“என்னடி வாய் நீளுது?” என்றான்.
“ம்ம் போதும், இந்த டீ போடறதெல்லாம் என்கிட்டே வேண்டாம், அப்பறம் நானும் மரியாதை இல்லாம பேச வேண்டி வரும், உங்களை விரட்டிவிடும் முன் நீங்களா வெளியே போய்டா உங்களுக்கு நல்லது” என்றாள் ஒரு கை நீட்டி வாயிலை காண்பித்து.

“என்னடி கொழுப்பா, ஏதோ போனா போகுது, நீ செய்த தப்பை மன்னிச்சுடலாம், வீட்டுக்கு அழைச்சுட்டு போகலாம்னு நானா வீங்கிகிட்டு வந்தா, உனக்கு நான் இளப்பமா தெரியறேனா... ஏதோ தனியா கிடந்து அல்லாடறோமே, நீ வந்தா கொஞ்சம் நிம்மதியா வசதியா இருக்கலாமேன்னு நினச்சுதான் உன்னை கூப்பிட வந்தேன்... ஏன் இத்தனை வருஷத்தில இவனோட இங்கே செட்டில் ஆயிட்டியா, கல்யாணம்னு ஒண்ணும் பண்ணிக்கலைன்னு கேள்விபட்டேனே.... அப்போ, என்ன இவன் உன்னை வெச்சிருக்கானா, அதான் என்னோட வர கசக்குதா?” என்றான்.

அவன பேச்சை கேட்டு அவனை ஏளனமாக பார்த்தாள்.
“ஹான், வந்துட்டியா.... உன் யோக்யதைக்கு வந்துட்டியா, நினச்சேன், நீயாவது மனுஷனா பேசறதாவதுனு இப்போதான் யோசிச்சேன், இதானே உன் அசல் நிறம், நீயாவது மாறறதாவது..... அசிங்கம் பிடிச்சவனே, அவரைப் பத்தி உன் வாயால் பேச கூட உனக்கு யோக்யதை கிடையாது.

“நீ என்னை பாசமா அன்பா எனக்காக அழைத்து போய், இனியானும் என்னோட நல்லபடி குடித்தனம் பண்ண கூப்பிடலை..... உனக்கு அதைப்பத்தி எல்லாம் கவலையுமில்லை, தெரியவும் தெரியாது..... ஏன்னா நீ கேடு கேட்டவன்...... உன் புத்தி இப்படிதான் போகும்.... இப்போ கூட என்ன சொல்றே, ‘நான் ரொம்ப கஷ்டபட்டுட்டேன், நான் ரொம்ப அவஸ்தை பட்டுட்டேன், என் வீடு அலங்கோலமா போயிடுச்சு.....’

“எல்லாமே நீ சம்பந்தப்பட்டது..... அதில் நான் என்பது எங்கேயுமே இல்லை..... உனக்கு சம்பளம் இல்லாத வேலைக்காரியா, சமையற்காரியா, படுக்கையில் நீ கூப்பிடும் போதெல்லாம் வந்து படுக்கும் தாசியா நான் வரணும் இருக்கணும்...
‘நீ அசலே ரொம்ப கஷ்டபட்டுட்டே, உன்னை நான் புரிஞ்சுக்காம இம்சை பண்ணீட்டேன், மன்னிச்சுடு, இனியானும் நான் உன்னை நல்லபடி வெச்சுக்கணும்னு ஆசைப்படறேன்னு’ சொல்லி நீ என்னை அழைச்சிருந்தா நான் கொஞ்சமானும் இதைப்பத்தி ஒரு நொடியானும் யோசிச்சானும் பார்த்திருப்பேன்..... ஆனா இப்போதும் கூட... சீ...

அந்த சுலோவும் இப்போ போய்டா, உனக்கு உடம்பு பசி வயிற்று பசி தீர்க்க வழியில்லாமல் போனது.... எத்தனை நாள்தான் ஹோட்டலில் சாப்பிட முடியும், இல்ல வேசியோட படுக்க முடியும்...... நீதான் கஞ்சனாச்சே, காசு செலவழிச்சு இதை எல்லாம் அனுபவிக்க மனசே வராதே உனக்கு..... அதான் ஓசியில நான் கிடைச்சா கூட்டிகிட்டு போய் உள்ளே அடைச்சு வெச்சு உன் இஷ்டபடி ஆளலாம்னு முடிவு பண்ணி, என்னைத் தேடி வந்திருக்கே, உனக்கு வெக்கமா இல்லையா, சீ, நீயும் ஒரு மனுஷனா” என்றாள் முகத்தை அசூயையுடன் திருப்பிகொண்டு.

அவளின் ஒவ்வொரு வார்த்தையும் வாசுவிற்கு முள்ளாக தைத்ததோ இல்லையோ, கீர்த்திக்கு, அவள் உள்ளே எவ்வளவு வலி வைத்துக்கொண்டு சிரித்து மெளனமாக இன்னாள் வரை இந்த துன்பங்களை தாங்கி வந்திருக்கிறாள் என்பதை அவளின் சொற்கள் அவனுக்கு பளிச்சென எடுத்துரைத்தன.
மனம் கலங்கி போனான்.

வாசுவுக்கு வேறே என்ன எப்படி பேசுவது என தெரியவில்லை..... ஏனெனில் அவள் சொன்னது தான் அவன் நினைத்ததுமே, ‘பேசாமல் இவளை கண்டெடுத்து அழைத்து சென்றுவிட்டால் எல்லாமே ஓசியில் கிடைத்துவிடுமே’ என நினைத்துதான், அழைக்க வந்தான்.....

அவனது நண்பன் ஒருவன் தான் கோவைக்கு வந்தபோது கீர்த்தியுடன் மனு காரில் செல்லும்போது கண்டு வாசுவிற்கு விவரங்கள் திரட்டி கூறி இருந்தான்.... அவர்கள் வீட்டு பார்டியில் கலந்து கொண்டவனுள் அவனும் ஒருவன், அதனால், அவனுக்கு மனுவை உடனே அடையாளம் தெரிந்து போனது.... சரி அழைத்து போய்விடுவோம் என வாசுவும் உடனே கிளம்பிவிட்டான்..... ஆனால், பசு போல வாயை திறக்காமல் எல்லா கொடுமைகளையும் அனுபவித்த அவனுக்கு தெரிந்த மனஸ்வினி, இப்போது புலியாக மாறி அவனையே கடித்து குதறுவாள் என அவன் கனவிலும் நினைக்கவில்லை.

“இவனை நம்பி கட்டினவனையா எட்டி உதைக்கிற, வெளியேபோன்னு சொல்றே, நாலு நாள் உன்னை நல்லா உபயோகிச்சுட்டு கறிவேப்பிலை மாதிரி உன்னை தூனு துப்பிடுவான் இவன்.... அப்போ வருவேடீ என்கிட்ட அழுதுகிட்டு.... என்னை ஏத்துகோங்கன்னு..” என்றான் கடைசி கையாக.

அவள் கேலியாக சிரித்தாள்.
“ஆமா, உன் புத்தி எங்கே போகும்....காமால கண்ணுக்கு எல்லாமே மஞ்சளாக தானே தெரியும், அதான் தன்னை போல பிறரையும் நினைனு இவரையும் உன்னைப் போல புத்தி கொண்டவராத்தான் உன்னால நினைக்க முடியும்.....”

“அவர் எவ்வளவு உசத்தி, உயர்ந்த குணமுடையவர், அவர் அன்பு பண்பென்ன உனக்கு விளக்கிகிட்டு இருக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை..... அப்படியே நான் இந்த வீட்டை விட்டு ஏதானும் காரணம் மூலமா வெளியேறுகிற நிலை வந்தாலும் நான் கண்டிப்பா உன்கிட்ட வரமாட்டேன்....”

“எனக்குன்னு கையில உத்யோகம் இருக்கு, திறமை இருக்கு, படிப்பு இருக்கு, அதுவும் கூட இவர் எனக்கு போட்ட பிச்சை, அது என்னை காப்பாத்தும்..... இதெல்லாம் மிஞ்சி என் சுயகவுரவம்னு ஒண்ணு இப்போ என்கிட்டே இருக்கு, அது எனக்கு சோறு போடும்.... போ வெளியே” என்றாள்.

“என்னடா, இதெல்லாம் உன் ட்ரெயினிங்கா?” என கீர்த்தியின் மீது பாய்ந்தான்.
அவன் சட்டை காலரை கொத்தாக பிடித்த கீர்த்தி, “உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, மனுவோட பேசணும்னே, அவளும் உன்கிட்ட பேசிகிட்டு இருந்தா, அவளே சமாளிச்சுகுவானு தெரிஞ்சதாலா நானும் மௌனமா இடைபடாம பார்த்துகிட்டு இருந்தேன்..... ஆனா இனியும் நீ இங்கே நின்னு மேலும் மோசமா ஏதானும் நடந்துக்க முயற்சி பண்ணினா, அடுத்தது நான் போலீஸ்கிட்ட போக வேண்டி வரும்.....”

“அவ நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு.... டைவர்ஸ் நோட்டீஸ் வரும், மரியாதையா கை எழுத்து போட்டு அனுப்பு... பேசாம பிரிஞ்சுடு.... அவளை மறந்துடு... எக்காலத்திலேயும் இனி அவ உன்கிட்ட வர மாட்டா... அவ உனக்கு எந்த சொந்தமும் இல்லை..... மாட்டேன்னு முரண்டு பண்ணினா, கோர்ட் கேசுன்னு உன் நிலை தான் நாறி போகும்..... அவளை நீ எவ்வளவே இழிவு படுத்தினாலும் நான் அவளை மனசார எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்வேன்..... இதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனா உன் வண்டவாளம் வெளியே தெரிஞ்சா உனக்குத்தான் அவமானம்..... அதை யோசிச்சுக்க” என்றான்.
போலிஸ் கோர்ட் என கேட்டு வாசு பயந்தான். ஆனாலும் தன் ஜம்பம் விடாமல் கெத்தாக,
“நீ எப்படி நல்லா இருக்கேன்னு நானும் பார்க்கறேன்” என சூளுரைத்தான்.... அவனை கண்ணாலும் காணாமல் அவள் வெறுப்புடன் முகம் திருப்பிக்கொண்டாள்.

“இவன் சொல்றதெல்லாம் உண்மையா, இவனையா கட்டிக்க போறே?” என கேட்டான். அவள் பதிலை வாசு ஆவலுடன் எதிர்பார்த்தானோ என்னமோ, கீர்த்தி எதிர் பார்த்தான்.....“ஆமா, இப்போ அதுக்கு என்ன” என்றாள்.
“ஏண்டீ, உனக்கு வெட்கமா இல்லை, இதை கட்டின புருஷன், என்கிட்டேயே சொல்ல...?” என்றான்.

“நீயா, கட்டின புருஷனா.... இதை சொல்லிக்க உனக்கே வெக்கமா இல்லாதபோது இப்படி பட்ட நல்ல மனுஷரோட இணைய போறேன்னு சொல்லிக்க எனக்கு எதுக்கு வெட்கம், இப்போ நீயா வெளீல போறியா இல்ல...” என நிறுத்தினாள்
அதற்குமேல் வாசு என்ன பேசுவான்.
“இருடீ உனக்கு வெச்சிருக்கேன்” என வாசலுக்கு தடுமாறி வெளியேறினான்.
மனுபொத்தென சோபாவில் சாய்ந்தாள்.

அவன் முன் வராத கண்ணீர், இத்தனை வருடங்களாக அடக்கி வைத்தது, அணையை உடைத்துக்கொண்டு இப்போது அவளையும் மீறி பிரவாகமாக வழிந்தோடியது.... வாசலை அடைத்துவிட்டு உள்ளே வந்த கீர்த்தி இதை கண்டான்.... அவள் அருகே சென்று பேசாமல் அவள் கைகளை பிடித்தபடி அமர்ந்து அவளை அழவிட்டான்.

சிறிது நேரம் விக்கி விக்கி அழுது முகம் சிவந்து, தொண்டை காய்ந்து கமறியது.... தண்ணீரை எடுத்து அவளை தோளோடு தோள் சேர்த்து அணைத்து புகட்டினான்..... குடித்தாள்....இன்னமும் நெஞ்சு விம்மியபடி இருக்க, கண்ணீர் கோடாக வழிந்தபடி இருக்க, அவனை நிமிர்ந்து முகத்தை கண்டாள்..... பின் அவனோடு ஒன்றிகொண்டாள்.

“ஹப்பா, இப்போதான் எனக்கு மனம் நிம்மதியாச்சு..... இவனெல்லாம் ஒரு மனுஷனா, இவனோட நீ எப்படித்தான் அந்த ரெண்டு வருஷமும் தாக்கு பிடிச்சியோ.... விட்டுது பீடைன்னு தலைய முழுகு மனு மா.... நீங்க ரெண்டு பேரும் எடுத்திருக்கற முடிவு நல்ல முடிவு..... சீக்கிரமா நான் கல்யாணத்திற்கு ஏற்பாடு பண்ணறேன், நான் நம்பின என் முருகன்  என்னை கைவிடலை, நான்முதல்ல அவனுக்குத்தான் நன்றி சொல்லணும்” என மெல்ல எழுந்து பூஜை அறைக்குள் சென்றார்.

“போதும் வினி, நிறைய அழுதாச்சும்மா, கண்ணை துடை, போய் முகத்தை கழுவீட்டு வா. அதான் எல்லாம் நல்லபடி முடிஞ்சதே, இன்னும் என்ன வேதனை, நீ தைர்யமா பேசினியே, அவனுக்கு நல்ல பாடம் புகட்டீட்டியே கண்ணம்மா.... இன்னும் என்னடா” என்றான் ஆதுரமாக.

“இல்ல கீர்த்தி, எனக்கு ஆறவேயில்லை, என் ஆத்திரமும் அழுகையும் அடங்கவே மாட்டேங்குது.... ராஸ்கல், இவனல்லாம் ஒரு மனுஷனா, சீ, என் வாழ்வையே நாசம் பண்ணினான் சரி, எங்கப்பா அம்மாவையும் எனக்கு ஆக விடாம பண்ணீட்டானே, அவங்களோட இருந்த காலத்திலேயும் பெரிய அன்பு பாச பிணைப்புன்னு நாங்க அன்னியோன்னியமா வாழலைனாலும் அம்மா அப்பா என்னிக்குமே முக்கியம் தான், உறவு உண்டுதானே.... அவங்க என்னை வெறுத்து ஒதுக்கறா மாதிரி என்னைப்பத்தி இவன் அவங்ககிட்ட கதைகட்டி விட்டுட்டான்.....அதை அவங்களும் நம்பி எனக்கும் அவங்களுக்கும் இனி எந்த ஓட்டும் உறவும் இல்லைன்னு சொல்லிட்டாங்க கீர்த்தி, அதான் எனக்கு தாங்கலை”. என மீண்டும் அழுதாள்.

“ஹ்ம்ம் இப்படி வேறு நடந்ததா, பார்க்கலாம் வினி, நம்மளால ஏதானும் செய்ய முடிஞ்சா மீண்டும் பேசி பார்க்கலாம்” என்றான் ஆறுதலாக.
“பிரயோஜனம் இல்லை கீர்த்தி, நான் நடுவில முயற்சி பண்ணினேன், நான் அம்மான்னு சொல்லும் முன்பே ‘உன்னை அழைக்காதே எந்த தொடர்பும் வேண்டாம்னு தானே சொல்லி இருக்கு, உனக்கு வெக்கமா இல்லையா திரும்ப திரும்ப அழைக்கிறியேன்னு கத்தீட்டு வெச்சுட்டாங்க..... மூணாம் தரம் நான் ஹலோன்னதுமே போனை வெச்சுட்டாங்க” என்றாள் விம்மியபடி

“ஹ்ம்ம் என்ன செய்யறது.... தேத்திக்கோ.... உனக்குதான் கண்ணுக்கு கண்ணா எங்கம்மா இருக்காங்களே, போதாதா கண்ணம்மா” என்றான்.
“உண்மைதான்” என்றாள் புன்னகைத்து.

“ஒண்ணு கேட்கலாமா?” என்றான்.
‘என்ன’ என நிமிர்ந்தாள். இப்போது அழுகை நின்றிருந்தது.
“என்னை பண்ணிக்க இஷ்டம்னு நீ இன்னும் என்கிட்டே சொல்லலையே வினி?” என்றான். “கீர்த்தி” என அவன் மார்பில் சாய்ந்தாள்.
“நீங்க முழு மனசாவா என்னை எற்றுக்க விரும்பறீங்க?” என கேட்டாள்.
“இன்னுமா அதில உனக்கு சந்தேகம் கண்ணம்மா?” என்றான்.
இல்லை என தலை ஆட்டினாள்.
“அப்போ பின்னே?” என்றான் கேள்வியாக.
“எனக்கும் சம்மதம்” என்றாள்.
“எதுக்கு?” என்றான் கண் சிமிட்டி.
“சி போ” என அவன் மார்பில் குத்தினாள். அவளை அணைத்துக்கொண்டான். மனம் பெரும் நிம்மதி கண்டது.... பெரிய பொக்கிஷம் ஒன்று கையில் கிடைத்தது போல உணர்ந்தான்.

வாசு வந்த போன ரணம் மனதை விட்டு நீங்க சில நாள் பிடித்தது மனுவிற்கு.... கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு வந்தாள்.... அவள் அப்படி ஆகும்வரை கீர்த்தியும் மிகவும் அன்புடனும் ஆதரவுடனும் அவளை பார்த்துக்கொண்டான்.... தம் காதலை பற்றி மறந்தும் அவளிடம் பேச்சு குடுக்கவில்லை, நெருங்கவில்லை..... அந்த கண்ணியம் அவளை மேலும் அவன் மேல் காதல் கொள்ள வைத்தது.

கற்பகம் உற்சாகத்துடன் நடந்தவற்றை நடக்கவிருக்கும் திருமணத்தை பற்றி காஞ்சனாவுடனும் ராஜனுடனும் பகிர்ந்து கொண்டார்.... காஞ்சனா தேதி நிச்சயம் ஆனதும் உடன் புறப்பட்டு வருவதாக கூறினாள்..... கீர்த்தியை அழைத்து மகிழ்வுடன் பேசிகொண்டாள்.
அப்படியே அவன் போனை மனுவிடம் குடுக்க, “அண்ணீ, சாதிச்சுட்டீங்க, எங்க அண்ணனை மீண்டும் மனுஷனா ஆக்கிட்டீங்க, எங்க இப்படியே இருந்துடுவாரோனு நான் கலங்காத நாளில்லை... ரொம்ப நன்றி அண்ணி, உங்களால தான் அண்ணா வாழ்வு மலர போகுது” என்றாள் கண்ணீர் மல்க.

“ஐயோ, என்ன நீங்க, இப்படி பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க, எனக்கு அதுக்கெல்லாம் அருகதை இல்லை.... நானே அனாதையா இங்கே ஒண்ட வந்தவ காஞ்சனா, எனக்குதான் ஒரு பொன்னான வாழ்வை உங்க அண்ணா ஏற்படுத்தி குடுத்திருக்காரு” என்றாள்.

“என்ன நீங்க வாங்க னு எல்லாம் பேசறீங்க அண்ணி, என்னை நீ வா னு பேசுங்க.... நான் உங்கள விட சின்னவதான், உங்க காஞ்சனா” என்றாள் பாசத்துடன்.
அதை கேட்டு தன் தங்கைகளை சந்திக்க முடியாமல் இருக்கும் மனுவிற்கு நெஞ்சு நிறைந்தது.
“சரி காஞ்சனா, நீ எப்போ வருவே?” என்றாள்.

“சீக்கிரமா வரேன் அண்ணீ, முகூர்த்தம் குறிச்சதும் ஓடி வந்துடுவேன், எனக்கு இங்க கால் நிக்காது” என்றாள் உற்சாகத்துடன்.
“அதை சீக்கிரமா குறிக்க வைப்பதில இருக்கு உங்க சாமர்த்தியம்” என்றாள் கிண்டலாக அவளை கேலி செய்தபடி.
“போ காஞ்சனா” என வெட்கினாள் மனு.

இதை எல்லாம் பக்கத்தில் நின்று மனுவின் தோளை சுற்றி கை போட்டுகொண்டு கேட்டு கொண்டு சிரித்தபடி நின்றான் கீர்த்தி..... போனை வைத்ததும் “கடைசீல என்ன சொன்னா காஞ்சனா, நீ அவ்வளோ அழகா வெட்க பட்டே வினி?” என்றான் அவளையே பார்த்தபடி. “ஒண்ணுமில்லை” என முனகினாள்.
“சொல்லேன்” என்றான் கெஞ்சலாக.
“இல்ல, வந்து.... முகூர்த்த சீக்கிரமா குறிக்க வைக்கறதில இருக்கு என் சாமர்த்தியம்னு சொல்றா” என்றாள் தலை குனிந்தபடி.

“ஓ சரியா சொல்லீட்டா, அதுக்கு நீ என்ன பண்ண போறே வினி?” என்றான் கண்களில் குறும்புடன்.
“நானா, நான் வந்து.....” என சீரியசாக ஆரம்பித்து “உங்கள நாலு தர்ம அடி போட போறேன்” என்றாள் குறும்புடன்.
“அடப்பாவமே, டேய் கீர்த்தி கடைசீல உன் நிலை இப்படியாடா ஆகணும்?” என தன்னையே கண்டு பேசிகொண்டான்.
அவள் கலகலவென சிரித்தாள்..... அப்படி சிரிக்கும் அவளை காலமெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என தோன்றியது கீர்த்திக்கு.



2 comments: