Tuesday 19 June 2018

UNNAI KAANAADHA KANNUM KANNALLA - EPISODE 2

அடுத்து வந்த சில நாட்களுமே கூட அவனுக்கு அவள் நினைவாகவே இருந்தது. தந்தை வழி நேர் அத்தை இல்லை எனினும் ஒன்றுவிட்ட சொந்தத்தில் அத்தை முறைதான் ஆனார் கற்பகம், அவர்களது மகள் சித்ராங்கி அதனால் திருமண முறைதானே என்று ஆனந்தித்தான்.
அவன் நிலை கண்டு சிவகாமிக்கும் கொஞ்சம் புரிய
“என்னப்பா அந்தப் பெண்ணை பார்த்தோமே கல்யாணத்தில, சித்ராங்கி, அவளை உனக்கு பேசலாமா?” என்றார் அவனிடம்.
“உங்க இஷ்டம் மா” என்றான் நல்ல பிள்ளை போல. வயிற்றில் லட்டு பூத்தன.
“ஆனா ரொம்ப சின்ன பெண்ணா இருக்காளேன்னு பார்க்கறேன், பார்க்கவும் சின்னவளாத்தான் தெரியறா... உனக்கு அவளை பிடிச்சிருக்குன்னு எனக்கும் புரியுது... ஆனாலும், பரவாயில்லையா சித்து?” என்று கேட்டார் சிவகாமி.
“டிக்ரீ முடிச்சுட்டாளேமா, இதுல சின்ன பெண் என்ன?” என்றான் அவசரமாக.
“சரி உனக்கு பிடிச்சிருந்தா எனக்கு ஓகேதான், நான் போய் மேற்கொண்டு பேசறேன்” என்றாள்.

அந்த வார இறுதியில் போனில் தகவல் கூறிவிட்டு அவனை கொண்டுவிடச் சொல்லி சிவகாமி கற்பகத்தின் வீட்டை அடைந்தார்.
“என்ன அண்ணி சௌக்கியமா, கல்யாண களைப்பெல்லாம் ஆச்சா?” என்றபடி அமர்ந்தனர்.
“ஆமா சிவகாமி, ஹப்பானு இருக்கு, இந்த பெண் பிள்ளைகளை ஒருத்தன் கையில பிடிச்சு குடுக்கறவரைக்கும் நமக்குதானே டென்ஷன்” என்று சிரித்தார்.
“தோ அடுத்தாப்ல இவளுக்கும் அமைஞ்சுட்டா நல்லது” என்றார்.
“வாங்க அத்தே” என்றாள் சித்ராங்கி சிவகாமியிடம். காபி கொண்டு வந்து கொடுத்தாள்.
கண்ணால் வாசலை துழாவினாள். அவனும் வந்திருப்பானோ என்ற எண்ணம் உள்ளே படபடத்தது... அதை கண்டு சிவகாமியும் சிரித்துக்கொண்டார். அவள் உள்ளே சென்றுவிட,

“நானும் அதைப்பத்திதான் பேசலாம்னு வந்தேன் அண்ணி” என்றாள்.
“என்ன சொல்லு, ஏதானும் நல்ல வரன் இருக்கா?” என்றார் ஆவலுடன் கற்பகம்.
“இருக்குதான் ஆனா, வெளி வரன் இல்லை, என் மகனுக்கே சித்ராவை பார்க்கலாமானு யோசிக்கிறேன் அண்ணி” என்றார்.
“என்ன சொல்றே சிவகாமி, நிஜம்மாவா?” என்றார் ஆர்வமாக.
“ஆமா, அவனுக்கும்தான் வயசாகிகிட்டே போகுதே..... அவனுக்கும் முடிச்சுட்டா எனக்கு நிம்மதி அதான்..... அவனை கேட்டேன், உங்க இஷ்டம்னான்..... அவன் ஜாதகத்த கொண்டு வந்தேன், அவனை தான் நீயும் உன் பெண்ணும் பாத்துட்டீங்களே, ஜாதக பொருத்தம் பார்த்துட்டு முடிச்சிடுவோம்” என்றார்.
“ரொம்ப சந்தோஷம் சிவகாமி, எங்களை மதிச்சு சம்பந்தம் வெச்சுக்க வந்தியே” என்றார் கண்கள் பனிக்க.
“என்ன அண்ணி இது, இப்படி எல்லாம் பெரிய வார்த்தை சொல்லாதீங்க..... நாமெல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு இல்லையா” என்றாள். ஆம் என்பது போல தலை அசைத்தாள்.

சித்ராங்கி உள்ளே சென்றுவிட்டதால் இவை எதுவும் அவள் காதுக்கு எட்டவில்லை. ஜாதக பரிமாற்றம் நடந்தது. பொருத்தம் பார்த்து பத்துக்கு எட்டு பொருத்தம் இருந்தது என திருப்தி பட்டுக்கொண்டு மேற்கொண்டு பேசிட எண்ணி இருந்தனர்.
அப்போது கற்பகம் அவளிடம், “சித்ரா, உனக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கு மா” என்றார்.
“ஐயோ வேறே வரனா, அப்போ அவன்.... என் மனசுல அவனை நினைச்சுட்டேனே, நாங்க பேசிக்கலை, காதல் சொல்லிக்கலை ஆனா என் மனம் அவனையேதானே நினைச்சு கிடக்கு...” என்று குமறினாள்.
“என்னமா சொல்றீங்க?” என்றாள் பயந்தபடி.
“ஆமா மா, உன்னை கல்யாணத்தில பார்த்திட்டாங்களாம், ரொம்பவே பிடிச்சு போச்சாம்..... அதான் ஜாதகம் பார்த்தோம்..... ரொம்ப நல்லா பொருந்தி இருக்கு, முடிச்சிடலாம்னு பார்க்கறோம்” என்றார்.
‘அட ராமா, பொருத்தம் வேற பார்த்தாச்சா’ என்று உள்ளூர அழுதாள்.

“இப்போதானே மா எனக்கு தேர்வெல்லாம் முடிஞ்சுது..... இப்போவே என்னம்மா அவசரம், நான் ரெண்டு வருஷம் ஏதானும் வேலைக்கு போறேனே” என்று கூறி பார்த்தாள்.
“அதெல்லாம் நீ புகுந்த வீட்டுக்கு போய் அவங்க ஒத்துகிட்டா வேலைக்கு போ, இப்போ கல்யாணம் தான்” என்றார் கற்பகம்.
‘அம்மா முடிவு செய்துட்டா மாத்திக்கவா போறாங்க’ என்று எண்ணி மாய்ந்து போனாள்.
‘உன்னை எப்படிடா மறப்பேன், என் கண்ணுக்குள்ளையே வந்து சிரிக்கிறியே டா?’ என்று துடித்தாள்.
‘உன்னை மறந்து வேறு ஒருவனுடன் கல்யாணமா’ என்று பயந்தாள்.
“யாருமா மாப்பிள்ளை?” என்றாள் மெல்ல குரலே எழும்பாமல்.
“எல்லாம் உனக்கும் தெரிஞ்சவங்கதான்” என்றபடி கற்பகம் தன் வேலையை பார்க்க சென்றுவிட்டார். அதற்குமேல் வெட்கத்தை விட்டு கேட்க துணிவின்றி தன் அறைக்குள் புகுந்து கட்டிலில் விழுந்து அழுது துடித்தாள்.

“என்னடி இது, பொழுது சாயர வேளையில இப்படி படுத்துகிட்டு..... என்னாச்சு உனக்கு, அவ்ளோவா பிடிக்காம போச்சு உனக்கு இந்த கல்யாணம், நீ ஒண்ணும் சொல்ல மாட்டேன்னு நினைச்சு நான் வாக்கு வேற குடுத்துட்டேனே கண்ணு” என்றார் பதறி கற்பகம்.

“ஐயோ, நான் சிவகாமிக்கு என்ன பதில சொல்றது இவளானா இப்படி அழுகிறாளே” என்று பலமாக புலம்பினார்.
“என்னம்மா?” என்று எழுந்தாள்.
“சிவகாமி அத்தைக்கு என்ன?” என்றாள் திடீரென்று உயிர் வந்ததுபோல.
“ஆமாடி கண்ணு, சிவகாமி அத்தை பிள்ளை ரஞ்சனுக்கு தானே உன்னை பார்த்திருக்கு” என்றார்.
“நிஜம்மாவா மா?” என்றாள் ஆசையுடன்.
“ஆமாடி, என்ன திடீர்னு திகைச்சு போய்டே, உனக்கு சம்மதம் இல்லைனா நான் வேணா அத்தைய கூப்பிட்டு சொல்லீடறேன்” என்றார்.

“இல்லை இல்லை வேணாம்” என்றாள் அவசரமாக.
“இருக்கட்டும் மா, நீ எனக்கு எது செஞ்சாலும் அது என்னுடைய நன்மைக்குதான் இருக்கும்னு எனக்கு தெரியும்..... உன்னை விட்டு பிரியணுமேன்னு தான் அழுதேன்” என்று சமாளித்தாள்.
“அடி அசடே, நல்லா அழுதே போ..... எனக்கு கொஞ்ச நேரம் வயிறு கலங்கி போச்சு..... சரியான லூசு பொண்ணுடீ நீ” என்று செல்லமாக கடிந்து கொண்டார்.
“போ மா” என்று தாயின் தோள் சாய்ந்தாள். மனம் உல்லாசமாக இருந்தது.

‘நீதானா டா, ஓசை இல்லாம காரியத்தில் கண்ணா இருந்திருக்கே, பலே ஆளு நீ’ என்று அவனை மெச்சிக்கொண்டாள். அவனை எண்ணும்போதே முகம் சிவந்தது.

பின்னோடு ஒரு நல்ல நாளில் நிச்சயம் வைத்தனர்.
“என்னடி, என் கல்யாணத்தில நீ சைட் அடிச்சு, இப்போ உனக்கே கல்யாணமா, ஒரு கல்யாணத்திலதான் இன்னொண்ணு அமையும்னு சொல்லுவாங்க, ஆளு பரவாயில்லைடீ நீ.... அமுக்கு மாதிரி இருந்துகிட்டு....” என்று கிண்டல் செய்தாள் அவளின் அக்கா பிருந்தா.
“போ கா அதெல்லாம் ஒண்ணுமில்லை” என்று சிவந்தாள்.

அன்று அவனுக்கும் அவளை மறுபடி சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அதுவரை எந்த காரணம் கூறி அவளை சந்திப்பதென தெரியாமல் தவித்திருந்தான் ரஞ்சன். அவளை கண்ட கண்கள் உல்லாசமாக உற்சாகாமாக மலர்ந்து விழித்தது. அவனை ஓரக்கண்ணால் பார்த்தவள் முகம் சிவந்தாள். நலங்கு வைக்கப்பட்டது. அவன் மோதிரம் இட்டான்.
அவள் தளிர் விரல்களை பிடித்து மோதிரம் இட்டதும் அதனை பற்றி முத்தமிட ஆசை வந்தது. ‘உதை விழும்’ என்று அடக்கிக்கொண்டான்.
யாரும் காணாதபோது காற்றில் உதடு குவித்தான். அவள் தங்க முகம் சிவந்த முலாம் பூசியது.

அனைவரும் சாப்பிட செல்ல இவர்களுக்கு தனிமை குடுக்கப்பட்டது.
“என்னை உனக்கு பிடிச்சிருக்கா?” என்றான்.
“ம்ம்ம்” என்றாள் தலை நிமிராமல்.
“வீட்டில சொன்னாங்கன்னு என்னை கட்டிக்க சம்மதிச்சியா?” என்றான். ‘இல்லை’ என்று தலை ஆட்டினாள்.
“மௌனமாவே தலை ஆட்டினா நான் என்னனு புரிஞ்சுக்க, வாய் திறந்துதான் பேசேன் சித்து” என்றான். அவள் கிளர்ந்தாள்.
“இல்ல... வந்து.... எனக்கும் உங்கள ரொம்பவே பிடிச்சிருந்தது” என்று தலை கவிழ்ந்தாள்.
“ம்ம் அப்படியா நிஜம்மாவா” என்றான் ஆசையாக.
“உங்களுக்கு?” என்றாள் அவனை ஒரு நிமிடம் ஏறிட்டு.
“பிடிக்காமலா, அவ்ளோ பிடிச்சு போய்தானே என் முகத்தில அப்பட்டமா தெரிய, எங்கம்மாவே பார்த்துட்டு உன்னை எனக்கு பார்க்கலாமா னு கேட்டாங்க” என்றான் உல்லாசமாக சிரித்தபடி. அவள் மேலும் சிவந்தாள்.

அவள் விரல்களை பிடித்து சுற்றும் கண்டுவிட்டு மெல்ல தன் இதழ் பதித்தான். அவள் சட்டென்று திகைத்து நாணினாள்.
“ஹே உன் செல் நம்பர் எனக்கு குடு கூப்படறேன்” என்று வாங்கிக்கொண்டான். அவளை சில கோணங்களில் தன் செல் போனில் படம் பிடித்துக்கொண்டான்.
“ஆமா என்னை படம் பிடிக்கணும்னு உனக்கு தோணலையா?” என்றான். “தோணினா மட்டும்... வெக்கமா தயக்கமா இருக்காதா?” என்றாள் குரலே வெளிவராமல்.
“ஓஹோ அப்படியா, அதுகென்ன பயம் தயக்கம், இந்தா என்னை நீயே படம் பிடிச்சுக்கோ” என்று போஸ் குடுத்தான். அவன் நின்ற விதத்தில் அவளுக்கு சிரிப்பு முட்டியது.
“அப்பறம் சிரிக்கலாம், யாராச்சும் வருமுன் போட்டோ எடு” என்றான். அவளும் அவனை தன் செல்லில் அடக்கிக்கொண்டாள்.

அடுத்தாற்போல தினமும் அவளை காலையும் மாலையும் அழைத்தான்.... ‘சித்து, குட்டிமா’ என்று கொஞ்சிக்கொண்டான். தினமும் இரவு படுக்குமுன் கண்டிப்பாக பேசிக்கொண்டனர். இரு முறை காபி ஷாப்பில் கண்டு பேசிக்கொண்டனர்..... அவளது முகூர்த்த பட்டினை வாங்கவென மீண்டும் சந்தித்தனர்..... அவளை கண்களால் பருகியபடி தனக்கு பிடித்த பிடிக்காத நிறங்களை ஜாடை செய்தான்..... அவன் கண் பார்வையின்படி தன் புடவைகளை அவளும் தேர்வு செய்தாள்....

“அந்த புடவைய எடுங்க” என்று அவள் மீது பின்னிருந்து சாய்ந்து முன்னே கிடந்த ஒரு சேலையை கையில் எடுத்து பார்ப்பது போல அவள் மேல் உரசிக்கொண்டான். அவளுக்கு வெட்கமாகிப் போனது.....
“என்ன இது எல்லாருக்கும் முன்ன இப்படி” என்று சன்ன குரலில் கடிந்துகொண்டாள்.
“அதானே த்ரில்லே” என்றான் அவனும் சன்னமாக.

நல்லதொரு முகூர்த்த தினத்தில் மங்கலமாக அவர்கள் திருமண வைபோகம் நடந்தேறியது. அவன் ஆசையுடன் தேர்வு செய்த பச்சை வண்ண பட்டு சேலையில் அவள் மரகதச் சிலையாக அவனருகே வந்து அமர்ந்தாள். அவனும் சொக்கித்தான் போயிருந்தான்..... மங்கள இசை முழங்க அவள் சங்கு கழுத்தில் மாங்கல்யம் கட்டி அவளை தன்னவளாக்கிக்கொண்டான்.
அவள் கால் பற்றி மெட்டி இட்டான். மந்திரங்கள் முழங்க பெரியோர் வாழ்த்த நல்ல நேரத்தில் திருமணம் நடந்தேறியது.
அனைவரின் கண்களும் அவர்களையே சூழ்ந்து வாழ்த்த மனம் மகிழ தம்பதிகள் ஆயினர்.

அவள் தளிர் விரல் பற்றி அக்னியை வலம் வந்து பின் பெரியோர்களை வணங்கி எழுந்தனர். வரவேர்ப்பிலும் கூட சிற்றாடை கட்டிய சின்னவளாக சித்ராங்கி மிளிர்ந்தாள். அவளை வாரி அணைத்துக்கொள்ள மனம் தவித்தது, பொறு என்று அடக்கினான்.
அன்று இரவின் தனிமையில் அவளையே மெய் மறந்து பார்த்தபடி அமர்ந்திருந்தான். அவன் அணைப்பில் இருந்தாள் சித்ராங்கி. மௌனமே காதலாய் ஒரு ராஜாங்கம் அங்கே நடந்தேறியது. அவனின் ஒவ்வொரு ஸ்பரிசமும் அவளை கிளர்ந்தெழ செய்தது.

காலையில் விழித்தவள் அவனின் இறுக்கமான அணைப்பில் இருப்பதை கண்டு வெட்கினாள். மெல்ல அவன் தூக்கம் கலையாமல் நகர்ந்து எழுந்து குளித்து முடித்தாள். சிவகாமியிடம் செல்ல, அவர் சுவாமிக்கு விளக்கேற்றியபின் அவனுக்குண்டான காபியுடன் அவளை திரும்பவும் உள்ளேயே அனுப்பினார்.
வெட்கத்தில் கால்கள் குழைந்து தடுமாற உள்ளே சென்றாள்.
“என்னங்க காபி” என்றாள் மெல்ல. அவன் விழித்திருந்தாலும் அவளை சீண்ட வேண்டி கண் விழிக்காது படுத்திருந்தான்.
ஈர தலை சரிந்து விழ, “என்னங்க” என்றாள் குனிந்து. பதில் இல்லை.
“ஏங்க” என்றாள் கொஞ்சம் பலமாக.
“அதான் ஏங்கறேனேடீ” என்று அவளை அப்படியே ஈரமுடியோடு பிடித்து இழுத்து தன் மேல் சாய்த்துக்கொண்டான்.

“ஆமா, அது என்ன, ஏங்க என்னங்கன்னு கூப்படறே?” என்றான்.
“ஏன் உங்களுக்கு பிடிக்கலையா?” என்றாள்.
“பிடிச்சிருக்கு ரொம்பவே, ஆனா இந்த காலத்து பெண்கள் எல்லாம் பேர் சொல்லித்தானே புருஷனை அழைக்கிறாங்க.... அதனால கேட்டேன்” என்றான்.
“அப்போ சித்து ஓகேவா?” என்றாள் தலை சாய்த்து.
“டபிள் ஒகேடீ” என்று அவள் மூக்கை பிடித்து திருகினான்.
“தலைமுடியை காய வை சித்து” என்றான்.
“அட, என்ன நீங்களும் என்னை சித்துன்னு கூப்படறீங்களே?” என்றாள் கண்கள் அகல விழித்து. அவள் முகத்தை தன் அருகே இழுத்து அவளது அந்த விரிந்த கண்களின் மேல் முத்தமிட்டபடி...

“ஆமா, நீ எல்லாருக்கும் சித்ரா.... ஆனா எனக்கு மட்டும் சித்து..... நான் உனக்கு சித்து..... நம்ம பெயர் பொருத்தம் அப்படி இருக்கே குட்டிமா” என்றான்.

“இது கூட நல்லா இருக்கு... எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்றாள் குழைவுடன்.
“உன்னை பார்த்தா சிற்றாடை கட்டி வந்த சின்னவள் போல இருக்கியா அதான் குட்டிமா னு கூப்பிட தோணுதுடீ” என்று அணைத்துக்கொண்டான்.
“காபி ஆறிடும் குடிங்க சித்து” என்றாள். இருவருமாக காபியை குடித்து முடித்து அவனை பெரும்பாடு பட்டு விலக்கி குளிக்க அனுப்பினாள்.

அத்யாயம் 2

கீழே வந்து சிவகாமிக்கு உதவினாள்.
“நான் உங்களை அத்தைனு எல்லாம் கூப்பிட மாட்டேன் மா” என்றாள் செல்லமாக. அவர் ஆச்சர்யமாகி அவளை பார்க்க,
“உங்களை பார்த்தா எனக்கு இன்னொரு அம்மா மாதிரித்தான் தோணுது.... அதனால நான் உங்கள அம்மான்னே அழைக்கட்டுமா?” என்றாள் தலையை ஆட்டியபடி சிறு பெண் போல.....
“அதுக்கென்ன, எனக்கும் ரொம்பவே சந்தோஷம்தான்..... அப்படியே கூப்பிடேன்” என்று அவள் தலையை தடவினார்.
‘நான் நினைத்தது போல இது மனசால இன்னமும் குழந்தைதான்.... பக்குவமா பார்த்துக்கணும் போல....’ என்று எண்ணிக்கொண்டார்.
ஆனால் சித்ராங்கிக்கு பத்து விரலும் நூறு காரியங்களாக இருந்தன. மளமளவென வேலை பார்த்தாள்...... வீட்டு வேலைகள் சமையல் அனைத்தும் அவளுக்கு அத்துப்படியாகி இருந்தன.....
“உங்கம்மா நல்லா வளர்த்திருக்கா உன்னை” என்று மெச்சிக்கொண்டார். இவள் சிரிப்பாள்.

கணவனின் அன்பு மழையில் நனைந்து திக்குமுக்காடி போனாள். ஒரு வாரம் போல காஷ்மீர் அழைத்துச் சென்றான். காதலிலும் ஆசையிலும் திளைத்து முத்தெடுத்தனர் இருவரும். ஊர் திரும்பி ரஞ்சன் ஆபிஸ் செல்லத் துவங்கினான்.
அவன் வீடு, அவன் தாய், அவன், என்று அனைத்துமே அவளுக்கு மிகவும் பிடித்து போக சில நாட்களிலேயே அவள் அங்கே ஐக்கியமாகி விட்டாள்.... தன்னை அந்த வீட்டின் ஒரு அங்கமாக அமைத்துக்கொண்டாள்.... வீடு அவள் கை வண்ணத்தில் மிளிர்ந்தது.
“அம்மா அம்மா” என்று அழைத்துக்கொண்டு “இதை இப்படி வைக்கட்டுமா, நல்லா இருக்காமா?” என்பாள் எதையானும் செய்துவிட்டு சின்ன குழந்தையின் குதூகலத்துடன்.
“ரொம்ப அழகா இருக்கு கண்ணு, அப்படியே செய்” என்று அவரும் அவளை சந்தோஷப்படுத்துவார்.

அவரிடம் பக்குவம் கேட்டுக்கொண்டு விதவிதமாக சமைத்து அசத்தினாள். இரவின் மடியில் அவன் கையில் குழந்தையானாள். குழந்தை மனம் படைத்த அந்த குமரி அவன் உள்ளத்தை தன் அன்பினால் கொள்ளை கொண்டாள். அவளை அவள் அழகை அன்பை ஆராதிப்பதே அவனுக்கு உயிர்  மூச்சாகி போனது.

THODARUM...


8 comments: