Wednesday, 5 April 2017

நெஞ்சமதில் உன்னை வைத்தேன் - பாகம் 13

 பாகம் 13

வித்யாவின் பிசினஸ் மேலும் உயர்ந்து வளர்ந்து பேரும் புகழும் ஈட்டித் தந்தது. இதனிடையில் பார்வதிக்கு உடல் நலமில்லாமல் இருந்து இறைவனடி சேர்ந்தார். அது மட்டுமே மனதில் பாரம் ஏற்றியது எனலாம்.
ஆனாலும் மதுமா, அவங்க, நீங்க நிறைக்க வாழ்ந்தத பார்த்துட்டு மன நிறைவோடு போயிருக்காங்க. கவலைப் படக்கூடாது. இது கல்யாண சாவுஎன்றார் கற்பகம்

காலங்கள் ஓடி மறைந்தது. பவி பருவ வயது அடைந்தாள். பத்தாவது வகுப்பில் முதல் மாணவியாக தேறினாள். நல்ல உயரமாக மிக அழகான முக வடிவுடன் அளவான உடலமைப்புடன் பார்ப்பவரை கட்டிப்போடும் அழகோடு வளர்ந்தாள். அது மதுவுக்கு பெரும் பயமே. எப்போதும் அவளை கண்காணிக்க வேண்டி வந்தது. அவளோ தன் அழகைப் பற்றி பெரிதும் நினைக்காமல் படித்தோம் வந்தோம் என இருந்தாள்.
ப்ளஸ் டூ வேறே இடத்தில் சேர அங்கே நிறைய பணக்கார மாணவிகள் சேர்கை ஏற்பட்டது.... அங்கே பிடித்தது சனி.... அவளை அவள் அழகை ஏற்றிப்பேசி அவளை ஏற்றிவிட்டனர் மற்ற மாணவியர். மது இதை முதலில் அறிந்திருக்கவில்லை.

அத்யாயம் முப்பத்தி ஐந்து
சில நாட்களாக பவி கண்ணாடி முன்னாலேயே நிற்கக் கண்டு என்ன இது புது பழக்கம் பவி?” என்று கேட்டாள்.
ஒண்ணுமில்லியே மா, கண்ணாடி முன்னால நின்னாக்கூட தப்பா மா?” என்று எதிர் கேள்வி கேட்டாள். மதுவிற்கு சுருக்கென்றது.
அந்த வருட முடிவிற்குள் அவளே இருமுறை பவியை ஒரு ஆடவனோடு கண்டாள். பகீரென்றது. சரி விசாரிப்போம் என்று நினைக்க அதற்குள் ஏழாம்  வகுப்பு படிக்கும் மகன் அசோக் அவளிடம் வந்தான்.
அம்மா பவிக்கா யாரோ ஒரு பொறுக்கியோட அடிக்கடி வெளியே போறாமா என்றான் விவரம் அறியவில்லை எனினும் நடப்பது தப்பு என புரிந்த வயது அவனுக்கு.

அதைக் கேட்டு மேலும் குழம்பி பயந்தாள்
... தன் வளர்ப்பில் ஏதேனும் தவறா என்று மாய்ந்துபோனாள்... மெல்ல வித்யாவின் காதில் விஷயத்தை போட்டாள்.
இரு மது, பார்க்கலாம்... நான் தனிப்பட்ட முறையில விசாரிக்க ஏற்பாடு பண்றேன்.... கவலைப்படாதே என்று தேற்றினான். அதேபோல ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி மூலம் அந்தப் பயலை பற்றி விசாரித்ததில் ஒன்றும் நல்ல விஷயம் இருக்கவில்லை.
படிப்பில்லை... ஊர் சுற்றும் பொறுக்கி.... குடும்பத்திலேயே தண்ணி தெளித்துவிடப் பட்ட பயல்... பைசாவிற்கு வக்கற்றவன் என்று தெரிய வந்தது. இதில் புகை குடி என்று பழக்கங்கள் வேறு. பவியின் அழகைவிட வித்யாவின் பணம் அவனது போதை என்று அறிய நேர்ந்தது. இதை எப்படிக் கையாள்வது என்று யோசித்தான்.
மதுவும் வித்யாவுமாக பவியை அமர்த்தி பேசினர். தாங்கள் கண்டுபிடித்ததை பற்றிக் கூற அவளோ எடுத்தெரிந்து,

இருக்கட்டுமே, அதுனால என்ன... அவனை அவங்க வீட்டுல யாரும் புரிஞ்சுக்கல... நான் மட்டும்தான் அவனை சரியா புரிஞ்சு வெச்சிருக்கேன்னு என்கிட்டேயே ராகேஷ் சொல்லி அழுதான் தெரியுமா... அவன் பாவம் என்றாள்.
ஓ அவன் அப்படி கூறி இவள் மனதில் இடம் பிடிக்க முயன்றுள்ளான் என்று தெரிந்தது.

சரி, அது போகட்டும், அவன் உன் பணத்திற்காகத்தான் மா உன்னைச் சுற்றுகிறான் என்று கூறினான் வித்யா.
இருக்கட்டுமே அப்பா.... உங்க கிட்டேதான் இவ்வளோ சொத்து இருக்கே... அது எனக்கும் அசோகிற்கும் தானே.... அதில் அவனுக்கும்தான் கொஞ்சம் கொடுத்தா என்ன கொறஞ்சுடப் போகுது என்று வாதாடினாள்.
அவனைப் பற்றி என்னடி தெரியும் உனக்கு.... அவன் ஒரு பொறுக்கி.... நல்ல நடத்தை எதுவுமே இல்லைடி.... நீ போய் எப்பிடிடீ அவனை ஆசைபட்டே.... அசிங்கமா இல்லை..... என் வளர்ப்பிலதான் குறையோ என்னவோ இல்லைனா நீ போய் இப்படி எல்லாம் நடப்பியா?” என்று கத்தினாள் மது.
என்னமோ பெத்த தாயாட்டமா சீன் போடறியே....  நீ என்ன என்னை பெத்தவளா?” என்றாளே பார்க்கவேண்டும்.

மது திடுக்கிட்டு திகைத்து கல்லாக சமைந்துபோனாள்
. வித்யாவிற்கு மதுவின் நிலை கண்டு பயமாகியது.
மது மதுமா அவ குழந்தை ஏதோ சொல்லீட்டா விட்டுடு அழுதுடுடா விட்டுடுடா.... மது ப்ளீஸ் காம் டவுன் என்று தேற்றினான்.
பின் பவியிடம் திரும்பி பளார் என்று ஒரு அரை விட்டான்.
அம்ம்மா என்று அலறி மூலையில் போய் சுருண்டு விழுந்தாள். ‘அப்பாவா என்னை அடித்தாரா என்று அவளால் நம்பவே முடியவில்லை.
அறியாப்பெண் ஏதோ விளையாட்டுத்தனம்னு போனா போகுதுன்னு பார்த்தா என்ன வார்த்தை பேசறே நீ....  கழுதை, உனக்கென்னடீ தெரியும் மதுவப்பத்தி..... உன் ஓடிப்போன தாயின் புத்திதானே டீ உனக்கும் வரும் என்று அவசரத்தில் வாய்விட்டான் வித்யா.

விது என்று அலறினாள் மது. “என்ன பேசறீங்க.... அவ குழந்தை, அவகிட்ட போய் என்ன வார்த்தை சொல்றீங்க..... பேசாம போய்டுங்க என்று அவனை கண்டித்து கத்தினாள். வித்யாவிற்கு என்ன செய்வது என்றே தெரியாமல் மலைத்தான். பக்கத்து ரூமில் வந்து தலையை கையில் தாங்கி அமர்ந்தான்.

கன்னத்தை பிடித்தபடி பெரும் அதிர்ச்சியோடு சுவரில் சாய்ந்திருந்தாள் பவித்ரா. ‘என் அம்மா ஓடிப் போனாளா.... நான் நல்லவளுக்கு பிறக்கவில்லையா.... அப்பா கூறுவதுபோல அதனால்தான் தனக்கு இப்படி எல்லாம் சிநேகிதம் ஆயிற்றா என்று குமறினாள்.

அவளைக் கண்டு அந்த நேரத்திலும் மனம் பொறுக்காமல் தன்னைத்
தேற்றிக்கொண்டு ஓடி வந்து அணைத்து ஆறுதல் படுத்தியது மதுதான்.
அம்மா என்று அவள் மடி சாய்ந்து அழுதாள் குழந்தை.
அம்மா, நான் நல்லவங்களுக்கு பிறக்கலியா மா?” என்றாள் தேம்பிக்கொண்டே.
சீ சீ அப்படி எல்லாம் பேசக்கூடாது..... எந்த தாயும் கெட்டவளில்லை..... அவங்க நிலைமை அப்படி டா பவி என்று அப்போதும் ரேணுகாவை விட்டுக்கொடுக்காமல் பேசினாள் மது.

இல்லைமா, அப்பா சொன்னாரே..... நிஜம் சொல்லு என்று மதுவின் கையை தன் தலைமேல் வைத்தாள் .
பவி, என்ன இது என்று அவள் மிரட்ட.
இல்லைமா, சொல்லித்தான் ஆகணும் என்று அடம் பிடித்தாள்.
வித்யாவும் அப்போது அறைக்கே வந்திருக்க, “நான் சொல்றேன் டா பவி என்று
அவனும் அவள் அருகே அமர்ந்து அவன் அறைந்த கன்னம் கன்றி சிவந்திருக்க அதைத் தடவி கொடுத்தபடியே கூறினான்
.
உங்கம்மா என் ஒன்றுவிட்ட மாமாவின் பெண்தான்.... எங்கப்பா இறந்து நான் அப்போதுதான் பிசினஸ் வீடு என் அம்மான்னு திணறினப்போ அவள எனக்குக் கட்டி வெச்சாங்க.

முதலில் இருந்தே ஒட்டுதல் இல்லாம இருந்தா அவ
.... நீ பிறந்த பின்னும் உன்கூட ஒரு ஒட்டுதலும் இல்லாம கொஞ்சாம பால் குடுக்காம இருந்தா.... உனக்கு மூன்று மாசம் இருக்கும்போது ஒரு நாள் காணாம போய்டா பவி.... எனக்கு ஒரு கடிதமும் விவாகரத்து பத்திரமும் விட்டு போயிருந்தா அப்போதான் எங்களுக்கு தெரிஞ்சுது.... அவ தன்கூட படித்த ஒருத்தன காதலிச்சா.... மாமா ஒத்துக்கலை..... அதுனால என்னை கட்டயமா மணக்க வேண்டி வந்தது. அவன் திரும்பி வந்து கூப்பிட்டதும் நம்மளை பிரிஞ்சு போய்டா என்றான் ஜாக்ராதையாக ஓடி என்ற வார்த்தையை தவிர்த்தபடி.

உனக்கு ரெண்டு வயது முடிந்த நேரத்தில் தான் மதுரா என் ஆபிசிற்கு வேலைக்கென வந்தாள்.... ஒரு நாள் நான் ஊரில் இல்லாதபோது உனக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு பாட்டி தவிச்சுபோய் இவளைக் கூப்பிட.... ஓடி வந்து உன்னைத் தூக்கிப் போய் மருத்துவமனையில் வைத்து நான் வரும் வரை கண் அசராம பாத்துகிட்டா..... அதுமட்டும் இல்லை.... டாக்டர் இவதான் உன் அம்மான்னு உன்கிட்ட எதேர்ச்சையாக காண்பிக்க நீயும் அடம் பிடிச்சு அவள அப்படியே நினைக்க ஆரம்பிச்சுட்டே... அடிக்கடி பார்க்கணும்னு பிடிவாதம் பிடிச்சே.... உனக்காக நான் அவள வரவழைத்தேன்..... நெருங்கி பழகும்போது தான் அவ உயர்ந்த குணம் எனக்குப் புரிந்தது..... அந்தப் பொம்பள பண்ணி வெச்ச துரோகத்துக்கு பின் பெண்களையே வெறுத்திருந்த நான் இவளப் பார்த்துப் பேசி பழகினபின் தான் நல்ல எண்ணமே ஏற்பட்டது.

அப்போதுதான் அவள என்னை கல்யாணம் பண்ணிக்கொள்ளக் கேட்டேன். அவளும் உனக்காக என்னை கல்யாணம் கட்டிகிட்டா. உனக்காக தனக்குன்னு ஒரு பிள்ளை பிறக்கக்கூடாதுனு தீர்மானமா இருந்தா..... அதையும் நீயே தான் கலைச்சே.... தம்பி வேணும்னு அடம் பிடிச்சு. அதுலையும் கூட உனக்காக மட்டுமே தன் முடிவ மாத்திக்கிட்டு அசோக பெத்தெடுத்தா. ஆனாலும் உனக்கே தெரியும் அசோக்கைவிடவும் அவளுக்கு நீதான் எல்லாவகையிலும் ஒசத்தின்னு என்று முடித்தான்.

இத்தனை உத்தமியான என் அம்மாவையா நீ என்னை பெற்றவளா?” என்று நான் உதாசீனமாகப் பேசினேன்என்று எண்ணி வெட்கினாள் பவி.
சீ நான் இவ்வளவு கெட்டவளா..... இல்லையே நான் நன்றாகத்தானே வளர்ந்தேன்.... என் மதுமா என்னை அப்படித்தானே வளர்த்தார். பிறகு எப்படி இப்படி மாறிப் போனேன்..... என் தாயின் ஜீன்சா இல்லை ராகேஷின் மயக்கமா..... அவன் ஒரு அயோக்யன் என்று அப்பா கூறுகிறாரே...... அவர் கூறுவது எப்போதும் தப்பாக முடியாதே என்று குழம்பினாள். அவளுக்கே அவளைப் பிடிக்காமல் போனது.

பவி மெல்ல மெல்ல இந்த விஷயங்களை ஜீரணித்து அப்படீன்னா அப்பா ராகேஷ் நல்லவன் இல்லையா பா?” என்றாள் மெதுவாக தலை குனிந்தபடி.
ஆமாம் டா பவி.... அவன் ஒரு அயோக்யன் மா..... உன் பணத்திற்காகத்தான் உன் பின்னால சுத்தறான் மா..... அவனை நான் கவனிச்சுக்கறேன்.... நீ மட்டும் கொஞ்சம் கட்டுப்பாடா ஜக்ராதையா இருக்கணும்டா.... இந்த வயசுல இதெல்லாம் சகஜம் மா..... மறந்துடுடா பவி. நானாச்சு பாத்துக்கறேன் என்றான்.

ஒரே ஒரு விஷயம் சொல்லுடா...” என்று கூசியபடி மதுவை பார்க்க அவள் பவியை அணைத்தபடி
பவிகுட்டி தயவுபண்ணி உண்மைய சொல்லுமா.... அவன் எப்போதானும் உன்னை போட்டோ எடுத்தானா.... நீ ஏதானும் லெட்டர் கிபிட்ன்னு அவனுக்கு ஏதானும் கொடுத்தியா டா கண்ணு..... அவன் உன்னை தொடலை இல்லியா டா என்றார் அதற்குமேல் கேட்க முடியாதவளாக.
ஐயோ அம்மா,  இல்லைமா.... அதேல்லாம் எதுவுமில்லைமா.... நான் உன் பொண்ணுமா..... அவனுக்கு நான் இதுவரை ஒரு எஸ் எம் எஸ்  கூட அனுப்பியதில்லை மா..... ஒன்றும் பரிசு கொடுத்ததில்லைமா..... அவன் தொடுவதாவது என் பக்கத்தில் உட்காரக்கூட நான் விட்டதில்லைமா என்று அவள் மடியில் விழுந்து அழுதாள்.

என்னை மன்னிச்சுக்கடி கண்ணு..... உங்கப்பா அவனை ஹாண்டில் பண்ணணும் இல்லையா.... அப்போ எல்லா உண்மைகளும் தெரிஞ்சாதானே மா அதைச் செய்ய முடியும்..... அதுனால பலவந்தமா வேற வழி இல்லாமத்தான் கண்ணு இதை எல்லாம் கேட்டேன். மறந்துடுடா. இந்த அப்பா அம்மாவை மன்னிச்சுடுடா என்று மதுவும் அழுதாள். வித்யாவின் கண்களும் நிறைந்தன.
ஐயோ அம்மா, அப்படி சொல்லாதே.... நீங்க தான் என்னை மன்னிக்கணும்..... மன்னிப்பீங்களா..... இனிமே நான் உன் பொண்ணாகவே நடந்துப்பேன் மா... சாரி மா என்று மேலும் குமறினாள்.
அவளைத் தடவி கொடுத்து சமாதானப்படுத்தினாள்.
சரி அழாதே பவி.... இனி நான் பாத்துக்கறேன். ஆனா நீ இனிமே இன்னமும் ஜாக்ராதையா இருக்கணும்டா என்று எச்சரித்தான்.
நீங்க சொல்றாப்போல இருப்பேன் டாடி என்று வாக்கு கொடுத்தாள்.

அத்யாயம் முப்பத்தி ஆறு
வித்யா உடனே பார்த்தியை பார்த்து விவரம் சொன்னான்.
சரிடா விடு, ஏதோ குழந்தை.... நம்ம கூட படிச்சானே வீரபாண்டி அவன் இப்போ இங்கதான் பெரிய போலிஸ் ஆபிசரா இருக்கான்..... அவன வெச்சு காதும் காதும் வெச்சாப்போல இதை முடிப்போம்.... கவலைப்படாதே என்று தேற்றினான். அதன்படி வீரபாண்டியை பார்த்துப் பேசினர்.

புரிஞ்சுருச்சு .... முட்டிக்கு முட்டி தட்டி உள்ள போட்டுட முடியும் ஆனால், நாளைக்கு வெளியே வந்து திரும்பவும் நம்ம பொண்ணுக்கு டார்ச்சர் குடுக்காம இருக்கணும்..... அதுனால நாம முதல்ல அவன கூப்பிட்டு நல்லவிதமாகவே பேசிப் பாப்போம்.... என்ன சொல்றீங்க?” என்றார் அவர். சரி என்றனர்.
அதன்படி பொது இடமாக  ஒரு ஹோட்டலின் அறையில் அவனைக் கூப்பிட்டு வந்து பேசினர். உள் அறையில் வீரபாண்டி அமர்ந்து இவன் பேசுவதை டேப் செய்துகொண்டிருந்தார். அவனிடம் நயமாகவே ஆரம்பித்தனர்.

இதப் பாரு தம்பி, இதெல்லாம் உனக்கு வேண்டாத வேலை... எங்க பொண்ணு பக்கம் நீ இனிமே திரும்பிக் கூட பார்க்கக் கூடாது.... இல்லேன உனக்குதான் கஷ்டம் என்றான் பார்த்தி.
என்ன சார் மிரட்டறீங்களா.... அவ என் காதலி..... நாங்க திருமணம் செய்துக்கப் போறோம் என்று கெத்தாக கூறினான்.
அடி மவனே, பெரிய தெய்வீகக் காதலாக்கும்..... அவள காதலிக்கிறியா அவ பணத்த காதலிக்கிறியா, நாய் பயலே..... ஒழுங்கா ஒத்துகிட்டு அடங்கிப்போ இல்ல, முட்டிக்கு முட்டி தட்டி உள்ள தள்ளிடுவேன்..... அப்பறம் ஜென்மம் மொத்தமும் களிதான் திங்கணும் என்று ஏசினான் பார்த்தி.
கொஞ்சம் மிரண்டாலும் அதேல்லாம் முடியாது.... நீங்க யார் இதை எல்லாம் என்கிட்டே பேச..... அவள சொல்லச் சொல்லுங்க.... என்னை மறந்துடுவாளா அவ, நானும் பார்க்கறேன்என்றான் திமிராக.

உன் மூஞ்சிக்கு அவ வந்து பேசணுமா..... விவரம் அறியாக் குழந்தை அவ.... அவளப்போய் மாய வார்த்தை பேசி மயக்கி வெச்சிருக்கே.... கொன்னுடுவேன் ராஸ்கல் என்று அவன் சட்டையை கொத்தாகப் பிடித்தான்.
விடுங்க சார் என்று திமிறினான்.
உஹூம் இவன் சரிப்பட மாட்டான் வித்யா..... இவனை உள்ளேதான் போடணும் என்று பேசிக்கொண்டனர்.
நீ என்னடா செய்யறே... உன் பொழப்பு என்ன, உங்க வீட்டுல உங்கப்பா என்னடா வேலை செய்யறாரு..... அவர்கிட்ட வரேன்.... நான் வந்து பேசறேன் என்று வித்யா எழ.

சார் சார் வேண்டாம் சார்.... ஏதுக்கே அப்பா என்மேல ரொம்ப கோவத்தோட இருக்கார் சார்..... வீட்டைவிட்டே  அனுப்பிடுவார் சார்..... எனக்கு அப்பறம் போக்கிடம் கிடையாது சார்..... வேண்டாம் சார் என்று இறங்கி வந்தான். முகத்தில் கொஞ்சம் பயம் தெரிந்தது.

உன் மொபைல குடு என்று சட்டென வாங்கி அதில் ஏதேனும் படங்களோ மெசெஜோ இருக்கிறதா என்று செக் செய்தான் வித்யா. அப்படி எதுவும் இருக்கவில்லை. ஹப்பா என்று தோன்றியது.
டேய், ஒடம்ப காப்பாத்திக்க.... சொல் பேச்சு கேளு..... உங்கப்பாகிட்ட போக வேண்டாம் போலீஸ்லையும் சொல்லக்கூடாதுன்னா நாங்க சொல்ற பேச்சைக் கேட்டு அடங்கீடு..... இன்னுமொரு முறை அந்தப் பொண்ணு நடக்கற தெருவுக்குள்ள கூட உன்னப் பார்க்கக் கூடாது.

மாறு வேஷத்துல போலிஸ் போட்டிருக்கிறோம் எங்க பொண்ணுக்கு
..... உன்னால யாருன்னு கூட கண்டுபிடிக்க முடியாது மவனே..... அவங்க கையில மாட்டின நீ தொலைஞ்சே ஜாக்ரதை என்று மிரட்டினான் பர்த்தி.
அதேல்லாம் சும்மா, எங்களுக்கு தெரியாதா என்று மீண்டும் கிளம்பினான் அந்தப் பயல்.
அப்படியா, வித்யா இவன் அடங்க மாட்டான்..... கூப்பிடு என்று வீரபண்டியை அழைக்க அவர் தன் போலிஸ் உடையுடன் உள்ளிருந்து வெளிவர ராகேஷிற்கு குப்பென வியர்த்துப் போனது..... முகம் வெளுத்தது.

வேண்டாம் சார்..... நான் இனிமே அந்தப் பொண்ணு பக்கமே திரும்ப மாட்டேன் சார்..... அந்தத் தெருவுக்கே போக மாட்டேன் சார்..... என்னை விட்டுடுங்க சார் என்று கெஞ்சினான்.
அதெப்பிடி நம்பறது?” என்றார் வீரபாண்டி மிடுக்காக.
நான் சொல்றதுபோல நடப்பேன் சார் என்றான்.
சரி இதுவெல்லாம் பதிவாகி இருக்கு கேட்டுக்க என்று போட்டு காண்பித்தார்.
அவன் மேலும் மிரண்டான்.

என்னிக்கானும் இன்னும் பத்து இருபது வருடம் கழித்து கூட, அந்தப் பெண்ணுகிட்ட பேச்சு வெச்சுகிட்டேன்னு தெரிஞ்சுதுனு வைய்யேன் நீ உள்ளாரதான் களி திங்கணும்.... என்னிக்கும் இந்த டேப் என்கிட்டேயே தான் இருக்கும் டா பொடிப் பயலே..... ஜாண் இல்லை காதல் கேக்குதா காதல்..... பின்னிடுவேன்..... தொலைஞ்சு போ என்று மிரட்டினார்.
அவரது கர்ஜனையைக் கேட்டு இருந்த கொஞ்ச நஞ்ச திமிரும் அடங்கி பயந்து போய் என்னை விட்டுடுங்க சார்.... நான் எந்த தப்பும் செய்ய மாட்டேன் சார் என்று ஓடிவிட்டான்.
அவனை ஒரு மாதம் போல கண்காணிக்க ஏற்பாடு செய்தார் வீரபாண்டி.

ரொம்ப தாங்க்ஸ் பாண்டி என்றனர் இருவரும்.
டேய் என்னடா, எனக்கும் அதே வயசுல ஒரு பொண்ணு இருக்கு. ....பவித்ராவும் என் பொண்ணுபோலதானே..... போங்க நிம்மதியா வேலையப் பாருங்க..... நானாச்சு பாத்துக்கறேன் என்று உறுதி அளித்தார்.
கடவுளே காப்பாற்றினாய் என்று வீடு வந்து சேர்ந்து எல்லாவற்றையும் குடும்பத்தாருக்கு விவரித்தனர்.

அதன்பின் கொஞ்சம் தெளிந்தாள் பவி. ஆயினும் தன்னால் தன் பெற்றோருக்கு பெரும் தலை குனிவு ஏற்பட்டுவிட்டது  என்று எண்ணி எண்ணி வருந்தினாள்.

அத்யாயம் முப்பத்தி ஏழு

அதன்பின் படிப்பும் தன் குடும்பமுமே அவளுக்கு இரு கண்ணாகின. ப்ளஸ் டூவிலும் முதலாவதாக தேறினாள். பொறி இயல் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தாள்.
நான்கு வருடங்கள் நான்கு நாளாகக் கடக்க, மது பவியின் திருமணத்திற்க்கென மாப்பிள்ளை தேட ஆரம்பித்தாள்.
இல்லைமா இப்போவே எனக்கு கல்யாணம் வேண்டாம்.... நம்ம கம்பனியில சேர்ந்து நான் அப்பாவோட தொழில் கத்துக்கணும்... கொஞ்ச நாளானும் அதை பார்த்து நடத்தணும்னு ஆசைப் படறேன் என்றாள்.
அது பாட்டுக்கு அது இது பாட்டுக்கு இது.... இப்போ தேட ஆரம்பிச்சாதான் நல்ல வரனா அமையும் என்று கூறி மது தன் தேடலை தொடர்ந்தாள்.
பாருங்க டாடி என்று அவள் வித்யாவிடம் முறையிட, “அம்மா எதுவேணா செய்யட்டும் பவிம்மா, ஆனா எந்த முடிவா இருந்தாலும் அது உனக்கு மனசுக்கு பிடிச்சிருந்தா மட்டும்தான் நடக்கும் போதுமா என்றான். சரி என்றாள்.

பவி தன் கடைசி ஆண்டு தேர்வுகள் முடித்துக்கொண்டு தினமும் தந்தையுடன் ஆபீஸ் செல்ல ஆரம்பித்தாள். இயற்கையாகவே நல்ல தெளிவும் திறமையும் கொண்டவள் என்பதால் மிகச் சீக்கிரத்தில் கற்றுத் தேர்ந்தாள். வித்யா வெளிநாடு செல்ல நேர்ந்தாலும் தனியே கம்பனியை நடத்தும் அளவுக்கு வளர்ந்தாள்.
பாத்தியா என் மகளை?” என்றான் பெருமையாக வித்யா மதுவிடம்.
ரொம்பத்தான் பெருமை.... யார் வளர்ப்பு?” என்றாள் அவள் கெத்தாக.
நிச்சயமா டீ உன் வளர்ப்பினால்தான் அவள் இந்த அளவு உயர்ந்து நிற்கிறா என்று மனதார மெச்சிக்கொண்டான்.

அது எப்பிடி அன்னிக்கி பாத்த மாதிரியே இன்னைக்கும் இருக்கேஎன்பான் அருகே வந்து முகத்தோடு முகம் வைத்து இழைந்தபடி.
போதுமே, இப்போ வேண்டாம் பவிக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்த பிறகு அதை கையில் வெச்சுக்கொண்டு இப்படி கொஞ்சுவீங்களாம்என்பாள் அவள் சிவந்து போனபடி.
நிச்சயமா மது டார்லிங். நீ வேற சொல்லணுமா, அப்படியே செய்துட்டாப்போச்சு என்பான் அவனும் அவளை சீண்டியபடி.
ஐயோக் கடவுளே, பொண்ணுக்கு மாப்பிள்ளை பாத்துகிட்டு இருக்கோம்.... இப்போ போய் நீங்க இப்படி வம்பு செய்துகிட்டு...” என்பாள் உள்ளூர அதை ரசித்தாலும் அவனை கண்டிக்காமல் விடமாட்டாள். அவனுக்கும் அது தெரியும். வேண்டும் என்றே செய்வான்.

அவள் இந்த வயதிலும் அதீத அழகுடன் மிளிர்ந்தாள்
. அவனுக்கானும் கொஞ்சம் நரை வந்திருந்தது. அவளுக்கு மிகச்சில வெள்ளி கம்பிகள் மட்டுமே காதோரங்களிலும் உச்சியிலும். அது அவள் அழகுக்கு அழகு சேர்த்தது என்பான் அவன்.... அவற்றை தன் விரல்களில் சுழற்றியபடி.

என்றேனும் பிள்ளைகள் கல்லூரிக்கு எனச் சென்றாலும்
டீ பவி உங்கக்கா வந்திருக்காங்க என்பாள் மாணவி ஒருத்தி.
அது என் மம்மி... அக்கா இல்லை என்பாள் பெருமையாக பவி.
என்னடி சொல்றே மம்மி யா!!?” என்பர் ஆச்சர்யத்துடன்.
ஆம் என்றபடி மதுவை வந்து கட்டிக்கொள்வாள் பவி.

அவளே அப்படி லூட்டி அடிக்கும்போது வித்யாவிற்கு கேட்கவும் வேண்டுமா. தன் 

காதல் மனைவியை ஒருபோதும் பிரியாமல் இருக்க வேண்டி பல வெளிநாட்டு 

ட்ரிப்களுக்கு அவளையும் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றுவிடுவான்

என்னங்க... பிள்ளைங்க...” என்றாள் 

போடி, வளர்ந்துட்டாங்க என்னமோ பால்குடி மறக்காத கை குழந்தைய விட்டுட்டு வரா மாதிரி சீன் போடறா என்பான் அலுப்பாக.


தொடரும்...

No comments:

Post a Comment