Wednesday 15 March 2017

மனைவி என்பவள்... தமிழ் சிறுகதை

மனைவி என்பவள் - சிறுகதை  
ஜனனி தன் கைகளை திருப்பி திருப்பி பரவசத்துடன் பார்த்துக் கொண்டே இருந்தாள். கண்களில் ஆனந்தக் கண்ணீர் எட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தது. முகத்தில் ஒரு நிறைவு, பூரிப்பு. கைகளில் அவள் முகத்தை மிஞ்சும் ஜ்வலிப்பு இரண்டு ஜோடி வளையல்கள் புதியதாக மின்னியது.

“இது இப்போ என்னத்துக்கு, வீண் செலவுதானே, இன்னும் முக்கியமான எவ்வளவோ செலவு தலைக்கு மேல இருக்கு” என்றாள் பிணங்கலுடன் ஜெகனிடம்.
“இருக்கட்டுமே, எல்லாத்தையும் ஒவ்வொண்ணா முடிப்போம். இன்னிக்கி இது முக்கியம்தான்” என்றான் அவளை ஆசையுடன் பின்னிருந்து அணைத்தபடி.

“என்ன இது, பசங்க யாரானும் வந்துட போறா...” என சிணுங்கினாள்.
“வந்தா வரட்டுமே, என் பெண்டாட்டி நான் கொஞ்சறேன்...” என கழுத்தோடு இணைந்தான்.
கையில் மின்னிய வளையலைவிட அவள் முகம் நாணத்துடன் சிவந்து ஜொலித்தது.

அது ஒரு வித நிறைவு, ஆடி ஓடி களைத்து சோர்ந்து பின் எழுந்து தளர்ந்து தட்டு தடுமாறி நடந்து ஓடி பின்பு வெற்றி கண்டவனின் வெற்றி பெருமிதம்.

அவனது அணைப்பில் இழைந்துகொண்டே மனம் பின்னோக்கி ஓடியது.
ஜகனுடன் அவளது கல்யாணம் நடந்து இப்போது பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒரு ஆணும் ஒரு பெண்ணுமாக இரண்டு குழந்தைகள்.

முதல் பத்து வருடங்கள் இனிமையாக ஓடின. ஜகன், அவனது அன்பும் பண்புமான குணம், அவனது நல்ல வேலை, கை நிறைய சம்பாதனை, சின்னதாக ஒரு சொந்த வீடு, மனைவி, இரண்டு குழந்தைகள் என மன நிறைவுடன் ஓடிய நாட்கள் அவை. மகிழ்ச்சிக்கு குறைவே இல்லை.

அந்த நேரத்தில்தான் அவனின் பல்நாட்டு கம்பனியின் தலைமை ஏற்க சென்னைக்கு புதியதாக ஒரு வெளிநாட்டவன் பாசாக தலைமீது வந்து அமர்ந்தான்.

“ஹ்ம்ம், இதான் நீங்க வேலை பண்ணி கிழிக்கும் லக்ஷணமா, இதுவரை எத்தனை பேரை வேலையைவிட்டு தூக்கி இருக்கீங்க, இவனுகளுக்கெல்லாம் ஏன் இவ்வளவு இடம் குடுத்து வெச்சிருக்கீங்க...?” என்பதுதான் அவனின் முதல் நாளைய வார்த்தைகளாக இருந்தன.
அந்தப் பேச்சு துச்சமான மனப்பான்மை அங்கிருந்த அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. ஜெகனை போன்றோருக்கு சுருக்கென்றது.
‘இவனுடனா..... இனி நாம் காலம் தள்ள வேண்டும்...?’ என்று.

மனதை ஒருமுகப்படுத்தி வேலையில் கவனம் செலுத்தினர்.
மெஷின் ஷாப்பில் வேலை மும்மரமாக நடப்பதை மேற்பார்வை பார்த்தபடி அங்காங்கு குறிப்புகள் கொடுத்து வந்தான் ஜகன்.

“இங்க என்ன மான் பண்றே, உன் டெஸ்க்ல இல்லாம இங்கே என்ன வேலை உனக்கு?” என்றபடி வந்தான் அந்த வெள்ளைக்காரன், வில்சன்.
“இல்ல சர், இது நான் தினமும் ரவுண்டஸ் வரும் நேரம், இவங்களுக்கு ஏதேனும் சொல்ல வேண்டி இருந்தால், தெளிவுபடுத்த வேண்டி வந்தால் இப்படி வருவேன்” என்றான் பணிவுடன்.

“அதை நீ எனக்கு சொல்ல வேண்டாம், எல்லாம் எனக்குத் தெரியும், போ உன் இடத்துக்கு, வெட்டி பேச்சு பேசிகிட்டு...” என்றான்.
தொழிற்கூடத்தில் வைத்து அனைத்து தொழிலாளர்களின் மத்தியில் அவன் அப்படி இடித்துரைத்ததை கேட்டு ஜெகனுக்கு முகம் சிவந்து போனது. விருட்டென்று உள்ளே திரும்பி சென்றுவிட்டான்.

“இந்த ரிபோர்ட் என்ன கிழிச்சிருக்கே, ஒண்ணுமே சரி இல்லை, என்ன வேலை பார்க்குறீங்க எல்லாரும், சீட்ட கிழிச்சு வீட்டுக்கு அனுப்பீடுவேன் ஜாக்ரத” என உறுமியபடி திரிந்தான் வில்சன்.

ஜெகனுக்கு நிம்மதி போனது, வேலையில் திருப்தி பிடிப்பு சிரத்தை எல்லாமும் போனது... வீட்டிற்குச் சென்றவன் பிள்ளைகளிடம் எரிந்து விழுந்தான்.
“என்னாச்சு ஏன் இப்படி, என்றும் இல்லாம...?” என பக்குவமாக கேட்டாள்.
“ஒண்ணுமில்ல, வேலை டென்ஷன்” என்றான் எரிச்சலுடன்
சரி என ஒதுங்கி இருந்தாள்..... பிள்ளைகளும் அவனை பிடுங்காமல் அணுகாமல் பார்த்துக்கொண்டாள்.
வீட்டில் அவன் உள்ள வேளைகளில் அமைதி இருக்கும்படி பார்த்துக்கொண்டாள்.
அவனுக்கு பிடித்தமானதை சமைத்து கவனத்துடன் பரிமாறி அவன் பசி அறிந்து ஆற்றினாள்.

அதை மற்றொரு நாள் ஆனால் ரசித்து பாராட்டி அவளது கரிசனத்தை உச்சி முகர்ந்து மெச்சி இருப்பாந்தான்... ஆனால் இப்போதோ தட்டில் என்ன விழுந்தது என கூட அறியாமல் கொறித்துவிட்டு எழுந்தான்.

இரவின் மடியில் அவளை மறந்து எங்கேயோ வெறித்தபடி கிடந்தான்... புரண்டு கொண்டே எப்போதோ தூங்கி அதிகாலை விழித்தான்.
ஜனனி கவலையானாள்.

“பேசுங்க, உள்ளேயே வெச்சிருந்தா ரணமா ஆயிடும்” என தோண்டினாள்.
“ஒண்ணுமில்ல ஜானு” என சமாளித்தான்.
தன் வேலை கவலைகளை அவளிடத்தில் ஏன் திணிக்க என எண்ணினான்.
“இல்ல சொன்னா வழி பிறக்குமா பார்க்கலாம், ஒண்ணுமில்லைன்னாலும் மனதுக்கு ஆறுதலா இருக்கும்” என மனம் விட்டு பேச வைத்தாள்.
தன் மனத்தாங்கலை பிட்டு வைத்தான்..... பொறுமையாக மௌனமாக இடைபடாது கேட்டுக்கொண்டாள்.

“ம்ம்ம், அவருடைய குணாதிசயம் இப்படின்னு புரிஞ்சுபோச்சு அத்தான், ஒதுங்கிடுங்க..... அவர் கண்ணுல படாம உங்க வேலைய பார்க்க முடியுதா பாருங்க...

இப்போதும் சொல்றேன், ஒரு வேளை வேலையே விட வேண்டி வந்தாலும் அதை நினைச்சு நீங்க கவலைப்பட வேண்டாம், சமாளிச்சுக்கலாம்” என்று உறுதியாக கூறினாள்.
அவளது மன உறுதியை கண்டு அவள் மடி சாய்ந்தான்.... மெல்ல அவன் தலை கோதி மடி சாய்த்தாள்..... பல நாட்களுக்குப் பிறகு கொஞ்சமேனும் நிம்மதியாக உறங்கினான்.

இன்னும் சில மாதங்கள் இப்படியாக கடக்க, பொறுமை போகும் அளவுக்கு அவமானங்கள், ஏச்சுபேச்சுகள், மிரட்டல்கள் அதிகமாயின.....
‘இவனுக்கு என்னதான் வேண்டும்... வேலை நடக்கிறது.... உற்பத்தி பெருகி வருகிறது.... எதனாலும் திருப்தி கொள்ளாமல் எல்லோரையும் அவதி படுத்துவதில் இவனுக்கு என்ன நன்மை, இவன் என்ன சாடிஸ்டா...?’ என எரிச்சல் மண்டியது .
ஜகனுடன் வேலை செய்தோர் பலர் தங்களது வேலையை ராஜினாமா செய்தனர். ஜகன் புழுங்கினான்.

அன்றைய பொழுது எப்படித்தான் விடிந்ததோ, வேலைக்குச் சென்று கவனத்துடனேயே தன் வேலைகளை பார்த்து வந்த போதிலும், வில்சன் கண் கழுகாக இவனைச் சுற்றி வந்தது.
“என்ன நடக்குது, இந்த ரிபோர்ட் ஏன் இன்னும் ரெடி ஆகல, அந்த மெஷின் ஏன் இன்னும் முழுசா ஓடலை?” என கேள்வி மேல் கேள்வி கேட்டான்.
இவனும் பொறுமையுடன் அதற்குண்டான பதிலை கூறி வந்தான்.

“போதும் சும்மா ஏதோ ரீசன் சொல்லிக்கிட்டு வெட்டி பொழுது போக்கற, நான் நினைச்சா இந்த நொடி உன்னை வேலைய விட்டு தூக்க முடியும், தெருவில நிப்பே, நீ மட்டுமில்லாம உன் மனைவியும் குழந்தைகளும் கூட நடுத் தெருவில்தான் நிப்பாங்க ஜாக்ரத” என உறுமினான்.

அந்த நொடியில், தன் மனைவி பிள்ளைகளை அவன் ஈனமாக பேசியதை கேட்டதும் எங்கிருந்துதான் அவனுக்கு வந்ததோ கோபம்...
“நிறுத்துங்க வில்சன், எங்க பொறுமைக்கும் ஒரு அளவுண்டு.... உங்க வேலைய நம்பி எங்கப்பாம்மா என்னை பெக்கல..... நானும் கல்யாணம் பண்ணி பிள்ளைகளை பெத்துக்கலை..... நீங்க என்ன தூக்கறது, நானே வேலைய ராஜினாமா செய்யறேன்..... உங்க ஏச்சும் பேச்சும் கேட்டுகிட்டு இங்க வேலை செய்ய எனக்கு தலை எழுத்து இல்லை” என பதிலுக்கு உறுமிவிட்டு தன் டெஸ்குக்கு சென்று கால் கடிதாசி எனப்படும் ராஜினாமாவை எழுதி அவன் அருகே இருந்த டேபிள் மேல் வைத்துவிட்டு காலை எட்டி போட்டு வாசலை நோக்கி நடந்தான்.

வில்சன் அங்கே வெற்றிச் சிரிப்பு சிரித்தாலும் அதை கண்கொண்டு ஜகன் காணவில்லை.
வீட்டை அடைந்தவன் சோர்ந்தான்.... பேசாமல் தலையை இறுக பற்றிக்கொண்டு கட்டிலில் சாய்ந்துவிட்டான்.

வேளை கெட்ட வேளையில் அவன் வீடு வந்ததும் அவன் முகம் இருண்டிருந்ததும் தலையை பிடித்தபடி அவன் கட்டிலில் விழுந்ததும் கண்ட ஜனனிக்கு ஏதோ சரி இல்லை எனப் புரிந்தது.
கொஞ்சமாக சூடான காபியுடன் அவனருகே வந்தாள்.... தலை கோதி அவனிடத்தில் மௌனமாகவே காபியை குடுத்தாள்.... எழுந்து சரிந்து அமர்ந்து அதை வாங்கி குடித்தான்.

“முடிஞ்சு போச்சு ஜானு, பேசக்கூடாதத பேசினான்.... செய்யக் கூடாதத நான் செஞ்சுட்டு வந்துட்டேன்” என்றான் வலியுடன் வேதனை முகத்தை தாங்கி.

“என்னாச்சு?” என்றாள் பரிவுடன்.
அவளது அந்த ஒரு கரிசன வார்த்தையில் உடைந்தான்.
அவள் தோள் சாய்ந்து மெல்லிய குரலில் அத்தனை வேதனையையும் கொட்டினான்.

பொறுமையாக கேட்டவள்,
“அவ்ளோதானே, விட்டுது பீடைன்னு நிம்மதியா போய் கொஞ்சம் படுத்து தூங்குங்க அத்தான்..... நடப்பதெல்லாம் நன்மைக்குதான்னு நினைச்சுக்கோங்க” என்றாள் புன்சிரிப்பு மாறாமல்.

“ஹே ஜானு, உனக்கு அதிர்ச்சியா இல்லையா, நாளைய பொழுது எப்படி விடியும்... நடக்கும், செலவுக்கு என்ன பண்ணுவோம், செமிப்புன்னு நம்மகிட்ட பெரிசா ஒண்ணுமே இல்லையே மா?” என்றான்.

“இருக்கட்டுமே, அதுக்காக..... அந்த ஆள் அப்படிப்பட்ட பேச்சு பேசிய பின்னும் ரோஷம் கெட்டு அவன்கிட்ட கைகட்டி வேலை செய்து சம்பாதிச்சு அந்த பணத்தில நாம வாழணுமா அத்தான்..... உங்களுக்குன்னு ஒரு சுயமரியாதை இருக்கு.... அதை நாம எப்படி யாருக்காகவும் விட்டு குடுத்துட முடியும்..... போதும்..... அந்த சாப்டர் முடிஞ்சு போச்சு.... பேசாம தூங்கி எழுங்க” என அவனை சாய்த்து படுக்க வைத்தாள்.
உறக்கம் வரவில்லை. மூடிய கண்களுக்குள் எதிர்காலம் சுழன்றது பயமுறுத்தியது.

எழுந்து உண்டேன் என பெயர் செய்துவிட்டு அடுத்தபடியாக வேலை தேடும் படலத்தில் இறங்கினான்.
‘ராங் சைட் ஆப் பார்டி’ என்பார்களே அதைப்போல நாற்பதை தாண்டி இருந்தான், வேலைக்கு கேட்பவர்கள் தயங்கினார்கள்.
சிலதை விண்ணப்பித்தான்.... பித்து பிடித்தார் போல இருந்தது....
‘தவறு செய்துவிட்டோமோ, மனைவி வீடு பிள்ளைகள் எதிர்காலம் என எண்ணம் இன்றி அவசரமாக முடிவு எடுத்தோமோ?’ என குழம்பினான்.
அவன் முகத்தின் கவலை ரேகைகளை கண்டே அவனது மனதை அறிந்தவள் தோளோடு சாய்த்து கொண்டாள்.

“விட்டுடுங்க, போஸ்ட் மார்டம் வேண்டாம்..... ஆராய்ச்சி பண்ணாதீங்க அத்தான்..... எல்லாம் நன்னா நடக்கும்.... ஒண்ணும் குடி முழுகி போயிடலை” என்றாள் புன்சிரிப்புடன்.
அவன் முன் பளிச்சென்ற முகத்துடன் புன்சிரிப்புடன் நடமாடினாள்.... கஞ்சியோ கூழோ அமிர்தமாக செய்து பரிமாறினாள்.

பிள்ளைகளை அன்புடன் அதே நேரம் கவனத்துடன் அவனை தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டி தன்மையாக சொல்லி புரிய வைத்தாள்.

தான் பயின்ற கம்ப்யூட்டர் கோர்ஸ் முதலீடாகக் கொண்டு வீட்டில் இருந்தபடியே ஏதேனும் செய்தால் கையில் நாலு காசு வருமே, எதற்கேனும் உபயோகப்படுமே என என்றோ ஆரம்பித்திருந்த வேலையை தொடர்ந்தாள்.

அவனிடம் பொழுது போகாமல் தான் இந்த வேலையை ஏற்பதாக சொல்லி இருந்தாள் தான்.... அவன் அதை அப்போது பெரிதாக எண்ணவில்லை.
இப்போது முழு மூச்சுடன் அதில் ஈடுபட்டாள்
.
கூடவே சிறுதொழில் ஆரம்பிக்க முயற்சிகள் கண்டுகொண்டாள்.... ஆன்லைனில் எவ்வளவு விவரங்கள் சேகரிக்க முடியுமோ செய்தாள்.... கோர்வையாக தொகுத்தாள்.
பெண்களுக்கான கோட்டாவில் லோன் கிடைக்கும் என தெரிய வந்தது.... அவனிடம் பக்குவமாக எடுத்து கூறினாள்.

முதலில் அதிர்ந்தான். “சுய தொழிலா, எனக்கு என்ன தெரியும்னு?” என்றான்.
பின் தயங்கினான்.... குழம்பினான்....
“முடியும், உங்களால முடியாம என்ன, இத்தனை வருட படிப்பும் அனுபவமும் யாருக்கோ போய் ஊழியம் பண்றதில வீணானதே அதை நமக்கு உபயோகப்படுத்தீண்டா என்ன?” என ஊக்குவித்தாள்.

“நீ சொல்றதெல்லாம் கேட்க நன்னாதான் இருக்கு ஜானு...” என தளர்ந்தான்.
“இல்ல, முடியும்.... வாங்கோ...” என லோன் ஆபிசரிடம் இழுத்துச் சென்றாள்.
சிறியதாக இடம் பார்த்தனர்.
இரண்டு லேத் மெஷின், ஒரு டர்னிங் என சின்ன முதலீடாக ஏற்படுத்தலாம் என ப்ளான் செய்தனர். கூடவே நின்று உறுதுணையாக அவனை ப்ரஜெக்ட் ரிபோர்ட் தயார் செய்துவித்தாள்.
லோன் சாங்க்ஷன் ஆனது.

“என்னால நம்பவே முடியல.... என்னை நம்பி லோன் குடுத்தாங்களா.... இல்லை உன்னை நம்பியா..... நம்ம ரெண்டு பேருக்கும் என்ன தெரியும் ஜானு மா?” என்றான்.

“எல்லாமே தெரியும்... கிளம்புங்க” என மேற்கொண்டு ஆரம்பிக்க போகும் மெஷின் ஷாப்பிற்கான மெஷிங்களை ஆர்டர் செய்யக் கிளப்பினாள்.

லோன் கைக்கு வந்துவிட்டது என தெரிந்ததும் அவன் மனம் ஒருங்கிணைந்தது.... மளமளவென ஆரம்பித்தான்.... தான் வேலை செய்த இடத்தில சந்தித்த சில பல பெரிய கம்பனிகளை தனி முறையில் சென்று அணுகினான்.

ஜானுவின் விடா முயற்சியோ அவனின் நல்ல மனதும் உழைப்பும் திறமையுமோ அல்லது நல்ல ராசியோ, அந்த கம்பனிதாரர்கள், அசலே வில்சனால் அவனது தரம்கெட்ட வேலைமுறையினால் கசந்து போயிருந்தனர்..... அதே வேலையை மிகவும் தெரிந்தவனாக ஜகனே செய்து தரட்டுமா என முன் வந்ததும் அல்வா போல வந்த சான்சை அள்ளிக்கொண்டனர்.

“தாராளமா செய்யுங்க ஜகன், எங்களுக்கும் நிம்மதி, புதிய ஆள் கிட்ட குடுத்து ஒவ்வொண்ணும் சொல்லி புரியவெச்சுகிட்டு அல்லல் பட வேண்டாம் பாருங்க.... உங்களுக்கு தான் எங்க தேவைகள் எல்லாம் அத்துபடி ஆச்சே” என ஆர்டர் தந்தனர்.

“ஜானு...” என உற்சாகமாக ஓடி வந்தான். அவளிடம் பிட்டு வைத்தான்.
“ரொம்ப சந்தோஷம், நாந்தான் சொன்னேனே.... உங்க திறமையில நம்பிக்கை வெய்யுங்கனு” என்றாள்.

“இல்ல, இது உன்னோட உறுதுணை, நீ தந்த உற்சாகம்.... நீ என் மேல் வெச்ச நம்பிக்கைடா” என இடுப்பை வளைத்தான்.
“போறுமே” என சிவந்து அவன் மார்பில் முகம் புதைத்தாள்.
சிரிப்பும் கிண்டலுமாக உழைப்பும் நம்பிகையுமாக நாட்கள் பறந்தன.

மூன்று சின்ன அளவிலான மெஷின்களுடன் ஆரம்பித்த அவன் ஷாப் இப்போது ஆறு மெஷின்கள் என வளர வேண்டிய கட்டாயம். அந்த அளவுக்கு ஆர்டர்கள் குவிந்தன.

உழைத்தான். பிள்ளைகள் முகத்தை கூட பல நாள் பார்க்க முடியாமல் போன அளவுக்கு உழைத்தான்.
வீடு பிள்ளைகள் அவர்களது பள்ளி படிப்பு வீட்டு பொறுப்புகள் பில் கட்டுவது பால் காய்கறி சாமான் என எந்த அவசரத்திற்குமே அவனை எதிர்பார்க்காமல் அவள் ஓடினாள்.
கூடவே தன் வேலையையும் விடாமல் செய்து குடும்பச் செலவு அவனை பாதிக்காமல் அவனுக்கு சிரமம் இன்றி பார்த்துக்கொண்டாள்.
ஓடாக தேய்ந்தார்கள் என்றாலும் உழைத்து களைத்து நிம்மதி குடி கொண்ட மனதுடன் உறங்கினார்கள்.
இதோ ஆரம்பித்த ஐந்து வருடங்கள் முடிவில் ப்ரேக் ஈவன் நடந்து, கையில் லாபம் என்று ஒன்றை பார்த்துவிட்டான் ஜகன்.
லோன் பெரும்பாலும் கட்டி முடிக்கப் பட்டுவிட்டது.... அடுத்தபடியாக வர்கிங் காபிடல் என மேலும் லோன் குடுக்க தயாராகிவிட்டனர் பாங்கில்.

அன்றொருநாள் லோனுக்கு முன்பணமாக கட்ட கையில் பணம் இன்றி தவித்த தருணம் ஜகன் கண்ணில் சுழன்றது.

“பாங்க்ல எண்பத்தஞ்சு பர்சென்ட் தருவாங்களாம் ஜானு..... ஆனா பதினைந்து பர்சென்ட் நாம கண்டிப்பா ஏற்பாடு செய்துதான் ஆகணும்னு சொல்றாரே ஆபிசர்?”” என்றான்.
“ஹ்ம்ம் நானும் கேட்டேன் அத்தான்.... பார்க்கலாம்” என்றாள்.

இரவு முழுவதும் யோசனை ஓடியது.... காலையில் எழுந்தவள் குளித்து முடித்து விளக்கேற்றி வழிபட்டாள்.. ஒரு மஞ்சள் கயிற்றில் தாலியை மட்டும் எடுத்து கோர்த்தாள்.
தாலிச் சரடு, தன் கையில் கிடந்த நான்கு வளையல்கள், ஜிமிக்கி... குழந்தை அக்ஷயாவிற்காக வாங்கிய ஒரு ஜோடி வளையல்கள் என எடுத்து ஒரு நகை பெட்டியில் போட்டு அவனிடம் தந்தாள்.
“போங்க இதை வித்துட்டு அந்த பணத்தை முன் பணமா கட்டீடுங்க” என்றாள் மலர்ந்த சிரிப்புடன்.
“ஜானு...” என கூவியே விட்டான் அவள் கழுத்தில் மஞ்சள் சரட்டைக் கண்டு.

“என்ன, என்ன.... எதுக்கு இந்த பதட்டம்..... நாளைக்கே நல்லபடியா நம்ம கம்பனி நடந்தா புதுசா வாங்கிகிட்டா போச்சு...... போங்க இதை மறந்துட்டு நடக்க வேண்டியதை பாருங்க” என்றாள் அதட்டலாக.

“ஆனாலும் ஜானு...” என்று வாங்கவே தயங்கினான்.
“என்ன ஜானு, குழந்தயின் வளையலை கூட....?” என குமுறினான்.
“என்ன, இப்போவே அக்ஷயாவுக்கு கல்யாணமா பண்ணப் போறோம்..... அவ கல்யாணத்தின்போது வைர வளையலே வாங்கி போட்டு அழகு பார்ப்பீங்களாம், இப்போ நல்ல நேரம் முடியறதுக்குள்ள கிளம்புங்க அத்தான்” என கிளப்பினாள்.

அன்று எடுத்துச் சென்று முதலீடு செய்தவை இப்போது மெல்ல மெல்ல வழிதேடி வாசலை அடைந்து ஒவ்வொன்றாக உள்ளே நுழையத் துடங்கி இருந்தது.
முதல் கட்டமாக அவளுக்கான வளையல்கள் ஒரு ஜோடி வாங்கி வந்திருந்தான் இன்று.

“சாதிச்சுட்டடீ” என்றான்.
“நானா.... நான் என்னத்த..?” என்றாள் வெட்கத்துடன்.
“நீ இல்லாம பின்ன...  இது என்னோட சாதனையா, கண்டிப்பா இல்லை.
தாரம் என்பவள் சோரிடும்போது தாயா, சோகத்தில் தாங்கி நிற்பதில் உற்ற தோழனா, வேடிக்கை கேளிக்கையில் உற்ற சகோதரியா, ஆலோசனை கூறும்போது மதி மந்திரியா அரவணைப்பில் தாசியா இருக்கணும்னு பெரியவங்க சொல்வாங்க ஜானு....”

“நீ எல்லாமா நின்னு என்ன சீர்தூக்கி ஜெயிக்க வெச்சுட்டேடீ” என இறுக்க அணைத்தான்.

“போறுமே, இதில என்னோடது என்ன இருக்கு.... வெறும் ஐடியா குடுத்தேன், என்னமோ உங்களுக்கு தெரியாததை நான் சொல்லீட்டா மாதிரியும், நாந்தான் அங்கே பட்டறையில போய் ராவும் பகலும் உழைச்சா மாதிரியும்தான் பேச்சு...” என கிண்டலாக அவனை ஆறுதல் படுத்தினாள்... அவன் மன கனத்தை லேசாக முயன்றாள்.

“வேடிக்கையா நீ பேசி லேசா தோண வெச்சாலும் உண்மை என்னனு எனக்கும் தெரியும் உனக்கும் தெரியும் நம்மளை படைச்ச அந்த ஆண்டவனுக்கும் தெரியுமே ஜானுமா” என்று அவள் உச்சியில் முத்தமிட்டான்.

“நீ ஜெயிச்சு என்னை ஜெயிக்க வெச்சுட்டடீ என் செல்லம்” என மூக்கை நிமிண்டினான்.
“ஆமா ஜானு, ஒவ்வொரு மாசமும் நான் என்ன தேதியில எத்தனை பணம் குடுத்தாலும் அதை வெச்சு நீ வீட்டுச் செலவை எப்படி மேனேஜ் பண்ணினே?” என்றான் ஆவலுடன்.

“நானும் என்னோட வேலையை விடாம வீட்டிலேர்ந்து செஞ்சுண்டே தானே இருந்தேன் அத்தான்” என்றாள் வெள்ளையாக.

“உனக்குத்தான் நான் எவ்வளவு கஷ்டத்த குடுத்துட்டேன் இல்லையாமா?” என்றான் மோவாயை பிடித்து கொஞ்சி.

“இதில என்ன கஷ்டம் இருக்கு, வாழ்க்கை எனும் வண்டி ஓட, நாம ரெண்டு பேரும் ரெண்டு சக்கரமா இருந்து பாரத்தை பங்கு போட்டுண்டு சுமந்தாத்தானே வண்டி ஜல் ஜல்னு நேர்வழியில போகும்.....
போனதை விடுங்கோ. இனிமே நமக்கு நல்லகாலம்னு சந்தோஷப்படுங்கோ.... வாங்கோ சாப்பிடலாம்.... பசங்களும் பசியா இருப்பா, இன்னிக்கி அப்பாவோடதான் சாப்பாடுனு அடம் பண்ணீண்டு உக்காந்திருக்குகள் ரெண்டும்...” என அவனை இழுத்துச் சென்று அமர வைத்தாள்.

எளிமையான ஆனால் ருசியான சாப்பாடு அமிர்தமாக படைத்தாள்.... பிள்ளைகளுடன் செல்லச் சண்டை இட்டபடி தன் கண் முன்னே மீண்டும் கலகலப்புடன் சாப்பிடும் அழகை கண்டு தன் தட்டில் இருந்த உணவை உண்ணக் கூட தோன்றாமல் மனமும் வயிறும் நிறைந்து முகம் விகசிக்க பார்த்த வண்ணம் இருந்தாள் ஜனனி.




2 comments: