Tuesday 26 June 2018

UNNAI KAANAADHA KANNUM KANNALLA - EPISODE 9

அவன் தாய்தான் அழைத்திருந்தாள்.
“அப்பா கண்ணா உடனே கிளம்பி வா, நம்ம மலர் ஹாஸ்பிடலுக்கு வா” என்று பதறியபடி கூற கேட்டு,
“யாருக்கு என்னம்மா, சித்துவுக்கா மா, என்னாச்சுமா?” என்றான் அவனும் பதறி வாய் தந்தி அடிக்க.
“நீ வா பா சொல்றேன்... இப்போ பேச நேரமில்லை” என்று வைத்துவிட்டார்.

‘கடவுளே என் சித்துவுக்கு ஒன்றும் ஆகி இருக்கக் கூடாது.... ஐயோ இன்று அவள் பிறந்த நாள் ஆயிற்றே, இன்றா இப்படி..... என்ன நடந்திருக்கும்... விபத்தா, இல்லை அவளது மன நிலையில் ஏதேனும் மாற்றமா, பழையது ஞாபகம் வந்து குழம்பினாளா, இல்லை ஒரு வேளை கலாவுக்கா?’ என்று குழம்பி பீதியில் வண்டி ஓட்டி மலர் ஹாஸ்பிடலை சென்றடைந்தான்.

அங்கே சென்று தன் அன்னையைக் கண்டு “என்னம்மா என்னாச்சுமா யாருக்கு?” என்றான் மூச்சுவாங்கியபடி.
“நீ கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கோ கண்ணா, சித்ராக்குதான்... நான் சொல்றேன்.... பொறுமையா இரு.... இன்னிக்கி மத்தியானம் நம்ம கலா வாசப்பக்கம் விளையாடிகிட்டு இருந்தா.... கூட நம்ம சித்ராவும் தான் அவ மேல ஒரு பார்வையை வெச்சபடி உட்கார்ந்திருந்தா..... நாந்தான் சித்ராவை ஒரு நிமிஷம் வந்துட்டு போ னு கூப்பிட்டேன்.... என்கிட்டே அவ வந்த அதே நேரம், நம்ம கலா வாசல்ல விளையாடிகிட்டு இருந்தவோ, பந்து ஓடி போச்சுன்னு அது பின்னாடியே நடு ரோடுக்கு ஓடிட்டா.... அதை குனிஞ்சு எடுக்க போனவோ எதிரே வந்த லாரிய பார்க்கலை..... அவனும் ப்ரேக் கூட பிடிக்க முடியாம தடதடன்னு வந்துட்டான்....

“என்னமோ சத்தம் கேக்குதேன்னு பாதி வழியிலேயே திரும்பி பார்த்த சித்ரா கலா வாச ரோடில ஓடறத பார்த்து “ஐயோ கலா, ஓடு நகந்துக்கோ, நான் தோ வந்துட்டேன்னு...” கத்திகிட்டே ஓடினா.
க்ஷண நேரத்தில என்னென்னமோ நடந்துபோச்சு ரஞ்சன்.... கலவை இடிக்க வந்த லாரிய பார்த்து சித்ரா கலாவ ஒரு கையால பிடிச்சு ஒரே தள்ளா ரோடுக்கு இந்த பக்கம் தள்ளீட்டா, ஆனா அதே நேரத்தில அவளுக்கு அந்த வேகத்தில பாலன்ஸ் போயிடுச்சு... லாரிக்கு முன்னாடி போய் விழுந்துட்டா....

நல்லவேளை லாரிகாரன் எப்படி கஷ்டப்பட்டு ப்ரேக் போட்டானோ அவ உயிர் தப்பிச்சுது.... ஆனா தலையில கையில எல்லாம் நல்ல அடி....
கலா வேற ரொம்ப பயந்து போய்டா, கீழே விழுந்ததுல அவளுக்கு கொஞ்சம் சிராய்ப்பு மட்டும்தான்.... ஆனா சித்ரா விழுந்தத அடிபட்டத பார்த்தவ ரொம்பவே பயந்து போயிருக்கா, அம்மா அம்மான்னு ஒரே அழுகை.... அவள அங்கே அண்ணியோட வீட்டுல பார்த்துக்க சொல்லி விட்டு, பக்கத்து வீட்டுக்காரங்க உதவியோட ஒரு டாக்சி பிடிச்சு சித்ராவோட இங்கே வந்தேன் நானு” என்றார் அழுகையினூடே.

சித்ராவுக்கு தலையில அடிபட்டிருக்கேன்னு ஸ்கான் எல்லாம் பண்ணி இருக்காங்க.... உள்ளே பார்த்துகிட்டு இருக்காங்கப்பா..... இன்னும் அவ நிலையை பத்தி ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறாங்க, எனக்கு பயமா இருக்கு.....” என்று கலங்கினார்  
இதை எல்லாம் கேட்டு உடலும் உள்ளமும் பதற அதை வெளிக்காமிக்காது அன்னையை தேற்றினான்.
“சரி மா, நீ கவலைப்படாம உக்காரு... நான் டாக்டர பார்த்து பேசீட்டு வரேன்” என்று ஓடினான். முக்கிய டாக்டர் யாரென்று விசாரித்து அவரிடம் போய் டாக்டர் என்று பரிதவித்து நின்றான்.
“எஸ்” என்றார்.
“நான் உங்களிடம் முக்கியமா அவசரமா பேசணும், சில விஷயங்கள் உங்களுக்கு தெரியபடுத்தணும்..... சித்ராங்கிங்கற பேஷன்ட் என் மனைவி, அவளுக்கு சில மாதங்கள் முன் ஒரு விபத்து ஏற்பட்டது...” என்று துடங்கி அவள் அதன்பின் அடைந்த நிலை, அவளது சிகிச்சை... இப்போதைய அவள் அம்நீஷ்யா நிலை... என்று எல்லாமும் விவரமாக எடுத்து கூறினான்.
“ஒ மை காட், இவ்வளோ நடந்திருக்கா, ஓகே நீங்க எனக்கு தெரியப்படுத்தினது நல்லதா போச்சு.... இவங்க நிலை அறிஞ்சு நாங்க இனி ட்ரீட் பண்ண முடியும்.... இன்னும் அவங்க கண் விழிக்கலை..... தலையில காயம் பெரிசில்லை.... ஸ்கான் நார்மலா  இருக்கு.... ஆனாலும் வேறே சர்ஜரி நடந்திருக்கேன்னு கொஞ்சம் சந்தேகம் இருந்தது, இப்போ நீங்க சொன்னதும் எங்களுக்கு புரிஞ்சுபோச்சு.... காத்திருங்க பார்க்கலாம்” என்றார்.

ஒரு மணி நேரத்திற்கு பின் சித்ராங்கி கண் திறந்தாள்.
“நான் எங்கிருக்கேன், ஒ ட்ரெயின் ஆக்சிடென்ட் ஆகி போச்சு” என்று மண்டையை பிடித்துக்கொண்டாள்.
“எனக்கு பலமா அடிபட்டுதே...” என்று எழ முயன்றாள்.
“அம்மா அப்படியே இருங்க, எழுந்துக்க வேண்டாம்” என்று படுக்க வைத்தாள் நர்ஸ்.
“ஐயோ, அவருக்கு தகவல் போச்சோ என்னமோ... எப்படி தவிக்கிறாரோ...” என்று பயந்தபடி அரற்றினாள்.
“ஓகே நினைவு திரும்ப வந்துடுச்சுன்னு தோணுது.... கொஞ்ச நேரத்தில நமக்கு தெளிவாகிடும், அவங்க கணவர வரச் சொல்லுங்க நர்ஸ்” என்றார் டாக்டர்.
ரஞ்சன் பதறியபடி உள்ளே ஓடி வர, “சித்து” என்று இரு கை நீட்டி அவனிடம் சேர துடித்தாள் சித்ராங்கி.
“சித்து” என்று அவனும் ஓடி வந்தான் அவள் அவனை சித்துவென அழைத்ததை எண்ணி மகிழ்ந்து என்னென்னமோ எண்ணங்களுடன் அவளை அணைத்துக்கொண்டான்.
“நான் ரொம்ப பயந்துட்டேன் சித்து, நீங்களும் விஷயம் கேள்விப்பட்டு பயந்துதான் போயிருப்பீங்க இல்லையா சித்து?” என்றாள்.
‘இவள் எந்த விபத்தை குறிப்பிடுகிறாள்?’ என்று ஒரு கணம் நிதானித்தான். டாக்டரை பார்த்தான். ‘பேச்சு குடுங்க’ என்று சைகை செய்தார்.

“உனக்கு ஒண்ணும் ஆகலியே குட்டிமா?” என்றான் அவளை அணைப்பிலேயே வைத்தபடி.
“இல்லை, தலையில கொஞ்சம் வலிக்குது.... இங்கே கையில கொஞ்சம் அடி.... நல்லகாலம்..... நல்லா தூங்கிகிட்டு இருந்தேன்...  அப்போ பெரிய சத்தம் கேட்டு தூக்கிவாரி போட்டு எழுந்தேன், பாம்ப் வெடிச்சு ஒரே களேபரமா ஆகி போச்சு..... பின் ஒரே க்ஷணத்தில மேலே பர்திலேர்ந்து தூக்கி எறியப்பட்டு கீழே விழுந்துட்டேன் சித்து..... என் மேலேயே மேல் என்னென்னமோ நெருப்பு கங்கு மாதிரி விழுந்துது..... நான் கீழ விழுந்த பிறகு என்னாச்சுனு எனக்கு தெரியல சித்து” என்றாள் அவனிடம் ஒன்றியபடி.
நடுவால நடந்தது எதுவுமே அவளுக்கு நினைவில் இல்லை என புரிந்தது. இதன் இடையில் இந்த டாக்டர் கோபிநாத்தின் நம்பர் வாங்கி இவளின் உடல் நிலை இப்போதைய நிலை குறித்து அவரிடம் பேசினார். விவரங்கள் திரட்டிக்கொண்டார்.

“ஓகே பேசாம படுத்துக்கோங்க மா, இனி பயமில்லை” என்று அவளை படுக்க வைத்துவிட்டு அவனை தோளோடு அழைத்து வெளியே கூட்டி வந்தார். “அவங்களுக்கு  நடுவால நடந்தது எதுவுமே நினைவில் இல்லை.... அது அப்படியே இருக்கட்டும்.... மெல்ல மெல்லமா வீட்டிற்கு போன பிறகு ஒரு கதை மாதிரி எல்லாம் சொல்லீடுங்க போதும்..... தானே கொஞ்சம் குழம்பி தானே தெளிஞ்சுடுவாங்க.... கொஞ்சம் அடிகள் பட்டிருக்கு, அதற்கு பிளாஸ்டர் போட்டிருக்கோம்..... சீக்கிரமே குணமாகீடும், அதைப் பற்றி பயப்பட தேவை இல்லை..... இனி நத்திங் டு வர்றி, ஆனா அதே சமயம் நீங்க ஒரு விதத்தில ஜாக்ரதையா இருக்கணும்.... அவங்க முகம் மாறி இருக்கு, அதை சடனா கண்டு அவங்க அதிர்ச்சி ஆகிடாம நீங்க பார்த்துக்கணும்... மெல்ல மெல்லமா உண்மைய சொல்லி புரிய வெச்சு அவங்கள மனதளவில தயார் பண்ணீட்டு தான் அவங்க முகத்தை அவங்க பார்க்கணும்... டேக் கேர் ” என்றார்.

“ஹப்பா” என்று பொத்தென அன்னையின் அருகே வந்து அமர்ந்தான். “என்னடா ஆச்சு, என்ன சொல்றாரு டாக்டர்?” என்றார் சிவகாமி கவலையுடன். “நல்லா இருக்கா மா, கொஞ்சம் அடிபட்டிருக்கு குணமாகீடும்.... இதுல கெட்டதில ஒரு நல்லது, அவளுக்கு நினவு திரும்பீடுச்சுமா.... இப்போ பழைய விபத்து நடந்து தான் முழிச்சிருக்கோம்னு நினைப்பில இருக்கா, இப்போதைக்கு அப்படியே இருக்கட்டும்னு சொல்லி இருக்காரு டாக்டர்.... வீட்டில போய் மெள்ளமா சொல்லிக்கலாம்னு சொல்றார்” என்றான்.

“கடவுள்தான் காப்பாற்றினார் நல்ல காலம்” என்றார்.
மீண்டும் அவன் சித்ராங்கியிடம் செல்ல “சித்து, கலா எப்படி இருக்கா, அம்மா எங்கம்மா எல்லாம் எப்படி இருக்காங்க..... முக்கியமா உங்களை பற்றி சொல்லுங்க, ரொம்ப பயன்துட்டீங்களா, பாவம் இல்ல நீங்க” என்றாள் அவன் கையை நீட்டி பிடித்துக்கொண்டு.

“ம்ம்ம் ஆமா குட்டிமா, ரொம்ப பயந்துட்டேன், கலங்கிபோயிட்டேன், பைத்தியம் மாதிரி ஆலஞ்சு திரிஞ்சு உன்னை தேடினேன்... எங்கேயுமே கிடைக்காம துவண்டு போய்ட்டேன்... ஐயோ அத போல நிலை யாருக்குமே வரக் கூடாது குட்டிமா” என்றான் அந்நாளின் நினைவில். அவன் கையை பிடித்து தடவி கொடுத்தாள்.
“இப்போதான் எல்லாம் சரியா போச்சே, கவலைபடாதீங்க சித்து” என்றாள் அன்புடன்.

அடுத்த நான்கு நாட்கள் அவளை அங்கேயே அப்சர்வேஷனுக்காக வைத்திருந்தனர்.... பெரிதாக எந்த மாற்றமும் இல்லை, அடிகள் குணமாகி வந்தன என்பதால் கட்டு மாற்றி அவளை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் இருந்தவரை அவள் தன் முகம் காணாமல் காப்பாற்றி ஆயிற்று இனி எப்படி என்று கலக்கத்துடனேயே சித்ராங்கியை வீட்டிற்கு அழைத்து வந்தான்.
வந்தவள் உடனேயே “கலா குட்டி” என்று ஓடி போய் மகளை கையில் ஏந்திக்கொண்டு. முத்த மழை பொழிந்தாள். உடனே துணுக்குற்றாள்,
”என்ன இது குழந்தை இப்படி வளர்ந்திருக்காளே... சித்து, நான் எத்தன நாளா ஹாஸ்பிடல்ல இருந்தேன்...?” என வினவினாள். அவள் முகம் குழப்பத்தில் சுணங்கியது.. புலி வந்தேவிட்டது என உஷாரானான் சித்து
“அம்மா... அம்மா, நீ.... வண்டி இடிச்சுது” என்று திணறினாள் குழந்தை.
“ஆமா டா கண்ணு, ஆனா பாரு அம்மாக்கு ஒண்ணும் ஆகலையே, நான் நல்லாத்தானே இருக்கேன்.... இனி நீ எதுக்கும் பயப்படக் கூடாது, சரியா” என்று முகத்தோடு கொஞ்சிக்கொண்டாள். ‘இவ்வளவு பேசறா குழந்தை...’ என உச்சி முகர்ந்தாலும், இது எப்படி என மண்டைக்குள் வந்து குடைந்தது.

“சித்து இங்க வா” என்று தங்கள் அறைக்கு அழைத்து போய் கட்டிலில் அமர்த்தினான்.... அருகே அமர்ந்து அவள் கைகளை பிடித்துக்கொண்டான்.... அவள் தோள் மீது ஆதரவாக ஒரு கையை போட்டு அணைத்துக்கொண்டான்... “என்னவாம், வீட்டுக்குள்ள வந்தவுடனே என் சித்து கண்ணாவுக்கு ஆசை பொங்கிடுச்சு?” என்று சீண்டினாள். அவள் முகம் லேசாக சிவந்தது. இன்னமும் முழுமையாக தனது கிலியிலிருந்து மீளாத குழப்பமும் முகத்தில் இருந்தது.

“நான் உன்கிட்ட முக்கியமா சிலது பேசணும்.... புரிய வைக்கணும் டா குட்டிமா” என்றான். அவன் முகத்தின் தீவிரம் கண்டு அவளும் அவனை கவனித்து கேட்கலானாள்.
“என்ன சித்து?” என்றாள்.
“உனக்கு ரயில் விபத்து நடந்து இப்போ கிட்டத்தட்ட பத்து மாசங்கள் ஆகுது குட்டிமா” என்றான்.
“என்ன, என்ன சொல்றீங்க சித்து.... அப்போ நான் எங்கே இருந்தேன் இவளோ நாளா?” என்று அதிர்ந்தாள். அவள் உடம்பு நடுங்குவதை கண்டு மேலும் இறுக்க அணைத்துக்கொண்டான்.
“எல்லாம் சொல்றேன், மனதை திடமா வெச்சுகிட்டு பயப்படாம கேட்கணும் குட்டிமா” என்று அவளை தேற்றி, அவளது ரயில் விபத்து, விஜயவாடாவில் இருந்தது, அவளது சிகிச்சை, அவள் முக மாற்றம், அவன் அவளை கண்டு தேடி அலைந்து ஓய்ந்தது, அங்கே சென்று அவளை எதேர்ச்சையாக கண்டு பிடித்தது, கோபிநாத்திடம் பேசி அவளை இங்கே அழைத்து வந்தது இப்போது இந்த விபத்து என்று விவரமாக சொல்ல சொல்ல அவளுக்கு மயக்கமே வந்தது.

“நிஜமா நிஜமா சித்து?” என்று உளறினாள் குழம்பினாள்.
“அப்போ என் முகம்... என் முகம் பழையது போல இல்லையா, விகாரமா இருக்கா சித்து... ஐயோ” என்று பதறினாள்.
“ச்சே ச்சே டாக்டர்களின் சிறந்த சிகிச்சையினால முன்னைவிட அழகா இருக்கே குட்டிமா.... ஆனா வேறே மாதிரி ஜாடை வந்திருக்கு, அவ்ளோதான்..... பயப்படக் கூடாது, கவலையோ பதட்டமோ கூடாதுன்னு டாக்டர் சொல்லி இருக்கார் டா செல்லம்” என்று தேற்றினான்.

“நான் பார்க்கணும்” என்றாள்.
“சரி வா” என்று கூடவே எழுந்து அப்படியே அணைத்த வாக்கில் தங்கள் அறையிலேயே இருந்த முழு நீள கண்ணாடியின் முன் அவளை கொண்டு நிறுத்தினான். தன்னை அதில் கண்டு அதிசயித்தாள், அதிர்ச்சியுற்றாள். முகத்தை தடவி தடவி தொட்டு பார்த்துக்கொண்டாள். தடவினாள், அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திரும்பி பார்த்துக்கொண்டாள். அதே கண்கள் அதே காது, ஆனால் மோவாயின் வடிவம், புருவம், மூக்கு கன்னங்கள் என மாறி இருந்தன. மிக லேசாக தைய்யல் தழும்புகள் இன்னமும் தென்பட்டன... சித்ராங்கியின் ஜாடையில் வேறொரு பெண் என்பது போல, தான் இருப்பதை கண்டாள். தன்னையும் அறியாமல் கண்ணீர் வழிந்தது. அதை துடைக்க கூட தோன்றாமல் அப்படியே வந்து கட்டிலில் அமர்ந்தாள்.

“அழக்கூடாது குட்டிமா” என்று அவள் கண்ணீர் துடித்தான்.
“நீ எனக்கு முழுசா கிடைத்தாயே அதுவே பெரிசு, நான் தவிச்ச தவிப்பு.... ஐயோ என் பரம விரோதிக்கும் அந்த நிலை ஏற்படக் கூடாது..... நீ எப்படி இருந்திருந்தாலும் என்ன நிலையில இருந்திருந்தாலும், அழகே இல்லாம மாறி இருந்தாலும் எனக்கு நீதான் வாழ்க்கை குட்டிமா, அத பார்க்க, நீ இப்போ அழகா தான் இருக்கே.... இந்த முகத்தின் தையல் வடுக்கள் இன்னமும் கொஞ்ச காலத்துல மாறீடும்னு டாக்டர்ஸ் சொல்லி இருக்காங்கடா செல்லம்..... ஸோ நீ கவலைப்படவே கூடாது” என்று அவளை பேசி பேசி தேற்றினான.

கொஞ்சம் தெளிந்தாள்..... அவன் தோளிலேயே தலை சாய்த்துக்கொண்டு எதுவும் பேசாமல் அவன் சொன்ன, கடந்து போனவற்றை அசை போட்டாள்.... இன்னமும் அவை எதுவும் அவள் மனதில் ஆழ பதியவில்லை.... ஒரே பிரமிப்பாக குழப்பமாக இருந்தது.... தலை வலிப்பது போல இருந்தது.... ஒரே நாளில் எவ்வளவு அதிர்ச்சி இது என்று குடைந்தது....
“சித்து, தலைய என்னமோ போல இருக்கு” என்றாள் சோர்வுடன்.
தொடரும்


10 comments: