Monday 19 August 2019

CHENNAI - EN PAARVAIYIL 1




சென்னை என் விழிகளில் – 1
சென்னையைப் பற்றி என்ன சொல்ல... எதை சொல்ல, எதை விட!!! பிரமிப்பு. பிரம்மாண்டம். கலாச்சாரமும் அன்பும் பண்பும் தன் உயிர் மூச்சாக கொண்டு நடமிடும் அழகு மங்கை. ஆண்டுகள் பல ஓடி மறைந்தாலும் இன்னமும் இளமை குன்றாது இளவயது மங்கையாக உலா வருகிறாள் நம் மனதில்.
அன்றைய சென்னை 60 ல் - துவங்கி இன்றுவரை ஒரு இனிய பயணம்... அதில் பல உணர்ச்சிகள் காட்சிகள் ரசனைகள் படைப்புகள் தன்னில் அடக்கியவள் எங்கள் அன்பு சென்னை மகள்.
அன்றைய சென்னையில் R A புரம் வாசி நான். சற்றே முன்னேறினால் அபிராமபுரம், மயிலை, பின்னே சென்றால் மந்தைவெளி அடையார் என அமைந்த ஒரு அருமையான இடம்.
முழுவதுமான மத்யமர் குடி இருப்பு பகுதி. சிறிதும் பெரிதுமாக பங்களாக்கள், சிறு கடைகள், அண்டாண்டுகாலமாக பழக்கமான கடைக்காரர்கள் என இனிய பிணைப்பு. 
டெலிபோனே அரியதாக இருந்த நேரம் அது. கரண்ட் போனா எல்லாரும் வீட்டு வாசலில் ஆஜர். படிக்கட்டில் திண்ணையில் தஞ்சம்.
கரண்ட் இருந்தாலுமே மாலையில் வீட்டின் முதியோர் ஈசி சேரில்... மகன் மருமக்கள் பேரப்பிள்ளைகள் அக்கம் பக்கம் திண்ணைகளில், அரட்டை கச்சேரி உண்டு.
வேனிற் காலத்தில் மாமரத்தடி நிழலும் உண்டு ருசியாக கடித்து திங்க மாங்கனியும் உண்டு... உப்புமிளகிட்ட மாங்காயும் உண்டு.
தெருவில அப்போதான் புதியதாக விற்பனைக்கு வந்த குல்பி... பானையில சிவப்பு துணி சுற்றி ஆவலை தூண்ட மணி சத்தம் போட்டபடி.. கேட்டாலே வாசலுக்கு ஓட வைக்கும். இரவில் வருவான்.

பின்னோடு சோன்பாப்டி. பெரியதொரு கண்ணாடி குடுவையில் மங்கிய வெள்ளை நிறத்தில் நாறுபோல் தோன்றும் அதன் சுவை நாக்கில் கரையும். பேப்பர்ல சுத்தி தருவான். நிமிடத்தில் நாவில் கரைந்து மாயமாகும்.
மதிய நேரங்கள்ல, எந்த வீட்டில குழந்தைங்க இருக்காங்கனு தேடி போய் பலமாக குரல் கொடுக்கும் Joy ஐஸ்கிரீம் மற்றும் Rita ஐஸ்கிரீம்.
எங்கள் தெருவின் முன்னேறி போனால் st மாரிஸ் ரோடு. அங்கே புனித மேரி மாதாவின் தேவாலயம் பிரசித்தம். இப்போதும் உள்ளது. வாரன் ரோடு எனப்படுவது பிரசித்தம். அங்கே அடியில் கூவத்தின் கிளை கால்வாய் அதன் மேலுள்ள சின்ன ப்ரிட்ஜ்... தாண்டினால் சங்கர மடம், மந்தைவெளி.
அந்நாளில் 2 ரூபாய் கொடுத்து ரிக்ஷாவில் மைலை கபாலி கோவிலுக்கு போயிருக்கோம். அங்கே இறைவனை காண்பது சில மணித்துளிகள். பெரியதொரு கோவில் அது. எப்போதுமே கூட்டம்தான்.,. தெப்ப குளத்தில் ஜகஜ்ஜோதியாக விளக்குகள் அலங்காரத்துடன் தெப்பம், இறைவனை அதிலேயே கூட அமர்ந்து சென்று தரிசித்ததுண்டு.
நார்த் மாடா தெருவில் குளத்தை ஒட்டியபடி தேர்த்திருவிழா நாட்களில் நிறைய குட்டி கடைகள் முளைக்கும்.
தரிசனம் முடிஞ்ச கையோட கடைகளின் மேல் படை எடுப்பு. வளையல்கள் மீது மோகம், குஞ்சலம், சொப்புகள். சின்ன பொ போட்டு அச்சு, கோலக்குழாய் அச்சுகள் சொல்லிக்கொண்டே போகலாம்.
ஐந்துக்கும் பத்துக்கும் சாமான்கள் கைகொள்ளாமல் வாரிக்கொண்டு வருவோம் மறுபடி ரிக்ஷாவில்.
இன்றைக்கும் அந்தக் கடைகள் உள்ளன ஆனால் இப்போது வருடம் முழுவதுமே கூட, பல பல கடைகளும் வந்துவிட்டன.
நவராத்திரி முன்புள்ள ரெண்டு வாரம் அங்கே போனா அன்றும் இன்றும் கால் வைக்க முடியாது. கொலு பொம்மைகளின் கண்கொள்ளா அணிவகுப்பு, கூடவே plastic சாமான்கள், பார்க் ஸ்கூல் போன்றவற்றிற்கு உபயோகப்படும் பொம்மைகள்.
குங்கும சிமிழ் மஞ்சள் குங்குமம் மட்டுமே கிடைத்திருந்தன அந்நாட்களில். இப்போதோ தாம்பூலம் குடுக்க ஆயிரமாயிரம் பரிசு பொருட்கள்.
கபாலி கோயிலை ஒட்டி துவங்கப்பட்ட ‘ராசி சில்க்ஸ்’ ‘அம்பிகா அப்பளம்’ இன்றும் உள்ளன, பெருமையாக இருக்கு.
அதே தெருவில் இருக்கையிலேயே ‘ராயர் மெஸ்’ மாறாக முடியுமா...
காலை வேளை இட்லி பொங்கல் வடை கொத்சு சட்னி சாம்பார் நெய் ஒழுக, கை மணக்க வாய் வாழ்த்த உண்ட அனுபவம். இன்றும் மெஸ் செவ்வனே நடைபெற்று வருகிறது எனக் கேள்வி.
‘கற்பகம் ஹோட்டல்’ தெற்கு மாட வீதியில், பின்னர் அதுவே விஸ்தரிக்கப்பட்டு ‘கற்பகம் கல்யாண மண்டபம்’ ஆக ஆனது என கேள்வி.
‘தண்ணித்தொர மார்கெட்.’.. கல்யாணமா, சீமந்தமா சுபஸ்வீகாரமா எந்த சின்ன பெரிய விழாக்களுக்கும் மக்கள் படை எடுக்கும் சின்ன கொத்தவால் சாவடி அது. கிடைக்காத சாமானே காய்கறி கனிகளே கிடையாது அங்கே.
மருந்து மூலிகை வகையறாக்களுக்கு ‘டப்பா செட்டி கடை’.
பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் வேண்டியவற்றை வாங்க luz corner இல் ஒரே போன்ற பெயர் பொருத்தம் கொண்ட பல கடைகள் அவற்றில் சில இன்றைக்கும் உள்ளன... crores & crores, lakhs & lakhs , millions & millions... indiabookhouse - என் முதல் கோல புத்தகம் வாங்கியது நினைவுக்கு வருகிறது.
அண்ணாமலைபுரம் 6 மெயின் ரோடுகள், கிராஸ் ரோடுகள்... ஆறாவது மெயின் ரோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற பிள்ளையார் கோவில், அவர் சன்னதி மட்டுமே கட்டப்பட்டு வாசலில் நிறைய மணற்பரப்பும் மரங்களும் திண்ணைகளுமாக இருந்த நினைவு, என் 2 வயதிலிருந்து அங்கே சென்று வந்தவள் நான். பின்னர் பல சன்னதிகள் கட்டினர். கோவிலும் பெரிதாகியது. புழக்கமும் நிறைந்தது.


நாங்கள் இருந்த முதல் மெயின் ரோடின் பின்னே குருகுலம் எனப்படும் ஏரியா. அங்கேயே தெருவீதி அம்மனும் உண்டு, சின்ன குருத்வாராவும் உண்டு. ஆடி மாதங்களில் அம்மனுக்கு கூழு ஊற்றும் பண்டிகை கண்டிப்பாக கோலாகலமாக நடைபெறும். உரியடி, உடுக்கை அடி காதை பிளக்கும், காலையிலிருந்தே அம்மன் பாடல்கள் காதை செவிடாக்கும். இரவில் நடுநிசி வரை வாண வேடிக்கை, தேரில் அம்மன் ஊர்வலம் என அந்த மாதமே திருவிழா கோலம்தான்.
எங்க ஏரியா உள்ள வாங்கனு கூவி அழைச்சாச்சு. படிச்சு மகிழுங்க...
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்....
மிச்சம் எல்லாம் எப்போ சொல்றது... விரைவில் சுற்றி பாற்போம் நட்புகளே. வணக்கம்.

No comments:

Post a Comment