Tuesday 20 August 2019

CHENNAI - EN PAARVAIYIL -3



#சென்னை
சென்னை என் பார்வையில் – 3
அப்பாடா! ஷாப்பிங் அலுப்பு தீர்ந்துதா...

டி நகர்லேர்ந்து நேரா அண்ணாசாலைக்கு போலாம் வாங்க.
சென்னைய பற்றி எழுத சொன்னா எல்லாருமே ‘LIC கட்டிடம்’ பத்தி சொல்லி இருப்பா, அத விட்டுடலாம். அது பற்றி எரிஞ்சு சென்னையே அல்லோகலப்பட்டது வேற விஷயம்.

‘ஸ்கைலாப்’ னு செயற்கைகோளா மீட்டியோரா... விழபோறது நம்ம தலைமேலனு ஒரு புரளி, அல்லோகல்லப்பட்டது 79 னு நினைக்கறேன்.

நேரா ‘சாந்தி திரை அரங்குக்கு’ போகலாம். அங்கேயும் ஸ்பெஷலா நெருக்க தொடுத்த ஜாதி மல்லி முல்லை பேமஸ். சிவாஜி sir அவரே கட்டிய அரங்கம். அவர் படங்கள் ஒண்ணு விடாம படையெடுத்து பார்த்த இடம். உள்ளே நுழைஞ்சா அவரோட எல்லா படங்களின் ஸ்டில்ஸ் சுவற்றை அலங்கரிப்பதை காணலாம். ஆவலோட அதை பார்த்து, இதுல எத்தனை படங்கள் நாம் பார்த்திருக்கோம்னு எண்ணறது ஒரு தனி இன்பம்.

சற்றே முன்னே சென்றால் இன்னொரு மகத்துவம் வாய்ந்த மல்டிப்ளக்ஸ் – ‘தேவி’, தேவிபாலா, தேவிகலா, தேவி பாரடைஸ். சுத்தி சுத்தி மேலே ஏறி போய் தலை கிறுகிறுத்த அனுபவம் உண்டா J
தேவில நிறைய பேமஸ் ஹிந்தி படங்கள் பார்த்ததுண்டு. ‘ஏக் துஜே கே லியே’ ‘க்ஹூப்சூராத்’ போன்றவை.

முன்னாலே ‘வெல்லிங்க்டன்’, ‘மிட்லாண்ட்’.

( இந்த நேரத்தில ஆங்கில படங்களுக்குன்னு மட்டுமே பேமஸ் ஆன தியேட்டர் ஒண்ணு உண்டு. அதுதான் ‘பைலட்’ அரங்கம்... அப்பப்பா எத்தனை எத்தனை ஆங்கில படங்கள் அங்கே பார்த்திருக்கோம். அப்பாக்கு ரொம்ப பிடிக்கும் அதனால பலவும். BENHUR, TEN COMMANDMENTS, WHERE EAGLES DARE, POSIDIEN ADVENTURE, LAWRENCE OF ARABIA, GUNS OF NAVARONE இப்படி).

முன்னாலே சென்றால் ‘கன்னிமாரா’ ‘தாஜ் கோரமண்டல்’, அப்பப்பா அந்த காலத்தில் எத்தனை பேமஸ். கன்னிமாரா எதுக்கோ இல்லையோ அவங்க நூலகத்துக்கு ரொம்ப பேமஸ்.

எக்மோர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் சொல்லணுமா என்ன...
அங்கேர்ந்து நேரா கொஞ்ச நேரமெல்லாம் ட்ராவல் பண்ணுவோம், அலுப்பு தீர உட்கார்ந்து பிரயாணத்தின்போது பார்த்தவற்றை அசைபோடுவோம்...

அதற்குள் பெசன்ட் நகர் திருவான்மியூர் வந்துரும்.
‘அஷ்டலக்ஷ்மி கோவில்’. பிரம்மாண்டம், அந்த காலத்தில் கட்டி முடித்ததும் ஒரே பரபரப்பு. மேலே ஏறி ஏறி கால் வலிக்க ஒவ்வொரு லக்ஷ்மி அவதாரத்தையா தரிசித்தபடி மேலே போகணும்.. குறுகலான படிகள்.

எல்லாரோட வீட்டிலும் பெரியோர் அஷ்டலக்ஷ்மி படம் பூஜை அறையை அலங்கரித்தது. நடுவிலே பெரியதோர் மகாவிஷ்ணு, அவரை சுற்றிலும் அஷ்டலக்ஷ்மிகள். அவரவருக்குண்டான ஸ்லோகங்களும் பெயர்களுடனும்.

‘அன்னை வேளாங்கண்ணி சர்ச்’. சில முறை போயிருக்கேன்.
அங்கே அருகே சில வருடம் முன் பிரசித்தி பெற்ற ‘முருகன் இட்லி கடை’, அன்றைய அவர்களின் சுவை ஸ்பெஷல்தான்.

பெசன்ட் நகர் பீச், எல்லியட்ஸ் அண்ட் மெயின் மரினா போலல்லாமல் அன்றைய காலகட்டத்தில் கொஞ்சம் ஆள் கூட்டம் குறைவாகவும் சுத்தமாகவும் அமைதியாகவும் இருக்கும். அதனால அங்கே போயிருக்கோம் நிறைய. விட்டா சாந்தோம் பீச் போயிருக்கோம்.
சில வருடங்கள் முன்  திருவான்மியூரில் கட்டப்பட்டுள்ள ‘அறுபடை வீடு கோவில்’ மிக அருமை.

‘தியசாபிகல் சொசைடி’ அமைதியின் வாசஸ்தலம். உள்ளே போனதில்லை. அந்த இடமெல்லாம் பரிச்சயம். மரமும் இயற்கையும் சூழ்ந்த இடம். குளுகுளுன்னு மனதை அள்ளும்

அதே போல ‘ராஜாஜி மண்டபம்’ ‘காந்தி மண்டபம்’ போன்றவை. ஓரிரு முறை போனதுண்டு. பள்ளி நாட்களில் ‘கிண்டி பார்க்கு’ போனதோடு சரி.
சென்னைல நான் அதிகம் சுற்றி அலைந்தது இந்த இடமெல்லாம்தான்.
இனி கலாச்சாரம், மக்கள் அவர்களின் குண நலன்கள் பார்க்கலாம். பலருக்கும் பூக்காரி காய்கறி வாடிக்கை உண்டு.

எங்களுக்கு ஒரு 50 வயது தக்க பூக்காரர் வருவார். ஆள் ஆறடிக்கும் மேலே இருப்பார். அதுக்கும் மேலே கை உயற்றி ‘மா பூ னு’ ஒரு சத்தம் போடுகிட்டு வருவார். அவர் உசரம் கை மேலே ஏற்றிய உசரம் எங்கிருந்து வேணும்னாலும் அவர பார்த்துடலாம்.

எங்களுக்கு நித்தமும் பூ குடுப்பார். சுவாமிக்கும் பெண்கள் எங்களுக்கும். அதிலேயும் என்னை ரொம்ப பிடிக்கும்.
‘பாப்பா இரு’ அப்படீன்னு ஈர துணி விலக்கி அதன் அடியில் எனக்காக ஒளித்து வைத்து ஸ்பெஷலாக ரோஜா பூ எடுத்து குடுப்பார்.

எனக்கு லைட் பிங்க் பன்னீர் ரோஸ் ரொம்ப பிடிக்கும். அது மொட்டவிழ்ந்த நிலையில் ஓரிரு இலைகளுடன் இருக்கணும், அதை காதோரம் செருகணும்னு ஆசை.

வெள்ளிகிழமை வெள்ளை யுனிபார்ம், அதற்கேற்றபடி வெள்ளை ரோஜா இரண்டு ஒளித்து கொண்டு வந்து கொடுப்பார். எனக்கு ரோஜா மோகம் அதிகரித்ததுக்கு காரணமே அவரது ரோஜா பூக்கள்தான்.

மல்லி சீசனில் மிக நெருக்கமாக கட்டப்பட்ட மல்லி.. நான் சொன்ன பெரிய அஷ்டலக்ஷ்மி படத்திற்கு ஸ்பெஷலாக 5 முழம் கதம்பம். அப்படி மணக்கும். மல்லி, கனகமாபாரம் மரிகொழுந்து violet கலர்ல ஒரு பூ இருக்கும்... அது, எல்லாம் வெச்சு மிக அழகா கட்டி இருப்பார்.

டிசம்பர்ல டிசம்பர் பூக்கள். அவர்ட பார்த்த கலர்கள் வேறெங்கும் பார்கலை. அது என்ன தனி வாஞ்சையோ எங்கள் பேரில் தெரியாது. அடர்த்தியான பர்பிள், லைட் பர்பிள், அதிலேயே  வெள்ளை நாமம் போட்டது. பிங்க். வெள்ளை, சந்தன கலர்  இத்தனையும் கொண்டு வருவார்.

அதேபோல காய்கறி அம்மணி. கோவையை சேர்ந்தவங்க. அந்த இனிமையான கோவை தமிழில் ‘என்ன கண்ணு நல்ல படிக்கிறியா’ னு வாய்கொள்ளா சிரிப்புடன் வெற்றிலை குதப்பலுடன் வருவாங்க. ‘கூடையை ஒரு கை பிடி கண்ணு’ னு இறக்கி வைப்போம்.

என் தங்கை 3 வயதிருக்கலாம். அவங்க வந்தவுடனேயே கூடைலேர்ந்து குட்டியாக தக்காளியோ கேரட்டோ எடுத்து கடித்து தின்ன துவங்கிடுவா, அதுல அவங்களுக்கு கொள்ளை இன்பம்.
“என் கண்ணு நீ எடுத்து தின்னாதாண்டி கண்ணு எனக்கு நல்ல வியாபாரம்’ என்பார்.

“நம்பீசன் வெண்ணை” பிரசித்தம். மாதம் இரு முறை பெட்டி பொருத்திய வண்டியில் வந்து கொடுத்து விடுவார். அப்படி வெண்ணை வரும் நாட்களில் அதற்காகவே தாத்தாவிற்கு அடை செய்ய வேண்டும். அன்று மட்டுமே வீட்டில் அடை.

அதே போல “புஹாரீஸ்” வண்டி வரும். சுவைமிகு பன்கள் ரொட்டிகள் அத்தனை மென்மையாக வாயிலிட்டால் கரையும். கூடவே ஜெம் பிஸ்கட் குக்கீஸ் எனப்படும் பல்வேறு பிஸ்கட் வகைகள் கிரீம் வைத்த பன்ஸ் ப்ரூட் கேக் இப்படி பலவும். அவரும் மாதம் இரு முறை வருவார்.

சென்னை மக்கள் Heart in the sleeves” என்பார்கள் அதுபோல மிக மென்மையானவர்கள். “Matter of fact” living  கூட. யதார்த்தம் அதிகம். ஓஹோ என பாராட்டி அனாவசிய வஞ்ச புகழ்ச்சி தெரியாது.
அவர்கள முறைத்துகொள்ளாதவரை இனியவர்கள்.

ஆட்டோகரர்கள் டாக்சிகாரர்கள் சண்டை, குழாயடி சண்டை, காய் மார்கெட்டுகளில் வசவுகள் - அதை எடுத்தே இதை ஓடைச்சே பொறுக்கி எடுக்கற...  இன்னாமே பேஜார்.... இது சென்னையின் ஜீவ நாடி. அதெல்லாம் இல்லேனா நம்ம சென்னைக்கு என்ன பெருமை. பரவாயில்லை, அதுவும் ஒரு ரசமயமான சூழல்தான். சாப்பாட்டுக்கு ஊறுகாயைப் போல.

டாக்சின்னதும் ஞாபகம் வருது. கொஞ்சம் காசு அதிகம்... எப்போதானும் ஏறுவோம். கருப்பு டாக்சிகள் மேலே மஞ்சள் பெயிண்டுடன். இப்போது விமான நிலையத்தில் மட்டுமே பார்க்க முடிகிறது. அதிலும் பேபி டாக்சினு ஒண்ணு உண்டு. பொட்டி மாதிரி இன்றைய நானோ பீட் போல சின்னதாக இருக்கும்.

பல்லவனை யாரால் மறக்க முடியும். முதலில் சிவப்பு வண்ணம், பின்னாளில் பச்சை நிறம். இப்போ மெட்ரோ வரை வந்திட்டுது.
எலெக்ட்ரிக் ரயில், பம்பாய் அளவு பிரசித்தம் இல்லையெனினும் பல பேருக்கு ஜீவாதாரம் ஜீவ நாடி.

உஸ்ஸ்ஸ் அப்பாடா! டாக்சி பஸ் ரயில்னு ஏறி இறங்கி சுத்தி பார்த்து களைச்சாச்சு.

அம்மாடா! இனி ஆத்துக்கு போய் ரெஸ்ட் பா.
வேறொரு பொன்னாளில் சந்திப்போம். பொறுமையாக படித்து பாராட்டிய அனைவருக்குமே நன்றிகள்.
என் சின்னவளாம் சென்னை மகள் என்றும் பதினாறாக விளங்க வாழ்த்தி விடை பெறுகிறேன். பை பை






No comments:

Post a Comment