Monday 19 August 2019

CHENNAI - EN PAARVAIYIL - 2




சென்னை – 2
இன்று எனக்கு மனதுக்கு மிக நெருக்கமான இரண்டு இடங்களை பார்க்க போறோம் வாங்க...
ஆழ்வார்பேட்டை, டி நகர்
ஆழ்வார்பேட்டை எனப்படும் alwarpet எனது மறுவீடு... புக்ககம் அல்ல நான் படித்த அகம். என் பள்ளிகள் - 2 கிளாஸ் வரை st francis xaviers, பின்னர் அதே தெருவில் உருவாகிய Boston school.
மௌபரிஸ் ரோடு - டிடிகே சாலை இணைபிரியாமல் நீளும் அந்த தெரு மனதுக்கு மிக நெருக்கம். பள்ளி காலம் முழுவதும் அங்கே சுற்றி திரிந்த இடங்கள்.
பின்னைய நாட்களில் மீண்டும் மனதுக்கு நெருக்கமாகிய காரணமும் வேறே உண்டு... அதே சாலையில் உள்ள சபாக்கள்.
ம்யுசிக் அகாடெமி, நாரத கான சபா எல் ஆர் சுவாமி (இப்போதைய சபா) அப்போதைய ஆபீஸ் நிறுவனம், பின்னர் திருமண மண்டபம்.
சென்னையை பற்றி பேசும்போது அதன் soul பற்றி சொல்லாமல் இருக்க முடியாதே... கலைமகளின் பொக்கிஷமென போற்றி பாதுகாக்கப்படும் இயல் இசை நாடக அரங்கங்கள் நிகழ்சிகள்.
அந்த காலத்திலே திரு RS மனோகர் அவர்களின் புராண நாடகங்கள் மிக பிரசித்தம். காத்தாடி ராமமூர்த்தி, மௌலி YGP/YGM நாடகங்கள் கொடிகட்டி பறந்த காலம்.
டிசம்பர் இசை விழா அமைதியாக கலப்படமில்லாத கோலாகலங்கள் இல்லாமல் இனிமையாக இசைக்காக மட்டுமே நடந்தேறிய காலகட்டம். ராஜா அண்ணாமலை மன்றம், ம்யூசிக் அகாடெமி, மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ், நாரத கன சபா கிருஷ்ணா கான சபா இப்படி சில சபாக்கள் மட்டுமே.. Music in its purest form unlike today.
இன்றைய இசை விழாக்கள் வியாபாரம் மட்டுமே. சபாக்கள், பாடுபவர்கள், நடனமாடுபவர்கள், அவர்கள் உடைகள் அங்கே நடத்தப்படும் உணவகங்கள், எல்லாவற்றிலுமே வியாபார நோக்கம் ஓங்கி நிற்கிறது என்பது வருத்தமான விஷயம்.
அப்போதைய முதல் சில 5 ஸ்டார் ஹோட்டல்கள் – சோழா, மாரிஸ், அடையார் கேட்.
தேனாம்பேட்டை - அண்ணா சாலை நெடுஞ்சாலையில் மிக பிரபலமான திரைப்பட அரங்கங்கள்... அன்றைய முதல் multiplex – Safire, Blue Diamond and Emerald அரங்குகள். பெயர்களே மிக ஸ்டைலாக எழுதப்பட்டிருக்கும். ஆங்கில படங்கள் அங்கே கோலோச்சிய நாட்கள் அவை.
Blue Diamond இல் தொடர் காட்சிகள் உண்டு நிறைய படங்களுக்கு. காலை 7 முதல் இரவு 10 வரை என நினைக்கிறேன்... அடுத்தடுத்து ஒரே படம் ஓடிக் கொண்டே இருக்கும். ஒரு டிக்கெட்டில் எப்போது வேண்டுமானாலும் உள்ளே செல்லலாம் வெளியே வரலாம்.
அதே சாலையின் நேரே ஆனந்த், லிட்டில் ஆனந்த், திரு உமாபதி அவர்களுடையது...
அண்ணாசாலை பிறகு செல்வோம் இப்போது அப்படியே ஒடித்து திரும்பி டி நகர் போய்டலாம். ஆவணி பிறந்துடுத்து, கல்யாண சீசன் வேற, ஜவுளி நகை கடைகள் ரங்கநாதன் ஸ்ட்ரீட் shoppers Paradise – தேவலோகம். இன்றைய போலவே அப்போதும் கூட்டம் நெருக்கியடித்ததுதான் என்றாலும் இப்போதைய frenzy அப்போது இல்லை.
அதே தெருவின் மூலையில் சாந்தமாக ஓரமாக அமைதியாக ஒரு வூட்லண்ட்ஸ் உண்டு.
ஒரு நல்லி ஒரு குமரன் ஒரு GRT TB Jewellery. இவையே.
நல்லியில் காலணா டிஸ்கவுன்ட் கிடையாது, இன்றுவரை. அவர்கள் தரத்தின் சான்று அது என நினைக்கறேன். நல்லி வாசல்ல நெருக்க கட்டிய முல்லை மல்லிகை சரங்கள், உப்பு மிளகாய் பொடி தூவிய மாங்காய் பத்தைகள்... அபாரம்.
பாண்டிபஜார் பனகல் பார்க் அன்றைய மிக பிரபலமான பார்க். சாந்தா பவன்ல கண்டிப்பாக tiffin உண்டு. டி நகர் ஷாப்பிங்னு துவங்கும்போதே, இந்த கண்டிஷன போட்டுடுவோம். இன்னிக்கெல்லாம் முக்கி முக்கி சாப்பிட்டாலும் இருபது முப்பதுனு தான் செலவாகும் அங்கே பூரி மசாலா ரொம்ப famous
அதன் பின்தான் சரவணா பவன் ஆனந்தா பவன் படை எடுப்புகள் எல்லாம்.
பாண்டிபஜார் தெருவோர கடைகள் இப்போது அவ்வளவாக இல்லை. அந்நாளில் வீட்டுக்கு குடும்பத்தினர் அனைவர்க்கும் தேவையான பலதும் இந்த தெருவோர கடைகளிலேயே தரமாக கிடைத்த காலம்.
கைராசி ப்ளவுஸ் பிட் மாட்சிங்கிற்கு மிக பிரபலம், அதே போல ஸ்டார் பிட்.
டி நகர் ரயில் நிலையத்தை சென்றடையும் மிக பிரபலமான ரங்கநாதன் தெரு. அம்மா அப்பா தவிர மிச்ச எல்லாமே சீப்பாகவும் கிடைக்க  கூடிய இடம். கைய பிடிச்சு இழுக்காத குறையா இவங்க வியாபாரம் பண்ற அழகே தனிதான். இன்றும் அந்த கடைகள் நிலைத்து நிற்க இதுவும் ஒரு முக்கிய காரணமோ....
அங்கேதான் முதல் முதல் கோன் ஐஸ் மெஷின் மூலம் ரொப்பி குடுத்தார்கள். கரும்பு ஜூஸ். மசாலா தூவி பொரிகடலை பொட்டலங்கள். கடலை பட்டாணி பொட்டலங்கள். நாலணா எட்டணா காசில் கொள்ளை கொள்ளையாக.
சிவா விஷ்ணு  கோவில். டி நகர் மெயின் பேருந்து நிலையம்.
டி நகர் மிக நெருக்கம் என்பதன் முக்கிய காரணம். என் பாட்டி தாத்தா வீடு (அன்னையின் பெற்றோர்) அங்கேதான். கிருஷ்ணவேணி திரை அரங்கின் பின்னேயே தாமோதர ரெட்டி தெருவில்.
நானும் பாட்டியும் சொல்லாமல் கொள்ளாமல் மதிய ஆட்டம் பார்க்க பல நாட்கள் ஓடிவிடுவது உண்டு. எத்தனை இனிமையான தருணங்கள். ‘தில்லானா’ மட்டுமே அங்கேயே 3 முறை பார்த்திருக்கேன். பல பாலச்சந்தர் படங்கள், சிவகுமார் கமல் ரஜினி படங்கள்.
2.90 டிக்கெட்டு அப்போ டிரஸ் circle.
1 மணி ஆட்டம் பார்த்துவிட்டு பொடி நடையாக நடந்தே வீட்டுக்கு போய்டுவோம். அதே பட்டாணி கடலை, கடலைமிட்டாய்.
இப்போது ஒரு குடும்பம் ஒரு சினிமாவிற்கு செல்ல ஆயிரம் ருபாய் இல்லாமல் முடியாது என்பது போல அல்ல. அந்த காலம் அது அது வசந்தகாலம்தான்.
இன்னிக்கி ரொம்ப அலைச்சல் நாளைக்கு வேறே இடத்துக்கு போகலாம், சரியா... அசைபோடுங்கள்.




2 comments: