Monday, 18 June 2018

UNNAI KAANAADHA KANNUM KANNALLA - EPISODE 1

Vanakkam. #Unnaikaanaadhakannumkannalla - episode 1

Idhu oru chinna thodar. sila medical vishayangal undu... siladhu padithadhu, sila arindhadhu, siladhu karpanai ena kalandhu ezhudhapattadhu - idhil yedhenum thavaru irundhaal thavaraamal sutti kaattavum.

Healthy discussion and criticisms are always welcome. 

உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல

“ஐயா காபி” என்று குரல் கேட்டு முழித்தான்.
“நீ ஏன் எடுத்து வந்தே, போ, போய் சின்னம்மாவ வரச் சொல்லு” என்றான் கண் திறவாமலே.
“ஐயா” என்றாள் தயக்கத்துடன் ஒரு வித கலக்கமான குரலில். சட்டென்று தூக்கம் கலைந்து பதறி தூக்கிவாரி போட்டு கண் விழித்தான்..... தன்னை சுற்றும் பார்த்தான்..... தான் எங்கு எப்படி இருக்கிறோம் என்று உணர்ந்தான்..... சொல்லொணா துயரமும் வெறுமையும் கொண்டான்....
“வெச்சுட்டு போ” என்றான் வேலைக்கார பெண்ணின் முகம் காணாமல். அவள் உள்ளே வந்து கட்டிலின் அருகில் டேபிளில் காபியை வைத்துவிட்டு சிட்டென பறந்து விட்டாள்.
“என்னடி நீ, இப்படி பதறி வரே?” என்று சிவகாமி கேட்க
“பாவம் சின்னைய்யா” என்றாள்.
“ஏண்டீ என்ன?” என்றார் பயந்து.
“சின்னம்மாவ கேக்குராக” என்றாள்.
‘ஒ’ என்று அவரும் துயரம் கொண்டார். யாரு துயரம் கொண்டு எதுவும் செய்ய முடியாத நிலை..... அதுதான் விதி, அதனால தானோ என்னவோ விதி வலியது என்றனர்.

ஆம், சித்ராங்கி அந்த வீட்டின் சின்ன எஜமானி, சித்ரஞ்சன் அவளது அன்பு கணவன். பதறி எழுந்து இன்னமும் தன் அன்பு மனைவியைத் தேடி கொண்டு முழிக்கும், குழந்தை மனது படைத்த ஆண்பிள்ளை..... தன் அருகில் அணைத்தபடி படுத்திருந்த அவளது சிகப்புச் சேலையை எடுத்து முகத்தோடு வைத்துக்கொண்டு கண் கலங்கி தன் படுக்கையில் அமர்ந்திருந்தான் ரஞ்சன்.
“எங்கடீ போனே சித்து, என்னைவிட்டுட்டு போக எப்படிடி உனக்கு மனசு வந்துது..... நீ இல்லாம நான் எப்படிடி வாழ்வேன், அதை யோசிச்சிருந்தா நீ இப்படி என்னை தவிக்க விட்டுட்டு போயிருப்பியா, எல்லாரும் என்னென்னமோ சொல்றாங்க, நான் அதெல்லாம் நம்பத் தயாரா இல்லை.... எனக்கு நீ வேணும்.... சீக்கிரமா என்னிடம் வந்து சேருவியா என் கண்ணம்மா.... என் சித்ராங்கி... என் சித்து...” என்று கண்ணீர் வடித்தான்.

ரஞ்சன் தன் பெற்றோருக்கு மூத்த மகன். அவனுக்கு ஒரு தங்கை நிவேதா, மணமாகி பெங்களூரில் இருக்கிறாள்..... தந்தை இல்லை, தாய் சிவகாமி மட்டுமே உயிருடன் இருக்கிறார்.....
இவன் நித்தமும் படும் வேதனையை காண சகியாமல் அவரும் நாளுக்கு நாள் தளர்வடைந்து வருகிறார்.

தங்கள் துக்கத்தையும் மீறி வாழும் துணிச்சல் இவர்களுக்கு உண்டென்றால் அதற்கு இரு காரணங்கள். ஒன்று சித்ராங்கி பெற்றெடுத்த செல்ல மகள் சித்ரகலா..... ஒரு வயதே நிரம்பிய அந்த சிசு தாயை காணாமல் வாடும் மழலை..... அம்மா என்று இன்னமும் முழவதுமாக சொல்லக்கூட தெரியாத பச்சிளம் சிசு..... அவளை பேணி காப்பதே இங்கே அனைவரின் தலையாய காரியமாகி இருந்தது...... மற்றொரு காரணம், தன் சித்து எங்கும் மறையவில்லை எப்படியும் மீண்டும் தன்னிடம் வந்தே சேருவாள் என்று திடமாக நம்பும் ரஞ்சனின் மனம்.

இப்படி அனைவரையும் தவிக்க விட்டு சித்ராங்கி என்னவானாள்.... அது ஒரு கொடுமையான கதை.... காலன் எழுதிய அசிங்கமான கவிதை.

சித்ரஞ்சன் இஞ்சினியரிங் படித்து முடித்த பின்னர், ஒரு எம் என் சி யில் வேலைக்கு சேர்ந்தான்.... கை நிறைய சம்பளம், கார்.... சொந்த வீடு.... தாய் தங்கை என சுகமாக வாழ்ந்து வந்தான்..... அவனது திறமையை கண்டு மெச்சி அவனை மேலே மேலே முன்னேற்ற பாதை கைகொண்டு அணைத்து கூட்டிச் சென்றது.
தங்கைக்கு ஆசையாக வரன் பார்த்து மணமுடித்தான். மனம் போல சுகமாக வாழ்கிறாள் என்று நிம்மதி கொண்டனர்.

அப்போதே ஒரு திருமண விழாவில் சித்ராங்கியை கண்டான். முதல் பார்வையில் காதல் கொண்டான் ரஞ்சன்.
அழகிய ஆழ்ந்த பவள நிறத்தில் பச்சை நிற பார்டருடன் கூடிய பட்டுப் பாவாடை, பச்சை தாவணி பவள நிற ப்ளவுஸ் அணிந்து, தலை நிறைய பூவும் நீண்ட பின்னலும் அதன் முடிவில் ஆடியபடி அவன் மனதை சுண்டி இழுத்த குஞ்சலமும் என ரதியாக காட்சி தந்தாள்.
பெண்ணுக்கு பெரியம்மா மகளானதால் தோழிப் பெண்ணாக கூடவே இருந்து அனைத்து விதத்திலும் உதவி வந்தவள் இவன் பார்வையில் பட்டாள்.

அவளின் அழகும் குழந்தைத்தனமான முகமும் அலைபாயும் விழிகளும் அவனை கட்டிப் போட்டன..... அவளைவிட்டு தன் கண்களை அகற்ற முடியாமல் திணறினான்.....
“கொஞ்ச நேரம் தான் வருவேன்.... சாப்பிட எல்லாம் நிற்க மாட்டேன்” என்று பிகு செய்துகொண்டு அன்னையை அந்த திருமணத்திற்கு அழைத்து வந்திருந்தான். இப்போது அவன் அன்னை அழைத்தும் அவ்விடத்தை விட்டு நகரவே மனமின்றி அமர்ந்திருந்தான்..... அவள் சாப்பாடு கூடத்திற்குள் சென்றதும்தான் இவனுக்கு பசியே எடுத்தது..... அவள் சாப்பிட அவள் தோழிகளுடன் அமர இவனும் அவள் நேர் எதிரே சென்று எதேர்ச்சை போல அமர்ந்தான்... சாப்பிட்டது என்னவோ அவளை கண்ணால் சாப்பிட்டதே அதிகம்.

அவனது அன்னை சிவகாமி விடைபெற, மணமகளின் அம்மா, “கட்டாயம் சாயங்காலமும் வரணும் அண்ணி” என்றார்.
“கண்டிப்பா அழைச்சுட்டு வரேன் ஆண்ட்டி” என்றான் இவனும் எதிர்பாராத விதமாக. இவனை ஆச்சர்யமாக கண்டார் இவனது அன்னை.
“இல்ல மா, பாவம், அவ்ளோ ஆசையா கூப்படறாங்க உங்கள, வரலைனா நல்லா இருக்காது இல்லை” என்று அசடு வழிந்தான்.
சிவகாமி நமுட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டார்.

மாலையும் அன்னையுடன் மண்டபத்தை அடைய அங்கே அவளை காக்ரா சோளியில் கண்டு அசந்து போனான். குடையாய் விரியும் பாவாடையும் கச்சிதமான டிசைனர் சோளியும் அவள் மெல்லிடையை சிக்கென காண்பித்தது..... மேலே நார்த் இந்தியா ஸ்டைலில் உல்டாவாக அணிந்த மேலாக்கு அவனை மதி மயங்கச் செய்தது.... நீண்ட முடியை தளர்வாக பின் செய்து அப்படியே அருவி போல தொங்க விட்டிருந்தாள்.

அங்கே இங்கே என்று வந்தவரை வரவேற்றுவிட்டு மேலே தன் அக்காளுக்கு உதவ என போய் நின்று கொண்டாள். முதல் வரிசையில் அவளுக்காகவே இடம் பிடித்தான்.... அவளையே அவன் கண்கள் வண்டு போல சுற்றி வந்தது....
சித்ராங்கியும் காலையிலும் சரி இப்போதும் கூட அவனின் பார்வையை கண்டாள். ஏதோ ஆடவன் என ஒதுக்கி தன் வேலையில் ஈடுபட்டாள். ஆனால் இப்போதும் அவன் காந்தக் கண்கள் அவளையே சுற்றி சுழலுவதை கண்டு அவளுக்கு கொஞ்சம் ஆச்சர்யம் கொஞ்சம் வெட்கம் கொஞ்சம் எரிச்சல் என்றானது.

அவனை டைனிங் ஹாலில் கண்டாள். அவன் அவளிடம் ஒன்றும் பேசாதபோது அவள் மட்டும் என்ன சொல்லி அவனை கேள்வி கேட்க முடியும்..... பேசாமல் கண்ணால் எரித்தாள்..... அதையும் நேர் பார்வையுடன் எதிர் கொண்டான்.... சின்ன புன்னகை புரிந்தான்.... அவள் முகத்தை வலுக்கட்டாயமாக திருப்பிக்கொண்டாள்.

அவளின் பெயர் கூட தெரியாத நிலை. அவள் சாப்பிட்டு முடிக்க, அவள் தோழி ஒருத்தி, “என்ன சித்ராங்கி, உன்னை எங்கே எல்லாம் தேடறது..... உங்கக்கா உன்னை தேடுராக பாரு” என்று கூவினாள். அவன் காதுபட தன் பெயரை உச்சரித்தவளை கண்ணால் எரித்து,
“ஏண்டீ அதுக்காக பப்ளிக்ல என் பெயரை ஏலம் விடணுமா, நான் வரேன்னு போய் சொல்லு” என்றாள்.
“சித்ராங்கியா உன் பேரு என்ன அழகான பேர்..... உனக்கு ஏத்த பேருதான்” என்று எண்ணிக்கொண்டான்.

அவன் கேட்டுவிட்டான் ரசித்தான் என அவன் முகத்தின் பாவத்திலிருந்தே அவள் அறிந்துகொண்டாள். சிட்டென பறந்துவிட்டாள்.
அவளின் அன்னை சிவகாமியுடன் பேசியபடி அமர்ந்திருப்பதை கண்டு மேலும் விவரங்கள் திரட்டவென அருகே சென்று அமர்ந்தான்.
அவரை வணங்கினான். (ஆம் வருங்கால அத்தை அல்லவா!!)
“வணக்கம்ங்க அத்தை” என்றான்.
“யாரு சிவகாமி, உன் பிள்ளையா, நல்லா இருப்பா” என்றார்.
“என்ன சொல்லிகிட்டிருந்தேன், ஆங், அதான், பெரியவளுக்கு ஆயிடுச்சு இதோ சித்ராவுக்கும் ஒரு நல்ல இடமா பார்த்து முடிச்சுட்டா எனக்கும் எங்கக்கா மாதிரி நிம்மதியாயிடும் சிவகாமி” என்றார்.
“அதெல்லாம் வேளை வந்தா நல்லபடியாவே நடக்கும் அண்ணி கவலையே படாதீங்க” என்றார் சிவகாமியும்.
“பொண்ணு என்ன படிக்கிறா?” என்றார்
“இப்போ பைனல் இயற் எழுதி இருக்கா பி ஏ, நானும் நல்ல வரனா தேடிக்கிட்டுதான் இருக்கேன்” என்றார்.

மகனின் பார்வை சித்ராங்கியை வளைய வருவதை அந்தத் தாயின் கண்கள் கவனித்தன. அதனாலே விவரங்கள் கேட்டுக்கொண்டார்.
“அதே போல எங்க ரஞ்சனுக்கும் நல்லதா ஒரு பெண் பார்த்து இந்த வருடம் செய்துடனும்னு இருக்கேன் அண்ணி” என்றார் மெதுவாக.
“அப்படியா தம்பிக்கு பார்க்கறியா சிவகாமி?” என்றார் வாயெல்லாம் பல்லாக. “ஆமா அண்ணி” என்றார்.
“என்ன வேலை பார்குது?” என்றார்.
“நல்ல மேல்நாட்டு கம்பனில கை நிறைய சம்பளத்தோட நல்ல வேலை அண்ணி, வீடு கார்... பிக்கல் பிடுங்கல் இல்லை, நான் என் மருமகள தங்கமா வெச்சுக்குவேன்..... நல்ல இடமா இருந்தா சொல்லுங்க அண்ணி” என்று ஒரு பிட் போட்டு வைத்தாள் சிவகாமி. மகனின் முகம் மலர்ந்து விகசிப்பதை கண்டு சிரித்துக்கொண்டார்.

“என் அருமை சித்து, நீ எனக்கே கிடைப்பாயா என் செல்லமே” என்று மனம் உருகியது.
“என்ன கற்பகம், இங்கே வந்து உக்காந்துட்டே..... யாராச்சும் பசங்க இருந்தா நம்ம சித்ராவுக்கு உதவியா அனுப்பு, கிப்ட் நிறைய செர்ந்துபோச்சு.... ரூம்ல கொண்டு வைக்க ஏற்பாடு பண்ணு... கொஞ்சம் போ கற்பகம்” என்றார் மணமகளின் தாய்.

“நான் வேணா போகவா ஹெல்புக்கு?” என்றான் பச்சை பிள்ளைபோல முகத்துடன்.
“நானே கேட்கலாம்னு நினைச்சேன், ரொம்ப நன்றி தம்பி... கொஞ்சம் போ பா” என்றார் கற்பகம்
“சரி ஆண்ட்டி” என்று அங்கே சென்றான்.
“ஹலோ” என்றான்
‘இவன் என்ன செய்கிறான் இங்கே.... என்னிடம் ஏன் வந்தான்...?’ என்று அவனை முறைத்து பார்த்தாள் ஓரக்கண்ணால் தான்.
“உங்கம்மா உங்களுக்கு ஹெல்ப் பண்ணச் சொல்லி அனுப்பிச்சாங்க” என்றான். ‘ஐயோ கஷ்டமே, இந்த அம்மாக்கு புத்தியே இல்லை..... இவனையா அனுப்பனும்..... அசலே இவன் என்னையே லாலா கடை லட்டுவ பார்க்கிறா மாதிரி பார்த்துகிட்டு இருக்கானே.... கடவுளே, கொடுமை..’ என்றபடி
“ம்ம்” என்றாள்.

“என்ன செய்யணும் சொல்லுங்க” என்றான் அவளை கண்ணால் பருகியவண்ணம்.
“இல்ல பரவாயில்லை நான் மேனேஜ் பண்ணிக்குவேன்” என்றாள்.
“இல்ல இல்ல, பெரிசு பெரிசா இருக்குது பாக்கெட்ஸ்.... நானும் எடுத்து வரேன்.... எங்க கொண்டு வைக்கணும்னு மட்டும் சொல்லுங்க” என்று ரெண்டு கைகளில் கொள்ளும் அளவு ஏந்தி கொண்டு கேட்டான். அவளும் சிலதை எடுத்துக்கொண்டு முன்னால் நடந்தாள். மணமகளின் அறையில் கொண்டு வைத்துவிட்டு அவள் நிமிர அவன் கொண்டு வந்ததை வைக்க என குனிய இருவரும் மோதிக்கொண்டனர்.
“சாரி வெறி சாரி” என்றான். அவள் நிலைதடுமாறி விழப் போனாள். அவன் சட்டென தன் கையால் அவள் மென்னிடையை தாங்கி பிடித்துக்கொண்டான். அவள் நிமிர்ந்து கண்ணால் இவனை எரிக்க,
“இல்ல நான் வேணும்னு ஒண்ணும்...” என்று தடுமாறினான்.
“இல்ல, நீங்க சரி இல்ல.... காலையில இருந்து என்னையே முறைச்சு பார்த்துகிட்டு இருந்தீங்க.... இப்போவும் வந்துட்டீங்க, கண்ணாலேயே கலகம் பண்றீங்க, இப்போ என்னடானா என் இடையை பிடிக்கறீங்க.... என்ன மிஸ்டர் என்ன விஷயம்?” என்றாள் அதிகாரமாக.

“இல்லை, அப்படி எதுவும் இல்லை.... ஐ ஆம் சாரி.... நான் உங்களுக்கு உதவத்தான் எண்ணினேன்” என்றான். அவன் கண்களில் இருந்த உண்மை அவளை தொட்டது போலும்.
“ம்ம் சரி, தாங்க்ஸ் போங்க” என்று மேலே நடந்தாள். மீண்டும் மௌனமாகவே மூன்று முறை பரிசுகளை கொண்டு ரூமில் அடுக்கினர். அப்போது ஒரு பரிசு பொருள் கவரில் அவளின் தாவணி முந்தானையின் குஞ்சலங்கள் மாட்டி அவளை நகர விடாமல் பின்னுக்கு இழுத்தன.

“ஹவ் டேர் யு” என்று ஆத்திரமாக திரும்பினாள். அவன் அசந்து போய்
“நான் என்ன...?” என்று திணறினான். திரும்பியவள் அவன் சற்றே தூரத்தில் நிற்பதை கண்டு குழம்பி பின்னே பார்த்தாள்.
பரிசு பொருளில் சிக்கி இருப்பது கண்டு மீண்டும் வெட்கி “சாரி, நாந்தான் தப்பா....” என்று மன்னிப்பு வேண்டினாள்.
“என்னை பார்த்தா அவ்ளோ கேவலமாவா தோணுது உனக்கு... ச்சே” என்றபடி அவன் முன்னே நடக்க யத்தனித்தான். அவள் சிக்கல் நீக்கியபடியே
“இல்ல சாரி மிஸ்டர்” என்றாள்.
“நான் சித்ரஞ்சன், வரேன்” என்று நடந்தான்.
“இது எடுக்க வரலை” என்று மென்று முழுங்கினாள். நன்றாக சிக்குண்டிருந்தது. அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவள் அருகே வந்து அவளை காணாமல் சிக்கலை மட்டுமே விடுவித்தான்.

“ரொம்ப தாங்க்ஸ் அண்ட் சாரி அகெயின்” என்றாள்.
““ம்ம், இட்ஸ் ஒகே” என்றபடி நடந்தான்.
அதன் பிறகு அவனையே காண்பது அவளின் கண்களாகின, அவன் அவள் பார்வையை சந்திப்பதை தவிர்த்தான்.... கொஞ்சம் கோபம் இருந்தது.... ‘என்னை போய் அப்படி நினைத்துவிட்டாளே’ என்று.... அவன் கோபமாக இருப்பது கண்டு அவளுக்கு படபடத்தது... ‘ஐயோ. அவனை அனாவசியமாக தவறாக எண்ணி விட்டேனே... பேசிவிட்டேனே...’ என்று.
‘ப்ளீஸ்’ என்ற இறைஞ்சல் இருந்தது அவள் பார்வையில்.

அடுத்து அனைவரும் டைனிங் ஹாலுக்கு சென்று சாப்பிட அமர்ந்தனர். அவளும் அவன் எதிரே தன் தோழிகளுடன் அமர்ந்திருந்தாள். அவ்வப்போது அவனையே பார்த்தபடி தோழி என்ன பேசுகிறாள் என்று கூட கவனிக்காமல் இருந்தாள்.
“உன் கவனம் எங்கடீ இருக்கு?” என ஒருத்தி வினவ,
“இது கூடவா தெரியல, தா கொஞ்ச தூரத்துல எதிர்த்தாப்ல தான் இருக்கு” என்று மற்றொருத்தி கிண்டல் செய்தாள்.... எல்லோரும் கொல்லென சிரிக்க சித்ராங்கிக்கு மிகவும் வெட்கமானது.... சிவந்து போனது...
“போங்கடீ, நீங்களும் உங்க வாயும்” என்று திட்டினாள். ஆனால் அவனை பார்ப்பதை கண்கள் நிறுத்தவில்லை. இப்போது அவனும் அதை கேட்டு மெல்ல புன்னகைத்தான். அவன் புன்னகை  கண்டு அவள் முகம் பளிச்சிட்டது.

பின்னோடு மணமகளின் தாயிடம் விடை பெற வந்தனர் ரஞ்சனும் அவன் தாயும். அங்கே சித்ராங்கியின் அன்னையும் இருக்க விடை கூறிக்கொண்டனர். “அவசியம் வீட்டு பக்கம் வா சிவகாமி” என்றார் கற்பகம்.
“கண்டிப்பா வரேன் அண்ணி” என்றாள்.
“தம்பி வீட்டுக்கு வாங்க” என்றார்
“கண்டிப்பா வரோம் ஆண்ட்டி” என்றான் இவனும். அப்போது “சித்ரா” என்று அழைத்தார், அவளும் அவர்கள் விடைபெறுவதை கண்டு அங்கு ஓடி வந்தாள்.

“என்னடி நின்ன நிலையில நிக்கறவோ, அத்தை கிளம்பறாங்க பாரு, போ” என்று ஜாடை செய்தார். அவளும் உடனே புரிந்து
“தோ ஒரு நொடில வரேன் அத்தே, இருங்க போய்டாதீங்க” என்று சிட்டாக உள்ளே ஓடினாள்.
வந்தவள் கையில் தாம்பூல பையும் பட்சண பையும் இருந்தது. அதை சிவகாமியின் கையில் தந்தாள். இவனை ஓரக்கண்ணால் கண்டாள், ‘வருகிறேன்’ என்று மிக லேசாக தலை அசைத்தான் அவளை கண்டு,
‘ஒ போய்விடுவாயா’ என்று பார்த்தன அவள் கண்கள். ‘சரி’ என்பதுபோல மிக லேசாக அவளும் தலை அசைத்தாள். இருவர் கண்களும் கவ்வி நின்றன. மனமின்றி அவ்விடத்தை விட்டு விலகி வெளியே வந்து காரை எடுத்தான்.

“நல்ல பொண்ணு இல்லையாடா சித்து” என்றார் சிவகாமி. “ம்ம்” என்றான்.
THODARUM


No comments:

Post a Comment