Monday 25 June 2018

UNNAI KAANAADHA KANNUM KANNALLA - EPISODE 8

ஒவ்வொரு நாளும் சித்ராவின் நலனை கருதியே ஒவ்வொன்றும் ரஞ்சன் செய்து வந்ததை கண்டு சித்ராங்கியின் மனம் அவன்பால் கொண்ட அன்பு மேலும் பெருகி இப்போது காதலாக கனிந்திருந்தது.... அவனை நேருக்கு நேர் காணும்போதெல்லாம் மனதில் ஒரு இன்ப படபடப்பு.... அவன் ஏதேனும் கேட்க அருகில் வந்தால் எதையோ எண்ணி மனம் ஏங்கியது எதிர் பார்த்தது..... அவன் குளித்து வந்ததும் ஈர தலைமுடியை தன் கையால் துடைத்து விட மனம் ஏங்கியது.... அவன் சட்டை அணியும்போது அதன் பித்தான்களை தான் இருந்து போட ஆசை வந்தது..... அவனுக்காக பார்த்து பார்த்து கேட்டு தெரிந்து சமைத்தாள்.... அருகே நின்று பரிமாறினாள்.... அவளின் அந்த சில செய்கைகளினால் ரஞ்சனின் மனம் குளிர்ந்தது.... அவளிடம் ஓரளவு நல்ல மாற்றங்கள் வந்துள்ளன...  மெல்ல மொத்தமாகவே உணர்ந்து விடுவாள் என்று அவனும் காத்திருந்தான்.

அப்போது ஒரு நாள் அவனின் மாமா ஊரிலிருந்து வர வீட்டினர் கலவரமாயினர். சித்ராங்கியின் நிலை யாருக்கும் தெரியாத இந்த நேரத்தில் அவருக்கு என்ன வென கூறி புரிய வைப்பது என்று குழம்பினர்.

“வாங்க மாமா” என்றான்.
“வா அண்ணா” என்று சிவகாமி முன்னே வந்து பேச்சு குடுத்தார், அவனுக்கு கண் ஜாடை செய்ய அவன் உள்ளே சென்று,
“சித்து, ஊர்லேர்ந்து எங்க மாமா வந்திருக்காரு.... நீயும் அவர மாமான்னு தான் கூப்பிடுவே, கல்யாணத்திற்கு பிறகு ரெண்டு மூணு வாட்டித்தான் அவர் வந்திருக்காரு இங்க..... ரொம்ப பரிச்சயம் இல்லை..... வந்து வணக்கம் வாங்கன்னு சொல்லீட்டு உள்ளே வந்துடு டா, நான் மிச்சத்த பார்த்துக்கறேன்” என்றான்.
சரி என்று அவனுடன் வெளியே வந்தாள்.
“வணக்கம், வாங்க மாமா நல்லா இருக்கீங்களா?” என்றாள். அவள் குரலை அடையாளம் தெரிந்தாலும் “இது யாரு?” என்றார் அவர் திகைத்து.
“என் மனைவி சித்ராங்கிதான் மாமா” என்றான்.
“என்னடா உளர்றே, இது சித்ராங்கியா, அவ கொஞ்சம் வேற ஜாடையா இல்ல இருப்போ?” என்றார் சந்தேகமாக.
“ஆமா மாமா அவ முகமும் மனமும் கொஞ்சம் மாறி இருக்கு, அது ஒரு பெரிய கதை” என்று சுருக்கமாக கூறினான்.
“இதென்னடா கூத்து..... எவனானும் டாக்டர் ஏதானும் கதை சொன்னா அதை நம்பி யாரோ முன் பின் முகம் தெரியாத பெண்ணை உன் மனைவிதான்னு நம்பி வீட்டுக்கு கூட்டி வந்து குடித்தனம் பண்ணீடுவியா..... நாலும் விசாரிக்க வேண்டாமா, உன் புத்தி ஏண்டா இப்படி போகுது” என்று திட்டி தீர்த்தார்.

“என்ன மாமா பேசறீங்க, நீங்கதான் தப்பு தப்பா பேசறீங்க.... அவ என் மனைவின்னு யாரோ சொல்லி எனக்கு புரிய வேண்டிய நிலையில நான் இல்லை மாமா..... அவ என் சித்துன்னு என் மனசுக்கே நல்லா தெரிஞ்சதாலதான் அழைத்து வந்தேன்.... அதை நீங்க நம்பணும்னோ ஒத்துக்கணும்னோ நான் எதிர் பார்க்கலை மாமா” என்றான் அவனும் ஆத்திரத்தை அடக்கி ஆண்டு.
“என்னவோ செய், பெரியவங்க பேச்சை யார் கேட்கிறா, அனுபவித்தா தெரியும்... அப்போ வருவீங்க ஐய்யா அப்பா காப்பாத்துன்னு” என்றார்.
“நிச்சயமா உங்க கிட்ட அப்படி ஒரு நிலையில வந்து நிக்க மாட்டேன் மாமா, நம்பலாம்” என்றான் கடுமையாக.

“என்ன சிவகாமி இது?” என்றார்.
“அவன் சொல்றதும் சரிதானே அண்ணா, சித்ராவை முகம் மாறினா மட்டும் மனுஷி அடையாளம் தெரியாம போயிடுமா....  அவ மன நிலை பாதிக்க பட்டு இருந்தா நம்ம வீட்டு மருமக இல்லைன்னு ஆயிடுமா” என்றார் அவரும்.
“என்னமோ போங்க” என்று அவர் கிளம்பினார்.

உள்ளே சென்ற சித்ராங்கி உடைந்து அழுதாள். அவளை தேற்றும் வகை அறியாமல் அவன் குழம்பினான்.
“ஏண்டா குட்டிமா நீ அழுகுறே, நாலு பேர் பேசினா பேசட்டுமே டா... அழாதே டா” என்றான் ஆதுரமாக அவள் தலை கோதி.
“இல்லை, எனக்கு ஒண்ணுமே தெரியல.... எல்லாம் மறந்து போச்சு.... எல்லாம் குழம்பி நிக்கறேன், என்னால உங்களுக்கு ஒரு சுகமும் இல்லை, இப்போ உங்க சொந்தங்கள் நடுவே உங்களுக்கு என்னால அவமானம்..... பேச்சு கேட்க வேண்டிய அவசியம், எல்லாம் என்னாலே....” என்று மேலும் அழுதாள்.

“எதுவுமே உன்னால இல்லை... நீ உன்னையே பழி சொல்லிக்காதே டா” என்றான்.
“இல்லை, நாந்தான் கேட்கறேன், அதான் எனக்கு உங்களையே தெரியலை, என் முகம் மனசு எல்லாம் மாறி இருக்கே.... என்னை ஏன் அழைத்து வந்தீங்க.... அங்கேயே விட்டுட்டு நீங்க வேற யாரானும் நல்லவளா பார்த்து அழகா கல்யாணம் கட்டிக்கிட்டு வாழ்ந்திருக்கலாம் இல்ல...?” என்றாள் சிறு குழந்தை போல அழுகையினூடே.
அவனுக்கு வந்த கோபத்தில் பளிச்சென்று ஒரு அரை வைத்துவிட்டான். அவள் அதிர்ந்து கன்னத்தை பிடித்த வண்ணம் திக்பிரமை பிடித்து அமர்ந்துவிட்டாள். “என்ன பேசறே, உன்னை காணாம நான் தவிச்ச தவிப்புக்கு கடவுள் மனம் வைத்து உன்னை மறுபடி என் கண்ணில காட்டினார்னு நான் நித்தமும் அவருக்கு நன்றி சொல்லிக்கிட்டு இருக்கேன்... உனக்கு கிண்டலா இருக்கா?”

“இந்த ஜென்மத்தில நீதான் நீ மட்டும்தான் என் மனைவி குட்டிமா... அதை நல்லா புரிஞ்சுக்கோ, இந்த மாதிரி எதையானும் உளறாதே.... நான் உன் மேல வெச்சிருக்கற அன்பை குறைவா எடை போடாதே சித்துமா.....” என்றான் ஆற்றாமையுடன். அவனின் அந்த அன்பின் அளவில் திக்குமுக்காடி போனாள் சித்ராங்கி.
“சாரி” என்றாள் மெல்ல.
“இட்ஸ் ஒகே, இன்னொரு முறை இப்படி பேசாதே, எனக்கு இங்க வலிக்குது” என்று தன் இதயத்தை தொட்டு காட்டினான்.
“அவசரத்தில கோபமா அடிச்சுட்டேன், என்னை மன்னிச்சுக்க குட்டிமா” என்று அவள் கன்னத்தை தடவி கொடுத்தான், அதில் சிலிர்த்து நகர்ந்து “பரவாயில்லை,. நானும் அப்படி பேசி இருக்கக் கூடாது.... சாரி” என்றாள்.

அந்த நேரத்தில் அவளின் பிறந்த நாள் வந்தது. அவளுக்காக என அழகிய ஒரு புடவையும் ரோஜா பூக்களும் ஒரு கேக்கும் வாங்கி வந்தான்.
முந்தைய இரவு அவன் அருகே ஒதுங்கி படுத்து உறங்கும் அவளை சிறு குழந்தையாக அள்ளி கைகளில் ஏந்த மனம் துடித்தது....
நள்ளிரவில் மெல்ல அவளை தொட்டு எழுப்பினான்.... அவள் முகத்தின் அருகே குனிந்தான்.... அவள் அவன் தொடுகையில் கண் விழித்தவள் அவனை தன் முகத்தின் அருகே அவ்வளவு கிட்டத்தில் பார்த்து அதிர்ந்தாள்.... அவளது அதிர்வு கண்டு அவன் மனம் ஒரு நிமிடம் சுணங்கியது... போனா போகுது என்று தேற்றிக்கொண்டான்..

“ஹாப்பி பர்த்டே குட்டிமா” என்றான் அவள் காதோரம். அன்று அவளுக்கு பிறந்த நாள் என்று கூட அவளுக்கு தெரிந்திருக்கவில்லை. அவள் சட்டென்று கண் அகல முழித்து எழுந்தாள்.
“தாங்க்ஸ்” என்றாள் மெல்ல. ரோஜா பொக்கேவை அவள் கையில் திணித்தான்.... அதை ஆவலுடன் வாங்கிக்கொண்டாள்.... நெஞ்சோடு அணைத்து பூக்களுக்கு முத்தமிட்டாள்.
‘ஹ்ம்ம் நான் வாங்கின பூவுக்கு முத்தம் கிடைக்குது, அதை வாங்கின எனக்கு......’ என்று மனம் ஏங்கி தவித்தது.
“ரொம்ப அழகா இருக்கு தாங்க்ஸ்” என்றாள் மீண்டும் அவனிடம்.

“உனக்கு ரொம்ப பிடிக்கும்னு எனக்குதான் தெரியுமே குட்டிமா” என்றான் தாபத்துடன். அவன் கண்களை கண்டவள் அதிலிருந்த ஏக்கத்தை கண்டாள். அது அவளை என்னவோ செய்தது. கண்களை தாழ்த்திக்கொண்டாள். பிறந்த நாள் என்று அவன் தன்னிடம் ஏதேனும் எதிர் பார்ப்பானோ என்று அவள் பதைத்தாள். அவளது உடலும் மனமும் கூட அதை எதிர் பார்த்ததோ என்று கூட ஒரு கணம் எண்ணி வெட்கினாள்.

“சரி படுத்துக்கோ தூங்கு” என்றபடி அவனும் மிக சிரம பட்டு தன் மனதையும் உடலையும் அடக்கி அந்தப்பக்கம் திரும்பி படுத்தான்.... மனம் தத்தளித்தது.... தூக்கம் பிடிக்கவில்லை.... அவளும் படுத்தாள். ரோஜாக்களை வருடிய வண்ணம் படுத்திருந்தாள். அதன் சில்லென்ற மெத்தென ஸ்பரிசம் அவள் மனதை கொள்ளைகொண்டது. பாவம் அவன் என்று தோன்றியது.

‘ரோஜாக்களுக்கு இவ்வளவு முத்தம் குடுத்தேனே, எனக்காக என் மேல் அளவு கடந்த அன்பும் காதலும் கொண்டு பரிதவிக்கும் அவனுக்கு ஒரு முத்தமேனும் நான் தந்திருக்க வேண்டுமோ’ என்று குற்ற உணர்வு தோன்றியது. உடனே வெட்கம் வந்து சூழ்ந்து கொண்டது. ‘நாளைக்கு தருவேன்’ என்று மனதினுள் எண்ணிக்கொண்டு உறங்கிபோனாள்.

அதே நேரம் ரஞ்சனும் தூக்கம் இன்றி புரண்டபடி இருந்தான்.... சித்ராங்கி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறாள் என கண்டு அவள் கால் மாட்டில் வந்து தலை வைத்து படுத்தான்..... மெல்ல அவள் தூக்கத்தை கலைக்காமல் அவளது அந்த பாதத்தின் மச்சத்தை கண்ணால் ரசித்த வண்ணம் இருந்தான்.... மனதின் தாபங்களை அடக்கமாட்டாமல் தவித்தான், மெல்ல அந்த மச்சத்தை வருடினான்.... அந்த ஸ்பரிசத்தில் சித்ராங்கி கண் விழித்தாலும் என்ன நடக்கிறது என்று உடனே க்ராகித்தாள்.... அசையாமல் படுத்திருந்தாள்.... மெல்ல பூ போல அவன் விரல்கள் அவள் பாதங்களை வருடிய வண்ணம் இருந்தன..... அந்த சுகத்தையானும் அவன் அனுபவிக்கட்டும் என அசையாமல் கிடந்தாள். குறுகுறுவென்றது, முகம் சிவந்து போனது.

அதிகாலை விழிப்பு வந்தது. ஆழ்ந்த தூக்கத்தின் மிகுதியில் அவள் அவனருகே புரண்டு அவன் நெஞ்சில் தலை சாய்த்து உறங்குவதை உணர்ந்து வெட்கி எழுந்தாள்.
‘நான் அவனை மிகவும் இம்சை படுத்துகிறேனோ..... அவனே எனக்காக என்னை நெருங்காமல் தன்னை காக்கும் நேரத்தில், நான் என்னையும் அவனுக்கு தராமல் இப்படி நெருங்கி படுத்து அவனை ரொம்பவே படுத்துகிறேன்..... எதிரில் இருந்தும் தொட முடியாமல் தவித்திருக்க அவன் என்ன ஞானியா என்ன....’ என்று அவனுக்காக யோசித்தபடி எழுந்தாள்.
அந்நேரம் வரை அவள் அப்படி படுத்திருக்க அதுவே போதுமென்றுதான் அவனும் அதை ரசித்தபடி உறங்கிக்கொண்டு இருந்தான். அவள் மெல்ல விலகி வெட்கத்துடன் அவனை பார்த்தபடி எழுந்ததை கண்டு அப்போதே முழித்த அவனும் கூட உள்ளுக்குள்ளே சிரித்துக் கொண்டான். அவனும் கூடவே எழுந்தான்.
“ஹாப்பி பர்த்டே மை டியர் குட்டிமா” என்றான்.
“தாங்க்ஸ்” என்றாள்.

குளித்து முடித்து வெளியே வந்து உடை உடுத்த முயல, அங்கே அவள் கட்டிலின் மீது அந்த அழகிய மயில் கழுத்து நிற மெல்லிய சரிகை இட்ட பட்டுப்புடவை இருந்தது கண்டாள், மாட்சிங்காக பிளவுசுடன். அதன் அழகு அவளை கட்டிப்போட்டது. எடுத்து அழகாக நீவி உடுத்திக்கொண்டு கண்ணாடியில் தன்னை பார்த்தாள். அவளையே அவளுக்கே மிகவும் பிடித்திருந்தது.... அவளின் அழகு கூடி அவளின் கண்ணுக்கே ரம்மியமாக தெரிந்தாள்....
‘இப்போது என்னை அவன் பார்த்தால், எப்படி தன்னையே கட்டி ஆளுவான்?’ என்று எண்ணி சிலிர்த்தாள். அதன் முடிவில் அவனின் அன்புக்கு முன் தான் தூசி பெற மாட்டோம், இனியும் அவனை தவிக்க விடக் கூடாது.... இன்று என் பிறந்த நாளை ஒட்டி என்னையே அவனுக்கு பரிசாக தர வேண்டும்.... அவனிடம் சகஜமாக பேச வேண்டும்....’ என சில முடிவுகள் எடுத்தபடி சிவந்த முகத்துடன் பிரத்யேகமாக அலங்கரித்துக்கொண்டாள்.

அறையை விட்டு அவள் வெளியே வரவும் அவன் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. அவளை கண்டு பிரமித்து நின்றான். அவளின் அழகு அவனை கட்டிபோட்டது. அப்படியே தூக்கி தட்டாமாலை சுற்றி ஆழ்ந்த முத்தம் குடுத்து இறுக்கிக்கொள்ள மனம் பரபரத்தது.
“வாவ்” என்று மாத்திரம் கூறினான். கண்கள் அவளைவிட்டு அகலவில்லை. அவளோ அவனின் அந்த தாப பார்வையை கண்டு மேலும் சிவந்தாள். தலை குனிந்து நாணத்தை மறைத்தாள்.

“ரொம்ப தாங்க்ஸ், அருமையான செலெக்ஷன்” என்றாள்.
மெல்ல குனிந்து அவன் கால் பணிந்தாள்.
அவன் ஆவசரமாக குனிந்து அவளை தூக்கி நிறுத்தினான்.
“நீ என்னென்னிக்கும் நல்லா இருக்கணும் குட்டிமா.... நீ எனக்கு கிடைச்சதே போதும், அந்த கடவுளுக்கு நன்றி” என்றான் ஆத்மார்த்தமாக.
“குட்டிமா...” என்றான் தாபத்துடன்.
“ம்ம்ம்” என்றாள்.
“நான் இன்னொரு பரிசு குடுக்க ஆசைப்படறேன்” என்றன் மெல்ல தயங்கியபடி.
‘என்ன’ என்பது போல அவனை ஏறெடுத்து பார்த்தாள்.
“குடுக்கலாமா, நீ கோபிக்க மாட்டியே?” என்றான்
அவள் அவனை ‘எதற்கு நான் கோபப் படனும்’ என்று பார்க்க மெல்ல அவளருகே வந்து அவள் இடையில் கை வைத்து தன்னருகே இழுத்தான்.... அவள் பரவசம் ஆனாள்.... அவன் இன்ன பரிசு தர ஆசைப்படுகிறான் என்று புரிந்தது.... மௌனமாகவே அவனுடன் ஒன்றி நின்றாள்.... அவள் எதிர்ப்பு காட்டாது நிற்பதை கண்டு அவனுக்கு கொஞ்சம் தைர்யம் வந்தது.... மெல்ல அவள் பட்டு கன்னத்தில் இதழ் பதித்தான்.... அவள் கண் மூடி கிரங்கினாள்.... மூடிய கண்களின் மேல் இதழ் பதித்தான்....

அதற்குமேல் அவனால் அவனை அடக்கிக்கொள்ள முடியாமல் தாமாகவே அவன் இதழ்கள் அவளுடைய இதழை தேடிச் சென்று ஆக்கிரமித்தன.... பல நூறாண்டுகள் தாகத்துடன் இருப்பவன் போல ஆவலுடன் தாகம் தீர்த்தான்... அவளுக்கோ எங்கோ சொர்க்கத்தில் மிதப்பது போலத் தோன்றியது.... கிறங்கி குழைந்து அவன் கைகளில் உருகி ஒன்றி அவனுடன் இழைந்தபடி மெய் மறந்து நின்றிருந்தாள்.

ஆசை தீர முத்தமிட்டவன் அவள் கழுத்தின் வளைவில் முகம் புதைந்தான். அவளால் தாள முடியாமல் இன்பத்தில் கால்கள் குழைந்து தடுமாற அவன் மார்போடு ஒன்றி சரிய துவங்கினாள். அவள் சரியாமல் அவள் இடையை கெட்டியாக பிடித்தவன் அவளோடு கட்டிலில் சாய்ந்தான்... விட்டதை தொடர்ந்தவன் போல இன்னமும் ஆழ்ந்த முத்தங்களை பரிமாறினான்.

மகிழ்ச்சி சிலிர்ப்பு நாணம் காதல் என்று பல உணர்சிகளின் வேகத்தில் அவள் கண்ணில் இருந்து இன்ப நீரின் கசிவு. அந்த நேரத்தில் அவளின் இன்ப முனகலின் சத்தத்தில் தன்னை மீட்டுக்கொண்டான்....
‘ச்சே நான் என்ன வேலை செய்ய இருந்தேன்.... அவள் இன்னமும் தன்னை அறியாமல் இருக்கும்போது இது தவறு’ என்று மீட்டுக்கொண்டான். தன்னை சமனபடுத்திக்கொண்டான்.... அவன் மீண்டதும் அவள் என்னவாயிற்று என்று மெல்ல கண் திறந்து அவனை கண்டாள்.
“தாங்க்யு சித்து” என்றான் அவளிடம். அவள் மீண்டும் நாணி அவன் மார்பில் முகம் புதைத்தாள். அவளின் நெற்றியில் ஒரு முறை இதழ் பதித்துவிட்டு மெல்ல எழுந்துகொண்டான்.

அவளும் அவனின் விலகலை உணர்ந்து அப்போதும் தனக்காகத்தான் யோசித்திருக்கிறான் என்று உணர்ந்து ஒரு வித தவிப்புடனும் ஏமாற்றத்துடனும் தன்னை மீட்டுக்கொண்டு எழுந்து அமர்ந்தாள்.... புதிய புடவையை நீவி சரி செய்துகொண்டாள்.

அத்யாயம் 5

“நான் போய் டிபன் எடுத்து வைக்கறேன் குளிச்சுட்டு வாங்க” என்றாள் அவனிடம். முதன் முதலாக அவனிடம் அவ்வளவு பேசினாள் என்பதை உணர்ந்து அவன் அசந்து போனான்.
“சரி குட்டிமா” என்றான் மகிழ்ச்சியுடன்.
அவனும் குளித்து வர அவனுடன் சேர்ந்து இரு அன்னையரையும் விழுந்து வணங்கி ஆசி பெற்றாள்.

அவன் கிளம்பி ஆபிஸ் செல்ல, “சாயங்காலம் சீக்கிரமா வந்துடுங்க” என்றாள் மயக்கும் பார்வையுடன்.
“ஏன் என்ன விசேஷம்?” என்றான் அருகே வந்து முகத்தின் அருகே உரசினார்போல.
“இல்ல... கோவிலுக்கு போகலாம்னு.....” என்றாள்.
“ஒ அதுக்கா” என்றான் கொஞ்சம் ஏமாற்றத்துடன்.
“ஆமா, கோவிலுக்கு போயிட்டு வெளியே சாப்பிட்டு வரலாம்... அப்பறம்...” என்று சிவந்த முகத்துடன் வேறே பார்த்தாள். அவனை தவிர்த்தபடி. “அப்பறம்...?” என்றான் அவன் தாபத்துடன்.
“அதை அப்போ சொல்றேன், நீங்க சீக்கிரம் கிளம்புங்க” என்று உள்ளே ஓடிவிட்டாள். அவன் நெஞ்சமெல்லாம் நிறைந்தது. நடையில் ஒரு துள்ளலுடன் எதையோ எதிர்பார்த்த மகிழ்ச்சி பரபரப்புடன் ஆபிஸ் சென்றான். அடுத்து நடக்கப் போவதை அறியாமல்.

அன்று மாலை மிகுந்த உற்சாகத்துடன் ஆபிஸ் வேலைகளை விரைந்து முடித்துக்கொண்டு இருந்தான் ரஞ்சன். அந்த நேரத்தில் வந்த போன் அவனை புரட்டிபோட்டது.... அசந்து திகிலடைந்து அப்படியே அமர்ந்துவிட்டான்.... அடுத்து என்ன என்று யோசிக்கவும் மூளை வேலை செய்யாமல் ஸ்ட்ரைக் செய்ய, தன்னையே உந்திக்கொண்டு எழுந்து வெளியே ஓடிவந்து காரை எடுத்தான். சீறி பாயும் வேகத்துடன் ஒட்டிச் சென்றான்.



7 comments:

  1. So thrilling. Nice. Expecting tomorrow's episode. Thanks.

    ReplyDelete
  2. This is not fair ya!! They were nicely drowning in romance and another hiccup!! Waiting...

    ReplyDelete
  3. Why this kolaveri Sudha? Romba arumaiya pOindu irundhadhu... Ennaa acchu ippo? Romba thavikka vidareaL neenga!

    ReplyDelete
  4. Super suspense.. Waiting ...

    ReplyDelete