Wednesday, 19 April 2017

நெஞ்சமதில் உன்னை வைத்தேன் - பாகம் 17

பாகம் 17
ஒக்காரு பவித்ரா என்றான். அவனருகில் அமர்ந்து அவனுக்கும் காபி கப்பை கொடுத்துவிட்டு தானும் எடுத்துக்கொண்டாள்.
சுந்தரம் இவற்றை எல்லாம் கண்டவர் ஏதோ உள்ளது என்று உள்ளுக்குள்ளே நினைத்து சிரித்தபடி உள்ளே சென்றுவிட்டார் அவர்களுக்கு  தனிமை கொடுத்து.
காபி குடித்துக்கொண்டே அவள் தோளைச் சுற்றி தன் இடது கையை போட்டபடி அவளை அருகில் இழுத்துக் கொண்டான்.

சு, என்ன இது... அவர் வந்துட போறாரு என்று வெட்கினாள்.
அதான் அவரே புரிஞ்சுகிட்டு உள்ளே போய்ட்டாரே அப்பறம் என்ன.... சொல்லு, எப்போ என் மேல ஏன் உனக்கு அன்பும் காதலும் ஏற்பட்டது?” என்றான் ஆவலோடு அவள் முகம் ஏந்தி.
எப்போன்னா என்ன சொல்றது?” என்று சிவந்து தலை குனிந்தாள்.
சொல்லு னா என்றான்.
அன்னிக்கி எங்க வீட்டுக்கு நீங்க வந்தீங்களே.... அப்போ உங்க பழக்கம் பேச்சு உங்க கண்ணியம் உங்க ஹாஸ்யம் எல்லாம் என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிச்சு.... உங்களுக்குன்னு யாரும் இல்லை கோமதிய தவிரன்னு சொன்னீங்களே அப்போ ஐயோ னு என் மனது வலிச்சுது....

ம்ம்ம் என்றான் கண்ணை உருட்டியபடி.
அன்னிக்கி ஈவ்னிங் கோவில்ல எல்லோரும் உள்ளே செல்ல, நீங்க நான் வருவதற்கு வெயிட் பண்ணி கூட நடந்து வந்தீங்க.... அப்போ உங்க கரிசனம் பிடிச்சுது.... எவ்வளவோ சந்தர்ப்பங்களில் நாம ஆபிஸ்ல தனியா இருந்திருக்கோம்... ஆனாலும் கூட நீங்க எப்போவுமே கண்ணியமா முகம் பார்த்துதான் பேசுவீங்க.... அதுவும் வழியாம கொள்ளாம பளிச்சுன்னு வேலை விஷயமா மட்டுமே பேசுவீங்க.... அதை எல்லாம் மெல்ல மெல்ல என் மனம் அசைபோட ஆரம்பித்தது.... தினம் யோசிச்சேன்... உங்ககிட்ட எனக்கு என்ன பிடிச்சிருக்கு என்னை உங்களுக்கு பிடிக்குமான்னு...”

நானே ஒரு முடிவுக்கு வர முடியாம அதே சமயம் உங்கள மறக்கவும் முடியாம தவிச்சபோதுதான் நீங்க நாலு நாள் லீவ்... என்கிட்டே சொல்லவே இல்லை பாருன்னு ஒரே கோவம் வருத்தம்..... அதுக்கு பின்னால நடந்ததெல்லாம் தான் உங்களுக்கே தெரியுமே என்று கூறி தலை அவன் தோள் மீது சாய்த்துக்கொண்டாள்.
ம்ம்ம் இண்டரெஸ்டிங் என்று அணைத்துக்கொண்டான்.
நீங்க என்னை எப்போ விரும்ப ஆரம்பிச்சீங்க?” என்று கேட்டாள்.
சொல்லணும்னா எப்போதுமே உன் கம்பீரம், மரியாதை, அன்பு, பண்பு எல்லாம் பார்த்து ஒரு நல்ல எண்ணம் இருந்தது....

எந்த ஒரு சின்ன விஷயமும் எம் டி இல்லாதபோது கூட நீ தனியே முடிவு எடுக்க மாட்டே
.... என்கிட்டே கேட்டுதான் செய்தே..... அதை நீ என் அறிவுக்கும் அனுபவத்துக்கும் கொடுக்கும் மரியாதையா நினைச்சு செஞ்சே.... ஆம் ஐ கரெக்ட்?” என்று கேட்டான்.
ம்ம் என்றாள்.
அன்னிக்கி உங்கவீட்டுக்கு வந்தபோது உங்க குடும்பத்தோடு நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்தபோது உங்க அன்பும் பண்பும் என்னை கவர்ந்தது. இந்த மாதிரி ஒரு குடும்ப சூழல் நமக்கு இல்லாமல் போச்சே னு அன்னிக்கி நான் ரொம்ப ஏங்கினேன் தெரியுமா என்றான் ஆதங்கத்தோடு.

தெரியுமே, ஐயா மூலையா போய் ஒக்காந்து எதையோ பரிகொடுத்தாப்போல இருந்தீங்களே..... அதைக்கண்டுதான் நானே வலிய வந்து பேசினேன்..... உள்ளே கூட்டிப்போய் சரி பண்ணினேன் என்றாள் ஆசையாக.
ம்ம் தெரியும்..... அது எனக்கு ரொம்ப பிடிச்சுது..... எனக்காக கவலைப்படவும் ஒருத்தர் இருக்காங்களேன்னு..... அன்னிக்கி உன்னை நெருக்கமா பார்த்து பேசி பழகினபின் மனசு ஏங்கிச்சுதான்

அப்போவே சொல்ல வேண்டியதுதானே?” என்றாள் குற்றமாக.
எப்பிடி நீ உச்சாணிக் கொம்பில இருக்கே.... நான் ஏறெடுத்தும் பார்க்க முடியாத உசரத்துல..... நானோ உன் கம்பனில வேலை செய்யும் ஒரு பணியாளன்..... என்ன தைர்யத்துல நான் கனவு காணட்றது.... அதை உன்கிட்ட என்ன தைர்யத்துல  சொல்லுவேன்?” என்றான்.
ம்ம் அப்பறம் என்னாச்சு?” என்றாள்.
ஏண்டீ கதையா கேக்கறே?” என்று சிரித்தான்.
அட சொல்லுங்களேன் வாசு என்றாள்.
பிறகு என்ன என் மனதை நானே கட்டுப்படுத்த முடியாம ரொம்ப தவிச்சேன்.... பழைய பாடல்கள் பார்த்தோமே ஒண்ணா ஒக்காந்து, அப்போதான் நான் முழுமையா உன்கிட்டே என்னை பறிகொடுத்தேன் டா என்றான் அவளை மேலும் இறுக்கியபடி.
நானும்தான் என்றாள் முகம் சிவந்து.

கோமதி கூட கேட்டா, பொண்ணு பார்க்கட்டுமா அண்ணான்னு
என்ன சொன்னீங்க?” என்றாள் அவசரமாக
வேண்டாம், இங்கேயே நானே பாத்துக்கறேன்னு மழுப்பிட்டேன்என்று சிரித்தான் தன் திருட்டுத்தனத்தை நினைத்து.
அப்போ இன்னும் அவங்ககிட்ட என்னைப் பத்தி சொல்லையா?”
எப்பிடி உன் மனசு தெரியாம நான் வாய் விடமுடியும்?” என்றான்
ஆமா இல்ல என்றாள்.
ஆமாவா இல்லையா?” என்று சிரித்தான்.
பாருங்க கேலி பண்றீங்கஎன்று சிணுங்கினாள்.
அப்படி பார்க்காதே..... அப்பறம் என்னைக் குத்தம் சொல்லாதேஎன்று நெருங்கினான்.
அவள் சிவந்துபோக அதை ரசனையோடு கண்டு அந்த சிவந்த கன்னத்தில் முத்தம் பதித்தான்.... அவள் கண்மூடி அவன் மார்பில் சாய்ந்துகொண்டாள்.

இந்த நாலு நாள் பிரிவு நம்மளை நமக்கு புரிய வெச்சுடும்னு நான் நினைக்கலை கண்ணம்மா என்றான் அழ்ந்த குரலில்.
நானும்தான் என்றாள்.
நான் ஆபிசிற்கு வரலைனாலும் கோமதியோட ஊர் சுத்தும்போது கூட பவித்ரா என்ன செய்யறாளோ, பார்த்தே நாளாச்சுன்னு தான் மனசுக்குள்ள எண்ணம் எல்லாம் தெரியுமா என்றான்.

நிஜமாவா!?” என்றாள் தன் விசாலமான கண்களை படபடத்தபடி.
நிஜம் டீ என்றான் அந்த கண்களின் மேல் முத்தமிட்டபடி.
காலையில வந்தா மேடம் முகம் சிவந்து தக்காளி போல கோவமா இருக்கீங்க.... என்ன கேட்டாலும் சொன்னாலும் எரிஞ்சு விழுந்தீங்க.... எனக்கு பயமாயிடுச்சு.... அப்பறம் இல்ல தெரியுது அது புகைச்சல்னு என்று சிரித்தான்.
சிரிக்காதீங்க... என் கஷ்டம் உங்களுக்கு என்ன புரியும் என்றாள் விலக முயன்று.
அதெல்லாம் தெரியமத்தானாடீ இப்படி என் மார்பில சாய்த்துக்கொண்டு என் வீட்டுல ஒக்காந்து பேசிகிட்டிருக்கேன்?” என்று கேட்டான்.
அப்பாகிட்ட இதைப்பற்றி பேசவே பயமா இருக்கு வாசு என்றாள் குழந்தையாக.
இரு, ஏதானும் செய்வோம்...” எனும்போது அவனின் மொபைல் அலறியது.

ஏதோ புது நம்பர் என்று எடுத்து ஹெலோ என்றான்.
வாசு, நான் அசோக் என்றான் உற்சாகமாக.
போனின் வாய் பொத்தி அசோக் என்றான் அவளிடம்.
ஐயோ என்று பதறினாள்.
சு, இரு... என்ன சொல்றான்னு பார்க்கலாம்..... பதறாதே என்றபடி
ஹாய் அசோக் எப்பிடி இருக்கே.... சாரி அன்னிக்கி நீ கூப்பிட்டப்போ சரியா பேச முடியலை.... என் தங்கை வந்திருந்தா ஊர்லேர்ந்து என்றான்.
ஓ அப்பிடியா.... உங்க தங்கையா... அதுசரி, அதை பவிக்கு சொல்லீட்டீங்களா?” என்றான் குறும்பாக.
என்ன, ஏன் அவகிட்ட சொல்லணும்?” என்றான் வேண்டும் என்றே தெரியாதவன் போல.

இல்ல, உங்க வீட்டுக்கு ஒரு பெண் வந்திருக்கான்னு அன்னிக்கி அக்காகிட்ட சொன்னதுலேந்து அவளுக்கு செம கோவம் அதான் என்றான்.
ஓ, இன்னிக்கி காலையில சொன்னேந்தான் அவங்ககிட்ட என்றான் எச்சரிக்கையாக.
அப்போ எல்லாம் சரி ஆகி இருக்குமே.... எங்கியோ வெளியே போறேன்னு போயிருக்காளாம்... அங்க வரலியா?” என்று நேராகக் கேட்டான் அசோக்.
இவன் மகா புத்திசாலி என்று எண்ணி அவனுக்கு எந்த மட்டில் தெரியுமோ இனி மறைப்பதும் வேஸ்ட் என்று
ஆமாம் அசோக், உன்கிட்ட சொல்றதுக்கு என்ன.... அவ இங்க என் கூடத்தான் இருக்கா என்றான் சற்றே கூச்சமாக.
ஓ கிரேட்! அப்போ ராசி ஆயிட்டீங்க ரெண்டு பேரும்.... அப்படித்தானே என்று பெரிதாக சிரித்தான்.

டேய் உனகெப்பிடிடா?” என்று கேட்டான்.
இதுக்கெல்லாம் வெத்தலையில மை போட்டா பார்க்கணும்.... எங்கக்காவப் பத்தி எனக்கு தெரியாதா வாசு?” என்றான் வாஞ்சையோடு
அதுவும் சரிதான்.... இப்போ என்ன அசோக்..... மேற்க்கொண்டு எப்பிடின்னு எங்களுக்கு கொஞ்சம் கலக்கமா இருக்கு என்றான் அவனிடமே சரண் என்று.
அசோக் தோ நான் அங்க கிளம்பி வரேன்.... வரலாம் இல்ல?” என்று கேட்டான்.
கேக்கணுமா, உடனே வா என்று அழைத்தான்.
சரி, சி யு சூன் என்று வைத்தான்.

ஐயோ, அவங்கிட்ட ஏங்க எல்லாத்தையும் சொன்னீங்க .... அவனை இங்க வேற வரச்சொல்லி இருக்கீங்க என்றாள் பவி பதறிப்போய்.
நீயும் எல்லாம் கேட்டே தானே பவித்ரா..... அவன் உன்னை உன்னையவிட நல்லா புரிஞ்சு வெச்சிருக்கான் டா.... நாம அடுத்து எப்பிடி என்னனு பயந்து யோசிக்கும்போது இது ஒரு நல்ல சான்ஸ்.... அவனே எல்லாம் பேசி உங்க பெற்றோர சரி பண்ணீடுவான்னு தோணுது.... வரட்டுமே.... என்ன ஆகிடும்..... அவன் நீ இங்க வந்தத தப்பா எடுத்திருந்தா சகஜமா இங்க வரட்டுமான்னு கேட்பானா..... வெயிட், லெட்ஸ் சீ என்றான் அவளை சமாதானபடுத்தியபடி.

அத்யாயம் நாற்பத்தி நான்கு
சிறிது நேரத்தில் அசோக் அங்கே வர வா அசோக் என்று வரவேற்றான்.
வீடு ரொம்ப அழகா இருக்கு வாசு என்றான்
தாங்க்ஸ் என்று அமர வைத்து காபி கொண்டு வரச் செய்தான். சுந்தரத்தை அறிமுகம் செய்தான்.
என்ன பவிக்கா, என்கிட்டே கூட சொல்லலை இல்ல.... இருக்கட்டும் கவனிச்சுக்கறேன் என்று வாரினான்.
சாரி அசோக், இவர் மனசு தெரியாம என்ன எப்பிடி சொல்றதுன்னு தான்.....” என்றாள் அவன் முகம் பார்க்காமல்.
நீங்க சொல்லலைனா எங்களுக்கு கண்டு பிடிக்க தெரியாதா.... உங்களுக்கு ஒண்ணு தெரியுமா, அம்மா அப்பாக்கு கூட புரிஞ்சுபோச்சு எல்லாமும் என்றான்

ஐயோஎன்று அலறினாள் பவி.
ஷு அக்கா, ஏன் இப்படி அலறரே... எல்லாம் நன்மையாவே முடியும்.... வாசு, நீங்க தப்பா எடுத்துக்க கூடாது. நாங்க பொண்ணு வீடு... எங்களுக்கு சிலது க்ளியர் ஆக வேண்டியது இருக்கு.... ஸோ இப் யு டோன்ட் மைண்ட், உங்களப் பத்தி எல்லாம் சொல்லுங்க.... எனக்கு தெரிஞ்சா நான் போய் என் பெற்றோர்கிட்ட பேச ஈசியா இருக்கும் என்றான்
பெரிய மனுஷன் போல பேசறதுக்கு மன்னிக்கணும் என்றான் கூடவே.

நோ நோ அதெல்லாம் ஒண்ணுமில்லை.... இன்பாக்ட் அடுத்து என்னனு நாங்க தவிச்சு நின்னப்போ நீ வந்து சுலபமா ஆக்கீட்டே. சொல்றேன்....
கண்டிப்பா உன் பெற்றோர் எதிர்பார்ப்பாங்க..... நானும் ஒரு தங்கைக்கு கல்யாணம் பண்ணி இருக்கேன் அசோக்... எனக்குப் புரியும் என்று கூற ஆரம்பித்தான்.
எங்களுக்கு திருச்சி பக்கம் பூர்வீகம். எங்கப்பா அம்மா படிச்சதெல்லாம் திருச்சில தான். திருமணம் முடிஞ்சு தான் அவங்க சென்னைக்கு மாறினாங்க. எங்களுக்கு நல்ல படிப்பு வாழக்கை எல்லாம் அமையணும்னு ஆசை. அதேபோல அப்பா மிக நல்ல வேலையிலும் சேர்ந்தார். உழைச்சு நல்ல லெவெலுக்கு வந்தார். எங்களுக்குன்னு வீடு கார் னு வசதியா இருந்தோம்.

ஆனால் அது கடவுளுக்கு பொறுக்கலை
... ஒரு நாள் அம்மா அப்பா ரெண்டு பேரும் ஒரு கல்யாணத்துக்கு போயிட்டு வரும்போது அவங்க போன ரயில் விபத்துக்குள்ளாகி ஸ்பாட்லேயே இறந்துட்டாங்க.... நான் அப்போ ப்ளஸ் டூ ல இருந்தேன். என் தங்கை கோமதி என்னைவிட நாலு வயது சின்னவள்.... நானும் தேற்றிக்கொண்டு அவளையும் தேற்றி எப்படி மேலேறினோம் னு இப்போ என்னை கேக்காதே..... சொல்லத் தெரியாது.... நல்ல காலம் அப்பா எங்க பேர்ல ஊர்லேர்ந்து நிலம் வித்த காசை டெபொசிட் பண்ணி இருந்தார்..... இந்த பிளாட் இருந்தது.... ஸோ எங்க படிப்பை தொடர்ந்தோம்... ஒரு நல்ல வேலையும் கண்டு பிடிச்சுகிட்டு செட்டில் ஆகிரவரை அது உதவிச்சு.... மிச்சம் இருந்த பணத்தையும் எங்கம்மாவின் நகைகளையும் போட்டு அவளுக்கு கல்யாணம் பண்ணீட்டேன்..... இப்போதான் எந்நாலும் கொஞ்சம் பணம் சேர்க்க முடிஞ்சிருக்கு

நல்ல நிலைமையில நல்ல வேலையில இருக்கேன்.... உனக்கே தெரியும்..... பவித்ராவ நல்லா வெச்சுக்க முடியும்னு நம்பிக்கை இருக்கு.... எனக்கு அவள ரொம்பவே பிடிச்சிருக்கு அசோக்....” என்றான்.
கிரேட் மாமா, போதும் இப்போதைக்கு சின்ன பயல் னு நினைக்காம என்கிட்டே இவ்வளோ விஷயங்கள் பகிர்ந்துகிட்டதுக்கு தாங்க்ஸ்..... நான் அம்மாகிட்ட சொல்லீட்டுதான் வந்தேன்.... நான் முதல்ல பேசிட்டு அப்பறமா நீங்க பிக்சர்ல வரலாம்னு..... அவங்களுக்கு உங்க குடும்ப பாக்கிரவுண்ட் தெரியவேண்டி இருந்தது..... முக்கியமான கவலை அதுதான்..... இனி தேர் ஷுட் பி நோ ப்ராப்ளம் என்றான்.

சரி என்ன பவிக்கா என்கூட வரியா இல்ல...?” என்றான் அசோக்.
போலாம் அசோக்.... நானும் வந்து ரொம்ப நேரமாச்சு என்று கிளம்பினாள்.
நான் வரட்டுமா வாசு?” என்று அவனிடம் கேட்டாள்.
சரி போயிட்டு வா.... கவலைப்படாதே பவித்ரா..... அசோக் வந்ததும் எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்குடா.... எல்லாமே நல்லதே நடக்கும் என்று தைர்யம் கூறினான்.
சுந்தரத்தை அழைத்து விடை பெற்றாள். இருவரும் கிளம்ப, வாசு தன் இருக்கையில் தொம்மென அமர்ந்தான். சுந்தரம் ஒண்ணு விடாமல் எல்லாமும் உள்ளே இருந்தபடி கேட்டுக்கொண்டுதான் இருந்தார். ‘நல்லதே நடக்க வேண்டும் இறைவா என்று வேண்டிக் கொண்டார்.

அண்ணா என்று அழைத்தான்.
என்னப்பா ஏதானும் சாப்பிடறியா இல்ல மனசோட கூட வயிறும் நிறைஞ்சிருக்கா?” என்று அவனை வாஞ்சையோடு வாரினார்.
போங்க அண்ணா என்று அவன் சிவந்தான்.
அப்போ தம்பி, இது உங்க முதலாளி மகளா?” என்று கேட்டார்.
ஆமாம் அண்ணா என்றான். “ஆனா இப்போதைக்கு கோமுவுக்கு எதுவும் சொல்ல வேண்டாம்..... எல்லாம் நல்லபடி முடிவானதும் சொல்லிக்கலாம் என்றான் அவசரமாக.
புரியுது தம்பி அப்படியே என்று உள்ளே சென்றார்.

அத்யாயம் நாற்பத்தி ஐந்து
அசோக் பவியுடன் வீட்டிற்குச் செல்ல அப்போது அதைக் கண்டு மதுவும் வித்யாவும் எதுவுமே கேட்கவில்லை. சாதாரணமாக பேசி சாப்பிட்டு தூங்கினர்.
அடுத்த நாள் பவித்ரா கம்பனிக்குக் கிளம்ப நீ முன்னே போம்மா.... நான் கொஞ்ச நேரத்துல வரேன்.... ஒரு கால் ஒண்ணு எதிர்பார்க்கறேன் என்றான் வித்யா. சரி என்று அவள் கிளம்பினாள்.

என்னப்பா முக்கியமான கால் என் கூடத்தானே என்று சிரித்தபடி வந்து அமர்ந்தான் அசோக்.
யு ஆர் டூ ஸ்மார்ட் சன் என்றான் வித்யா பெருமையாக தேங்க்ஸ் டாட் என்றான்.
பின் வாசுவின் வீட்டில் தாங்கள் பேசியதை எல்லாம் மது வித்யா இருவரிடமும் விரிவாகச் சொன்னான்.
வித்யா எல்லாம் கேட்டபின் அதுசரி திருச்சி பக்கத்துலன்னானே, அவங்க அப்பா பேர் என்ன?” என்றான் ஆவலாக.
தெரியல டாட்.... நானும் கேட்கலை.... அவரும் சொல்லலை என்றான்.
ஒகே இவ்வளவு தெரிஞ்சதே போதும்..... சாமர்த்தியமா கேட்டு வந்திருக்கே.... குட் ஜாப்.... இனி நாங்க பெரியவங்க பாத்துக்கறோம் என்றான் வித்யா.
மதுவுக்கும் ஒரு தெளிவு வந்திருந்தது.

அசோக் மீண்டும்
அப்பா அம்மா கொஞ்சம் நல்லா யோசிச்சு நல்ல முடிவா எடுங்க.... அவங்க ரெண்டு பேருமே ரொம்ப ஆவலோட ஆசையா காத்திருக்காங்க..... அவங்களால வேற யாரோடும் வாழ முடியும்னு எனக்குத் தோணலைஎன்றான்.
என்னடா பரிந்துரை செய்கிறியா?” என்று சிரித்தான் வித்யா. அசோக்கும் சிரித்தான்.
எங்களுக்கும் நல்லவிதமாத்தான் தோணுது..... இன்னிக்கி ஈவ்னிங் பவியோட ஒரு வாட்டி பேசீட்டு ஒரு நல்ல நாளா பார்த்து வாசு வீட்டுக்கு போய் பேசிப் பாப்போம்.... எல்லாம் நல்லதே நடக்கும் பயப்படாதே.... பவி சந்தோஷம் தானே நம்ம எல்லார் சந்தோஷமும் என்றான் வித்யா.

அன்று ஆபிசில் பவியை வாசுவும் அவனை பவியும் கண்டு கண்ணால் பேசிக் கொண்டனர். காதலிப்பவர் அருகிலேயே இருப்பது ஒரு சுகம். தினம் கண்டு கொண்டிருப்பது வரம்... அங்கு பேச்சும் கூட அதிகமே.... கண்ணால் பேசும் பேச்சு பெரும் பேச்சு  அல்லவா.... அது காதலர்களின் தனி பாஷை....
மற்றோர் முன் இருவரும் எப்போதும் போல இருக்க, வித்யாவிற்கு உள்ளுக்குள் சிரிப்பு. ‘என் மடியில தவழ்ந்த குழந்தை என் பவிகுட்டிக்கு காதல்.... என் முன்னேயே நயன பாஷை பேசுகிறாள்.... நான் மதுவுடன் பேசாததா, எனக்கா புரியாது..... இறைவா இவர்கள் இருவரையும் நல்லபடி வாழவை என்று வேண்டிக்கொண்டான்.
வாசுவோடு சில விஷயங்கள் டிஸ்கஸ் செய்யம்படி கூறி அனுப்பினான்.

அசோக் அப்பாவிடம் ஏதும் கூறவில்லையா வாசுவிடம் அவரே அனுப்புகிறாரே என்று எண்ணியபடி அங்கு சென்றாள் பவி.
என்ன மேடம் என்ன சங்கதி?” என்றான் அவன் பென்சிலை உருட்டியபடி.
அப்பா இதெல்லாம் உங்ககிட்ட டிஸ்கஸ் பண்ணும்படி அனுப்பினார்.... அதான் பயமா இருக்கு..... அசோக் அவர்ட ஏதும் சொல்லலையா னு யோசிக்கறேன்.....
எதுவானா என்ன.... தேவி தரிசனம் இந்த ஏழைக்கு கிடைக்கட்டுமேன்னு பாவமாச்சே னு நினைச்சிருக்கலாம் என்று சிரித்தான்.
பின் மிக சீரியசாக வேலை விஷயம் பேசினர்.
நான் வரேன் என்று அவள் கிளம்ப,

உடனே போயிடணுமாக்கும்?” என்றான் ஆதங்கத்துடன்.
பின்ன என்ன செய்யணும்?” என்றாள் குறும்பாக.
என்னென்னவோ செய்யலாம்.... நீ என்ன செய்ய ஒத்துப்பே.... என்ன செய்ய விரும்புவேங்கறது உன் நிலைய பொறுத்து இருக்கு என்றான் கண் சிமிட்டியபடி.
போடா அசுரா என்று திட்டினாள். அவன் பெரிதாக சிரிக்க ஓடிப் போய் அவன் வாய் பொத்தினாள்.
என்ன இது இப்படியா சிரிக்கறது.... இது ஆபீஸ்.... அந்தப் பக்கம் இருப்பது அப்பாவின் காபின் என்று எச்சரித்தாள்.
அதுசரி சிரிக்க வெச்சது நீ.... என்மேல் பழியா?” என்று அவள் வாய் போத்திய கையை அப்படியே வாயோடு பொருத்தி முத்தமிட்டான். அவள் சிவந்துபோனாள். அவள் நகரப் போக.
அவ்ளோதானா வாங்கிக்க மட்டும்தான் சொல்லித் தந்திருக்காங்க போல?” என்றான்.
என்ன இது, இன்னிக்கி ரொம்ப படுத்தறீங்க?” என்று அருகில் வந்து அவன் கை பற்றி முத்தமிட்டாள்.
ஆமாம் மச்சினன் ஒப்புதல் கொடுத்துட்டானே அந்த தைர்யம்தான் என்று சிரித்தான்.
சரி நான் வரேன் என்று சிட்டாகப் பறந்துவிட்டாள்.

அப்பாவுக்கு போய் விவரம் சொல்லணுமே என்று போக அவள் மலர்ந்த முகம் கண்டு ம்ம் நடக்கட்டும் என்று எண்ணிக்கொண்டான். “என்னம்மா சொன்னாரு உன் அவரு?” என்றான் வேண்டும் என்றே.
வாசு சொல்றாருப்பா...” என்று ஆரம்பித்தவள் என்ன! என்ன கேட்டார் தந்தை? என் அவரா! அப்போ அசோக் பேசிவிட்டானா. எல்லாம் தெரிந்துகொண்டே வேண்டும் என்றே அனுப்பிச்சாரா என்னை அங்கே?’ என்று வியந்து படபடப்பானாள்.
என்ன.... என்ன இப்போ, திடீர்னு படபடப்பு.... அம்மாவுக்கு கை கால் ஒதறுது என்று கேலி செய்தான் வித்யா.

அப்பா என்றாள் கண்களில் நீர் நிறைய.
என்னடா குட்டி, எதுக்கு இந்த பயம்.... விட்டுடு..... எங்ககிட்ட விட்டுடு.... நாங்களாச்சு பாத்துக்கறோம் என்றான் ஆதுரமாக அவள் தலைத் தடவி. அவர் தோளில் சாய்ந்து கொண்டாள் பவி.
அன்று மாலை இருவரும் வீட்டிற்கு செல்ல பிரெஷானபின் மதுவும் வித்யாவும் பவியை அமர வைத்துப் பேசினர்.
என்னம்மா என்ன முடிவு பண்ணி இருக்கீங்க.... அசோக் எல்லாம் சொன்னான்.... அதை உன் வாயால நாங்க தெருஞ்சுக்கணும்.... சொல்லு என்றார் வித்யாதரன்
அவள் நாணத்துடன் மௌனமாக இருக்க, “சொல்லுடா பவி என்று ஊக்கினாள் மது.

ஆமாம் மா, நான் வாசுவை விரும்பறேன்... அவரும் என்னை விரும்பறார்.... எங்களுக்கு நீங்கதான் பார்த்து நல்லபடியா திருமணம் செய்து வைக்கணும்..... அவருக்குன்னு இருப்பதெல்லாம் அவரோட தங்கை கோமதியும் அவ கணவர் வெங்கட்டும் தான் என்றாள்.
சரி இந்த ஞாயிறு நாள் நல்லா இருக்குனு அம்மா பாத்து வெச்சிருக்கா.... நாங்க அவர் வீட்டுக்கு போய் பேசி பார்த்துட்டு முடிவு சொல்றோம்..... அதுவரை பொறுமையா இரு டா குட்டி என்றார் வித்யா. “ஓகே பா என்றாள் தலை குனிந்தபடி.

அந்த ஞாயிறு மாலை மதுவும் வித்யாவும் பார்த்தியையும் அழைத்துக்கொண்டு அசோக்கோடு வாசுவின் வீட்டிற்குச் சென்றனர்.
தொடரும்...


No comments:

Post a Comment