Friday 6 March 2020

MANGALAM MAMI - 5


மங்களம் மாமி - 5
சுபுமுஹூர்த்த பத்திரிகை அடித்து வந்திருந்தது.
நந்தினி weds நாகேந்திரன் எனத் துவங்கி படித்து பார்த்துக் கொண்டிருந்தார் நாராயணன்.
“முதல் பத்திரிகைய சாமிண்ட வெச்சுடலாம். அழைக்கறதுல முதல் பத்திரிகை யாருக்கு?” என கேட்டாள் வேதம்.
“ம்ம்ம் சொல்றேன்” என்றார் யோசனையில் எங்கேயோ மூழ்கியபடி.
“நந்தினி, இங்கே வா கோந்தே” என்று அழைத்தார்
“உன் கையெழுத்துதான் அழகா இருக்கும். பகவான மனசுல வேண்டீண்டு நான் சொல்ற பேரெல்லாம் எழுது” என்றார்.
“சரி பா” என அவளும் பேனாவோடு வந்தமர்ந்தாள்.
“முதல் பத்திரிகை குல தெய்வம்னு எழுது” என்றார்.
“அடுத்தது வைதீஸ்வரன் மங்களம் தம்பதிகள்”
“அதாரது, எனக்கு தெரியாம அத்தன முக்கியபட்டவா, முதல் பத்திரிகை கொடுக்கற அளவுக்கு?” என்று சற்றே அதிர்ந்து கேட்டாள் வேதம். “சொல்றேன்” என்றார் பொறுமையாக
“யாருப்பா இந்த மாமா மாமி?” என்றாள் நந்தினியும்.
அவள் தலையை வாஞ்சையுடன் தடவி கொடுத்தார்.
“அவா தான் கோந்தே உனக்கு, சொல்லப் போனா, நோக்கு உயிர் தந்த தாய்தந்தை” என்றார்.
“என்னது?” என இரு பெண்டிரும் அதிர்ந்தனர்
“என்னப்பா சொல்றேள்?” என அதிர்ச்சியானாள் நந்தினி.
“என்ன ஓளர்றேள்... என்னாச்சு உங்களுக்கு... லக்ஷ்மி அக்கா தானே பெத்த அம்மா, நீங்க அப்பா?” என்றாள் சீறியபடி.
“கொஞ்சம் அமைதியா இரு வேதம்” என்று அடக்கினார்.
தொண்டையை செருமி கொண்டு பேசத் துவங்கினார். மன அலைகளில் பேச்சு எங்கோ லயித்தது திணறியது.
“நேக்கும் லக்ஷ்மிக்கும் கல்யாணம் ஆகி நாங்க ரொம்ப சந்தோஷமா குடித்தனம் பண்ணினோம். ரொம்ப அன்னியோன்னியமான தம்பதினு எல்லாருமே கண் வெச்சா. எங்கம்மா அப்போ என் தங்கை கூட இருந்தா. லக்ஷ்மி பின்னோட உன்னை பிள்ளையாண்டா. கண் போல பார்த்துண்டேன். அம்மாவை அழைச்சுண்டு வந்து கூட வெச்சேன், பெரியவா துணை இருக்கட்டும்னு.
அவுளுக்குன்னு ஒரு அக்கா அண்ணா தான். அவ கடைக்குட்டி. அப்பா அம்மா இல்லை சின்ன வயசிலேயே தவறீட்டா. அண்ணாதான் என்னை அவளுக்கு பார்த்து கல்யாணம் பண்ணி வெச்சார்.
பிரசவ நேரம் கொடி சுத்தீண்டுடுத்துன்னா, ஆபேரஷன் பண்ணிதான் குழந்தைய எடுக்கணும்னு சொன்னா. நான் தவிச்சு போனேன். வெளியே காத்திருந்தேன் உன் அழுகுரல் கேட்டுது சந்தோஷப்பட்டேன்.
பின்னோட நர்ஸ் வந்து உன்னை என் கையில தந்துட்டு இல்லைன்னு சோகமா தலைய அசைச்சுட்டு நடந்துட்டா. நான் திக்பிரமை பிடிச்சு நின்னேன். அந்த நொடியில உன்னை வெறுத்தேன். என் லக்ஷ்மிக்கு நீ எமனா வந்துட்டியேன்னு கோவம் ஆத்திரம். அம்மாதான் சமாதானப்படுத்தினா.
அதன் பின், மனச சமாதானப்படுத்தவே முடியலை என்னால. நாங்க பல காலம் வாழலை... ஜஸ்ட் ரெண்டே வருஷம், ஆனா அப்படி ஒரு மனமொத்த தம்பதியா வாழ்ந்தோம். அவ போனதும் எனக்கு சூனியம் போல ஆயிடுத்து வழக்கை. எதிலேயும்  இன்ட்ரெஸ்ட் இல்லை. சாப்டாம தூங்காம பல நேரம் குளிக்காம ஷேவ் பண்ணாம பராரி மாறி ஆயிட்டேன்.
இருந்த நல்ல வேலைலேர்ந்து என்னை சஸ்பெண்ட் பண்ணினா. அதுவும் எனக்கு ஒரைக்கலை. என்னை டிஸ்மிஸ் பண்ணிட்டானு சொன்னா என்னமோ செட்டில்மென்ட் குடுத்தா. பரப்ரம்மம்னு போய் கையெழுத்து போட்டுட்டு வந்தேன்.
இப்படி ரெண்டு மாசம் போச்சு. அம்மா ஒரு நாள் என்ன பளார்னு நாலு அறைஞ்சா கன்னத்துல.
“என்னடா என்னமோ, நடக்கக்கூடாதது நடந்துடுத்து... ஆனா அதுக்குன்னு இப்படியா, இந்த கொழந்தைக்காகவானும் நீ உன்ன மாத்திக்கணும். கெழவி நான் கெடக்கேன் தள்ளமாட்டாம என்னை பார்க்கணும்னு நோக்கு தோணலை. பச்சை கொழந்தை இதை கவனிக்கலை... என்னடா என்னனு?” திட்டி தீர்த்தாள். விட்ட அறையில கதி கலங்கி போய் துக்கத்திலேர்ந்தும் தூக்கத்திலேர்ந்தும் முழிசாப்ல எழுந்தேன்.
என்னை பார்த்து எனக்கே பிடிக்கலை. லக்ஷ்மிக்கு நான் எப்போதுமே ஷேவ் பண்ணி பளிச்சுன்னு உடுத்தீண்டு ஜம்முனு இருக்கணும்னு ஞாபகம் வந்துது. பரபரன்னு என்னையே சரி பண்ணிண்டேன். பேப்பர் எடுத்து வெச்சு வேற வேலை தேடினேன்.
அம்மா பாவம் ஆர்த்ரைடிஸ்ல அவதி பட்டுண்டு இருந்தா உன்னை தூக்க கூட அம்மாக்கு முடியாது.
நான் எத்தனையோ உன்னை வெறுத்தாலும் நீ என் மார்பிலேயே தான் ஒன்டிண்டிருப்பே. அங்கேயே தான் தூக்கம் வெளையாட்டு எல்லாமே. ராத்திரி என் கூட தான் தூக்கம். உருண்டு விழாம இருக்கணும்னு என்னோட சேர்த்து லக்ஷ்மி புடவையால உன்னை என்னோட  கட்டிண்டு படுப்பேன்.
பம்பாயில ஒரு கம்பெனிக்கு அப்ளை பண்ணினேன். ரயில் சார்ஜ் குடுத்து இண்டர்வ்யுகு அழைச்சா... நல்ல கம்பெனி. நானும் போய் பார்க்கலாம்னு கெளம்பினேன்.
ஒன்ன என்ன பண்றது, அம்மாக்கு முடியாது. சரின்னு துணிஞ்சு உனக்கும் எனக்கும் எல்லாம் பாக் பண்நீண்டு ரயில்ல கெளம்பினேன்.
அப்போ மெட்ராஸ்லேர்ந்து பம்பாய்கு மெயில்ல ரெண்டரை நாள் ஆகும்.
போறச்சே ரெண்டாங் கிளாஸ் டிக்கட் எடுத்துட்டு படாத பாடு பட்டேன் ஒன்னோட. தவிச்சு திண்டாடி பம்பாய் போய் சேர்ந்தேன். இண்டர்வ்யுகு உன்னையும் தூக்கீண்டு போனேன். உள்ளேயும் தான்... அவா அசந்து போனா.
“என்ன இது நீங்க இப்படி?” என ஆங்கிலத்தில் கேட்டா. நான் உள்ளதை சொன்னேன்.
“ஓ சோ சாட்... எப்படி வேலை செய்வீங்கனு?” கேட்டா.
கண்டிப்பா ஏதனும் ஏற்பாடு பண்ணிடுவேன்னு சொன்னேன்.
வேலை சம்பந்தப்பட்ட கேள்விகள் நுணுக்கமானவை நெறைய கேட்டா. டான் டான் நு பதில் சொன்னேன்.
“உங்க படிப்பு திறமை அனுபவம் எல்லாம் எங்களுக்கு ஓகே.  ஆனா கொழந்தைய என்ன பண்ணப் போறீங்கன்னு யோசிச்சுக்குங்க... அது ஓகே நா எங்களுக்கு உங்கள வேலைக்கு அமர்த்திப்பதில எந்த ப்ராபளமும் இல்லை” நு சொன்னா.
“கண்டிப்பா நான் செய்யறேன்னு சொன்னேன். வேலை சென்னை ஆபீஸ்ல நு சொன்னா. எனக்கு இன்னமும் கொஞ்சம் நிம்மதி ஆச்சு. பாஷை தெரியாம ஒன்னோட பம்பாயில எப்படீன்னு எனக்கு ரொம்ப பயம்தான் உள்ளூர.
சம்மதம் சொல்லீட்டு ஒரு வாரத்தில ஜாயின் பண்ண ஆர்டர கையிலேயே வாங்கீண்டு மீண்டும் ரயில். இந்த முறை அவ குடுத்ததோட கொஞ்சம் காசு போட்டு முதல் வகுப்பு டிக்கெட் எடுத்துண்டேன்.
நாலு பேர் கொண்ட கூபே
உனக்கு flask நெறைய வெந்நீர் வாங்கீண்டேன் பால் பவுடர் டப்பா இருந்துது கையில. கை துணி உனக்கு மாத்துதுணி எல்லாம்
வண்டியில ஏறி அமர்ந்து எதிர்ல பார்த்தேன் ஒரு தம்பதி, கிட்டத்தட்ட என் வயது கொஞ்சம் மேல. அவளுக்கும் கை கொழந்தை நாலஞ்சு மாசம் இருக்கும். அவர் அந்த கொழந்தைக்கு மேல் பெர்த் ஹூக் ல பழைய பொடவைய கட்டி அழகா தூளி செட் பண்ணிட்டார்.
‘அடா, பேசமா நாமும் இப்படி பொடவை கொண்டு வந்திருக்கலாம்னு’ அப்போ தோணித்து. ஒன்ன பார்த்து அவா ஸ்நேஹமா சிரிச்சா எத்தனை மாசம் என்ன கொழந்தே என்ன பேர் நு கேட்டா சொன்னேன்.
“தனியாவா... உங்க ஆத்துக்காரின்னு...?” டவுட் இழுத்தார் அவர்.
சுருக்கமா சொன்னேன். “ஐயோ” னா அந்த மாமி.
“தாயில்லா கொழந்தையோட ட்ரெயின்ல மூணு நாள் எப்படி சமாளிப்பேள் னு?” கேட்டார்.
“வரும்போதே பாடுதான். அதான் இப்போ முதல் கிளாஸ் போட்டேன்னு” சொன்னேன்.
மத்தியானம் வரை எல்லாம் ஒழுங்க போச்சு. அன்றிரவு வேளையோட பாலூட்டி அந்த மாமி அவா கொழந்தைய தூளியில போட்டுட்டு தான் பக்கத்துல லோவர் பெர்த்ல படுத்துண்டுட்டா அவர் மேலே.
நான் ப்ளாஸ்க்லேர்ந்து தண்ணிவிட்டு பால் பவுடர் போட்டு கரைச்சேன். நீ கைய்ய ஒரு ஆட்டு ஆட்டினே. அவ்ளோதான், எல்லாம் கீழ விழுந்து தண்ணி எல்லாம் கீழே கொட்டி ஓடி.... கலந்த பாலும் கொட்டி எல்லாம் ஆயிடுத்து நொடி நேரத்துல. எனக்கு வெலவெலத்து போய்டுத்து.
இப்போ என்ன பண்ணுவேன் நீ வேற பசியில அழ ஆரம்பிச்சுட்டே. எனக்கு கலங்கிடுத்து. பான்ட்ரி காருக்கு ஓடினேன் அங்கே எவனுமே இல்லை. டின்னெர் முடிச்சு சாத்தீட்டு எங்கே போனாளோ.
மீண்டும் கூப்பேக்கு ஓடி வந்தேன். நீ கத்தற சத்தம் கதவுகிட்டே வரை கேட்டுது எனக்கு பதறி போயிடுத்து.
வந்து பார்த்து கதி கலங்கி அதிர்ந்து போய் நின்னுட்டேன்.
அந்த மாமி... அந்த தாயார் ஸ்வரூபம். உன்னை தன்னோட அணைச்சுசுண்டு உனக்கு பாலூட்டிண்டு இருந்தா. நா அவர பார்த்து கையெடுத்து நமஸ்கரிச்சேன்.
“என்ன இதெல்லாம், பேசாம உக்காருங்கோ. ரொம்ப கத்தினா கொழந்தே மயக்கமாயிடும், அதான், நாங்க இப்படி தீர்மானம் பண்ணினோம்” என்றார்.
என் கண்ணில் தாரை தாரையாய் கண்ணீர் பெருகியது. கூப்பிய கையை இறக்கவில்லை.
பின்னோடு நீ அவர் மடியிலேயே தூங்கி இருக்க என் பெர்த்ல ஓரமா சாய்ச்சு படுக்க வெச்சா மாமி. அவளையும் நமஸ்கரிச்சேன். மாமி பேசாம புன்னகைசுட்டு படுத்துனுட்டா.
அடுத்த நாள் காலம்பரலேர்ந்து வெந்நீர் கிடைக்கும் ஸ்டேஷன்ல வாங்கி நான் பால் கரைப்பேன். இல்லாதபோது மாமிதான் துணை.
யாரு எங்க என்ன ஊர் பேருனு வெவரங்கள் பரிமாறிண்டோம். அவாளும் சென்னைல தான்னு சொன்னா. அவர் வளரும் வக்கீல்னு சொன்னா.
“மதராஸ்ல எங்கே ஜாகைனா”
“மைலாபூர்” னு சொன்னேன். அவாளும் அங்கேதான் பக்கத்துல.
வேலை விவரமா எல்லாம் சொன்னேன்.
“அப்போ கொழந்தைய என்ன பண்ணுவேள்னு கேட்டா மாமி.
“எப்படி திடீர்னு இப்படி உங்க ஆத்துக்காரின்னு கேட்டா.... சொல்லலாமா சொல்லுங்கோ... னா
நான் சொன்னேன் “இவள பிரசவிச்சபோது ஆபேரஷன் பண்றச்சே போய்டா” னு
“ஐயோ, என்ன பேரு?” என்றாள். லக்ஷ்மி என்றேன்.
ஊர் பூர்வீகம் எல்லாம் கேட்டுண்டே வந்தா
அப்போ லக்ஷ்மியோட அப்பா அம்மா என கேட்க அவா இல்லைன்னு சொன்னேன்.
“அண்ணா வாசுதேவன் என்றார் கண் நிலைக்க.
“ஆமா உங்களுக்கு எப்படி...?” என்றேன்.
“அக்கா லலிதா” என்றாள்.
நான் அதிர்ந்து போய் “ஆமா” என்றேன்
“ஐயோ லக்ஷ்மி” என வாய் பொத்தி அழுதார்.
“என்னாச்சு?” என்றேன் பதறி
வைத்தி, அதுதான் அவர் பெயர்.
“என்னம்மா?” என்றார்  மாமியை அணைத்து.
“என் உயிர் தோழி நா” என அவர் தோளில் சாய்ந்து அழுதார்.
“ஓ அந்த லக்ஷ்மியா?” என்றார்.
“ஆமா, உங்களுக்கு நினைவிருக்கா மூத்தவனுக்கு அம்மை போட்டிருந்துதுனு நாம அவ கல்யாணத்துக்கு போக முடியலை. இவர்தான்” என்றாள்.
“ஹ்ம்ம், என்னமோ போ... விடு மா.. தேத்திகோ அழாதே” என்றார்
இன்னமும் ப்ரேமையோடு ஆசையோடு உன்னை மடிய விட்டு இறக்கவே இல்லை மாமி.
மெட்ராஸ் வந்து சேர்ந்ந்தப்றம் ஆத்துக்கு வாங்கோ... என்ன பண்றதுன்னு யோசிக்கலாம். இத்தனை க்ளோஸ்னு ஆயிடுத்து” என்றார் வைத்தி
“சரி” என்றேன் எனக்கும் அப்படி ஒரு ஆதரவு தேவைப் பட்டது
போனேன்
“பக்கத்துல, நாலு வீடு தள்ளி ஒரு சின்ன வீடு வாடகைக்கு இருக்கு. அதுல நீங்க குடி வந்துடுங்கோ. அம்மாக்கும் தனியா முடியாதுங்கறேள்.”
“காலம்பற நீங்க ஆபீசுக்கு போகறச்சே கொழந்தைய மங்களத்துகிட்டே விட்டுட்டு நீங்க சாயங்காலம் வந்து அழச்சுண்டு போங்கோ. ரெண்டு வேள பவுடர் பால் போறும். பாக்கி நேரம் ஆகாரம் பால் கூழு எல்லாம் மங்களம் பார்த்துப்போ என்றார்
“ஐயையோ அதெல்லாம் வேண்டாம்... மன்னிக்கு எதுக்கு ஸ்ரமம்” என்றேன். வைத்தியை அண்ணாவென அழைக்கத் துவங்கி இருந்தேன்
"ஒரு ஸ்ரமமும் இல்லை. நாங்க ரெண்டு பேரும் ஆற அமர உக்கார்ந்து யோசிச்சு பேசி எடுத்த தீர்மானம். இதுல எங்களுக்கு ஒரு கஷ்டமும் இல்லை. உங்களுக்கு விரோதமா இருந்தா நாங்க கம்பெல் பண்ணலை” என்றார்
“ஐயோ அண்ணா என்ன சொல்றேள்... நான் உங்களுக்காகத்தான் யோசிச்சேன். அசலே மன்னி ஆத்த பார்க்கணும் மூணு கொழந்தேள் வீடு மாமியார்...” என இழுத்தேன்
“ஒண்ணுமில்லை பேசாம நான் சொல்றபடி செய்யுங்கோ” என்றார். நெடுஞ்சான்கிடையாக விழுந்து இருவரையும் சேவித்தேன்
“அச்சோடா... என்னதிது எழுந்திருங்கோ” என எழுப்பினார்
“அவர் சொல்போல பக்கத்துல வீடு மாறினேன். காலை இரவு மட்டும் உனக்கு புட்டி பால். காலை ஒன்பதுலேர்ந்து மாலை ஆறு வரை நீ மன்னி கிட்டே வளர்ந்தே. அவா உனக்கு பாலூட்டினா. நாலு மாசம் ஆனதும் உனக்கு கூழு வேக வெச்ச காய் பழம்னு குடுத்து பழக்கினா.
அன்னப்ராஸ்னம் பண்ணினோம். அவா கையாலதான் கொடுக்கச் சொன்னேன். உனக்குன்னு பாயசம் பண்ணி தங்க மோதிரத்தால நோக்கு அன்னப்ராஸனம் பண்ணினா.
அந்த வருடத்திலேதான் எனக்கு ப்ரோமோஷன் கெடைச்சுது. என்னை பம்பாய் ஆபீசுக்கே வர சொல்லி மாத்தீட்டார் என் பாஸ். என் வேலை ரொம்ப பிடிச்சு போச்சு. மீண்டும் பம்பாய் பயணம்.
புழிய புழிய அழுதா மன்னி. உன்னை விடவே மனசில்லை.
“அங்க போய் இவள வெச்சுண்டு எப்படி சமாளிப்பேள். இவ வேணா என்கிட்டேயே இருக்கட்டுமே, நீங்க அடிக்கடி வந்து பார்த்துக்குங்கோ?” என்றாள். எப்படி விட முடியும்... மனசில்லாம தான் கிளம்பினேன் உன்னோட, என் அம்மாவோட.
அங்கேதான் நான் உன் இந்த அம்மா வேதத்தை சந்திச்சேன். அவளும் வேணுங்கற கொடுமைய அனுபவிச்சிருந்தா வாழ்க்கை சூனியமா இருந்துது. ஒருவருக்கொருவர் ஆறுதலா இருந்தோம்... அது கல்யாணத்துல முடிஞ்சுது.
அவ்வப்போது கடித தொடர்பு மட்டும் இருந்துது. எங்கேயோ எப்பவோ அதுவும் அறுந்து போச்சு. அவா இன்னமும் அதே அட்ரஸ்ல தான் இருக்கானு கண்டுபிடிச்சேன். நேர்ல உன்னையும் வேதத்தையும் அழச்சுண்டு போகணும் என் ஆசை”
“அவா வந்து ஒன்னை ஆசீர்வாதம் பண்ணணும்... அவா முன்னாடி வெச்சு உன் கழுத்துல மாங்கல்யம் ஏறணும் டீ கோந்தே” என்றார் கண்ணில் நீர் வழிய. எல்லோருமே கலங்கி இருந்தனர்.
நந்தினி தந்தை மடியில் தலை வைத்து கண்ணை மூடினாள்.
“எனக்கு அவாள பார்க்கணும் போல இருக்குபா” என்றாள் கேவியபடி. “போலாம் கோந்தே” என்றார்.
அடுத்த நாள் மைலாப்பூரில் மங்களம் வைத்தி இல்லத்தை நோக்கி மூவரும் கிளம்பினர்.
தட்டு நிறைய புடவை வேஷ்டி தாம்பூலம் புஷ்பம் என எடுத்துக்கொண்டு வாயிலை அடைந்தனர்.
“வாங்கோ, யாருன்னு தெரியலை” என்றபடி வரவேற்றார் வைத்திதான்
“மங்கா” னு உள்ளே நோக்கி குரல் கொடுத்தார்
“யாருன்னு தெரியல, பாரு” என்றார்
மங்காவும் பார்த்துவிட்டு “எங்கேயோ பார்த்தாப்ல ஜாடை” னு யோசிச்சா
நந்தினி உள்ளே நுழைந்து அவளை கட்டிக் கொண்டு கன்னத்தில் இழைய முத்தம் இட்டாள்.
“என்னடீம்மா கொழந்தே இது?” என அவரும் வாஞ்சையுடன் கன்னம் வழித்தார். ‘இத்தனை உரிமையுடன் யாரு’ என திகைத்தனர்.
அதற்குள் வைத்தி முக ஜாடை வைத்து “நாணா.... நாராயணன் தானே?” என்று கேட்டார்
“ஆமாம் அண்ணா” என்றார் நாணா.
“நீயா, நீ எங்கே இங்கே... எப்படி இருக்கே, எங்கே இருந்தேள் இத்தனை வருஷமா?” என கேள்விகளை அடுக்கினார்
“அப்போ, இது, இது.... என் நந்தினி குட்டியா... என் செல்லமா?” என்றார் மங்களம்
“ஆமாம் மன்னி உங்க நந்தினியேதான்” என்றார்
“அம்மாடி, என் ராஜாத்தி எத்தனை லக்ஷணமா வளர்ந்துட்டே... உன்னை ஒரு வயசு கொழந்தையா பார்த்தேன், இப்போ பாரு” என அணைத்துக்கொண்டார்
“வா வா உக்காரு வா” என அருகே அமர்த்திக் கொண்டார்
வேதத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார் நாணா.
“ரொம்ப நல்ல வேலை பண்ணினேள். சந்தோஷம்” எனக் கூறினார்.
இரு குடும்பத்து க்ஷேமலாபங்கள் பரிமாறிக்கொண்டனர்
“என்ன சொல்றேள், கொழந்தைக்கு கல்யாணம் வெச்சிருக்கேளா.... அத்தனை வயசா ஆயிடுத்து?” என ஆச்சர்யமானாள்.
“மங்களத்துக்கு தன் கொழந்தேள் எல்லாருமே எப்போதுமே அவ மடியில விளையாடற வயசுதான்” என சிரித்தார் வைத்தி. மங்காவுக்கு கூச்சமானது
பின்னோடு வேதமும் நாணாவுமாக தாம்பூலத்துடன் பத்திரிகை கொடுத்தனர்.
“இதெல்லாம் என்னத்துக்கு” என மறுத்தனர்
“நீங்கதான் நந்தினி உயிர் கொடுத்த பெரியவா நீங்க வந்தாதான் கல்யணம்” என்றார் நாணா.
“ஞாபகம் வெச்சுண்டு வந்தேளே, எங்க நந்தினி கல்யாணத்துக்கு நாங்க இல்லாமையா” என்றனர் சிரித்தபடி
நந்தினி அவர்களை நமஸ்கரித்தாள். “என் ராஜாத்தி. அமோகமா மங்களகரமா வாழணும் பூவும் பொட்டுமா” என் வாயார வாழ்த்தினர்.
சாப்பிட்டுதான் போகணும் என அடம் பிடித்து அப்போதைக்கப்போது விருந்து சமைத்தார் மாமி.
இலையில் சாதம் அனைத்தும் பரிமாறிவிட்டு,  “நந்தினி குட்டி... நான்...?” என வாஞ்சையுடன் அவளிடம் கேட்டார்
“என்ன?” என்பது போல நந்தினி பார்க்க சாதத்தை குழைய பிசைந்து ஒரு வாய் எடுத்து நந்தினி வாயில் ஊட்டினாள் மங்களம் கண்ணில் நீர் வழிந்தோடியது.
அதேபோல, கண்கள் தளும்ப வாயில் வாங்கி கொண்டாள் நந்தினி மங்களத்தை அணைத்துக்கொண்டாள். நாணாவை திரும்பி பார்த்தாள். கண்கள் கசிய முகம் விகசிக்க வாய் நிறைய சாதமும் புன்னகையும் போட்டி போட கண்கொள்ளா காட்சியாக இருந்தது அனைவருக்கும்.
இதோ நந்தினி கழுத்தில் மாங்கல்யம் ஏறிவிட்டது. கெட்டி மேளம் கெட்டிமேளம் என குரல்களுடம் பூ  மழை பொழிய  நாணா வேதம் மங்களம் வைத்தி தலைமையில் முன்னிலையில் பேஷாக முடிந்தது திருமணம்.
ஆசீர்வதியுங்கோ. மீண்டும் சந்திப்போம்... வணக்கம்.





2 comments: