Saturday 11 March 2017

பாகம் 6 
பின்தாலி முடியவேண்டிய பார்த்தியின்  ஒன்றுவிட்ட சகோதரி மாசமாய் இருந்து வர முடியவில்லை என்ற செய்தி வந்தது
முதல் நாள் தொட்டு மதுவை கவனித்து வந்த பார்த்தியின் தாய், அவளின் பண்பும் சுறுசுறுப்பும் மிக பிடித்து போய், அம்மாடீ மதுரா நீயே போட்டுடு கண்ணு என்றார்
நானா!?” என்றாள் ஆச்சர்யமாக.
ஏம்மா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் நீ செய்வியா?” என்று கேட்க சரி என தலை ஆட்டினாள். அதைக்கண்டு வசு பார்த்தி எல்லோருக்குமே ஆனந்தம்தான்.

நல்ல நேரத்தில் பார்த்தி வசுவின் கழுத்தில் தாலி கட்ட மதுரா பின்தாலி முடிந்தாள்
. பின்னோடு புது தம்பதிகள் அக்னியை வலம்வர
அம்மாடி நீதானே நாத்தனார், விளக்கெடுத்துண்டு அவாளுக்கு முன்னாடி நடமா என்றார் ஐயர்.
விளக்கை கையில் ஏந்தி அணையாமல் அடைகாத்தபடி மதுரா முன்னே நடக்க அவள் பின்னே தம்பதிகள் அக்னி வலம் வந்தனர் . அந்த நேரத்தில் விளக்கின் சுடர் முகத்தில் ஒளிர அழகிய ஓவியப்பாவையாக நடந்துவந்த மதுவைக் கண்டு வித்யாவினால் தாங்கமுடியாமல் தன் காமிராவில் அவளை அந்த போஸில் படம் எடுத்துக்கொண்டான். நிறைய காமிராக்கள் மினுங்கின. எல்லோரும் தம்பதிகளை எடுத்தனர், வித்யாவிற்கு தன் திருட்டுத்தனத்தை நினைத்து சிரிப்பு வந்தது.

மற்ற சடங்குகள் முடிந்து கொஞ்சம் இலகுவாக இருந்த நேரத்தில் மதுரா இருவரையும் கோட்டா செய்தாள்
.
பாருங்கண்ணா ஒப்படைச்சுட்டோம் எங்க வசுவை பத்திரமா பாத்துக்க வேண்டியது உங்க பொறுப்பு என்றாள்.
ஏம்மா மதுரா நீ என் தங்கை, எனக்கு சப்போர்ட் பண்ணுவேன்னு பாத்தேன் என்றான் ஏக்கமாக பார்த்தி.
அட ஆமா இல்லை, அதானே, பாருடி வசு எங்கண்ணன கண்கலங்காம பாத்துக்க என்று அவளை வாரினாள்.
பாருங்கண்ணா இவள என்று அவள் வித்யாவிடம் புகார் கூற.
டேய் பார்த்தி உனக்குதான் சொல்லணும். என் தங்கை சொக்கதங்கம்டா, அவ கண்ணுல ஒரு சொட்டு கண்ணீர் வந்ததோ பிச்சிடுவேன் என்றான் வித்யா. நால்வரும் சிரித்துக்கொண்டனர். இந்த விளையாட்டு வித்யாவிற்கும் மதுராவிற்கு பிடித்தது. புது தம்பதிகளை கலாட்டா செய்வதுபோல அங்கிருந்து அருகருகே மற்றவரைப் பார்த்துக்கொள்ள முடிந்தது. பேசிக்கொள்ள முடிந்தது என உள்ளூர ஒரு சந்தோஷம்.

இது எல்லாம் என்ன திடீரென நான் இப்படி ஆகிப்போனேன். நான் நேற்றுவரை இருந்த இருப்பென்ன, இவளை இங்கு இப்படி கண்டு நான் இப்படி நெகிழ்வதென்ன என்று உள்ளுக்குள் குழம்பினான். அவன் தெளியும் முன்னே அவளைக்கண்ட கணத்தில் மீண்டும் மயங்கினான். ‘எதுவோ எப்படியோ இந்த கணத்தில் நான் வாழ்கிறேன் என எண்ணிக்கொண்டான்.

பின்னோடு நால்வரும் ஒன்றாகவே சாப்பிடச் சென்றனர்
. ‘அவங்கள ஜோடியா அமர வையுங்க நீங்க இங்க எதிர்ல வந்து ஒக்காருங்க என்றனர் பெரியோர். அப்படியே அவனருகில் அமரவேண்டி வந்தது மதுராவிற்கு. சாப்பாடு மிகவும் இனித்தது என்று சொல்லவும் வேண்டுமா.
சாப்பாடு ஆனதும் தம்பதிகளை பார்த்தியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். மதுவையும் அழைத்துக்கொண்டு போனாள் வசு.
நான் கொஞ்ச ரெஸ்ட் எடுத்துட்டு மாலை நாலுக்கெல்லாம் வரேண்டா பார்த்திஎன்றான் வித்யா. தனக்கென மண்டபம் அருகில் ஒரு ரூம் எடுத்திருந்தான் வித்யா. தனக்கென ஒரு வாடகை காரையும் கையில் வைத்திருந்தான்.

அப்போ நீ வீட்டுக்கு வரலியாடா வித்யா, சரி நீயும் டையர்டா இருப்பே. ஆனா சீக்கிரமா வந்துடுடா என்றனுப்பி வைத்தான்.
வரேன் மா வசு என்று விடைபெற்று மதுராவை பார்த்து தலை அசைத்து விடை பெற்றான். “மாலை பார்க்கலாம் மது என்றான்.
அவள் ஒப்புதலாக தலை அசைத்து அப்படியே நின்றாள். முதன் முறையாக அவனது மது என்ற அழைப்பு என்னவோ செய்தது.
என்ன இது எதேர்ச்சையாக அழைத்தார் அதைப்போய்என்று திட்டிக்கொண்டே வசுவோடு கிளம்பினாள்.
அங்கே போய் பால் பழம் கொடுத்து சடங்குகள் முடித்து மண்டபத்துக்கு வந்த பெண்கள் சிறிது ரெஸ்ட் எடுத்தனர்.

அங்கே தனது ஹோட்டல் அறையில் படுக்கையில் படுத்தபடி வித்யா மதுராவின் விளக்கேந்தும் படத்தை பார்த்தபடி கிடந்தான். அவன் மனம் என்றுமில்லா ஆனந்தமாகவும் இருந்தது. ஏதோ கிடைக்காத ஏக்கமும் மனதை வாட்டியது. என்ன இது நான் இப்படி என்று எண்ணத்தை மாற்றினாலும் மாறாது படுத்தியது.
அது அவன் பாரின் போனபோது வாங்கிய லேட்டஸ்ட் டிஜிடல் காமிரா. உடனே படங்களை பார்க்கக் கூடிய வசதி பெற்றது. அந்த படத்தை பிரிண்ட் செய்து எப்போதும் பார்த்துக்கொள்ள வேண்டும் என மனம் பரபரத்தது. அப்படியே கொஞ்சம் தூங்கி எழுந்தான். பின்னோடு ரெடி ஆகினான்.

அத்யாயம் பதினாறு
டார்க் நேவி ப்ளு பாண்டும் கூட மோவ் எனப்படும் லைட் வயலெட் நிறத்தில் லண்டனில் வாங்கிய சில்க் புஷ் ஷர்ட்டுமாக மிகச் சிறந்த திரைப்பட ஹீரோ போல ஒளிர்ந்தான். ஷர்ட்டை இன் செய்து முடித்து ஆளுயரக் கண்ணாடியில் பார்த்தபோது திருப்தி ஏற்பட்டது. நெகுநெகுவென மின்னும் ஷு அணிந்து கிளம்பினான்.
ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு செல்லுமுன் பார்த்தியின் வீட்டிற்கு போய் அவன் ரெடியா எனப் பார்த்தான். அவனுக்கு சூட் அணிவித்து டை கட்டி அழகுபடுத்தி கூடவே கிளம்பி ஹோட்டலை அடைந்தனர்.

பின்னோடு மதுவும் வசுவும் பெற்றோரோடு வந்து இறங்கினர்
. இருவரும் ஜரிகை மாலை மாற்றிக்கொள்ள அவர்களை அலங்கரித்த நாற்காலியில் அமர வைத்தனர். இப்போது மதுராவை பார்த்த வித்யாவிற்கு நிஜமாகவே தூக்கி வாரி போட்டது. மதுராவும் அவ்வண்ணமே திடுக்கிட்டு பார்த்தது பார்த்தவண்ணம் இருந்தாள்.
காலையில் அவன் பச்சை குர்தாஅணிந்திருந்தான் சரி ஏதோ என்றால் இப்போதும் தன்னைப்போலவே வயலெட் அல்லவா அணிந்திருக்கிறான். இவனுக்கு எப்படி தெரியும் நான் அதே வண்ணம் அணிகிறேன் என்று எனப் பார்த்தாள். அவளது திகைப்பு கண்டு அவன் பளீரென சிரித்தான். அவளுக்கு சிவந்துபோனது. அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.

அவன் பார்வை அவளைத் தொடர்ந்தது
. அந்த வயலெட் வர்க் சாரியில் ஒயிலாக இருந்தாள். தனது முடியை முறுக்கி அழகாக சுருள்சுருளாக கொண்டையிட்டு காதோரத்தில் இரு வெள்ளை ரோஜாக்கள் மாத்திரம் சூடி இருந்தாள். மெல்லிய நீண்ட கழுத்தில் முத்தாரம் உறவாடியது.
காதில் நீண்ட முத்து தொங்கட்டான்கள் கழுத்தில் வந்து உறவாடியது.
வரவேற்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. பெரும்பான்மை பார்த்தியின் வீட்டு சொந்தபந்தங்களே வந்தவண்ணம் இருந்தனர். கொஞ்சம் கூட்டம் குறைந்ததும்

மதுரா போடி அப்போலேர்ந்து இங்கேயே நிற்கற. அங்கே கீழே போய் கொஞ்சம் உட்கார்ந்து ரெஸ்ட் எடு. இனிமே அவ்வளவா கூட்டம் இருக்காது. போய் சாப்பிடு என்றாள் வசு.
உங்களோட சாப்பிடறேண்டி என்றாள் மதுரா.
நாங்க எப்போ சாப்பிடுவோமோ, போடி போய் சுமதி இருந்தா கூட கூட்டி போய் சாப்பிடுஎன்றாள் வசு.
சரி என்று மேடையை விட்டு கீழே இறங்கி வந்தாள். சுமதி எங்கேயும் கண்ணில் படவில்லை என ஒரு டேபிளில் போய் அமர்ந்தாள்.

என்ன இங்க தனியா மது?” என்றபடி அங்கு வந்தான் வித்யா.
வசு தான் கொஞ்சம் ஒக்காந்து ரெஸ்ட் எடு சாப்பிடுனு அனுபிச்சா... அவங்க சாப்பிட நேரமாகுமாம்...” என்றாள் தயங்கியபடி.
அப்போசரி நானும் பார்த்தியோட சாப்பிடலாம்னு தான் வெயிட் பண்ணேன். அவங்களுக்கு லேட் ஆகும்னா நாம போய் சாப்பிடலாம் வா என்று அழைத்தான்.
 
சரி என எழுந்து சென்றாள். இருவருமாக தங்கள் பிளேடை நிறைத்துக்கொண்டு ஒரு ஓரமாக இருந்த டேபிளில் அமர்ந்து மௌனமாகவே சாப்பிட்டனர்.

மதுராவிற்கு அந்த மௌனமும் அவனின் அருகாமையும் மனதுக்கு மகிழ்வை தந்தது
. ‘ஆனா என்ன எதுக்கு நான் எட்டாக்கனிக்கு ஆசைப்படுகிறேன்.... இவனுக்கு தான் பெண்களையே பிடிக்காது... இன்னொரு திருமணம் பற்றி இவன் நினைக்கவேயில்லை. வசுவும் மணமாகி இதோ சென்றுவிடுவாள் இன்று இரவு...’ தானும் தன் தனிமையும் என்று சட்டென கண்கள் நிறைந்தன. தலையை குனிந்து கொண்டாள்.
அவளை கவனித்த வித்யா துணுக்குற்றான். பின் அவளின் நிலை புரிந்தது. மெல்ல தயக்கமாக அவள் இடது கைய்யை பிடித்து ஆதரவாக அமுக்கிகொடுத்தான்.
சியர் அப் மது, இட் ஹாப்பென்ஸ் என்றான். அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
நான் ஒண்ணுமே கூறாமல் இவனுக்கு என் நிலை புரிந்துவிட்டதா, எப்படி என்று ஆர்வமாக பார்த்தாள். பின் மெல்ல புன்னகைத்தாள்.
தட்ஸ் லைக் அ குட கர்ள் என்றான்.
சரி உன் ப்ளான் என்ன?” என்றான்.
இப்போ வசுவ அவங்க வீட்டுக்கு கூட்டிப்போறாங்க... நான் அம்மாவோட போய் அவங்களுக்கு எல்லாம் பாக் செய்து ஒதுக்கி ஹெல்ப் பண்ணீட்டு தூங்குவேன்... நாளை இரவு ரயில் எனக்கு இங்கேர்ந்து சென்னைக்கு... நாளை அம்மா எல்லாம் மதியமே கிளம்பறாங்க மதுரைக்கு... நாள மறுநாள் இவங்க மறுவீட்டுக்கு அங்க போவாங்க இல்லையா, அதுக்கு ஏற்பாடு செய்யணுமே அதுனால... நான் என்ன செய்யறதுன்னு பார்க்கணும்... கோவைக்கு வந்ததில்லை. எங்கயானும் கோவில் போகலாம்னு யோசனை... தனியா போகமுடியாது அதுனால இன்னும் ஒண்ணும் தீர்மானம் பண்ணலை என்றாள் மெதுவான குரலில்.

சரி என்று தானும் யோசனை செய்துகொண்டிருந்தான் தன் மனதிற்குள். பின்னோடு மேடை ஏறிச்சென்று
நான் கிளம்பட்டுமாடா பார்த்தி... நாளைக்கு நீங்க அது இதுன்னு சடங்குல பிசியா இருப்பீங்க... நாளை நைட் நான் கிளம்பறேன் சென்னைக்கு... நாளைக்கு இங்க கொஞ்சம் வேலை இருக்கு அத முடிச்சுட்டு போலாம்னு பார்கறேண்டா என்றான்.

நீ என்னடி ப்ளான்?” என்று கேட்டாள் வசு.
தெரியலடீ என்றாள்.
நீயும்தான் கோவைக்கு வந்ததில்லையே, சுத்தி பாருடீ என்றாள்.
தனியா எப்படிடி போவேன் வசு?” என்றாள் முனகலாக. அதைக்கேட்ட பார்த்தி
ஏன் மதுரா தனியா, இதோ வித்யா அழச்சுட்டு போவான். அவனுக்கு இந்த மொத்த ஏரியாவும் அத்துப்படி... நீயும் நாள இரவு ரயிலுக்குதானே கிளம்பற, அவனோடு ஊர் சுத்திபாத்திட்டு ஒண்ணாவே ரயில் ஏறிடுங்க... நாங்களும் கவலைப்படாம இருப்போம்... யு வில் பி இன் சேப் ஹாண்ட்ஸ் என்றான்.
என்னடா வித்யா நான் சொல்றது, உனக்கு ஓகேவா, இல்ல உனக்கு வேற எதாச்சும் முக்கியமான ப்ளான் இருக்கா?” என்றான் அவனிடம்.
அப்படி எல்லாம் முக்கியமான வேலைன்னு ஒண்ணுமில்லைடா, வந்தோமே சில க்ளையண்ட்ச பார்த்துட்டு போலாம்னு நினைச்சேன் அவ்ளோதான். என்றான்

மதுரா வசுவை தயக்கமாக பார்க்க
, “என்னை ஏண்டீ பார்க்கறே? உனக்கு ஓகே னா போயிட்டு அப்படியே ரயிலேறு... அவர் சொல்றது நல்ல யோசனைதான் என்றாள்.
மதுரா தயக்கமாக, “இல்ல அம்மா...”  என்றாள்.
அதேல்லாம் ஒண்ணும் சொல்லமாட்டாங்க மது... அவங்களும் மதியமே கிளம்பீட்டா நீ தனியா என்ன பண்ணுவே புது ஊரில... இதான் சரி உனக்கு என்றாள் வசு. சரி என்றாள் மதுரா.
வித்யாவிற்கு உள்ளுக்குள்ளே குதூகலம். “நாளை காலையில் வந்து நான் பிக் அப் பண்ணிக்கறேன்... எப்போ வரட்டும்?” என்றான்.
ஒன்பது மணிக்கு கிளம்பலாம்... அதுக்குள்ள நான் அம்மாக்கு தேவையானதை பார்த்து உதவீட்டு ரெடி ஆயிடுவேன் என்றாள் அவனை பார்க்காமலே. சந்தோஷம் இருந்தாலும் இவனோடு தனியாகவா?’ என்று ஒரு குருகுருப்பு உள்ளே நடுக்கியது.
சரி நாளைக் காலை ஒன்பதுக்கு வரேன். வரேன் வசு வரேண்டா பார்த்தி என்றுவிட்டு அவன் காதோடு போய் என்னமோ கூற அவன் போடா என்று கூச்சத்தோடு சிரித்துக்கொண்டான்.

அன்று இரவு இவர்களுக்கு முதல் இரவு இருந்தது
. அதைப்பற்றிதான் பேசி இருப்பார்கள் என்று பெண்களுக்கு புரிந்தது. இருவரும் கூச்சத்தோடு குனிந்துகொண்டனர்.
வித்யா கிளம்பிய பின்னோடு வசுவை அவளது புக்ககத்திற்கு வழி அனுப்பி வைத்தனர். எல்லோர் கண்களும் பனித்தே இருந்தது.
டீ மது அத இத யோசிக்காம சமத்தா இரு... நாங்க சென்னை வந்ததும் ஓடி வந்துடுவேன் ஒன்னப் பார்க்கஎன்றாள் வசு.
காத்திருப்பேண்டீ... என்னைப்பத்தி கவலைப்படாதே வசு... என்ஜாய் யூர் ந்யு லைப் என்று வாழ்த்தி அனுப்பினாள். உள்ளே வெறிச்சென்று இருந்தது
அதன்பின் அம்மாவோடு சென்று எல்லாவற்றையும் பாக் செய்து ஒதுக்கி வைத்து படுத்தனர்.

அத்யாயம் பதினேழு
காலையில் எழுந்து குளித்து மிச்சம் மீதி பாக் செய்து காலை உணவு உண்டுவிட்டு தயாரானாள் மதுரா. மருதாணி சிவப்பில் சந்தேரி காட்டனில் வேலை செய்யப்பட்ட சல்வார் அணிந்து சிம்பிளாகத் தயாரானாள். இரவு அத்தோடு அப்படியே ரயிலேற வசதி என்று எண்ணி அணிந்தாள்.
ஒன்பது மணி அடிக்க வித்யா வந்துவிட்டான். உள்ளே வந்து கற்பகம் வீராசாமியிடம் விடை பெற்றான்.

தம்பி, இதுவும் எங்க பொண்ணுதான்... நாங்க உங்களுக்கு தனியா சொல்லவேண்டாம்... பாத்துக்குங்க, பத்திரமா சென்னைவரை கூட போய் ஊர் சேர்த்திடுங்க... உங்க கிட்ட வேல பாக்குது.. எப்போதும் கொஞ்சம் கவனிச்சுக்குங்க... பிள்ள பாவம் தனியா இருக்குது என்றார் வீராசாமி நா தழுதழுக்க.
நான் பாத்துக்கறேன் அங்கிள் கவலை வேண்டாம் என்றான்.
இதுக்கும் ஒரு நல்லா இடமா பாத்து முடிச்சுடணும் தம்பி... உங்க கவனத்துல யாராச்சும் நல்ல பிள்ளைங்க இருந்தாச் சொல்லுங்க என்றார்.
மதுரா தரையை பார்த்திருந்தாள். வித்யாவிற்கு என்ன சொல்வதென தெரியவில்லை
ஆகட்டும் அங்கிள் என்று போலாமா மது?” என்றான். அவள் கற்பகமிடம் சொல்லிக்கொண்டு இருவரையும் வணங்கிவிட்டு கிளம்பினாள்.
நாங்க வசுவ அங்க குடித்தனம் வைக்க வருவோம் கண்ணு... அப்போ நம்ம வீட்டுக்குதான் வருவோம்.... சரியா கண்ணு நல்லபடி இருந்துக்க. எப்போ வேணுமின்னாலும் கூப்பிடு ராசாத்தி என்றார் கற்பகம் அவளை அணைத்தபடி.

இருவரும் வண்டியில் ஏறிக்கிளம்பி நேராக முதலில் ஈச்சனாரி விநாயகர் கோவிலை அடைந்தனர். போகும் வழி எல்லாம் பச்சை பசேலென கண்ணுக்கும் மனதுக்கும் ரம்மியமாக இருந்தது காட்சிகள். பெரியதோர் விநாயகர் சர்வ அலங்காரத்தோடு காட்சி தந்தார். இருவரும் மனமுருகி வேண்டிவிட்டு வெளியே வந்தனர்.
ஏதானும் சாப்பிட்டியா மது?” என்று கேட்டான்.
ம்ம் ஆச்சு என்றாள்.
வெளியே வந்து இப்போ எங்க?” என்றான்.
எனகென்ன தெரியும் இங்க வேற என்ன இருக்கு பார்க்கனு நீங்களே சொல்லுங்க என்றாள் அவனை பார்த்து.
வெள்ளியங்கிரி சிவன் கோவில் இருக்கு, கோவை குற்றால அருவி இருக்கு, எங்க போலாம்னு நீயே சொல்லு என்றான்.

அவள்
குற்றால அருவி போலாம் என்றாள் சரி என்று அங்கே சென்றனர்.
ஒரு மணி நேரத்தில் அங்கு சென்றடைந்து உள்ளே சென்றனர்.
இங்கே மாலை ஐந்து மணிவரைக்கும்தான் உள்ள வர விடுவாங்க... பாத்துவா என்றான் முன்னே நடந்தபடி. இரு பக்கமும் நெருங்கிய காடாக இருந்த சுற்றுப்புறத்தை பார்த்து ரசித்தபடி சிலுசிலுவென்று காற்று தழுவ மெல்ல நடந்தாள் மதுரா. கரடுமுரடாக இருந்தது பதை. உள்ளே அருவியின் அருகே செல்ல அதைக்கண்டு குழந்தை போல குதூகலித்தாள்.
ஐயோ எவ்வளவு தண்ணி.... நுரை மாதிரி பொங்கி வருது என்று கைதட்டி ரசித்தாள். அவளின் இந்த சந்தோஷத்தைக் கண்டு வித்யாவிற்கு பெரும் மகிழ்ச்சி.  அவளையே பார்த்திருந்தான்.

குளிக்கிறியா மது?” என்றான்.
ஐயோ நான் மாட்டேன்.. எனக்கு அருவில குளிக்க... பயம்.... வேண்டாம் என்றாள். சரி என நிர்பந்தப்படுத்தவில்லை.
சரி இங்கேயே உட்காருவோம் வா என்று ஒரு சிறு பாறைமேல் அமர்ந்தனர். அவள் அருவியைவிட்டு கண் அகட்டவில்லை. சுற்றும் பல பறவைகளின் கீச் கீச் கேட்டுக்கொண்டிருந்தது. மிகவும் ரம்மியமாக இருந்தது. பல நிமிடங்கள் கழித்து கவனம் திரும்பியபோது வித்யா அவளையே பார்த்தபடி கைகளை முழங்காலில் கட்டி அமர்ந்திருப்பதைக் கண்டாள். அவளுக்கு வெட்கமாகியது.
காணாதத கண்ட மாதிரி இருந்துவிட்டேனோ அதுவும் இவன் முன்னால் என்று கூச்சம் ஆகியது.
ரிலாக்ஸ் மது. ஜஸ்ட் என்ஜாய் என்றான்.
நீங்க குளிக்கலையா?” என்று கேட்டாள்.
எனக்கு ஆசைதான். பார்த்தி இங்க மாறி வந்ததிலேர்ந்தே நாங்க இங்க ரெகுலரா வருவோம்தண்ணீல நல்லா ஆட்டம்போட்டுட்டு நல்லா வயிறார சாப்பிட்டு அவன் பெட்ல உருளுவோம் என்றான் சிரித்தபடி.
அப்போ போங்க நீங்க போய் குளிங்க நான் வேணா இங்கேயே ஒக்காந்திருக்கேன் என்றாள்.

தனியா இருப்பியா, இங்கே ஒண்ணும் பயம் கிடையாதுதான்.... இருந்தாலும் இங்கேயே இரு அடையாளமா என்றான் பின் தயங்கியபடி காருக்கு ஓடிச் சென்று தன் பெட்டியில் இருந்து மாற்றுத்துணியும் டவலும் எடுத்துவந்தான். கூடவே கொஞ்சம் ஸ்நாக்ஸ் பொட்டலங்களும் வாங்கி வந்திருந்தான்.
பசிச்சா சாப்பிடு... இப்போ வந்துடறேன் மது என்று அருவியை நோக்கி நடந்தான். மதுரா சுற்றும் பார்த்து ரசித்தபடி அமர்ந்திருந்தாள். அவன் துணி மாற்றிக்கொண்டு அருவியில் இறங்கினான். மிக உற்சாகமாக அவன் குளிப்பதை ஆச்சர்யமாக பார்த்தாள். இது தான் அறிந்த வித்யாவே அல்ல என எண்ணிக்கொண்டாள்.
அங்கிருந்து கை ஆட்டினான். இவளும் தயக்கமாக கை ஆட்டினாள்வெற்று மார்போடு நீண்ட ஷார்ட்ஸ் அணிந்து அவன் குளிப்பதை மேலும் காண வெட்கம் ஏற்பட்டது. வேறே பார்த்தாள்.

சிறிது நேரத்தில் ஆசைதீர குளித்துவிட்டு தன் துணி மாற்றிக்கொண்டு வந்து அமர்ந்தான் வித்யா

ஹப்பா எத்தனை வருஷம் ஆச்சு என்றபடி.
அவன் சுருள் முடி ஈரச்சொட்டுகளுடன் முகத்தின் மீது விழுந்து அவனை மேலும் வசீகரமாக காட்டியது. அதைக்கண்டு மதுரா உள்ளம் கிளர்ந்தாள். ‘சே என்ன இது என்று அடக்கிக் கொண்டு கீழே பார்த்தபடி
தலை இன்னும் சரியா துவட்டலை போல... நீர் கோர்த்துக்கும்.. அப்பறம் மண்டைவலி வந்துடப்போகுது என்றாள் தயக்கமாக மிக மெல்லிய குரலில்.
அவளை ஆச்சர்யமாக பார்த்தான். அவன் மெளனமாக இருக்க தப்பாக எடுத்துக்கொண்டானோ என்று நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.
எங்கம்மாவும் இப்படித்தான் சொல்லுவாங்க, தானே டவலை எடுத்து என் தலை துவட்டி விடுவாங்க என்றான் அவள் முகத்தை கண்டபடி.
அவளுக்கு அதன் அர்த்தம் புரிந்து சிவந்துபோனது. ‘ஆசைதான் என நினைத்துக்கொண்டாள் மனதில்.
அவன் துடைத்தபடி பசிக்குது மது என்றான்.
என்று அவன் வாங்கிவந்திருந்த பொட்டலங்களை பிரித்து வைத்தாள்.
நீயும் சாப்பிடு என்று கூற, இருவருமாக அதை உண்டு முடித்தனர்.
இப்போதைக்கு தாங்கும் சிடிக்குள்ள போய் அன்னபூர்ணாவில் சாப்பிடுவோம்... இங்க ரொம்ப பேமஸ் தெரியுமா என்றான்.
கேள்விப்பட்டிருக்கேன் என்றாள்.

அங்கிருந்து வெளியே வந்து காரில் ஏறி சிட்டிக்குள் வந்தனர்
. அப்போது மாலை மூன்றை நெருங்கிக்கொண்டிருந்தது.
சாப்பிட்டுவிட்டு இன்னும் நேரம் இருக்கு ரயிலுக்கு என்ன செய்யலாம் என்றான். அவளும் யோசித்தாள்
ஸ்டேஷனுக்கு பக்கத்துல யுனிவர்சிட்டில ஒரு போடானிகல் கார்டன் இருக்கு.. அங்க போய் கொஞ்சம் சுத்தி பாப்போம் அங்கிருந்து நேரா ரயிலடிக்கு போய்டலாம் என்றான்.
சரி என்றாள்.

அவளுக்குமே பூக்கள் என்றால் உயிர்
. அவளது குடும்பம் தனி பங்களாவில் வாழ்ந்தபோது மிகப் பெரிய தோட்டம் வைத்திருந்தாள்... அதை அவளே பராமரித்தாள் கூட. இப்போது தான் இருக்கும் அந்த சின்ன ப்ளாடிலும் கூட சில செடிகள் வைத்திருந்தாள். ரோஜா, செம்பருத்தி, துளசி மணி பிளாண்ட் என.அவை அவளின் பிள்ளைகள் போல.

அதனால் கார்டன் என்றதும் அவளுக்கு சந்தோஷமே
. அங்கே சென்று குழந்தை போல அங்கும் இங்கும் திரிந்து சுற்றிப் பார்த்தாள். பெரியதொரு ரோஜாவைக் கண்டு மயங்கிப்போய் அதனை பாதிக்காது முத்தமிட்டாள். மூச்சுக்காற்று அதன்மேல் படாமல் முகர்ந்தாள். அந்தபோசில் அவளை அப்படியே போட்டோ எடுத்துக்கொண்டான் வித்யா அவளறியாமல். அவள் கண்மூடி மலரின் சுகந்தத்தை அனுபவித்திருக்க அவன் படம் பிடித்துவிட்டான். அவள் அப்போதே கண்மலர. அவன் ஒரு சின்ன சிரிப்புடன்

கண்டுகொண்டாளேஎன்று சாரி மது... உன் போஸ் ரொம்பவே நல்லா இருந்துச்சு அதான்என்றான் தயக்கத்தோடு.
இட்ஸ் ஓகேஎன்றாள் அவள் சிவந்தபடி.
மது ரொம்ப சலுகை எடுத்துக்கறேன்னு நினைக்கலைனா நாம ரெண்டு பேரும் இங்க ஒரு போட்டோ எடுத்துக்கலாமா?” என்று கேட்டான். அவள் தயக்கமாக சரி என்று தலை ஆட்டினாள். அவனருகே நிற்க அங்கே இருந்த இன்னொரு டூரிஸ்டிடம் தந்து படம் எடுக்கச் செய்தான். “இன்னும் நெருங்கி நில்லுங்க சார் அணைச்சாப்லஎன்றார் அவர். ஜோடி என்று நினைத்துவிட்டார் அவர். மதுராவிற்குதான் சங்கடமாகியது. அவனை தொடாமல் விலகியே நின்றாள்.
 
படம் எடுத்துக்கொண்டு மெல்ல வாயிலை நோக்கி நடந்தனர். அங்கிருந்து ரயிலடி செல்லும் முன் காரைவிட்டுச் செல்லவேண்டும் என்பதால் கிளம்பிவிட்டனர்.
காரை ஒப்படைத்து அங்கிருந்த ஒரு  கடையில் குழந்தைகளுக்கான பொருட்களைக் கண்டு இருவரும் உள்ளே நுழைந்தனர்.

வித்யா பவிக்கு ஒரு கேம் வாங்க மதுவும் பவிக்கு ஒரு அழகிய டெட்டி பேர் வாங்கினாள்
. பிங்க் கலரில் முசுமுசுவென மிக அழகாக இருந்தது அது.
இவ்வளோ பெரிச எப்படி தூக்கிப்போவே?” என்றான்.
நானா தூக்கப் போறேன் ரயில்ல போகப்போவுது... எல்லாம் பரவாயில்லைஎன்றபடி அடம்பண்ணி வாங்கினாள்.
ஆமா இது நிஜமாவே பவிக்குதானா?” என்று கிண்டினான்
பின்ன?” என்றாள்.
இல்ல ஒருவேள உனக்கோன்னு....” என்று கிண்டலித்தான்.
நாட் அ பாட் ஐடியாஎன்று சிரித்தாள்.
ஆட்டோ எடுத்து ரயிலடிக்கு வந்தனர். ரயிலேறி அவளை அவள் சீட்டில் அமர்த்திவிட்டு அவனது பக்கத்து போகியில் போய் அமர்ந்தான் அவன்.
ஏதானும் தேவைப்பட்ட கூப்பிடு மது. சங்கோஜப்படாதேஎன்று கூறி தண்ணி பாட்டில் வாங்கித் தந்துவிட்டுச் சென்றான்.
சரிஎன்றாள்.

இந்த டெட்டிய உங்ககிட்டையே வெச்சுக்குங்க வித்யா... நாளைக்கு
நான் மறந்தாலும் நீங்களே எடுத்துபோய்டலாம்
என்றாள்.
கடைசீல என் தலையில கட்டிட்டஎன்று சிரித்தபடியே தூக்கிப் போனான்.
சிறிது நேரத்தில் அவளது பெட்டியில் முரட்டுத் தோற்றம் உடைய சில இளைஞர்கள் ஏறி அமர்ந்தனர். அவளை பற்றி ஹிந்தியில் ஏதோ அசிங்கமாக பேச ஆரம்பித்தனர். அவளுக்கு பயமாகியது. அவளுக்கு ஓரளவு ஹிந்தி தெரியும் என் சி சி யில் இருந்தபோது கற்றுக்கொண்டாள்.

இப்போது என்ன செய்வது, பாத்ரூம் போவது போல வித்யாவிடம் சென்று விடலாமா என அவள் குழம்பிய நொடியில்,
மது உன் பெட்டி..” என்றபடி அவன் உள்ளே நுழைந்தான்..
விதூஎன்றபடி ஓடிப்போய் அவனருகில் நின்றுகொண்டாள், அவன் கையையை கெட்டியாக பிடித்தபடி. அவர்களை தன் பார்வையால் அவனுக்குக் காட்டி தன் திகிலை தெரியவைத்தாள்.
உடனே புரிந்து அங்கேயே ஒண்ணாக் கிடைச்சுடுச்சு சீட்...  நீ இங்கே தனியா உட்கார வேண்டாம் வாஎன்று உரிமைபட்டவன் போல நடித்து அவளை அணைத்து பெட்டியையும் எடுத்துக்கொண்டு கூட்டிச்சென்றுவிட்டான்.
அந்த போகி தாண்டி அடுத்த போகியில் டிக்கட் பரிசோதகரைப் பார்த்து
சார் இவங்க எனக்கு வேண்டப்பட்டவங்க... அங்க தனியா சீட் போட்டிருக்கு. சில ரவுடிபசங்க வம்பு பண்றாங்க... என் பக்கத்து சீட் இப்போவரையிலும் காலியாத்தான் இருக்கு. இவங்கள அங்கேயே தங்க வெச்சுக்கறேன் சார்... அந்த சீட்டுக்கு யார் வராங்களோ அவங்கள இவங்க சீட்டுக்கு அனுப்ப முடியுமா ப்ளீஸ்?” என வேண்டிக்கேட்டுக்கொண்டான்.

அவளின் நீர்கோர்த்த கண்களும் பயந்த முகமும் கண்ட அந்த முதிய சிப்பந்தி

சரி சார் நான் அனுப்பிக்கறேன் நீங்க இவங்கள உங்க போகிக்கு கூட்டிகிட்டு போங்கஎன்றார்.
சார் அதுமட்டும் இல்லை, அந்த பொறுக்கிப் பசங்க வேற யாரையும் கூட டிஸ்டர்ப் பண்ணாம பாத்துக்குங்க... ரயில் போலிஸ் இருப்பாங்களே அவங்ககிட்ட லேசா சொல்லி வெச்சு ஒரு கண் வைத்துக்கொள்ளச் சொல்லுங்க சார்என்றான்
கண்டிப்பா சொல்றேன் சார்என்றார் அவர். அவருக்கு நன்றிகூறி நடந்தான்.

அவள் கொஞ்சம் தெளிந்து அவனோடு அங்கு சென்று அமர்ந்தாள். இன்னமும் பயம் விட்டிருக்கவில்லை.
நல்லவேளை நீங்க வந்துட்டீங்க... எப்படி வந்தீங்க வித்யா?” என்றாள்.
அப்போ விது இப்போ வித்யாவா?” என்றான் குறும்பாக. உடனே சிவந்து குனிந்தாள்.
சொல்லுங்களேன்என்றாள்.
நம்ம பெட்டி ஒரே கலர் அதுனால மாறி போயிடுச்சு... நான் இரவு உடை மாற்றலாம்னு திறந்தா திறக்கவே வரலை... அப்போதான் கவனித்தேன் வேறே கம்பனின்னு... அதை எடுத்துகிட்டு அங்க வந்தா நிலைமை அப்படி இருக்கு... பொறுக்கி பசங்க இதுவே பொழப்பா போச்சு ராஸ்கல்ஸ்என்று திட்டி  தீர்த்தான்.
நான் ரொம்ப பயந்துட்டேன் தெரியுமா... என்னைப்பத்தி ஹிந்தில வேண்டாததெல்லாம் பேசினாங்கஎன்றாள்.

உனக்கு ஹிந்தி தெரியுமா?” என்றான்.
ஆம் என்று தலை அசைத்தாள்.
தட்ஸ் குட், எனக்கு கூட ஸ்கூல் வரை ஹிந்தி இருந்தது மூணாவது மொழியா... அதனால மேனேஜ் பண்ணிக்கமுடியும்என்றான். பேசியபடியே நேரம் கடந்தது.
நீ கீழே படுத்துக்க நான் நேர மேலே படுக்கறேன்... ஒண்ணும் பயமில்லை... நிம்மதியா தூங்கு மதுஎன்றான் அவள் முகத்தை ஆசையாக பார்த்தபடி.
அவனது அருகாமையில் பாதுகாப்பாய் உணர்ந்தாள். இருவர் மனதிலும் மற்றவர்பால் அன்பும் ஆசையும் உணர ஆரம்பித்திருக்க, இருவரும் மற்றவரை எண்ணித் தயங்கி பேசாமலிருந்துவிட்டனர். பேசி இருந்தால்....


தொடரும்...

No comments:

Post a Comment