Saturday, 18 March 2017

நெஞ்சமதில் உன்னை வைத்தேன் பாகம் 8

பாகம் 8
௮த்யாயம் இருபது
அடுத்த நாள் ஆபிசிற்குச் செல்ல, அங்கே சென்றபின்னும் அம்மா பேசியதெல்லாமும் நினைவு வந்து அவனைத் தொல்லை செய்தது. மதியம் வரை பார்த்துவிட்டு எனக்கு உடம்பு கொஞ்சம் முடியல பாத்துக்குங்கஎன்று மதுவிற்கும் ஜி எம்மிற்கும் செய்தி அனுப்பிவிட்டு காரை எடுத்துக்கொண்டு பீச் ரோடில் போனான். கடல்காற்று இதமாக இருந்தது. அங்கேயே காரில் அமர்ந்து ஒவ்வொன்றாக மெல்ல அசைபோட்டான்.
ஏன் எப்படி எதற்கு என்று அலசிப் பார்த்தான். மண்டை காய்ந்தது. நேரே வீட்டிற்கு சென்று படுத்துக் கொண்டான். அன்று மாலை முதல், நல்ல காய்ச்சல் அடிக்கத் துடங்கியது.
பார்வதி கவலையோடு டாக்டரை அழைத்து பார்க்கச் சொன்னார்.
உடம்புக்கு எதுவும் இருக்காப்போல தெரியல... ஏதோ மனப்ராந்திப்போலத் தெரியுது... எதுக்கும் காய்ச்சல் நிற்க மருந்து குடுத்திருக்கேன் பாத்துக்குங்க... நல்ல ரெஸ்ட் தேவை... அவர மறந்து தூங்கணும்... தானே சரிஆகும் என்றுவிட்டுச் சென்றார்.

பார்வதிக்கு புரிந்தது. தன் மகன் மன உளைச்சலினால் தான் அவதிப் படுகிறான் என்று. பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டாள். பவியும் அப்பாவிற்கு ஜுரம் என்றதும் சமத்தாய் தன் பொம்மையோடு விளையாடிக் கொண்டது. அவ்வப்போது வந்து பயந்தபடி மெல்ல எட்டிப் பார்த்தது.
வித்யா இரவுதான் கண்விழித்தான். பார்வதி கரைத்தாற்போல் கொஞ்சம் ரசம் குழைந்த சாதத்தோடு கொடுக்க அதை சாப்பிட்டு மருந்தும் எடுத்துக் கொண்டு திரும்ப உறங்கிப் போனான். பவியை தன்னோடு படுக்கவைத்துக் கொண்டார் பார்வதி.
அடுத்த நாளும் அப்படியே சென்றது.

அடுத்த நாளும் அவன் அலுவலகம் வரவில்லை என்றதும் மதுரா கொஞ்சம் கவலை ஆனாள்
. பயந்தபடி மெல்ல வீட்டு நம்பருக்கு கூப்பிட்டாள். அம்மா எடுக்கவேண்டுமே என வேண்டிக்கொண்டாள். பார்வதிதான் எடுத்தார்.
அம்மா, நான் மதுரா பேசறேன். எப்படி இருகீங்கம்மா? சாருக்கு என்னாச்சு, ரொம்ப முடியலையா... நேத்து மத்தியானம் கிளம்பிப் போனாரு... இன்னிக்கி கூட வரலைனதும் என்னமோ கேட்கலாம்னு...” என்றாள் தயக்கமாக.
ஆமாம் மதுரா, வித்யாவிற்கு ஜுரம். டாக்டர் வந்து பார்த்து மருந்து குடுத்திருக்கார். பயப்பட ஒண்ணுமில்லை ஏதோ மனஉளைச்சல். நல்லா தூங்கணும், ரெஸ்ட்ல இருக்கணும்னு சொல்லீட்டுப் போனார்மா... அதான் படுத்திருக்கான். பாதிநேரமும் அசந்து தூங்கறான் மருந்தின் சக்தில என்றார்.

ஓ, ஏதானும் ஹெல்ப் வேணுமா மா? என்ன எப்போ வேணும்னாலும் கூப்பிடுங்க... கவலப்படாதீங்க சீக்கிரம் சரி ஆயிடும் என்று அவருக்கு தைர்யம் கூறி வைத்தாள்.
என்னதான் ஆயிற்று, என்னதான் பிரச்சினை... எதற்கு இவ்வளவு யோசித்து தானும் கஷ்டப்பட்டு மற்றவரையும் கவலைக்குள்ளாக்கி...’ என்று மதுரா குழம்பினாள். சீக்கிரம் குணமாக வேண்டும் எனவேண்டிக் கொண்டாள்.

வித்யா மாலையில் கண்முழித்தான். கொஞ்சம் தெம்பாகவும் உணர்ந்தான். கீழே இறங்கிவந்து அம்மாவுடன் பவியுடன் சிறிது நேரம் சிலவழித்தான்.
பார்வதி மதுரா கூப்பிட்டு விசாரித்ததை சொன்னார். ம்ம் என்று கேட்டுகொண்டான். ‘என்னைப் பற்றிக் கவலைப்பட அம்மாவை தவிரவும் ஒரு ஜீவன் உள்ளதா என்று நினைத்துக்கொண்டான்.

அன்றும் மறுநாளும் தூங்கவில்லை எனினும் படுத்திருந்தான்
. மனதின் உளைச்சல் உடம்பை அடித்துப் போட்டதுபோல அயர்ந்துபோக வைத்திருந்தது. அந்த அயர்ச்சி போக படுத்துக்கொண்டே பலவும் யோசித்தான். ஆராய்ந்தான், அலசினான். பல உண்மைகள் கண்முன்னே நிதர்சனமாகத் தெரிந்தது.
அம்மாவும் குழந்தை பவியும் மதுவும் கூட என்னால் வேதனை படுகின்றனர்... ஆம் நான் மதுவை மனப்பூர்வமாக விரும்புகிறேன்... அவள் என் அம்மாவிற்கு ஏற்ற மருமகள், எனக்கு ஒரு நல்ல மனைவி மற்றும் என் மகளுக்கு உயிரினும் மேலான தாயாக இருப்பாள்தான். அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனாலும் அவளைத் திருமணம் செய்தால் அது அவள் வாழ்க்கையை கெடுப்பது போலாகுமா என்று யோசித்தான்.

அதை அவள் அல்லவா யோசித்துக் கூற வேண்டும்
... தானே எதையோ நினைத்துக்கொண்டு தப்புக் கணக்கு போட்டிருந்தால் என்று வாதாடியது மனது. சரி என் கடந்தகால வாழ்க்கையைப் பற்றி முதலில் அவளிடம் கூறிவிடுகிறேன். பிறகு நான் அவளை விரும்புவதையும் மணக்க விழைவதையும் கூட கூறுகிறேன். முடிவை அவள் கையிலேயே விட்டுவிடுகிறேன். அதன்பின் ஆண்டவன் விட்ட வழி என்று எண்ணிக்கொண்டான். நல்ல சரியான தீர்மானம் என்று மெச்சியது மனது. சிரித்துக்கொண்டான். உடம்பும் மனமும் தெளிந்தது போல உணர்ந்தான்.

அடுத்த நாள் தேசிய விடுமுறை. அன்று காலை மதுவை அழைத்தான். அவள் போன் ஐ எடுத்தாள். ‘உடம்பு சரியில்லை என்றானே என்னவாயிற்றோ என்று அவளுக்கு உள்ளூர பயமே.
சார்...” என்றாள் மெதுவாக.
அதைக்கேட்டு பெருமூச்சுவிட்டபடி மதுரா நான் உங்களிடம் கொஞ்சம் தனிமையில் பேச வேண்டும்... எங்கே சந்திக்கலாம் என்று நீங்களே கூறுங்கள் என்றான்.
வீட்டுக்கு வாங்களேன் என்றாள் மெல்ல.
சரி அரை மணியில் அங்கே இருப்பேன் என்று வைத்துவிட்டான்.

எதுக்கு என்ன பேசவேண்டி வருகிறான்.... வேறென்ன, என் குழந்தையை சந்திக்காதே விலகி இரு எல்லோருக்கும் கஷ்டம் என்பான். இன்னும் எத்தனை முறை இதைக்கேட்பது. என் மனம் ரணமாகிறது என்பதை அவனுக்கு யார் புரிய வைப்பது என்று பெருமூச்சுவிட்டாள். வீட்டு வேலைகளை முடித்து அப்போதுதான் குளித்தாள். ரெடியாகி அமர்ந்தாள்.
சொன்னபடி வந்தான். பக்கத்து சோபாவில் அமர்ந்து அவளை நேராக முகம் பார்த்து பேச ஆரம்பித்தான்.
மதுரா நான் நிறைய பேசணும்... நடுவில ஒண்ணும் சொல்லாதே... முழவதும் கேட்டபிறகு என்னத் தோணுதோ அதைச்சொல்லு என்றான் பீடிகையாக. அவள் மௌனமாக கேட்டுக்கொண்டாள்.

அத்யாயம் இருபத்தி ஒன்று

நான் எங்கப்பா அம்மாவிற்கு ஒரே பிள்ளை. செல்லமாக பிரியமா வளர்க்கப்பட்டேன். பொறி இயல் கல்லூரி முடித்து மேலே எம் எஸ் பண்ண பாரின் போனேன். அப்பா தான் இந்த தொழிலை ஆரம்பித்து நடத்தி வந்தார். ரொம்பச் சின்னதா ஆரம்பித்த இந்தக் கம்பனி இப்போது எவ்வளவு பெரிதாக புகழோடு விளங்குதுனு உனக்கு நான் சொல்லித்தெரிய வேண்டாம். அவருடன் கூடவே வளர்ந்ததால் படிப்பு முடிந்து வந்து அவரோடு கைகோர்த்து இதை எடுத்து நடத்தவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு அப்போதே இருந்தது.

எம் எஸ் முடிச்சு நான் அப்போதான் இந்தியா வந்தேன்.
அப்பா தொழில்ல இறங்கும் முன் மனசுக்கு பிடிச்சாப்போல சில நாள் சுற்றுலா சென்றுவா புத்துணற்சியோடு திரும்பிவந்து பொறுப்ப ஏத்துக்க என்றார்.
நானும் பார்த்தியும் கூட இரு நண்பர்களுமா போய் சுத்தீட்டு வந்தோம். வந்த உடனே எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்பாக்கு உடம்பு சரி இல்லை. லங் இன்பெக்ஷன். அவரது நுரை ஈரல் முழுவதுமாக பாதிக்கப்பட்டிருந்தது. மருத்துவமனையில் இருந்தார்.
எத்தனையோ நற்குணங்கள் இருந்தவரிடம் மாற்ற முடியாத ஒரு கெட்ட பழக்கம் இருந்தது, அதுதான் புகைப் பிடிப்பது. அது கடைசியில் அவர் உயிரையே வாங்கிவிட்டது. நான் வந்து மூன்றாவது நாள் நிலைமை மோசமாகி அவர் இறந்துவிட்டார்.

கம்பனி பற்றி ஒன்றுமே தெரியாத நிலை. என்ன நடக்கிறது, லாப நஷ்டம் எப்படி... என்ன ஆர்டர் விவரம் என்று கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல உணர்ந்தேன். அப்பா எப்போதுமே என் உயிர் தோழன், அவரை இழந்த துக்கத்தை கூட நான் உட்கார்ந்து அழுது தீர்த்துக் கொள்ள முடியவில்லை... அங்கே அம்மா வீட்டில் தனியாக தானே அழுது புலம்பி சாப்பிடாமல் தூங்காமல். நான் வீட்டை கவனிப்பேனா கம்பனியை கவனிப்பேனா என அலைபாய்ந்தேன்... முடிந்தமட்டும் அம்மாவோடு இருந்து தேற்றினேன்... சித்தி பதிமூன்று நாளும் கூட இருந்தார் தான். ஆனால் அவரவருக்கு அவரவரது வீடும் வாழ்வும் உள்ளதே. கிளம்பிவிட்டனர்.

அப்போது என் தாயின் ஒன்றுவிட்ட சகோதரர் மாணிக்கம் மாமா வந்து போய்கொண்டிருந்தார்
... அம்மாவிற்கு பெரும் ஆதரவாக இருந்தனர் மாமாவும் மாமியும்... எனக்கும் அது கொஞ்சம் நிம்மதியை கொடுத்தது... என்ன பேசினார்களோ தெரியாது, இரண்டு மாதங்கள் கழித்து ஒரு நாள் நான் மாலை கம்பனியிலிருந்து திரும்பியபோது மாமா மாமி அங்கே இருந்தனர்.
அப்பா தம்பி, அக்காவிடம் ஒரு சங்கதி சொல்லி இருக்கேன்... மறுக்காம ஒப்புக்கணும்... உங்கம்மா இருக்கும் நிலையில இதுதான் உசிதம்... யோசிச்சு முடிவு பண்ணு தம்பி என்றுமட்டும் கூறிவிட்டு சென்றுவிட்டார்.
அசலேஅங்கே கம்பனியில் மண்டை காய்ந்தது. கணக்கு வழக்கு ஆர்டர் நிலவரம் அதற்கேற்ப பொருள் நிலவரம் என்று எதைப் பார்ப்பது எதை விடுப்பது என்றிருக்க இது என்ன புது குழப்பம் என்றே தோன்றியது எனக்கு

அன்று இரவு உண்டு முடித்ததும் அம்மா மெல்ல பேச்சை ஆரம்பித்தார்.
ரொம்ப நிறைய வேலையா வித்யா?” என்றார்.
ஆமாமா எங்க ஆரம்பிக்கறதுன்னே தெரியல...” என்றேன்.
எனக்கும்தான் மனசு ஆற மாட்டேங்குது கண்ணு என்று அழுதார்.
அவரை என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் அணைத்தபடி அமர்ந்தேன்.
என் தோளில் தலை வைத்து நான் சொல்வத கோபப்படாம கேளு கண்ணுஎன்றார்.

மாமா தன் ஒரே பொண்ணு ரேணுகாவ உனக்கு கட்டிக்குடுக்க ஆசைப்படறார்... அப்பறமா செய்யலாம்தான், ஆனா பாரு அப்பா போய் சில மாதங்களிலேயே செய்துட்டா பலன் புண்ணியம் எல்லாம் அவரைப் போய் சேருமாம்... எனக்கும் இங்கே ஆதரவுன்னு யாருமில்லை... நீயும் கம்பனிய கவனிக்கனு காலையில போய் இரவுதான் வற... நான் தனியே உட்கார்ந்து அழுது புலம்பி தேறின்னு பயமா இருக்குதுப்பா... கொஞ்சம் தயவுபண்ணி இதுக்கு ஒதுக்கப்பா... இன்னும் ரெண்டு மாதத்துல கல்யாணம் பண்ணீடலாம்னு முடிவு பண்ணி இருக்கோம் டா கண்ணு... நீயும் கூடத்தான் ரேணுவ பாத்திருக்கியே அங்கே இங்கே நம்ம குடும்ப விசெஷங்கள்ள என்றார்.

எனக்கு தூக்கிவாரி போட்டது
.
என்னமா சொல்றே, புரிஞ்சுதான் பேசறியா... நான் இருக்கும் நிலை என்ன... எனக்கு இப்போதான் இருபத்தி ஐந்து வயசாகுது... கம்பனியும் வீடும் திணறிகிட்டு இருக்கும் இந்த நிலையில எனக்கு திருமணமா, என்ன உளறல் இது... மாமாவிற்கு புத்தி ஏன் இப்படி போகுது என்று இரைந்தேன்.

அம்மா தொடர்ந்து புலம்பினார். “ஆமா, இருக்குதான் எல்லா பொறுப்பும் உன் தலையில இருக்குதான்... அதுக்காக என்ன பண்றது... உனக்குன்னு ஒருத்தி வந்தா அதுவும் நம்மள நல்லா தெரிஞ்சவளா வந்தா எனக்கும் வீட்டுல ஒரு நல்ல துணை ஆச்சு... என்னையும் கவனிச்சுப்பா. உன்னையும் கவனிச்சுப்பா... நீ அலுத்து களைத்து வரையில உனக்கும் நேரம் பார்த்து வயத்துக்கு குடுத்து  நல்லா கவனிக்க ஒருத்தி இருக்கறது நல்லது... எனக்கு வயசாச்சு சரியா கவனிக்க முடியல... என் சோகத்துல நான் உன்னை கவனிக்காம விட்டுட்டேன்... பாரு எப்படி இளைச்சுட்டே என்றார்.

பலவிதமாகவும் அழுது புலம்பி மன்றாடி அவனிடம் சம்மதம் வாங்கினார் பார்வதி
.
சரி நமக்காக இல்லாவிடினும் அம்மா சொல்வதுபோல அவரை கவனிக்க வீட்டில் ஒருத்தி அதுவும் தெரிந்தவளாக இருந்தால், தான் நிம்மதியாக தன் வேலையை பார்க்கலாமே என்று சரி என்றேன்... அப்போதுவரை எனது திருமணம் குறித்து ஒரு கனவும் கூட காணாதவன் கண் மூடி திறப்பதற்குள் ரேணுகாவின் கழுத்தில் தாலி கட்டி முடித்தேன்.

அத்யாயம் இருபத்தி இரண்டு
மணவறையில் அமர்ந்திருந்தபோதுதான் பல வருடங்களுக்கு பின் ரேணுவை ஆழ்ந்து பார்த்தேன். அவளை நான் முன்பு பார்த்தபோது கல்லூரிப் பருவம்... இப்போது வளர்ந்திருந்தாள்... ஆயினும் அவள் முகம் குனிந்த வண்ணமே இருந்தது... மருந்துக்கும் ஒரு சின்ன சிரிப்பில்லை... புது பெண்ணிற்குண்டான நாணமோ மலர்ச்சியோ இல்லை... ஒருவேளை அவளுக்கு இந்த திருமணத்தில் இஷ்டம் இல்லையோ என்று எண்ணினேன்... அதை அவளிடம் கேட்கவும் செய்தேன்.
பேருக்கு ஒரு புன்னகை செய்துவிட்டு அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லையே அத்தான் என்று மீண்டும் குனிந்துகொண்டாள். சரி கல்யாணக்கவலை போலும் என்று விட்டுவிட்டேன்.

மணம் முடிந்து அவள் இங்கே வந்து குடித்தனம் செய்ய ஆரம்பிக்க, நான், அவள் இருக்கிறாள் வீட்டில் அம்மாவிற்கு என்ற நிம்மதியோடு கம்பனி வேலையில் மூழ்கினேன்
.
அம்மாவிடம் ஆசையாக இல்லாவிடினும் அன்பாக மரியாதையாக பழகினாள்... அவரை கவனித்து நேரத்திற்கு சாப்பாடு மருந்து கொடுத்தாள். ஆயினும் உட்கார்ந்து அரட்டை அடிப்பதோ, சகஜமாக சிரித்து பேசுவதோ இல்லை. “புதுசு இல்ல அதான் தயக்கம் என்று எண்ணிக்கொண்டோம்.

என்னிடமும் அப்படியே இருந்தாள்
. என் தேவைகளை கவனித்து செய்தாள். சமைத்து பரிமாறினாள். ஆனால் அன்பாக வெட்கமாக கூட ஒரு பார்வை இல்லை... அதற்காக நான் நெருங்கும்போது என்னோடு இணையாமலும் இல்லை... ஆயினும் அதில் ஒரு ஒன்றல் இல்லை... ஏதோ மெஷின் போல இருந்தாள். ஒட்டி உராவாடியதோ மலர்ச்சியோடு இணைந்ததோ அல்லாமல் மரகட்டையாகக் கிடந்தாள். எனக்கு வெறுத்துவிட்டது. உறவாடுவதை விட்டுவிட்டேன்.

இவளுக்கு என்னதான் பிரச்சினை என்று எண்ணி அவளிடம் கேட்டதில் பதில் இல்லை.”
ஒன்றுமில்லையே அத்தான் என்ற பதிலே எப்போதும் ரெடியாக வந்தது. அதற்குமேல் கிளற எனக்கு பொறுமையும் இல்லை நேரமும் இல்லை.
என் வேலை பளுவின் காரணமாக மூன்று மாதம் கழித்துதான் மறுவீடு சென்றோம். அன்று சடங்குகள் முடித்து அங்கிருந்தே வலுக்கட்டாயமாக தேன் நிலவுக்கு அனுப்பி வைத்தார் மாமா. சரி என்று அழைத்துச் சென்றேன். ஊட்டிக்குச் சென்று சுத்தி பார்த்து களைத்து எங்களது அறையில் ஒய்வெடுத்தோம். அன்று மட்டுமே கொஞ்சம் மலர்ச்சியோடு இருந்தாளோ என்ற சந்தேகம் தோன்றும் அளவு கொஞ்சமே கொஞ்சம் உற்சாகமாக இருந்தாள் ரேணு. அன்றிரவு கூடலும் இழைந்து பரவசமானதாக இருந்தது. சரி கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறாள் என்று தோன்றியது.

பின்னோடு அவள் உண்டானாள். என்னிடம் விஷயத்தைச் சொன்னவள்
கோபிக்காதீங்க அத்தான், இது இப்போ வேணுமா கலைச்சுடலாமே, இவ்வளவு சீக்கிரம் குழந்தை வேண்டாமே நமக்கு?” என்றாள். அவளை அருகில் அமர்த்தி பாரு ரேணு நாமளா ஒண்ணுமே ப்ளான் பண்ணலை... இது ஏதோ தானே அப்படி அமைந்துவிட்டது... முந்தியே ப்ளான் பண்ணி வேண்டாம்னு வைக்கணும்னு நீ சொல்லியிருந்தா நானும் கட்டாயமா சரின்னு சொல்லி இருப்பேன்... எப்போ நீ உண்டாயிட்டேனு தெரிஞ்சுதோ அதை கலைப்பது மகா பாவம் ரேணு... அது எனக்கு பிடிக்கலைமா... புரிஞ்சுக்கோ... இது ஒண்ணு நல்லபடியா பிறக்கட்டும்... பின்னாடி என்ன வேணுமோ வேண்டாமோ நீயே ப்ளான் பண்ணு.. அதுக்கு நானும் ஒத்துழைப்பேன் என்று புத்தி கூறினேன். மனதில்லாமல் சரி என்றாள்.


குழந்தைக்கென தனி  சிரத்தை எதுவுமே எடுத்துக்கொள்ளாமல் யாருக்கு வந்த விருந்தோ எனவே இருந்தாள்
... அப்படியே பெரிய ஈடுபாடோ சந்தோஷமோ இல்லாமலே சீமந்தம் வளைகாப்பு எல்லாம் நடந்தது... எனக்கு இருக்கும் வேலை பளுவிலும் அவ்வபோது சீக்கிரம் வந்து நடக்க அழைத்துச் சென்றேன்... நிறைய பழங்கள் பிடித்த பண்டங்கள் என வாங்கிக் குவித்தான்.
பார்த்தி கூட என்னடா இருபத்தி ஐந்தில கல்யாணம் இருபத்தி ஆறுல குழந்தையா?” என்று கிண்டல் செய்தான். நானும் அதை சிரித்தபடி ஏற்றுக்கொண்டேன். கல்யாணம் என்பதில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் ஒத்துக்கொண்டாலும், எனக்கு ஒரு குழந்தை பிறக்கப் போகிறது என்பது என்னை மிகவும் சந்தோஷிக்க வைத்து.

சீமந்தம் முடித்து ரேணுவை அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்
. என்னால இரு முறை மட்டுமே போய் காண முடிந்தது. அப்போதும் கூட ஒரு விலகலோடவே இருந்தாள். நல்லபடி குழந்தை பிறக்க அம்மாவோடு பறந்துபோய் பார்த்தேன். அவளை நான் கண்டபோதும் எந்தவிதமான சந்தோஷமோ பெருமிதமோ அவள் முகத்தில் நான் காணவில்லை.
சின்னஞ்சிறு சிசுவாக பவித்ராவை முதன் முதலில் என் கையில் ஏந்தியபோது உணர்ந்த அந்தப் பரவசம் என்னால் இன்னமும் மறக்க முடியவில்லை.

இரண்டு மாதம் முடிந்து அவளை இங்கே கொண்டுவிட்டனர். நான் கண்டவரையில் பவியை அவள் என்றுமே ஆசையோடு தூக்கவும் இல்லை கொஞ்சவும் இல்லை. இரண்டு மாத சிசுவிற்கே தன் பால் குடுக்காமல் பாட்டிலில் தான் போட்டினாள்.
நான் ஏன் எனக் கேட்க அவ்ளோதான் என்னால முடியுது என்றாள். சரி ஒருவேளை அதுவே நிஜமோ என்று எண்ணி பேசாமலிருந்தேன். குழந்தையை சீராட்டி பாராட்டி வளர்ப்பதில் கொஞ்சமும் அவளுக்கு ஆர்வம் இருக்கவில்லை.

நாள்பொழுதில் அம்மாவிடமும் இரவில் என்னிடமுமே பவி பெரும்பொழுது இருந்தாள்
.
அந்நேரத்தில் நான் கவனித்த இன்னொரு விஷயம் என்னவென்றால் என்னிடம் முன்பிருந்த ஒரு ஸ்நேகபாவமும் இப்போது குறைந்திருந்தது. சரி குழந்தை பிறந்த களைப்பு என்று நான் அவள் பக்கமே போகவில்லை. எந்தவிதமான தொந்தரவும் செய்யவில்லை. என் வேலைகள் அனைத்தையும் கூட நானே செய்துகொண்டேன்.

அந்த நேரத்தில் தான் விதி விளையாடியதோ அவள் புத்திதான் கெட்டதோ தெரியாது. ஒரு நாள் நான் அலுவலகத்திற்கு கிளம்பியபின் அம்மாவிடம் ரேணு தனது நெருங்கிய தோழி ஒருத்தி துபாயிலிருந்து சென்னை வந்திருப்பதாகவும், அவளைப் போய் கண்டுவிட்டு சிறிது நேரம் அவளோடு கழித்துவிட்டு வந்துவிடுவதாகவும் கூறி பவித்ராவை ஒப்படைத்துவிட்டுச் சென்றாளாம்.

மாலை நான் வரும்வரையிலும் கூட அவள் வந்திருக்கவில்லை. எனக்கும் சிறிது கவலை ஆகியது. அவளது மொபைல் உபயோகத்தில் இல்லை என வந்தது... நான் தாமதிக்காமல் அவளது பெற்றோரை தொடர்புகொண்டேன்... அவர்களுக்கும் கலக்கம்... ஒண்ணும் தெரிந்திருக்கவில்லை.
உடனே புறப்பட்டு இங்கு வரச்சொன்னேன். அம்மா பவியோடு ஒண்டியாக திண்டாடிக்கொண்டிருந்தார்.

மாமா மாமி வர, நான் அவர்களை தனிமையில் அதட்டி மிரட்டி கேட்க அப்போதுதான் மெல்ல வாய் திறந்தார் மாமா
இல்ல மாப்பிள்ளை, அவளுக்கு கல்லூரி காலத்துல ஒரு பையனோடு சிநேகிதம் இருந்தது... ஏதோ சிறுபிள்ளைத்தனம் என்றுதான் கண்டிச்சு வைத்தோம்... அவனைத்தான் பண்ணிப்பேன்னு நின்னா... நான் கூப்பிட்டு பேசினேன்... அவன் ஒரு ரோக்... அவனிடம் வேலையும் இல்லை நல்ல குடும்பத்தை சேர்ந்தவனும் இல்லை... அதனால அவன கட் பண்ணிவிட எண்ணி இத்தனை வசதியோடு வாழ்ந்தவ என் பொண்ணு அதுகேற்றார்ப்போல சம்பாதித்துக் கொண்டு வந்தா அவளை உனக்குக் கட்டிக்கொடுக்கிறேன்னு சொல்லி பயமுறுத்தி மிரட்டி அனுப்பீட்டேன்... அவன் போனவன் போனவன்தான்... ஒரு வருடமும் ஆயிடுச்சு... அவனும் வரலை... நம்ம வீட்டிலும் மச்சான் போய்ட்டாரு எங்கக்கா தனியா அவதி படுவதை பார்த்து சட்டுபுட்டுன்னு உங்களுக்கு அவள மிரட்டி சம்மதிக்க வைத்து கட்டி குடுத்துட்டேன். என்ன மன்னிச்சுடுங்க மாப்பிள்ளை.

சமீப காலமா அந்தப் பய ஊருக்குள்ள வந்திருக்கறதா நானும் கேள்விப்பட்டேன்
. இவளுக்குத்தான் மணமாயிடுச்சே திருந்தி இருப்பான்னு நினைச்சேன்... இப்படி என் தலையில கல்லைத் தூக்கிப் போடுவான்னு நான் எதிர்பார்க்கலை... இப்போ எனக்கே பயமாத்தான் இருக்கு... என்ன பண்றது என்று கையை பிசைந்தார். மாமி வாய் பொத்தி அழுதார்.

நான் திகைத்துப்போய் அப்படியே நின்றேன்
.
பின்னோடு எனது அறைக்குபோய் என் நண்பன் போலீஸ்ல இருக்கான் அவன் நம்பரை எடுத்தேன். அப்போதான் பார்த்தேன் ரேணுகா எனக்கு ஒரு கடித உரை வைத்திருந்தாள்.

அத்தான், நீங்க ரொம்ப நல்லவங்க... அத்தையும் ரொம்பவே நல்லவங்க... உங்களுக்கு துரோகம் செய்யவேண்டிய நிலைக்கு நான் தள்ளப்பட்டது எனது துர்பாக்கியம். நான் கிஷோர் மீது ஆசை வைத்தேன். அப்பா ஒத்துக்கொள்ளவில்லை. அவரை மிரட்டி அனுப்பிவிட்டார். கிஷோருக்கு ரோஷம் வந்து பிழைப்புதேடி துபாய் சென்றாராம். அது எனக்கு சொல்லப்படவில்லை. அவரை ஊரிலேயே காணமல் வேறு வழி இன்றி உங்களை மணக்க சம்மதித்தேன்... ஆயினும் மனம் ஒன்றி வாழ முடியவில்லை. உங்களின் நல்ல மனதை நான் கொன்றுவிட்டேன்.

பிரசவத்திற்கென நான் தாய்வீடு சென்றிருந்தபோது கோவில் அருகில் வைத்து மீண்டும் கிஷோரை சந்தித்தேன்
. நடந்தவற்றை சொல்லி அழுதேன். அவர் புரிந்துகொண்டார். என்னால் அவரை மறக்க முடியாததுபோல் அவரும் என்னை மறந்திருக்கவில்லை. குழந்தையுடனோ தனியாகவோ எப்படி வந்தாலும் என்னை ஏற்றுக்கொள்வதாகக் கூப்பிட்டார். குழந்தை மேல் நீங்கள் வைத்துள்ள பற்று நான் அறிவேன். அதனால்தான் பிறந்ததிலிருந்து பவித்ராவின் மீது நான் பற்று வைக்கவில்லை. அதன் காரணமாகவே அவளை உங்களுக்கே விட்டுச்செல்கிறேன்.
மன்னிப்பு கேட்க எனக்கு அருகதை இல்லை. முடிந்தால் மன்னியுங்கள். இத்துடன் என் கை ஒப்பம் இட்ட பத்திரம் வைத்துள்ளேன். அதில் எப்படி என்ன வேண்டுமானாலும் எழுதி நமது விவாகரத்திற்கு நீங்கள் உபயோகப் படுத்திக்கொள்ளுங்கள். நான் கிஷோரோடு துபாய் செல்கிறேன்.
மன்னிப்புடன் ரேணுகா என்றிருந்தது அந்தக் கடிதம்.

அதன்பிறகு எந்த போலீசிடமும் செல்லவேண்டிய அவசியம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை
. நாலுபேருக்கு பதில் சொல்ல வேண்டி வந்தது. ஊர் சிரித்தது. கம்பனியில் எல்லோருக்கும் அரசல் புரசலாக தெரிந்தது. நான் யாரிடமும் மறைக்கவும் இல்லை வலியப்போய் கூறவும் இல்லை.

ஒரு வாரம் வீட்டில் இருந்து அம்மாவையும் குழந்தையும் பார்த்துதேற்றி
, பின் காமு ஆண்ட்டியை அம்மாவின் துணையாக முழு பொழுதும் வீட்டோடு இங்கேயே வாழவைத்தேன். நான் ஆபீஸ் செல்லத் துடங்கினேன்.
மெல்ல மெல்ல எனக்கு ஏற்பட்ட இந்த அவமானத்தை மறக்க முயன்றேன். ஒட்டுமொத்தமாக பெண்களின் மீது ஒருவிதமான வெறுப்பும் அசூயையும் ஏற்பட்டது.
எந்தப் பெண்ணை பார்த்தாலும் சீ என்று தோன்றியது.
குழந்தை முகத்தை கண்டு நிம்மதி அடைந்தேன். அவள் வளர வளர அம்மாவின் கஷ்டங்களும் பெருகின. சின்னக் குழந்தையை மேய்க்க அம்மாவால் முடியாத வயது, ஆரோக்கியம்”.
அப்போது நீ வந்தாய் வேலைக்கென
தொடரும்...


No comments:

Post a Comment