Saturday, 1 April 2017

நெஞ்சமதில் உன்னை வைத்தேன் பாகம் 12

 பாகம் 12
என்னம்மா மது, போங்க போய் படுத்துக்குங்க... இங்க வந்ததிலேர்ந்து உங்களுக்கும் தான் நல்ல அலைச்சல் ஆச்சே... நான் பவிய என்கிட்டேயே வெச்சுக்கறேன்... போய் நிம்மதியா தூங்குங்க என்றார் அவர் ஒப்புதலாக.
சரி என்று அவனோடு நடந்தாள். இரு வீட்டிற்கும் நடுவில் வேலியில் கிட்டி கதவு பொருத்தப் பட்டிருந்தது. அதை திறந்துகொண்டு அடுத்த வீட்டை அடைந்தனர்.
அவள் காலையில் அங்கே அவனோடு வந்திருந்தாள். குளித்து முடித்ததும் மாமி அவளை அங்கு வலது கால் வைத்து நுழைந்து விளக்கேற்ற வைத்தார். அங்கு வித்யாவின் தந்தையின் படம் ஒன்று மாலையிட்டு மாட்டப்பட்டிருந்தது. அதையும் வணங்கினர் இருவரும்.

இப்போது அங்கே சென்று படுக்கை அறையில் நுழைய, சுத்தமான படுக்கை விரிப்புகளோடு இரட்டை கட்டில்கள் போடப்பட்டிருந்தது
. அதன் உள்ளேயே பாத்ரூம் கூட கட்டப்பட்டிருந்தது.
அவள் அதை ஆச்சர்யமாக பார்க்க, “இதெல்லாம் எங்கப்பா ஏற்பாடு மது... நாங்க சிடிக்கு போன  பின்னால் அங்கே அனுபவித்த சில முக்கியமான வசதிகளானும் இங்கே இருக்கணும்னு இதெல்லாம் கட்டி வெச்சார் என்றான் தந்தையை நினைவுகூர்ந்தபடி.

பின்னோடு சுதாரித்து, “வா” என்று அழைத்துக்கொண்டு கட்டிலில் உட்கார்ந்தான்
. இலவம் பஞ்சு மெத்தையும் தலையணைகளும் மெத்தென இருந்தன. உயரமான உத்திரம். அதன் மீது ஓடு இறக்கிய கூரை என இருந்தது.
அவளை தன் இடது கையால் இழுத்து அணைத்துக்கொண்டு பக்கத்தில் கிடத்தி சிறிது நேரம் பழம்கதைகள் பேசினான். அவளுக்கு தூக்கம் சொக்கியது கண்டு ஏண்டீ இந்த நேரத்துல யாருக்காச்சும் தூக்கம் வருமா?” என்று கிண்டலடித்தான் கண் அடித்தபடி.
எனக்கு வருமே என்றாள் அவளும் அவனது தாபமான பார்வையை கண்டு சிரித்தபடி. பின்னோடு பாவம் என் விது என்று எண்ணிக்கொண்டு அவன் மார்பில் தலைவைத்து படுத்தாள்... அவன் நெஞ்சில் விரல்களால் கோலம் போட்டாள்... அவன் சிலிர்த்து அவளை இழுத்து அணைத்து ஆட்கொண்டான்... பின்னோடு தூங்கிபோயினர்.

அதிகாலை சேவல் கூவக்கேட்டு அவள் விழி மலர்ந்தாள்
. மணி ஆறை நெருங்கிக்கொண்டு இருந்தது. அவள் அசைவைக் கண்டு
என்ன இவளோ சீக்கிரம் எழுந்துக்கற... என்ன பண்ண போறே எழுந்து?” என்று இழுத்து அணைத்துக்கொண்டு அவளை எழ விடாமல் மீண்டும் தூங்கிப்போனான்.
எதுவும் செய்ய முடியாது அவன் தலைமுடியை கோதிவிட்டபடி அணைத்துக்கொண்டு அவள் மீண்டும் கொஞ்ச நேரம் தூங்கி முழித்தாள்.

இம்முறை எழுந்து தன்னோடு கொண்டு வந்திருந்த துணிகளை எடுத்துக்கொண்டு போய் குளித்துவிட்டு வந்தாள். பாத்ரூமில் ஹீட்டர் வசதி  கூட இருந்தது. ஈரத்தலையை காய வைத்தபடி வாசலில் நின்றாள். அதிகாலை பொழுது கிராமத்தில் ரம்மியமாக இருந்தது. சில்லென்று காற்று வீசியது. மாடும் கன்னும் ஓட்டிச் சென்றுகொண்டிருந்தனர். சேவலும் கோழியும் குஞ்சுகளோடு அங்கு இங்கு என திரிந்துகொண்டிருந்தன. எல்லோர் வீட்டின்முன்னும் சாணம் தெளித்து அதன் மீது அழகழகான கோலங்கள் இடப்பட்டிருந்தன. அங்கே தங்கள் வாசல் மட்டும் வெறுமையாக இருக்கக்கண்டு உள்ளே பின்கட்டில் போய் பார்க்க அங்கே ஒரு வாளியும் கோலப்பொடியும் கண்டெடுத்தாள். நீர் மொண்டு கொண்டுவந்து வாசல் தெளித்து சிறிதாக ஒரு கோலம் போட்டாள். இப்போது நிறைவாக இருந்தது. மிச்சம் இருந்த நீரை துளசிக்கு வார்த்தாள்...  தலை காய்ந்ததும் முடியிட்டு கொண்டு சுவாமி விளக்கேற்றி வணங்கினாள்.

 உள்ளே சென்று அவனை எழுப்பினாள்.
விது என்றாள். “ஹும்ம் என்று அவன் கண் திறவாமலே பக்கத்தில் கை நீட்டி துழாவினான்.
நான் இங்க இருக்கேன்... எழுந்துக்குங்க ப்ளீஸ்.... நான் குளிச்சுட்டேன்... அங்கே போறேன்.... நீங்க பல் விளக்கீட்டு அங்க வாங்க... என்ன சரியா... என் செல்லமில்ல என்றாள் கொஞ்சலாக.
போடி, காலங்கார்த்தால குளிச்சுட்டேன்னு எட்டடி வெலகி நின்னுகிட்டு என்ன பேச்சு வேண்டி கிடக்கு... நான் ஒன்னோட பேச மாட்டேன் டூ போ என்றான் பவிபோல முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு.
அவனைக்கண்டு சிரித்துவிட்டு மெல்ல அவன் முகம் நோக்கி குனிந்து இப்போதைக்கு இது மட்டும் என்ன சரியா என்று அவன் நெற்றியில் முத்தமிட்டாள். அவன் அவளை இழுக்கப்போக நழுவி ஓடிவிட்டாள். அவன் தூக்கம் கலைந்து எழுந்தான்.

சரியான மாமிதான் இவ என்று நினைத்து சிரித்துக்கொண்டான். ஆயினும் வந்த இடத்தில் அத்தனை பெரியோர்களின் மத்தியில் அதற்கு தகுந்தபடி அவள் நடந்துகொள்வதைக்கண்டு அவன் பெருமிதமே கொண்டான். சிரித்தபடி காலைக்கடன்களை முடித்து மாமா வீட்டிற்குச் சென்றான்.
அங்கே பவி மதுவோடு பூஸ்ட் குடித்துக்கொண்டு இருக்கக் கண்டான். ‘இதைப்பாரேன் மது வந்தாளோ இல்லியோ தன் வால்தனத்தை எல்லாம் மூட்டைக் கட்டிவைத்துவிட்டு சமத்துகுட்டிபோல நடந்துகொள்கிறது..... எல்லாரையும் மயக்கி வெச்சிருக்கா என் பொண்டாட்டி என்று நினைத்துக் கொண்டான் சிரித்தபடி.
என்ன வித்யா காலையிலேயே அவ்ளோ சிரிப்பு?” என்றபடி வந்தார் மாமா
“ஒன்றுமில்லை மாமா, பவி எவ்ளோ சமத்தாயிடுச்சுனு நினைச்சு....” என்றான்.

ஆமாம், அதான் ஒரு தாயின் அரவணைப்பு கொடுக்கும் சக்தி என்றார். “இன்னைக்கு என்ன ப்ளான்?” என்றார்.
மதுவ திருச்சிக்குக் கூட்டிப்போலாமான்னு யோசிக்கறேன் என்றான்.
நல்ல முடிவு... உச்சி பிள்ளையார், சமயபுரம் எல்லாம் தரிசனம் பண்ணிக்கிட்டு வாங்க என்றார்.
நான் என்ன ஷேத்ராடனமா வந்திருக்கேன் தேன் நிலவுகுய்யா மாமாஎன்று மனதிற்குள் கடிந்துகொண்டான். சிரித்து மழுப்பி அகன்றுவிட்டான். திருச்சி பற்றி மதுவிடம் கூற சரி என்று கிளம்பினாள்.
பவியை அங்கேயும் இங்கேயும் அலைகழிக்க வேண்டாம் அவ இங்க இருப்பா எங்களோட விளையாடிக்கொண்டு இல்லையாடா கண்ணு?” என்றார் பார்வதி. “சரி சமத்தா இக்கேன் என்றது அது.

இருவரும் குளித்து கிளம்பி திருச்சி வந்தனர்
.... முதலில் உச்சி பிள்ளையாரை தரிசனம் செய்துவிட்டு வெயிலுக்குமுன் கீழே இறங்கிவிட்டனர்.... பின் அங்கே இங்கே என்று சுற்றிதிரிந்து அலைந்தனர்... அவளை தன் கையோடு அணைத்தபடி அங்குமிங்கும் திரிவதே மிக சுகமாக இருந்தது அவனுக்கு.... அந்த அணைப்பில் இவள் என்னுடையவள் என்ற கர்வம் இருந்தது.
மாலை மயங்கும் நேரத்தில் திரும்பி வந்தனர்.
அடுத்த நாள் பக்கத்தில் இருக்கும் அத்தையின் வீட்டிற்கு செல்லலாம் என்று முடிவு செய்தனர்.

தம்பி வித்யா, எப்பிடியும் நீ வந்திருக்கே... இந்த வருட கணக்கெல்லாம் கொஞ்சம் பார்த்துட்டு போய்டேன் என்றார் மாமா
ஏன், என்ன மாமா புதுசா இருக்கு.... நீங்க கண்காணித்த வரவு செலவ நான் சரி பார்க்கணுமா?” என்றான் மனத்தாங்கலாக.
அவருக்கு தெரியும் அதை அவன் அவருக்கு செய்யும் தீங்காக எண்ணினான். பிள்ளை இல்லாத அந்த தம்பதிகளுக்கு அவனே மகனுமாய் விளங்கிவந்தான்.
இல்லேப்பா உடையவன் பார்க்கலைனா  எப்பிடி... என்னதான் என் மேல் நம்பிக்கை இருந்தாலும்...” என்று இழுத்தபடி அவன் மடிமீது கணக்கு புத்தகத்தை வைத்து அவர் விளக்கத் தொடங்கினார். அதை மௌனமாக கேட்டுக்கொண்டான். சில சந்தேகங்கள் தோன்ற அதையும் தெளிவு படுத்திக்கொண்டான். பின் எல்லோரும் தூங்கச் சென்றனர்.

அத்யாயம் முப்பத்தி இரண்டு
அடுத்த நாள்  அத்தையின் வீட்டை அடைந்தனர். அங்கேயும் அமோக வரவேற்பு விருந்து என தடபுடல் செய்தார் அத்தை. ‘அக்கா அக்கா என்றபடி சுமா மதுவின் பின்னோடு அலைந்தாள். அப்போதுதான் பத்தாவது வகுப்பை முடித்திருந்தாள் சுமா. அவளோடு கதை பேசியபடி மதுவும் அந்த வீட்டைச் சுற்றி பார்த்தாள்.
மிக அழகான தோட்டம் என்று மெச்சிக்கொண்டாள். அங்கே அவர்களின் வீட்டின் பின்புறம் ஒற்றையடி பாதை ஒன்று போவதைக்கண்டு கேட்டாள்.

அதுதான் காவிரி ஆற்றுக்கு போகிற பாதை... காவிரி ஆற்றின் ஒரு சிறு வாய்க்கால் நம்ம வீட்டின் பின்னால்தான் ஓடுது அக்கா... நாங்க அங்கதான் குளிப்போம் என்றாள் பெருமையாக.
நிஜமாவா, என்னையும் கூட்டிப் போறியா.... எனக்கு நீச்சல் கூட தெரியும் என்றாள்.
அம்மாவை கேட்கணும் அக்கா... தனியா போக விடமாட்டாங்க... இல்லேன ஒண்ணு செய்யுங்க மாமாவோட போங்களேன்... அது பெஸ்ட் என்றாள்.
யாரூ?” என
வித்யா மாமாவோட போங்க என்றாள் குறும்பாக.
போடி வாலு என்றாள் மது.
அவள் தடுக்குமுன் வித்யா மாமா, அக்காவுக்கு காவிரில குளிக்கணுமாம்... நான் குளிச்சுட்டேன்... நீங்க அவங்கள அழச்சுகிட்டு போங்களேன் என்று சிபாரிசு வேறு செய்தாள். அதைக் கேட்ட வித்யாவின் கண்களில் மின்னல் வெட்டியது.
ஆர்வமாக நான் ரெடி, உங்கக்காவ ரெடியாகச் சொல்லு என்றான் அவளை பார்த்தபடி.
ஐயோ நான் மாட்டேன் என்றாள் அவள் வெட்கத்தோடு.
அவள் பயப்படுவதாக எண்ணிக்கொண்டனர் பெரியோர்.... “ஒண்ணும் பயமில்லைமா, போ.... புடவையே தட்டுசுத்தாகக் கட்டிக்கொண்டு முங்க வேண்டியதுதான்.... நீச்சல் தெரியும்தானே தம்பி கூட இருக்குதே போயட்டுவாம்மா என்று அனுப்பினர்.

அவளுக்கா தெரியாது வித்யாவின் கண்ணில் ஏன் மின்னல் அடித்தது என
.
போச்சு மாட்டினேன் இன்னைக்கு வசமா என்று எண்ணினாள். சரி என்று இருவரும் மாற்றுத் துணியோடு கிளம்பினர். இவர்களின் வீட்டிலிருந்தே ஒற்றையடிப்பாதை அதன் முடிவில் காவிரி என்பதால் அங்கேயே பெண்களுக்கு உடை மாற்ற என ஒரு சிறு கூரை வேய்ந்து மறைப்பு அமைத்திருந்தார் மாமா.
அவனோடு அங்கு நடக்கும்போதே அவன் மிக உல்லாசமாக விசில் அடித்தபடி

மாட்டினியா, என்னமோ ஓடி ஓடி போனே.... இப்போ பார்க்கிறேன் எப்படி ஓடறேன்னு என்றான் காதோரம்.
வேண்டாம் விது, நீங்க ஏதானும் அழும்பு பண்ணா நான் உங்களோட டூ விட்டுருவேன் என்று இவள் மிரட்டிவைத்தாள்.
அதையும்தான் பார்ப்போமே என்றான் கெத்தாக.

அங்கே சென்று மறைவிடத்தில் துணி மாற்றி
, தன் பாவாடையை நெஞ்சுக்கு மேல் ஏற்றிக் கட்டிக்கொண்டு தலை முடியாய இரு தோள்வழியே முன்னே வழியவிட்டபடி மெல்ல ஆற்றில் இறங்கினாள். மிகவும் சில்லென்றும் இல்லாமல் சுகமான தட்பவெட்ப நிலையில் ஓடியது காவிரி. அவன் துணி மாற்றிக்கொண்டு தன் ஷார்ட்சோடு இறங்கினான். மதுவுக்கு கொஞ்சம் பயம் தான். அவன் கையை இறுக பற்றியபடி ஒரு முழுக்கு போட்டாள். பின்னோடு கொஞ்சம் துணிவு வந்தது. மெல்ல மீன்குஞ்சாக நீந்த ஆரம்பித்தாள். வித்யாவோ விலாங்கு மீன் போல வெகுதூரம் நீச்சலடித்துபோய் வந்தான்.

நீரில் ஆடி முடித்து அவளிடம் ஆட்டம்போட வந்தான்
. நீரின் அடியிலேயே வந்து அவளது இடையை பிடித்துக்கொண்டான். அவள் நழுவ அவன் பிடிக்க என்று நடந்தது. முகம் நீரின் மேலிருக்க உடல்கள் ஒன்றோடு ஒன்று கலந்து நீரின் உள்ளே கட்டிபிடித்தபடி இருவரும் ஓருடலாக நீந்தி களைத்தனர். அவன் கைகள் அவள் உடல்மீது விளையாட அவள் சிலிர்த்து நாணிச் சிவந்தாள். ஆடிக் களைத்து மேலேறினர் இருவரும். அவளது பளிங்கு போன்ற மேனியில் நீர் திவலைகள் சூரிய ஒளி பட்டு வைர மணிகளாக மினுங்க அவன் கிளர்ந்தான். அவளை இழுத்து மீண்டும் முத்தமிட்டான். பின் மெல்ல தெளிந்து

போதும் மது ரொம்ப நாளாச்சு... உனக்கு வேற புதுசு... ரொம்ப நேரம் தண்ணீல நிற்க வேண்டாம்.. அப்பறம் குளிர் ஜுரம் வந்துடப்போவுது என்று அவளை வெளியே அழைத்துக்கொண்டான்.
நீர் மணிகள் சொட்டும் முடி கற்றைகள் முகத்தில் படிய ஒட்டிய ஆடையுடன் அவன் முன் வெளியே வரவே மிகவும் வெட்கபட்டாள்.
நீங்க போங்க அந்தப் பக்கம் நான் வெளியே வரணும் என்றாள்.
அதேல்லாம் வரலாம் வா... நான் பாற்காததும் இல்லை...  நீ போய் துணி மாத்துபோ.... ஈரத்தோட எத்தனை நேரம் அப்பிடியே இருப்பே என்று அதட்டினான்.

வேறே வழி இல்லாமல் மேலே வந்து ஓடிப்போய் தடுப்பின் உள் தன் துணிகளை மாற்றிக்கொண்டு வந்தாள்
. தலையில் துண்டை முடிந்து வெளியே வந்து அவனை தேடினாள். அவனும் ஒரு மரத்தின் மறைவிவிலிருந்து துணி மாற்றிக்கொண்டு தலை துடைத்தபடி வந்தான். அப்போது இருவருக்கும் தாங்கள் கோவை குற்றாலம் சென்றதும் அவள் அங்கே அவனிடம் கூறிய வார்த்தைகளும் நினவு வந்தன. அவன் அருகே சென்று துவாலையை இழுத்து தானே அவன் தலை துவட்டிவிட்டாள். அவன் தலையை தன் நெஞ்சோடு வைத்துக்கொண்டு அவள் துவட்டியதில் அவனுக்கு பேரின்பம். அவள் துடைக்க அவன் கைகள் அவளை தழுவ அவளுக்கு குறுகுறுவென்றது.

சும்மா இருங்க விது... இல்லேன நான் துடைக்க மாட்டேன் என்றாள்.
சரி சரி என்று பேசாமல் அணைத்துக்கொண்டு நின்றான். பின்னர் இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.
என்னமா நல்லா நீஞ்சி குளிச்சியா?” என்றபடி சூடாக பலகாரம் பரிமாறினர் அத்தையும் சுமாவும்.
அன்று முழுவதும் எல்லோரோடும் அரட்டை அடித்து நேரம் கழிந்தது. அன்றும் மறுநாளும் அங்கே இருந்துவிட்டு ஊருக்குக் கிளம்பினர்.

மது மெல்ல விதுவை கேட்டாள்.
ஏன் விது உங்களுக்கு இந்த ட்ரிப்ல சந்தோஷம்தானே.... இல்லைனா உங்களுக்கு பிடிச்சாப்போல ஏதானும் இடத்துக்கும் வேணா போலாம் ரெண்டு நாளுக்கானும் என்றாள்.
இல்லை என் மனசு நிறைஞ்சிருக்கு. லண்டனும் அமெரிக்காவும் கூட எனக்கு இவளோ சந்தோஷமும் திருப்தியும் தந்திருக்காது கண்ணம்மா என்றான் ஆசையாக நிறைவாக. அவளுக்கு அதில் நெஞ்சு நிறைந்தது.

ஊர் வந்து சேர்ந்து பவி பள்ளிக்குப் போகத் துடங்கினாள். ஒரு வாரம் போல தினப்படி வேலைகளைக் கண்டு வீட்டிலும் ஆபிசிலுமாக என்ன எப்படி மேனேஜ் செய்வது என்று கணக்கிட்டுக் கொண்டு அடுத்த வாரத்திலிருந்து மதுவும் வேலைக்குப் போகத் துவங்கினாள்.

இன்னும் கொஞ்ச நாள் அம்மா.... வசந்தா மேடம் வந்து ஜாயின் பண்ணீட்டா அப்பறம் கவலை இல்லை.... அதுவரைக்கும் உங்க மகனுக்கு கொஞ்சம் கஷ்டமாயிடும்.... அதுவரை நான் ஆபிசிற்கு போகட்டுமா மா?” என்று பார்வதியை கேட்டுக்கொண்டாள்.
இதக் கேட்கணுமா மது.... அது உன் ஆபிசும்கூட இல்லையா.... அங்க நீ இல்லைனா அவனுக்கு ஒண்ணுமே நடக்காதாமே, நிறைய சொல்லி இருக்கான்..... போயிட்டு வா..... நாங்க இருக்கோமே பாத்துக்கறோம் என்றார் அவர்.

பவியை தயார் செய்து தாங்களும் ரெடி ஆகி அனைவரும் சிற்றுண்டி உண்டபின் ஒன்றாக கிளம்பி பவியை பள்ளியில் இறக்கிவிட்டுவிட்டு இருவரும் அலுவலகம் வந்தனர். அன்றைய வேலை எல்லாவற்றையும் பார்த்து செய்துகொண்டே மதியம் சாப்பாடு காமு ஆண்ட்டி அனுப்பிவிட அங்கேயே உண்டனர். பவி இன்னமும் மதிய நேரம் வீடு திரும்பி விடுவதால் பார்வதியிடம் சாப்பிட்டு அவருடனே படுத்து தூங்கியும் போவாள்.

மாலை ஐந்து மணிக்கு தனது வேலைகளை முடித்துக்கொண்டு மது சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்துவிட
, வித்யா வர மணி ஆறு ஆகும். மது வந்து பவியுடன் விளையாடி படிக்கச் வைத்து இரவு உணவிற்கு காமுவிற்கு உதவி செய்து வித்யா வந்தபின் அவன் தேவைகளையும்  பார்த்துக்கொண்டாள்.

அத்யாயம் முப்பத்தி மூன்று
இப்படியாக வாழ்க்கை தெளிந்த நீரோடையாக ஓடியது. பவிக்கு இப்போது ஐந்து வயதாகி இருந்தது. அப்போது வசு கருவுற்றாள். கற்பகமும் வீராசாமியும் அப்போது வரை சென்னையில் வந்திருக்கத் தயங்கியவர், இப்போது உடனே இங்கே வந்து மதுவின் வீட்டில் குடித்தனம் வைத்தனர். இவர்களும் அவ்வபோது சென்று அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்தனர்.
வசுவையும் போய் பார்த்துக்கொண்டனர்.
இப்போது மது வேலைக்குச் செல்வதில்லை. வசந்தா மேடம் ஜாயின் பண்ணி இருந்தார்.

அதில் வித்யாவிற்கு வருத்தமே
. ஆபீசிலும் கூட மதுவை சில்மிஷம் செய்தபடி கிண்டலடித்தபடி வேலை செய்வது அவனுக்கு மிகவும் பிடித்துப் போயிருந்தது. ஆயினும் இவ்விஷயத்தில் ஒன்றும் செய்ய முடியவில்லை.
வசுவிற்கு அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவ்வப்போது பவியுடன் அங்கே சென்றுவர, பவிக்கு தம்பி பாப்பா என்று அவ்வளவு பிடித்துப் போனது. அங்கிருந்த நகர மாட்டேன் என்று அடம் செய்ய ஆரம்பித்தாள்.
எனக்கும் தம்பி பாப்பா வேணும்என்று நித்தமும் பிடிவாதம் அதிகமாகியது. அவளை சமாதானப்படுத்தி அழைத்துவர பெரும்பாடுபட்டனர்.

இதற்குமுன்னுமே கூட வித்யா இதைப்பற்றி மதுவிடம் பேசினான் தான்.
ஏண்டா, நமக்குன்னு ஒண்ணு வேண்டாமா?” என்றான் ஏக்கத்துடன்.
அவள் சிவந்துபோனாலும் இல்லை விது வேண்டாம்.... அதுனால எனக்கு ஒரு குறையும் இல்லை.... எனக்கு பவி மட்டும் போதும்... இன்னொண்ணு பிறந்து அதுனால நான் பவிய சரியா கவனிக்காம போயிட்டா என்னால உங்கள சந்திக்க முடியாது... என்னையே என்னால மன்னிக்க முடியாது என்றாள் முடிவாக.
மேற்கொண்டு என்ன பேசுவது என்று வெறுத்துவிட்டான் வித்யா. அவளது உயர்ந்த எண்ணத்தை மனம் பாராட்டினாலும் அவளும் ஒரு பெண் அவளுக்கென்று ஒரு குழந்தை பிறப்பது அவசியம் என்று அவனது எண்ணம்.

பவி செய்யும் அடம் பார்த்து பார்வதி
என்னடா வித்யா, பவி அடம் பிடிக்கறாளே... நீங்க என்ன ப்ளான் பண்ணி இருக்கீங்க.... மதுவுக்குன்னு ஒரு குழந்தை வேண்டாமா.... இதை எல்லாம் நான் பேசிகிட்டிருக்க முடியுமா.... நீ ஏதானும் சட்டம் போட்டிருக்கியா?” என்று கேட்டார்.
அட, நீ வேற ஏம்மா எரிச்சல கிளப்பற.... சட்டம் போட்டது நானில்லை அவதான் என்று எரிந்து விழுந்தான்.

ஓஹோ என்று உள் வாங்கிக்கொண்டார்
.
மெல்ல மதுவிடம் ஒரு நாள் பேச்சைத் துடங்கினார்.
என்ன மது, இந்தப் பவி இப்படி அடம் பண்றாளே. நேத்து சொல்றா, எல்லார் வீட்டிலும் தம்பி இல்லைனா தங்கச்சி பாப்பா இருக்கு எங்க ஸ்கூல் பசங்க வீட்டுல கூட இருக்கு. எனக்குதான் இல்லைன்னு ஒரே அழுகை
நீ என்னம்மா யோசிச்சு வெச்சிருக்கே.... உனக்குன்னு ஒண்ணு பெத்துக்கலாமே, என்னடா அம்மா இப்படி நாகரீகம் இல்லாம நேரா பேசறாங்களேன்னு நினைக்காதே கண்ணு.... வித்யாவிற்கும் உனக்குமாக ஒண்ணு பெத்துக்க வேண்டாமா மது?” என்றார்.
இல்லைமா வேண்டாம்.... எனக்கு பவி மட்டும் போதும் என்றாள்.
அதுசரி மா... உன் உயர்ந்த எண்ணம் எனக்குப் புரியுது... ஆனாலும் கடவுள் ஒவ்வொரு பெண்ணிற்கும் தந்திருக்கும் அற்புதமான வரம் தாய்மை.... அதை உதாசீனப்படுத்தக்கூடாதும்மா.... அதுமட்டும் இல்லை, ஒரே பிள்ளையாய் இருப்பதும் நல்லதில்லை... இன்னும் அடமும் வீம்பும் பிடிவாதமும் தான் ஜாஸ்தி ஆகும்.... நீதான் பார்க்கறியே, பவி எப்பிடி ஆகிட்டுவரான்னு.... அதுக்கு சொல்றேன்.
எனக்கு ஒன்னை நல்லாத் தெரியும் மது.... நீ ஒண்ணு இல்லை பத்து பெத்துகிட்டாலும் உனக்கு பவிதான் முக்கியமா இருப்பா.... அதுனால யோசிமா.... நல்ல முடிவா எடு என்று சென்றுவிட்டார்.

மதுவுக்கு குழம்பியது. வசுவிடம் பேசினாள். அவளும் அதையே வலியுறுத்தினாள். அன்றிரவு மது வித்யாவிடம் இதைப் பற்றிக் கூற
ஆமாடி, உனக்கு கட்டின புருஷனவிடவும் மத்தவங்க சொல்றதுதான் ஏறும் என்று சலித்துக்கொண்டான்.
விது, நீங்களும் என்னை அப்படி நினைச்சா நான் என்ன செய்வேன்.... நான் பவிக்காகத்தானே....” என்று விம்மினாள்.

அவளை இழுத்து தன் மார்பில் சாய்த்துக்கொண்டு
அடி பைத்தியமே எனக்கு அது தெரியாதா.... நீ எவ்வளவு உயர்ந்து நிக்கறே என் மனசுலன்னு உனக்கே தெரியாது தங்கம்... ஆனாலும் நீயும் ஒரு பெண், உனக்கும் ஒரு குழந்தைன்னு இருக்குணும் மதுமா என்றான் ஆசையாக.
அவள் மௌனமே சம்மதமாக எடுத்துக்கொண்டு அப்போ ஒகே தானேஎன்றான் கண் சிமிட்டியபடி
சீ போ என்று சிவந்து அவன் மடியில் முகம் புதைத்தாள்.
உஹு என்று கூவினான்.
சும்மா இருங்க விது... பவி முழிச்சுடப் போறா என்று அடக்கினாள்.
ஐ ஆம் ஸோ ஹாப்பி மதுஎன்றான்.

அது நல்ல நேரத்தில் எடுத்த நல்ல முடிவாகிப்போனது
. பின்னோடு மது கருவுற்றாள். குடும்பமே மகிழ்ந்தது. வித்யாவும் பார்வதியுமாக அவளை தரையில் விடாமல் தாங்கினர். அவ்வபோது வசு பார்த்தியும் கற்பகம் தம்பதியும் வந்து பார்த்துக்கொண்டனர்.
பவியிடம் அப்போதிலிருந்தே உனக்கும் தம்பியோ தங்கையோ பிறக்கப் போகுது... அதை நீதான் பெரிய அக்காவாக இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும்.... அதற்கு எல்லாமே நீதான் என்று கூறி வளர்த்தனர். அதன்படி பவி மேலும் சமத்தாக நடந்து கொண்டது. பள்ளியிலும் சிறப்பாக படித்து முதலிடத்தில் இருந்தாள். வீட்டிலும் பொறுப்பாக அவள் வேலைகளை தானே சமத்தாக செய்துகொண்டாள். ஆவலோடு பிறக்கப் போகும் உடன்பிறப்பிற்காக எதிர் நோக்கி காத்திருந்தாள்.
வித்யாவிற்கு நிலை கொள்ளவில்லை. ஆறு மாதத்தில் குழந்தையின் அசைவை நன்றாக உணர ஆரம்பித்ததும் மது அவனிடம் அதை பகிர்ந்துகொள், அப்போதிலிருந்தே அவன் அவள் வயிற்றை தடவி காது வைத்துக் கேட்டு அவளை சீராட்டிக்கொண்டிருந்தான். அவளை நடக்கவென அழைத்துச் சென்றான். அப்போது ஒரு கையில் பவியும் மறு கையில் மதுவுமாக நடந்துபோவான். அதில் ஒரு பெருமிதம் சந்தோஷம் திருப்தி எல்லாமும் அவன் முகத்தில் மிளிரும்.
அவளை பிரிந்து இருக்க முடியாதென்று முன்பாகவே சொல்லிவிட்டான்... இங்கேதான் பிரசவம் வைத்துக்கொள்ள வேண்டும்.... அவள் அவன் கண்ணெதிரேயே தான் இருக்க வேண்டும் என.

சீமந்தம் வளைகாப்பு என்று தடபுடலாக நடத்தி அங்கேயே வைத்துக்கொண்டனர். பவிக்காக மட்டுமின்றி பார்வதிக்கும் வயசும் தள்ளாமையும் வந்திருந்ததால் மது அவர் மீது ஒரு கண் வைத்தபடி அங்கேயே இருக்கவே விரும்பினாள். கற்பகம் பக்கத்திலேயே இருந்து கவனித்துக்கொள்ள அழகான ஆண் குழந்தை பிறந்தது.
அதை பவி மடியில் கிடத்தி இதோ உனக்கே உனக்குன்னு தம்பி பாப்பா என்றதும் அவள் கண்களில் தெரிந்த சந்தோஷம். அன்று அந்த சிசுவை கையில் ஏந்தியவள் தன் நெஞ்சிலே சுமந்தாள்இது என் தம்பி என் உயிர் என்று மனதில் ஆழப் படிந்துவிட்டது.

ஸ்கூல் விட்டு வந்ததும் ஓடி வந்து கைகால் கழுவி உடை மாற்றிக்கொண்டு தம்பியிடம் வந்துவிடுவாள்.... பாங்காக அவனை கையில் ஏந்தி மடியில் கிடத்திக்கொள்ள கற்றுக்கொண்டாள்.... அவ்வண்ணமே மடியில் வைத்துக்கொண்டு என்னமோ பேசுவாள் கொஞ்சுவாள் விளையாடுவாள்.... அவன் மழலை பேச்சைக் கண்டு சிரிப்பாள்.... அவன் அவளது மடியில் அசிங்கம் செய்தாலும் சட்டென உதறிவிட மாட்டாள்.... அசிங்கப்படாமல் அவனை தாயிடமோ பாட்டியிடமோ ஒப்படைத்துவிட்டு தம்பி பாத்ரூம் போயிட்டான் நான் போய் மாற்றிக்கிட்டு வரேன் என்று கூறிச் செல்வாள். இதை எல்லோரும் ஆச்சர்யத்தோடு கண்டுகொண்டனர்.

அத்யாயம் முப்பத்தி நான்கு
பவித்ராவிற்கு ஒன்பது வயது நிரம்பியது. அந்த நாட்களில் ஒரு நாள் மது பவியை அமர வைத்து அவள் பவியின் சொந்தத் தாய் இல்லை என்பதை அழகாகக் கூறினாள். பெற்றவள் அவளை சில முக்கிய காரணங்களுக்காக விட்டுச்செல்ல வேண்டி வந்தது என்று கூறினாளே தவிர, விட்டு ஓடிவிட்டாள் என்று பழியை சுமத்தவில்லை.
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட பவி, “பரவாயில்லை மா... எனக்கு நீதான் அம்மா... அவங்க போனா போகட்டுமே... எனக்குதான் டாடி, நீ, தம்பி அசோக் எல்லாம் இருக்கீங்களே.... எனக்கு போதும் என்றாள் பெரிய மனுஷி போல. இதை எல்லாம் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த வித்யா இதுதான் என் மதுவின் வளர்ப்பு என்று மெச்சிக்கொண்டான்.

இப்போது அசோக்கும் ஸ்கூலுக்குச் செல்ல ஆரம்பித்து இருந்தான். அவனை ஜாக்ராதையாகக் கூடவே அழைத்துச் சென்று கூட்டி வந்தாள் பவி.
அங்கே பார்த்தி வசுவின் மகன் பிரபுவும் இங்கே அசோக்கும் ஒரு வயது மட்டுமே வித்தியாசம் என்பதால் இரட்டை பிறவிகள் போல வளர்ந்தனர். இருவரும் ஒன்றாகவே விளையாடினர். ஒரே ஸ்கூல் வேறு. பவிக்கு ஒரு கண் அசோக் என்றால் மறுகண் பிரபு. இருவரையும் தன் சொந்த தம்பிகளாகவே பார்த்தாள். எந்த ஒரு மிட்டாய் மற்றும் கிபிட் எதுவாக இருந்தாலும் இருவருக்கும் அதில் சம பங்கு தந்தாள். எது வாங்கினாலும் இரண்டு வாங்குவாள் இருவருக்கும் குடுக்கவென.
எந்த பண்டிகை விசேஷ நாட்களும் இரு குடும்பங்களும் இணைந்தே கொண்டாடினர். பார்த்தி மற்றும் வித்யாவின் தந்தை காலத்து நட்பை அவர்கள் இருவரும் கொண்டாடி வளர்க்க அடுத்த தலைமுறை வாரிசுகளும் அதை அப்படியே பின்பற்றியது ஆச்சர்யமே.
தொடரும்...No comments:

Post a Comment